அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அம்பும் ஏணியும்
2

அவர், பிரிவினைச் சக்திகளை - குறிப்பாக, திராவிட இயக்கத்தை - எதிர்க்க முனையும்போது, அவரை சிலம்புச் செல்வர் என்றும், செந்தமிழ்க் காவலர் என்றும், சிறைக்கஞ்சாச் சீலரென்றும் புகழாரம் சூட்டும் காங்கிரஸ் தலைவர்கள், அதே ம. பொ. சி. தமிழரின் உரிமைக்காக - (அந்த உரிமையும் இந்திய ஒற்றுமைக்கு ஊறுதேடாத முறையில்) போராடக் கிளம்பும் போது, எத்துணை கேவலமாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏசுகிறார்கள் என்பதை நாடு காணவில்லையா?

ம. பொ. சி. அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், அடிப்படையில் கருத்து ஒற்றுமை இருப்பது மட்டுமல்ல, கூடிப் பணியாற்றியதால் ஏற்பட்ட தோழமையும் நிரம்ப இருக்கிறது. அவருக்கே இது! கதர் ஆடைப் பிரச்சினையிலேயிருந்து, கல்லூரியில் போதனாமொழியாகத் தமிழ் இருக்கலாமா கூடாதா என்பது வரையில், காங்கிரசுக் கட்சிக்கும், மாறினோர்க்கும் கருத்து ஒற்றுமை கிடையாது. இந்நிலையில், ஓர் போலி நேசம்! எப்படி அது, பொதுமக்களால் மதிக்கப்பட முடியும்? மக்கள் என்ன, சந்திக்கும் திறனே அற்றவர்களா?

காங்கிரசின் துணைகொண்டு, மளமளவென்று வளர்ந்து விட்டால், பிறகு அவர்களையும் ஒரு கை பார்த்துக்கொள்ளலாம் என்று இவர்களும், ஆனானப்பட்டதுகளெல்லாம் அடிபட்டுப் போய்விட்டன, இவர்கள் வளர்ந்து நம்மை என்ன செய்துவிட முடியும்? தி. மு. கழகத்தை எதிர்க்க ஒரு பட்டாளமாக இவர்கள் வேலை செய்கிறவரையில், "கொட்டை எழுத்தை'ச் சம்பளமாகக் கொடுப்போம்; நம்மிடம் அவர்கள் தமது நாவரிசையைக் காட்டினால், ஒரே அடியாக ஒழித்துக்கட்டிவிடுவோம் என்று காங்கிரசும் எண்ணிக்கொண்டு, நடவடிக்கையிலே ஈடுபடுகின்றது என்பதை நாடு அறிந்துகொள்ளவா இல்லை! நன்றாகத் தெரியும், இந்த நிலைமை.

இந்த நிலைமையை நன்கு உணர்ந்த, தி. மு. கழகத் தோழர்கள் சிலரைக்கொண்டு, நமது இலட்சியத்தைச் சிதைத்து விடலாம் என்று எண்ணும் காங்கிரசாரின் திட்டத்தை நன்கு அறிந்துகொண்டதால், முன்னிலும் விறுவிறுப்பாகப் பணியாற்றி வருகின்றனர்! திராவிட நாடு தனி நாடு ஆகவேண்டும் என்பதற்கான, எழுச்சி மிகு கொள்கையை எடுத்துரைத்து வருவதிலே, புதியதோர் உற்சாகம் காட்டுகின்றனர். புதுப்புதுக் கிளைகள் எங்கெங்கும்!! உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்தவண்ணம்; அதுமட்டுமல்ல! திராவிட நாடு அமைந்தாக வேண்டும் என்பதற்கு ஆதரவுதரும் சான்றுகள், வரலாறு, இலக்கியம் என்பவைகளைப்பற்றி நாட்டவர் உணரத்தக்க வகையில் எடுத்துரைத்தோம்! மறுப்புரைப்போர் ஓய்ந்தேபோனார் என்று இருந்த நிலைமையினை இன்று சிலர் கெடுக்க முனைவதாலே, மீண்டும், கொள்கையினை எடுத்துரைப்போம் என்ற ஆர்வத்துடன் பணியாற்றக் கிளம்பியுள்ளனர்.

பத்திரிகைகளின் இருட்டடிப்பை, அவர்கள் பொருட் படுத்தவில்லை, தமது பணி, பலன் அளித்து வருவதைக் கண்கூடாகக் காண்பதனால்,

பொய்யுரைகள் பேசப்படுகின்றன; பொருட்படுத்துவ தில்லை; கெட்டிக்காரன் புளுகே எட்டே நாள்தான் என்கிற போது, கோபம் கொண்டோர் இட்டுக் கட்டுவது அத்தனை நாள்கூடத் தாங்காது என்பதனை அறிந்திருப்பதால்.

மாறினோர் விலகுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னால் வரையில், திராவிட நாடு பிரச்சினையிலே, தமக்கு மாறுபாடான எண்ணமே கிடையாது என்று மார்தட்டிக் கூறிவிட்டு, இப்போது நாங்கள், திராவிட நாடு கூடாது என்று வாதாடினோம் போராடினோம் பல ஆண்டு களாகவே என்று இன்று பேசுவது கேட்டு, கோபம்கூட அல்ல, சிரிப்புத்தான் வருகிறது.

துவக்கத்திலே, தம்பி! எனக்கு இலோசாக ஒரு ஆசை, உள்ளூர இருந்தது.

நம்மை - அதாவது என்னை என்று வைத்துக்கொள்ளேன் - பிடிக்காததால், "திராவிட நாடு' திட்டம் வேண்டாமென்று கூறுவார்கள். ஆனால், தனி அரசு வேண்டும் என்றுதான் கொள்கை இருக்கும், திராவிட நாடு என்பதற்குப் பதிலாக, தமிழ் நாடு என்று திட்டம் கொள்வார்கள் என்று எண்ணினேன். அதாவது தனி அரசு அமைக்கத்தான் அவர்களும் பாடுபடுவார்கள், ஆனால், அளவிலேதான் மாறுபாடு இருக்கும் என்று எண்ணினேன்.

அளவுபற்றி மட்டுமே கருத்து வேற்றுமை என்றால், அது அருவருக்கத்தக்கதுமல்ல, ஆபத்தானதுமல்ல என்பது என் எண்ணம் என்பதை, தமிழ் நாடா? திராவிட நாடா? என்று கேள்விகள் கேட்கப்படும்போதெல்லாம், ஓரணாவில் காலணா இருக்கிறது, திராவிட நாட்டில் தமிழ் நாடு இருக்கிறது என்று நான் பதிலளித்து வந்ததிலிருந்து, நாடு தெரிந்துகொண்டிருக்கிறது.

அமையவேண்டியது தனி அரசு!

பெறவேண்டியது முழு உரிமை!

ஒழிக்கப்படவேண்டியது வடநாட்டு ஏகாதிபத்தியம்!

விலகவேண்டியது டில்லிப் பேரரசின் பிடியில் இருந்து!

எனவேதான், தமிழ் நாடு என்று அளவு வகையிலே நம்மிலிருந்து மாறுபட்டிருந்தாலும், தனி அரசு, முழு உரிமை வடநாட்டு ஏகாதிபத்திய ஒழிப்பு, டில்லிப் பேரரசிலிருந்து விடுபடுவது என்ற கருத்துக்களிலே, திட்டவட்டமான நம்பிக்கையும், தீவிரத்தையும் கொண்டிருப்பதால், ஆதித்தனாரிடம் நான் மதிப்பு வைக்கிறேன்.

டில்லிப் பேரரசுடன்தான் இணைந்து இருப்போம், வடநாட்டு ஏகாதிபத்தியப் பேரரசில், தமிழ் அரசும் உள்ளடங்கி இருக்கும் என்றால், இனிக்கவும் இனிக்காது - இதைக் கூற ஒரு தனிக் கட்சியும் தேவையில்லை - இந்த "அடிமைநிலை'தான் தொடர்ந்து என்றால், அந்தத் திருத்தொண்டைத் திறம்பட நடத்த, காங்கிரஸ் இருக்கவே இருக்கிறது!! "நாற்காலிமீது முக்காலியாக ஒரு புதிய கட்சி அந்தப் பழைய காரியத்துக்காக ஏற்படத் தேவையேயில்லை - சிலருக்குத் "தலைமை' வேண்டும்' என்ற காரணம் காட்டினாலொழிய.

சுடச்சுடப் பழைய சோறு விற்க ஒரு தனிக்கடை வைப்பாரும் உண்டா? வைத்திருக்கிறார்களே!!

நாட்டு மக்கள் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத் தம்பி, நீயும் நானும் நன்கு உணரத்தக்க நல்லறிவுப் பிரசாரத்தில் நமது தோழர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எஸ். டி. சோமசுந்தரம், பி. ஈ.
ஆலடி அருணா, பி. ஏ. பி. எல்.
என். அன்புச்செழியன், எம். ஏ.
கே. ஏ. கிருஷ்ணசாமி, எம். ஏ., பி. எல்.
முரசொலி மாறன், எம். ஏ. உ.
பில்லப்பன், எம். ஏ., பி. எல்.
என். வி. என். சோமு, பி. ஏ.
எஸ். கிருஷ்ணமூர்த்தி, எம். ஏ., பி. எல்.
எம். எஸ், வெங்கடாசலம், எம். ஏ., பி. எல்.
அப்பர்சுந்தரம், எம். ஏ., பி. டி., பி. எல்.
சி. என். ஏ. பரிமளம், எம். பி., பி. எஸ்.
ஏனையன், எம், பி., பி. எஸ்.
சிவகுமாரன், பி. ஈ.
பி. மணிவேந்தன், எம். ஏ.
டி. கிருஷ்ணன், எம். ஏ.
ஆர். சேது, எம். ஏ.
பி. சீனிவாசன், எம். ஏ.
உ. கணபதி, எம். ஏ.
டி. நவமணி, எம். ஏ.
கே. இளஞ்சேரன், எம். ஏ.
டி. கந்தசாமி, எம். ஏ. ஆர். பிச்சை, பி. ஏ., பி. எல்.
பி. ஆடியநம்பி, பி. ஏ., பி. எல்.
பி. எஸ். மணியன், பி. ஏ., பி. எல்.
செல்லையா, பி. ஏ., பி. எல்.
எம். ஏ. மசூத், பி. ஏ.
எஸ். அமுதன், பி. ஏ.
மார்க்கண்டன், பி. ஏ., பி. எல்.
கரந்தை ஜின்னா, பி. ஏ.
அலி சேக் மன்சூர், பி.ஏ.
இலட்சுமணப் பெருமாள், பி. ஏ., பி. எல்.
டி. கே. பொன்வேலு, பி. ஏ.
ஏ. சுப்பிரமணியம், பி. ஈ.
ஏ. பாலசுப்பிரமணியன், பி. காம்., (ஆனர்ஸ்)
ஏ. தேவராசன், பி. ஏ.
பி. யு. செழியன், பி. ஏ. (ஆனர்ஸ்)
ஆர். இளந்திரையன், பி. ஓ. எல்.
ஏ. எல். சுப்பிரமணியன், பி. ஏ., பி. எல்.
கே. இராசாராம், பி. ஏ.
குமாரி. ஏழைவல்லி, பி. ஏ.
மலைச்சாமி, பி. ஏ., (ஆனர்ஸ்)
கே. எஸ். சம்பத், பி. ஈ. (ஆனர்ஸ்)
கே. பழனிமுத்து, பி. ஏ.
ஏ. திரவியன், பி. ஏ.
ஆர். தியாகசாமி, பி. ஏ.
புதுமதியான், பி. எஸ்சி.
மோகன்தாஸ், எம். பி., பி. எஸ்.
குமாரி எஸ். பி. சற்குணம்
கிருஷ்ணன், பி. ஏ.
ஆர். நீலகண்டன், பி. ஏ., எல். எல். பி.
சி. கிருஷ்ணன், பி. ஏ., பி. எல்.
சந்திரன், பி. எஸ்சி.
டி. ஹெர்பர்ட் ஜான்
எம். சி. பாலன், பி. ஏ., பி. எல்.
எஸ். ஆனந்தனன், பி. ஏ.
சிதம்பரம்
எஸ். எம். டி. தாசிம்

***

என்ன பட்டியல்? என்கிறாயா தம்பி! நாகர்கோயிலில் நடைபெற இருக்கும் திராவிட மாணவ முன்னேற்றக் கழக மாநாட்டிலே கலந்துரையாட இருக்கும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல்.

அவர்களென்ன, நம்முடன் இருந்தவர்களிலே சிலர் மாறினோர் ஆகி, திராவிடத்தைத் தாக்க, அந்தத் தாக்குதலைக் காங்கிரஸ் ஏடுகள் வெளியிடுவது கண்டா, மனம் குழம்புவார்கள், மருட்சி அடைவார்கள்! எங்கேனும் உண்டா? இலக்கியத்தில், வரலாற்றில் கண்ட "திராவிடத்தை' மறந்தா போவர், எரிச்சலால், இல்லை என்றுகூற, இதுவே தக்க சமயம் இந்திய அரசுக்கு வலிவுதேட என்ற எண்ணத்தில், காங்கிரஸ் ஏடுகள், மாறினோர் பேச்சை, மணிமொழிகள்போலாக்கி, நித்த நித்தம் வெளியிட்டுக் காட்டுகிறார்கள் என்பதறியாமல்.

அல்லது, ஐயகோ! திராவிடத்தை நம்முடன் இருந்தாரே எதிர்க் கின்றாரே, நாமென்ன செய்வோம் என்றா கலங்கி நிற்பர்! நம்முடன் இருந்த காலை, திராவிடத்தை எதிர்த்தவரை, இன்று மாறிப்போன "மாவீரர்' மதித்தனரா? மறுப்புரைக்காது இருந்தனரா? உரைத்த மறுப்பும் எத்தகையது!

மாணவரொருவர் மடலொன்று விடுத்துள்ளார் - அம்மடலில் வேறொன்றுமில்லை - திராவிடத்தை மறுத்தோரை, இன்று மாறியுள்ளோரில் ஒருவர் வெளுத்து வாங்கியதோர் பாட்டு மட்டுமே, காணக் கிடைக்கிறது. அதனைக் காண்க:

தென்னாட்டில் வேரூன்றித், திராவிடர்கைக் கலமாகி
பொன்னாட்டை விட்டுப்பிரிந்தார் பொருளாகி
பம்பாயில் கிளையோடி, பர்மாவில் பண்பாடி
பழம்பெரிய மலைநாட்டில் பழமாகி, ஈழத்தில்
பிஜித்தீவில் வாழ்கின்ற பெருங்குடிகள் துணையாகி
பேரளவில் கிளைத்தோங்கும் பெறற்கரிய கழகத்தை
சுண்டைக்காய் வீரரெல்லாம் தொலைத்துவிட முயல்கின்றார்!
வெண்டைக்காய்க் கூட்டில் விளக்கெண்ணெய்தனைச் சேர்த்து
வழவழத்த கொள்கையென வழங்குகிற மீசையெலாம்
ஆளை அசைத்திடுமாம்! ஆழியினைத் தூர்த்திடுமாம்!
மாமலையைத் தூக்கி மடுவினிலே போட்டிடுமாம்!
வானைப் பிடுங்கி வாளாக்கி வீசிடுமாம்!
நாநடுங்கும் வார்த்தைகளில் வானரங்கள் கத்துதடா!
சிச்சீ; இந்நாடகத்தை சிறு சேயும் நம்பாதே!
கைச்சரக்கில் லாதவர்கள் கதறுவதால் என்ன பயன்?
புடவை துவைப்பதற்கும், பொதி சுமந்து போவதற்கும்
அழுக்கேற்றிச் செல்வதற்கும் அருந்திறமை பெற்றவரே!
எத்தனையோ குப்பைகளை இதற்குமுன்னே கண்டுவந்தோம்
பொத்தல் கலயங்காள்! போயொழிவீர் நில்லாதீர்.
மாபெரிய கலை எங்கள் மடிதனிலே! கலைஞர்களில்
நாடறிந்தோர் எங்கள் நடுவே! அவர் கூறும்
தேனூறும் செந்தமிழின் திறமெல்லாம் எங்கள் திறம்
இரவல் பொருள்தேடி இளைத்துவிட்ட ஓடுகளே!
அறிவின்றி முன்னேற ஆர்ப்பரிக்கும் கூடுகளே!
நீரறிந்த தெல்லாம் நிலையான வயிற்றெரிச்சல்

தம்பி! இப்படி, திராவிட நாடு திட்டத்தைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துவிடுவேன் என்று பேசியவர்கள்மீது "கவிதை' பாய்ந்தது; எழுதினோர் மறந்தனர்; படித்தோர் மறக்கவில்லை; பாடம் புரிகிறதல்லவா!!

அண்ணன்,

11-6-61