அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே! - (2)
1

சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம் !
அமைச்சர் பேசும் பேச்சு வெறும் பசப்புப் பேச்சு !
ஒரேவித வேலைக்கு இருவேறு அதிகாரிகள்!
"தர்பார்' நடத்தப்பட்டு வரும் விதம் !
"லாண்ட் சீலிங்'கில் பெரும் ஏமாற்றம் !
உழைப்பாளியே கடவுள் !
அழகுத் தேமல் ஆராத நோயாகிவிட்டதே !
வினோபா பாவேயின் கண்டிப்பு !

தம்பி,

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு வந்தபோது

கொள்ளைச் சம்பளம் ஒழிக
கோலாகல தர்பார் ஒழிக

என்றெல்லாம் கண்டித்து வந்தோமே, இப்போது அதை எல்லாம் மறந்தே போய்விட்டோமே என்று கூறி வருத்தப் பட்டார் அமைச்சர் அளகேசன் என்று குறிப்பிட்டிருந்தேனே அவர்,

எதை எதை எல்லாம் மறந்துவிட்டார்கள்

என்ற விளக்கமளித்துப் பேசவில்லை; நிர்வாகச் செலவு, ஆடம்பரச் செலவு செய்திடும் போக்கினை மட்டுமே கோடிட்டுக் காட்டினார்.

சென்னைக்கு அருகே பேரரசு அறுவைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. அந்தத் தொழிற்சாலைக்கான நிர்வாகத் துறையினருக்காகக் கட்டப்பட்டிருக்கும் சிறுநகருக்குச் செலவிடப்பட்டுள்ள தொகையின் அளவைக் கண்டுதான் அமைச்சர் அளகேசன் அவர்கள் மனம் குமுறி அவ்விதம் பேசியுள்ளார்.

ஆடம்பரச் செலவுக்காகக் கொட்டப்பட்டிருக்கும் தொகை, திட்டச் செலவிலே பெரும்பகுதியை விழுங்கி விட்டிருக்கிறது. இது கடன் வாங்கிப் பிழைப்பு நடத்தும் நிலையில்!

ஏழைகள் புழுப்போலத் துடிக்கிறார்கள், அவர்களுக்கு இதமளிக்கும் திட்டத்திற்காகப் பணம் தாராளமாகச் செலவிடாமல்,

விருந்து மாளிகைகள், விதவிதமான மோட்டார்கள், அலங்காரப் பூங்காக்கள், சிங்காரச் செயற்கைக் குளங்கள்

போன்றவைகளுக்காகப் பணத்தைப் பாழாக்குகின்றனரே பாவிகள்! அன்னியர் என்பதால் அல்லவா. நமது நாட்டு ஏழைகளிடம் பரிவு பச்சாதாபம் பிறக்கவில்லை, நமது சொந்த ஆட்சி நடைபெற்றால், இப்படிப்பட்ட நிலைமை நீடிக்க விடுவோமா என்று பேசினவர்கள் இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளனர்; ஆனால், அவர்களின் போக்கு.

சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம்.

என்று கூறத்தக்க விதமாக இருக்கிறது. இதைக் கண்டு உள்ளம் நொந்து அமைச்சர் அளகேசன் பேசினார்.

இவர் பரவாயில்லை! இதுபற்றிப் பேசவாவது செய்தாரே. மற்றவர்கள் பேசவும் மறுக்கிறார்களே! இவராவது இந்த விரயத்தைக் கண்டறிந்து கூறினார், மற்றவர்கள் இதுபற்றிய கவலையற்று உள்ளனரே என்று எண்ணத் தோன்றும் ஆனால், உண்மை அதுவல்ல. இதுபோல மனக்குமுறலை வெளியிடு வதனை ஒரு "வாடிக்கை'யாக, ஒரு "பிரச்சாரக் கலை'யாக ஆக்கிக் கொண்டுவிட்டனர் ஆட்சியாளர். வீண் செலவு குறித்தும், ஆடம்பரம் பற்றியும், கொழுத்த சம்பளம் குறித்தும், கோலாகல தர்பார் பற்றியும் பேசுவதைக் கேட்கும்போது, மக்கள் அவர்களைப் பாராட்டவும் செய்கின்றனர். ஆனால், இந்த "வீண் செலவு' ஏற்படாதிருக்க வழி காணப்படுகிறதா என்று பார்த்தால் விந்தையாக இருக்கும்; கொள்ளைச் சம்பளமும் கோணல் செலவும் தொடர்ந்து நடந்தபடிதான் இருந்து வருகிறது.

இன்று அமைச்சர் அளகேசன், எடுத்துக் காட்டியதைப் போலவே "சுதந்தர' இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் பண்டித ஜவஹர்லால் சோவியத் ரμயர் சென்றிருந்த போது, சைபீரியாவில் பனிக்காடுகளைக் கோதுமை வயலாக மாற்றி அமைக்கும் தீவிரமான திட்டத்தை மேற்கொண்டிருந்த அதிகாரிகள், தமக்காக வசதியான, அழகு நகர்களை அமைத்துக் கொள்ளாமல், தற்கா-கமாகக் "கூடாரங்கள்' அமைத்துக் கொண்டு அதிலே இருந்து கொண்டு, தமது பணியினை நடாத்தி வந்ததனைக் கண்டு பெரு வியப்படைந்து, அதுபற்றிக் குறிப்பிட்டுக் காட்டி, இந்தியாவிலே செய்யப்படும் வீண் ஆடம்பரச் செலவு பற்றிச் சாடினார்!

சாடினார்! அவ்வளவுதான்! அதனைக் கேட்டு கேலிப் புன்னகை யுடன், அதிகாரவர்க்கம் பழைய போக்கிலேயே சென்று கொண்டிருந்தது. பண்டிதர் அந்த முறையைத் திருத்தி அமைத்திட முனைந்தார் இல்லை. பொருள் உற்பத்திக்காக அமைக்கப்படும் தொழிற்சாலைகளில், மிகப்பெரிய அளவு தொகை, துரைமார்கள் காலம் போலவே, விடுதிகளுக்கும் நிர்வாகத்தி னரின் வசதிகளுக்கும் பெருமளவு செலவாகிக் கொண்டு வந்தது. ஆண்டு பலவற்றுக்குப் பிறகு, பண்டித நேரு சுட்டிக் காட்டியதை, இப்போது அமைச்சர் அளகேசன் எடுத்துக் காட்டுகிறார். கண்டுபிடிப்பும் அல்ல, வேறு எவருக்கும் எழாதிருந்த துணிவும் அல்ல அது!

கண்டோரை மலைக்கச் செய்திடும் கட்டடங்கள் விண்ணை முட்டும் விதத்தில்! இரவைப் பகலாக்கிடும் விதமான பளபளப்பு! ஜொலிப்பு! வெள்ளையர் காலத்தில் தரப்பட்டது போன்ற கொள்ளைச் சம்பளம்! வெப்பத் தடுப்பு முறைகள்! மலையூர் பயணம்! என்று குறைவில்லை, இவை கூடாது என்று பேசுவதற்கும் தயங்கவில்லை; கூடாதவற்றைக் கூசாமல் செய்திடும் போக்கும் நின்றபாடில்லை.

இவை கூடாது தடுக்கப்பட்டாக வேண்டும் என்பதிலே உண்மையான நாட்டம் இருந்திடின் காங்கிரஸ் அமைச்சர்கள் பொதுக் கூட்டத்திலா இவை பற்றிப் பேசுவார்கள்! தமது கட்சிக் கூட்டத்திலே பேசி, இந்த வீண் செலவினை நிறுத்தியிருப்பர்.

அதைச் செய்யாது, ஊர்மெச்ச ஒரு நாளைக்கு இது பற்றிப் பேசுவது பயனில்லை என்பது மட்டுமல்ல; வெறும் பசப்பு என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.

இதற்காக இத்தனை கோபமா! நிர்வாகத்தைத் திருத்தி அமைத்திட இப்போது பேரரசு திட்டமிட்டுச் செயலாற்றத் தொடங்கி விட்டது; மொரார்ஜி தேசாய் தலைமையில் இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது; தெரிந்துகொள்! என்று துந்துபி முழக்குவர், உணர்கிறேன். ஆனால் தம்பி! நிர்வாகத்தைத் திருத்தப் போகிறோம், செலவைக் குறைக்கப் போகிறோம், தரத்தை உயர்த்தப் போகிறோம், மந்தத்தனத்தை மாய்த்திடப் போகிறோம் என்றெல்லாம் இதற்கு முன்பு எத்தனையோ முறை கூறினரே, என்ன ஆயிற்று என்று கேட்டுப்பார்! குழுக்கள் அமைத்தனரே, என்ன விளைவு என்று கேட்டு அறிந்து கொள்ளேன் பார்க்கலாம்! வெளி நாட்டி லிருந்தே தருவித்தார்கள்; இதற்காகவே - ஆப்பீல் பீ என்பவரை; அவரும் பேரரசின் நிர்வாக முறைபற்றி நன்கு ஆராய்ந்து பார்த்து, திருத்தி அமைக்கப்படுவதற்கான வழி முறைகளை வகுத்தளித்தார். ஆப்பீல் பீயின் அறிக்கை என்ன ஆயிற்று? என்று கேட்டுப்பார். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாகச் செலவை 100-க்கு 10 என்ற அளவு குறைத்துக் காட்டுகிறேன் பார்! என்று சூளுரைத்து, அதற்காக ஒரு குழு அமைத்தார், டி. டி. கிருஷ்ணமாச்சாரி. கண்ட பலன்-?

எனவே இப்போது மொரார்ஜி தேசாய் குழுவின் மூலம், நிர்வாகம் திருத்தி அமைக்கப்படும் என்று எப்படி நம்புவது? மொரார்ஜி திட்டம் காரணமாக நிர்வாகச் செலவிலே சிக்கனம் ஏற்படும் என்று எந்தச் சான்றினைக் கொண்டு உறுதி பெறுவது?

துவக்கமே, கசப்பினை அல்லவா கிளறுவதாக இருந்திடக் காண்கிறோம். நிர்வாகத்தைத் திருத்தி அமைத்து, சிக்கனம் காண அமைகிறதே மொரார்ஜி குழு, அது வேலையைத் துவங்குவதற்கு முன்பே ஒரு கொலு அமைத்திட விரும்புகிறது. இந்தக் குழுவின் அலுவல்களைக் கவனிக்க, உடனடியாக.

8 கூட்டுக் காரியதரிசிகள், 28 துணைக் காரியதரிசிகள், 243 கிளார்க்குகள்.

வேண்டுமாம்! கேட்டாயா தம்பி! வேடிக்கையை! நிர்வாகச் சிக்கனத்திற்குத் துவக்க விழா!!

40 மோட்டார்கள் வேண்டுமாம், இந்தக் குழுவின் அலுவல்களுக்கு! இந்தக் குழு எங்கெங்குப் பயணம் நடத்துமோ, எவ்வளவு பயணப்படி, வசதிப்படி விழுங்குமோ யார் கண்டார்கள்! காஷ்மீரத்துச் சீநகரிலும் தமிழகத்து கொடைக்கானலிலும், குழு, விசாரணைகளை நடத்திடக் கூடும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயணம் நடாத்தி, கருத்தறியக் கூடும். மொத்தத்தில் எவ்வளவு செலவாகுமோ, தெரியவில்லை.

அதிகாரிகள் பயணம் செய்யும்போது செலவு எந்த அளவுக்குச் செல்லக்கூடும் என்பதை ஓரளவு புரிந்து கொள்ள ஒரு கணக்குத் தருகிறேன்.

(1965-ல்) இந்த வருஷம் முதல் ஏழு மாதங்களில் வெளிநாடுகள் பயணம் செய்த அதிகாரிகளின் எண்ணிக்கை 1689.

அதிகாரிகள் சென்று வந்த வெளிநாடுகளின் எண்ணிக்கை 46.

இதற்காகச் செலவான தொகை ஒரு கோடி ரூபாய்.

ஒரே வகையான வேலைக்கு இரு வேறு துறையின் அதிகாரிகள் உள்ளனர்; இதனால் இரட்டிப்புச் செலவாகிறது என்பதுடன், இரு வேறு அதிகாரிகளின் நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று துணை செய்யும் முறையில் அமையாமல், ஒருவர் வேலையை மற்றவர் வேலை குந்தகப்படுத்துவதாக அமைகிறது என்பதனை, இனி ஒரு நிபுணர் குழு கண்டறிந்து கூறத் தேவையில்லை; ஏற்கனவே அறிந்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக ஒன்றினைக் குறிப்பிடுகிறேன் தம்பி! நாட்டிலே விவசாயப் பொருள் உற்பத்தியைத் திட்டமிட்டுத் தீவிரமாக்குகிறார்களல்லவா!. . ஏன் தம்பி அப்படிப் பார்க்கிறாய் - அவர்கள் சொல்வதைச் சொல்கிறேன் - அந்தத் தீவிரத் திட்டத்திற்காக - உற்பத்திப் பெருகுவதற்காக - யாரார் பணியாற்றுகிறார்கள், தெரியுமா? விவசாயிக்குக் கடன் சிடைத்திடச் செய்தல், உரம் கிடைத்திடச் செய்தல், பூச்சிமருந்து கிடைத்திடச் செய்தல், பாசனவசதி (கிணறு வெட்டுவது) செய்தளித்தல், பொறுக்கு விதைகள் கொடுத்து உதவுதல் - ஆகிய இவைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஒரு துறைக்கு அல்ல;

சமுதாய நல அபிவிருத்தித் திட்டத்துறை,
விவசாயத் துறை.

எனும் இரு "துறையினரும்' இதைக் கவனித்துக் கொள்கின்றனர்.

ஒரேவிதமான வேலை, அதற்கு இருவேறுவிதமான "அதிகாரிகள்' - என்ன நடக்கும்? நடக்கக் கூடியது என்ன என்பது விளங்கவில்லையா! இப்போதுதானே திரும்பி இருக்கிறார் உணவு அமைச்சர் அமெரிக்காவிலிருந்து - கோதுமையும் அரிசியும் மலை மலையாகத் தருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டு இனி அவரை "வானமும் பூமியும்' மிரட்ட முடியுமா! பூச்சியும் புழுவும் நெளிந்து அவருக்குச் சங்கடம் விளைவிக்க முடியுமா! அதோ கப்பல்! பார்! பார்! பெரிய கப்பல்!! பலநாட்டுக் கப்பல்! எல்லாவற்றிலும் கோதுமை! அரிசி! ஏராளமாக! என்றல்லவா எக்காளமிடுவார்.

ஏதோ ஓர் நகைச்சுவைப் பேச்சினைப் பார்த்தேன், தம்பி!

பள்ளிக்கூடத்து ஆசிரியர், மாணவனைக் கேள்வி கேட்கிறார்; நமக்குத் தேவைப்படும் கோதுமை எங்கெங்கு விளைகிறது? என்று.

மாணவன் கூர்மையான அறிவு படைத்தவன். ஆகவே பதில் சொன்னான்; கோதுமை பஞ்சாப், உத்திரப்பிரதேசம், அமெரிக்கா போன்ற இடங்களில் அமோகமாக விளைகிறது என்று.

நிலைமை இவ்விதம் இருப்பதால், உணவுப்பொருள் உற்பத்தியைத் திட்டமிட்டு அதிகமாக்குகிறார்கள் என்று நான் சொல்லும்போது, உனக்குப் புன்னகை எழுகிறது.

இந்தத் திட்டமிருக்கிறதே - உணவு உற்பத்தி அதிகரிப்புத் திட்டம் - இதற்காக விவசாயிகளுக்குத் தேவைப்படும் வசதி களைச் செய்தளிக்கும் பொறுப்பை, விவசாயத்துறை, சமுதாய நலத்துறை எனும் இரு துறைகளும் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால், வேலை நேரமும், வேலையை முடித்துக் கொள்ள எடுத்துக் கொள்ளப்படும் முயற்சியும் இரட்டிப்பு ஆகிறது; யாரிடம் எதைக் கேட்பது? யாரிடம் எதை எந்த முறையில் கேட்பது? என்பதைக் கண்டறிந்து காரியத்தை முடித்துக் கொள்வதே ஒரு பெரிய சிக்கலுள்ள வேலையாகி, குடியானவர்களை அலைக்கழிக்கிறது.

இரு வேறு துறையினர் ஒரு வேலையைக் கவனித்துக் கொள்ள அமர்த்தப்பட்டிருப்பதால் நிர்வாகச் செலவும் இரட்டிப்பு ஆகிவிடுகிறது.

இதுபற்றிப் பலமுறை எதிர்க்கட்சியினர், பொது நிலையில் உள்ளவர்கள் எடுத்துக் காட்டியாகிவிட்டது. ஒரு திருத்தமும் ஏற்படக் காணோம்.

இதழ்களைப் பார்த்தால் தம்பி! விவசாயத் துறையினர் நடத்திடும் மாநாடு பற்றிய செய்தியும், அந்தத் துறையினர் உணவு உற்பத்திக்காக மேற்கொள்ளும் தீவிரத் திட்டம் பற்றியும் பேசப்படும் கருத்து விருந்தும் கிடைக்கிறது. அதுபோலவே உணவுப் பொருள் உற்பத்திப் பெருக்கத்துக்காக, எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் "பயன் தரும்' முறைகள் பற்றி சமுதாய நலத்துறையினர் பேசுவதும் வெளிவருகிறது.

ஏன் இதுபோல இருவேறு துறையினரிடம் ஒரே வேலையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும். புரியவில்லை!

மத்தியப்பிரதேசம் துணிந்து கூறிவிட்டது. எங்களுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரிகள் (B.D.O.) தேவையே இல்லை! என்று.

எந்த (B.D.O.) வட்டார வளர்ச்சி அதிகாரிகளால்தான் விவசாயத்துறையில் புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டு, உணவுத் துறையில் "தன்நிறைவு' ஏற்படப் போகிறது என்று மற்ற எல்லா மாநிலங்களிலும் பேசப்பட்டு வருகிறதோ, அந்த அதிகாரிகளே வேண்டாம் என்று மத்தியப்பிரதேசம் தெரிவித்துவிட்டது.

இதைவிடக் கடுமையான கண்டனம் வேறு என்ன இருக்க முடியும், வட்டார வளர்ச்சித் துறை என்ற திட்டத்துக்கு?

பாராளுமன்றத்திலேயும் இது பற்றிய பேச்சு எழுந்தபோது பல உறுப்பினர்கள் - கட்சிப் பாகுபாடு அற்று - ஆறுதல் புன்னகை உதிர்த்தனர் - அப்பாடா! என்றனர்.

வினோபாபாவே மேலும் ஒருபடி முன்னாலே சென்று மத்தியப்பிரதேசத்தில் B.D.O. பதவிகளையே எடுத்து விட்டதை வரவேற்கிறேன்; நாடு முழுவதுமே இதுபோலச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

கிராமராஜ்யம் அமைய வேண்டும் என்ற நோக்கம் கொண் டவர் அந்தத் தூயவர்.

கிராமராஜ்யம் அமைக்கத்தான் பணியாற்றி வருகிறோம் என்று பேசுபவர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகள்.

வட்டார வளர்ச்சி அதிகாரிகளால் உருப்படியான எந்தப் பலனும் நலனும் விளைந்திடவில்லை, அந்த அதிகாரிகளே தேவையில்லை என்று வினோபா கூறும் அளவுக்குத் "தரமாக', நேர்த்தியாக வேலை நடந்திருக்கிறது விளங்குகிறது அல்லவா!

நிர்வாகத்திலே வீண் செலவும் வேலை நடப்பதிலே குந்தகமும் ஏற்பட்டிருப்பது பற்றி எடுத்துக்காட்ட பல உள; ஒன்று மட்டுமே காட்டினேன்.

கொள்ளைச் சம்பளம் பற்றியும் கோணல் முறை பற்றியும் முன்பெல்லாம் கண்டித்துக் கொண்டிருந்தோமே இப்போது அந்தக் கண்டனத்தையே நாம் மறந்துவிட்டோமே என்று அமைச்சர் அளகேசன் வருத்தப்பட்டார்; அமைச்சர் சுப்பிர மணியமோ, நிர்வாக யந்திரமே துருப்பிடித்துக் கிடக்கிறது என்று வெளிப்படையாகவே பல கூட்டங்களிலே கண்டித்துப் பேசிவிட்டார்.

விவசாய அமைச்சுத் துறையில் உள்ள அலுவலர்களில் 100-க்கு 75 பேர்களுக்கு விவசாயம் பற்றிய தொடர்பு தரும் அறிவோ, கிராமிய மனப்பாங்கோ இல்லை. நிர்வாக யந்திரம் கிழமாகிக் கிடக்கிறது பத்தாம் பசலியாக இருக்கிறது.

இதைவிட மோசமான ஒரு நிலை இருக்கவே முடியாதல்லவா? வெள்ளை ஏகாதிபத்தியம் இருந்தபோது, அதிகாரிகளிடம் என்ன குறை காணப்பட்டதோ அந்த நாட்களில் இருந்த அதிகாரிகளுக்கு மக்களின் குறைகள், பிரச்சினைகள் எப்படிப் புரியாமல் இருந்து வந்ததோ, அதுபோலவே இப்போதும் இருக்கிறது என்றால். இந்தப் பதினெட்டு ஆண்டுகளாக இவர்கள் சாதித்தது என்ன என்று கேட்டுத்தானே தீர வேண்டும்! ஏன் அதிகாரிகளின் போக்கை மாற்றி அமைத்திருக்கக் கூடாது? யார் வேண்டாமென்றார்கள்? எது குறுக்கிட்டது?

தம்பி! இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால், பழைய மனப்பான்மையுள்ள அதிகார வர்க்கத்தை மாற்றி அமைத்து, புதிய நிர்வாக முறையைப் புகுத்தவே சமுதாய நலத் திட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் (B.D.O) என்ற "புதியவர்களை' அமர்த்துகிறோம் என்று ஆளுங்கட்சியின் தலைவர்கள் மார் தட்டிக் கொண்டார்கள்.

இப்போது அவர்களே தலையில் அடித்துக் கொள்ளு கிறார்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் (B.D.O.) சரியாக இல்லை என்று.

அந்த அதிகாரிகளை மூட்டை கட்டிக் கொள்ளச் சொல்லி விட்டோம் என்று மத்தியப்பிரதேச அமைச்சரவை கூறிவிட்டது.

எத்தனை எத்தனை எக்களிப்புடன் இந்த அதிகார வர்க்கத்தை உருவாக்கி உலவவிட்டார்கள், இப்போது எவ்வளவு பலமாக குட்டுகள் அவர்கள் தலையில் விழுகின்றன என்பதைப் பார்க்கம்போது, விந்தையாக இருக்கிறது; இத்தகைய தேவையற்ற காரியத்துக்காகச் செலவாகியுள்ள தொகையைப் பார்க்கும்போது வேதனையாகவும் இருக்கிறது.

உணவு அமைச்சர் சுப்பிரமணியமோ தமது துறையிலே உள்ளவர் களிலே முக்கால் பங்கு, உருப்படியில்லை என்று கூறிவிட்டார்.

அங்கே போய் விட்டாரே நமது நண்பர், அவர் பாடியது தான் நினைவிற்கு வருகிறது.

"ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா' என்ற பாட்டு. அதுபோலல்லவா இருக்கிறது.

"ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படி இல்லை' என்பதாக!!

சந்திகளில் பேசுகிறார் அமைச்சர் சுப்பிரமணியம், இந்த நிலைமை பற்றி, வெகு தெளிவாக, வெகு துணிவாகக்கூட. அமைச்சர்கள் வெறும் "ரப்பர் ஸ்டாம்புகளாக' - முத்திரை குத்துபவர்களாக - மட்டுமே இருக்க முடிகிறது. ஏனெனில், அவர்களிடம், அந்த "இலாகாவினர்', ஏற்கனவே அதிகாரிகள் பார்த்து முடிவு செய்துவிட்ட திட்டத்தைத்தான் நீட்டுகிறார்கள், கையொப்பத்திற்கு! வேறு மாற்றுத் திட்டங்கள் தரப்படுவதில்லை. எனவே, தம்மிடம் தரப்படுகிற திட்டத்தை ஒப்புக் கொள்வது தவிர வேறு வழி இருப்பதில்லை.