அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அனுபவி ராஜா!
1

பொதுத்துறைத் தொழில்களில் சில போதுமா?
பல்வேறு பெயர்களில் பற்பல அமைப்புகள்!
பொருளாதார ஏகாதிபத்தியத்துக்கு அடையாளம் பொள்ளாச்சி மகாலிங்கம்!
பணத்தோட்டம் எங்கே? அமீர் சந்த்களிடம்!
தண்டனை பல பெற்றும் தளரவில்லையே - ஏன்?
வளர்ச்சியால் வசதி பெற்றவர் யாவர்?
அனுபவி ராஜான்னு ஆள்பவர் கொடுக்கிறார் வாய்ப்பு!
மான் எங்கே? வேங்கையின் வயிற்றிலே! பணம் எங்கே? முதலாளியினிடத்திலே!

தம்பி!

முந்திரா என்ற முதலாளி நடத்திய திருவிளையாடல் இந்தியப் பேரரசையே ஒரு முறை திக்குமுக்காடச் செய்து விட்டதுபற்றி மறந்திருக்கமாட்டாய்.

அப்படி யாராகிலும் மறந்துவிட்டிருப்பினும், இப்போது வெகு வேகமாகப் பேச்சாளராகி வருகிறாரே திருச்செந்தூர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், அவரைப் பார்த்ததும் அல்லது அவரைப்பற்றிய நினைவு வந்ததும், முந்திரா பற்றிய முழுக் கவனமும் வந்துவிடும்.

முந்திரா, மிகப் பெரிய மோசடிகளைச் செய்து கோடி கோடியாகப் பணத்தைக் குவித்துக்கொண்டிருந்தபோது - குட்டு உடைபடாதிருந்தபோது - அவனுக்குப் புகழ்கூட இருந்தது! வியாபாரத்தில் சூரன், புள்ளி போடுவதில் புலி, தொழில் அமைப்பதில் நிபுணன் என்றெல்லாம் பாராட்டக்கூடச் செய்தனர்.

வணிக உலகிலே ஒரு புதிய ஒளி நட்சத்திரம் என்று சிந்து பாடிடக்கூட ஆட்கள் கிளம்பினர்.

அவன் மண்ணைத் தொட்டால் அது பொன்னாகும்! அவன் ஜாதகப் பலன் அப்படிப்பட்டது! யோகம் அப்படிப் பட்டது! என்று பேசினர் பலர். எப்போதோ கேட்ட பாட்டு நினைவிற்கு வருகிறது.

ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்
அனுபவி! ராஜான்னு அனுப்பி வைச்சான்!

அதுபோல "ராஜா'வாகத்தான் முந்திரா அனுபவித்துக் கொண்டிருந்தான் - மோசடி வெளியே வெடித்துக்கொண்டு கிளம்பும் வரையில்.

சிக்கிக்கொண்டான் சிறை சென்றான்; ஆனால், அவன் குவித்திருந்த செல்வம்? இருக்கிறது!

அந்தச் செல்வத்தைப்பற்றி இப்போது ஒரு புதுத் தகவல் கிடைத்து புதிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

முந்திரா, சேர்த்த பணத்தில் பெரும் பகுதியை, பல இலட்சக்கணக்கான பவுன்களை, தன் மனைவி பெயரால் இலண்டனில் பாங்கியில் போட்டு வைத்திருப்பதாக ஒரு தகவல் கிளம்பி, அதுபற்றிய துப்பு விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இலண்டன் பாங்கியில் ஒரு வெள்ளைக்காரன் பெயரால் இலட்சக்கணக்கான பவுன் போடப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் அந்தப் பணம் அவனுடையது அல்ல; அவன் திருமதி முந்திராவுக்காக, அவர்களின் ஏஜண்டாக அந்தப் பணத்தைப் பரிபா-த்து வருகிறான் என்ற விவரம் கிடைத் திருக்கிறது. வழக்கப்படி புலன் விசாரித்துக்கொண்டு வருகிறார்கள்.

நான் தம்பி! இதைச் சொல்லுவதற்குக் காரணம், முந்திரா பற்றிய புதுத் தகவலின் முழு விவரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல.

தனிப்பட்டவர்கள் தொழில் நடத்த சர்க்கார் அனுமதிக்கும் போது, பணம் குவித்திட என்னென்ன விதமான புரட்டுகள் நடைபெறக்கூடும் என்பதைக் காட்டிடவே இதனைக் கூறினேன்.

சர்க்கார் பணத்தையும், நம்பிக் கொடுத்தவர்களின் பணத்தையும், ஒன்றைப்போட்டு ஒன்றை இழுத்தும், இதைக் காட்டி அதை வாங்கியும், இப்படிப் பல செப்படி வித்தைகளைச் செய்ய முடிந்தது முந்திராவால்; அதன் காரணமாகப் பல வழிகளிலே பணம் கிடைத்தபடி இருந்தது; பணம், பணத்தை இழுத்துக்கொண்டு வந்து சேர்ந்தது.

இப்படி ஒரே ஆசாமியிடம் பல தொழில்கள் சிக்கிக் கொண்டால், பல தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அவ்வளவும் ஒரே ஆசாமியிடம் போய்ச் சேர்ந்தால், அவன் கோடீஸ்வரனாவதுமட்டுமல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கை வறண்டு போகத்தானே செய்யும்!

இந்த நிலையை அனுமதித்துவிட்டுப் பிறகு, சோஷியலிசம் பேசுவதினால் என்ன பயன்?

முந்திராபோல மோசடி செய்யாமலேகூட, சட்டப்படி கிடைத்திடும் சலுகைகளைக் கொண்டேகூட, முதலாளிகள் பணத்தை மேலும் மேலும் குவித்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இன்றைய காங்கிரஸ் அரசினால் அளிக்கப்பட்டிருக்கிறது.

தனிப்பட்டவர்கள் இதுபோலப் பல தொழில்களைச் செய்து பணம் குவித்துக்கொள்ளும் முறையை அமெரிக்காவில், முதலாளித்துவ முறை என்கிறார்கள். அதனையே இங்கு காங்கிரஸ் அரசு, ஜனநாயக சோஷியலிசம் என்று பெயரிட்டிருக்கிறது.

சர்க்கார், பொதுத் துறையிலே சில தொழில்களை நடத்துவதைக்கொண்டே இங்கு சோஷியலிசம் இருப்ப தாகக் கூறிக்கொள்வது தவறான வாதம், சொத்தையான தத்துவம்.

பணம், ஒரு சிலரிடம் போய்க் குவிந்துகொள்வதற் கான வழியை அமைத்துக் கொடுத்துவிட்டு சோஷியலிசம் பேசுவது, கன்றுக்குட்டி இறந்த பிறகு, வைக்கோலால் செய்த உருவத்தின்மீது அதன் தோலைப் போர்த்தி வைத்து, அதைக் காட்டிப் பசுவை ஏய்த்துப் பால் கறந்திடும் தந்திரம் போன்றதாகும்.

எத்தர்கள், புரட்டர்கள் கிடக்கட்டும்; என்றேனும் ஓர் நாள் அவர்கள் பிடிபட்டுக்கொள்வார்கள். ஆனால் தம்பி! சட்டத்திற்கு உட்பட்ட முறையிலேயே நடந்து பெரும் பொருளைத் திரட்டிக்கொள்ள இடம் இருக்கிறது. அப்படி ஒரு சிலரிடம் தொழில் சிக்கிக்கொள்வதால், உற்பத்தியாகும் செல்வம் அந்த ஒரு சிலரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. பல இலட்சக் கணக்கானவர்கள் "கூலி' மட்டும் பெற்று, குமுறிக் கிடக்கும் நிலையினராகின்றனர்! ஏழை பணக்காரன் வித்தியாசம் விரிவாகிக்கொண்டு வருகிறது.

காங்கிரசாட்சி ஏற்பட்ட பிறகு புதிய பணக்காரர்கள், புதிய புதிய தொழிலதிபர்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்துகொண்டு வருகிறார்கள் என்பதை மக்கள் அறியமாட்டார்களா?

முன்பெல்லாம் தம்பி! ஒரு குடும்பம் பணக்காரக் குடும்பமாக வேண்டுமானால், ஒரு தலைமுறை உழைத்துப் பணம் சேர்த்து, அடுத்த தலைமுறையில்தான், அந்தக் குடும்பம் பணக்காரக் குடும்பமாக முடியும். இருபது வருடமாக மண்டி வியாபாரம்; முப்பது வருடமாக நகை வியாபாரம்; பதினைந்து வருடமாக ஜவுளி வியாபாரம்; பாட்டனார் கால முதற்கொண்டு "காண்ட்ராக்டு'த் தொழில் - இப்படித்தான் பணக்காரக் குடும்பங்கள் பற்றிய "வரலாறு' இருக்கும்.

காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பணக்காரர்கள் உண்டாகிவிடு கிறார்கள். ஆறு வருடத்திற்கு முன்பு மோட்டார் துடைத்தவன், ஆண்டவன் தயவாலே, இப்போது அறுபது பஸ்ஸுக்குச் சொந்தக்காரன் என்கிறார்கள்!

ஏழு வருடத்திற்கு முன்னாலே எடுபிடி! ஏழுமலையான் தயவாலே, இப்போது பத்து பங்களாவுக்குச் சொந்தக்காரன் என்கிறார்கள்.

இந்த வேகமான வளர்ச்சிக்குக் காரணம் என்ன? பணம். ஒரே ஒரு தொழிலிலே கிடைத்தது அல்ல; ஒரு தொழிலிலே கிடைத்த பணத்தைக் கொண்டு மற்றொரு புதிய தொழில், அதிலே கிடைத்ததைக்கொண்டு மற்றோர் தொழில், இப்படிக் குட்டிப்போடுகிறது! இதைக் காங்கிரஸ் அரசு அனுமதிக்கிறது.

ஒரு தொழிலில், - பல சரக்கு மண்டி - ஜவுளிக் கடை - காண்ட்ராக்ட் - எதுவாகவேனும் இருக்கட்டும், அது சிறிய அளவிலே துவங்கி, பிறகு அது மெள்ள மெள்ளப் பெரிய அளவாகி, ஒரு இடத்தில் இருப்பது; பிறகு பல இடத்திலே கிளைகள் விட்டு எல்லாவற்றிலும் இருந்து வருவாய் கிடைத்து, மொத்தமாகப் பல இலட்சங்கள் சேருவது ஒரு முறை.

உதாரணமாக, கடைவீதிக் கோடியில் இருபது ரூபாய் வாடகைக் கட்டிடத்தில் ஜவுளிக் கடை ஆரம்பித்து, பிறகு அது வளர்ந்து, இரு நூறு ரூபாய் வாடகையுள்ள புதிய பெரிய கட்டிடத்தில் கடை நடந்து, பிறகு கடைவீதியில் மையமான இடத்தில் புதிய கட்டிடமே சொந்தத்தில் அமைந்து, அதிலே பெரிய அளவிலே கடை நடத்தி, இலாபம் கூடுதலாகக் கிடைக்கக் கிடைக்க வேறு சில ஊர்களிலேயும் ஜவுளிக் கடைகளைத் துவக்கி, இலாபம் சேர்ப்பது ஒரு முறை.

அந்த விதமாக மட்டும் இருந்தால்கூட, ஒரு சிலரிடம் இவ்வளவு வேகமாகப் பணம் சேராது.

முதலில் சிறிய அளவில் ஜவுளிக் கடை
பிறகு பெரிய அளவில் ஜவுளிக் கடை
பிறகு ஜவுளி தயாரிக்கும் ஆலை.
பிறகு ஆலைக்குத் தேவையான பருத்திக் காடு!
பிறகு ஆலைக்குத் தேவையான இயந்திர உற்பத்தி.
பிறகு இயந்திரத்துக்குத் தேவையான இரும்புத் தொழில்.
பிறகு இவ்வளவுக்கும் தேவைப்படும் பணத்துக்காக பாங்க்!

இப்படி, பல கால்களை உண்டாக்கிக்கொள்வது ஒரு முறை.

நமது நாட்டில் இன்று வளர்ந்து, வலிவு ஏறியுள்ள முதலாளித்துவம், இந்த முறையானது. ஜவுளியிலிருந்து துவங்கி பாங்க் வரையில், பல்வேறு தொழில்களுக்கு ஒரே அதிபதி!

இதனைத்தான் பொருளாதார ஏகாதிபத்தியம் என்பர்.

இந்தியா, பர்மா, சிலோன், இப்படிப் பல நாடுகளுக்கு அதிபதியாக இருந்து பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை பல நூற்றாண்டுகள் நடத்தியதால், உலக வல்லரசாகவும், செல்வம் கொழிக்கும் இடமாகவும் இருந்து வந்தது.

பொருளாதாரத் துறையிலே இன்று வளர்ந்துவிட்டிருக்கும் ஏகாதிபத்தியம் அரசியல்துறை ஏகாதிபத்தியத்தைவிட ஆபத்தானது; நாட்டு வளத்தை ஒரு சிலர் உறிஞ்சிக் கொள்வதால்.

யார்மீதும் பகைகொண்டோ, பொறாமை காரண மாகவோ, அருவருப்புக்கொண்டோ கூறவில்லை; விளக்கத்துக்காகக் கூறுகிறேன்; நான் குறிப்பிடும் பொருளாதார ஏகாதிபத்தியத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமானால், உதாரணத்துக்காக இந்த இருபது ஆண்டுகளில் டி. வி. எஸ். கம்பெனி வளர்ந்துள்ள வகையையும், பொள்ளாச்சி மகாலிங்கம் தமது தொழிலை விரிவாக்கியுள்ள வகையையும், பார்! நிலைமை புரியும்! பார்க்கச் சொல்லிக் கேட்டுக்கொள், கோபப்படும் காங்கிரஸ் நண்பரை; அவருக்கும் உண்மை உள்ளத்தைத் தைக்கும்.

பொள்ளாச்சி மகாலிங்கம் காங்கிரஸ்காரர்; சட்டமன்ற உறுப்பினர்! படித்தவர், நல்லவர், எனக்கு நண்பர்கூட.

அவர், காங்கிரஸ் கட்சி கூறும், சோஷியலிசத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார், ஏன்? அந்த சோஷியலிசம்,

பஸ் தொழில்
சர்க்கரை ஆலைத் தொழில்
செயற்கை வைரத் தொழில்

என்ற முறையில் நண்பர் மகாலிங்கம் தமது தொழில் சாம்ராஜ் யத்தைப் பெரிதாக்கிக்கொண்டு, இப்போது சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில், இரும்புக் குழாய் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை அமைக்கும் அளவு அனுமதித்திருக்கிறது. இந்த நிலையிலே, காங்கிரஸ் பேசும் சோஷியலிசத்தை ஏற்றுக்கொள்ள அவருக்குக் கசக்குமா?

சோஷியலிசம் என்றால், இலாபம் தரும் தொழில் பலவும் ஒரு சிலரிடம் போய்ச் சிக்கக்கூடாது, சிக்கிடின் ஏழை பணக்காரன் பேதம் அதிகமாகிவிடும். ஆகவே மகாலிங்கம் அவர்களே! பஸ் தொழிலோடு திருப்திப் படுங்கள்! புதிய புதிய தொழில்களைத் துவக்கி, புதிய புதிய வருவாயைப் பெருக்கிக்கொண்டே போனால், செல்வம் பரவாது என்று காங்கிரசின் சோஷியலிசம் கூறினால், மகாலிங்கம், இது அக்கிரமம்! இது கொடுமை! என்று கோபித்துக்கொள்ளக்கூடும்.

எந்தத் தொழிலையும் நடத்தலாம், எவ்வளவு பெரிய தொழிலையும் நடத்தலாம், எந்த இடத்திலும் நடத்தலாம், எல்லாத் தொழி-லும் கிடைக்கும் இலாபத்தை அடைய லாம், ஆனால் ஜனநாயக சோஷியலிசத்தை மட்டும் பேசவேண்டும் என்றுதானே காங்கிரஸ் கட்சி கூறுகிறது. முதலாளிகள் ஏன் தலை அசைக்கமாட்டார்கள்! தாளமே போடுகிறார்கள், இது அல்லவா கீதம் என்று!!

ஒரு முதலாளி, பல்வேறு தொழில்களை நடத்துவது மட்டுமல்ல; பல்வேறு பெயர்களில், பல அமைப்புகளை நடத்திக் கொள்ளவும் முடிகிறது.

ஒரு பத்து நாட்களாக, பத்திரிகைகளிலே பலமாக அடிபடுகிறதே தம்பி! அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி - அதன் கதை அப்படித்தான்.

பல (கம்பெனிகள்) அமைப்புகள் - தனித்தனிப் பெயருடன்; எல்லாவற்றிலும் இலாபம்; எல்லாம் ஒரே இடத்திற்குச் செல்ல வழி!

ஆண்டவனுக்கு ஆயிரம் நாமம் - அர்ச்சிக்க.

புதிய முதலாளிகளுக்கு பல கம்பெனிகள், தனித் தனிப் பெயருடன் - எல்லாம் இலாபம் பெற!

அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி என்ற ஒரே பெயரில் தொழிலை விரிவாக நடத்துவதைவிட, தனித் தனிப் பெயருடன் பல கம்பெனிகளை நடத்துவதிலே பல வசதிகள்; பல இலாபங்கள்; வரிச் சலுகைகள் கிடைக்கின்றன.

அமைச்சர் சுப்பிரமணியம் முதலிலே போட்ட ஒரு உத்தரவைப் பிறகு மாற்றினாரே, அது ஏன்? அது முறையா? என்ற கேள்வி கிளப்பிவிடும் சத்தத்தில், பொது மக்கள் - அதிலும் குறிப்பாக காங்கிரஸ் பேசி வரும் ஜனநாயக சோஷியலிசம் போலியானது என்பதை உணராதிருக்கும் பொது மக்கள் - ஒரு பேருண்மையை அறிந்துகொள்ள முடியாமலிருக்கிறார்கள்.

எத்தனை பெரிய அளவிலும், எத்தனை வடிவங்களுடனும் ஒரு
முதலாளித்துவ அமைப்பு இருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது, இந்த அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி.

தம்பி! இந்தக் கம்பெனி 1910-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று எஃகு வியாபாரத்தில் மட்டும் ஈடுபட்டுள்ள இதன் அமைப்புகளின் எண்ணிக்கை 20