அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அனுபவி ராஜா!
2

இந்த இருபதும், முதலாளிகளைக் கொழுக்க வைக்கவே ஏற்பட்டதாகச் சொல்லுகிறார்களே வெள்ளைக்கார அரசை - அப்போது ஏற்பட்டவை அல்ல. அப்போது, அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி மட்டுந்தான். மற்ற இருபது கம்பெனிகளும் காங்கிரஸ் ஆட்சியின்போது - 1948-லிருந்து ஏற்பட்டவை. பொதுக் கணக்குக் குழுவினர் கண்டறிந்து வெளியிட்ட தகவலைத் தருகிறேன் - எந்த விதமான முதலாளித்துவ அமைப்பு, சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் ஆட்சியின்போது வளர்ந் திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளச் சொல்லு தம்பி! பொங்கி எழுகின்ற காங்கிரஸ் நண்பர்களை.

1. அமீர்சந்த் பியாரிலால் 1910
2. சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட் 1948
3. சுரேந்திரா ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் 1948
4. அசோசியேட் ஒயர்ஸ் கண்டக்டர்ஸ் கம்பெனி -
5. அபிஜே பிரைவேட் லிமிடெட் 1959
6. அபிஜே கம்பெனி, கல்கத்தா 1962
7. அபிஜே ஸ்டீல் காஸ்டிங், ஜலந்தர் - தகவல் இல்லை
8. ஸ்டீல் கிரீட் பிரைவேட் லிமிடெட் -
9. ஸ்டீல் ரோலிங் மில்ஸ், கல்கத்தா 1963
10. காஷ்மீர் சிராமிக்ஸ் 1961
11. ஓரியண்டல் ஸ்பூன் பைப் கம்பெனி 1961
12. ஏரான் ஸ்டீல் ரோலிங் மில்ஸ், ஜலந்தர் 1957
13. ஏரான் ஸ்டீல் ரோலிங் மில்ஸ், பம்பாய்-தகவல் இல்லை
14. இன்டர்நேஷனல் சானிடரி என்ஜினியர்ஸ், டில்லி ''
15. இந்தியா என்ஜினியரிங் ஒர்க்ஸ், கல்கத்தா ''
16. மெட்டல் இம்போர்ட் கல்கத்தா ''
17. அமீர்சந்த் பியாரிலால் லிமிடெட் 1963
18. சுரேந்திரா என்ஜினியரிங் ஒர்க்ஸ் 1960
19. அபிஜே பிரைவேட் லிமிடெட், கல்கத்தா
20. அமீன்சந்த் பியாரிலால் டின் கன்ட்டெயினர் லிமிடெட்
21. அபிஜே ஸ்டீல் ஒர்க்ஸ், ஜம்மு.

டில்லி, பம்பாய், கல்கத்தா, ஜம்மு, ஜலந்தர் இப்படிப் பல ஊர்களில்!

எஃகு ஆலை, குழாய் தயாரிப்புத் தொழில், வேலைப் பாடுள்ள மண்பாண்டத் தொழில், இப்படிப் பல வகை.

முதலாளியின் பெயரில், பொது மக்களிடம் பங்குகள் வாங்கி நடத்தப்படும் கம்பெனி, குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் பங்குத் தொகை வாங்கி நடத்தப்படும் கம்பெனி இப்படிப் பல முறை.

எல்லாவற்றிலும் கிடைக்கும் இலாபம், ஒரே இடத்திற்குப் போய்ச் சேருவதற்கான வாய்ப்பு.

இதை அனுமதித்துக்கொண்டு, சோஷியலிசம் பேசுவதிலே, பொருள் இருக்கிறதா? நேர்மை இருக்கிறதா? கேட்டால், கோபம் வருகிறதே!

இத்தனை தொழில் அமைப்புகள் என்றால், இத்தனை வருவாய்த் துறைகள் என்று பொருள். இத்தனை வருவாய்த் துறையும் ஒரே இடத்திற்கு என்றால், பணம் அங்கு குவிவதும், பிற இடங்கள் வறண்டு போவதும் இயல்புதானே? எப்படி இந்த நிலைமையை வைத்துக்கொண்டு ஏழை பணக்காரன் வித்தியாசத்தை ஒழிப்பது?

இத்தனைத் தனித் தனி அமைப்புகள், ஒரே முதலாளியிடம் இருப்பதிலே வேறோர் வசதி கிடைக்கிறது.

சர்க்காரிடம், பர்மிட் லைசென்சு, வியாபார ஒப்பந்தம், தரகு இவைகளைப் பெறும்போது, ஒவ்வொன்றின் பேராலும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு அமைப்பு ஏதாவது தவறு நடத்தி அது கண்டு பிடிக்கப்பட்டு, சர்க்காரின் கோபம் பாய்ந்தால், மற்ற அமைப்புகளின் பேரால், சர்க்காரிடம் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

விளக்கிட விளக்கிட விதவிதமான ஆதாயம், இதன் பலனாகக் கிடைப்பது புரியும்.

சர்க்கார், இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தவே இல்லையா என்று கேட்கிறாய். கட்டுப்பாடு, கட்டுப்பாடு என்று பேசுகிறார்களே, இதன் பொருள் என்ன என்று அறிந்துகொள்ள ஆசைப்படுகிறாய்.

காங்கிரஸ் அரசு தொழில் நடத்தும் அனுமதியில், ஏற்றுமதி இறக்குமதி நடத்துவதற்கான அனுமதியில் கட்டுப்பாடு வைத்திருக்கிறது.

அதாவது, எம்மிடம் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இன்ன உற்பத்தித் தொழிலில் ஈடுபடலாம், இன்ன சரக்கை ஏற்றுமதி செய்யலாம், இன்ன சரக்கை இறக்குமதி செய்யலாம் என்ற கட்டுப்பாட்டை சர்க்கார் வைத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் இன்ன அளவுக்கு மேல், இன்ன வகை களுக்கு மேல், ஒருவர் தொழில் நடத்தி விரிவாக்கி முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை அமைத்துக்கொள்ளக் கூடாது என்ற தடையோ, நிபந்தனையோ, கட்டுப்பாடோ இல்லை!

எம்மிடம் அனுமதி பெறுக! - என்கிறார்கள்! முதலாளிகள், "அனுமதி'யைப் பெற்றுக்கொள்கிறார்கள்!

அதுவேகூட அவர்களுக்கு இலாபமாக முடிகிறது. அதே தொழிலில் பலர் ஈடுபட்டால், அந்தத் தொழில் மூலம் கிடைக்கும் இலாபம் பல பேர்களுக்குப் பங்கு போடப்பட்டுவிடும்; ஒருவருக்கும் கொழுத்த இலாபம் கிடைக்காது.

சர்க்காரின் அனுமதியைப் பெற்றவர்கள் மட்டுமே உற்பத்தி செய்யலாம், ஏற்றுமதி இறக்குமதி நடத்தலாம் என்று இருப்பதால், அதற்கான சர்க்கார் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடிந்த "பாக்கியவான்கள்', மற்றவர் களுடைய போட்டித் தொல்லை இல்லாமல், இலாபம் முழுவதையும் அவர்களே பெற்றுக்கொள்கிறார்கள்.

அதாவது, தம்பி! பாட்டு ஒன்று குறிப்பிட்டேனே, அதுபோல, சர்க்கார் அனுபவி ராஜா என்று சிலரை அனுப்பி வைக்கிறார்கள்!

சர்க்காரிடம் சட்டம் இருக்கிறது - சுமை சுமையாக!

போலீசும் பட்டாளமும் இருக்கிறது - பலம் பொருந்தியதாக!

ஆனால், அமீர்சந்த்களிடம் பணத் தோட்டம் இருக்கிறது. அதனுடைய பொலிவு இருக்கிறதே மயக்கும்; வலிவு இருக்கிறதே மிரட்டும்; சட்டமே வளையும்; சர்க்காரே மலைக்கும்!

முதலாளித்துவ அமைப்பு இவ்வளவு விரிவாகவும் விழுதுவிட்ட தன்மையிலும் வளரவளர, அதனை அடக்கிடும் ஆற்றலை சர்க்கார் மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக இழந்துகொண்டேதான் வரும்.

தவறுகள் செய்தால் விடமாட்டோம், தண்டிப்போம் என்கிறார்கள்.

தவறுகள் நடந்தன; கண்டனமும், தண்டனையும் தரப்பட்டது; ஆனால் அமீர்சந்த் பியாரிலால் அமைப்பு அவ்வளவையும் தாங்கிக்கொள்ள முடிந்தது; தகர்ந்து போய்விட வில்லை; மூல பலம் அப்படி அமைந்திருக்கிறது.

ஏற்றுமதி இறக்குமதித் துறையிலே ஈடுபட்ட கம்பெனிகள் தவறு செய்தால், சர்க்கார் அவைகளை "கருப்புக் கோடிட்டு'த் தண்டிக்க முறை இருக்கிறது; அதாவது அந்தக் கம்பெனிகளுடன் சர்க்கார் எந்த வியாபார ஒப்பந்தமும் செய்துகொள்ளாது - ஒருவன் பல முறை போக்கிரித்தனம் செய்தால், போலீஸ் அவன் பெயரைக் குறித்து வைத்துக்கொள்வதுபோல.

அதுபோலச் செய்தது சர்க்கார் - அமீர்சந்த் பியாரிலால் - அதன் கிளைகள்மீது. செய்து? சளைக்கவில்லை! அமீர்சந்த் பியாரிலாலின் சாம்ராஜ்யம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எத்தனை முறை சர்க்காரின் "தண்டனை' கிடைத்தது என்ற விவரம் வேண்டுமா, தம்பி!

1. அமீர்சந்த் பியாரிலால் அமைப்பின் மீது 4-8-54 முதல் 29-1-57 வரையில், வீட்டு அமைப்பு அமைச்சர் அவை நடவடிக்கை எடுத்திருந்தது. மறுபடியும், 31-7-63 முதல் 31-7-65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இரும்பு எஃகு அமைச்சர் அவையினால் எடுக்கப்பட்டது.

2. சுரேந்திரா ஓவர்சீஸ் அமைப்பின் மீது 26-10-56 முதல் 29-1-57 வரை அந்த இரண்டு அமைச்சரகங்களுமே நடவடிக்கை எடுத்திருந்தன. மறுபடியும் அதே அமைப்பின் மீது 31-7-63 முதல் 31-7-65 வரையில் நடவடிக்கை.

3. சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட் என்ற அமைப்பின் மீது இரும்பு எஃகு அமைச்சரகம், 31-7-63 முதல் 31-7-65 வரையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

4. இன்டர்நேஷனல் சானிடரி என்ஜினியர்ஸ் என்ற அமைப்பின்மீது வீட்டமைப்பு அமைச்சரகம் 15-9-54 முதல் 29-1-57 வரை நடவடிக்கை எடுத்திருந்தது.

5. இந்தியா என்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற அமைப்பின் மீது 4-8-54 முதல் 29-1-57 வரை நடவடிக்கை எடுக்கப் பட்டது.

6. மெட்டல் இம்ப்போர்ட் கல்கத்தா என்ற அமைப்பின் மீது 31-7-63 முதல் 31-7-65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

7. அதுபோன்றே அபிஜே பிரைவேட் லிமிடெட் மீது.

8. அதுபோலவே அமீர்சந்த் பியாரிலால் டின் கன்ட்டெயினர் எனும் அமைப்பின் மீது.

இத்தனை வகையான நடவடிக்கைகள் - முறை தவறாக நடந்ததற்காக - எடுக்கப்பட்டும், இந்தத் தொழில் அமைப்பு, இப்போதும், எப்போதும்போலவே வலிவுடன் நிற்கிறது. அமைச்சர் சுப்பிரமணியத்துக்குத் தலைவலியைத் தருகிற பிரச்சினை இந்தக் கம்பெனியுடன்தான் பிணைந்திருக்கிறது.

தம்பி! தனிப்பட்டவர்கள் தொழில் நடத்த அனுமதிப் போமே தவிர, ஏராளமாக இலாபம் குவித்துக் கொழுக்க விடமாட்டோம் என்கிறார்கள், தனிப்பட்டவர்கள் நடத்தும் தொழிலில் தவறு நடந்தால், விடமாட்டோம் என்று வீரம் பேசுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். மறுபடியும் ஒரு தடவை, அமீர்சந்த் பியாரிலால் அமைப்புபற்றி நான் தந்துள்ள தகவல்களைப் படித்துப் பார்த்துவிட்டு பண்பு கெடாத காங்கிரஸ்காரரிடம் படித்துக் காட்டி அவரையே நியாயம் கூறச் சொல்லு; இதுவா சோஷியலிசம் கொண்டுவரும் இலட்சணம் என்பது பற்றி.

அடக்கிவிடுவோம், ஒடுக்கிவிடுவோம் என்று வீரம் பேசுகிறார்கள் தம்பி! அதைக் கேட்டு உண்மையான காங்கிரஸ் பற்று கொண்டவர்கள் ஓரளவு மயங்கிப் போகிறார்கள். ஆனால் இவ்வளவு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, சர்க்கார் சூடிட்டும், அமீர்சந்த் பியாரிலால் எனும் அமைப்பு எத்தகைய வளர்ச்சி அடைந்திருக்கிறது தெரியுமா? சர்க்காரின் அனுமதியில்லாமல், ஏற்றுமதி இறக்குமதித் துறையிலே ஈடுபட முடியாது என்பதை அறிவாய். அந்தத் துறையில் இந்த அமீர்சந்த் பியாரிலால் அமைப்பு,

1959லில் இறக்குமதியில் 100க்கு 9 என்ற அளவு பங்கும், ஏற்றுமதியில் 100க்கு 12 என்ற அளவு பங்கும் பெற்றிருந்தது.

ஆனால் 1960லில், இதே கம்பெனி இறக்குமதியில் 100க்கு 59 என்ற அளவிலும், ஏற்றுமதியில் 100க்கு 60 என்ற அளவிலும் பெற்றிருக்கிறது. பார்த்தாயா வளர்ச்சியை! எந்த அமைப்பு? பல அமைச்சரகங்களால், பல முறை முறைகேடாக நடந்துகொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, முகத்தில் கரி பூசப்பட்ட அமைப்பு!

முகத்திலே கரி பூசுவதுபோல இந்த அமைப்பு, முறை கேடாக நடந்துகொண்டதற்காக, இந்த அமைப்புடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று சூடிட்டிருந்தும், எப்படி இந்த அமைப்பு இந்த வேகமான வளர்ச்சியைப் பெற முடிந்தது என்று கேட்கத் தோன்றும். தம்பி! அந்த வேடிக்கையையும் சொல்லுகிறேன் கேளேன்.

1954 ஆகஸ்ட் - செப்டம்பரில், அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பு முறைகேடாக நடந்ததற்காக, வீட்டமைப்பு அமைச்சரகம் சூடிட்டது, இந்த அமைப்புடன் எந்தவிதமான ஒப்பந்தமும் கொள்ளக்கூடாது என்று.

முதலாளி திணறிப்போயிருப்பார் என்றுதானே எண்ணிக் கொள்கிறாய்! பணம், தம்பி! பணம்; கோடி கோடியாக! தந்திரம் தன்னாலே வருமே!

அமீர்சந்த் பியாரிலால் என்ற பெயருடைய அமைப்பின் மீதுதானே நடவடிக்கை! இருக்கட்டுமே என்று கூறி விட்டு, முதலாளி ஒரு புன்னகை காட்டுகிறார்; திட்டம் தயாராகிறது.

சுரேந்திரா ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய அமைப்பு துவக்கப்படுகிறது.

சர்க்காரின் கோபப் பார்வை அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பின்மீதுதானே! இது புத்தம் புதிது! சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட்!!

52 காண்ட்ராக்டுகள் ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன சுரேந்திராவுக்கு!! எஃகு இறக்குமதி செய்வதற்கான அனுமதி! தொகை? 23 கோடி ரூபாய்.

சுரேந்திரா ஓவர்சீஸ் பிரைவேட் கம்பெனி எவருடையது? பொதுக் கணக்குக் குழு தெரிவிக்கிறது, அதுவும் அமீர்சந்த் பியாரிலால் அமைப்புக்கு உட்பட்டதுதான் என்று.

உரையாடல் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாரேன், தம்பி! சுவையாக இருக்கும்.

எஃகு இறக்குமதி செய்ய அனுமதி வேண்டும்.

யாருக்கு? உனக்கா? முறைகேடாக நடந்ததற்காகக் கரி பூசப்பட்ட கம்பெனிக்கா? என்ன துணிவு!

ஐயையே! அனுமதி யார் கேட்பதாக எண்ணிக் கொண்டு பேசுகிறீர்கள்? கரி பூசப்பட்டது யார்மீது? அமீர்சந்த் பியாரிலால் கம்பெனிமீது!

ஆமாம்! அந்த அமைப்பின்மீதுதான்.

இது, அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பு அல்ல. இது சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட்! இந்த அமைப்பின் மீது மாசு மறுவு கிடையாது.

புதிய கம்பெனியா? ஆனால் இரண்டும் ஒன்று அல்லவா? சட்டப்படி, இது ஒரு தனிக் கம்பெனி! இந்த அமைப்பிற்கு, இறக்குமதி அனுமதி தர முடியாது என்று மறுக்க காரணம் ஒன்றும் கிடையாது. . . ஆகவே. . .

இப்படித்தான் தம்பி! சர்க்கார் சூடிட்டாலும், இந்த அமைப்பு வளர்ச்சி அடைந்திட முடிந்தது.

இவ்விதமாக, பண பலத்தாலும் சட்டத்தின் சந்து பொந்து களிலே நுழைந்து தப்பித்துக்கொள்ளும் சாமர்த்தியத்தாலும் பல அமைப்புகள் இன்று, அரசையே ஆட்டிப்படைக்கத்தக்க அளவு வலிவு பெற்று விளங்குகின்றன. பாட்டாளிகளின் உழைப்பினாலும் பொதுமக்கள் விலை கொடுத்துப் பண்டம் பலவற்றை வாங்குவதாலும் குவியும் செல்வத்தை, இத்தகைய அமைப்புகளின் அதிபர்கள் தமதாக்கிக்கொள்கின்றனர்.

நாட்டிலே வளர்ச்சியேவா இல்லை; செல்வம் பெருகவே இல்லையா? என்று சிறிதளவு கோபத்துடன் கேட்கின்றனர், காங்கிரசிலே உள்ள நல்லவர்கள்.

வளர்ச்சியும் செல்வப் பெருக்கமும் நிச்சயம் ஏற்பட் டுள்ளன; மறுப்பார் இல்லை. ஆனால் வளர்ச்சியால் வசதி பெற்றவர்கள் யாரார்? செல்வப் பெருக்கம் எவரிடம் போய்ச் சேர்ந்தது? என்பதுதான் தம்பி! நாம் கேட்கும் கேள்வி.

மான் எங்கேவும் போய்விடவில்லை, வேங்கையின் வயிற்றிலேதான் இருக்கிறது என்று கூறுவதுபோல, செல்வப் பெருக்கம் எங்கேயும் போய்விடவில்லை, முதலாளிகளிடம்தான் இருக்கிறது என்று கூறிடும் துணிச்சலே பிறந்திருக்கிறது சில அமைச்சர்களுக்கு.

தம்பி! 1949 - 50லில் சுரங்கத் தொழில் மூலம் உற்பத்தியான செல்வம் 110 கோடி ரூபாய் மதிப்புள்ளது. இதே துறையில் 1960 - 61லில் 183 கோடி ரூபாய் அளவு கிடைத்திருக்கிறது. வளர்ச்சி! சந்தேகமில்லை! புலியின் வயிறு பெருத்திருக்கிறது! உள்ளே புள்ளி மான் குட்டி!!

தேயிலைத் தொழிலின் மூலம், 1949-50லில் 133 கோடி, 1960-61லில் 242 கோடி ரூபாய்.

தொழிற்சாலைகள் மூலம் 1949-50லில் 1333 கோடி, 1960-61லில் 4003 கோடி!

கப்பல் துறை மூலம் 1949-50லில் 18 கோடி, 1960லில் 135 கோடி!

பாங்கித் தொழில், இன்ஷூரன்ஸ் தொழில் மூலம் 1949-50லில் கிடைத்தது 68 கோடி, 1960-61லில் கிடைத்தது 138 கோடி.

தம்பி! மொத்தத்தில் பல்வேறு துறைகளின் மூலம் உற்பத்தியான செல்வம், 1949-50லில் 1662 கோடி. 1960-61லில் 4741 கோடி!!

இந்தச் செல்வம், சமூகத்தில் சீராகப் பரவி இருந்தால் மக்களின் வாழ்க்கை இத்தனை சீர்கேடாகவா இருக்கும்?

இந்தச் செல்வத்தில் மிகப் பெரும் பகுதி, நிபுணர்கள் கூறுகிறார்கள் - காங்கிரஸ் தலைவர்களும் மறுக்கவில்லை - ஏழைக்கு வந்து சேரவில்லை - பணக்காரனை மேலும் பணக்காரனாக்கி இருக்கிறது.

இந்தச் செல்வத்திலே பெரும் பகுதி, இந்தியாவிலே ஒரு நூறு பேர்களிடம் - கோடீஸ்வரர்களிடம் - போய்க் குவிந்திருக்கிறது என்ற உண்மையை மறுப்பவர் எவரும் இல்லை.

அவர்கள் வைத்திருக்கும் கணக்கோ - துப்பறியும் இலாகாவையே திணற வைக்கிற முறையிலே இருக்கிறது.

மறுபடியும் அந்தப் பாட்டுத்தான் நினைவிற்கு வருகிறது.

அனுபவி ராஜான்னு
அனுப்பி வைச்சான்!

ஆண்டவன் கொடுத்ததாகச் சொல்லிக்கொள்வது, பழைய முறை; இப்போது ஆள்பவர் கொடுக்கிறார்கள் - வாய்ப்பு.

கொடுமை! - என்கிறாய் தம்பி! எனக்கு அதைவிடக் கொடுமையாகத் தென்படுவது என்ன தெரியுமா? இதைச் செய்து கொண்டே, கூச்சப்படாமல், சோஷியலிசமும் பேசுகிறார்களே, அதுதான், தம்பி!

அண்ணன்,

21-8-66