அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அப்போதே செய்த முடிவு
1

ஒரு சுவையான - பயனுள்ள கதை
இந்தி ஆட்சிமொழி என்பது அப்போதே செய்த முடிவாம்!
இந்தியாவுக்கு ஒரு மொழியே ஆட்சி மொழி என்பது அறிவீனம்!
மதுவிலக்குக் கூட அப்போதே செய்த முடிவுதானே!
பொறி பறக்கப் பாடியவர் பறந்தே போயினார்!

தம்பி!

ஒரு சுவையான கதை - பயனும் உண்டு - சொல்லட்டுமா! நிகழ்ச்சி என்றுகூடச் சொல்லலாம், ஆனாலும், கதையின் கவர்ச்சி இருப்பதால் கதை என்றே பெயரிட்டு விட்டேன். ஓடும் இரயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி - மூன்றாவது வகுப்புப் பெட்டியில்.

இரண்டு குடும்பங்கள் உள்ளன அந்தப் பெட்டியில் - தாயும் மகனும் - தாயும் மகளும் - மகன் ஆறு வயது - மகள் ஐந்து வயது. அழகான சிறுவன், சிறுமி. நமது நாட்டிலேதான் குழந்தைப் பருவத்து அழகு மிகுதியாயிற்றே - வளர வளரத் தானே பாவம், உடல் கருத்து, உறுப்புகள் தேய்ந்துபோய் பரிதாபத்துக் குரிய உருவங்களாகி விடுகின்றன. சென்ற கிழமை திருமண விழாவிலே சி.பி.சி. சொன்னது நினைவிற்கு வருகிறது - குழந்தைகள் வளர வளரக் கையைக் காணோம், காலைக் காணோம், வயிறு மட்டும்தானே முன்னாலே முட்டிக்கொண்டு வந்திருக்கிறது என்றார் - தாய்மார்கள் அனைவரும் கொல்லென்று சிரித்தனர். சிலர் தமது குழந்தைகளை மறைத்துக் கொண்டனர்.

இரயிலில் செல்லும் சிறுவனும் சிறுமியும் அவ்விதம் இல்லை - சிங்காரச் சிட்டுப்போல, மல்லி மொட்டுப்போல அழகாக உள்ளன. அந்தத் தாய்மார்களுக்கு மகிழ்ச்சி - பெருமை - தமது குலக் கொடிகளின் அழகு கண்டு.

சிறுவனும் சிறுமியும் சிணுங்கிக் கொண்டில்லை - சிரித்து விளையாடுகின்றனர்.

மணிப்பயல் துணிச்சல்காரன். சிறுமியுடன் கைகோர்த்துக் கொண்டு விளையாடுவது மட்டுமல்ல, தன்னிடம் உள்ள "பிஸ்கட்டு'த் துண்டு எடுத்துத் தந்து தின்னச் சொல்வது மட்டுமல்ல, போக்கிரிப் பயல், முத்தமே கொடுக்கிறான். அந்த வயதிலேயே ஒரு வெட்கம் அந்தப் பெண்ணுக்கு; பெண்ணைப் பெற்றவளோ முகவாய்க் கட்டையில் கையை வைத்தபடி இதனைக் காண்கிறாள், வாய்விட்டுச் சிரித்தே விடுகிறாள்.

"உன்னோட மகன் பெரிய கைகாரப்பயலா இருப்பான்போல இருக்குதே. ஒரு அரைமணி நேரத்திலே, என் பொண்ணோட பழகிப் பேசி, எம்மாந்தூரம் போயிட்டான் பார்த்தியா'' என்றாள் செல்லமாக!

"வாடா என் ராஜா! என் கண்ணு! பாப்பாவுக்கு முத்தா கொடுத்தே. கேட்டாளா அந்தக் குட்டி! கேட்டிருப்பா, தளுக்குக்காரி!'' என்று கூறி, பிள்ளையைப் பெற்றவள் மகனுக்குத் திருஷ்டி கழிக்கிறாள்.

"பையனுக்குச் சிபாரிசு பேசறதைப் பாரு, என் பொண்ணுதான், உன்னோட மகனைக் கூப்பிட்டு முத்தம் கொடுக்கச் சொன்னாளா?''

"சொன்னாளோ இல்லையோ, முத்தம் கொடுத்தபோது வேண்டாமுன்னு தடுக்கக் கூடாதா, சொக்கிப் போய் நின்னுட்டாளே. . .''

"சொக்கவுமில்லை, நிக்கவுமில்லை; அய்யோ பாவம் இவ்வளவு கெஞ்சிக் கூத்தாடறானே, ஒண்ணு கொடுப்போம்னு, "உம்'னு சொன்னா என் மக. . .''

"உம்னு சொல்லிவிட்டாளேல்லோ, அந்த விநாடியே அவ அவன் பொருளாயிட்டா.'' "அடி அம்மாடி; அப்படி ஒரு நியாயம் இருக்குதா. . .''

"ஏன், என் மகனுக்கு உன் பெண்ணைக் கொடுக்க என்ன கசக்குமா. . . ராஜாவாட்டம் இல்லையா என் மகன். எங்கே போய் நீ தேடினாலும் உனக்கு இதுபோல் அழகான மாப்பிள்ளை கிடைப்பானா! கேள்டா கண்ணு! மாமி, மாமி! உன் பொண்ணை எனக்குக் கொடுன்னு கேளு. . .''

"கேட்பானா தைரியமா. . . என் மக என்ன பொம்மையா, யார் கையிலேயாவது தூக்கிக் கொடுத்துவிட. . .''

"நீ கொடுக்கறது என்ன! அதோ பார்! அதுக ரெண்டும் நம்மைப் பத்தித் துளிக்கூடக் கவலையில்லாமே விளையாடிக் கிட்டு இருக்கறதை. ஜோடி பொருத்தமாயிட்டுது. இனி நீயும் நானும் தடுத்தாலும் நிற்கவாப் போவுது. பேசாம உன் பொண்ணை என் மகனுக்குக் கொடுத்துடு.''

"அப்படியே ஆகட்டும். அதுக இரண்டும் ஆடிப்பாடி சந்தோஷமா இருக்கறதைப் பார்க்கப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாத்தான் இருக்குது. . .''

"பேர் என்னா சொன்னே பொண்ணுக்கு. . .''

"அவ பேரா, அரசாளப் பிறந்தவளாச்சே என் மவ; பேரு இந்திரா. . .''

"என் மவன் பேரு தெரியுமா உனக்கு. . . அழகேசன். . .''

"பொருத்தமான பேருதான். . . வயசு ஏழா?'' "ஆறு வயசு ஆகுது. . . உன் மகளுக்கு அஞ்சு இருக்குமா.''

"அதேதான். . . எப்படி அவ்வளவு கணக்காச் சொல்லிட்டே. . .''

"என் மகனுக்கு வாழ்க்கைப் படப்போறவளைப் பத்தி எனக்குப் புரியாமலா போகும். பேச்சு மாற மாட்டயே. . . என் மகனுக்கே கொடுக்கணும். . .''

"ஆகட்டும். . . அப்படியே செய்யறது. . .''

"வாக்குக் கொடுத்தாச்சி, தெரியுதா? தாம்பூலம் மாத்திக் கிட்டோம்; அப்பாலே வந்து அப்படி இப்படின்னு ஏதாச்சும் மறுத்துப் பேசினே, என் மகன் இலேசா விடமாட்டான்.''

ஓடிக் கொண்டிருந்த இரயில் நிற்கிறது. பெண்ணைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு, போய் வருவதாகச் சொல்லி விட்டு, அந்தத் தாய் கீழே இறங்கிக் கொள்கிறாள். மகனிடம் காட்டுகிறாள் அவன் தாய், பெண்ணை.

"கண்ணு! நல்லா அடையாளம் பார்த்து வைத்துக் கொள்ளு. . . உனக்குத்தான் அந்தக் குட்டி. . . தெரியுதா. . . வாக்குக் கொடுத்தாச்சி'' என்கிறாள்.

மூன்றாவது வகுப்புப் பெட்டியிலேதான் தம்பி, அடிதடிச் சண்டை முதற்கொண்டு இப்படிப்பட்ட அளவளாவுதல் வரையிலே காண முடியும்.

யாரோ இரண்டு குடும்பம்; முன்பின் பழக்கமில்லை; இரயிலில் நேசம்; இதிலே இப்படிப்பட்ட பாசப் பேச்சு!

வருடங்கள் உருண்டோடுகின்றன - இதுபோன்ற எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகளை உருட்டித் தள்ளிவிட்டபடி.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் நாள்.

கட்டுடல் படைத்த ஒரு காளை ஒரு ஊரில், ஏதோ ஒரு முகவரியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அந்த இடம் நோக்கி நடக்கிறான். வீட்டைக் கண்டறிகிறான்; தாளிடப்பட்டிருக்கிறது; தட்டுகிறான்; உள்ளே இருந்து சிறிதளவு நரை தோன்றியுள்ள பருவத்தினளான ஒரு மாது வருகிறார்கள்.

"அன்னம்மாள் வீடு இதுதானே. . .?''

"ஆமாம், நான்தான் அன்னம். . . யார்? என்ன வேண்டும்...''

"இந்திராவோட அம்மா நீங்கதானே. . .?''

"ஆமாம். . . என் மகதான் இந்திரா. . . நீங்க. . .?''

"இந்திராவைக் கூப்பிடுங்க. . .''

"என்னடா தம்பி! முன்பின் பழக்கமில்லாதவன் இப்படி வந்து, ஒரு வயசுவந்த பொண்ணை இங்கே கூப்பிடுன்னு சொல்லலாமா. . .? உலகம் தெரியாத பிள்ளையாயிருக்கறியே. .. யார் நீ. . .?''

"விவரம் தெரியாம நான் ஒண்ணும் பேசல்லே, இந்திரா இருக்குதே இந்திர. உங்க மக அது எனக்காகத்தான் வளருது. . . எனக்குத்தான் இந்திரா. . .''

"யார்டா இவன் அறிவு கெட்டவனா இருக்கறே, குடிபோதையா, வெறியா. . . கூப்பிடட்டுமா அக்கம் பக்கத்திலே உள்ளவர்களை. அவ்வளவு திமிர்பிடிச்சா அலையறே. . . நீ யாரோ எவனோ. . . என் பொண்ணு உனக்குன்னு பேசறியே - நாக்கைத் துண்டாக்கிப் போட. . . நாசமாப் போக''

"ஏம்மா வீணா அலட்டிக் கொள்றே இப்பப் பேசி என்ன பிரயோசனம் அது அப்போதே செய்த முடிவு. . . பனிரெண்டு வருடத்துக்கு முன்னாலே; இரயிலிலே போகிறபோது, இந்திராவை எனக்கே கொடுக்கறதாக, எங்க அம்மாவிடம் வாக்குக் கொடுத்தாச்சி. . . சொன்ன சொல்லின்படி நடந்து கொள்ளணும்; வாக்கு மாறக்கூடாது. . .''

"என்னடா இது பெரிய சனியனாப் போச்சி. சந்தேகமில்லாம இவன் ஒரு பைத்தியக்காரன்தான் அண்ணாச்சி! கோபாலண்ணாச்சி! கோவிந்தப்பா! பெரியப்பா! ஓடியாங்க. . .''

தம்பி! கதையை இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன். ஏனென்றால் அதற்குமேல் நடைபெற்றவை, அடிதடி, போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, வழக்குமன்றம் இப்படி இருக்கிறது. விவரம் புரிகிறதல்லவா உனக்கு பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரயிலில், சிறுவனும் சிறுமியும் விளையாடியது கண்டு பெற்றவர்கள் பேசிக் கொண்டார்களல்லவா, பொழுது போக்காக, அந்தப் பேச்சை அப்படியே தூக்கி வைத்துக் கொண்டு, அப்போதே செய்த முடிவு என்று கூறிக்கொண்டு பித்தமனம் கொண்ட இளைஞன் வந்திருக்கிறான்! கிடைக்க வேண்டியது கிடைத்தது.

இதை ஏன் இப்போது கூறுகிறாய், என்கிறாயா தம்பி! நான் எந்தக் கதையையாவது காரணமில்லாமல் சொல்வதுண்டா? இதற்கும் காரணம் இருக்கிறது.

சில சூழ்நிலைகளில் ஒருவருக்கொருவர் அளவளாவி மகிழ்ந்திருப்பது இயற்கை. கட்டுக்கடங்காத நேச உணர்ச்சி பொங்கி வழியும் வேளைகள் உண்டு. அந்தச் சந்தர்ப்பங்களில், ஒருவருக்கொருவர் வாக்குக் கொடுத்துக் கொள்வது, பெரும்பாலும் உபசாரத்தின் அடிப்படையிலேதான் அமைந்திருக்கும். அவைகளை ஏதோ மாற்ற முடியாத ஒரு ஒப்பந்தம் என்று எண்ணிக் கொள்வதோ அதன்படிதான் நடந்தாக வேண்டும், மாறவே கூடாது என்று பேச முற்படுவதோ கவைக்கு உதவாது.

ஓடும் இரயிலில், உல்லாச வேளையில் சிறுவன் - சிறுமி விளையாடக்கண்டு மகிழ்ந்து, என் மகனுக்குத்தான் உன் மகள் என்று சொன்னதை. அப்போதே செய்த முடிவு என்று, ஏதோ ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டதாகக் கருதிக் கொண்டானே கதையில் காணப்படும் இளைஞன், அதுபோல நடந்து கொள்பவர்களும் உண்டா என்று கேட்கிறாய்; நான் என்ன சொல்ல, தம்பி! இருக்கிறார்கள் அப்படிப்பட்ட இயல்பினர்.

ஒருவர் நம் வீட்டுக்கு வருகிறார், விருந்தாளியாக; சிறிதளவு கூச்சமுள்ளவர்; அவரிடம் நாம் உபசாரமாகச் சொல்கிறோம். "ஏன் இவ்வளவு கூச்சம்! இது அன்னியர் வீடு என்று நினைக்கலாமா! இதுவும் உங்கள் வீடுதான்; சொந்த வீடுதான்'' என்று. உடனே அந்த ஆள், "அப்படியானால் வீட்டிலே பாதி பாகம் எனக்குத்தானே'' என்று வக்கீல் மூலம் நோட்டீசு கொடுத்தால் எப்படி இருக்கும், அப்போதே செய்த முடிவு - என்று அவன் வழக்குமன்றத்திலே கூறினால் கைகொட்டி யன்றோ சிரிப்பார்கள்.

இதைப் போன்ற வேடிக்கையான நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, உள்ளபடி இருவரோ, பலரோ கூடி ஒரு ஏற்பாடு செய்து கொள்கிறார்கள் - ஒப்பந்தமே செய்து கொள்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அந்த ஏற்பாடு கெடுதலாக இருக்கிறது, அந்த ஒப்பந்தம் ஓரவஞ்சனையாக இருக்கிறது, என்று ஒருவருக்கு உணர்வு உண்டானால், செய்து கொண்ட ஏற்பாட்டை எப்படி மறுப்பது, ஏற்பட்டுவிட்ட ஒப்பந்தத்தை எப்படி மாற்றச் சொல்லுவது என்றா இருந்துவிடுவார்கள்? அன்று இருந்த சூழ்நிலையில் அந்த ஏற்பாடு நியாயம், தேவை என்று கருதினேன்; இப்போது ஏற்பட்டுள்ள அனுபவத்தின்படி பார்த்தால் அந்த ஏற்பாடு நியாயமற்றது, தீமை பயப்பது, தேவையற்றது என்று தெரிகிறது. ஆகவே, ஒப்பந்தத்தை மாற்றிக் கொள்ளலாம் என்றுதான் கூறுவார்கள். விவாக விடுதலையே சட்ட சம்மத வடிவம் பெறுகிறதே! அவ்விதமிருக்க, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின்போது செய்துகொண்ட ஏற்பாடு, பிறகோர் நாள் சரியில்லை என்று தெரிகிறபோது, அதனை மாற்றிக் கொள்ள உரிமை இல்லாமலா போகும்! அவ்விதம் மாற்றவே கூடாது. ஏனென்றால் அது அப்போதே செய்த முடிவு என்று ஒருவர் வாதாடினால், இவர் இரயில் பேச்சை நம்பி, பெண் கேட்க வந்த பித்தனை விடச் சற்று உயர்ந்த ரகம், ஆனால் கிட்டத்தட்ட அதே போக்கிலே நடந்து கொள்பவர் என்றுதானே பொருள்படும்?

காமராஜர், இந்திதான் ஆட்சிமொழி என்பதை இப்போது இவர்கள் எதிர்க்கிறார்களே, நியாயமா? இந்தி ஆட்சிமொழி என்று இப்போதா புதிதாகச் சொல்லுகிறோம். அது அப்போதே செய்த முடிவு என்கிறார். அந்தப் பேச்சைக் கேட்டபிறகுதான் தம்பி! எனக்கு இந்தக் கதை நினைவிற்கு வந்தது!!

அப்போதே செய்த முடிவு என்று காமராஜர் கூறுவது எதனை மனத்திலே கொண்டு என்பது சரியாக விளக்கப்பட வில்லை. காந்தியார் காலத்திலேயே, காங்கிரஸ் கட்சி சுயராஜ்யம் கிடைத்ததும் இந்திதான் ஆட்சி மொழியாக வேண்டும் என்று தீர்மானம் போட்டதைக் குறிப்பிடுகிறார் என்றால், ஒன்று கூற வேண்டி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முடிவு என்பது நாடு முழுவதன் முடிவு என்று கொள்ளவும் முடியாது, கூறுவது நியாயமுமாகாது.

மற்றும் ஒன்றுகூடச் சொல்ல வேண்டி இருக்கிறது. காந்தியார், இந்தியை அல்ல, இந்துஸ்தானியைத்தான், குறிப்பிட்டார்; நாடு இந்து இந்தியா, முஸ்லீம் இந்தியா என்று இரண்டு ஆகிவிடக்கூடாது என்பதற்காகக் குறிப்பிட்டார்.

அந்த நிலைமை இன்று இல்லை; பாகிஸ்தான் தனி நாடு ஆகிவிட்டது.

இந்தியும் இந்துஸ்தானியும் ஒன்று அல்ல.

இதைச் சொல்லுவதால் இந்திக்குப் பதிலாக இந்துஸ் தானியை வைப்பதானால் ஏற்றுக்கொள்ளத் தயாரா என்று குறைமதியினர் கேட்கத்துடிப்பர்; தம்பி! நான் கூறுவது அதற்கு அல்ல; அப்போதே செய்த முடிவு என்கிறாரே காமராஜர், அந்த "அப்போது'' எப்படிப்பட்டது என்பதை விளக்கிக் காட்டினேன்.

காமராஜர் குறிப்பிடும் "அப்போது' என்பது, காந்தியார் காலத்துக் காங்கிரஸ் போட்ட தீர்மானத்தை அல்ல, அரசியல் நிர்ணய சபையிலே நிறைவேற்றப்பட்ட மொழி பற்றிய தீர்மானத்தை என்பார்களானால் அதற்கு நான் கூறக்கூடியவை பல.

முதலாவதாக, அரசியல் நிர்ணய சபை கூடிய சூழ்நிலை, மொழிப் பிரச்சினை பற்றி ஆர அமர யோசித்துப் பார்த்து ஒரு நியாயமான, நிரந்தரமாக இருக்கத்தக்க திட்டம் வகுத்திட அமைந்ததல்ல. விழாக்கோலம்! வெள்ளையராட்சியை விரட்டி விட்டோம் என்ற பெருமித உணர்ச்சி பொங்கி வழிந்து கொண்டிருந்த நேரம்! இயற்கையிலேயே அமைந்துள்ள வேறுபாடுகள், முரண்பாடுகள், இயல்புகள், நினைப்புகள் எனும் எவை பற்றியும் பேசுவதே தவறு என்று ஒரு தேசிய வேகம் இருந்த வேளை. அந்தச் சூழ்நிலையில், பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாக, பல ஆயிரம் ஆண்டுகளாகப் பெற்றிருக்கும் மக்களின் எதிர்கால எண்ணம் எப்படி எப்படி உருவெடுக்கும் என்று எண்ணிப் பார்த்திருக்கவே முடியாது. சச்சரவுகள் அறவே கூடாது, சமரசம் எதிலும் வேண்டும், ஒருவருக்கொருவர் தகராறு விளைவித்துக் கொண்டால், வெள்ளையன் சிரிப்பான், உலகம் கேலி செய்யும், ஆகவே ஒன்றுபட்டு இருக்க வேண்டும், ஒருமித்த கருத்து இருப்பதாகக் காட்டியாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்த நேரம்.