அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அறைகூவுகிறார் அமைச்சர்!!
2

படித்துவிட்டு, பாடம் பெறாமல், பெருமூச்சு விடுவதும், ஆஹா! அந்தக் காலம், எப்படிப்பட்ட அருமையான காலம்! என்று ஏங்குவதும், இது அதுபோலவா? கண்டால் புன்னகை மலருகிறது, கைபட்டால் முகம் சுளித்துக்கொள்வதும் தெரிகிறது. தொட்டால் துவளும் போக்கு அல்லபோலும், கனியவைத்திடக் காலம் அதிகம் தேவைபோலும் என்றெல்லாம் எண்ணமிடுவதும் சிலருக்கு ஏற்படுகிறது எனின் குற்றம் என்னுடையதல்ல, கிடைத்த பாலை குழந்தைக்குத் தந்து மகிழ்ந்திடும் மதியூகியும் உண்டு, பாம்புப் புற்றுக்கு வார்த்துவிட்டு பரமபதத்துப் பேரேட்டிலே பெயர் பதிவாகிவிட்டது என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளியும் உண்டு! குற்றம், பாலில் இல்லை!!

அமைச்சர் இப்போது காங்கிரஸ் வட்டாரத்திலே இடறி விழுந்தால், ஓர் இரவு எனும் ஏட்டிலே நான் காட்டி இருக்கும் ஜெகவீரர் மீது தான் விழ வேண்டும். அத்தகையோரின் கெடுமதியைக் கண்டிக்க ஏடு எழுதுவது, எந்த வகையான குற்றமோ எனக்குத் தெரியவில்லை - காலஞ்சென்ற "கல்கி'யும் வ.ரா.வும் அவ்விதம் கூறவில்லை! அவர்கள் ஏதேனும் குறை காட்டியிருந்தால், நான் திருத்திக் கொண்டிருப்பேன். அமைச்சர் போன்றவர்கள் அந்த ஏடுகள் குறித்து ஏதேதோ பேசும்போது, எனக்கு அவர்கள் அந்த ஏடுகளிலிருந்து பெறவேண்டிய பாடத்தைப் பெறவில்லை என்றுதான் தெரிகிறது. அவர்களை எல்லாம் திருத்தும் ஆற்றலையா நான் பெற்றிருக்கிறேன்! நாட்டு மக்கள்தான் அவர்களைத் திருத்தவேண்டும். சீதையை இராவணன் சிறை பிடித்ததைக் கூறிடும் சம்பவத்தைக் கவி கூறுவது எதற்கு? அதுபோல ஒன்று கிடைக்காதா, இராவணன் போல கெஞ்சிக் கிடக்காமல், வஞ்சியைப் பஞ்சணை விருந்தாக்கிக் கொள்ளலாமே என்ற கெடுமதி பெறுவதற்கா?

ஓர் இரவு, - ரோமாபுரி ராணிகள் - மேலிடத்தில் உள்ளவர்கள் ஒழுக்கத்தைத் துணைகொண்டால்தான், நாடு உருப்படும் என்ற உண்மையை உணர்த்தும் ஏடுகள்!

துரோபதை துகில் உரியப்படும் சம்பவத்தைப் படிக்கக் கேட்டு, பரிதாபப் படவேண்டும், அக்ரமம் இந்த அளவுக்கா போவது என்று கொதித்தெழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறை. துகிலா உரித்தார்கள்... ஆஹா... பலே! பலே!... சொல்லு சொல்லு... எப்படி எப்படி உரித்தார்கள்... என்று ரசித்துக் கேட்டபடி, எதை எதையோ எண்ணிக்கொண்டு, உதட்டை மடக்கிக் கடித்துக்கொள்ளும் உலுத்தர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! அதற்கென்ன செய்யலாம்.

கிடக்கட்டும், நான் வகை கெட்டவன், ஓர் இரவும், ரோமாபுரி ராணியும் குறித்து மட்டுமே எழுதினேன்; இதனை ஏளனம் செய்து எரிச்சல்பட்டுப் பேசுகிறாரே, இவர் தீட்டி, நாட்டவருக்குத் தந்துள்ள கேடு நீக்கிடும் ஏடுகள், யாவை?

இவர் தீட்டிய ஓர் அரசியல் விளக்க ஏடு வெளிவந்த பிறகுதான், உலகப் பெரும் தலைவர்கள் ஒன்று கூடி, உண்மையை உணர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையையே அமைத்ததுபோலவும், இவர் அளித்த விஞ்ஞான விளக்க ஏட்டினைப் படித்த பிறகே ஈன்ஸ்டின் தத்துவத்தையே உலகு பெற்றது போலவும் இவர் கீதைக்குப் புது வியாக்யானம் தீட்டிடக் கண்டு, கண்ணனே ஆச்சாரியார் கனவில் தோன்றி, கண்ணன் காட்டிய வழி என்று நீர் வெளியிட்ட ஏடு சரியில்லை, நமது பக்தன் பண்டித சிகாமணி சுப்பிரமணியம் தீட்டியுள்ள ஏடுதான் சரியானதாகும் என்று எடுத்துரைத்தது போலவும், "உலகப் பேருண்மைகள்' என்று இவர் ஓர் ஏடு தீட்டிட, அதிலே உள்ள கருத்துரையைக்காணவே, நேரு பண்டிதர் ரμயாவுக்கும் கிரீசுக்கும், சவுதி அரேபியாவுக்கும், பிரான்சுக்கும் இப்படித் தேசம் தேசமாகச் சுற்றி அலைந்து தேடிக்கொண்டிருப்பது போலவும், நோபல் பரிசு வருஷா வருஷம் எனக்கே தருகிறீர்களே, மற்றவர்களும் பிழைத்துப் போகட்டும் பாவம் என்று இவராகப் பார்த்து நிறுத்திக் கொண்டது போலவும், பேசுகிறாரே, தம்பி, இவர் தீட்டி நாட்டுக்கு நீட்டிய ஏடு எத்தனை?

இன்றுவரையில், சொத்தையோ சோடையோ இவர் பார்க்க, படிக்க, கண்டிக்க, வெறுக்க, நான், ஏடு தந்ததாகத் தெரிகிறதே தவிர, நான் படித்திட இவர் ஒரு ஏடும் தந்ததாகத் தெரியவில்லையே! இந்த மலடியா என் படைப்புகளை நையாண்டி செய்வது? பரிசீலனை நடத்தும் உரிமையே உண்டா என்பது சந்தேகம்!

வடநாட்டவர் பொருளாதாரத் துறையிலே படுத்தும் பாடுகளை விளக்குவது பணத்தோட்டம் ரோமாபுரி ராணிகள் மட்டும் படித்ததாகக் காட்டிக்கொள்ளும் இந்தக் "கனம்' இதைப் படித்ததுண்டா? நாடு, படித்ததுண்டா? நாடு, படித்தது.

தமிழன் "கலிங்கம்' வென்ற தீர இனத்தவன் என்பதைக் கதை வடிவமாக்கியது கலிங்கராணி - அமைச்சர் கண்சிமிட்டி கருத்தழித்த ரோமாபுரி ராணிகளைக் கண்டு, சொக்கிப்போய் நின்றுவிட்டார். கலிங்கராணியைக் காண முடியவில்லை, பாபம்!

பொது வாழ்க்கைத் துறையிலே உள்ள போலிகளை அம்பலப் படுத்துவது பார்வதி B.A. பார்த்ததில்லை அமைச்சர் - மற்றும் பல. ரோமாபுரி ராணிகள் - ஓர் இரவு - இந்த இரு ஏடுகள்தான் இவருக்குச் சுவை தந்தனபோலும்.

பேசத் தெரியும், இதுபோன்ற ஏடுகள் தீட்டத் தெரியும் என்று கூறிவிட்டதோடு, நிற்கவில்லை அமைச்சர். நான் செய்யவேண்டிய வேலை' என்ன என்பதுபற்றியும் கூறுகிறார்.

தம்பி! தேர்தலில் ஈடுபட, நாம் முனைகிறோமல்லவா - பலருக்கு இது பலத்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

நமது பலம் பெரிது என்பதற்காக அல்ல, அவர்களுடைய பலக்குறைவு அவ்வளவு அதிகம்; அதனால். பதவி ஆசை பிடித்துக்கொண்டது, அதனால்தான் தேர்தலுக்கு வருகிறார்கள் என்று பதவியில் பிசின்போல் ஒட்டிக்கொண்டுள்ள இந்த உத்தமர்கள் பேசினர்.

அச்சம் காரணமாகவோ, அல்லற்பட வேண்டிவருமே, என்ற சங்கடம் காரணமாகவோ, இவர்கள் இவ்விதம் பேசக்கூடும் என்று எண்ணிக்கொண்ட நான், இரண்டோர் திங்களுக்கு முன்பு மதுரையில் பேசினேன், "ஐயா காங்கிரஸ் நண்பர்களே! ஆயாசப்படாதீர்கள்! எமக்குப் பதவியும் வேண்டாம், இடமும் தேவையில்லை; தேர்தலில் போட்டியிடாதபடி எம்மைத் தடுத்திடும் வாய்ப்புக்கூட நான் தருகிறேன்; இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆறு ஆயிரம் கோடி செலவழிக்கப் படும் என்கிறீகள்; முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேதான் தென்னாடு ஏமாற்றப்பட்டது. இப்போதாவது, முன்னாலே வஞ்சகம் செய்யப்பட்டதற்குப் பரிகாரம் தேடும் முறையிலும் இப்போதைக்கு நீதி வழங்கும் தன்மையிலும், தென்னாட்டுக்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக, நேருபண்டிதரை வாக்களிக்கச் சொல்லுங்கள்; அந்த வாக்குறுதி கிடைத்தால், நாட்டுக்கு 2000 கோடியும் அதன் பயனாகப் பல நற்பயனும் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடனும், நாம் முயற்சி எடுத்ததால், இந்தப்பலன் நாட்டுக்குக் கிடைக்கிறது என்ற திருப்தியுடனும், நாங்கள் தேர்தலில் நிற்பதைக் கூட விட்டுவிடுகிறோம், என்றேன்.

இது சில நாட்கள், கவனிப்பாரற்றதாக இருந்துவந்தது.

நாட்டுமக்கள், இதனைக் கவனிக்கும்படியான அரிய தொண்டாற்ற முதலில் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபட்டது; நான் சொன்ன யோசனையை ஆதரிப்பதன் மூலமாக அல்ல; நையாண்டி செய்வதன் மூலமாக. திராவிட நாடு கூட வேண்டாம் போலிருக்கிறது, 2000 கோடி ரூபாய் கொடுத்தால் போதுமாம் - அண்ணாத்துரையின் அரசியலைப் பார்த்தீர்களா - 2000 கோடி கிடைத்துவிட்டால், தேர்தலில் கூட ஈடுபடாமல் விலகிக்கொள்வார்களாம் - இப்படி இருக்கிறது "இதுகளோட' அரசியல் - என்று கம்யூனிஸ்டுகள் கேலிபேசினர்.

இது மக்களிடம் நமக்கு இருந்த "மதிப்பை' உயர்த்தியதை, அவர்கள் அறியவில்லை.

இதுவா அரசியல்? என்று கம்யூனிஸ்டுகள் கேட்டுக் கேசெய்த திலிருந்தே, மக்களுக்கு ஒன்று புரிந்தது: மற்ற மற்ற கட்சிகளைப்போல அல்லாமல், முன்னேற்றக் கழகத்தார், நாட்டுக்கு நன்மை கிடைப்பதானால் நாங்கள் தேர்தலைக்கூட மறந்துவிடுகிறோம் என்றல்லவா தெரிவிக்கிறார்கள். தேர்தலில் ஈடுபட்டுத் தமது கட்சிக்குப் புதிய அந்தஸ்து தேடிக்கொள்வது தான் குறிக்கோள் என்று இல்லாமல், நாட்டுக்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கினால், தேர்தல் வாய்ப்பும் வேண்டாம் என்றல்லவா கூறுகிறார்கள் - கட்சியைவிட, நாடு பெரிது என்று கருதும் இவர்களல்லவா, உண்மை ஊழியர்கள், என்று மகிழ்ந்தனர்.

இப்போது, கம்யூனிஸ்டுகள் செய்த "தொண்டு' மேலும் திருத்தமாக, சுப்பிரமணியனார்மூலம், செய்யப்பட்டிருக்கிறது.

இவர், கம்யூனிஸ்டுகளைவிட பலபடி தாவிச் சென்று "ஆக்ரோஷத்துடன்' பேசியிருக்கிறார் என்பது எல்லா ஏடுகளாலும் தெரிகிறது.

"அண்ணாத்துரை 2000 கோடி ரூபாய் தரப்பட வேண்டும் என்று கூறுகிறார்; சரி; 2000 கோடிக்கு, நல்ல திட்டம் தீட்டட்டும், அதை ஒரு அயல் நாட்டு நிபுணர் ஒப்புக்கொள்வா ரானால் நான் என் மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்து விடுகிறேன் - என்று பேசியிருக்கிறார்.

படித்ததும், தம்பி, எனக்கு முதலில் பரிதாபமாக இருந்தது.

திட்டம் தீட்டினதும், முதலில் களப்பலிபோல, இவருக்குப் பதவி போய்விடுமாமே! அந்தோ, பரிதாபமே, எவ்வளவு சிரமப்பட்டுப் பெற்றார், எத்துணை இராஜதந்திரத்தைக் கொண்டு, ஆபத்தினின்றும் தப்பிப் பிழைத்தார்! கடைசியில் நம்மாலா இவருடைய பதவிக்கு "முடிவு' ஏற்பட வேண்டும், என்றெல்லாம் எண்ணத் தோன்றிற்று.

நான் 2000 கோடி தென்னாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டது, இவருடைய "பதவி'க்கு முடிவு காண அல்ல! அது சாதாரணமாகவே, காலாவதி ஆகிவிடக் கூடியது! இவர், ஏன், பதவியை, இதற்காக இழக்க வேண்டும்! தாராளமாக இருக்கட்டும். அதிலும், எப்போது இவர் திட்டம் தீட்டச் சொல்லி என்னை அறைகூவி அழைக்கிறாரோ, இவரேதானே இருந்து அதை நிறைவேற்றித்தர வேண்டும்! ஏன், ஓடிவிடப் பார்க்கிறார்!

ஆனால் உண்மையில் அப்படி ஓடிவிடக் கூடியவரா? செச்சே! அதற்கு வேறு ஆளைப்பாருங்கள்! ஆச்சாரியார் ஆட்சியின்போது, குலக்கல்வித் திட்டத்தை முழு மூச்சாக ஆதரித்தனர், பிறகு அது காமராஜர் ஆட்சியின்போது, குழி தோண்டிப் புதைக்கப்பட்டது கண்டும், கண்ணீர் வடித்துக் கொண்டு, நான் பெற்ற செல்வம் மடிந்ததே என்று "மந்திரி' வேலையை இராஜிநாமாச் செய்வார் என்று பலரும் கூறினர். அவரா இதற்கெல்லாம் இடம் கொடுப்பவர்! ஒட்டிக் கொண்டார்! அவர் புகுத்திய கல்வித் திட்டத்தை ஓட்டினர் - இவர் மட்டும், ஓட்டினவருடன் ஓட்டிக்கொண்டார்; ஓடிவிடவில்லை. பிசின் அவ்வளவு பலம்!!

தேவிகுளம் பீர்மேடு பெறாவிட்டால்...! என்று முழக்க மிட்டார்; நேரு பண்டிதர், "மையமைய' அரைத்தெடுத்த கரியை முகத்தில் பூசினார்; செ! இதுவும் ஒரு பிழைப்பா? சட்ட சபையிலும் மக்களிடமும் மார்தட்டித் தட்டிப் பேசினோம், நமது வார்த்தைக்கு மதிப்பளிக்கவில்லையே டில்லி தர்பார், இந்த அவமானத்தைத் துடைத்துக்கொள்ளவாவது அமைச்சர் பதவியை இராஜிநாமாச் செய்வோம் என்று "ரோஷம்' காட்டினாரா? அவரா! காட்டியிருந்தால் இன்று கரூரிலும் மதுரையிலும் பிற இடங்களிலும், "பிரமுகர்கள் தரும் வரவேற்புக் கிடைத்திருக்காதே!

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 400 கோடி தரவேண்டுமென்று, டில்லி சென்று "இருந்து முகத்திருத்தி ஈரோடு பேன் வாங்கி'க் கேட்டார். நேரு பண்டிதரோ, ஆடினார் ஆடி சாடினார் ஓடோட! என்ன செய்தார், வேண்டாமய்யா இந்தப் பதவி என்று கூறி இராஜிநாமா செய்தாரா? செய்வாரா? சுவை சாமான்யமா?

எனவே, திட்டம் தந்தால் இராஜிநாமாச் செய்கிறேன் என்று பேசுவது, உண்மையல்ல; விளையாடுகிறார்.!

திட்டம் தீட்ட எனக்குத் தெரியுமா, தெரியாதா, என்பதா, இன்று அரசியல் பிரச்சினை?

இதிலேயும், பார் தம்பி, அடிமைப் புத்தியை.

நம்மைப்போல் நையாண்டி செய்கிறார், அன்னிய மோகம் என்று, இவர் இலட்சணத்தைக் கவனித்தாயா? நான் திட்டம் தீட்டவேண்டுமாம், அதை ஒரு அயல்நாட்டு நிபுணர் ஒப்புக்கொள்ள வேண்டுமாம்!

அயல் நாட்டு நிபுணர்!! ஏன் இந்த அடிமை மனப்பான்மை?

சரி, இனிப் பிரச்சினையைப் பார்த்திடுவோம்.

நான், அயல்நாட்டு நிபுணர் கண்டு மெச்சி ஏற்றுக் கொள்ளத்தக்க திட்டம் ஒன்று என்னிடம் இருக்கிறது, அதை நிறைவேற்ற 2000 கோடி தருக! என்று கேட்கவில்லை.

நான் கேட்டது, நீங்கள் தீட்டியுள்ள இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2000 கோடி ரூபாய் தென்னகத்துக்கு ஒதுக்குங்கள், என்றுதான் கேட்டேன் - கேட்கிறேன் - ஒவ்வொரு வாக்காளரிடமும் கூறி இதைக் கேட்கச் சொல்லப் போகிறேன்.

இப்போது, இந்த அமைச்சர் கொலுவிருக்கும் சென்னை ராஜ்யத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 170 கோடி!

இவர் கேட்டது 400 கோடி! கிடைத்தது 170!

இந்த வெட்கக் கேட்டைப் போக்கிக்கொள்ள இவர் முனையாமலிருக்கலாம்; பதவி காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே வஞ்சிக்கப்பட்ட தென்னகம், இப்போது 2000 கோடி கேட்க உரிமை பெற்றிருக்கிறது.

நான் 2000 கோடி என்று கேட்டபோது, என்னிலும் மிக மிகப் பெரிய தலைவர்கள் சார்பில் கேட்கிறேன். அமைச்சர் ஆச்சரியத்தில் மூர்ச்சையாகாமலிருக்கவேண்டும். நான் அவர் சார்பிலும்தான் கேட்கிறேன்!

தென்னாடு தொழில்துறையில் பின்னடைந்திருக்கிறது என்று இவரே கோவையில் இரண்டோர் திங்களுக்கு முன்பு கதறவில்லையா!

சிந்தாமணி தேஷ்முக், இது உண்மைதான் என்ற ஒப்புக் கொள்ளவில்லையா?

தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதுபற்றி அனுமந்தய்யா ஆயாசப்படவில்லையா? தென்னேட்டி விசுவநாதம் தேம்பவில்லையா? வல்லத்தரசு கண்டிக்கவில்லையா? புன்னூஸ் புலம்பவில்லையா? அன்னா மஸ்கரினிஸ் கேட்கவில்லையா? இங்குள்ள தேசீய ஏடுகளேகூட அவ்வப்போது கண்டிக்க வில்லையா? இவ்வளவு மலையெனக் குவிந்திருக்கும் மனக் குமுறலின்பேரால், கேட்டேன்; என் "மேதாவிலாசத்தை'க் காட்டிக்கொள்ள அல்ல.

திட்டம் தீட்டித் தர நான் மட்டும்தான் என்ற "அகம்பாவம் புகத்தக்க விதமாக நான் பயிற்சி பெற்றவனுமல்ல' பதவி எனக்குத் தலைக்கனம் தரவில்லை.

திட்டம் தீட்ட நாட்டிலே உள்ள எல்லாக் கட்சித் தலைவர்களும் உட்காரலாம் - எனக்கும் இடமளித்தால் இருக்கிறேன் - தொழில்துறை நிபுணர்கள் இருக்கிறார்கள், நிர்வாக அலுவலர்கள் உள்ளனர், விஞ்ஞான வித்தகர்கள் உளர், பேராசிரியர்களின் அணிவகுப்பே இருக்கிறது, பாரெங்கும் உள்ள பல்வேறு முறைகளைப் பாங்குடன் அறிந்த பத்திரிகை ஆசிரியர்கள் பலர் உளர், அனைவரும் அமரலாம், அற்புதமான திட்டம் தீட்டலாம் - எந்த அயல்நாட்டு நிபுணரும் மெச்சத் தக்கவகையில்.

இது முறை - இது நெறி,

"திட்டம் தீட்டு பார்ப்போம்' என்று எனக்கு அறைகூவல் விடுவதா முறை? ஒருவகையில் இதனை எனக்கு அளிக்கப்படும் பெருமை என்றுகூட நான் எடுத்துக்கொள்ளலாம் - ஆனால் அகம்பாவம் என்னைப் பிடித்துக்கொண்டில்லை - எனவே அருமையான திட்டம் தீட்டத்தக்க அறிஞர் பெருமக்கள் அனேகர் உள்ளனர் என்பதை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன்.

அதெல்லாம் முடியாது, உன்னால் முடியுமா என்றே அமைச்சர் பிடிவாதமாகக் கேட்பதானால், அந்த அறிஞர் பெருமக்களின் உதவியை நான் கேட்டுப் பெற்று, திட்டம் தருகிறேன் என்று உறுதி அளிக்கிறேன்.

அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன் - ஆனால் அந்த 2000 கோடி ஒதுக்கும் அதிகாரம் இருக்கிறதே, அது என்னிடம் வீரதீரமாகப் பேசிடும் இந்த வித்தகரிடம் இல்லையே என்ன செய்வது?

ஐந்தாண்டுத் திட்டம் தீட்டவும், தொகை ஒதுக்கவும் அதிகாரம் படைத்தவர் நேரு! இவர், கையேந்தி நின்று, கிடைத்தால் மகிழ்ந்து, இல்லையென்றால் கண்கசக்கிக்கொண்டு வரும் நிலையில் வைக்கப்பட்டிருக்கும், "பொம்மை'தானே!

இவர் எனக்கு அறைகூவல் விடுப்பதும், நான் அதனை ஏற்றுக்கொள்வதும் என்ன பலன் அளிக்கும்?

நேரு பண்டிதர், இவ்விதம் கேட்பாரானால், நான் அழைக்கக்கூடத் தேவையில்லை, தென்னாட்டின் அறிஞர் பெருமக்களேகூடி, அருமையான திட்டம் தீட்டுவர். அவர்களில் பலர் "தனிநாடு' என்று பிரிவது தேவையில்லை, என்று எண்ணுபவர்களாக இருக்கலாம்; ஆனால், வடநாடு மிக மிக அதிகமாகத் தொழில்துறையில் முன்னேறிவிட்டது - தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து வேதனை அடைந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆகவே, என்மீது சுடுசொல் வீசியோ, கேலி பேசியோ, அமைச்சர் தமக்கு ஏற்பட்டுள்ள எரிச்சலைக் காட்டிக்கொள்ள லாமே தவிர, நாட்டு மக்கள் உள்ளத்திலே கொதித்துக் குழம்பிக்கொண்டுள்ள அதிர்ப்தியை அடக்கிவிட முடியாது.

இந்தச் சூழ்நிலையில், ஆவேசமாகப் பேசுகிறார் என்று தம்பி யாரார் பாவம் எப்படி எப்படியோ குவித்த பணத்தை இலட்ச இலட்சமாக, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அபேட்சகர் களாக நின்று, இழந்துவிட்டு ஏங்கப் போகிறார்களோ!

அப்படிப்பட்ட பணப் பெட்டிகளைத் தேடிச் செல்லும் வேளை இது; எனவேதான் அமைச்சர் ஆர்ப்பரிக்கிறார்; அறைகூவல் விடுகிறார்!

மதுரையில் நான் பேசினபோது; இவ்வளவு எளிதில் முளைவிடும் என்று எண்ணவில்லை; இதோ அமைச்சர் ஆர்ப்பரிக்க வேண்டிய நிலைமை வேகமாக வளர்ந்துவிட்டது.

எனவே தம்பி,

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் மோசம் போய் விட்டோம் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலாவது நாம் சரியான, நியாயம் பெறவேண்டும்.

தி. மு. க. 2000 கோடி ரூபாய் தென்னாட்டுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்று கேட்கிறது.

நாட்டு மக்களே! இதற்கு உங்கள் ஆதரவு தாருங்கள், என்று இல்லந்தோறும் எடுத்துச் சொல்ல, நாள் தவறாமல் பணியாற்று; பார், பதைக்கிறார், கதைக்கிறார், "கனம்'. பலன் அளிக்கிறது நமது பிரசாரம் என்பது தெளிவாகிறது, எனவே, புதிய உற்சாகத்துடன் பணிபுரியலாம், தம்பி, அமைச்சரின் ஆவேசப் பேச்சு அதற்கே பயன்பட வேண்டும்.

அன்பன்,

23-9-1956