அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அறப்போர் நினைவுகள்
2

மதுரையில் முத்து குழுவினருக்கு ஓராண்டு தண்டனை தரப்பட்டது கண்டு, இங்கும் அதுபோல இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். நான் சற்று அதிகமாகவே கவலைப் பட்டுக்கொண்டிருந்தேன். ஆகவே ஆறு திங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஒருவிதமான ஆறுதல் அளித்தது.

தண்டனைதான் ஆறு திங்களே தவிர, அவர்கள் வழக்கு நடைபெற்று முடிய எடுத்துக்கொள்ளப்பட்ட 4 மாதங்களும் சிறையிலே இருந்து வந்தனர்; ஆக மொத்தத்தில் பத்துமாதச் சிறை என்றாகிறது. தோழர் கோவிந்தசாமி சிறையில் இருக்கும்போது, அடுத்தடுத்து அவருடைய அண்ணனும், அக்காவும் காலமாகி விட்டனர். அதனால் ஏற்பட்ட வேதனையையும் சுமந்துகொண்டு, அவர் சிறையிலே அடைபட்டுக் கிடந்தார்.

தோழர்களைச் சென்னைச் சிறைக்கு எப்போது அழைத்து வருவார்கள் என்று ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தோம். அவர்களுக்கும், சிறை செல்கிறோமே என்ற கலக்கமோ கவலையோ எழுந்திருக்காது; சென்னைச் சிறையில் என்னையும் மற்ற நண்பர்களையும் காணலாம், உடனிருந்து மகிழலாம் என்ற எண்ணம்தான் ஆர்வமாக எழுந்திருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

தமிழகத்தில், இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு தண்டனை பெறும் கழகத் தோழர்கள் அனைவரையும், ஒரே ஊரில், ஒரே சிறையில் வைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதுபற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

18-5-1964

இரண்டு நாட்களாக கோவிந்தசாமியும் மற்றவர்களும் வருவார்கள், வருவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாற்ற மடைந்தோம். ஒரு சமயம் அவர்களை வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்றுவிட்டிருக்கக்கூடும் என்று எண்ணிக் கொண்டோம். சிறையிலே அவ்விதமான வதந்தியும் பரவி விட்டது. ஆனால் பகல் பனிரண்டு மணி சுமாருக்கு எட்டுத் தோழர்களும், கலியாண வீட்டுக்குள்ளே நுழைவதுபோல, புன்னகையுடன் வந்தனர். வெளி உலகத்திலிருந்து வருகிறார்கள் அல்லவா - சிறை உலகிலே இருந்து வரும் எங்களுக்கு அவர்களைக் காண்பதிலே, சேதிகள் கேட்டறிவதிலே, தனி இன்பம் பிறப்பது இயற்கைதானே. இப்போது இந்தப் பகுதியில் நாங்கள் 20-பேர் இருக்கிறோம் - மதி மருத்துவ மனையிலிருந்து வரவில்லை - அவரோடு சேர்த்தால் 21.

வந்தவர்கள், அறப்போர் நிகழ்ச்சிகள், மக்கள் காட்டிய ஆர்வம், வழக்குமன்ற விவரங்கள் ஆகியவைபற்றிக் கூறினார்கள். நாங்கள் சிறையில் உள்ள நிலைமைகள்பற்றிக் கூறினோம். மீஞ்சூர் கோவன் அணியினரும், பூவிருந்தவல்லி சின்னசாமி குழுவினரும் விடுதலையாகிச் சென்றதைச் சொன்னோம். விவரமெல்லாம் நடராஜன் கூறினார். அவரும் மதியின் இளவல் கிட்டுவும், சிறை வாயிலில் எங்களைக் கண்டு பேசினார்கள் என்று கோவிந்தசாமி கூறினார். அவருடைய வேதனையை உணர்ந்து, சில வார்த்தைகள் ஆறுதல் கூறினேன். தம்மைச் சிறு வயது முதல் பாசத்தோடு வளர்த்து வந்தவர்கள் தனது அக்காதான் என்பதை, கோவிந்தசாமி கூறிக் கண் கலங்கினார்.

இரண்டு நாட்களாக, மனிதகுல வரலாறுபற்றிய (மற்றோர்) புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். இது, கற்காலத்தில் இருந்த நிலையிலிருந்து படிப்படியாக மனிதகுலம் எவ்விதமெல்லாம் மாறுதல் அடைந்தது என்பதுபற்றிய ஆராய்ச்சி ஏடு அல்ல. மிகப் பழைய காலத்திலிருந்து உலகிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கதைவடிவிலே எடுத்துக்காட்டும் ஏடு. மொத்தத்தில் கதைகளிலே, கி. மு. 30000 ஆண்டிலிருந்து கி. பி. 1860ஆம் ஆண்டு வரை, குறிப்பு தரப்பட்டிருக்கிறது.

காட்டுமிருகங்களைக் கூட்டிவைத்து, இரண்டு காலுள்ள ஒரு பிராணியைக் கண்டேன், இனி நமக்கு ஆபத்து உண்டாகும் என்று ஒரு குரங்கு கூறுகிறது, கி. மு. 30000லில். அடுத்த கதை கி. மு. 15000 - கற்காலத்துச் சூழ்நிலை பற்றியது; பிறகு கி. மு. 3500, கி.மு. 1152; கி. மு. 480, கி. மு. 300, கி. மு. 200, கி. மு. 100, கி. மு. 55 என்று தொடர்ந்து, கி. பி. 1492, அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்ச்சி, கி. பி. 1736, நீராவி பற்றிய ஆராய்ச்சியின் துவக்கம், கி. பி. 1860 - விடுதலை உணர்ச்சி எழும்பியது என்ற முறையில், புத்தகம் அமைந்திருக்கிறது. இதிலே, வியப்பு என்னவென்றால், இது பத்து வயதுச் சிறுவர்களுக்கு உலக வரலாற்று நிகழ்ச்சிகளை ஓரளவுக்கு அறிமுகப்படுத்தி வைக்க எழுதப்பட்ட புத்தகம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது முன்னுரையில் - புத்தகம் 1930-க்கு முன்பு அச்சிடப்பட்டது. மற்ற நாட்டு மாணவர்களுக்கு அறிவு புகட்ட எத்தகைய நேர்த்தியான ஏடுகளெல்லாம் அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணரச் செய்கிறது இந்த ஏடு.

19-5-1964

வழக்கமான - பார்வையிடுதல், ஆனால் இந்த முறை, எங்களுக்குப் புது மகிழ்ச்சி - புதியவர்களுடன் நிற்கிறோம் அல்லவா - மொத்தம் இருபதுபேர், இங்கு மட்டும் - உள்ளே வேறு இருக்கிறார்கள். எட்டுப்பேருக்கும் அவசரம் அவசரமாகக் கைதி உடை தரப்பட்டு அணியில் நிறுத்தப்பட்டனர். இங்கு எல்லாக் கைதிகளைக் காட்டிலும், உயரம், உடற்கட்டு, பார்வையில் உறுதி, எல்லாவற்றிலும் மேலான நிலை, கம்பராசபுரம் ராசகோபாலுக்குத்தான். சிறை மேலதிகாரிகள் பார்வையிட்டுக்கொண்டு சென்றபோது, அவர்கள் மனதிலே எழாமலா இருந்திருக்கும், நல்ல நல்ல ஆட்களப்பா, தி. மு. கழகத்தில் என்ற எண்ணம்!

இன்று மேலும் மகிழ்ச்சி எழத்தக்க விதத்தில் திருச்சியில் பல்வேறு முனைகளில் அறப்போரில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் தருமலிங்கம், எம். எஸ். மணி, அழகமுத்து, ஜெகதாம்பாள் வேலாயுதம், வெங்கலம் மணி, அரியலூர் நாராயணன், புதுக்கோட்டை தியாகராசன் உள்ளிட்டு, மொத்தத்தில் 250-க்கு மேற்பட்டவர்கள் "கைது' செய்யப் பட்டிருக்கிறார்கள். இன்றிரவு மதுரை முத்து அவர்களைத் திருச்சி சிறையில் வரவேற்றிருப்பார் என்று கருதுகிறேன். அந்தத் தோழர்களுக்கு மத்தியில் நான் இருப்பதற்கில்லையே என்று ஒரு கணம் கவலைகூடப் பிறந்தது. பிறகோ எங்கு இருந்தால் என்ன - தொலைவு நம்மைப் பிரித்துவைக்க முடியாது - அவர்கள் நெஞ்சிலே நாம், நமது நெஞ்சிலே அவர்கள் என்ற எண்ணம் மலர்ந்தது. எது சிதைக்க முடியும்? பேசி மகிழ்ந்திருங்கள், தோழர்களே! நாங்கள் இங்கே உங்களைப்பற்றித்தான் பேசி மகிழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நானாகக் கூறிக் கொண்டேன்.

இன்னும் நாலு நாட்களில், சுந்தரம், வெங்கா, பொன்னுவேல், பார்த்தசாரதி ஆகிய நால்வரும் விடுதலையாகிறார்கள்.

இன்று காலையிலிருந்து காஞ்சிபுரம் மணி, சுந்தரத்தை பெயரிட்டுக் கூப்பிடுவதில்லை - "என்னய்யா நாலு நாளு!'' என்றுதான் அழைக்கிறார்.

20-5-1964

திருச்சி மாவட்டத்தில் அறப்போரில் ஈடுபட்டவர்களில் பலருக்கு உடனுக்குடன் விசாரணை நடைபெற்று நான்கு, மூன்று, இரண்டு திங்கள் என்ற முறையில் தண்டனைகள் தரப்பட்டுவிட்ட செய்தி பார்த்தோம். வழக்கு தயாரிப்பதாகக் கூறிக்கொண்டு, மாதக்கணக்கிலே தோழர்களைச் சிறையில் அடைத்து வைத்திருக்கும் கொடுமைக்குத் திருச்சி மாவட்டத் தோழர்கள் ஆட்படுத்தப்படாதது மிக்க மகிழ்ச்சி தந்தது. எதிலுமே திருச்சி மாவட்டத் தோழர்கள் நல்ல வாய்ப்புப் பெறுபவர்கள் - தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கியதும் நடைபெற்ற முதல் மாநாடு திருச்சியில்தானே! பொது மக்களின் நல்லாதரவைத் திரட்டி, சென்ற பொதுத் தேர்தலின்போது சிறப்புமிக்க வெற்றிகளையும் ஈட்டிய இடம் திருச்சி மாவட்டம். மற்ற எல்லா மாவட்டங்களிலும் கழகத்துக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் தேர்தல் சமயத்திலே மோதுதல் - திருச்சி மாவட்டத்திலே மட்டும், "தழுவுதல்' இருந்தது. பல நல்ல வாய்ப்புகளைப் பெற்று வருவதுபோலவே, திருச்சி மாவட்டம், அறப்போர் வீரர்களின் எண்ணிக்கையிலும் மற்ற மாவட்டங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

இன்று திருப்பெரும்பூதூர் தொகுதி திருத்தி அமைக்கப்படும் முறைபற்றி அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருந்தேன். இந்தத் தொகுதியிடம் அமைச்சருக்குக் கிடைத்ததைவிட எந்த வட்டத்தில் தனக்குக் கிட்டத்தட்ட 2000 வாக்குகள் அதிகமாகக் கிடைத்ததோ, அந்த வட்டத்தை வெட்டி எடுத்து, அதனை கடம்பத்தூர் தொகுதியிலே இணைத்திருப்பது கழகத்துக்கு ஏற்படக்கூடிய நல்வாய்ப்பைக் குலைப்பதாக அமையும் என்று கவலையுடன் கூறினார். மேலும் பல தொகுதிகளிலேயும், இதுபோன்ற நிலைமை ஏற்படுவதுபற்றி நண்பர்கள் எடுத்துக்காட்டினார்கள். இதற்குப் பரிகாரமே கிடைக்காதா என்று கேட்டனர். நிலைமையைப் பொது மக்களுக்கு எடுத்து விளக்குவதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்? - இதற்காக அமைந்துள்ள குழு முடிவெடுத்தது. நாங்கள் என்ன செய்ய முடியும் என்று, ஆளுங்கட்சி நியாயம் பேசும். எந்தத் தொகுதி எப்படித் திருத்தி அமைக்கப்பட்டாலும், வெற்றி பொதுமக்களின் நல்லாதரவிலே இருக்கிறது. அந்த நல்லாதரவைப் பெறுவதிலே நாம், மும்முரமாக ஈடுபட வேண்டியதுதான் - வேறு பரிகாரம் என்ன இருக்க முடியும்? என்று நான் கூறினேன்.

இன்று பொதுவாக ஜனநாயக முறைகள்பற்றி அன்பழகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஜனநாயகம் எத்தனை குறையுடையதாக இருந்தாலும், மக்கள் தமது கருத்தை அறிவிக்கவும், தம்முடைய நலனுக்கு ஏற்ற ஆட்சியை அமைத்திடும் முயற்சியில் ஈடுபடவும் வாய்ப்பு அளிக்கிறது. இந்த வாய்ப்பு முழுப்பலனைக் கொடுக்க, திருத்தங்கள், முறை மாற்றங்கள் தேவைப்படக்கூடும் - ஆனால் அடிப்படை ஜனநாயக முறையை மக்கள் பெற்றுள்ள மிக பெரிய வாய்ப்பு என்று கருதுவதிலே, மாறுபாடான எண்ணம் எழலாகாது. சிலருக்கு, தோல்வி காரணமாகவோ, தத்துவ விசாரம் காரணமாகவோ ஜனநாயக முறையிலேயே ஐயப்பாடு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. இந்தப் போக்கு விரும்பத்தக்கது அல்ல. சிலர், கட்சிகளற்ற ஆட்சி அமைப்பு வேண்டும் என்கிறார்கள். மற்றும் சிலர், நேரடித் தேர்தல் முறையைவிட, மறைமுகத் தேர்தல் முறை மேலானது என்கிறார்கள். ஆனால் எத்தகைய முறை மாற்றங்களைப்பற்றி அவர்கள் சிந்தனை செய்தாலும், ஜனநாயக முறையைவிட மக்களுக்கு நல்வாய்ப்பு தரத்தக்க வேறுமுறை இருப்பதாக மட்டும் கூறமுடியாது என்று கூறினேன். ஜனநாயக முறையிலே சில மாற்றங்கள் செய்யவேண்டுமென்ற எண்ணம் பல நாடுகளிலேயும் எழும்பிக்கொண்டு வருகிறது என்பதைக் காட்டக்கூடிய ஒரு புத்தகம் இன்று படித்தேன். கற்பனைதான் - அதிலே ஒரு கருத்தோட்டமும் இருக்கிறது. 1980லில் பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைப்பு எவ்விதம் இருக்கும், பிரிட்டனில் முடியாட்சி முறை இருக்குமா, ஜனநாயக முறையிலே என்னென்ன புதுமைகள் புகுத்தப்படும் என்பதுபற்றியெல்லாம் நெவில்ஷாட் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிற கதை வடிவம், பிரிட்டனில் முடியாட்சி இருக்கிறதே தவிர, முடிதரித்தோருக்கு உரிமைகளும் சலுகைகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டுவிடுகின்றன. 1980லில், பிரிட்டனில் ராணிதான் ஆட்சி செய்கிறார். ஆனால் அவருக்குத் தமக்குப் பிறகு தம் மக்கள் மன்னர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்பம்கூட எழவில்லை. முடி தரித்துக்கொண்டு, ஆட்சியின்பிடி அவ்வளவையும் மக்கள் மன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு இருப்பதில், பசையும் இல்லை, ருசியும் இல்லை என்று தோன்றுகிறது. முடி மன்னர்களின் செலவு பற்றி கணக்குப் பார்ப்பதும், கேள்வி எழுப்புவதும் சரியல்ல, முறையல்ல என்ற மரபுகூட 1980லில் எடுபட்டுவிடுகிறது. எந்தச் செலவானாலும் மக்கள் மன்றத்தின் ஒப்பம் பெற்றாக வேண்டும் என்றாகிவிடுகிறது. பிரிட்டனில் நிலைமை இவ்விதமாகிவிடும்போது, காமன்வெல்த்தில் இணைந்துள்ள கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும், ராஜபக்தி ஓங்கி வளருகிறது. மகாராணியின் செலவுக்காகத் தாராளமாகப் பணம் வழங்க அந்த நாடுகள் முன்வருகின்றன. ராணியே, இரண்டொரு மாதங்கள் மட்டுமே பிரிட்டனில் தங்கி இருப்பது, பெரும் பகுதி நாட்களைக் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் கழிப்பது என்று திட்டமிடுகிறார்கள்.

ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் பிரிட்டிஷ் ராணியிடம் "பக்தி விசுவாசம்' காட்டுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ள பகுதியைவிட, சுவையுள்ள சிந்தனையைக் கிளறிவிடும் பகுதி, ஓட்டுகள் பற்றியது. ஆஸ்திரேலியாவில், "ஒருவருக்கு ஒரு ஓட்டு' என்ற ஜனநாயக முறை மாற்றப்பட்டு ஒருவர் ஏழு ஓட்டுகள்வரை பெறத்தக்க வாய்ப்பு அளிக்கப்படும் முறை புகுத்தப்படுகிறது - கதையில். செல்வவான்களும், படித்தவர்களும் மட்டுமே ஓட்டு உரிமை பெற்றிருக்கும் முறை மக்களாட்சிக்கு வழிகோலாது - மேல்தட்டிலுள்ளவர்களின் ஆதிக்கத்துக்குத்தான் வழி அமைக்கும். ஆகவேதான், நீண்ட கிளர்ச்சிக்குப் பிறகு, வயது வந்தவர்கள் அனைவருக்கும், படித்திருந்தாலும் இல்லா விட்டாலும். சொத்து இருந்தாலும் இல்லை என்றாலும் ஓட்டு உரிமை உண்டு என்ற திட்டம் கிடைத்தது. ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற திட்டம், ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகி விட்டது.

இந்த முறை மாற்றப்பட்டு, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுகள் கிடைக்கத்தக்க ஒரு முறை, ஆஸ்திரேலியாவிலே புகுத்தப்படுகிறது என்று 1980லில், நிலைமை எப்படி இருக்கக் கூடும் என்ற கற்பனையைக் கதை வடிவிலே தருபவர் தெரிவிக்கிறார்.

ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையின்படி, வயது வந்த அனைவருக்கும், படிப்பு, உடைமை உண்டா இல்லையா என்று பார்க்காமல், விஷயங்களைப் புரிந்துகொள்ளத்தக்க வயது வந்திருக்கிறதா என்பதைக் கவனித்து, ஓட்டு தரப்படும் முறை அகற்றப்படவில்லை. அனைவருக்கும் அந்த ஒரு ஓட்டு இருக்கிறது - அடிப்படை ஓட்டு. ஆனால் அத்துடன் வேறு ஆறு விதமான காரணங்களால், ஓட்டுகள் வழங்கப்படுகின்றன. அனைவருக்கும் ஓட்டு வழங்கப்பட்ட பிறகு, கல்வியாளர்களுக்கு அவர்கள் கல்வி காரணமாகப் பெறும் புதிய தகுதி, பொறுப்பு இவற்றைக் குறிப்பில் வைத்து, இரண்டாவது ஓட்டுத் தரப்படுகிறது. எவரெவர் தமது நாட்டு நன்மைக்காக வெளி நாடுகள் சென்று பணியாற்றி இருக்கிறார்களோ - குறிப்பாக போர்முனைப் பணியாற்றியவர்கள் - அப்படிப்பட்டவர்களுக்கு அதற்காக ஒரு ஓட்டு கிடைக்கிறது - மொத்தத்தில் மூன்று ஓட்டுகள் அவர்களுக்கு. விவாக விடுதலை செய்துகொள்ளாமல், குடும்பம் நடத்தி, இரண்டு மக்களைப் பெற்று, அவர்களைப் பதினான்கு வருஷங்கள் வரையில் ஆளாக்கிவிடுபவருக்கு, குடும்பக் கடமையைச் செவ்வனே செய்து முடித்தவர் என்பதற்காக, ஒரு ஓட்டு கிடைக்கிறது - குடும்ப ஓட்டு. எவரெவர், தொழில் நடத்தி, பொருள் ஈட்டி, நாட்டின் மொத்தச் செல்வத்தை வளர்க்கிறார்களோ அவர்களுக்கு, அந்தத் துறையில் ஈட்டிய வெற்றிக்காக ஒரு ஓட்டு தரப்படுகிறது. மார்க்கத் துறையில் தூய பணியாற்றுபவருக்கு அந்தத் தனித்தகுதி காரணமாக ஒரு ஓட்டு தரப்படுகிறது. சிறப்பு இயல்பினர் என்று ராணியார் கருதி, சிலருக்கு ஒரு ஓட்டு அளிக்கிறார்கள். இப்படி ஒரு சிலருக்கு ஒரு ஓட்டு என்பது மாறி, ஒருவருக்குப் பல ஓட்டுகள், ஒவ்வொரு தனித் தன்மைகளுக்காக - மொத்தத்தில் ஏழு ஓட்டுகள் என்ற புதுமுறை புகுத்தப்பட்டிருக்கிறது - ஆஸ்திரேலியாவில் - கதையில்.

கதைதானே என்று கூறிவிடுவதற்கில்லை - ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பது பொதுநீதி என்றபோதிலும், ஜனநாயகம் செம்மையடையவேண்டுமானால் மக்களிடை ஏற்படும் அல்லது மக்களில் சிலரோ பலரோ பெறும், தனித்தன்மைகள், திறமைகள், தகுதிகள் ஆகியவற்றைப் புறக்கணித்துவிடக்கூடாது - அவர்கள் எல்லோரிலும் இருக்கிறார்கள். ஆனால் சில தனிச்சிறப்புகளையும் பெற்றிருக்கிறார்கள். ஆகவே எல்லோருக்கும் இருப்பதுபோல அவர்களுக்கும் ஒரே ஒரு ஓட்டு என்பது முறையாகாது என்ற கருத்து, இந்தக் கதை வாயிலாக வலியுறுத்தப்படுகிறது. இந்த ஏற்பாட்டின்படி, ஒருவருக்குப் பல ஓட்டுகள் கிடைப்பதால், தேர்தலின்போது அவருடைய முக்கியத்துவம் அதிகமாகிறது. சில தகுதிகளைப் பெற்றால், ஒரு ஓட்டுடன் மற்றும் ஒன்றோ இரண்டோ கிடைக்கும் என்ற நிலை இருப்பது காரணமாக, மக்கள், அந்த அதிக ஓட்டுகளைப் பெறுவதற்காக தனித் திறமை களைப் பெற முனைவார்கள் - அதன் காரணமாக, சமூகத்தின் மொத்தத் தரம் உயரும் என்ற கருத்து எடுத்துக்காட்டப்படுகிறது.

ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதுதான் ஜனநாயகத்திலே அடிப்படையாக இருக்கிறது என்றாலும், இப்போதுகூட, ஒருவர் பி. ஏ., பட்டதாரியாக இருந்தால் அவருக்கு எல்லோருக்கும் கிடைக்கும் அடிப்படை ஓட்டு மட்டுமல்லாமல், பட்டதாரி என்பதற்காக ஒரு ஓட்டு கிடைக்கிறது. அவர் இரண்டு ஓட்டுகளுக்கு உரிமையாளர். அவரே, மாநகராட்சி மன்றம், நகராட்சி மன்றம் ஆகியவற்றில் உறுப்பினரானால், அந்த மன்றங்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு ஓட்டு அளிக்கும் உரிமையும் கிடைக்கிறது - ஆக அவருக்கு மொத்தத்தில் மூன்று ஓட்டுகள். ஒருவர் பி. ஏ., படித்திருந்து, ஆசிரியராகப் பணியாற்றினால் பொது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அதிலே கலந்துகொள்கிறார் - அதற்கு ஓட்டு இருக்கிறது; பிறகு பட்டதாரிகள் தொகுதித் தேர்தலின்போது கலந்து கொள்கிறார்கள், அதிலே ஓட்டு இருக்கிறது; மூன்றாவதாக ஆசிரியர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றால் அதற்கும் ஓட்டளிக்கிறார் - ஆக அவருக்கு 3 ஓட்டுகள். ஆனால் பொதுவாக, ஜனநாயக அடிப்படை என்று நாம் கூறுவது ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதைதான். அந்த அடிப்படை நடைமுறையில் இருக்கும் நாடுகளிலே இதுபோல் மூன்று ஓட்டுகள் பெறுகிற உரிமை சிலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது - சில தனித் தன்மைகள் சிறப்புகள் காரணமாக.

அண்ணன்

7-3-1965