அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அரசியல் - மற்றும் பல சிந்தனைகள்
1

தம்பி!

இந்தியை எப்படியும் அரியணை ஏற்ற இருக்கிறார்கள். விழிப்புடன் இருந்து தடுத்தாலொழிய, அந்த விபத்து ஏற்பட்டே தீரும் என்று நாம் எடுத்துக்கூறும்போது ஏதோ கட்சி மாச்சரியத்தால் பேசுகிறோம் என்று எண்ணிக்கொள்ளும் மக்கள் கூட, மொரார்ஜியின் பேச்சைக் கேட்ட பிறகு, உண்மை நிலையைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். அந்த வகையில் மொரார்ஜியின் பேச்சு வரவேற்கத் தக்கதுதான் என்று நண்பர்களிடம் கூறினேன்.

2-4-1964

இன்று தமிழ் நாட்டில் சட்டமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைப்பதற்காக, துரைத்தனம் மேற்கொண்டுள்ள திட்டத்தை விளக்க, மாவட்டப் படங்கள், புள்ளி விவரங்கள் தரும் ஏடுகள் ஒரு பெரிய கட்டு, மதியழகனுக்குத் தரப்பட்டது. இந்திய துரைத்தனத்தார், சென்னை மாநில அரசு மூலம் இதனை அனுப்பியிருந்தனர் - மதியழகன் இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் உறுப்பினர். இன்று பெரும்பகுதிப் பேச்சு, இந்தப் பிரச்சினையை ஒட்டியதாகவே இருந்தது. மே திங்கள் 11-ம் நாளிலிருந்து இதற்கான குழு உதகையில் கூடுகிறது. இதற்கான அழைப்பிதழும் மதிக்கு அனுப்பப்பட்டது. தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட இருக்கிறது - 242ஆக. எனவே, பல புதிய தொகுதிகள் அமைய இருக்கின்றன. மதியும் ராமசாமியும், எந்தெந்த வகையில் புதிய தொகுதிகள் அமையலாம் என்பதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். மலைவாசிகளுக்காக இப்போது ஏற்காடு தொகுதி இருக்கிறது - மற்றோர் தொகுதி மலைவாசிகளுக்கு அமையலாம் - அது கொல்லி மலையை ஒட்டியதாக அல்லது ஜவ்வாது மலையை ஒட்டியதாக இருக்கலாம் என்று புள்ளி விவரக் கணக்கைக் கொண்டு மதி கூறினார். ஆங்காங்கு உள்ள நமது கழகத் தோழர்களின் கருத்தையும் அறிந்து, இறுதியாக முடிவு மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் சட்ட எரிப்பு சம்பந்தமான சட்டம் செல்லுபடியாகாது என்பதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், நீதிபதிகள் வீராசாமி, குன்னி அகமத் குட்டி ஆகியோர் அளித்த தீர்ப்பு பத்திரிகையில் பார்த்தோம். தீர்ப்பின் வாசகத்தைப் பார்க்கும்போது, மேற்கொண்டு சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று வழக்காடலாம் என்ற எண்ணம் எழுகிறது. ஆனால் ஏற்கனவே மதுரை முத்துவும் அவர் குழுவினரும் மூன்று திங்களுக்கு மேலாகச் சிறைப்பட்டிருக்கிறார்கள் - இனியும் அந்த நிலையை நீடிக்கவைக்கக்கூடாது என்று இங்கு அனைவரும் கருதினோம்.

அருப்புக்கோட்டையில் நடைபெற இருக்கும் தேர்தல்பற்றி, சுவை தரத்தக்க செய்தி எதுவும் இதழ்களில் காணவில்லை. திருச்செங்கோடு, திருவண்ணாமலை, போடி, நாங்குனேரி ஆகிய இடங்களிலே தேர்தல்கள் நடந்தபோது காணப்பட்ட பரபரப்பான சூழ்நிலை, என்ன காரணத்தாலோ இப்போது தென்படவில்லை. காமராஜரின் சுற்றுப்பயண நிகழ்ச்சி மட்டுமே குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சார்பாக நிற்பவர், மறவர் குலத்துப் பிரமுகர் - ராமநாதபுரம் ராஜாவின் இளவல், பார்வார்டுபிளாக், அவருக்கு எதிராக வேலாயுதன் நாயர் என்பவரை நிறுத்திவைத்திருக்கிறது. துணிகரமான முயற்சி என்று நான் கூறினேன், வெற்றிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று மதி, காரணம் காட்டிப் பேசிக்கொண்டிருந்தார்.

சினிமா, நாடகத் துறைகளைக் கேலி பேசிக்கொண்டிருந்த காமராஜர், இப்போது அந்தத் துறைகளைத் தன் நட்புக்கரத்தில் கொண்டுவர எடுத்துக்கொள்ளும் முயற்சிபற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். கழகத் தோழர்கள் நல்ல நாடகங்கள் நடத்துவதை அடியோடு நிறுத்திவிட்டது. நமது பிரசார முனையிலே நட்டத்தை உண்டாக்கிவிட்டது என்று நான் விளக்கியபோது, நண்பர் ராமசாமி, "எனக்குக்கூட நாடகத்திலே நடிக்க ஆவலாக இருக்கிறது; ஒரு நல்ல நாடகம் எழுதிக் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். நேரமும் நினைப்பும் துணைபுரியும்போது எழுதிக்கொடுக்கிறேன் என்று தெரிவித்தேன். சுயமரியாதை இயக்க கால முதற்கொண்டு, நமது இயக்கப் பிரசாரத்துக்கும் நாடகத் துறைக்கும் இருந்துவந்த தொடர்பு பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.

சுயமரியாதை இயக்கத்தில் நான் ஈடுபட்டபோது, மாநாடுகளிலே, "விமலா அல்லது விதவையின் கண்ணீர்' என்ற நாடகம் நடத்தப்பட்டுவந்தது. திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களைத் தலைவராகக்கொண்ட ஒரு நாடகக்குழு, இதுபோன்ற நாடகங்களை நடத்திக்கொண்டு வந்தது. பிறகு, புரட்சி கவிஞர் பாரதிதாசன் அளித்த "இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற நாடகம் நடத்தப் பட்டது. ஒரு முறை அதிலே இப்போதைய திருவாசக மணி, கே. எம். பாலசுப்பிரமணியமும், குத்தூசி குருசாமியும் நடித்ததுண்டு. இந்த நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பது கண்டு, நாடகக் குழுக்களே இதனை நடத்தலாயின. பி. ஜி. குப்புசாமிநாயுடு போன்ற நடிகர்கள் இதிலே ஈடுபட்டனர். நமது இயக்கத் தோழர்கள் இங்கும் அங்குமாக, சீர்திருத்த நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்தனர். நடிகவேள் எம். ஆர். ராதாவின் நாடகம் - சி. பி. சிற்றரசு எழுதியது - முதன்முறையாக, திருச்சி திராவிடர் கழக மாநாட்டிலேதான் நடத்தப்பட்டது; மிகக் குறைந்த செலவில். அதற்கான பணத்தை வாங்கிக்கொடுக்கவே பெரியாரிடம் மெத்தப் போராடவேண்டி இருந்தது. நண்பர் ஏ. கே. வேலன் ஒரு சில நாடகங்கள் நடத்தினார். சி. பி. சிற்றரசு சில நாடகங்களை நடத்திக் காட்டினார்; நாகைத் தோழர் கோபால் ஒரு நாடகக்குழுவே அமைத்து, சில ஆண்டுகள் நடத்திவந்தார்; அதிலே கருணாநிதி வேடம் தாங்கினார். கருணாநிதியின் சாந்தா என்ற நாடகம் நல்ல செல்வாக்குடன் இருந்தது. பாவலர் பாலசுந்தரம் ஒரு நாடகக்குழு அமைத்து நடத்தினார். இவ்விதமாக இயக்கப் பிரசாரத்தில் நாடகம் இணைந்து வளர்ந்தது.

டி. கே. எஸ். நாடகக் குழுவிலிருந்து டி. வி. நாராயண சாமியும், எஸ். எஸ். இராஜேந்திரனும் விலகி, சீர்திருத்த நாடகங்களை நடத்தத் தொடங்கினர். நான் எழுதிய சந்திரோதயம் என்ற நாடகம் முதல் முதல்லி வடாற்காடு மாவட்ட, திருவத்திபுரத்தில் நடைபெற்றது. இரண்டொரு நாடகங்களுக்குப் பிறகு, அதிலே, நடிகர் குழுவைச் சேர்ந்தவர்களும் ஈடுபடலாயினர்.

முன்னேற்றக் கழக துவக்க நாட்களில், கழக கட்டட நிதி, அச்சக நிதி, வழக்கு நிதி போன்றவைகளுக்காக கே. ஆர். ராமசாமி எம். எல். சி. - யின் ஆர்வமிக்க நாடகங்களின் மூலம் பெருநிதி திரட்டப்பட்டது. சந்திரமோகன் - நீதி தேவன் மயக்கம் - ஆகிய நாடகங்களைத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொகுதி ஐந்து 309 நடத்திவந்தோம். சந்திரமோகன் நாடகத்தில் நடித்த போதுதான், கணேசன், "சிவாஜி' என்ற பட்டம் பெற்றது - பெரியார் சூட்டியது.

கருணாநிதியின், தூக்குமேடை - வாழப்பிறந்தவர்கள் - நச்சுக்கோப்பை - போன்ற நாடகங்கள் நாடெங்கும் நல்ல பிரசாரப் பலன் கொடுத்தன. கணேசன் அநேக நாடகங்களில் பங்கேற்றார். ஓரிருமுறை எம். ஜி. சக்ரபாணியும் அந்த நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார்.

நாடகக் குழுக்களுக்கென்றே எழுதிக்கொடுத்த நாடகங்கள் வேறு. நான் இப்போது குறிப்பிட்டிருப்பது, கழகத் தோழர்கள் அதிகமாக ஈடுபட்டு நடித்த நாடகங்களைப்பற்றி.

இவ்விதம் வளர்ந்த நாடகமுனை, கழக நிர்வாக அலுவல் வளரவளர, முடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கருணாநிதி எழுதி, பல இடங்களில் நாடகக் குழுவினால் நடத்தப்பட்டு வந்த உதயசூரியன் என்ற நாடகம் சர்க்காரால் தடை விதிக்கப்பட்டுவிட்டது.

பெரிய நகரங்களில்லாவிட்டாலும், சிறிய அளவுள்ள நகரங்களிலும் பெரிய கிராமங்களிலும் பிரச்சார நாடகங்கள் நடத்த, மறுபடியும் கழகம் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்விதம், நண்பர்களிடம் விவரமாகப் பேசினேன் - எல்லோருக்கும் நிரம்ப ஆர்வம் இருக்கிறது, நாடகங்களை நடத்த - நடிக்க - எழுத.

3-4-1964

இன்று காலையில் வழக்கறிஞர் நாராயணசாமி என்னைக் காண வந்திருந்தார். நான் எதிர்பார்த்தபடியே சட்ட சம்பந்தமான பிரச்சினையுள்ள வழக்கை. சுப்ரீம் கோர்ட்டுக்குக் கொண்டு செல்வது பலனளிக்கும் என்று கூறினார். இப்போதைக்கு வேண்டாம் - பிறகு ஒரு வாய்ப்பு ஏற்படும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி அனுப்பினேன்.

மாலையில் ராணியுடன், அ. க. தங்கவேலரும், என். வி. நடராஜனும் வந்திருந்தனர். நகராட்சிமன்றத் தலைவரான பிறகு, முதன்முறையாக அ. க. தங்கவேலரைப் பார்க்கும் வாய்ப்பு. மகிழ்ச்சியாகவே காணப்பட்டார். எம். எல். சி. ஆகிவிட்ட, என். வி. நடராஜனிடம் ஒன்றும் மெருகு - முடுக்கு - காணோம்.

காஞ்சிபுரத்தில் அம்மா, அக்கா, கௌதமன், பாபு, என் மருமகப்பெண்கள் எல்லோரும் நலமாக இருக்கும் செய்தி, ராணி மூலம் கேட்டு மகிழ்ந்தேன். பரிமளத்துக்குப் பரீட்சை சமயம், அதனால்தான் வரவில்லை என்றார்கள். படிப்பதற்குப் புத்தகங்கள் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன் - கொண்டு வரவில்லை.

கை வலிக்கு அன்பழகன், கடுகு எண்ணெய் தடவினால் நல்லது என்று சொல்லி, வீட்டிலிருந்து வரவழைத்திருந்தார். அந்த எண்ணெயை இன்றிரவு தடவிக்கொண்டேன் - இரண்டொரு வாரங்கள் தொடர்ந்து - தடவினால்தான் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

இன்று பிற்பகல் அன்பழகனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, முதல் இந்தி எதிர்ப்பு போர்க் காலத்தில், மிக்க ஆர்வத்தோடு பங்குகொண்ட மறை, திருநாவுக்கரசு இப்போது முற்றிலும் மாறிவிட்டிருப்பதாகச் சொன்னார். மறைமலை அடிகளாரின் திருமகன் திருநாவுக்கரசு, இன்றைக்கும், மறைமலை அடிகள் எழுதிய, "இந்தி பொது மொழியா?' என்ற ஏடு, எவரும் மறுக்கொணாததாக இருக்கிறது. ஆனால் மகன், மாறிவிட்டிருக் கிறாராம். எனக்கு மிக நெருக்கமான நண்பர். இப்போது "மறை' தூத்துக்குடிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்று கிறார் என்று அறிகிறேன். கருத்திலே காரணத்துடனோ - காரணமற்றோ - மாறுதல் ஏற்பட்டுவிட்டிருப்பினும், என்னிடம் கொண்ட கனிவு மாறி இருக்காது என்று அன்பழகனிடம் கூறினேன்.

பொதுவாக, இந்தி ஆதிக்கத்தின் முழுக்கேட்டினை, மக்கள் நேரிடையாக இன்னும் சந்திக்கவில்லை - அதனால்தான், சிலர் இதனைக் கவனிக்கவேண்டிய அவசியமில்லாத பிரச்சினை என்று கருதுகிறார்கள். வேகமும் பளுவும் நாளாகவாக வளரும் - அப்போது, இப்போது "ஏனோதானோ'வென்று உள்ளவர்கள் கூட, இந்தி ஆதிக்கத்தின் கேட்டினை உணர்ந்து துடித்து எழுவார்கள் என்று கூறினேன்.

இன்றும், கம்யூனிஸ்டு கட்சியிலே பிளவு வெகுவாக விரிவாகிவிட்டதற்கான செய்திகள் பத்திரிகைகளில் வெளி வந்திருந்தன - அவைபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

இரவு, தூக்கம் வருகிறவரையில், பொன்னுவேலிடம், காஷ்மீர் பிரச்சினைபற்றி பேசிக்கொண்டிருந்தேன் - (இப்போது என்னுடன் பொன்னுவேல் - வெங்கா - இருவரும் துணை இருக்கிறார்கள்) ஷேக் அப்துல்லாவைப் பத்து ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்திருந்ததால் ஏற்பட்ட கெட்ட பெயரும், தொடுத்த வாழ்க்கை நடத்த முடியாமல் திரும்பப் பெற்றுக் கொண்டதால் ஏற்பட்ட ஏளன நிலையும், உள்ளபடி தாங்களாகத் தேடிக்கொண்டவைகள். பிரச்சினை மிகவும் சிக்கலானதாகி விட்டது என்பதுபற்றி விவரித்துக்கொண்டிருந்தேன்.

இரண்டு நாட்களாக, தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை, சிறைப் படிப்பகத்தார் தொகுத்து வைத்திருக்கிறார்கள் - அவைகளைப் படித்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலான கதைகள், கவிதைகள், கருத்து விளக்கம் அதிகம் இல்லை. ஆனால் செல்வவான் வீட்டு மாநிற மங்கை மினுக்குத் தைலத்தால் பளபளப்பதுபோல, அழகிய ஓவியங்களால், கதைகள் அழகு படுத்தப்பட்டிருக்கின்றன. சில கதாசிரியர்கள் வேண்டுமென்றே, "கழகத்'தை - திருவிழாக்களிலே காளையர்கள் கன்னியர்கள்மீது உரசிவிட்டு மகிழ்வதுபோல - இரண்டொரு இடங்களில், தாக்கியும் இருக்கிறார்கள். வைதீக கருத்துக்களையும் வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள். இத்தகைய கதைகளையும் கட்டுரைகளையும் படித்ததில், சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் எண்ண ஓட்டம், எந்தவிதத்திலே இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

4-4-1964

இன்று மறுபடியும் ஊசி போடப்பட்டது. ஆனால் இந்த ஊசிகள் பொதுவாக வலிவு ஊட்டுபவை - எனக்குள்ள கை வலியை நீக்குவதற்கானவை அல்ல.

பத்திரிகையில், ஆச்சாரியார் ஒரு பாராட்டுக் கூட்டத்தில் பேசுகையில், அடுத்து தி. மு. க. அரசு அமைய வேண்டும்; அப்போதுதான், இந்தி திணிப்பினால், எத்தகைய குமுறல் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தில்லி அரசு உணர முடியும் என்று காரணம் காட்டி இருக்கிறார். பொருத்தமான பேச்சு. இந்தியை எதிர்த்து எத்தனை கிளர்ச்சிகள் நடத்தினாலும், எத்தனைபேர் சிறை புகுந்தாலும், மூடி மறைத்துவிட முடியும் - முடிகிறது - செய்து வருகிறார்கள். ஆனால் இந்தித் திணிப்பைக் கண்டித்து, காங்கிரசைத் தேர்தல்லி முறியடித்தார்கள் என்றால், அந்த நிகழ்ச்சியை மூடி மறைக்க முடியாது. ஆகவே, கழகம் இந்தியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, சிறை புகுவது மட்டுமில்லாமல், தேர்தல் முனையிலும் வெற்றி ஈட்டியாக வேண்டும் என்பது குறித்து, நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தல்லி கழகம் பெற்ற வெற்றி, தில்லி வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கிவிட்டிருக்கிறது என்று ஆச்சாரியார் சொன்னதும், முற்றிலும் உண்மையானது. இங்குள்ள காங்கிரஸ் வட்டாரமும், அதற்கு ஆதரவு அளிக்கும் இதழ்களும், கழக வெற்றியை எவ்வளவு மூடி மறைக்கவும், குறைத்து மதிப்பிடவும் முனைந்தாலும், தில்லியிலும், வேறு இடங்களிலும், கழக வெற்றியை மிக முக்கியமான நிகழ்ச்சியாகத்தான கருதுவார்கள். அதிலும், தடைச்சட்டம் காரணமாகக் கழகம் அடியோடு ஒழிந்துபோய்விடும் என்று அவர்கள் கணக்குப்போட்டுக் களிப்பில் மூழ்கியிருந்த சமயத்தில், கழகம் இத்தனை வெற்றி பெற்றிருப்பது, மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தி. மு. கழகம், காங்கிரஸ் அரசிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் நிலைக்கு வளர்ந்துகொண்டு வருகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது என்பதுபற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். கழகம் இவ்விதமான வளர்ச்சி பெற்றுக்கொண்டு வருகிறபோது, காங்கிரசை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதாகக் கூறிக்கொள்ளும் பிற கட்சிகளில் எத்தகைய சீர்குலைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதுபற்றிய பேச்சு எழுந்தது.

திருவரங்கத்தில் கூடிய அசோக்மேத்தா குழுவினர் பிரஜா -சோஷியலிஸ்டுகள் காங்கிரசில் சேர்ந்துவிடவேண்டும் என்று முடிவெடுத்த அதேபோது, திருச்சியில் கூடிய சுரேந்திரன் குழுவினர், பிரஜா - சோஷியலிஸ்டுகள் காங்கிரசில் சேரக் கூடாது என்று முடிவெடுத்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் ம. பொ. சிவஞானம் கலந்துகொண்டு காங்கிரஸ் போக்கைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்.

அசோக்மேத்தாவின் போக்குக்குக் காரணம் என்ன என்று நண்பர்கள் கேட்டார்கள். அசோக்மேத்தாவே சொல்லியிருக்கும் காரணம் ஒருபுறம் இருந்தாலும், அவருடைய போக்கு மாறியதற்கான அடிப்படைக் காரணம், காங்கிரசை எதிர்த்து நிற்க எந்தக் கட்சியாலும் முடியாது என்ற தோல்லி மனப்பான்மைதான் - பிரஜா - சோஷியலிஸ்டுகள் கட்சியின் வளர்ச்சியின் வேகம் அவருக்கு நம்பிக்கை தரவில்லை. எனவே அவர், காங்கிரசிடம் இணைந்துபோய்விடுவது நல்லது என்ற முடிவெடுத்துவிட்டார்; இது ஜனநாயக வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறினேன். தமிழகத்தில், இதுபோன்ற தோல்வி மனப்பான்மை காரணமாகப் பல கட்சிகளும், தனிப்பட்டவர்களும், காங்கிரசிடம் அடைக்கலம் புகுந்துவிட்டது பற்றியும் எடுத்துச் சொன்னேன். இந்தத் தோல்வி மனப்பான்மையை எதிர்த்து, நின்று, மக்களிடம் முறையாக நெறியாகப் பணியாற்றினால், காங்கிரசைத் தேர்தல்லி வீழ்த்த முடியும் என்பதை மெய்ப்பித்த பெருமை கழகத்துக்கு உண்டு என்பதைச் சொன்னபோது, நண்பர்கள் மெத்த மகிழ்ச்சி அடைந்தார்கள். அடுத்த பொதுத் தேர்தல்பற்றி மிக்க ஆர்வத்தோடு பேசலாயினர்.

காமராஜர், தேர்தல் தந்திரங்களிலே வல்லவர்; அவர் முனைந்து நின்றால், வெற்றிதான் கிடைக்கும் என்றிருந்த நிலையையும், கழகம் பொய்யாக்கிவிட்டது என்பதுபற்றி நண்பர்கள் பூரிப்புடன் கூறினார்கள். அது பெருமளவுக்கு உண்மைதான் என்றாலும், காங்கிரசிடம் சிக்கிக்கொண்டுள்ள பண பலத்தையும் பத்திரிகை பலத்தையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று நான் எடுத்துக் காட்டினேன்.

காஞ்சிபுரம் மறியல்லி ஈடுபட்டு, பூவிருந்தவல்லி வழக்கு மன்றத்தால், நாலு மாதக் கடுங்காவல் தண்டனை பெற்ற, கே. டி. எஸ். மணி - திருவேங்கிடம் - ராஜி - கிளியப்பன் - ஏகாம்பரம் - ஆகிய ஐவர், இவர் மாலை இங்கு அழைத்து வரப்பட்டார்கள். அவர்களை, நாங்கள் இருக்கும் பகுதியிலேயே இருந்திடச் செய்யலாமா என்று சிறைக்காவலாளி ஒருவர் என்னிடம் வந்து கேட்டார்; அப்படியே செய்யலாம் என்றேன். இப்போது அந்த ஐவரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள் - 11-ம் நம்பர் அறையிலிருந்து வரிசையாக அவர்களுக்கு இடம்.

கே. டி. எஸ். மணியும் திருவேங்கிடமும் காஞ்சிபுரம் நகராட்சிமன்றத் தேர்தல்லி வெற்றி பெற்றவர்கள் - சிறையில் இருந்தபடியே.

கே. டி. எஸ். மணி, காஞ்சி கலியாணசுந்தரத்தின் மருமகன். மணியின் திருமணம் என் தலைமையில் நடந்தது. ஆசாமி அப்போது ஒரே கதர் மயம் - காங்கிரஸ்காரர். ஆர்வம் கொந்தளிக்கும் இயல்பு - இலட்சியங்களிலே ஈடுபாடு. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெத்த உடல் நலிவாக இருந்தவர். சிறையில் மிக்க எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியவர்.

திருவேங்கிடம், தோல் போர்த்துக்கொண்டிருக்கும் எலும்புருவம். உடல்நலம் சென்ற ஆண்டு மோசமாக இருந்தது. இப்போது ஆர்வம் காரணமாக, நல்லபடி காணப்படுகிறார்.

காஞ்சிபுரம் தேர்தல் நிகழ்ச்சிகள்பற்றி மணி பல விஷயங்களைச் சொன்னார். காங்கிரஸ் கட்சியினரின் முயற்சிகள்; நம்முடைய தோழர்களிலே எவரேனும் சபலத்துக்கு இரையாவார்களா என்று எதிர்பார்த்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவைபற்றி விரிவாகக் கூறினார்.

எட்டுப்பேராக இருந்தவர்கள் இப்போது பதின்மூன்று பேராகி இருக்கிறோம்.

வெளியே இருந்து வந்துள்ள அந்த ஐவரிடம், நமது தோழர்கள், பல விஷயங்கள்பற்றி பேசி அளவளாவி மகிழ்ச்சி அடைந்தனர்.

7-4-1964

இரண்டு நாட்களாகக் குறிப்பு எழுத இயலவில்லை - மண்டைக் குடைச்சல், கழுத்து நரம்புகளில் வலி, மருந்து உட்கொண்டு வருகிறேன். அதனால், குறிப்பு எழுத முடியாது போயிற்று. இன்று வலி பெருமளவு குறைந்துபோய்விட்டது.

மூன்று நாட்களுக்குமாகச் சேர்த்து குறிப்பு எழுதுகிறேன்.

மணி இப்போது கிட்டத்தட்ட 11. பொன்னுவேலுவும் வெங்காவும் தூங்கி அரை மணி நேரத்துக்கு மேலாகிறது. இதுவரையில் டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் எழுதியுள்ள "நினைவு அலைகள்' படித்துக்கொண்டிருந்தேன். முக்கால் பகுதி முடித்து விட்டேன்.

இன்று காலையில், வழக்கப்படி, சிறை மேலதிகாரிகளின் "பார்வையிடல்' நடைபெற்றது. நேற்று மாலையே புதிதாக வந்துள்ள ஐவருக்கும் "கைதி' உடை கொடுத்துவிட்டார்கள். ஆகவே இன்று பதின்மூன்று பேர்கொண்ட எங்கள் அணியை, மேலதிகாரி பார்வையிட்டார்.