அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அறுவடையும் - அணிவகுப்பும் (2)
2

விரட்டி அடிப்பது என்று பொருள் கொள்ளலாம். கெட்டவர்களை அல்ல, தம்பி! வேதனை கலந்த வேடிக்கையைக் கேள், நல்லவர்களை விரட்டி அடிப்பது! நல்லவர்களை விரட்டி அடிப்பது ஏன்? என்றுதானே கேட்கிறாய். நல்லவர்களை வளர விட்டால், பிறகு அவர்கள் மிகமிக அதிகமாக வளர்ந்து விடுவார்கள்; பிறகு அவர்களுக்கு நிகர் யாருமே இல்லை என்று ஆகிவிடும்; பிறகு ஆபத்து உண்டாகுமல்லவா? அதனால், மிக நல்லவர்கள் என்ற நிலைக்கு யாரேனும் வளருகிறார்கள் என்றால், அவர்களை ஊரைவிட்டு விரட்டிவிடவேண்டும் - என்று வாதாடி, விளக்கம் அளித்தனர். அப்படிப்பட்ட நடவடிக்கை கிரேக்க நாட்டிலே நடைபெற்றது.

நாட்டுக்கு நாசம் விளைவிக்கக்கூடியவர்களை விரட்டி அடிப்பது என்று துவக்கப்பட்ட நடவடிக்கை, நாளா வட்டத்திலே கெட்டுக் கெட்டு, நல்லவர்களை, செல்வாக்கு மிக்கவர்களை, எல்லோரும் பாராட்டத்தக்கவர்களை, விரட்டி அடித்திடும் முறையாக உருவெடுத்தது.

ஆதென்சு நகர அரசியலில் இடம்பெறவும், ஆதிக்கம் செலுத்தவும் விழைவுகொண்டோர், ஊராரின் நன் மதிப்பைப் பெறத்தக்கவராக, நல்லவராக எவரேனும் புகழ்பெறுகிறார் என்றால், ஊரிலே அவர்கள் உள்ளமட்டும் தமக்கு அரசியலில் இடம் கிடைக்காது என்று எண்ணி, அவர்களை விரட்டி அடிக்க முனைந்தனர்.

இதற்கும் மக்களின் வாக்குரிமை பயன்பட்டது.

ஆதென்சு நகர மக்களில் 6000-பேர் கூடி வாக்களித்து விடலாம், இன்னார் ஊரிலே இனி இருக்கக்கூடாது என்று; அந்த வாக்கெடுப்பு முடிந்ததும், அவர் கிரேக்க நாட்டை விட்டுச் சென்றுவிடவேண்டும்.

கொலை, கொள்ளை, சதி, கற்பழித்தல் போன்ற குற்றங் களைப் புரிந்திருந்தால், வழக்குத் தொடுத்து, விசாரணை நடத்தித் தண்டிக்கலாம். அதற்கான முறைகள், சட்டதிட்டங்கள் இருந்தன.

ஆஸ்ட்ரசிசம் எனும் விரட்டி அடிக்கப்படும் முறையில் இன்ன குற்றம் இவன் செய்தான் என்று வழக்கு தொகுப்பது இல்லை. இவன் இங்கு இருக்கவேண்டாம் என்று கூறப்படும். ஏன்? என்று கேட்டால், இவன் ஆபத்தானவன்; இவனால் ஆபத்து வரக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்பதன்றி வேறு பதில் கிடையாது.

அரசியல் வட்டாரத்தினருக்கு மட்டுமே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

கி. மு. 508ஆம் ஆண்டில் இதுபோன்ற நடவடிக்கை துவக்கப்பட்டு, பலர் நாடுகடத்தப்பட்டனர். இந்த முறைகேடான நடவடிக்கையின் காரணமாக, நல்லவர் பலர் விரட்டி அடிக்கப் பட்டதால், நாட்டுக்கே நாசம் ஏற்படுவதை மெள்ள மெள்ள உணர்ந்த பிறகு, 517ஆம் ஆண்டிலே இந்த நடவடிக்கையைக் கைவிட்டனர்.

தெமிஸ்டாக்லிஸ், அரிஸ்டிடிஸ் போன்ற புகழ் மிக்கோர் பலர், இத்தகைய நடவடிக்கையால் ஆதென்சு நகரைவிட்டு விரட்டப்பட்டனர்.

தம்பி! ஒருவருக்கும் ஒரு கெடுதலும் செய்யாததிருந்த நிலையில், எவரும் அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க எத்தகைய செயலையும் செய்தறியாத என்னை, என் தொகுதி மக்கள் ஆதரிக்கமுடியாது என்று கூறியது அறிந்தபோது, எனக்கு இந்தக் கிரேக்க நாட்டு நடவடிக்கைதான் நினைவிற்கு வந்தது.

அப்பப்பா அவன் செய்த அக்ரமத்துக்கு, இந்தத் தண்டனை தான் சரியானது என்றோ,

ஒருவனை மதித்தானா, ஒருவரிடம் மரியாதை காட்டி னானா, எத்தனை மண்டைக் கனம் அவனுக்கு, அதனால்தான் மக்கள் அவனை மட்டந்தட்டினார்கள் என்றோ

ஊரை மிரட்டிக்கொண்டிருந்தான், உள்ளதெல்லாம் தனக்குத்தான் என்று அள்ளிக்கொண்டிருந்தான், ஆகவேதான் அவனைக் கீழே இறக்கிவிட்டார்கள் என்றோ

என்னைத் தோற்கடிக்கவே கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தவர்கள்கூடக் குறை கூறமாட்டார்கள். என்னிடம் இன்ன குறை உளது என்று சுட்டிக்காட்ட முடியாது.

ஏறக்குறைய கிரேக்க நாட்டு நடவடிக்கைபோலவே இங்கு நடந்தது என்று கூறலாம். நல்லவன்தான்! எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவன்தான்! அதனால்தான், நல்லவன் என்று பெயர் பெற்றுவருகிற ஒருவனை, இப்படியே வளரவிடக்கூடாது என்று எண்ணுகிறோம் என்று, என் தொகுதியில் என்னை எதிர்த்து வேலை செய்தவர்கள் கூறவில்லையே தவிர, அவர்களின் மனதிலே இருந்த எண்ணம் இதுபோன்றதுதான், என்பதிலே ஐயமில்லை.

அவன் சட்டசபை சென்றால் நன்றாக வாதாடுவான் - என்று அவர்களிலேயே ஒருவர் கூறுவார். மற்றவரோ, அதற்காக அவனேதான் போகவேண்டுமா? ஒருமுறைதான் போனானே போதாதா? இந்தமுறை வேறு ஒருவர்தான் போகட்டுமே? இவனுக்கே இது பட்டாவா? என்று கேட்பார். இப்படி ஒரு விசித்திரமான மனப்பான்மை வளர்ந்திருப்பது எனக்குப் புரியாமலில்லை. இந்த மனப்பான்மையை, ஆளுங்கட்சியினர், குறிப்பாக அமைச்சர்கள் தக்கவிதத்தில் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார்கள்; தடவிக் கொடுத்துப் பலன் பெற்றார்கள். இது, தேர்தலின்போது மட்டும் கையாளப்பட்ட முறை அல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்ட முறை, நீண்ட காலமாகவே.

காஞ்சிபுரம் தொகுதி கடந்த இரண்டு முறைகளும் காங்கிரசை தோற்கடித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு - அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான் - இந்த மனப்புண் அவ்வப்போது எரிச்சலைக் கிளப்பியபடி இருந்து வந்தது.

இம்முறையும் காங்கிரசு தோற்றுவிட்டால், இனி என்றென்றும் காஞ்சிபுரம் தொகுதி காங்கிரசுக்குக் கிட்டாது என்ற கிலி ஏற்பட்டுவிட்டது.

இதனையும் அமைச்சர்கள் தக்கமுறையில் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இம்முறை எவ்வளவு செலவிட்டாலும், என்னை வீழ்த்திக் காங்கிரசுக்கு வெற்றி தேடிவிடவேண்டும் என்பதனைத் திட்ட மிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாகவே பணியாற்றினர்.

பழங்குடி மக்களிடம் பழகி, ஒவ்வொரு சேரிக்கும் சென்று மாடு வேண்டுமா, மனைக்கட்டு வேண்டுமா, கடன் வேண்டுமா, வேலை வேண்டுமா என்று கேட்டு, வாக்களித்து, சிறு சிறு சலுகைகள் செய்துகொடுத்து, ஆள் பிடிக்கும் வேலை, எனக்கு எதிராக அவர்களைத் திருப்பிவிடும் வேலை, கழகத்துக்கு எதிர்ப்பு ஏற்படுத்தும் காரியம், தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வந்தது.

நாள்தோறும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கழக வேலையாகச் சுற்றிக்கொண்டிருந்தேன், என்றாலும் வாய்ப்புச் சிறிது அளவு கிடைக்கும்போதெல்லாம், தொகுதியில் நான் சென்று பார்த்ததில் இது எனக்குப் புரிந்தது; நமது கழகத் தோழர்களிடம், இதனை அவ்வப்போது எடுத்துக்கூறியும் வைத்தேன். நான் நேரில் விளக்கம் கூறக்கேட்கும்போது பல இடங்களிலே, நிலைமை புரிந்தது.

இவர் ஒருவர் இருப்பதனால்தான் இதுவாவது நடக்கிறது.

இவருக்குப் பயந்துகொண்டுதான் இது வேண்டுமா, அது வேண்டுமா என்று வந்து வந்து கேட்கிறார்கள்.

இவர் சட்ட சபையில் நமக்காக வாதாட வாதாடத்தான் மாடு வேண்டுமா, மனைக்கட்டு வேண்டுமா என்று கேட்கிறார்கள்.

என்று எண்ணியவர்களும், கூறியவர்களும், என் தொகுதியில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தொடர்ந்து அவர்களிடம் காங்கிரசால் ஏவிவிடப்பட்டவர்கள் கலகம் மூட்டியபடி இருந்தால், அவர்கள் மனதிலே என் பேரில் ஒரு கசப்புணர்ச்சி ஏற்படாதா? ஏற்பட்டுக்கொண்டு வந்தது. எனக்கு அது புரியவும் செய்தது. நமது கழகத் தோழர்களிடம் எடுத்துக் கூறினேன். அவர்கள் அதனை நம்பவில்லை. அவர்களுக்குப் பாவம் என்மீது இருக்கும் பற்றும் பாசமும், மதிப்பும் மரியாதையும்.

நாட்டுக்காகப் பாடுபடுகிறவர்

நாடுமீளப் பாடுபடுகிறவர்

இவர்மீதாவது, கசப்பு வளருவதாவது? என்ற எண்ணம் கொள்ளச் செய்தது. அவர்கள் ஒன்றினை மறந்தார்கள்; நான் நாட்டு விடுதலைக்காகப் பணியாற்றுவதனைக் கவனித்து, மற்றப்படி என் மூலமாகத் தமக்கு வேறு எந்தவிதமான உதவிகளும் தேவையில்லை என்று எண்ணத்தக்க நிலையில், தொகுதி மக்கள் இல்லை என்பதனைப் புரிந்துகொள்ளவில்லை. நமது கழகத் தோழர்களுக்கு இருந்துவந்த எண்ணமெல்லாம்.

ஐந்தாண்டுத் திட்டத்தின் ஊழலைக் கண்டிக்கிறார்;

விலை ஏற்றத்தைக் கண்டிக்கிறார்;

வரிக்கொடுமையை எதிர்த்துப் போராடுகிறார்;

இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்துகிறார்.

இவ்வளவு அரிய பணியாற்றிவரும் கழகத்தைக் கட்டிக்காத்து வருவதுடன், கலாம் விளைவதைத் தடுத்து நிறுத்தி, நல்ல வளர்ச்சி ஏற்படச் செய்து, இந்திய துணைக்கண்டத்திலேயே, கழகம் என்றால் ஓர் கேள்விக்குறி என்ற நிலைக்குக்கொண்டு வந்திருக்கிறார்; இப்படிப் பாடுபட்டுக்கொண்டு வருகிறவரிடம் நாளுக்குநாள் பற்றும், பாசமும், மதிப்பும், மரியாதையும் அதிகமாக வளருவதுதானே முறை. எனவே, ஆதரவு முன்பு இருந்ததைவிட, இம்முறை எவர் தடுத்தாலும் அதிகமாக இருந்தே தீரும் என்று எண்ணிக்கொண்டனர்.

இதனை அவர்கள் பல கூட்டங்களில் எடுத்தும் கூறினர்.

அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் ஆம்! ஆம்! என்றனர்; ஏன் எனில், அவர்களே அந்தக் கருத்துக்கொண்ட வர்கள். ஆனால் அந்தக் கருத்துகொள்ளாதவர்கள், காங்கிரசால் ஏவிவிடப்பட்டவர்களின் கலகப்பேச்சுக்கு இரையாகி, மனம் குழம்பிப் போயிருந்தவர்கள், அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் அல்ல. கூட்டம் நடந்த இடம், காஞ்சீபுரம்; காங்கிரசால் ஏவிவிடப்பட்டவர்களின் கலகப்பேச்சினால் என்னிடம் கசப்புணர்ச்சிகொண்டவர்கள் இருந்த இடம், கிராமங்கள். இந்த நிலைமையைத்தான் நமது தோழர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். தடுத்து நிறுத்தவும், திருத்தவும் முடியவில்லை; தேர்தல் நேரத்து வேலை, கடினம் எனினும் இதற்கு அது பயன்படவில்லை.

காங்கிரசினால் ஏவிவிடப்பட்டவர்கள், திட்டமிட்டு மெள்ள மெள்ள, கழகத்தின்மீதும், என்மீதும் கசப்புணர்ச்சியை மூட்டிக்கொண்டு வந்ததை, உடனுக்குடன் தடுத்து நிறுத்த, நமது கழகத் தோழர்கள் முயற்சி எடுத்துக்கொண்டிருந்ததால், தேர்தல் நேரத்தில் "ஜுரவேகத்தில்' வேலை செய்திருக்கத் தேவையே ஏற்பட்டிருக்காது.

என் தொகுதியின் நிலைமை மட்டுமல்ல; சென்ற முறை கழகம் வெற்றிபெற்ற எல்லாத் தொகுதிகளிலும் இருந்துவந்த நிலைமையைத்தான், காஞ்சிபுரம் தொகுதியைச் சுட்டிக் காட்டுவதன்மூலம் எடுத்துரைக்கிறேன். செய்யத் தவறிவிட்ட தற்காக, வருத்தம் தெரிவிக்க அல்ல; இனி இவ்விதம் வேலைத் திட்டம் வகுத்துக்கொண்டு பணியாற்றவேண்டும் என்பதனை நினைவூட்ட.

தம்பி! இன்று நாடு உள்ள நிலையில், எல்லா மக்களும், தூய அரசியல் தத்துவங்களை மட்டுமே மனதில்கொண்டு, தமது ஆதரவைத் தர முன்வருவார்கள் என்று எண்ணிக்கொள்ளக் கூடாது.

நாடு பிரிகிறபோது பிரியட்டும், அதனால் கிடைக்கக்கூடிய நல்லவை அப்போது கிடைக்கட்டும், இப்போது வீட்டு விசாரம் போக வழி என்ன? என்று கேட்பதுதான், நூற்றுக்கு எண்பது பேருடைய இயல்பாக இருக்கும்; இங்குமட்டுமல்ல, ஜனநாயகம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையாக இருந்துவரும் நாடுகளிலேயேகூட.

உடனடியாகக் கிடைக்கும் உதவிகள் கடுகளவு எனினும் பெரிதாகத்தான் தோன்றும். தொடர்ந்து பணியாற்றிப் பெறக் கூடியது, நிலைத்து நிற்கக்கூடிய, நிலையை மாற்றி அமைக்கக் கூடிய பலனாக இருக்கும் என்பதற்காக, உடனடியாகக் கிடைக்கும் பலனை இழந்துவிட, சராசரி மக்கள் முன்வரமாட்டார்கள். அவர்களின் "ஆசாபாசங்களை' நாம் தம்பி! அலட்சியப்படுத்துவதோ, அவைகளை அவர்கள் பெற வழிகாட்டுவதில் அக்கரையற்று இருப்பதோ, சரியல்ல; முறையுமாகாது.

என்ன அண்ணா! செய்யலாம்? ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களால்தான், சிறு சிறு சலுகைகளை, உடனடி உதவி களைச் செய்துதர முடியும்; நாமோ எதிர்க் கட்சியாயிற்றே, என்ன செய்திட முடியும்? எந்த அதிகாரி நமக்காகச் சலுகை காட்டுவார். எப்படி நாம் மக்களுடைய சிறு சிறு தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கமுடியும் என்று கேட்கிறாய்; தெரிகிறது நான் தம்பி! உன்னுடைய இந்தக் கேள்வி, பொருளற்றது என்றும் கூறிவிடவில்லை; பொறுப்பற்றது என்றும் தள்ளிவிடவில்லை. இதனை நான் அறியவில்லை என்றும் எண்ணிவிடாதே. எனக்கே இது தெரியும்.

காஞ்சிபுரம் நகரில் ஒரு புதிய கூட்டுறவு நெசவுச்சங்கம் அமைக்கவேண்டும் என்று, நமது தோழர்களிலே சிலர் என்னை அணுகினார்கள். நான் தொழில் அமைச்சரைக் கண்டு பேசினேன்; ஒரு முறைக்கு மும்முறை; ஆனால் காரியம் பலிக்கவில்லை.

உனக்கே இது என்றால், எங்கள் பாடு இன்னும் கஷ்டம் தானே என்று கேட்கிறாய். உண்மை, தம்பி! ஒப்புக்கொள்கிறேன்; ஆனால் உடனடியாக சலுகைகளை, உதவிகளைப் பெற்றுத் தர முடியாமல் போய்விட்டாலும், மக்களிடம் நிலைமையை விளக்க, சர்க்கார் மூலமாக இல்லாதுபோயினும், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி உதவிகள் பெற்றுத்தர, நாம் முனைந்தது உண்டா, என்பதை எண்ணிப்பார், தம்பி! இல்லை என்பது விளங்கும்.

கைத்தறித் துணியினைத் தலைமீது சுமந்து விற்றோம் - சர்க்கார் துணையுடன் அல்ல.

புயல் அடித்தபோது நிதி திரட்டி உதவி அளித்தோம் - சர்க்கார் கை கொடுத்ததால் அல்ல.

மாநாடுகள் நடத்துகிறோம் - மகத்தான கலை நிகழ்ச்சிகள் நடாத்துகிறோம் - சர்க்காரின் ஒத்துழைப்புடன் அல்ல! சொல்லப் போனால், அதிகார வட்டாரம் கொடுக்கும் தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு.

இதுபோல, தொகுதிகளின் நிலைமைக்கான காரியத்தில் நாம் ஈடுபட்டு, ஓரளவு வெற்றி கண்டிருக்க முடியாதா என்பதை எண்ணிப்பார்த்தால், உண்மை விளங்கும்.

கழகம் உமக்காக என்னென்ன திட்டமிடுகிறது தெரியுமா?

கழகத்தார், உமக்காகச் சட்டசபையிலே என்னென்ன கூறியிருக்கிறார்கள், தெரியுமா?

கழகத்தவர்கள், உங்கள் சார்பில் அமைச்சர்களை எப்படி எப்படித் தட்டிக் கேட்கிறார்கள் தெரியுமா? என்று, தம்பி! தேர்தல் நேரத்தில் எல்லா இடங்களிலும் ஆர்வத்துடன் பேசுகிறாய்; ஆனால் தேர்தல் சூழ்நிலை இல்லாதபோது, கிராமத்து மக்களுக்குத் தெளிவு அளிக்க, கசப்புணர்ச்சி நீங்க, நடத்திய பிரச்சாரக் கூட்டங்களின் எண்ணிக்கை என்ன? வருத்தப்படுத்தக் கூறவில்லை; என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். மிகக் குறைவு.

தொகுதிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினருக்கு, அந்தத் தொகுதியிலே ஆதரவு வளரவேண்டுமானால், கசப் புணர்ச்சி வளராமல் இருக்கவேண்டுமானால், உறுப்பினர் மட்டுமே அந்தக் காரியத்தைக் கவனித்துக்கொள்ளுவார் என்று இருந்துவிடக்கூடாது; அவர் சார்பில், தொகுதியிலே தொடர்பு வைத்துக்கொண்டு, அவ்வப்போது நல்லுரை வழங்கவும், தெளிவுரை கூறவும், இயன்ற அளவு உதவிகளைத் திரட்டித் தரவும், பணியாற்ற, அந்தத் தொகுதியிலே கழகத்தவர்கொண்ட குழு ஒன்று பணியாற்றித் தீரவேண்டும். தொகுதி உறுப்பினர் தொகுதிப் பணியினைப் பார்த்துக்கொள்ளட்டும் என்று கழகத்தவர் ஏதும் செய்யாது இருந்துவிட்டால், கசப்புணர்ச்சி உறுப்பினர்மீது மட்டுமல்ல, தம்பி! கழகத்தின்மீதும் வளர்ந்து விடும்.

சென்ற முறை நமது கழகத்தவர் வெற்றிபெற்றிருந்த தொகுதிகள் அவ்வளவிலும், இம்முறை கிட்டாததற்கு இதுவே காரணம் என்று நான் கூறுவதாக, தப்பர்த்தம் செய்து கொள்ளாதே. காஞ்சிபுரம் தொகுதியிலே இது மிக முக்கியமான காரணமாக அமைந்திருந்தது; மற்றத் தொகுதிகளிலே, தோல்விக் கான பல காரணங்களிலே இதுவும் ஒன்று.

இதனைப் புரிந்துகொள்ள, அந்தத் தொகுதிகளிலே உள்ள சிற்றூர்களிலே, கழகத் தோழர்கள் எத்தனை இடங்கட்குச் சென்றுவந்தனர், எத்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன என்ற கணக்கெடுத்துப் பார்க்கவேண்டும், தம்பி! கோபிக்காமல், வருத்தப்படாமல். பிற, அடுத்த கிழமை.

அண்ணன்,

18-3-1962