அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அறுவடையும் - அணிவகுப்பும் (4)
2

அவர்கள் இந்த அளவுக்கு வேகமாகவும், கடுமை யாகவும், கேவலமாகவும், முன்தொடர்புபற்றிய நினைப்புக்கே இடமில்லாத முறையில் இழிவாகவும், பேசியும் எழுதியும் இராவிட்டால், நான் நெடுங்காலம் பாச உணர்ச்சி காரணமாகக் குழம்பிய மனதினனாகத்தான் இருந்திருப்பேன்; செயலாற்றும் நினைப்பு நசித்துக்கூடப் போயிருக்கும்; மாறிவிட்டவர்களின் கருத்துக்கள் நியாயமானவைகள்தானோ என்ற ஐயப்பாடுகூட உள்ளத்திலே புகுந்து குடைந்திருக்கும்.

ஆனால், இவை எதற்கும் இடம் இல்லாத முறையில், எடுத்த எடுப்பிலேயே, என்னைக் காண்பதே களிப்பு என்று ஒருமணி நேரத்துக்கு முன்புவரை பேசியதை மறந்து, என் உருவிலிருந்து உரைவரையில், கொள்கையிலிருந்து கூட்டுத் தோழர்கள்வரை, இழிவாகப் பேசி,

ஓ! இவர்கள் ஏதோ புதிய கொள்கை கூறவில்லை; மூண்டு கிடக்கும் பகையைக் கக்குகிறார்கள்; தூண்டி விட்டபடி தாக்குகிறார்கள்.

என்பதனை நான் உணரச்செய்தனர்; அதனாலேயே நான் இவ்வளவு விரைவிலே குழப்ப நிலையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள முடிந்தது.

காங்கிரசுப் பெருந்தலைவர்களோ தங்களுக்குத் தரப்பட்ட கணக்குகளைச் சரியானவை என்று நம்பி, இனி, தி. மு. கழகம் நிலைக்காது; அதனை நிலைக்குலையச் செய்ய, அதனிடம் நீண்ட காலமாக இருந்துவந்த நெடியவர்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்; அதன் காரணமாகக் கழகம் கலகலத்துவிடப் போகிறது என்று நம்பிக்கொண்டனர்.

இங்குள்ளவர்களும், மெத்த நம்பிக்கையுடன்

கழகத்தின் கர்த்தா பெரியார்; அவரே தி. மு. கழகத்தை அழிக்கத் துடிக்கிறார். கழகத்தின் கருவூலம் வெளியேறி விட்டது; எனவே, கழகத்துக்கு எதிர்காலம் இல்லை.

என்று திட்டவட்டமாகப் பேசி வந்தனர்.

கழகம், இயக்கம், கட்சி என்றால், அதிலே, யாரார், கடுமை யான பேச்சுகளில் வல்லவர்கள் என்று தம்மைக் காட்டிக் கொள்கிறார்களோ, அவர்களாலேயே அது இயங்கி வருகிறது என்று ஆராய்ச்சியில்லாதவர்கள் எண்ணிக்கொள்வது இயல்பு.

நம்மைவிட்டுப் பிரிந்தவர்கள் இங்கு இருந்தபோது, இலட்சியம் அவர்களுக்கு இனிப்பு அளித்ததால், அந்த இலட்சியத்தை எதிர்த்தவர்களை என்னென்ன விதமான கடுமொழியால் தாக்கினர் என்பதை நாடு அறியும், நமது இலட்சியத்தின் பகைவர்கள் நன்கு அறிவார்கள் அல்லவா? இடிமுழக்கமிடுவோர் மாறிவிட்டது கண்டதும், முன்னாலே வாங்கிய அடிகளால் ஏற்பட்ட தழும்புகளைத் தடவிப் பார்த்துப் பார்த்து, இப்படி நம்மைத் தாக்கியவர்கள் இப்போது நம்மைத் தாக்கப்போவதில்லை; தம்மைத் தாக்கப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இருந்துவிட்டுவந்த இடத்தைத் தாக்கப்போகி றார்கள்; கண்குளிரக் காணலாம் என்று எண்ணி, விலகியவர் களை வரவேற்று, ஆலம்சுற்றி, பொட்டிட்டுச், சேரிடமறிந்து சேர்ந்தோய் வாழி என்று வாழ்த்தி, திருஷ்டி கழித்து, வரவேற்றுத் திருவிழா நடத்தினர்.

தம்பி! அவர்கள் அடைந்த மகிழ்ச்சியின் தன்மையையும் அளவையும் வேகத்தையும் என்னாலே உணரமுடிகிறது.

எந்த இலட்சியத்தை உலகமே எதிர்ப்பினும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று இடிமுழக்கம்போன்ற நிலையில் எடுத்துக் கூறிவந்தார்களோ, அந்த இலட்சியத்தை வாழ்த்திய வர்களே, ஒருநாள் அது தீது, ஆகாது என்று பேசி, அந்த இலட்சிய ஒழிப்புத்தான் இப்போது எமது இலட்சியம் என்று பேசிடக் கேட்டால், நெடுங்காலமாகவே அந்த இலட்சியத் துக்கு வலிவு வளர வளரத் தமது ஆதிக்கத்துக்கு அழிவு என்பதனை உணர்ந்து எதிர்த்து வந்தவர்களுக்கு, அளவிட முடியாத அகமகிழ்ச்சி பொங்காதா!

பொங்கியதுடன் இல்லை; புதிய நம்பிக்கையே பிறந்தது; அந்த நம்பிக்கையினால்தான், அவர்கள், "கழகம் இந்தத் தேர்தலிலே ஈடுபட்டு அடியோடு அழிந்துபோகும்' என்று பேசினர்; மேலிடத்தவருக்கும் அந்த நம்பிக்கையைத் திடமாக்கினர்,

தம்பி! இப்போது கூர்ந்து பார், தேர்தல் களத்தை.

ஒருபுறத்தில் கழகம் பிளந்துவிட்டது. கலகலத்துக் கிடக் கிறது; தாக்கும் சக்தியும் தாங்கும் சக்தியும் இல்லை; சலித்துப் போய், களைத்துப்போய், பீதியுடன் தள்ளாடிக்கொண்டு வருகிறது; இதனை ஒரு தட்டுத்தட்டினால் கீழே வீழ்ந்துவிடும். பிறகு எழுந்திருக்கவே முடியாது என்ற நம்பிக்கை வேகத்துடன், எல்லாவிதமானப் போர்க் கருவிகளையும் ஏராளமான அளவு குவித்துவைத்துக்கொண்டு, ஆடுநர், பாடுநர், எடுபிடிகள் உடன்வர, காங்கிரசுக் கட்சியின் அணிவகுப்பு!

மற்றோர்புறம், களத்தின் தன்மையைக் கண்டறியவேண்டிய நேரத்தில், கலாம் விளைவிப்போரை அடக்கித் தீரவேண்டிய வேலையில் ஈடுபட்டிருந்துவிட்டதால், ஆர அமர ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல், போதுமான படைக்கலன் இல்லாமல், "கூட இருந்தோர் குடிகெடுத்தனரே, குலவி மகிழ்ந்தோர் குத்திக் குடையத் துணிந்தனரே, கோட்டைக் காவலர்களாக இருக்க வேண்டியவர்கள் காட்டிக்கொடுப்போர்களாகிவிட்டனரே, ஏற்றி ஏற்றித் தொழுதவர்கள் ஏசித் தூற்றித் திரிகின்றனரே, என்ன செய்வது, எப்படித் தாங்கிக்கொள்வது' என்ற கலக்கமும் கவலையும் குடையும் நிலையில், மாற்றாரின் படைவரிசையிலே பளபளப்பான படைக்கலன்கள் இருக்கக் கண்டு, போதுமான படைக்கலன்களைத் தேடிக்கொள்ளக்கூட நேரம் கிடைக்க வில்லையே என்று ஏக்கம்கொண்ட நிலையிலே, நமது கழக அணிவகுப்பு.

பாய்ந்தோடிப் பதுங்கிக்கொள்ள, அடர்ந்த ஒரு புதர் ஒரு பக்கத்தில்; இரத்தவாடையுடன் கூடிய வாயைத் திறந்தபடி உறுமிக்கொண்டு தாக்கவரும் வேங்கை ஒரு புறம்; எதிர்ப்புறத்தில் வழுக்குப் பாறைமீது காலை மிகக் கஷ்டப்பட்டு ஊன்றிக் கொண்டு, காம்பு ஒடிந்த வேல் கரத்தினில் ஏந்திக்கொண்டு, தாக்கத் தயாராக நிற்கும் துணிவுமிக்க இளைஞன்!

தம்பி! தேர்தல் களத்திலே நாம் பெற்றுள்ள வெற்றி மிகப் பெரிது என்பதால் அல்ல, மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையிலே பெற்ற வெற்றி என்பதனாலேயே, அந்த வெற்றியின் அருமையும் பெருமையும் தரத்தில் மேலானது என்று, கெடுமதியற்றோர் அனைவருமே பாராட்டுகின்றனர்.

எரிச்சலூட்டி இன்பம் காணும் போக்கினர் தவிர, மற்றவர்கள், இரு அணிவகுப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, நாம் பெற்ற வெற்றி தரமிக்கது என்று தீர்ப்பளிக்கின்றனர்.

வெற்றியாம் வெற்றி, என்ன பெரிய வெற்றி இது என்று வேகமாக பேசத் துவங்கியவர்கள்கூட, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவாக அமர்ந்தபோது,

பொதுத் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள வெற்றி, கவனித்துத் தீரவேண்டிய பிரச்சினையாகி விட்டது.

என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

நாம் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை ஒரு ஆளுங் கட்சியை மிரட்டக்கூடியது அல்ல, என்பதைத் தம்பி! நினைவிலே கொள்ளவேண்டும். இப்போதும் 139 அவர்கள்; நாம் 50. ஆமாம்! சட்டசபையிலே நமது கோரிக்கைகளைக் காலில் போட்டு மிதித்துத் துவைத்துவிடத்தக்க வலிவு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மிதிக்க எண்ணம் பிறக்கும்போது, முன்பு 15 பேர்களாக இருக்கும்போது காலின்கீழ் போட்டு மிதித்துத் துவைத்தோம், அழிந்துவிடவில்லையே, மாறாக பதினைந்தாக இருந்தவர்கள் ஐம்பதாக அல்லவா வளர்ந்துவிட்டனர். இம்முறையும் சென்ற முறைபோலவே எண்ணிக்கை பலம் ஊட்டிவிடும் செருக்கினால் இந்த ஐம்பதின்மரை நசுக்கினால், அதன் விளைவாக, அடுத்த தேர்தலிலே நிலைமை என்ன ஆகுமோ. . . என்ற அச்சம் அவர்கள் மனதிலே எழத்தான் செய்யும்.

அடுத்த தேர்தலா? அடுத்த தேர்தலில், அடியோடு அழித்துவிடப்போகிறோம், தீனாமூனாக்களை என்று சில்லறைகள் சினமிகுந்து பேசக்கூடும்; பெரியவர்களுக்கு அந்த நினைப்பு எழாது; அவர்கள் முன்புகொண்ட எண்ணமும் நடைபெற்ற நிகழ்ச்சியும் நினைவிலே நிச்சயம் இருக்கும்.

உள்ளபடி தம்பி! இந்தத் தேர்தலிலே நமது கழகம் அடியோடு அழிந்துபோகும் என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் நம்பினார்கள், நாட்டுமக்களிடம் உறுதியுடன் எடுத்துக் கூறினார்கள்.

ஆளுங்கட்சியின் அடிபணியச் செல்வவான்கள் திரண்டு நிற்பதையும், பத்திரிகைகள் பலம் தேடித்தருவதையும், பெரியார் பக்கத்துணையாக இருப்பதையும், கழகத்தைவிட்டு விலகியோர் பகை கக்கி வருவதையும் பார்த்தபோது, இந்தத் தேர்தலிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தீர்த்துக்கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை, அமைச்சர்களுக்கு ஏற்படத்தானே செய்யும்.

பொதுமக்களிடம் பேசும்போதும், பத்திரிகை நிருபர் களிடம் விளக்கம் அளிக்கும்போதும், அமைச்சர்கள், கழகம் ஒழிந்துவிடும், நாலுபேர் வருவார்களோ ஐந்துபேர் வருவார் களோ என்பதே சந்தேகம் என்று, மிக்க உறுதியுடன், தெம்புடன், கூறிவந்தனர்.

பொதுத் தேர்தலிலே பிரசாரம் களைகட்டுவதற்காகப் பேசப்பட்டது இது என்றுகூடச் சொல்வதற்கு இல்லை. மதுரையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலேயே, பண்டித நேருவும், வேறு சிலரும், திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தடை செய்யும் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாமா என்பதுபற்றிக் கேட்டபோது, இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்கள், நேரு பண்டிதருக்கு உறுதி அளித்தார்கள்.

"திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். பொதுத் தேர்தல் வருகிறது. அதிலே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலை எடுக்க ஒட்டாமல் அழித்து விடுகிறோம்.''

காமராஜரும் சுப்ரமணியமும் வெளியிட்ட கருத்து; தந்த வாக்குறுதி; எடுத்துக்கொண்ட சூளுரை; விடுத்த அறைகூவல், இது.

இவர்களின் பேச்சை நம்பித்தான், பிப்ரவரி 22ல்கூட டாக்டர் சுப்பராயன், சென்னையில் பேசுகையில், திட்ட வட்டமாக,

"இந்தத் தேர்தலில் தி. மு. க.வினருக்கு சட்டசபையில் இப்போதுள்ள இடம்கூடக் கிடைக்காது.''

என்று தெரிவித்தார்.

நாற்பது ஆண்டுக்கால அனுபவம் அவருக்கு; வேகமாகப் பேசுவதை விரும்பும் இயல்பும்கொண்டவர் அல்ல. எனினும் அவருக்குத் தரப்பட்ட தகவல், அவரை இந்த அளவு உறுதியாகப் பேசச்செய்தது.

காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகளும், இதே கருத்தினை உறுதியாகத் தெரிவித்தன.

16-2-62ல், காங்கிரஸ் ஆதரவு ஏடு, தலையங்கம் மூலம்,

கடந்த இரண்டு தேர்தல்களின்போது இருந்ததைக் காட்டிலும், இப்போது காங்கிரஸ்மீது மக்கள் அன்பும் அபிமானமும் அதிகரித்திருப்பதைக் காண்கிறோம். ஆகையால் இந்தத் தடவை மிகப் பெரும்பாலான வாக்காளர்கள் காங்கிரசுக்கே ஆதரவளிப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை - என்று கருத்தைப் பரப்பிற்று.

எதனையும் விளக்கமாக்கிப் பேசுபவர் அல்லவா, சுப்ரமணியனார்!! அவர் கூறியது இது:

இன்று தமிழ்நாட்டில் காங்கிரசுக்குச் சாதகமான சூழ்நிலை, அசைக்கமுடியாத உறுதியான ஆதரவு, பெரு மளவுக்கு இருக்கிறது.

பெருமளவு - அதிக இடம் - அதிக ஆதரவு என்று பொதுப் படையாகத்தான் பேசிவந்தார்கள்போலும் என்று எண்ணிக் கொள்கிறாயா, தம்பி! புள்ளிவிவரப் புலிகளல்லவா, திட்ட வட்டம் இல்லாமலா பேசுவார்கள். ஜனவரித்திங்கள் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த சுப்ரமணியனார் தெளிவாகத் தெரிவித்தார்.

இப்போது சட்டசபையில் காங்கிரசுக்குள்ள ஸ்தானங் களைவிட 15 ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைப்பது உறுதி என்று இப்போதைய சுற்றுப் பயணத்தில் அறிந்து கொண்டேன்.

என்று நிதிமதி இருதுறைகளையும் நிர்வகித்து வந்தவர் கூறினார்.

மக்களிடம் நேரிடையாகப் பழகும் முதலமைச்சர் காமராஜர், பத்திரிகை நிருபர்களிடம்,

தமிழ்நாடு சட்டசபையில் தற்பொழுதுள்ள உள்ள ஸ்தானங்களைவிட அடுத்த தேர்தலில் முப்பது ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைக்கும்.

என்று கூறியிருக்கிறார்.

தம்பி! அவர்களெல்லாம் போட்ட கணக்குப் பொய்த்துப் போகும்படி செய்துவிட்ட பெருமை, நமது கழக அணி வகுப்பினையே சேரும்.

எனவேதான், கவலைப்படுகிறோம் - கலக்கமடைகிறோம் - கவனித்தாகவேண்டும் - என்று காங்கிரசுப் பெருந்தலைவர்கள் இப்போது பேசவேண்டி வந்திருக்கிறது.

பிரச்சார முறைகளைச் செம்மைப்படுத்தினால், அடுத்த முறை, கழகத்தை ஒழித்துவிடலாம் என்று சிலரும்,

பிரச்சாரம் செய்யவிடாமல் கழகத்தைத் தடுத்துவிட்டால், அடுத்தமுறை கழகத்தை ஒடித்துவிடலாம் என்று சிலரும் பேசுகிறார்கள்.

வழக்குகளைத் தொடுத்து வாட்டிடலாம் என்று ஒருபுறம் நினைப்பு நெளிகிறது, நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

வழக்கமான சிண்டு முடிந்துவிடும் வேலையில் ஈடுபடலாம் என்று சிலர் முனைகிறார்கள்.

இழித்தும் பழித்தும் பேசியும், எழுதியும், மக்கள் முன்னால் கழகத்தவர்களைக் கேவலப்படுத்திக் காட்டலாம் என்று, எப்போதும்போல முயற்சி நடைபெற்றபடி இருக்கிறது.

காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸ் ஏடுகளும், கழகத்தை எதிர்த்துப் பேசினாலும், எழுதினாலும், பொதுமக்கள், அவ்வளவு அதிகமான கவனம் செலுத்தமாட்டார்கள், கட்சி மாச்சரியத்தால் தாக்குகிறார்கள் என்று எண்ணிக்கொள் வார்கள். எனவே காங்கிரசுக்கு எதிர்க்கட்சிகள் என்ற பட்டயம் வைத்துக் கொண்டுள்ள கட்சியினரைக்கொண்டு, கழகத்தைக் கேவலப்படுத்தச் செய்வதுதான் அதிகப் பயன்தரும் என்று ஓர் சாகசச் சதித்திட்டமும் தீட்டப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது..

இவ்வளவும், தம்பி! நமது கழக அணிவகுப்பின் அருந் திறனின் பயனாக, நாம் ஈட்டிய அறுவடையின் அருமையினைக் கண்டதாலே, ஆட்சியினருக்கு ஏற்பட்டுவிட்ட அச்சம் காரணமாக!!

நம்மை அலட்சியப்படுத்திய காலம், மலை ஏறிவிட்டது!

நம்மை அழித்துவிடமுடியும் என்று கொண்டிருந்த நம்பிக்கை நசித்துப்போய்விட்டது.

நமக்குள் உட்குழப்பம் மூட்டிவிட்டுக் கலகலக்கச் செய்யலாம் என்ற எண்ணம் தகர்ந்துவிட்டது, பெருமளவு. அடியோடு அல்ல!!

நம்மை உலகின் கண்களில் படாமல் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் முறிந்துபோய்விட்டன.

நம்மை, மிகச்சிறிய கும்பல், கவனிக்கப்படத் தக்கதல்ல என்று நேரு பண்டிதரிடம் கூறிவைத்த பேச்சு, பொய்யுரை என்பதை நேரு பண்டிதரே உணர்ந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இவைகள் எல்லாவற்றினையும்விட, சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் வேகமான முறையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று இடம் பெறும் திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சிப் பொறுப்பிலே இடம் கிடைக்குமா என்று ஆவலுடன் காத்துக்கொண்டும், கணக்குப் போட்டுக் கொண்டும் இருக்கும் வெறும் அரசியல் கட்சி அல்ல; மற்ற எந்த அரசியல் கட்சியும் நினைத்துப் பார்க்காத ஒரு விடுதலைக் குறிக்கோளுக்காகப் பணியாற்றும் இயக்கம், திராவிடநாடு திராவிடருக்கே என்று கூறும் இயக்கம் என்பதனை, உலகு அறிந்துகொண்டதுதான், அணிவகுப்பு ஈட்டியுள்ள பெருமிதமான அறுவடையின் அருமையான தன்மையாகும்.

தம்பி! நாம் யார்? என்று புரியும்படி, இந்த வெற்றி செய்திருக்கிறது.

நாம் எவரெவரால் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறோம் என்பது விளக்கமாக்கப்பட்டுவிட்டது.

நாம் எத்தனை எத்தனை விபத்துக்களைச் சமாளித்திருக் கிறோம் என்பதும், உலகு அறிந்துகொண்டுவிட்டது.

இனி நாம், அறிவிக்கவேண்டியது, இந்த அணிவகுப்பு, ஆட்சியில் இடம் கேட்கும் வெறும் அரசியல் கட்சி அல்ல, அரசு அமைக்க விரும்பும் விடுதலை இயக்கம், திராவிடம் காணத் துடிக்கும் விடுதலை இயக்கம், எனும் பேருண்மையை.

இதனை நாம் எடுத்துக்கூற, சட்டசபையும் பாராளு மன்றமும் உள்ளன, போதும் என்று இருந்துவிடுவாயோ - தம்பி!

தம்பி! இதனை நாம் அந்த இடங்களிலே இருந்து எடுத்துச் சொல்லும் வாய்ப்பு, இப்போது ஓரளவுதான் கிடைத்திருக்கிறது.

முழு அளவு கிடைத்துவிடுகிறது, நாமே பெரும்பான்மை யான இடங்களையும் பெறுகிற நிலை வருகிறது என்று வைத்துக்கொள்.

தொடர்ந்து, ஆர்வத்துடன், முறையாக நாம் பணியாற்றி னால், அந்த முழு அளவு, அடுத்த தேர்தலில் நாம் பெற்றிடலாம் - ஐயம் வேண்டாம்.

மக்கள் தீர்ப்பு, நாட்டு விடுதலைக்குக் கிடைத்துவிட்டது என்று, திருவிடத்தைப் பிணைத்து வைத்துக்கொண்டுள்ள பேரரசு உணர்ந்து மதித்து விடுதலை அளித்திடின், நன்றி கூறுவோம், நல்லெண்ணத்தை எந்நாளும் மறவோம், நானில முழுவதிலும் இவர்கள்போல் நமக்குற்ற நண்பர்கள் வேறு எவரும் இலர் என்று வாழ்த்துவோம்.

ஆனால், அஃதின்றி, இந்த வெற்றிகள் போதா, சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலும் இடம்பெற்று இலட்சிய முழக்கம் எழுப்பினால் போதாது, வாலிபரை வயோதிக ராக்கிடும் இருட்டறை போன்றுள்ள சிறையில் அடைபட்ட நிலையில், கண்காணாத் தீவினில் கரைதெரியாக் கடலைப் பார்த்தபடி கைதியாக இருந்திடும் நிலையில், தூக்கு மேடையில் நின்றபடி, இந்த இலட்சியத்தை, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை எழுப்பவல்லாயோ என்று, பேரரசு நடாத்துவோர் கேட்டிடின், ஆம்! ஆம்! ஆருயிரைப் பலியிடவும் அஞ்சாது நிற்கிறோம்! தாயின் கரத்தில் பூட்டப் பட்டுள்ள தளைகள் பொடிபட, எமது உடல் ஆவியற்ற கூடாயினும் பரவாயில்லை. இன்னுயிரை எடுத்துக் கொள்ளுங்கள், இன்பத் திராவிடத்தைக் கொடுங்கள்! என்று கேட்டிடும், நெஞ்சினராதல் வேண்டும்.

இனிமேலா, அண்ணா! என்று கேட்டு, என்னை வெட்கப் படச் செய்துவிடுகிறாய், தம்பி!

இன்னுயிரை எடுத்துக்கொள்! இன்பத் திராவிடம் கொடுத்திடு! - என்பதுதானே, நமது அணிவகுப்பின் பரணி, என்று கேட்கிறாய்,

ஆம்! தம்பி! ஆமாம்? மறந்தேனில்லை! நினைவு படுத்தினேன்!!

அண்ணன்,

1-4-1962