அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஆட்சியாளர் மனப்போக்கு
1

25-4-1964

தம்பி!

இன்று மாலை, துளசிங்கம், கிருஷ்ணன் உள்ளிட்ட 15 தோழர்கள் "ஜாமீனில்' வெளியே சென்றனர். என்னைக் காண ராணி, பரிமளம், சரோஜா மூவரும் வந்திருந்தனர். திருவண்ணாமலை சண்முகம் இல்லத்தில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றதாகவும், மணமக்களை வாழ்த்திப் பேசியதாகவும் பரிமளம் சொல்லக் கேட்டு ஆச்சரிய மடைந்தேன்; ஏனெனில் கூச்சம் காரணமாக, பரிமளம் பேசுவது இல்லை, மாணவர் கூட்டங்களிலேகூட. என்றாலும், இம்முறை இரண்டொரு விநாடிகள் பேசியதாகக் கூறினான். காஞ்சிபுரத்தி லிருந்து பரிமளத்துடன் திருவண்ணாமலை திருமணத்துக்கு, ராஜகோபால் சென்று வந்ததாகவும் அறிந்துகொண்டேன்.

பரிமளம் - இளங்கோவன் - கௌதமன் - பாபு இவர்களில் பாபு, கடைசிப் பையன் - சிறுவன் - இவர்களில், அரசியல் ஈடுபாடு, கழகத் தொடர்பு யாருக்கு அதிகம் என்று நண்பர்கள் கேட்டார்கள். கௌதமன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான்; எனவே, அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் அரசியல் கூட்டங்களுக்குக் குறிப்பாகக் கழகக் கூட்டங்களுக்குச் செல்லுவான், பத்திரிகைகளும் படிப்பதுண்டு; சிறுவனாக இருந்தபொழுது, நாவலர் நெடுஞ்செழியன் பேசுவதுபோலவே பேசிக் காட்டி மகிழ்விப்பான். ஆனால், அவன் அரசியலில் ஈடுபடக் கூடியவனாக எனக்குத் தெரியவில்லை.

பரிமளம் அரசியல் பிரச்சினைகளையும், குறிப்பாகக் கழகப் பிரச்சினைகளை மிக நல்ல முறையில், அறிந்து வைத்திருக்கிறான். ஆனால், மருத்துவத் துறையில் ஈடுபடத் தன்னை தயாரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அவனும் அரசியலில் ஈடுபட இயலாது என்பது தெரிகிறது. இளங்கோவன் அச்சகம் நடத்துவது, புத்தகம் வெளியிடுவது, பத்திரிகை நடத்துவது ஆகியவற்றில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்திருக்கிறான். இந்தத் துறையில் பரிமளம் அவனுக்குப் பெருந்துணையாக இருக்க முடியும். "திராவிட நாடு' இதழ் நடத்த இயலாமல் நிறுத்தப்பட்டுப் போய்விட்டது; நின்று அதிக நாளாகிவிட்டதால், அதற்கான சர்க்கார் அனுமதியும் நீக்கப்பட்டுவிட்டது; எனவே மீண்டும் வெளிவர இயலாத நிலை. இந்நிலையில் அல்லி அச்சகம் என்ற அமைப்பை நடத்தவும், காஞ்சி என்ற வார இதழ் வெளியிடவும் இளங்கோவன் முனைந்திருக்கிறான். "காஞ்சி' இதழில்தான், இனி, நான், தம்பிக்குக் கடிதம், ஊரார் உரையாடல், அந்திக் கலம்பகம் போன்ற பகுதிகளை வெளியிடவேண்டி ஏற்படும் என்று நினைக்கிறேன் என்று விவரம் கூறினேன். "காஞ்சி என்பது ஊரின் பெயர்; அப்படித்தானே' என்று நண்பர்கள் கேட்டார்கள். ஊரின் பெயர் மட்டுமல்ல, அது ஒருவிதமான உள்ளப்பாங்கையும், முறையையும் கூடக் குறிக்கும் சொல் என்று கூறினேன். காஞ்சி எனும் சொல்பற்றிய விளக்கத்தை அன்பழகன் எடுத்துக் கூறினார்.

இன்றிரவு, தி. மு. க. மாநாட்டு முகப்பு வாயில் ஓவியம் ஒன்று வரைந்தேன்.

ஒரு வேலை நிறுத்தத்தைப் பின்னணியாகக் கொண்ட "அல்லும் பகலும்' என்ற ஆங்கிலக் கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். நீதி கேட்கும் தொழிலாளர்களைப் பொது வுடைமைவாதிகள், பலாத்காரவாதிகள் என்று குற்றம் சாட்டி அடித்து நொறுக்குவதும், சுட்டுத் தள்ளுவதுமான கொடுமை களைச் செய்யும் ஆட்சி முறையைக் கண்டித்து எழுதப்பட்டுள்ள புத்தகம். எளிய நடையில், ஆனால் உள்ளது உள்ளபடி தெரியத்தக்க முறையில், எழுதப்பட்டிருக்கிறது.

26-4-1964

குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் இல்லை. எல்லாத் தோழர்களும் ஏதேனும் படித்தபடி இருக்கிறார்கள்.

இரண்டு நாட்களாக மதியழகனுக்கு உடல் நலமில்லை. காலில் பாதத்தருகே வலி; இலேசாக எலும்பு முறிவு, கீறலளவுக்காகிலும் இருக்குமோ என்று எனக்கு சந்தேகம். இன்று இங்கு வந்த டாக்டரிடம் எக்ஸ்ரே எடுக்க, மருத்துவமனைக்கு அனுப்பலாமே என்று யோசனை கூறினேன். செய்யலாம் என்றார். ஆனால் பிறகு பெரிய டாக்டர் இது தேவை இல்லை என்று கூறிவிட்டதாக அறிந்துகொண்டேன்.

வெப்பம் அதிகமாகிக்கொண்டு வருவதாலும், இரவு நேரத்தில் எங்களைப் போட்டு அடைத்து வைக்கும் கொட்டடிக்குள் காற்றுப் புகுவதில்லை என்பதாலும், எல்லோருக்குமே ஒரு விதமான அயர்வு ஏற்பட்டுவிட்டிருக்கிறது.

அன்பழகன், என்னைப்போலப் படம் போடத் தொடங்கி விட்டார். மணிக்கணக்கிலே அதிலே ஈடுபட்டுவிடுகிறார். ஓவியங்கள் எப்படி இருந்தபோதிலும், எங்கள் மூவருடைய உடல், பலவண்ணக் கலவையாகிவிடுகிறது. காட்டுக்காட்சி ஒன்று வரையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் - ஓரளவுக்குத் தயாராகி விட்டிருக்கிறது. அடர்ந்த காடு - மலைகள் - ஒருபுறம் வேங்கை, மற்றோர் புறம் யானை. யானையைவிட, வேங்கை பெரிய அளவாக இருப்பதாகச் சுந்தரம் கேலி பேசினார். "தம்பி! உனக்குப் பதினாறு அடி, வேங்கையைப்பற்றித் தெரியாது! அது இது' என்று கூறிச் சமாளித்துக்கொண்டேன். எப்போதுமே எனக்கு ஓவியம் என்றால் மிகுந்த விருப்பம். நமது தோழர்களில் பலருக்கு வீண்செலவு என்று தோன்றினாலும்கூட ஒவ்வொரு மாநாட்டிலும் ஓவியக்காட்சி நடத்தச் சொல்லி வற்புறுத்துவதும், இந்த விருப்பம் காரணமாகத்தான் நடுத்தர நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் ஓவியக்காட்சி மூலம் நல்லறிவு பரப்பும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆவல். ஓவியக் கண்காட்சி, நாடகம் எனும் இந்த இரண்டும் ஒப்பற்ற பலனளிக்கத்தக்க முறைகள் என்பதிலே அநேகமாக ஒருவருக்கும் சந்தேகம் எழாது என்று கருதுகிறேன்.

27-4-1964

இன்று காலையில், சிறைத் துணை மேலதிகாரி, பார்த்தசாரதியை அழைத்துவரச் செய்து, இனி காலை 7-30 மணியிலிருந்து மாலை 4-30 மணிவரையில் சிறை உடையில்தான் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்பினார் - கண்டிப்புடன். காரணம், இங்கு சில தோழர்கள் காலையில் சிறை உடை அணியாமல், கீழே நின்று பேசிக்கொண்டிருந்தார்களாம். அதை அதிகாரி பார்த்துவிட்டிருக்கிறார். எனவே கண்டிப்பான உத்திரவு அனுப்பிவைத்தார்.

சிறையில் ஏற்பட்டுவிடும் எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்கும், சிறை அதிகாரிகளின் பேரில் வருத்தப்பட்டுக்கொள்வதிலோ, கோபித்துக்கொள்வதிலோ, பொருளும் இல்லை, பலனும் இல்லை என்று வருத்தப்பட்டுக்கொண்ட தோழர்களுக்குக் கூறினேன். அரசு நடத்துபவர்கள், அரசியல் கைதிகளை நடத்தும் முறை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு மேற்கொண்டாலொழிய, சிறையில் அமுல் இதுபோலத்தான் இருக்கும்.

இன்று பத்திரிகை பார்த்துத்தான் தெரிந்துகொண்டோம், கைது செய்து கொண்டுவரப்பட்ட, மாநகராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணன் சிறையில் தாக்கப்பட்டார் என்ற செய்தியை. பதறினோம்; வருத்தப்பட்டோம். முழுத் தகவல் கிடைக்கவுமில்லை; நிகழ்ச்சிக்குக் காரணம் கூறுவாருமில்லை.

சிறையில், புதிய ஜெயிலர் வந்திருக்கிறார்; இளைஞர் நல்லவராகக் காணப்படுகிறார். இன்று சிறையில் எங்கள் பகுதிக்கு வந்திருந்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த வேலையில் அமர்ந்தாராம். இது வரை சேலம் மத்திய சிறையில் வேலை பார்த்துவிட்டு இப்போது இங்கு வந்திருக்கிறார்; பெயர் குணசேகரன் - திருச்சி மாவட்டமாம்; லால்குடிக்கு அருகே ஓர் ஊர்.

சேலம் சிறையில் மூன்று ஆண்டு வேலை பார்த்தான பிறகு, மற்ற இடங்களில் வேலை பார்ப்பது எளிதுதான் என்று நான் கூறினேன் - அவரும் சிரித்துக்கொண்டு, "ஆமாம்' என்றார். சேலம் சிறை, திரும்பத் திரும்பச் சிறைப்படும் கைதிகள் நிரம்பிய இடம். பல முறை சிறைக்கு வருபவர்களை, கருப்புக் குல்லாய் என்பார்கள்.

இன்று மெயில் பத்திரிகையில் ஒரு செய்தி பார்த்து, ஒரு கணம் பதறிப் போனேன்; இந்தி எதிர்ப்பு அறப்போரினை நான் வெளியே வந்ததும் நிறுத்திட எண்ணுவதாகவும், என்னை வந்து பார்த்த முக்கியமான நண்பர்கள் சிலரிடம் இதுபோல நான் சொல்லி அனுப்பியதாகவும், மெயிலில் சேதி வந்திருந்தது. நான் நினைத்துக்கூடப் பார்த்திராத ஒன்றை, இப்படித் துணிந்து, மெயில் இதழ் வெளியிடுவது கண்டு நான் பதறிப்போனேன். இவ்விதமான பத்திரிகைத் தாக்குதல்களிலிருந்து தப்பிப் பிழைத்து, இந்த அளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, பெருமிதம் எழத்தான் செய்கிறது. "அண்ணா! இந்தப் பத்திரிகைகளில் வெளிவருவதை நமது தோழர்கள் நம்ப மாட்டார்கள்; ஏனெனில், நீங்கள்தான் முன்பே சொல்லி விட்டிருக்கிறீர்களே, இந்தி எதிர்ப்பு அறப்போர் சம்பந்தமாக, நம் நாடு, முரசொலி எனும் ஏடுகளில் வருவதைத் தவிர மற்ற எதனையும் நம்ப வேண்டாம் என்று' என்று அரக்கோணம் ராமசாமி கூறினார். அவர் சொன்னதுபோலவே, நமது கழகத் தோழர்கள் பத்திரிகைகள் இட்டுக்கட்டி வெளியிடுபவைகளை நம்பமாட்டார்கள் என்ற உறுதி எனக்கும் இருக்கிறது என்றாலும், பத்திரிகைகள் திட்டமிட்டு இந்தக் காரியத்தை செய்து வருவதுபற்றி மிகுந்த கவலை எழத்தான் செய்கிறது; கழகத்துக்கு ஊறு தேடுகிறார்களே என்பதல்ல எனக்குள்ள கவலை, ஜனநாயக முறை வெற்றி பெறுவதைக் குந்தகப்படுத்துகிறார்களே என்பதுதான். இதே நாட்டிலே இனி ஒரே கட்சி ஆட்சிதான் என்று அறிவித்துவிட்டால்கூட நிலைமை எத்துணையோ நல்லதாக இருக்கும்; ஜனநாயகம், எதிர்க் கட்சி; பொதுத் தேர்தல்; பேச்சுரிமை என்று உதட்டளவில் கூறிக் கொண்டு, செயலில், எதிர்க் கட்சிகளே வளர முடியாதபடி நடந்துகொண்டு வரும் போக்குதான் மிகவும் ஆபத்தானது. இது குறித்து நண்பர்களுடன் இன்று பேசிக்கொண்டிருந்தேன்.

28-4-1964

தமிழகத்தில், சட்ட மன்ற பாராளுமன்ற தொகுதிகளைத் திருத்தி அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான வெளியீடு, குழு உறுப்பினர் மதியழகனுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. நமது நண்பர்கள் இதனை மிகுந்த ஆவலுடன் ஆராய்ந்து பார்க்கலாயினர். எந்தெந்தத் தொகுதிகளில் என்னென்ன மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டிருக் கின்றன. அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகம் என்னென்ன என்பதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பல தொகுதிகளைப் பிய்த்து எடுத்து, சில சில பகுதிகளை வேறு தொகுதிகளுடன் ஒட்டவைத்திருக்கிறார்கள். சில பொதுத் தொகுதிகளை இப்போது தனித் தொகுதியாகவும், சில தனித் தொகுதிகளைப் பொதுத் தொகுதியாகவும் மாற்றிவிட்டிருக்கிறார்கள். சில தொகுதிகளின் அமைப்பு ஜாதி உணர்ச்சிக்கு இடம் தருவதாகவும் இருக்கிறது. இந்தப் பிரச்சினையை, நமது கழக, மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் கொண்ட ஒரு கூட்டத்தில், தொகுதி அமைப்புக்குழு உறுப்பினர்களான மதியழகனும் ராஜாராமும் எடுத்து விளக்கிக் கலந்து பேச வேண்டும் என்று நினைக்கிறேன். விரைவில் இதுபற்றி மிகத் தீவிரமான கவனம் செலுத்த வேண்டும். புதிதாகத் தொகுதிகளை அமைக்கும்போது, இதுபோன்ற ஒட்டு வெட்டு ஏற்படத்தான் செய்யும். ஆனால், இது வெறும் வசதி காரணமாக மட்டும் அமைந்துவிடுவதில்லை; கட்சி, ஜாதி, மேட்டுக்குடி ஆகியவைகளால் எழுப்பிவிடும் உணர்ச்சிகளும் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. இவைபற்றி எல்லாம் கழகத் தோழர்கள் கவனம் செலுத்த வேண்டும். தொகுதிகளை வெட்டி ஒட்டி உருவை மாற்றிவிடுவதன் மூலம், அதனை ஒரு கட்சியின் செல்வாக்கிலிருந்து மற்றோர் கட்சியின் செல்வாக்கிற்குள் கொண்டு வந்துவிட முடிகிறது; குறைந்தபட்சம் அதற்கான முயற்சியாவது நடைபெற வழி ஏற்பட்டுவிடுகிறது. இத்தகைய உள்நோக்கங்கள் பற்றி ஆராய்ந்தறிந்து, பொது மக்களிடம் நாம் விளக்கிச் சொல்ல வேண்டும் என்று மதியழகனிடம் கூறினேன். மே, இரண்டாவது மூன்றாவது வாரத்தில், தொகுதிக்குழு கூடும்போது, இதுபற்றி வாதாடும்படி, மதியழகனிடம் சொல்லியிருக்கிறேன். இந்தக் குழுவில், காங்கிரஸ் கட்சியினரே, பெருவாரியானவர்கள்; நமது கழக உறுப்பினர், இருவர் மட்டுமே. எனவே, கழக உறுப்பினரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் என்று உறுதி இல்லை. கடமையைச் செய்துவிட்டு, நிலைமையை மக்களிடம் எடுத்து விளக்க வேண்டும். காஞ்சிபுரம் தொகுதியைப் பொறுத்தமட்டில், கீழ்கதிர்ப்பூர், மேல்கதிர்ப்பூர், விஷார், நரப்பாக்கம், விப்பேடு, திருப்பருத்திக்குன்றம், செவிலிமேடு, கோழிவாக்கம், அய்யங்கார்குளம், ஓரிகை, சின்ன அய்யங்குளம், தேனம்பாக்கம், நெல்வாய், தண்டலம், ஆரியம்பாக்கம், தொடூர், கூத்தரம்பாக்கம், பூண்டித்தாங்கல், காரை, ஈஞ்சம்பாக்கம், வேடல், இலுப்பப்பட்டு, ஆட்டுப்புத்தூர், சிறுவேடல், அத்திவாக்கம், ஆலப்பாக்கம், திருமல்பட்டு, மும்மல்பட்டு, சிங்காடிவாக்கம், கரூர், ஏனாத்தூர், வையாவூர், உழவூர் ஆகிய ஊர்களை வெட்டி எடுத்து, சிலவற்றை உத்திரமேரூர்த் தொகுதியிலும், சிலவற்றைக் குன்றத்தூர் தொகுதியிலும் கொண்டுபோய் இணைத்துவிட்டிருக்கிறார்கள். இதுபோல, ஒவ்வொரு தொகுதியிலும் புகுத்தப்பட்டுள்ள மாறுதல்கள் குறித்து நமது கழகத் தோழர்கள் கருத்துடன் கவனித்துப் பார்க்க வேண்டும். தொகுதிகளைத் திருத்தி அமைப்பதிலே அரசியல் நோக்கமும், கட்சி நோக்கமும் இருக்க முடியுமா என்று சிலருக்கு ஐயப்பாடு எழக்கூடும். இந்த இரண்டு நாட்களாக இது சம்பந்தமாக ஒரு நிலைமை, பத்திரிகைகளில் வந்தபடி இருக்கிறது. அது குறித்தும் இங்கு நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஆட்சியிலே, கன்சர்வேடிவ் கட்சி இருந்திடும்போதுகூட, இலண்டன் மாநகராட்சி மட்டும், தொழிற்கட்சியிடமே இருந்து வருகிறது. இது கடந்த முப்பது ஆண்டுகளாக உள்ள நிலைமை. இந்த நிலைமையை, ஒருவிதமான தலைவலி என்று கன்சர்வேடிவ் கட்சி கருதிற்று; மாற்ற முனைந்தது. அதற்காக, இலண்டன் மாநகராட்சியின் தொகுதிகளை விரிவுபடுத்தி, புதிய இடங்களை இணைத்துப் புதிய தொகுதிகளை அமைத்தது. இவ்விதமாகப் பரப்பும் அமைப்பும் புதிதாக்கப்பட்டால், முப்பது ஆண்டுகளாக தொழிற்கட்சிக்கு இருந்துவரும் ஆதிக்கம் ஒழிந்துவிடும் என்பது கன்சர்வேடிவ் கட்சியின் எண்ணம். இந்த உள்நோக்கத்தைத் தொழிற்கட்சி மக்களிடம் எடுத்து விளக்கிற்று. சர்க்காரின் போக்கைக் கண்டித்தது. என்றாலும், இப்போது நடைபெற்ற தேர்தலில், இவ்வளவு திட்டமிட்டும், கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெறவில்லை. மறுபடியும் தொழிற்கட்சியிடமே இலண்டன் மாநகராட்சி மன்ற ஆட்சி வந்து சேர்ந்தது. இங்கு, தொகுதிகளைத் திருத்தி அமைப்பதால் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டாலும், நமது கழகம் முன்னதாகவே அவைகளைக் கணக்கெடுத்துப் பணியாற்றினால், தொழிற் கட்சி வெற்றி ஈட்டியதுபோல், வருகிற பொதுத் தேர்தலிலும் கழகம் வெற்றிபெற முடியும். எதற்கும் நிலைமைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தொகுதிகளை திருத்தி அமைப்பது பற்றிய பிரச்சினை பற்றிய பேச்சு, அடுத்த பொதுத் தேர்தல் பற்றியதாக வளர்ந்தது. பல தொகுதிகளைப் பற்றியும் பிரச்சார முறைகள் பற்றியும் விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

21-4-1964

"அல்லும் பகலும்' என்ற புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். ஏழைகள் அமைத்துக்கொண்டுள்ள குடிசைகளை அப்புறப்படுத்த, அடிமனைச் சொந்தக்காரர் போலீசின் உதவியைப் பெறுவதிலிருந்து துவங்கி, கைது, கலகம், சிறை, துப்பாக்கிச்சூடு, தப்பி ஓடுதல் என்னும் கட்டங்கள் கொண்டதாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. பொதுவுடைமைக் கட்சியை ஆதரிப்பதாக இந்த ஏடு இருந்தபோதிலும், "ஏழைகளின் உள்ளப் போக்கை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதில்' மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது. பொதுமக்களின் போக்கறியாத போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளால், நிலைமை எப்படி எப்படிச் சீர்குலைகிறது என்பதனை, எவரும் ஒப்புக்கொள்ளத் தக்க விதமாக இந்த ஏடு எடுத்துக்காட்டியிருக்கிறது. நிகழ்ச்சி, அமெரிக்காவில் நடப்பதாகக் கதை. எனவே, கிருஸ்தவ மார்க்கத்தைப் பற்றியும் இதிலே இங்கும் அங்குமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. ஏழைகளின் கஷ்டத்தைத் துடைக்க, தொழிற்சங்கம் நடத்துபவர்கள், பொதுவுடைமைக் கட்சியினர் மட்டுமல்லாமல், உண்மையான கிருஸ்தவர்களும் முனைந்து நிற்கிறார்கள். "எங்களுக்குப் பொதுவுடைமைக் கட்சியின் கோட்பாடும் தெரியாது, சட்ட நுணுக்கமும் புரியாது, ஆனால் இதயம் இருக்கிறது; ஏழை படும்பாடும் கஷ்டமும் புரிகிறது. அன்பு போதனைதான் கிருஸ்தவ மார்க்கம்; எனவே ஏழைகளிடம் அன்பு காட்டுவது கிருஸ்தவரின் கடமை என்று உணருகிறோம், செய்கிறோம்,'' என்று ஏழைக்கு உதவுபவர்கள் பேசுவதாகக் குறிப்பிடும் பகுதி, உருக்கம் நிரம்பியதாக இருக்கிறது. ஏழ்மை, அறியாமை, பிணி, கொடுமை இவைகளிலே சிக்கி உழன்ற போதிலும், தொழிலாளர்களிடம், அக்ரமத்தை எதிர்த்து போரிடும் உணர்ச்சி உள்ளத்தின் அடித்தளத்திலே எப்போதும் கொழுந்துவிட்டு எரிந்தபடி இருக்கிறது என்ற கருத்து, நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.

என் கை வலிக்கு இரண்டு நாட்களாய் புதிய மருந்து போட்டுக்கொண்டு வருகிறேன். சிறை அதிகாரிகளில் ஒருவர் சொன்ன யோசனை இது. இப்படிப்பட்ட வலி போக, தென்னை மரக்குடி எண்ணெய் தடவ வேண்டும் என்று சொன்னார். மாயவரத்திலிருந்து பரிமளம் அந்த எண்ணெய் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். இரண்டு நாட்களாக, அதைத் தடவி, சுடுசோறு ஒத்தடம் கொடுத்துக்கொள்கிறேன். ஒரு வாரம் கழித்துத்தான், ஏதேனும் இதனால் பலன் இருக்கிறதா என்பது தெரிய முடியும்.

இரவு வலி எடுத்தால், புலித்தைலம் தடவிக்கொள்கிறேன். இன்றுகூட அந்த மருந்து தடவிக்கொண்டு, அது ஒருவிதமான விறுவிறுப்பை ஏற்படுத்தியதும் உறங்கச் செல்கிறேன்.