அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஆட்சியாளர் மனப்போக்கு
2

30-4-1964

இன்று மாநகராட்சி மன்ற உறுப்பினர், கழகத் தோழர் க. பாலன், ஏதோ கலவர வழக்கு சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு, சிறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்தேன். பாலனைப் பார்க்க இயலவில்லை. விரைவில் ஜாமீனில் போகக்கூடுமென்று கூறுகிறார்கள். உட்பகுதியில் இருப்பதாகத் தெரிகிறது. மாநகராட்சிமன்ற இடைத் தேர்தலின்போது கலாம் விளைவித்ததாக அவர்மீது வழக்கு தொடர்கிறார்களாம். நானும் பார்க்கிறேன். தேர்தல் கலவரம் காரணமாகக் கைது செய்யப்பட்டு, சிறைக்குக் கொண்டுவரப் பட்டவர்கள் அனைவரும் கழகத் தோழர்கள் அல்லது தொடர்புடையவர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு காங்கிரஸ்காரர்கூட இல்லை. அவ்வளவு ஒழுங்காகத் திட்டமிட்டு, கழகத் தோழர்கள்மீது பழி வாங்கப் படுகிறது. வீணான வழக்குகளிலே சிக்க வைப்பதும், போலீஸ் மூலம் தொல்லைகள் விளைவிப்பதும், கழகத் தோழர்களின் மனதில் பீதியைக் கிளப்பிவிடும், தொல்லை தாங்கமாட்டாமல், கழகத்தைவிட்டு விலகிவிடுவார்கள் என்று ஆளுங் கட்சியினரில் சிலர் நினைக்கக்கூடும். கழகத் தோழர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்பது எனக்குத் தெரியும். இதனால் அவர்கள் குழம்பிப்போகமாட்டார்கள். ஆனால் பொதுமக்கள் மனதிலே அந்தப் போக்கு ஒருவிதமான கிலியை ஏற்படுத்தத்தான் செய்துவிடும். வீண் வழக்குகளைத் தொடுக்கும்போது, கழகம் பொதுமக்களிடம் முறையிட்டு, நிதி திரட்டி வழக்காட வேண்டும். அவ்விதம் செய்ததில், பலமுறை நமது கழகத் தோழர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளிவிட்டிருக்கின்றன - கழகத் தோழர்கள் குற்றமற்றவர்கள் என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஷேக் அப்துல்லா, பண்டித நேருவைச் சந்தித்துப் பேசிடும் நிகழ்ச்சி குறித்த செய்தியை, மிக்க ஆவலோடு படித்துக் கொண்டிருந்தோம்.

பேச்சின் விளைவு எப்படி இருக்கும் என்பது உடனடியாகக் கூறிவிடக் கூடியது அல்ல என்றாலும், காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத்தின் மனப்போக்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் பேச்சு இதனை நன்கு புரியும்படி செய்துவிட்டிருக்கிறது.

ஷேக் அப்துல்லா வருவதற்கு முன்னதாகவே, பல ஆயிரக் கணக்கான மக்கள் கொண்ட ஒரு ஆர்ப்பாட்ட அணிவகுப்பு, பாராளுமன்றத்தின் முன்பு நடத்தப்பட்டிருக்கிற செய்தியைப் பார்த்தோம். அந்த அணி வகுப்புக்கு, காஷ்மீரைச் சார்ந்த ஜனசங்கத் தலைவர் தோக்ரா தலைமை வகித்திருக்கிறார்; "அப்துல்லாவைச் சிறையில் தள்ளு!' என்பது அணிவகுப்பின் முழக்கங்களில் ஒன்று.

இந்தப் பின்னணிக் கீதத்துடன், சமரசப் பேச்சு தொடங்கியிருக்கிறது.

எனக்குத் தெரிந்தவரையில், ஷேக் அப்துல்லாவிடம் பண்டிதரும் ஆளுங்கட்சியினரும் பேசுவதற்கு முன்பாகவே ஜெயப்பிரகாஷ் நாராயணாவும், வினோபாவும் பேசி, ஒரு சமரசத் திட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும் - அந்த சமரசத் திட்டத்தின் மீது, பண்டிதருடன் பேச்சு நடத்த வேண்டும். என்றாலும், பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தப் பிரச்சினையை அதற்குத் தேவையான நிதானத் தன்மையுடன் பரிசீலிப்பார் என்று நம்புகிறேன். ஒரு வாரத்தில் இது பற்றிய வடிவம் ஓரளவுக்குத் தெரியக்கூடும் என்று எண்ணுகிறேன்.

கம்யூனிஸ்டு கட்சியிலே ஏற்பட்டுவிட்ட "பிளவு' விரிவாகி விட்டதற்கான நிகழ்ச்சிகள் பெருகிவிட்டிருக்கின்றன. இரு சாராருமே, கம்யூனிஸ்டு கட்சி என்ற பெயருடன் இரண்டோர் ஆண்டுகள் வேலை செய்வார்கள்போலத் தெரிகிறது. இது பொதுமக்கள் சந்தித்தாகவேண்டிய புதிய குழப்பமாகிவிடுகிறது. கம்யூனிஸ்டு கட்சியின் எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியை அடுத்த தேர்தலில் வெகுவாக ஒன்றும் செய்யாது என்ற எண்ணம், இப்போதே காங்கிரஸ் வட்டாரத்திலே எழும்பிவிட்டது. இதனை எடுத்துக்காட்டுவதுபோல, கேரள முதலமைச்சர் சங்கர் பேசிய பேச்சு பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. கட்டுக் கோப்பான கட்சி, முறை நிரம்பிய கட்சி, தனித் தலைவர்களை நம்பாமல், அமைப்புக்கே முதலிடம் தரும் கட்சி, பிரச்சினைகளை விவாதிப்பதிலே துளியும் சளைக்காத கட்சி, வெளியே பிளவுகள் தெரிய ஒட்டாமல் தன்னைத்தானே கட்டிக் காத்துக்கொள்ளும் கட்சி என்றெல்லாம் பெருமை பேசுவார்கள் கம்யூனிஸ்டு கட்சியைப்பற்றி. நமது கழகத் தோழர்களிலே சிலருக்குக்கூட, கம்யூனிஸ்டு கட்சிபோல முறையோடு நமது கழகம் இயங்க வேண்டும் என்று கூறுவதிலே ஆர்வம் பொங்குவது உண்டு. இப்போது கம்யூனிஸ்டு கட்சியிலே ஏற்பட்டுவிட்ட நிலைமையைப் பார்த்த பிறகு, அந்தக் கட்சியை நடத்திவரும் முறையில் என்னென்னக் கோளாறுகள் உள்ளன என்பதனைத் தோழர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். இது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் சொன்னேன், நாம், இரண்டு வெவ்வேறான நிலைமைகளையும் சந்தித்திருக்கிறோம் - சமாளித்திருக்கிறோம், குழப்பம் ஏற்படாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறோம் - இறுதியில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். திராவிடர் கழகத்திலிருந்து நாம் வெளியேறினோம் - சிறுபான்மையினர் அல்ல - நாம் விரும்பி இருந்தால், திராவிடர் கழக அமைப்பே நம்முடைய நிர்வாகத்தில் வரவேண்டும் என்று வாதாடி இருக்கலாம் - சிலர் என்னிடம் அதுபோல வற்புறுத்தியும் பார்த்தார்கள் - ஆனால், நாம் வாதிடுவது, வழக்கிடுவது, வம்பு வல்லடிக்குச் செல்வது என்பவைகளிலே காலத்தையும் கருத்தையும் செலவிட்டுப் பாழடிப்பதைவிட, நமக்குப் பிடித்தமான கொள்கைகளுடன் ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்திக்கொண்டு, நமது அறிவாற்றலை அந்த அமைப்பின் வெற்றிக்காகப் பயன்படுத்தி வருவோம் - நம்முடைய நோக்கம் தூய்மையானதாக இருந்தால், பொதுமக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று திட்டமிட்டுத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பைத் துவக்கித் தொண்டாற்றினோம் - வெற்றியும் பெற்றோம். எங்களுடையதுதான் உண்மையான திராவிடர் கழகம் - பழையவர்களிடம் இருப்பது போலித் திராவிடர் கழகம் என்ற வம்பிலே நாம் ஈடுபடவில்லை. எனவே தான், இத்துணை ஏற்றத்துடன் நமது கழகம் இன்று ஒளி விடுகிறது. ஒரு அமைப்பிலிருந்து பிரிந்து வந்து, புதிய அமைப்பு துவக்கி, அதனை ஏற்றமடையச் செய்வதிலே வெற்றிபெற்றோம், அதுபோலவே, நமது அமைப்பிலிருந்து சிலர் விலகினார்கள் - விசாரப்பட்டோம், ஆனால் விரோதத்தைக் கக்கிக்கொண் டிருப்பதிலேயே, காலத்தைப் பாழாக்கிக்கொள்ளவில்லை - நிதானம் இழக்காமல், நெறி தவறாமல், பணியாற்றி வந்தோம். நமது அமைப்பு, புதிய வடிவுடனும் பொலிவுடனும் இன்று இயங்குகிறது.

ஆக, இரு வெவ்வேறான நிலைமைகளிலும், நாம் நம்முடைய நோக்கத்தின் தூய்மை காரணமாகவும், தொண்டின் நேர்த்தி காரணமாகவும் வெற்றி பெற்றோம்.

திராவிட கழகத்திலிருந்து நாம் பிரியும்போது, நமக்கு இருந்த நிலைமை நமக்கும் நாட்டுக்கும் புரியும். கழகத்தின் நிர்வாகத்தில் ஒரு நகராட்சிகூடக் கிடையாது. தி. மு. கழகமாக வளர்ந்து, சட்டசபையில் 15-இடங்கள், பாராளுமன்றத்தில் இரண்டு இடங்கள், சென்னை மாநகராட்சி நிர்வாகம் எனும் இவைகளைப் பெற்றோம். நாங்கள்தான் உண்மையான திராவிடர் கழகம் என்ற வம்பு வல்லடியில் ஈடுபட்டிருந்தால் என்ன கிடைத்திருக்கும், வளர்ச்சி எந்த முறையில் இருந்திருக்கும் என்பதை, நான் சொல்லத் தேவை இல்லை.

திராவிட முன்னேற்றக் கழக வெற்றி, திராவிடர் கழகத்தை முறையாக நெறியாக நடத்தினால், எத்தகைய அரசியல் நிலைமை உருவாகி இருக்கும் என்பதை, அரசியல் அறிந்த அனைவரும் அறிந்துகொள்ளச் செய்தது. நிதானத்துடனும், பொறுமை யுடனும், பொறுப்புடனும் செயலாற்றுவதற்குப் பலன் கிடைத்தே தீரும் என்ற பாடத்தைப் பலரும் பெறச் செய்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து சிலர் பிரிந்து போயினர் - திட்டமிட்ட விளம்பர பலத்துடன் புதிய அமைப்பு கண்டனர் - வழக்கம்போல, தி. மு. கழகத்தின் முதுகெலும்பு முறிந்துவிட்டது, ஜீவன் போய்விட்டது என்று பத்திரிகைகள் பாடிவிட்டன. நாமோ, பகைக்காமல், பதறாமல், வியர்வையைப் பொழிந்து பணியாற்றினோம்; பிரிந்தவர்கள் நம்மோடு இருந்தபோது சட்டசபையில் நாம் 15-அவர்கள் போன பிறகு சட்டசபையில் நாம் 50-பாராளுமன்றத்தில் முன் 2-இப்போது 8-மீண்டும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் நம்மிடம் - புதிதாகப் பத்துக்கு மேற்பட்ட நகராட்சிகள் நம் வசம்.

நாம் ஒரு அமைப்பிலிருந்து பிரிந்து வந்தபோதும் சரி, நமது அமைப்பிலிருந்து சிலர் பிரிந்து சென்றபோதும், சரி, நாம் நமது பாதையை ஒழுங்காக்கிக்கொண்டு, மனிதப் பண்பை இழக்காமல், நம்பிக்கையுடன் நெறியாகப் பணியாற்றி வெற்றி பெற்றிருக்கிறோம்.

இதுபற்றி இங்கு நான் எடுத்துச்சொன்னபோது, நண்பர்கள் மெத்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.

1-5-1964

மேதினி போற்றிடும் மே தினம், வெளியே இருந்திருந்தால், ஏதேனும் ஓரிடத்தில் மேதினம்பற்றிப் பேசி இருப்பேன். இந்த ஆண்டு மே தினம், இல்லாமை, அறியாமை எனும் கொடுமை நிரம்பி உள்ள காரணத்தால் சூழ்நிலை பாழாகி, கழுத்தறுப்பவன், கன்னம்வைப்பவன், கைகால் ஒடிப்பவன், பூட்டு உடைப்பவன், கள்ளச்சாராயம் காய்ச்சுவோன், கத்திரிக்கோல் போடுவோன் என்னும் இன்னோரன்ன பிற வழிதவறிய மக்களை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலையில், ஒரு கொட்டடியில் இருந்துகொண்டு இருக்கின்றேன். இங்கு நான் பார்க்கிறேன். நடத்திச் செல்பவர்கள் அமையாத காரணத்தாலேயே கெட்டவழி சென்றுவிட்டவர்களை; மீண்டும் சமூகத்தில் இடம் கிடைக்காது என்று மனம் ஒடிந்துபோய், "கைதி ஜாதியில்' சேர்ந்து விட்டவர்களை; இங்கு உள்ள ஆயிரத்துக்குமேற்பட்ட கைதிகளில், ஏ. பி. வகுப்புக் கைதிகள் தவிர, மற்றவர்கள் சொந்தத்தில் வீடு, வாசல், தொழில் ஏதுமற்ற ஏழ்மை நிலையினர். வயிறாரச் சாப்பிட்ட நாட்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். குடிசையிலே வாழ்ந்தவர்களே பெரும்பகுதியினர்.

சமூகத்திலே ஒரு பிரிவினர் இதுபோல் ஆகாதபடி தடுத்திட, சமூக அமைப்பிலேயும் பொருளாதார அமைப்பிலேயும் புரட்சி கரமான மாறுதல் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை உலகம் உணர்ந்திடச் செய்வதிலே மே தினம் பெருமளவு வெற்றி பெற்றிடுகிறது.

வெளியே இல்லையே இந்தத் திருநாளை கொண்டாட என்று ஒருகணம் எண்ணினேன் - ஏக்கத்துடன் - மறுகணமோ, இல்லை, இல்லை, இன்று வெளியே இருந்து கடற்கரைக் காற்றின் இனிமையைப் பெற்றுக்கொண்டே பாட்டாளி படும்பாடுகள் பற்றிப் பேசுவதைவிட, பாட்டாளிகளாகவும் இருக்க முடியாமல், வழி தவறிக் கெட்டு, கைதிகளாகிவிட் டுள்ளவர்கள் அடைபட்டுக் கிடக்கும் சிறையில் இருந்து கொண்டுதான், மே தினம்பற்றிச் சிந்திக்க வேண்டும் - அதுதான் பொருத்தம் என்று எண்ணிக் கொண்டேன்.

பாட்டாளிகளின் மனப்பான்மையில் புரட்சிகரமான மாறுதல் ஏற்படும் முறையில் பிரசாரம் செய்வதில் நாம் முனைந்திருந்தபோது, அந்தப் பிரசாரத்தை நாத்தீகப் பிரசாரம் என்று கூறிப் பலரும் தாக்கிவந்த நிலைமைபற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். தொழிலாளர்களிடம் மேலும் அதிகமான அளவு தொடர்புகொள்ளவேண்டும். புதிய புதிய தொழிற்சங்கங்கள் அமைக்க வேண்டும் என்பதுபற்றி அன்பழகன் வலியுறுத்தினார். இப்போது, நமது கழகத் தோழர்களில் குறிப்பிடத்தக்க சிலர், இந்த முனையில் நல்ல பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பது குறித்து, மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம்.

2-5-1964

இன்று, தொகுதி திருத்தி அமைக்கும் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளத்தக்க முறையில், தன் விடுதலை நாள் அமையுமா என்று அறிந்துகொள்ள மதியழகன் சிறை மேலதிகாரியிடம் பேசிவிட்டு வந்தார். குறிப்பிட்டு ஏதும் சொல்ல அதிகாரி மறுத்து விட்டாராம். மேலும் சிறை அதிகாரிகளின் நோக்கம், விடுதலை நாளை முன்கூட்டித் தெரிவிக்கக்கூடாது - சிறைவாயிலில் வரவேற்புகள் நடக்க விடக்கூடாது என்பதாக இருப்பதாகத் தெரிகிறது. விடுதலை, எதிர்பாராத முறையில் இருக்கும்போலத் தெரிகிறது. எப்படியும், குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வசதி கிடைக்கும் என்று மட்டுமே கூறமுடியும் என்று சிறை அதிகாரி கூறியதிலிருந்து மதி, மே முதல் வாரம் முடிவடைவதற்குள் விடுதலை செய்யப்படலாம் என்று கருதுகிறோம்.

சிறைவாயிலில் வரவேற்பு நடத்தவிடக்கூடாது என்று ஏன் எண்ண வேண்டும், இது என்ன போக்கு என்று நண்பர்கள் வருத்தப்பட்டுக்கொண்டார்கள். இதுபோன்ற பல பிரச்சினைகளில், இன்றைய ஆட்சியினர் கலியாணத்தைத் தடுக்க சீப்பை ஒளித்து வைத்த புத்திசாலியாகத்தான் நடந்து கொள்ளுகிறார்கள் என்று நான் சமாதானம் கூறினேன்.

உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் திருநாள், மே தினம். இந்த ஆண்டு, இந்தத் திருநாளில், கம்யூனிஸ்டு கட்சியினர் இரு பிரிவுகளாகி, தனித்தனியாக மே தினம் கொண்டாட வேண்டி ஏற்பட்டுவிட்டிருப்பது வருந்தத்தக்க நிகழ்ச்சியாகும். தொடர்ந்து இந்த நிலை இருக்கும் என்பது, கம்யூனிஸ்டு தலைவர்களின் பேச்சிலிருந்து தெரிகிறது.

கம்யூனிஸ்டு கட்சியின், எந்த ஒரு பிரிவுக்கும் தமது ஆதரவை அதிகாரப்பூர்வமாக, நண்பர் ம. பொ. சி. அளிக்க வில்லை என்றாலும், இந்த மே விழாத் தொடர்பான கூட்டத்தில் - ஓட்டல் தொழிலாளர் மாநாட்டில் - ராமமூர்த்தியுடன் இணைந்து கலந்துகொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி எதேச்சாதிகாரத்தை வளர்ப்பதுபற்றிக் கண்டித்துப் பேசி, காங்கிரசிடம் உறவு கொண்டாடிச் சந்தர்ப்பவாதிகள் சலுகைகளைப் பெறுவதையும் எடுத்துக்காட்டி இருக்கிறார். ம. பொ. சி. யின் இந்தப் போக்கு எந்த முறையிலும், அளவிலும், இனி வளரும் என்பது தெரியவில்லை. போகப் போகத்தான் தெரியும் என்று எண்ணுகிறேன்.

சோஷியலிஸ்டு கட்சியின் ஒரு பிரிவினர், ராமமூர்த்தியின் கம்யூனிஸ்டு பிரிவுடன் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. இந்த நிலைமையும், உறுதியான வடிவம் பெறுமா என்பது புரியவில்லை.

தென் ஆற்காடு மாவட்டத்தில், மறியலில் ஈடுபட்ட கழகத் தோழர்களை, துரிதமான விசாரணை நடத்தி, மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதித்துவிட்டிருக்கிறார்கள். சட்ட மன்ற உறுப்பினர்கள் சண்முகம், ராஜாங்கம், தங்கவேல் மூவரும் சிறை புகுந்துள்ளனர்.

இதுபோல உடனுக்குடன் விசாரணை நடத்தி, வழக்கு காலத்தை நீடித்துக்கொண்டே போவதும், தோழர்கள் "காவலில்' வாட்டப்படுவதும் வருந்தத்தக்கதாக இருக்கிறது என்பதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

எப்படியும், நான் விடுதலை ஆவதற்குள், நண்பர் கோவிந்தசாமியும், மற்றவர்களும், சென்னை சிறைக்குக் கொண்டு வரப்படுவார்கள் என்று கருதுகிறேன்.

இன்று ராணியுடன் என் இரண்டு மருமகப்பெண்களும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நலன்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

அண்ணன்

27-12-1964