அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"ஆட்டம்பாம்'' ஆண்டியப்பன்
1

அரசனும் அமைச்சனும், கருத்துக் கதை -
எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் -
ஆட்சியில் குறைபாடுகள்
அமெரிக்க பால்பவுடர் கள்ள மார்க்கட்டில்

தம்பி!

"மகாராஜா! எனக்குத் தாங்கள் அடிக்கடி புத்திமதி சொல்லி வருவீர்களே, பொறுமைவேண்டும், ஆத்திரம் கூடாது என்றெல்லாம். அந்தக் கவனம் வராமலிருந்திருந்தால், எனக்கு வந்த கோபத்தில், நான் என்னென்னவோ செய்து விட்டிருப்பேன். பல்லைக் கடித்துக்கொண்டிருந்து விட்டேன்.''

"பதறாமல் சொல்லு, யார் என்ன செய்தார்கள்? உனக்கு ஆத்திரம் வருகிறபடி எவன் என்ன பேசினான்?''

"என்னை ஆயிரம் ஏசட்டும் மகாராஜா! பொறுத்துக் கொள்கிறேன். விளைவு என்ன ஆகும் என்பதுபற்றி யோசிக் காமல், புத்தி கெட்டு, என்னைத் தாக்கினால்கூட, சகித்துக் கொள்கிறேன். ஆனால், என் எதிரே, என் காதுபட, நான் ஒருவன் இருக்கிறேன், உங்கள் உப்பைத்தின்று வளர்ந்தவன், உங்கள் பொருட்டு உயிரையும் தரக்காத்துக் கிடப்பவன், உங்களுக்காக எந்த எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ள, தடுத்து ஒழிக்க ஆற்றல் பெற்றவன் என்பதை எண்ணிப் பார்க்காமல், ஏசினால்... மகாராஜா! எப்படித் தாங்கிக்கொள்வேன்...''

"ஏசினானா? யார் அந்த அற்பன்?''

"அப்படிக் கேட்கத்தான், கொதித்து எழுந்தேன்! அற்பனே! அரசனைக் குறைகூற உனக்கு ஏதடா அருகதை? குறைகூறும் உன் நாவைத் துண்டித்தெடுத்து, நரிக்கு விருந்திடுவேன். மாற்றானை ஓட்டிய மாவீரன், மண்டலத்தை அடிமைப் பிடியிலிருந்து மீட்டிட்ட தீரன், களம்பல கண்டு, வெற்றிபல பெற்று, நமது மக்களின் மானம் பறிபோகாதிருக்க வழி அமைத்த மன்னனை, மடையனே! மனம்போல போக்கிலே ஏச, எப்படியடா மனம் துணிந்தது! இந்தக் கேவலச் செயலை விட, எதிரியிடம் கூடிக் குலவிடலாமே! எந்த அரசு முறை பிடிக்கவில்லை என்று ஆயாசப்படுவதாகப் பாசாங்கு காட்டுகிறாயோ, அங்கு உனக்கென்ன வேலை! அந்த இடம், ஏன் உனக்கு, ஓடு, நாட்டைவிட்டு! உதவாக்கரைகளைக்கூட, ஒரு காலத்தில் திருத்திவிடலாம் - பயன்படுத்திக் கொள்ளலாம் - உள்ளத்தில் இத்துணை வஞ்சகத்தைக் கொண்டுள்ள, உன் போன்ற துரோகிகளை விட்டுவைக்கக்கூடாது - என்றெல்லாம் பொறிபறக்கப் பேசத்தான் துடித்தேன். ஆனால் என் செய்வது, தங்கள் ஆணைபற்றிய நினைவு வந்தது, அடங்கிப்போய்க் கிடந்தேன். காவலன் இட்ட கட்டளை, நினைவிற்கு வந்தது கட்டுண்டு கிடந்தேன். வேதனையுடன் வெட்கம்! என் செய்வேன்...''

"ஏசினவன்...?''

"எல்லையப்பன்,''

"தொல்லையப்பன் என்று சொல்! உம்! எல்லையப்பன் எப்போதும் ஏதேனும், உளறிக் கொட்டிக்கொண்டிருப்பதை வாடிக்கை ஆக்கிக்கொண்டான். கிடக்கட்டும். நமது ஆட்சியிலே, குறை காண்பதையே, அவனோர் கலையாக்கிக் கொண்டான். பிழைப்பும் அதுவாகிவிட்டது. சரி - சரி - என்ன கூறினான் - குறை யாது என்கிறான்.''

"ஆட்சி சரியாக இல்லையாம்...''

"கோணலாட்சி! கொடுங்கோலாட்சி! வேறொருவன் ஆட்சி நடத்துவதைக் கண்டாலே, சிலதுகளுக்கு இப்படித்தான், காரணமற்ற சீற்றம், அர்த்தமற்ற ஆத்திரம், தேவையற்ற மனக்குமுறல்...''

"வெள்ளாற்று நீர், மகாராஜா! கரைபுரண்டு, முன்பு, என் கிராமத்தைக்கூடத்தான் அழித்துவிட்டது. விளைநிலம் பாழ்வெளியாகிவிட்டது. வீடுகள்கூட மண்மேடுகளாயின. கால்நடைகள் நூற்றுக்கணக்கிலே மடிந்தன. கஷ்டம் நஷ்டம், எனக்குமட்டுமல்ல, எண்ணற்றவர்களுக்கு வெள்ளம் வர நேரிட்டால், விபரீதம் விளையும் என்று முன்கூட்டியே எடுத்துரைத்தும், கரையைச் சரியானபடி அமைக்கவில்லையே, அதனாலன்றோ இவ்வளவு அழிவு ஏற்பட்டது என்று எண்ணினோர் பலர் - நான் உட்பட, எடுத்துக்கூறியதுகூட நினைவிலிருக்கும்.''

"ஆமாம்...'

"எவருக்கும் விபத்து நேரிட்டால், வருத்தம், ஆத்திரம் ஏற்படத்தானே செய்யும். எனக்கே, ஏற்பட்டதே! நானே தங்களிடம், பதறி ஓடிவந்து, முறையிட்டேன். அந்தச் சம்பவத்தையும், அதுபோன்ற வேறு பலவற்றையும், எடுத்து வைத்துக் கொண்டு, பயல், புட்டுப்புட்டுக் காட்டுகிறான், விவர விவரமாகப் பேசுகிறான், கலகமூட்டுகிறான், தூண்டி விடுகிறான், துடுக்குத்தனமாகப் பேசுகிறான், துளியும் பயமின்றி ஏசுகிறான். "ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட அவதியைக் காட்டி, ஆட்சிக்கு எதிர்ப்பை மூட்டுகிறான்.''

"ஆற்று வெள்ளத்தால், அவதி ஏற்பட்டுவிட்டது. அதை யார் மறுக்கிறார்கள். எங்களுக்குத் தெரியாதா? நாங்கள் முறையிடவில்லையா! ஆனால் அதற்கு, ஒரு வரைமுறை வேண்டாமா? மக்கள் மனையிழந்து, மாடிழந்து, தொழில் அழிந்து, துயரத்தில் விழும்போது, துடிதுடிப்பர், பதை பதைப்பர். இது இயல்பு. இதைக் கண்டறிய, கடுந்தவமியற்றவா வேண்டும்; கடுகளவு அறிவு போதும். இதனை நாங்கள், தங்களிடம் எடுத்துக் கூறாமலா இருந்தோம். ஆனால் எல்லையப்பன், இதைக் காரணமாக்கிக் கொண்டு கொடிய பகையை அல்லவா, கக்கித் திரிகிறான். அறநெறி பரப்ப அமைக்கப்பட்டுள்ள கோட்டங்களில், அறம் மட்டுமல்ல, அறிவையரின் கற்பும் அழிந்துபடுகிறது என்பதை நாங்கள் கூறிடவில்லையா, முன்பு! மக்கள் அதுகுறித்து, மனம் கொதித்துக் கிடக்கிறார்கள் என்பதனை எடுத்துக் கூறாமலா இருந்தோம். தங்கள், மனதுக்குச் சிறிது வேதனை ஏற்படும் என்று அறிந்தும், உண்மை நிலைமையை மறைத்திடலாகாது, ஊரார் உள்ளப்போக்கைக் காட்டியே ஆகவேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், கூட்டாமல், குறைக்காமல், மறைக்காமல், திரிக்காமல், எடுத்துரைத்தோம். அதே விஷயத்தை, எல்லையப்பன், கேட்போர், மிருக உணர்ச்சி பெறக்கூடிய முறையில் பேசுகிறான். "மரக்கட்டைகளா நீவீர், மான உணர்ச்சி அடியோடு மடிந்தே போய்விட்டதா! மதப் போர்வையிலே, மதோன்மத்தன் உலவுகிறான். அவனை அரண்மனையில் உள்ள ஒரு ஆள் விழுங்கி ஆதரிக்கிறான். ஏன் என்று கேட்கத் துணிவு இல்லையா! கேட்டால், என்ன போய்விடும்! தலை உருளும் கீழே என்ற பயமா! கோழைகளே! உங்களுக்குக் கொடி ஒரு கேடா! அஞ்சி அஞ்சிச் செத்திடும் அறிவிலிகளாகக் கிடப்பதைவிட, ஆமையாய், ஊமையாய்ப் பிறந்திடலாமே - அடவிசென்று, புலி அடித்துப்போட்ட மிருகத்தின் இறைச்சித் துண்டைப் பொறுக்கித் தின்று வயிறு நிரப்பிக்கொள்ளும் நரியாகி நத்திப் பிழைக்கலாமே!' - என்றெல்லாம் பேசுகிறான். கேட்போர், வெட்கத்தால் தலைகுனிகிறார்கள், ஒரு கணம்; மறுகணமோ கோபம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது. அரண்மனை இருக்கும் திக்கு நோக்கி நடக்கிறார்கள்... தீப்பொறி உமிழும் கண்களுடன்.''

"அவ்வளவுக்குத் துணிந்துவிட்டனரா, அடங்கிக் கிடந்ததுகள்! குதிரைப் படை, சும்மாவிடும் என்றா எண்ணுகிறார்கள்?''

"தெரியாமற் போகுமா, அவர்களுக்கு. மூன்றாண்டுகளுக்கு முன்பு, குதிரைப்படை வீரர்கள் தாக்கியதால், இறந்துபட்டவர் எண்ணிக்கை இருபது அல்லவோ; அதிலே பத்துப் பேர், கர்ப்பவதிகளாயிற்றே; மகாராஜா! என் மைத்துனியும் மாண்டாள். தங்கள்முன், என் மனைவிகூட மாரடித்து அழுதுநின்றாளே! குனிந்த தலை நிமிராமல், புரண்ட கண்ணீரைத் துடைக்கவும் முடியாமல் நான் கொலு மண்டபத்திலே நின்றுகொண்டிருந்தேன். குழந்தைகள்கூட மிதிபட்டுச் செத்தன என்பதைச் சொன்னேன். குதிரைப் படையினர், கொடுமை செய்கிறார்கள், ஊரே அமளிக் கோலத்தில் இருக்கிறது என்றும் கூறினேன்...''

"உண்மைதான் அழுதுகொண்டே பேசினாய், நினைவிருக்கிறது.''

"அந்த நிகழ்ச்சியை, மகாராஜா! இந்த எல்லையப்பன்! கேட்போர் கண்களில் நீர் கொப்பளித்து, குபுகுபுவென வெளிவரத்தக்க முறையில், எடுத்துப் பேசுகிறான். "பெற்றெடுத்தீர் பேசும் பொற்சித்திரங்களை! போட்டு மிதித்துக் கூழாக்கின, கொற்றவன் அமைத்துள்ள குதிரைப்படை!' என்று அவன் பேசுகிறான். மக்கள், வழியே வருகிற குதிரைப் படை வீரர் மீது பாய்ந்து, அடித்துக் கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறது, அவ்வளவு ஆத்திரமடைகிறார்கள்.''

"எதற்கும் துணிந்துவிட்டார்கள் போலும்! என்னுடைய புதிய வரியைக்கூட, சரிவரக் கட்ட மறுக்கிறார்கள் - கேள்விப் பட்டேன்.

"நானும், முன்பே சொல்லியிருக்கிறேனே, மகாராஜா, வரி, இந்தச் சமயத்தில், இந்த முறையில் விதிப்பது சரியாகாது என்று நான் சொன்னதை அந்த நாசகாலன், எப்படிச் சொல்லுகிறான் என்கிறீர்கள்! வரிகட்டப் பணமில்லாவிட்டால் என்ன, அரண்மனைக்குள்ளே குவிந்து கிடக்கிறது, பொன்னும் மணியும்; புகுந்து எடுத்து வாருங்கள் - வரி கட்டியதுபோக மிச்சம் இருப்பதை வைத்துக் கொண்டு, மருந்தில்லாததால், மடியும் நிலையில் உள்ள மனையாட்டிக்குத் தாருங்கள் - பட்டுச் சட்டை கேட்டு, குட்டுப்பட்டுக் கதறிய பாலகனுக்குக் கொடுங்கள்; ஒரு பத்து நாளைக்காவது, வயிறாரச் சாப்பிடுங்கள் - பிறகு அரண்மனையில் கொள்ளை அடித்த குற்றத்துக்காகத் தூக்குத் தண்டனை தருவார்கள், நிம்மதியாகச் செத்துவிடுங்கள் - என்று பேசுகிறான். மருந்து கிடைக்கத்தான் இல்லை, போதுமான அளவு. விலையும் ஏறியபடி இருக்கிறது. வாங்கும் சக்தி தேய்ந்துதான் போய்விட்டது. பொன்னே! மணியே! முத்தே! என்று செல்லமாகப் பெயரிட்டு அழைத்துக் கொள்ளத்தான் மக்களால் முடிகிறதேயன்றி, பொன்னையும் மணியையும் முத்தையும், கண்ணால் காணவும் முடியத்தான் இல்லை. அனைவருக்கும் இது தெரியும்! அடிக்கடி நானே, தங்களிடம் இதைச் சொல்லியுமிருக்கிறேன். இதை எல்லையப்பன், பகைமூட்டப் பயன்படுத்துகிறான். இப்படிப் பேசாதே, எல்லையப்பா! ஆட்சியைக் குறைகூறாதே, ஆத்திரத்தை மூட்டாதே! என்று அறிவுரை கூறினால், கைகொட்டிச் சிரிக்கிறான்! நாங்கள், நாவிழந்தவர்களாம்! நத்திப்பிழைக்கும் கூட்டமாம்! குறையைக் கண்டும் வெளியே கூறிடப் பயப்படும் கோழைகளாம். கோணலாட்சிக்குக் கொடி தூக்கிக் கும்பி கழுவிடும் குணக்கேடர்களாம்!...''

"அப்படியா சொன்னான் அயோக்கியன்... யார் அங்கே.... வரச்சொல் பாதுகாப்புப் படைத் தளபதியை உடனே.''

"மனம் குளிருகிறது, மகாராஜா! என்ன பேசினாலும், எப்படி ஏசினாலும், மன்னன் நம்மை ஏதும் செய்யமாட்டார் என்று மனப்பால் குடிக்கும் அந்த எல்லையப்பனை, பிடித்திழுத்து வந்து, விசாரித்து, சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்தால்தான், என் மனம் நிம்மதி பெறும்.''

"சித்திரவதைதான் செய்ய வேண்டும். சிரத்தை ஒரே வெட்டிலே கீழே வீழ்த்தினால், பயன். இல்லை. தொடர்ந்து இருக்க வேண்டும், தண்டனை. ஆறு நாட்கள், யானைக்காலில் மிதிபடவிட்டு வைக்க வேண்டும்!''

"ஆறு நாட்களா... ...!!''

"ஆமாம். ஆற்று வெள்ளத்தால் அழிவு ஏற்பட்டது என்று பேசி, ஏசிய குற்றத்துக்காக பத்து நாள் பாம்புகளை விட்டுக் கடிக்கச் செய்யவேண்டும். உயிர் உடனே போய்விடாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்...''

"பத்து நாட்களா...''

"பத்து நாட்கள்; குதிரைப்படை கொடுமை செய்தது என்று பேசிய குற்றத்துக்காக... பிறகு, எட்டு நாட்கள், எரிகிற நெருப்புக் குழிக்கு மேலே, கட்டித் தலைகீழாகத் தொங்கவிட வேண்டும் - வரி எதிர்ப்புப் பேச்சுக்காக...''

"இதோ தளபதியார்! குறித்துக்கொண்டார், தாங்கள் கூறியவற்றை, எல்லையப்பன் இப்போது சந்தைச் சதுக்கத்தில் தான் இருப்பான், ஏதாவது சத்தமிட்டுக்கொண்டு - இழுத்து வரச் சொல்லுங்கள்''

"இழுத்துச் செல்லும் தளபதியாரே! பிடரியில் அறைந்து. இழுத்துச்சென்று, இருட்டறையில் போட்டுப் பூட்டும்... உம்! எல்லையப்பனை அல்ல, இந்த இச்சகம் பேசித் திரியும் பிச்சு மணியை.''

"மகாராஜா! மகாராஜா!.... என்னையா... என்னையா...?''

"வேறு யாரை? அடே, அறிவிலி! இதைக் கேள் எல்லையப்பன், என் ஆட்சி முறைக்கு மாறாக வேறோர் ஆட்சி முறை ஏற்படுத்தவேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறிக் கொண்டு, அந்தக் கருத்துக்குச் செல்வாக்குத் தேடிக்கொண்டு வருபவன். குற்றம் குறைகளைக் கண்டிப்பதைத் தன் கடமையாகக் கொண்டு விட்டான். இளித்துக்கிடந்தால் இன்ப வாழ்வு கிடைக்குமே, அடங்கிக்கிடந்தால் பட்டம் பதவி பெறலாமே என்ற பிச்சைப்புத்தி இல்லாதவன். என்னை அண்டிப் பிழைப்பவன், நீ! உன்னை ஆளாக்கிவிட்டவன், நான்! என் ஏவலைச் செய்வதற்காகக் கூலிகேட்டுப் பெறுபவன் நீ! கொடுத்த கூலிக்குத் தக்கபடி, வேலைசெய்கிறாயா என்று கணக்குப் பார்க்கவேண்டியவன் நான்! தலையாட்டிக் கிடக்கிறாய், தர்பாரில்; மாளிகை கிடைத்தது அதனாலே!! அப்படிப்பட்ட நீ, எல்லையப்பன் என் ஆட்சியில் உள்ள குறைகளைக் காட்டிப்பேசினான் என்று எடுத்துக்காட்டும் பாவனையில், ஆட்சியைக் கண்டித்துப் பேசினாய்! ஆற்றுவெள்ளத்தால் ஏற்பட்ட அவதியைக் கூறி, நான் அல்லலைப் போக்காமலிருந்து விட்டேன் என்று குத்திக் காட்டினாய் அல்லவா! குதிரைப் படையை ஏவி, நான் மக்களைக் கொன்று குவித்தேன் என்று எல்லையப்பன் பேசினான் என்று அவனைக் கண்டித்தாய் - ஆனால் அதே பேச்சோடு பேச்சாக, குதிரைப்படையினர் நடத்திய கொடுமைக்கு நானே காரணம் என்று இடித்துரைத்தாய்! வரிச்சுமையை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று என் எதிரிலேயே பேசுகிறாய் - எல்லையப்பனைக் காட்டிக் கொண்டே! நானென்ன, அறிவற்றவனோ! எல்லையப்பன் கூறிய, குற்றங்கள் அத்தனையையும், நீயும் கூறுகிறாய். அவன் எங்கோ பேசினான்! உனக்கு உள்ள நெஞ்சழுத்தம், என் எதிரிலேயே, பேசுகிறாய்!! ஏடா! மூடா! எல்லையப்பனை நீ ஏசிப்பேசி விட்டதாலேயே, உன்னை நான், ஓர் யோக்யன் என்று கணக்கிட்டுக் கொண்டேன் என்றா கணக்கிட்டுக் கொண்டாய். என் ஆட்சி முறையிலே இன்னின்ன குற்றங்கள் உள்ளன என்று அவன் எடுத்துக்காட்டிப் பேசுகிறான் - அச்சம் தயைதாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல்!! நீ! அரசே! உமது ஆட்சியிலே குறை ஏது! என்றா பேசினாய்? இல்லையே. நீயும் அவன் என்னென்ன குற்றம் குறைகளைக் கூறினானோ, அவைகளை என் எதிரிலேயே எடுத்துக்காட் டினாய். உன்போக்குக்கு, எனக்குப் புரியாது என்றா எண்ணிக் கொண்டாய். தளபதியாரே! நமது கொலுமண்டபத்தில், நமது பரிவாரத்தில் ஒருவனாக இடம் பெற்று அமர்ந்துகொண்டு நமது ஆட்சியைக் குறைகூறிய இந்தக் கெடுமதியாளனை, இழுத்துக்கொண்டுபோய், அடைத்திடுங்கள் சிறையில், இருட்டறையில்...''

"ஐயையோ... வேண்டாம், வேண்டாம்... தப்பு! தப்பு!''

கூச்சல் கேட்டு, அலறி எழுந்து உட்கார்ந்தேன். அருகே படுத்து உறங்கிக்கொண்டிருந்த, ஆண்டியப்பன், ஏதோ கனவு கண்டு உளறிக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. தட்டி எழுப்பி, "ஆண்டி! என்ன இது? ஏன், இப்படிக் குளறிக்கொண் டிருந்தாயே...'' என்று கேட்டேன். ஒரு விநாடி மிரண்டபடி இங்குமங்கும் பார்த்தான். மறுவிநாடி, அடக்கமுடியாத நிலையில், ஓவெனச் சிரித்தான். "என்ன? என்ன?' என்று நான் கேட்டதற்கு, ஆண்டியப்பன் "ஒன்றுமில்லை - ஒரு வேடிக்கையான கனவு கண்டேன்'' என்றான். "கனவில்...?'' என்று நான் கேட்டேன்.

"கனவில், நான் ஓர் தளபதி! அரச சபையில்! என்னை அரசனுடைய உத்தரவுப்படி, சிறையில் தள்ள இழுத்தார்கள். விழித்துக்கொண்டேன்'' என்றான் ஆண்டியப்பன்.

முழுவதும் கூறும்படி கேட்டேன். எளிதில் இசைவு தரவில்லை. மெத்த வற்புறுத்திய பிறகு, கனவிற் கண்டதை விவரமாகக் கூறினான். அதைத்தான் தம்பி! நான், முறைப்படுத்தி, துவக்கத்திலே தந்திருக்கிறேன். "அரசன், எப்படி இருந்தான்?'' என்று நான் விளக்கம் கேட்டேன்.

"போடா, போ! இதை வைத்துக்கொண்டு, கேலி செய்யப் போகிறாய்; தெரியுமே, எனக்கு" என்றான்.

நெடுநேரத்துக்குப் பிறகுதான், அரசன் காமராஜர்போல இருந்ததாகக் கூறினான். என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஆண்டியப்பன், அப்படி ஒரு வேடிக்கையான கனவு ஏன் கண்டான் என்பதற்கான காரணமும் எனக்கு விளங்கலாயிற்று.

தம்பி! ஆண்டியப்பன், என் நண்பன். இருந்தும் காங்கிரசில் இருப்பவன், அங்கு இருப்பவர்களெல்லாம் நமக்குப் பகைவர்களா, என்ன! நம்மோடு இருக்கவேண்டியவர்கள், நம்முடன் இருந்தவர்கள், நமது அழைப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எனும் வகையினரன்றோ, இன்றையக் காங்கிரசில், ஒலிக்கும் மணிகளாகி உள்ளனர். அந்த வகையினரில், ஆண்டியப்பன்! பேச்சாளனுங்கூட! பேச்சிலென்ன இருக்கிறது, செயல்வேண்டும், அனைவரும் செயல் வீரராகவேண்டும் என்று பேசும் பேச்சாளன்.

"அட, பார்க்கலாம், பேசலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தால், நீ, கிடைத்தால்தானே. நாள் தவறாமலா, கூட்டம்! செச்செச்சே! உனக்கும்தான் சலிப்பாக இல்லையா!! என்ன இருக்கிறது, அப்படிப் பேச, ஒவ்வொருநாளும்!'' என்று என்னிடம், கனிவுடனும் உரிமையுடனும் பேசும் போக்கினன் ஆண்டியப்பன். காங்கிரஸ் வட்டாரத்தில், ஆட்டம் பாம் ஆண்டியப்பன் என்று, சிலநாள், விளம்பரம் செய்துகூட வந்தார்கள்! இரண்டோர் மாதம்.

நள்ளிரவு, நான் மழையூர் சென்றபோது, சிறு தூறல் விழத் தொடங்கிற்று. ஆனால் பத்தாயிரம் இருக்கும் கூட்டத் திலிருந்தோர் - நான் என்ன செய்வது? ஒருமணி நேரத்துக்கு மேல் பேசினேன். அடுத்த கூட்டம், தவனியில்! மோட்டார் கொண்டு வந்தவர், முடியாது என்று கூறிவிட்டதால், வந்தவாசி திரும்பினேன்; தவனி கூட்டம் நடைபெறவில்லை, மறுநாள், ஆண்டியப்பன் வந்திருந்தான். "ஆமாம், இந்த இடங்களெல்லாம் போகிறாயே, உழுந்தை, மழையூர், காட்டுகாநல்லூர், பொன்னூர், ஊத்துக்காடு என்றெல்லாம். இங்கே உள்ளவர்களிடம், என்ன பேசுகிறாய்?'' என்று வியப்புடன் கேட்டான். இரண்டு ஆண்டுகட்குமுன்பு, இதே ஆண்டியப்பன் கேட்டிருக்கிறான், "என்ன உங்கள் கழகம், திருப்பித் திருப்பி திருச்சி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், சென்னை, இவ்வளவுதானே. கிராமப்பக்கம், யார் உங்களை அழைக்கிறார்கள்!! என்று கேபேசி இருக்கிறான். இப்போது தம்பி! நமது கழகக் கூட்டங்கள், பெரும் அளவு கிராமங்களிலே நடைபெறுவது கண்டு, அதே ஆண்டியப்பன், "அந்தக் கிராமங்களில் என்ன வேலை?'' என்று கேட்கிறான். கேலிக்காக அல்ல! சிறிதளவு கிலியுடன்!! சிற்றூர்களிலே, நமது கழகம் செல்வாக்குப் பெற்றுக்கொண்டு வருவதைக் கள்ளங்கபடமற்ற கட்டிளங்காளைகள், கல்லூரி சென்றும் பெறமுடியாத நல்லறிவைக் காலமெனும் ஆசானிடம் கற்றுத் தெளிந்த பெரியவர்கள், ஊரைப் பார்த்து, அரசியல் பிரச்சினையைப் புரிந்துகொண்டுள்ள தாய்மார்கள், நமது கழகக் கருத்துக்களை, சுவை தருவன என்று முதலில் கவனிக்கத் தொடங்கி, பிறகு, பயனுள்ளவை என்பதை அறிந்து சுவைப்பதை, ஆண்டியப்பன் மட்டுமா, பொதுவாகவே காங்கிரசில் பலரும், உணரவில்லை, அது நமக்கு நல்லதுதானே!

ஆண்டியப்பனிடம், பிறகு, அரசியல் உரையாடல், சட்டசபை நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுகள், காங்கிரஸ் ஆட்சியிலே ஏற்பட்டுப்போயுள்ள ஊழல்கள் பற்றிய விளக்கங்கள் - மறுப்புரைகள் - அவற்றினுக்கு எதிர்ப்புரைகள் இப்படி.

அதைத் தொடர்ந்து நான், காங்கிரஸ் ஆட்சியின் போக்கிலே, காங்கிரசாரே கசப்படைந்து, சில வேளைகளிலே வெளிப்படையாகவும், மற்ற வேளைகளிலே, இலைமறை காயாகவும் பேசிக்கொண்டு வருவதுபற்றிச் சட்டசபைப் பேச்சுகளையே எடுத்துக்காட்டிக் கூறினேன்.

"நாங்கள் எதிர்க்கட்சி, ஆண்டி! ஆட்சியிலே உள்ள முறையே மாறவேண்டும் - மாற்றப்படவேண்டும் என்ற கருத்துடையவர்கள். உங்கள் தலைவர்களின் ஆட்சியிலே காணக்கிடக்கும் கேடுபாடுகளை எடுத்துரைக்கிறோம். இதற்காக எங்கள்மீது பாய்கிறார்கள். அதைக்கேட்டு ஆட்சியை நடாத்திச் செல்லும் நாயகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், அதே வாயால், ஆட்சியிலே உள்ள குறைபாடுகளையும், எடுத்துப் பேசுகிறார்கள். அப்போது அந்தத் தலைவர்களுக்கு எப்படி இருக்கும், எரிச்சல்! ஏமாற்றம்! இவர்களும் குறை கூறுகிறார்கள், அவர்களும் குறை காணுகிறார்கள்! அவர்களாவது, எதிர்க்கட்சி! இவர்கள் நமது கட்சி என்று முத்திரை பொறித்துக்கொண்டு சலுகைகள், உரிமைகள் பெற்றுக் கொண்டு, நமது ஆட்சியில் குறைகள் உள்ளன என்று அவர்கள் எதிரிலேயே பேசுகிறார் களே, இது எவ்வளவு கேவலம்! இதையுமா, நாம் தாங்கிக் கொள்ளவேண்டும்! - என்று எண்ணாமலிருக்க முடியுமா? இப்படிப்பட்டவர்களை, நம்மவர் என்று நம்பிக் கிடப்பதே ஆபத்து'' எந்த நேரத்தில் காலைவாரி விட்டு விடுவார்களோ என்றல்லவா அச்சப்படவேண்டி இருக்கிறது, என்றுகூடத் தோன்றாதா என்றெல்லாம் கேட்டேன். ஆண்டி ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டான் - நல்ல உறக்கம் எனக்கு, அவன் தூங்கத் தொடங்கியதும், பாவம் கனவு கண்டிருக்கிறான். நான் சொன்னவற்றைத் தூக்கத்திலே துணைக்குக் கொண்டதால், கனவுதான் என்றாலும், இப்போது நடைபெறும் இதே மக்களாட்சி மன்னனாட்சியாக இருந்து விடுமானால், காங்கிரஸ் கட்சிக்காரர்களில் பலருக்கு, ஆண்டி கனவில் தோன்றிய பிச்சுமணி கதிதான்!!

தம்பி! கழகத்தின் அடிப்படைக் குறிக்கோள் திராவிடநாடு பெறுவது. ஆயினும் இடையிலே, காங்கிரஸ் துரைத்தனம், நடத்திவரும் ஆட்சிமுறையின் விளைவுகளை எங்ஙனம், கவனிக்காதிருக்க முடியும்! குறைகளைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறோம், திருத்த முற்படுகிறோம். திடலில் மட்டுமல்ல, சட்டமன்றங்களிலும்! அங்கு, நமது கழகத்தவர், காங்கிரஸ் ஆட்சியால் விளைந்துள்ள கேடுபாடுகளை எடுத்துக் கூறும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களுக்குக் கடுங்கோபம் வருகிறது. சுடுசொல்லால் தாக்கித் தகர்த்திடலாம் என்று தோன்றுகிறது. பலர் பலவிதமாகக் கழகத்தைக் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர்களே, அந்த வேலை முடிந்ததும், காங்கிரஸ் ஆட்சியிலே ஏற்பட்டுவிட்ட, கேடுபாடுகளை எடுத்துக்காட்டிப் பேசவேண்டி வந்து விடுகிறது... நிலைமை அப்படி.

தம்பி! அவர்கள், நமது கழகத்தைக் கண்டித்துப் பேசுவது மட்டுமே, உன் காதுக்கு எட்டியிருக்கும் - ஏனெனில் அதுவரையில் மட்டுமே, உன் கண்களில் படும்படி, தேசியப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன! ஆனால் சட்டசபையில் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசுவதை - முழுவதையும், கேட்க நேரிட்டால், தம்பி! ஆச்சரியம் மேலிடும்.

அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கை பலம் இருப்பதால், அலாதியான மகிழ்ச்சி இருப்பது இயல்பு. அந்த மகிழ்ச்சி, போதைபோலாகி, துடுக்குத்தனம் என்ற அளவுக்குக் கூடத் துணிவு வளர்ந்து விடுகிறது. மக்களாட்சி முறைக்கு, இந்தப் போக்கு ஆகாது; தீது பயப்பதுதான் - ஆனால் இது சுவைத்திடும்போது இனிப்பாக இருப்பதால், பலரும், அதற்கு இரையாகிவிடுகிறார்கள். நல்ல கருக்கல்! சாவடியில், படுத்திருந்தான் ஒரு குறைமதி யுடையான், பாதித் தூக்கத்தில். மடியில் சிறு பணமுடிப்பு! விரலில் ஒரு மோதிரம்! கள்ளர் இருவர் வந்தனர். இருட்டிலே படுத்துக் கிடந்தவன்மீது, அவர்கள் கால்பட்டது. "சனியன்! ஏதோ மரக்கட்டை காலில் பட்டது!!'' என்றான் திருடன். படுத்துக் கிடந்தவன், வாய்திறப்பானேன்! குறைமதியாள னல்லவோ? புத்திக்கூர்மையைக் காட்ட வேண்டும்போல் தோன்றிற்று. எனவே, படுத்திருந்தபடியே, "உங்கள் வீட்டு மரக்கட்டை, மடியிலே பணமும், விரலிலே மோதிரமும் வைத்திருக்குமோ'' என்று கேட்டான். நமக்குத் தெரியாமலே போய்விட்டதே, இந்த விஷயம் என்று கூறிப் படுத்திருந்தவனை எழுப்பிப் பதக்கமா கொடுத்திருப்பார்கள். இரண்டு அறை கொடுத்தார்கள் - பணத்தைப் பறித்துக்கொண்டு துரத்தினார்கள் - என்றோர் கதை கூறுவர்.