அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"ஆட்டம்பாம்'' ஆண்டியப்பன்
2

அமைச்சர்கள் இந்தவிதமான தெளிவும் துணிவும் நிரம்பப் பெற்றவர்கள் என்பது பலமுறை வெளியாகிறது. ஆனால் கதையில், திருடன் வருகிறான் அடித்துப் பறித்துக்கொள்ள. கழகம், பதவியைப் பறித்திட, சட்டமன்றம் செல்லவில்லை. எனவே அமைச்சர்களின் எந்தப் போக்கையும், அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதில்லை. படுத்துக் கிடந்த குறைமதியாளனுக்கு, மடியிலிருந்த பணமும், விரலில் அணிந்திருந்த மோதிரமும், நினைவிலே கொட்டிக்கொண்டே இருந்ததைப் போல, அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கை யின் நினைவு எப்போதும், குடைந்தவண்ணம் இருக்கிறது. அந்த 150-ல் என்னென்னவிதமான போக்கினர் மனதினர், உளர் என்பதை அறிந்துகொள்ள வாய்ப்புகள் பல ஏற்படுகின்றன; தெளிவு ஏற்பட்டதாக மட்டும் இன்னும் தெரியவில்லை. அந்த 150-ல், சிலர் கழகத்தின் மீது கணை வீசும்போது அமைச்சர் களுக்கு உச்சி குளிர்த்து விடுகிறது; ஆனால் அதேபோது, அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்குக் கசையடி கொடுக்கிறார்கள் - உறைக்கிறதோ இல்லையோ, நானறியேன். ஆனால் ஆண்டியப்பன் அதையெல்லாம் நான் சொல்லக்கேட்டதால் தான், கனவு கண்டு கலக்கமுற்றான்.

இந்த ராஜ்யத்தினுடைய ஜனத்தொகையில் 80 சதவிகிதம் கிராமங்களில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? இன்றைய தினம், மருத்துவ சுகாதார வசதி, பெரும் பகுதி நகரங்களில்தான் செய்யப்படுகிறது. இன்று கிராமங்களில் உள்ள மருத்துவ, சுகாதார முறைகளைப் பார்த்தால், எந்தவித மருத்துவ உதவிகளும் அவசர உதவிகளும் அற்ற நிலையில் இருக்கிறதென்பதை அமைச்சர் அவர்கள் நன்கு மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கிராமப் பகுதிகளில் இருந்து வருகிறவர்களுக்கு வைத்திய வசதி அளிக்க ஏதாவது ஏற்பாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அங்கு எவ்வித வசதியும் கிடையாது.

வைத்தியத் துறையில் இலஞ்சம் என்ற நிலைமை இருக்குமானால், அது மக்களை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்கவேண்டும்.

இன்னும் பல கிராமப் பகுதிகளில் டாக்டர்கள் இல்லை. டாக்டர்கள் இல்லை என்று, அந்தப் பகுதிகளைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிடக்கூடாது.

தம்பி! நல்லாட்சிக்கு அடையாளமா இவை? கிராமத்தைக் கவனிக்காத ஆட்சி! மருத்துவமனைகள் இல்லாத கிராமங்கள்! டாக்டர்கள் இல்லாத மருத்துவமனைகள்! மருந்து களவுபோகும் இடங்கள்! வைத்தியத்துறையில் இலஞ்சம்! - இவை இந்தக் காங்கிரஸ் ஆட்சியிலே காணக்கிடப்பவை.

சட்டமன்றத்திலே, இவைகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் போது, அமைச்சர்களின் காதுக்குக் குளிர்ச்சியாகவா இருக்கும்? எண்பது கோடி ரூபாயல்லவோ, தம்பி துரைத்தனம், இந்த ஆண்டுக்குப் பெறுகிறது; பணமில்லா நிலையல்லவே! அவ்விதமான ஆட்சியிலே கிராமங்கள் கவனிப்பற்றுக் கிடப்பானேன்! என்ன செய்கிறார்கள் இந்த அமைச்சர்கள்? எங்கே போகிறது பணம்? இந்த நிலையில், கிராமங்களை வைத்துவிட்டு, ஆதரவு கேட்பது அக்ரமம் அல்லவா!

சட்டமன்றத்திலே, இது எடுத்துக்காட்டப்படும்போது அமைச்சர்களுக்கு ஆத்திரம் எழுவது இயல்பு - அவ்விதம் பேசுவோர், நமது கழகத்தவராக இருந்தால்.

ஆனால், தம்பி! நான் குறிப்பிட்டிருப்பது, திருநெல்வேமாவட்டத்தைச் சார்ந்த உறுப்பினர், வி. சுப்பையா என்பவரின் பேச்சு - 1959-ம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், இருபத்து ஆறாம் நாள்!

ஆண்டியப்பன், என்ன பதில் அளிக்க முடிகிறது?

ஆண்டி கிடக்கட்டும் - வெறும் பேச்சாளன் - அறிவாளர் களாம் அமைச்சர்கள் என்ன பதில் கூறுவர்? பாபம்!

எங்கள் பிர்க்காவில் இருக்கின்ற வீரபாண்டி, வேம்படிதாளம், வெண்ணந்தூர் போன்ற பத்துக் கிராமங்கள் இருக்கின்றன. அவைகள் ஒன்றிலும் ஒரு டிஸ்பென்சரி (மருத்துவமனை) கூடக் கிடையாது.

பல கிராமங்களில் அரிஜனங்கள் குடிதண்ணீர்க் கிணறுகள் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். பல கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும்.

* * *

அனுபவம் இல்லாத அதிகாரிகள் இருப்பதால் பல வேலைகள் நடைபெறாமல் தடைப்படுகின்றன. அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. அந்த இலாகாவின் அதிகாரிகளிடத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன.

* * *

தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பது, காங்கிரஸ் ஆட்சி - எனினும், நிலைமை, மேலே கூறப்பட்டது போல! பெருமைப்படுவதற்கான நிலைமையா?

தம்பி! இவ்விதம் பேசியவர், நமது கழகத்தவர் என்றால், இவர்கள் யார் தெரியுமா? பூர்வோத்திரம் என்ன தெரியுமா? இவர்கள் வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர்கள்! - என்றெல்லாம், நிதி அமைச்சர் வெளுத்து வாங்குவார்! சமர்த்தர்! ஆனால் இவ்விதம் பேசியவர் காங்கிரஸ்காரர்! காங்கிரஸ்காரர் என்பதோடு கழகத்தைக் கண்டித்துப்பேசுவது தேசத்தொண்டு என்று எண்ணிடும் போக்கினரில் ஒருவர் - சேலம் மாவட்டம் - கந்தசாமி எனும் பெயருடையார்!

நான் இத்தனை கூறியபோது, ஆண்டியப்பன் எப்படி திகைத்துப்போய் வாய் அடைத்துக் கிடந்தானோ, அதேதானே, அமைச்சர்கள் நிலையும். இவர்களுமா இப்படி இடித்துப் பேசுவது? என்று எண்ணி வாட்டமடைந்திருப்பார்கள்.

இருக்கும் நிலையை மறக்கவோ, மறைக்கவோ முடிய வில்லை. எனவே, அவர்கள், நடப்பது காங்கிரஸ் ஆட்சிதான். இருந்தாலும் உண்மையை எப்படி எடுத்துரைக்காமல் இருப்பது; ஏதும் பேசாதிருந்தால், வாக்குக்கொடுத்த மக்கள், வாட்டி எடுக்க மாட்டார்களா - என்று எண்ணித்தான் பேசிவிட்டார்கள்!!

என்னுடைய தொகுதியில் வீடுகட்டும் திட்டத்திற்குப் போடப்பட்ட மனைக்கட்டுகளுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் இருக்கின்றன. ஒரு மனைக்கட்டுக்கூடப் பரிசீலனைக்கு வந்த தில்லை. அந்த மனைக்கட்டு விஷயத்தில் ரொம்பச் சங்கடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அரிஜனங்களுக்கும் மனை ஒதுக்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டும் அது கூடிவரவில்லை. சங்கடங்கள் நிறைய இருக்கின்றன. அரிஜனங்களுக்காகத் தனி இலாகா, அங்கு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு கிராம சேவகர் என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது தெரியாது.

தம்பி! பரிதாபமாக இருக்கிறதல்லவா! "அரிஜனங்களின் நலன்களைக் கவனிக்கவே, தனியாக அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். எமது ஆட்சியின் பெருமையே இதிலேதான் இருக்கிறது,' என்று பேசாத மந்திரியில்லை, பேசாத நாளில்லை. அந்த அதிகாரிகளைக் காணவேண்டும், கண்டு அவர்களிடம் கூறினால், அரிஜனங்களுக்கான நலன்களைப் பெற்றளிக்க முடியும் என்று ஒரு சட்டசபை உறுப்பினர் கதராடையார், காங்கிரஸ் கட்சியினர், தேடித் தேடிப் பாக்கிறார், அவர் கண்களுக்கு ஒருவரும் தட்டுப்படவில்லை. உள்ளம் கொதித்துச் சட்டசபையில் எழுந்து நின்று பேசுகிறார்.

"அவர்கள் எங்கு இருக்கிறார்கள்?
என்ன செய்கிறார்கள்?
என்பது தெரியவில்லை!''

இது ஒன்று போதுமல்லவா, பெருமைப்பட்டுக் கொள்ள!

பாரத புத்ரர்களே! கேளுங்கள், எமது ஆட்சியின் அருமை பெருமையை. அரிஜன மக்களின் நலன்களைக் கவனிக்க வேண்டு மென்றே, தனியாக அதிகாரிகளை நியமித்திருக்கிறோம். அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது மட்டும், ஒருவருக்கும் தெரியாது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேடினாலும், கண்டுபிடிக்க முடியாது. அவர்களை நீவிர், கட்டாயம் பார்க்கவேண்டுமானால், நாங்கள் எங்காவது விழா நடத்த "விஜயம்' செய்கிறோமே, அப்போது வாருங்கள்; ஜீப்புகள் வந்து நிற்கும், அதிலிருந்து அதிகாரிகள் இறங்குவார்கள்!! - என்றா, அமைச்சர்கள் பேசிக்கொள்ள முடியும்? ஆண்டியப்பன், தலை குனிந்துகொண்டான். வெட்கம்; துக்கம் அவனுக்கு. அமைச்சர்களும் வெட்கப்படத்தானே வேண்டும், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.யே, இவ்விதம் பேசக்கேட்டு. இந்த வேதனையை உண்டாக்கவேண்டுமென்று பேசியவர் ஒரு சமயம், எண்ணாமலிருந்திருக்கலாம். எதிர்க்கட்சி என்ன, நாமேதான் இவைகளைச் செய்வோமே, தெரியாதா? முடியாதா என்ற போக்கில் பேசியிருக்கலாம். பேசிய நோக்கம் அறிய, பேசியவர் தெரியவேண்டும் என்கிறாய், சரி கேட்டுக்கொள், இவ்விதமாகக் காங்கிரஸ் ஆட்சியின் (அவ) லட்சணத்தை எடுத்துக் கூறியவர் சடையப்ப முதலியார் என்பவர் - சாட்சாத் காங்கிரஸ்காரர்.

குறைகள் இருந்தால் எடுத்துச் சொல்லத்தானே வேண்டும் - இதிலே தவறு என்ன? என்று வாதாட முற்படுவர் - சிலர் இப்போதே வாதாடுகின்றனர்.

மூன்று உண்மைகள். இவர்களை அறைகூவி அழைக்கின்றன. குற்றம் குறைகளைப் பேசுவது தவறல்ல - பேசிக் களைந்து கொள்ளுவதுதான், ஜனநாயக முறை. எவரும் ஒப்புக் கொள்வர். ஆனால், தம்பி!

1. எங்கள் ஆட்சியின் பெருமையே பெருமை என்று இவர்கள் பேசிக்கொள்கிறார்களே, அது தவறுதானே? பொய்தானே?

2. குற்றம் குறைகளைக் கழக உறுப்பினர்கள் எடுத்துக் கூறும்போது, காய்கிறார்களே, மாய்கிறார்களே, தவறுதானே!

3. குற்றங்குறைகளை இந்தக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்சிக்கூட்டத்திலே எடுத்துக் காட்டித் திருத்திக் கொள்ள வழி இருக்கிறதே, ஏன் செய்யவில்லை? அனுமதி இல்லையா? பலன் ஏற்படவில்லையா? எதுவாக இருப்பினும், தவறு அல்லவா? ஏன் அது தொடர்ந்து இருக்கிறது? சொந்தக் கட்சிக்காரர் சுட்டிக் காட்டியும், ஆட்சியாளர், மந்தத்தனம் காட்டுவது ஏன்? நல்லது செய்ய இயலவில்லையா? அல்லது குறையை எடுத்துக் காட்டுவோரை மதிக்க மறுக்கிறார்களா? இவ்விதமெல்லாம் ஆண்டியப்பனைக் கேட்டதால்தான், அவனுக்கு ஆயாசம் மேலிட்டது - உறக்கம் சரியாக வரவில்லை. - கனவு கண்டான், குளறிக் கூவினான்.

நான் இந்த இலாகாவைப் பற்றிக் குறிப்பிடுகின்ற இந்தச் சமயத்தில் ஒரு குறைபாட்டைப்பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தச் சிறியவனுடைய சொல் எவ்வளவு தூரத்திற்கு ஏறும் என்று எனக்குத் தெரியவில்லை. மற்றத் தனிப்பட்ட இலாகாக்கள் இயங்குவதுபோல இந்த டெவலப்மென்ட் இலாகா இயங்கவில்லை.

* * *

பிளாக் டெவலெப்மென்ட் அதிகாரிகளுடைய நிலை எல்லாம், இன்றைக்குத் தண்ணீரைவிட்டுவிட்டு வெளியே போட்ட மீன் மாதிரியும், தாயற்ற குழந்தை போலவும் இருந்துகொண்டிருக்கிறது. ★ சில இடங்களில் பிளாக் டெவலெப்மென்ட் அதிகாரி களாகத் தகுதியற்றவர்களைப் போடுவதால் பல தவறுகள் நடக்கின்றன. ★ இப்போது அம்ரோஸ் என்று ஒருவரை நியமித்திருப்ப தாகத் தெரிகிறது. நாங்கள் இதுவரையில் அவரைப் பார்த்த தில்லை.

மேலும் அதிகாரிகளிடையே பொறாமை இருந்துகொண் டிருக்கிறது. இதையும் போக்கவேண்டும். இது தவிரச் சில இடங்களில் அக்கவுண்டுகள் எல்லாம் சரியாக இல்லை என்று சொல்லப்படுகின்றன.

இவ்விதம் இருந்தால், நிச்சயமாகப் பொதுமக்கள் குறைகள் சொல்லத்தான் செய்வார்கள்.

சில இடங்களில் கணக்குகள் எல்லாம் குழப்பமாக இருக்கிறது. கடைசியில் அதைப்பற்றி நல்ல முறையில் விசாரணை ஒன்றும் நடப்பது இல்லை.

தம்பி! இந்தத் திருவாய்மொழி, காங்கிரஸ் கட்சியின் கண்ணின் மணி என்று கொண்டாடப்பட்டு வரும், சமுதாய நலத்திட்டம் பற்றியது. பேசிய பெருமகனோ, கழகத்தை ஏசினால், பாரதமாதா, கட்டித் தழுவி, உச்சி மோந்து முத்தமிட்டு, "பாலகா! உன் அரும் புத்திக் கூர்மை வேறு யாருக்கடா வரும்! வா, மகனே! வா! உன்னை வையகமெங்கும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும்'' என்று பூரித்துக் கூறுவார்கள் என்று எண்ணி இரும்பூதெய்துபவரோ என்று எண்ணத்தக்க வகையில், சமயம் கிடைக்கும்போதெல்லாம், கழகத்தைச் சாடிடும், நாகராஜ மணியக்காரர் எனும் நற்றொண்டர்! சேலம் மாவட்டம். அவர்,

பொறாமை
பொய்க் கணக்கு
பூசல்
திறமைக் குறைவு
அனுபவமின்மை

எனும் அரிய குணங்களை ஆபரணங்களாகப் பூட்டிக்கொண்டு, எமது கட்சி நடாத்தும் ஆட்சியின் செல்லப் பிள்ளையாம், சமுதாய நலத்திட்ட இலாகா இருக்கிறது; கண்டேன், காணீர்; என்கிறார்.

அமைச்சர்கள் என்ன சொல்வார்கள்? ஆண்டியப்பன், என்ன செய்தான்? படுத்தான் - புரண்டான் - குளறினான்! வெட்கம்! துக்கம்!

அமெரிக்காவிலிருந்து நம் நாட்டிற்குப் பால் பவுடர் அனுப்புகிறார்கள். அது இப்பொழுது டின் ஒன்றுக்கு ஏழு, பத்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. அந்தப் பால் பவுடர் யார் யாருக்கோ தின்பண்டங்கள் முதலியவை செய்வதற்காகப் போய்விடுகிறதே தவிர, ஏழை மக்களுக்கு அந்தப் பால் பவுடர் கிடைப்பதில்லை. இதுபற்றிக் கலெக்டர் போன்றவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெட்டிஷன் மூலமாக அமைச்சர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே அமெரிக்காவிலிருந்து வரும் பால் பவுடர், ஜனங்களுக்கு, ஏழை மக்களுக்குக் கிடைக்கவேண்டும், அது ப்ளாக் மார்க்கெட்டில் இப்போது போவதைத் தடுக்க வேண்டும்.

எப்படி இருக்கிறது தம்பி! பச்சைத் தமிழரின் ஆட்சி! பால் பவுடர், பிளாக் மார்க்கெட்டாகிறதாம்! பேசியவர் நமது கழகமல்ல! ஏ! அப்பா! அப்படிப் பேசிவிட்டிருந்தால், எத்தனை மேடைகள் அதிர்ந்திருக்கும்!!

"ஆண்டியப்பா! பெரிய விஷயங்கள்கூடக் கிடக்கட்டும். உங்கள் ஆட்சியிலே மிகக் கேவலமான ஒரு காரியம் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன், கோபம்கூட அல்ல, வருத்தமாக இருக்கிறது. ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாகத் தரச் சொல்லி, தானமாகத் தருகிறானே அமெரிக்க நாட்டான், பால் பவுடர். அதைக் கூடவா கள்ளமார்க்கெட்டில் கொண்டுபோய் விற்பது! இது ஈனத்தனமான செயல் அல்லவா?'' என்று நான் கேட்டபோது, ஆண்டியப்பன், என்னை அறைந்தே விடுவான் போலிருந்தது - அவ்வளவு ஆத்திரம் வந்தது.

ஆனால், சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினர், பெரியசாமி என்பவர் பேசினார், பால் பவுடர் விஷயம்.

இதை எல்லாம் கேட்டுக்கொண்ட பிறகும், அமைச்சர்கள் வெட்கமின்றி எதிர்க்கட்சியைத் தாக்க, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்களே, வேடிக்கையாக இல்லையா!! அங்கே ஏனோ, சொரணையற்ற தன்மை!!

ஆண்டியப்பன் வருத்தத்துடன் சொன்னான், "இவர்கள் - எங்கள் கட்சிக்காரர்கள் - ஏன்தான் இப்படி எல்லாம் பேசி மானத்தை வாங்குகிறார்களோ, தெரியவில்லை. இதையெல்லாம் சட்டசபையில்தானா பேச வேண்டும் - அமைச்சர்களிடம் தனியாகச் சொல்லக் கூடாதா?'' என்றான்.

"ஆண்டி! அப்படி அவர்கள் சொல்லாமலிருந்துவிட்டால், எதிர்க்கட்சிகள் இந்த விஷயங்களை வெட்ட வெளிச்சமாக்க மாட்டார்களா? மேலும், உன் கட்சிக்காரர்கள் ஏன் அப்படிப் பேசுகிறார்கள், என்பதற்கும் தகுந்த காரணம் இருக்கிறது'' என்றேன். என்ன காரணம்? என்று கேட்டான். இருக்கும் குறைபாடுகளை சட்டசபையில் எடுத்துக் காட்டத்தானே அனுப்பினோம் என்று ஓட்டர்கள் கேட்டுவிடுவார்களே என்ற பயம்தான் காரணம் என்றேன். ஆண்டி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

சரி, என்று ஆண்டியப்பன் ஒத்துக்கொண்டே தீரவேண்டிய ஆதாரத்தைத் தந்தேன்; அது இது:

"எங்களுடைய சேலம் மாவட்டத்தில் கொல்லி மலையில் ஒரு ரோடும் புத்தர் கௌண்டன்பாளையத்தில் ஒரு பாலமும் கட்டப்பட்டிருக்கிறது. இவை தவிர எங்கள் சேலம் ஜில்லாவில் ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் வேறு எந்த வேலையும் நடந்ததாகத் தெரியவில்லை.''

* * *

"என்னுடைய தொகுதியாகிய அரூர் தாலுகாவில் அறவே இதுவரை எந்த முன்னேற்றமும் கிடையாது. எந்தவிதமான நீர்ப்பாசன வசதியோ கிடையாது. சென்ற ஆண்டிலும் இந்த மன்றத்தில் நான் குறிப்பிட்டேன். எங்களுடைய தாலுகாவில், சேர்வராயன் மலை வடபகுதியில் வாளியாறு உற்பத்தியாகிறது. அது ஜீவநதியாகும். அதனுடைய தண்ணீரை நல்ல முறையில் விவசாயத்திற்கு உபயோகப்படுத்துவதற்காக அதன் குறுக்கே ஒரு அணை கட்டுவதற்கு வெள்ளைக்காரன் காலத்திலே திட்டத்தைப் போட்டு, அது கைவிடப்பட்டது.''

"மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தி லாகிலும் எடுத்துக் கட்டினால் அரூர் தாலுகாவிலுள்ள விவசாயிகளுடைய மனம் நிம்மதி அடையும்.''

நான் கிராம மக்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டவன். அதனால் இவைகளைப்பற்றி என்னை அடிக்கடி கேட்க வசதி இருக்கிறது. இதற்குத்தானா உங்களுக்கு ஓட்டுப் போட்டோம் என்று கேட்கிறார்கள்.

இவ்விதம் சட்டசபையில் பேசியவர், மாரியப்பன் எனும் காங்கிரஸ் உறுப்பினர், சேலம் மாவட்டம்.

நெடுநேரம் ஆண்டியப்பன் பேசவில்லை.

பிறகு, ஒரு பெருமூச்சுக் கிளம்பிற்று.

பாவிகளே! இப்படிப் பேசிப்பேசி, காங்கிரஸ் கட்சியின் மானத்தை வாங்குகிறீர்களே! இதற்குத்தானா, உங்களைக் காங்கிரஸ் கட்சி நிற்கவைத்து, எம். எல். ஏ. ஆக்கிவைத்தது என்று கூறினான். அவ்வளவு வருத்தம் ஆண்டிக்கு.

நான் வேடிக்கையாகக் கேட்டேன், "அப்படியானால் ஆண்டி! இப்படிப் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் அடுத்த தடவை, காங்கிரஸ் கட்சியிலே இடம் தரமாட்டாரோ, காமராஜர்'' என்றேன்.

முறைத்துப் பார்த்தான் - தலையணையை இழுத்துப் போட்டுக்கொண்டான் - படுத்தான் உறங்க.

பேசியவை யாவும் குடையவே, கனவு கண்டான்.

தம்பி! இப்போது, முதலிலிருந்து மறுதடவை படித்துப் பார், கனவு காட்டும் கருத்து விளங்கும்.

ஆண்டியப்பன், யார் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறாய் - தெரிகிறது.

உன் அருகிலேயே இருக்கிறார்! காங்கிரஸ் கட்சியிலே இன்று பலர் ஆண்டியப்பன் நிலையில் உள்ளனர். மனதிலே குமுறல் - குழப்பம். அவர்களைக் கண்டு பிடித்து பக்குவப்படுத்தி, கழகக் கொள்கைகளைப் புகுத்துவதுதான், நீ மேற்கொள்ள வேண்டிய பணி! இப்போது, தம்பி! ஆறு மணி, காலை, தூங்க முயற்சிக்கிறேன். விழிப்புற்றிரு - விடுதலைக்கு உழைக்கத் தயாராகிவிடு.

அண்ணன்,

24-4-60