அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


''ஐயா? சோறு!'' ''இதோ! நேரு! பாரு''
1

விலகியோர் ஏசல் -
உதய சூரியன் தொண்டு

தம்பி!

தேர்தலைப்பற்றி நித்த நித்தம் பேசிக்கொண்டிருக்கிறீர் களே தவிர, ஆட்சியாளர்களின் போக்கை விளக்கி அரசியல் தெளிவு தர முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர தொகுதியில் வாக்காளர்களைச் சந்திக்கும் வேலையைச் சரியாகச் செய்யவேண்டாமா - மக்களுக்கு அரசியல் தெளிவு தருவது ஒரு முக்கியமான வேலை, கடமை, பணி, நான் மறுக்கவில்லை, ஆனால் அதுமட்டும் போதாதே - அவர் பலதடவை வந்தார், பாவம், பரிதாபமாக இருந்தது, கெஞ்சிக் கேட்டார், சரி என்று சொல்லிவிட்டேன்; நீங்கள் வரவே காணோம்; அதனால்தான் அவருக்குச் சம்மதம் சொல்லிவிட்டேன் என்று கூறிவிடுவது சிலருக்கு வாடிக்கையாயிற்றே; வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும்; காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சுறுசுறுப்பாக வண்டு போலச் சுற்றுகிறார்களாமே! - என்றெல்லாம், கவலையுடன் கேட்டுக்கொண்டிருந்தாய் அல்லவா; உன் கவலை எல்லாம் தீரும் அளவுக்கு, இந்தத் திங்கள் முதல் நாளன்று, கழகக் காவலர்கள் காஞ்சிபுரத்தில் ஒரு வீடுகூடப் பாக்கி விடாமல் சென்று, எனக்காக ஆதரவு திரட்டினார்கள். காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது! கண்டவர்கள் களிப்புக் கடலில் நீந்தினர்.

எத்துணை கனிவுடன், எவ்வளவு விறுவிறுப்புடன் பணியாற்றினர் நம் தோழர்கள் என்கிறாய்.

மாலை வேளைகளில், வாதங்களைக் காட்டி, கொள்கை யினை நிலைநாட்டி, அப்பழுக்கற்ற ஆதாரங்களைக் கூறி ஆணித் தரமாகப் பேசிடும் பேச்சாளர்கள், "ஐயா! அண்ணா நிற்கிறார் தேர்தலுக்கு. ஆதரிக்கவேண்டும்! அம்மா! நம்ம அண்ணா நிற்கிறார், ஆதரிக்கவேண்டும்!'' என்று மெத்த உருக்கமாகக் கேட்டுக்கொண்டனர். இன்றும் காஞ்சியில் உள்ளவர்கள் அதுபற்றிப் பேசிப்பேசி மகிழ்கிறார்கள்.

காஞ்சிபுரத்தில் 32 வார்டுகள் தம்பி! அத்தனை வார்டு களிலும் ஒரே நாளில், நமது உடன்பிறந்தார்!

ஊர் முழுதும் நமது கழகத்தோழர்கள் உலாவந்தபடி வீட்டுக்கு வீடு, நமது தோழர்கள் குறித்தே உரையாடல்! ஒரு வேலையும் செய்யாததுபோலத் தெரிந்தது. ஒரே நாளில் பல நாள் வேலையைச் செய்துகாட்டுகிறார்களே - இவர்களுக்குப் பேசத்தான் தெரியும் என்று இதுவரை எண்ணிக்கொண்டிருந் தோம்; "ஓட்டு' கேட்கிற வேலையிலும் இவர்கள் இத்துணை ஆர்வத்தோடு சலிப்புத் துளியுமின்றி, சோர்வு இல்லாமல் பணியாற்றக் கூடியவர்கள் என்பது இப்போதல்லவா தெரிகிறது என்று ஊரார் பேசிடக்கேட்டு உள்ளம் மகிழ்ச்சி பொங்கிடும் நிலை பெறுகிறேன். என் நன்றியும் பாராட்டுதலும் அன்று அரும்பணியாற்றிய அனைவருக்கும்.

தம்பி! எங்கள் ஊர் காங்கிரஸ்காரர்களுக்கு, நான் ஆணவத்தோடு அல்ல, அகமகிழ்ச்சியுடன்,

கழகம் 1957இல் இருந்ததைவிட இப்போது எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், வீணான எதிர்ப்பு வேலையில் ஈடுபட்டு விட்டிருக்கிறீர்கள். பணத்தையாவது பாழாக்காமல் மிச்சப்படுத்திக்கொள்ளுங்கள், 1957இல் எனக்காக ஓட்டு கேட்க ஒரு கார்ப்பரேஷன் கவுன்சிலர் இல்லை! இன்று மூன்று முன்னாள் மேயர்கள்! இந்நாள் மேயர் - துணை மேயர்! முப்பத்துக்கு மேற்பட்ட மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்! எம்.எல்.ஏ.க்கள் பலர்! நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்கள் பலப்பலர் வந்துள்ளனர். இந்த வளர்ச்சியைக் கண்ட பிறகும், ஏன் என்னை எதிர்த்து, காசைக் கரியாக்கிக்கொள்கிறீர்கள். வேண்டாம் வீண் வேலை!

என்று எடுத்துச் சொன்னேன். அவர்களோ கேட்பதாக இல்லை. வெறும் ஆர்ப்பாட்டத்தாலே அச்சமூட்டிவிடலாம், பணத்தை இறைத்துப் பரபரப்பு ஏற்படுத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். தம்பி! இது, இந்தத் தொகுதியில் மட்டுமல்ல, எந்தத் தொகுதியிலும். காங்கிரஸ்காரர்கள் இம்முறை ஒரு தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டு வேலை செய்கிறார்கள்.

கொடிகள் ஏற்றுவது
தோரணங்கள் கட்டுவது
கொட்டு முழக்கு அடிப்பது
தீப்பொறிப் பேச்சு
தெருவெல்லாம் உலா

இவைகளை எவ்வளவுக்கெவ்வளவு வேகமாகவும், விமரிசை யாகவும், அதிகமாகவும் செய்து காட்டுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு பொதுமக்கள் மயங்கிவிடுவார்கள் - சபலம் ஏற்படும்! - என்று தவறாக எண்ணுகிறார்கள். பொதுமக்களுக்கு உள்ள எண்ண மெல்லாம், இன்று காங்கிரஸ்கட்சி காட்டுகிற சுறுசுறுப்பு, மக்கள் அவதியைத் துடைக்கவேண்டிய நேரத்திலே காட்டக் காணோமே, அப்போது ஐயாமார்களைப் பேட்டி காணுவதே கூட அல்லவா கடினமாக இருந்தது. இப்போதல்லவா ஓடோடி வருகிறார்கள், உபசாரம் செய்கிறார்கள், உறவு கொண்டாடுகிறார்கள், வாக்குறுதி தருகிறார்கள்! - என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். நம்மைப்பற்றி அப்படி அல்ல; ஏனெனில், நாம் தேர்தலின்போது தலைகாட்டிவிட்டுப் பிறகு இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்துத் தூங்கப் போய்விடும் பேர்வழிகள் அல்லவே! நாம் நிரந்தரப் பணியாளர்கள் - வெறும் ஓட்டு வேட்டைக்காரர்கள் அல்ல. இந்தத் தேர்தல், நாடு மீட்டிடும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் நமக்கு வழியிலே வந்து சேர்ந்த வேலை! இது முடிந்ததும், ஈடுபட்டுள்ள வேலையில் மீண்டும் மும்முரமாக ஈடுபட்டுவிடுவோம். நம்மை நாள்தோறும் பார்த்துக்கொண்டும், பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிற மக்களுக்கு, நாம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது வியப்பைத் தரவுமில்லை; காரணம் விளங்காமலுமில்லை.

இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் அபேட்சகர்கள் பலர்பற்றி, மக்கள் பேசிக்கொள்வது.

இவர் எப்போது காங்கிரஸில் சேர்ந்தார்?

இவரை எதற்காகக் காங்கிரஸ் சேர்த்துக்கொண்டது?

இவருக்கும் பொது வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?

இவர் சட்டமன்றம் சென்று என்ன செய்திடமுடியும்? பயிற்சி உண்டா, நேரம் உண்டா, நினைப்பு உண்டா? பற்று உண்டா?

என்ற இம்முறையிலேதான்.

காங்கிரசின் சார்பிலே அபேட்சகராக நிற்பவர்களிலே பலர், காங்கிரசின் மகத்தான சாதனைகளைக் கூறி, மக்களிடம் ஓட்டுக் கேட்பதில்லை; முடிவதில்லை; புரிவதில்லை; ஏனெனில், மகத்தான சாதனைகளைக் காங்கிரஸ் செயல்படுத்திக்கொண் டிருந்தபோது, இவர்கள், அந்தக் காங்கிரஸ் இருக்கும் பக்கம் கூடத் தலைவைத்துப் படுத்ததில்லை! அவர்கள் பாவம், எங்கே ஜாலியன்வாலாபற்றியும், ரவுலட் சட்டம்பற்றியும், லஜபதிராயின் வீரம்பற்றியும், தில்லையாடி வள்ளியம்மையின் தீரம்பற்றியும் பேசப்போகிறார்கள்.

அபேட்சகர்கள்கூட இருக்கட்டும், தம்பி! புதை பாணம் போலக் கிளம்புகிறார்களே காங்கிரஸ் பேச்சாளர்கள் அவர்களுக்கு மட்டும் புரிகிறதா, அவையெல்லாம் எப்படிப் புரியும்?

காங்கிரஸ் முகாமில் இன்று உள்ள பேச்சாளர்களிலேயே ஏகப்பட்ட "கிராக்கி' யாருக்கு என்கிறாய்? பழைய காங்கிரஸ் காரருக்கு அல்ல! நம்மிடமிருந்து பிரிந்து போனவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்குத்தான்!! அவர்களைவிட்டு நம்மை ஏசச்சொல்லி கேட்பதிலே ஒரு தனிச்சுவை, காங்கிரசாருக்கு.

முத்தமிழ் வித்தகர்
சண்டமாருதம்
சொற்கொண்டல்

என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் தந்து, பேச்சாளர்களின் தரத்தை மக்களுக்கு அறிவிப்பார்கள் - முன்பெல்லாம். இப்பொழுது காங்கிரஸ் மேடையில் முதல்தரமான பேச்சாளருக்கு என்ன அடைமொழி என்கிறாய்?

தடியடிபட்டவர்
தண்டி யாத்திரை போனவர்
உப்புக் காய்ச்சியவர்
கதர் விற்றவர்
கள்ளுக்கடை மறியல் செய்தவர்
காந்தி பஜனைக்கூடம் கட்டியவர்

என்ற இந்தப் பெயர்கள் அல்லவே அல்ல.

தி. மு. க.வை விட்டு விலகியவர்!

இதுதான் முதல்தரமான அடைமொழி! ஆமாம், தம்பி! பெருங்காயம் இருந்த பாண்டமல்லவா! தி. மு. கழகத்தை விட்டு விலகியவர்! அந்த மணம்தான் இப்போது நல்ல விலைக்கு விற்கிறது, காங்கிரஸ் வட்டாரத்தில்.

அவர்களுக்குப் பாவம், இன்னும், பேசுகிற "பாணி' கூட மாறவில்லை!

மகாத்மா என்று சொல்ல வரவில்லை, தடுமாறுகிறார்கள்!

கதர் கட்டுங்கள் என்று பேசவரவில்லை; கைத்தறியாளர் பற்றிப் பேசிவிடுகிறார்கள்.

அரிஜனம் என்று சொல்ல வரவில்லை; ஆதித்திராவிடப் பெருங்குடி மக்கள் என்றுதான் பேச வருகிறது.

தேசபக்தர்களே! என்று அழைக்க முடியவில்லை! தோழர்களே என்றுதான் பேச முடிகிறது.

வேடிக்கையைக் கேளேன், தம்பி! நம்மைவிட்டுப் பிரிந்த ஒருவர் காங்கிரஸ் மேடைக்குச் சென்றாராம். நிரம்பக் காரசார மாகப் பேசினாராம், நம்மை எதிர்த்து; ஒருவர் சீட்டுக் கொடுத்தாராம், மேடையில் வீற்றிருந்த ஒரு காங்கிரஸ் தலைவர்; அதிலே ஐந்தாண்டு திட்டம் பற்றிப் பேசவும் என்று குறித்திருந் தாராம். படித்ததும், அந்தப் பேச்சாளர்,

ஐந்தாண்டுத் திட்டம் போடுகிறார்கள், ஐந்தாண்டுத் திட்டம்,

பஞ்சம் போக்கிட
பசி நீக்கிட
வறுமை ஒழித்திட
வாட்டம் துடைத்திட

என்று பேசிக்கொண்டே வந்தாராம்; காங்கிரஸ் தலைவர், அடடா, பத்து வருஷங்களாகிறது திட்டம் அமுலாகி, இதுவரை நாம் யாரும் இவ்வளவு சுவையாக, சூடாகத் திட்டம் பற்றிப் பேசினதில்லை; பார் இந்த தி. மு. க. பேர்வழி, எப்படிப் பேசுகிறான் என்று, பக்கத்தில் இருந்தவரிடம் மெல்லிய குரலில் கூறினாராம். இதற்குள் பேச்சாளர், மளமளவென்று கொட்டிய படி இருக்கிறார்.

அணைகள், மலைமலையாக!
தேக்கங்கள், பிரம்மாண்டமாக!
தொழிற்சாலைகள், மிகப்பெரிய அளவில்!
ஆயிரக்கணக்கான
கோடி ரூபாய்கள்
செலவிடுகிறார்கள்.
பக்ரா - நங்கல்!
தாமோதர் பள்ளத்தாக்கு!
சிந்திரி - சித்தரன்ஜன்!
பிலாய் ரூர்கேலா!
துர்காபூர் - பொகாரா!

என்று பேசிக்கொண்டே போனார். காங்கிரஸ் தலைவருக்கு மிகமிக மகிழ்ச்சி.

எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள்;

விஞ்ஞானக் கூடங்கள்;

மாடமாளிகைகள்! கூடகோபுரங்கள்!

என்று சித்தரித்தார். முன்னாள், தி. மு. க; பூரித்துப் போனார். அவரைக் குத்தகைக்கு எடுத்த காங்கிரஸ் தலைவர், பேசிக் கொண்டே, அந்தப் பேச்சாளர்,

இத்தனை பெரிய வளர்ச்சி

இவ்வளவு சீரான வளர்ச்சி,

இத்துணை செல்வம், எங்கே?

எல்லாம் வடக்கே! என்றாரே!

ஒரே கைதட்டல்! ஆரவாரம்! காங்கிரஸ் தலைவர் முகம் வெளுத்துவிட்டது.

காங்கிரஸ் அபேட்சகரோ கைபிசைந்துகொண்டாராம். போச்சு! 500 ரூபா பாழாப் பேச்சு! பாவி, வடக்கு - தெற்கு பேசுகிறானே என்று. கூட்டத் தலைவர், சட்டையைப் பிடித்து இழுத்து, பேச்சாளருக்கு "சிமிட்டா' கொடுக்க, அவர் பாவம், பயந்துபோய்,

பழைய வாசனை
விட்டகுறை தொட்டகுறை

என்று கெஞ்சும் குரலில் சமாதானம் சொன்னாராம்.

தம்பி! இரவல் சரக்கு!! வேறு எப்படி இருக்க முடியும்?

எது எப்படியிருப்பினும், எவ்வளவு பணம் செலவிட் டாகிலும், பிரசாரத்தை ஆர்ப்பாட்டமாக நடத்தவேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் காங்கிரசார்!! பொதுமக்கள் விவரம் விளக்கம் இல்லாதவர்களா! அவர்களுக்குப் புரிகிறது காரணம்; புன்னகை செய்கிறார்கள்!!

மரம் பழுத்ததும் வட்டமிடும் வௌவாலை அவர்கள் பார்த்ததில்லையா - இன்று காங்கிரசிலே புகுந்துள்ளவர்களைப் பற்றி அறிந்துகொள்ள அது போதாதா, தனியாக ஒரு ஏடா படிக்கவேண்டும்.

மார்கழி மாதம் குடுகுடுப்பைக்காரன், நல்ல காலம் பிறக்குது என்று பாடுவதை அவர்கள் கேட்கவில்லையா - தேர்தலின்போது "வரம்' கொடுக்கும் காங்கிரசாரின் போக்கைப் புரிந்துகொள்ள, அவர்கள் புதிதாகப் பள்ளிக்கூடமா போக வேண்டும்!

பாடுபட வந்திருக்கிறார்
தொண்டாற்ற வருகிறார்
ஊழியம் புரிய வருகிறார்

என்று காங்கிரஸ் அபேட்சகர்பற்றிப் பேச்சாளர் பேசும்போது மக்கள் என்ன எண்ணுகிறார்கள் என்கிறாய்,

இவரா தொண்டு புரிபவர்?
எப்போது வந்ததாம் அந்த எண்ணம்?
ஏழையின் தலையைத் தடவுவார்!
எதுவும் தனக்கு என்று தேடுவார்!
ஏமாளியிடம் தட்டிப்பறித்து ஏப்பம் விடுவார்!
இளைத்தவன் சொத்தை ஏலம் எடுப்பார்!
குடிசைகள் இருந்தால் பிரித்துப் போடுவார்!
கோயிலாக இருந்தாலும் கொண்டுவா,
கடப்பாரை என்பார்!
இவரா, பொதுத்தொண்டு ஆற்றுபவர்?
கட்டிய சத்திரம் எத்தனை?
வெட்டிய திருக்குளம் உண்டா?
பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தாரா?
பசித்தவனுக்குச் சோறு போட்டாரா?
பசுவுக்குக்கூட அகத்திக்கீரை தந்திருக்கமாட்டார்.
இவர் பொதுமக்களுக்கு ஊழியம் செய்யப்போகிறாராம்,
ஊழியம்!!

என்றுதான் எண்ணிக்கொள்கிறார்கள். உள்ளூரச் சிரிப்பு அவர்களுக்கு. மகாத்மாவுக்கு ஜே! என்றும், நேருவுக்கு ஜே! என்றும், இந்தத் தேர்தல் காங்கிரஸ்காரர்கள், திடீர் காங்கிரஸ் காரர்கள் கூவுவது, ஏறக்குறையப் புரட்டாசி மாதத்திலே போடப்படும் "கோவிந்தா' போல, என்பது பொதுமக்களுக்குத் தெரியாமலில்லை. அவர்களும் ஒரு காரியமாகத்தான், இந்த "கூத்தை'ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரமாகப் பார்த்தா, சஞ்சீவி ரெட்டியாரும், துணை அமைச்சர் இலட்சுமி மேனன் அவர்களும்,

கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்ததாலே காங்கிரசின் கண்ணியமே பாழாகிவிட்டது.

என்று வெளிப்படையாகப் பேசித் தொலைக்கவேண்டும். பொதுமக்கள் இதையும் அறிந்திருக்கிறார்கள்; இன்றுள்ள காங்கிரஸ்காரர்களை, குறிப்பாகக் காங்கிரஸ் அபேட்சகர் களையும் பார்க்கிறார்கள்; அவர்களுக்குச் சிரிப்புத்தான் வருகிறது.

மற்ற மற்றக் கட்சிகள் யாவும் அந்தந்தக் கட்சியின் சார்பிலே அபேட்சகர்களை நிற்கவைக்கும்போது, அந்தக் கட்சியின்

கொள்கையில் உறுதி படைத்தவர்,
கொள்கைக்காகப் பாடுபட்டவர்,
கொள்கையைக் கடைப்பிடித்தபோது ஏற்பட்ட கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொண்டவர்,
இந்தக் கொள்கைக்காரர் என்று பொது மக்களுக்கு நீண்டகாலமாக அறிமுகமாகி உள்ளவர்

இப்படிப்பட்டவர்களைத்தான் நிற்க வைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஒன்றுதானே,

யாரிடம் பணம் இருக்கிறது?
யாரிடம் ஜாதித் செல்வாக்கு இருக்கிறது?
யாரிடம் அடி ஆட்கள் அதிகம்?

என்று மட்டும் கவனித்து, கொள்கை அறிந்தவரா, கொள்கை வழி நின்றவரா என்று துளியும் கவனிக்காமல், இவர்தான் காங்கிரஸ் அபேட்சகர் என்று கூச்சமில்லாமல் கூறுகிறார்கள். இது பொதுமக்களுக்குப் புரியவில்லையா? புரிகிறது! இந்த நிலைமையால் காங்கிரசின் புனிதத் தன்மையும் பொலிவும் வலிவும் பாழாகிக்கொண்டு வருகிறது என்பதும் விளக்கமாகிறது.

பாலிலே தண்ணீர் கலக்கக் கலக்க, பாலின் தன்மை கெட்டுவிடுகிறது; ஆனால் பார்ப்பதற்கு பால்போல வெளுப் பாகத்தான் தெரிகிறது. அடுப்பின்மீது ஏற்றிக் காய்ச்சும் போதல்லவா அதன் இலட்சணம் தெரியும்! தண்ணீர் ஆவியாகிப் போகும், பால்மட்டும்தான் மிச்சமாகி நிற்கும். அதேதான், காங்கிரசுக்குக் கதியும். தேர்தலில் சரிவு ஏற்பட்டால், தீர்ந்தது, ஒட்டிக்கொண்ட ஒய்யார புருஷர்கள், கண் சிமிட்டிய கனதனவான்கள், சீவிச் சிங்காரித்த சீமான்கள், ஓடோடிப் போய்விடுவார்கள்? காங்கிரசிடம் பற்றுக்கொண்ட, பணிபுரிந்த தொண்டர்கள், தூயவர்கள் மட்டும்தான் மிச்சமாக நிற்பார்கள்.

காங்கிரஸ் தலைவர் சஞ்சீவ ரெட்டியார், மற்றும் பலர், கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்துவிட்டதுபற்றிச் சோகக் குரலிற் பேசுவது கேட்டுப் பொதுமக்கள் சிந்திக்காமல் இல்லை!

கண்டகண்ட பேர்வழிகள், கபடநோக்குடன் காங்கிரசிலே நுழைந்தபோது, எப்படி, பழைய காங்கிரசார், தலைவர்கள், உண்மைத் தொண்டர்கள் இடம் கொடுத்தார்கள்! தானாக முளைத்துவிட்ட களையை உழவன் பறித்தெடுத்துவிட்டல்லவா, பயிர் தழைக்கச் செய்கிறான்; இவர்கள் களைகளைத் தாமாகக் கொண்டுவந்து பயிர் நடுவே நடுகிறார்களே; அதுமட்டுமல்ல, புல்பூண்டு, நச்சுக்கொடி இவைகளை நடுவதற்காகப் பயிரைக்கூட அழிக்கிறார்களே, இது என்ன கெடுமதி - என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்.