அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


''ஐயா? சோறு!'' ''இதோ! நேரு! பாரு''
2

செலவு ஏராளமாகவும் தாராளமாகவும் செய்யக்கூடிய சீமான்களைத் தேர்தலுக்காகச் சேர்த்துக்கொண்டு, பிறகு ஊர்மெச்ச, உயர்ந்த தத்துவம் பேசத்தொடங்கி,

கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்ததால், காங்கிரசே கெட்டுவிட்டது

என்று உபதேசம் செய்கிறார்களே, தம்பி! யாருக்கு இந்த உபதேசம்! ஊரார் இதைத்தான் கேட்கிறார்கள்.

வேலப்பனும் வீரப்பனும் இதுபற்றிப் பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளேன் - எவ்வளவோ பேர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - எப்படி இருக்கும் அவர்கள் பேச்சு என்பதைக் கவனித்திருக்கிறாயா! சிறிது கவிதை நடையும் சேர்த்துப்பாரேன்.

வேலப்பன்:
ஆளுங் கட்சியான பிறகு
ஐயோ காங்கிரஸ் கட்சியிலே
கண்டவர் நுழைந்து கொண்டனரே!
கதருடை போட்டுக் கபடமுடன்
மாண்பும் மதிப்பும் மடிகிறதே
மகாத்மா கண்ட காங்கிரசில்.
சஞ்சலத்துடன் இதைச் சொல்லுகிறார்
சஞ்சீவியார், காங்கிரஸ் தலைவர்!

வீரப்பன்:
சஞ்சலப் படுவதில், புண்யமில்லை
வஞ்சகர் நுழைவைத் தடுத்திடலாம்
நடப்பது முற்றிலும் வேறப்பா!
நாடுகிறார்! ஓடித் தேடுகிறார்
பாடு பாடுபோரை அல்ல! அல்ல!
ஊரை அடித்து உலையில் போடும்
உத்தமரை! எத்தர்களை!!
தேர்தலில் பணத்தைச் செலவுசெய்ய
தேடுகிறார், பணமூட்டைகளை!
வலையை வீசுது காங்கிரஸ்
வஞ்சகர், சூதர், யாவருக்கும்.

வேலப்பன்:
ஆமாம், அதுவும் உண்மைதான்!
ஆகாதென்பது உண்மையென்றால்
அவர்களைக் காங்கிரஸ் சேர்க்கலாமா?
சேர்த்துக் கொண்டவரே, ஒருநாள்
கன்றும் பன்றியும் ஒன்றாச்சே எனக்
கதறிவிடுவதால் பயனில்லை.

வீரப்பன்:
காங்கிரசிலுள்ளவர் இலட்சணத்தை
காங்கிரஸ் தலைவரே, சொல்-விட்டார்.
காங்கிரசுக்கா, "ஓட்டு' இனி?
கபடம், சுயநலம், முடிசூடவா?
கேட்டிடுவோம். வா, நாட்டினரை.

வேலப்பன்:
கழகம் அதைத்தான் சொல்கிறது
அதன் கரமும் வலுத்தால், நீதிவெல்லும்.
கபடம் சுயநலம் உடைபட நாம்
போட்டிடுவோம் நம் ஓட்டுகளை.
"உதய சூரியன்' சின்னம் அதற்கே!

தம்பி! இதுபோலப் பொதுமக்கள் முறையாகப் பேச, சுவையாகப் பாடிட முடியாது; எண்ணுகிறார்கள் நிச்சயமாக. அவர்தம் எண்ணத்திற்கு வண்ணமளித்து, நாட்டிலே பாட்டு மொழியில் எடுத்துரைக்கும் பொறுப்பு உன்னுடையதல்லவா? உனக்கன்றி வேறு எவருக்கு உண்டு அதற்கான திறமை!

பதினான்கு ஆண்டு சுயராஜ்யத்துக்குப் பிறகு, முன்னாள் டில்லி நிதி அமைச்சர், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறுகிறார்:

100க்கு 95 மக்கள் பஞ்ச நிலையில்தான்
வாழ்க்கை நடத்துகிறார்கள்.

என்று. இந்த நிலைமையை ஏற்படுத்திவிட்டு, "ஓட்டும்' கேட்கிறார்களே, ஓட்டப்படவேண்டியவர்கள். இந்த அரசியல் அக்ரமத்தை உலகில் வேறு எங்கு காணமுடியும்!

ஏழை மக்களைப் பார்த்துக் காங்கிரஸ் கட்சி "ஓட்டு' போடும்படி கேட்கும்போது, அவர்கள் மனம் என்ன வேதனை அடைகிறது என்கிறாய்.

ஓட்டுக்கேட்குது காங்கிரசு
என்னை
ஓட்டாண்டியாக்கிவிட்டு

என்றல்லவா ஏழை எண்ணுகிறான்; அவனால் எண்ணத்தான் முடியும்; மனதில் உள்ளதை எடுத்துக்கூற முடியுமா? அந்தப் பணி உன்னுடையது! அந்தத் திறமை உன்னிடம் நிரம்ப உண்டு!

ஐயா! சோறு!
என்று
ஏழை
கேட்கிறான்
காங்கிரசார்
பதில், என்ன
தருகிறார்கள்
இதோ! நேரு பாரு!

இவ்வளவுதானே! பார்க்கிறான் நேருவை! கேட்டு மகிழ்கிறான் அவர் ஆற்றிய தொண்டுகளை! ஆனால் அந்த நேரு நடத்தும் காங்கிரசில் இன்று சேர்ந்து ஓட்டுக் கேட்கும் உத்தமர்களின் இலட்சணமும் தெரிகிறதே - வயிறு அல்லவா அவனுக்குப்பற்றி எரிகிறது!!

என் கணவனை வெட்டிய கொடுவாள் இது - இதற்கு வெள்ளிக்கிழமைதோறும் நான் பூஜை செய்வேன் என்று எந்த மாதாவது கூறத் துணிவாளா? காங்கிரஸ் பேச்சாளர்கள் துணிந்து கூறுகிறார்களே, இவர்தான் காங்கிரஸ் அபேட்சகர் என்று, வாய்மை, தூய்மை, அறிவுடைமை, அன்புடைமை, அறம், நெறி, தன்னலமற்ற தன்மை, தொண்டு உள்ளம் எனும் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டவர்களைப் பிடித்திழுத்துக்கொண்டு வந்து.

காந்தீய போதகர் சங்கத்தைக் கோட்சே துவக்குவது போலல்லவா இருக்கிறது. காங்கிரசின் கொள்கைளைக் கடுகளவும் மேற்கொள்ளாமல் முற்றிலும் மாறாக நடந்தவர் களைக் காங்கிரஸ் அபேட்சகர்கள் ஆக்குவது.

தம்பி! என்னைக் கேட்கிறார்கள், தலைவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு, காங்கிரஸ் தொண்டர்கள்,

சுதந்திரா கட்சியுடன் கூட்டுச் சேரலாமா?
கம்யூனிஸ்டுடன் உறவாடலாமா?

என்று. ஊரிலே உள்ள உலுத்தர்களுடன் உறவாடுவதுமட்டுமல்ல, அவர்களுக்காக உலா வந்து உரத்த குரலில் முழக்கமிட்டு, ஓட்டு வாங்கிக் கொடுக்கிறோமே, இது காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்துக்கு ஏற்றதா, காங்கிரஸ் தொண்டர் என்ற தரத்துக்கு ஏற்றதாகுமா என்று எண்ணிப்பார்க்கிறார்களா? அதுதான் இல்லை! ஏன்? கட்சிக்காக வேலை செய்கிறோம். ஆளுக்காக அல்ல என்ற போலித் தத்துவம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

பால் தருவதுதான் பசு! நாலு காலும் ஒரு வாலும் கொண்டவை அத்தனையும் பசு ஆகுமா!

கொள்கைக்காகத்தான் கட்சி! கட்சிக்குள்ளே நுழைந்து விட்டவர்களெல்லாம் கொள்கையாளர் என்று கூறிவிட முடியாதே!

எந்த ஊருக்குப் போகவேண்டுமோ அந்த ஊர்ப்பக்கம் போகிற இரயில் ஏற வேண்டுமேயன்றி, எந்த இரயில் பளபளப் பாக இருக்கிறதோ, அதில் ஏறிக்கொண்டு, போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேரவா முடியும்!

அதுபோலத்தானே, ஒரு கட்சியை வளர்ச்சி அடையச் செய்யவேண்டுமானால், அதனுடைய கொள்கைக்குச் செல்வாக்குத் தேடவேண்டும், கொள்கையின்படி நடப்பவர் களை மதிக்கவேண்டும், ஆதரிக்கவேண்டுமேயொழிய, யார் அதிகக் கொடிகள் தைத்துக் கொடுப்பார்கள், எவரிடம் அண்டினால் பணம் தண்டலாம் என்றா பார்ப்பது!

தம்பி! இவைபற்றிய எண்ணம், காங்கிரஸ் தொண்டர் களுக்கு எழத்தான் செய்கிறது. எனினும், கட்சியில் ஈடுபாடு கொண்டுவிட்டதால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்.

அவர்களுடைய எண்ணம் ஈடேறவில்லை.

அவர்கள், சுயராஜ்யம் சுயராஜ்யமாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்து உழைத்தார்கள்; இன்று அவர்கள் கண்ணெதிரே சூதுராஜ்யம் நடக்கிறது; மனம் குமுறுகிறார்கள் என்றாலும், துகில் உரியப்பட்ட நேரத்தில் துரோபதை கதறியது பாண்டவர் செவிகளில் விழாமலா இருந்தது. அர்ஜுனனிடம் வில் அம்பு இல்லையா - பீமனிடம் "கதை இல்லையா' ஆனால், என்ன செய்ய முடிந்தது? சூதாடித் தோற்றுவிட்டோம் என்று தருமர் கண்கலங்கி உட்கார்ந்துவிட்டார் - மற்றவர்கள் மனம் உடைந்து உட்கார்ந்துவிட்டனர். காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி வெற்றிபெறவேண்டும் என்பதற்காகத் தேர்தல் சூதாட்டமாடி, தங்கள் பழம் பெருமை, தியாக உணர்வு யாவற்றையும், குட்டிக் குபேரர்களிடம் இழந்துவிட்டார்கள்; துகில் உரியப்படுவது போல, காங்கிரஸ் கட்சியைக் கனதனவான்கள் தொட்டிழுக் கிறார்கள் - இவர்களோ, பாவம், பல்லைக்கடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தம்பி! அவர்களுக்காகவும் சேர்த்துத்தான் நாம் பணியாற்ற வேண்டும்.

நாம் வீழ்த்த விரும்பும் காங்கிரஸ் கட்சி, உண்மைக் காங்கிரஸ் தொண்டர்களை வீழ்த்திவிட்ட காங்கிரஸ்!

நாம் வீழ்த்த விரும்பும் காங்கிரஸ் கட்சி, மகாத்மாவின் காங்கிரசல்ல, மாபாதகம் புரிவோருக்கெல்லாம் இடமளித்துள்ள காங்கிரஸ் கட்சி!

அரசியல் ஏடுகள் படித்திட நேரமில்லாவிட்டாலும், கட்சி களில் ஈடுபடக் காலம் இடந்தாராவிட்டாலும், சாதாரண மக்கள் - உழைப்பாளிகள், தாய்மார்கள், பல காரியங்களிலே எத்துணை தெளிவுடன், பகுத்தறிவுடன் நடந்துகொள்கிறார்கள் - அவர் களின் போக்கைக் கண்டுகூடத் தெளிவுபெறலாமே, பாடம் கிடைக்குமே.

எதை எதை எங்கெங்கு வைக்கவேண்டும், எதை எதை எப்படி எப்படி உபயோகிக்கவேண்டும், எதை எதை எப்போது எப்போது உபயோகிக்கவேண்டும், என்று மிகச் சாதாரண காரியங்களிலேகூடத் தெளிவுடன் நடந்துகொள்பவர்களை, படித்தும் பக்குவம் பெறாதவர்கள். "பாமரர்' என்று அழைக் கிறார்கள்; அந்தப் "பாமரர்' செயல்களிலிருந்து பெறக் கிடைக்கும் பாடத்தின்படி நடந்துகொண்டால்கூடப் போதும், செம்மை யான அரசியல் நடத்தலாம்.

தேங்காயின் மேல் உள்ள மட்டை ஓடு இவைகளை நீக்கிவிட்டு, உள்ளே உள்ளதை மட்டும்தான் எடுத்துக்கொள்ளுகிறார்கள் - பயன் அறிந்து.

மாங்காய்க்கோ, முறை வேறு! மேலே உள்ள தோலையும் எடுத்துவிடுகிறார்கள், உள்ளே காணப்படும் "விதை'யையும் நீக்கி விடுகிறார்கள்.

மோர் கடைகிறார்கள்; வெண்ணெய் காய்ச்சுகிறார்கள்! வாழை இலையில், சோறு வைத்துச் சாப்பிடுகிறார்கள்; பனை ஓலையில் விசிறி தயாரிக்கிறார்கள்!

வேப்பம்பூ எடுத்து "ரசம்' வைக்கிறார்கள்; பூசுணைப்பூவை அல்ல! இதுவும் பூ அதுவும் பூ!

வாழைக்காயை, வேகவைக்கிறார்கள்; பழத்தை பழமாகவே சாப்பிடுகிறார்கள்.

பால் காய்ச்சும்போது நெருப்பை அடக்கிவைக்கிறார்கள்; பருப்பு வேகவைக்கும்போது விறகை ஏறத்தள்ளுகிறார்கள்.

கோழியைக் கூடைபோட்டு மூடிவைக்கிறார்கள்; கன்றினைக் கயிறுகொண்டு கட்டிவைக்கிறார்கள்!

இவைகள் எல்லாம் மிகச் "சாமான்யமான' காரியம்; ஆனால் இவைகளில் ஒரு ஒழுங்கு, முறை இருக்கிறதே!

பால் பானையை உறியில் வைக்கிறார்கள்; ஊறுகாய் பானையை அவ்விதம் அல்லவே!!

எது எது எங்கெங்கு இருக்கவேண்டும் என்பதற்கான முறைகெட விடமாட்டார்களே?

உரலில் போட்டுக் குத்தவேண்டியது இது, அம்மியில் வைத்து அரைக்கவேண்டியது இது. இயந்திரத்தில் போட்டு அரைக்கவேண்டியது இது என்று "பாகுபாடு' இருக்கிறதே; அது கெடாதபடி அல்லவா நடந்துகொள்கிறார்கள்.

அடுக்களையில் உள்ள தாய்மார், எதை எங்கு வைக்க வேண்டும், எதை எப்படிச் செய்யவேண்டும், எதை எப்போது செய்யவேண்டும் என்று தெரிந்து செயல்படுகிறார்களே, தம்பி! அரசியல் கட்சிகள் இந்த அளவுக்குத் தெளிவுடன், காரிய மாற்றக்கூடாதா? இல்லையே! வருகிற தொல்லையில் பாதி அளவுக்குமேல் இதனால் வருவதுதானே!

தேனில் குழைத்துச் சாப்பிடவேண்டியது, பாலில் கலந்து சாப்பிடவேண்டியது, வாயில் போட்டு தண்ணீர் விழுங்கிட வேண்டியது என்று ஒவ்வொரு முறை இருக்கிறதே, தம்பி!

அதுபோல எதை எதை எந்தெந்த முறையில் பயன் படுத்துவது என்று அரசியல் கட்சிகள், தெளிவுடன் நடந்து கொள்ளவேண்டாமா? நடந்துகொள்ளக் காணோமே!!

சந்தைக் கடையில் இருக்கவேண்டியவர்களைச் சட்ட சபைக்கு அனுப்புவது, கட்சியின் நன்மைக்காக என்று கருதுவது, தாய்மார்களுக்குத் தெரிந்த அளவு தெளிவும் அரசியல் கட்சிப் பணியாளர்களுக்கு, கட்சிப்பற்றுக் காரணமாகத் தெரியாமல் போய் விடுவதால்தான்!

அந்தத் தெளிவு இல்லாமல், கட்சிக்காகக் கண்டவர் களுக்குக் கொடிபிடித்துக் கோலோச்சும் இடத்திலே கொண்டுபோய் அவர்களை உட்காரவைத்துவிட்டு, அவர் களால் கட்சிக்கும் கேடு ஏற்பட்டு, நாட்டுக்கும் நாசம் ஏற்படக் கண்டு, பிறகு கண்களைக் கசக்கிக்கொள்வதும், கைபிசைந்து கொள்வதும், காங்கிரஸ் தொண்டர்களின் "கதி'யாகிவிட்டது.

இவர்களின் உழைப்பால் ஊராள்வோராக மாறிவிட்ட வர்கள், ஏழைகளை மறந்து, எத்தர்களுடன் கூடி, முத்தனைக் காப்பாற்றாமல் முந்திராவுடன் குலவி, பாடுபடுபவன் கூலி உயர்வு கேட்டால் சுட்டுத் தள்ளும் பாதகர்களுக்குப் பரிவு காட்டும் நிலை பெறுபவர்களைக் கண்டு பதறிப் பதைபதைக்கிறார்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு, ஆளைக் கவனியாமல், எவரெவரை எந்தெந்தக் காரியத்துக்குப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்காமல், தாய்மார்கள் மிகச் சாதாரணச் செயல்களில்கூடக் காட்டும் சீரான முறைகளைக் கண்டும் தெளிவுபெறாமல், உட்காரும் மணை சதுரமாக இருக்க வேண்டும்; உருண்டோடும் சக்கரம் வட்ட வடிவமாக இருக்க வேண்டும் என்பதுபோல, எந்தவிதமான காரியத்துக்கு எந்தவிதமாக ஆற்றல் இருக்கவேண்டும் என்பதை அறிந்து, அதற்கேற்றபடிதான் ஓட் அளிக்கவேண்டும் என்று எண்ணிப் பாராமல், "கட்சியைக் கவனி! கட்சியைக் கவனி!' என்ற பேச்சுக்கு இரையாகித் தகுதி திறமை அற்றவர்களைத் தர்பாருக்கு அனுப்பி விட்டு, அவர்கள் ஆட்சியாலே அடுக்கடுக்காக அல்லல் வரக் கண்டு, ஓட்டுப் போடச்சொன்ன காங்கிரஸ் தொண்டர்களைப் பார்த்து,

ஐயா! சோறு!

என்று ஏழை கேட்கிறான்.

என்ன செய்வது? எப்படி ஏழ்மையைத் தீர்ப்பது? ஆளவந்தார் களை எப்படிக் கேட்பது? என்று புரியாமல், திகைத்துப்போகும் காங்கிரஸ் தொண்டர்கள்,

ஐயா! சோறு!
என்று கேட்கும் ஏழையிடம்
இதோ! நேரு! பாரு!

என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள். தம்பி! இந்த நிலைமை யினை நாடறியச் செய்யவே, பொதுத்தேர்தல் வருகிறது. அந்தப் பொறுப்பறிந்து நடந்துகொள்ளும் பொன்னான குணம் படைத்த உனக்கு, இன்னும் சொல்லவாவேண்டும்! செயலாற்று! வெற்றி பெறு!!

அண்ணன்,

10-12-1961