அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பாபுவின் பவனி
1

இராஜேந்திரப் பிரசாத்தின் உலா -
இந்தி எதிர்ப்பு -
நிதி அமைச்சர் கருத்து

தம்பி!

கிருஹப்பிரவேச மஹோர்சவ விஞ்ஞாபனம்

நிகழும் விகாரி வருஷம் தை மாசம் சுக்ரவாரம் உதயாதி சுப முகூர்த்தத்தில்
ஸ்ரீ மீனாட்சி சமேத சொக்கர் கடாட்சத்தால், அடியேன் ஏகாம்பரதாசன், திருமஞ்சன வீதியில்
புதிதாக அமைத்திருக்கும் வீட்டிற்கு

கிருஹப்பிரவேசம்

செய்யப் பெரியோர்களால் நிச்சயித்து இருப்பதால் தாங்கள் தங்கள் இஷ்டஜன மித்ராளுடன் எழுந்தருளி எம்மை ஆசீர்வதித்தருள வேண்டிக்கொள்கிறேன்.

அன்றிரவு பிரம்மஸ்ரீ காவியானந்த ஸ்வாமிகளின்

"ருக்மணி பரிணயம்'

எனும் காலட்சேபம் நடைபெறும். அனைவரும் வந்திருந்து பகவத் பிரசாதம் பெற்று ஆனந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்,
தங்கள் விதேயன்
ஏகம்பரதாசன்
"அனுக்கிரஹம்''

இப்படி ஒரு அழைப்பிதழ் உனக்குக் கிடைத்தால், என்ன எண்ணிக் கொள்ளுவாய்? என்னண்ணா! இது! எங்கே கிடைத்தது இந்தப் பத்தாம் பசலி, எந்தக் குப்பையிலே கிடந்தது? தமிழா, இது? ஒரே மணிப்பிரவாளம்! யார் இந்தத் தாசன்? தேடித்தேடிப் பார்த்தால், தூய தமிழ்ச் சொற்கள் இந்த அழைப்பிதழிலே, ஒரு பத்துக்கூடக் கிடைக்காது போலிருக் கிறதே! தமிழ் வரிவடிவம் ஒரு கேடா, இந்த கலக்கலுக்கு! விஞ்ஞாபனமாம் விஞ்ஞாபனம்! க்ருஹம்! ஏன்? அழைப்பு! இல்லம்! என்று சொன்னால் என்னவாம்? வாயா வெந்துவிடும்? - என்றெல்லாம் கேட்பாய் - கோபம் பொங்கும் உனக்கு. தமிழ் மொழியின் தூய்மையைக் கெடுக்கும் செயலைத்தான், நீ வம்மையாகக் கண்டிப்பவனாயிற்றே!

ஆனால், தம்பி! நான், இந்த அழைப்பிதழை உன்னிடம் காட்டியது, தமிழ் மொழியை எப்படிப் பாழ்படுத்தி இருக்கிறார்கள் பார்த்தாயா என்பதை எடுத்துக்காட்ட அல்ல!

இதை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தது யார், தெரியுமா? என் நண்பர் முத்தழகர் தெரியுமல்லவா, உனக்கு; அவருடைய மகன், பொன்னப்பன்! ஆமாம், அவன், அஞ்சல் துறையிலே பணியாற்றுகிறான் - இந்தப் பணிதான்...

அப்படியா அண்ணா! முத்தழகர் ஒரு காலத்திலே பெரிய புள்ளியாக இருந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் குடும்பம் இப்போது, வளம் கெட்டுவிட்ட நிலையில் இருக்கிறது போலும் என்று கூறிடுவாய் - ஆறுதலளிக்க. ஆனால், தம்பி! புதுமனை புகுவிழா அழைப்பிதழைப் பலருக்கும் கொண்டுபோய்த் தருகிறானே, பொன்னப்பன் - அவன் துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தைக் கழித்தது, இப்போது "அனுக்ரஹம்' ஆகியிருக்கிறதே, அதே இடத்தில்தான்.

வீடு, பலகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்ததால் கலனாகி விட்டது. பார்ப்பவர்கள் பழுது பார்க்கக் கூடாதா? இது, பாட்டன் முப்பாட்டன் காலத்துச் சொத்தாச்சே? என்று கூறினர்; பணமுடை முத்தழகருக்கு; ஏகாம்பரம் "தாசன்' ஆகிவில்லை அப்போது; வெறும் ஏகாம்பரம்; பணம் அதிகம் சேராதிருந்த காலம்; ஆனால் தன்னிலும் சற்றுத் தாழ்ந்திருப்பவர்களின் நிலைமையை மோப்பம் பிடித்தறிந்து, சிறு சிறு தொகை கடன் கொடுத்து, "வட்டி' பெறுவது வாடிக்கை; முத்தழகர் சிக்கினார், கடன் கொடுத்தான்; வட்டிமேல் வட்டி ஏறிக் கடைசியில் வீடே அவனுக்கு என்றாகிவிட்டது, தம்பி!அந்த வீடுதான் இப்போது "அனுக்ரஹம்' ஆகிவிட்டது; ஏகாம்பரம், "தாசன்' ஆகி கிருஹப் பிரவேசம் நடத்துகிறான். அந்த அழைப்பிதழைப் பலருக்கும் கொடுக்கும் பணியில், முத்தழகர் மகன் ஈடுபட்டிருக்கிறான்!

குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் உலா ஏற்பாடாகி இருக்கிறது; அந்த உலாவைக் காமராஜர் ஏற்பாடு செய்கிறார்; நாட்டவருக்கும் அறிவித்திருக் கிறார்; அன்பழைப்புகளை அனுப்பப் போகிறார்!!

குத்திக் குடலெடுத்துக் கொன்றுவிட்டான் காதகன்; குங்குமம் இழந்தாள் குமாரி. குமுறிக் கிடக்கிறாள் கைம்பெண்ணாகி! ஓர் நாள், விவரமறியாச் சிறுமிகள் ஓடோடி வந்து, "எப்போது பார்த்தாலும் கண்ணீர் வடித்தபடி இருக்கிறாயே அக்கா! வந்துதான், பாரேன் வெளியே! வாண வேடிக்கை! பொய்க்கால் குதிரை ஆட்டம் ஊர்வலம் வருகிறது, வந்துதான் பாரேன்!' என்று அழைக்கிறார்கள். "நான் இருக்கும் இருப்புக்கு, வேடிக்கை வேறு பார்க்க வேண்டுமா? உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள் - நான்தான், மஞ்சள் இழந்த மாபாவியானேனே - எனக்கு என்ன வேலை, களிப்பு நடமாடும் இடத்தில்?'' என்று கூறுகிறாள் மாது. சிறுமியர், விடாப்பிடியாகப் பிடித்திழுத்து வருகிறார்கள். வெளியே, ஊர்வலம் வருகிறது! என்ன காண்கிறாள் ஊர்வலத்தில்! குத்திக் குடலெடுத்துக் கொன்றானே, கணவனை, அந்த வீராதி வீரனை, விருதுகள் பெற்றான் என்ற காரணத்துக்காக, ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள்!!

தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகிக் கதறி, என் மக்கள் இனி இந்த இந்தியிடம் சிக்கி என்னென்ன பாடுபடவேண்டி நேரிடுமோ, இந்தியை ஆட்சிமொழி ஆக்கிவிட்டால், அம்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்களன்றோ, ஆதிக்கம் செலுத்திடவும், அரசோச்சி மகிழவும் வழி ஏற்பட்டுவிடும், என் மக்கள் இழிநிலைமைக்குத் தள்ளப்பட்டுக், காடு வெட்டவும், கல் உடைக்கவும், குப்பை கூட்டவும் குற்றவேல் புரியவுமான அடிமை நிலையன்றோ அடைவார்கள்! சீராட்டிப் பாராட்டி வளர்த்தேன், செல்வக் குடிப்பிறந்தீர்கள், செயற்கரிய செய்து வாழ்வீர்கள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கிடந்தேன். இப்போதோ எமது மரபு அழித்திடும் இந்தியன்றோ ஆட்சி மொழியாகிறதாம் என்று கதறித்துடித்திடும் வேளையிலே, இந்திமொழிக்கு ஓர் வெற்றி உலா நடத்தி, அந்த உலாவின்போது, இந்திக்கு ஆலவட்டம் வீசிடத் தமிழ்த் தாயை அழைத்தால், எப்படி இருக்கும் நிலைமை?

குத்திக் குடலெடுத்துக் கணவனைக் கொன்ற ஓர் மாபாவிக்குக் கொடியவர்கள் உலா ஏற்பாடு செய்து, அதனைக் காண மஞ்சள் இழந்த மாதை அழைத்தால், அவள் எவ்வளவு வேதனை அடைவாளோ, அஃதே போன்ற வேதனையன்றோ ஏற்படும், ஆட்சிமொழி ஆகிவிடும் இந்திக்கு ஆலவட்டம் சுற்றத் தமிழ்த்தாயை அழைத்தால்!

1965க்குப் பிறகு இந்தியே ஆட்சிமொழி என்று அறிவிக்கும் ஆணையைப் பிறப்பித்துவிட்டு, குடியரசுத் தலைவர் தமிழகத்தில் உலா வருவது, இந்தி வெற்றி விழா நடத்துவதற்கு ஒப்பானதுதானே. எப்படித் தமிழர்கள் இதைத் தாங்கிக்கொள்ள முடியும்? ஏன் தாங்கிக் கொள்ளவேண்டும்?

குடியரசுத் தலைவர், "சாந்த சீலர்' என்று போற்றப் படுபவர்; வெள்ளையரை விரட்டிடும் போரிலே முன்னணி நின்றவர்; பல கஷ்ட நஷ்டம் கண்டு கலங்காதிருந்தவர்; காந்தியாரின் அன்பினைப் பெரும் அளவு பெற்றுத் திகழ்ந்தவர்; தம்பி! இந்தச் சிறப்புகளை, நான் மறந்திடவில்லை. நீயும் அறிந்தே இருக்கிறாய். ஆனால், குடியரசுத் தலைவர், இந்தி மொழி விஷயத்திலே மிகக் கண்டிப்பானவர்; இந்தி வெறியர்களே, அவரைத்தான் தமது பாதுகாவலராகக் கருதுகிறார்கள்; நேரு பண்டிதர்கூடச் சில வேளைகளில் - நெளிகிறார், ஆங்கிலத்தின் நேர்த்திபற்றித் தன்னை மறந்த நிலையில்கூடப் பேசுகிறார். ஆனால் பாபு இராஜேந்திரர், எப்போதும், இந்தி விஷயத்திலே, திட்டவட்டமாகவும், தீவிரமாகவும், துணிவாகவும் பேசி வருகிறார்; எனவே, இந்தித் திணிப்புக்கு இவரே தக்க கருவி, இவரைக் கொண்டுதான், இந்தி மொழி ஆதிக்கம் வெற்றிபெறச் செய்துகொள்ள வேண்டும் என்று இந்தி வெறியர்கள், முழு நம்பிக்கையுடன், இருந்து வருகிறார்கள்.

எனவே, பாபு இராஜேந்திர பிரசாத் இந்தி ஆதிக்கக்காரர்களின் பிரதிநிதியாகத் தமிழகம் வருகிறார் - எந்தத் தமிழகம், ஏற்க மாட்டோம் இந்தியை என்று எக்காளமிட்டு நிற்கிறதோ அந்த தமிழகத்தில் உலா வருகிறார்!

"ஏடா, மூடா! எனது மொழி இணையற்ற எழிலுள்ள மொழி! தாய்மொழி! தமிழ்மொழி! என்றெல்லாம், முழக்கமிடுகிறாயே! செம்மொழி என்று பேசுகிறாய் செருக்குடன்! வேறு எம்மொழியிலும் காணக் கிடைக்காத கருத்துக் கருவூலங்கள் உண்டு எமது மொழியிலே என்று இறுமாந்து பேசுகிறாய்! முடியுடை மூவேந்தர்கள் கட்டிக் காத்தனர், போற்றி வளர்ந்தனர், எமது இனிமைத் தமிழ்மொழியை என்று சுவை சொட்டிடப் பேசுகிறாய்! இதோ, பார், பவனிவரும் பாபு, இந்திமொழியின் ஆதிக்கத்தை விளக்கிடும் நடமாடும் சான்று! என்ன சொல்கிறீர்கள், இதைக் கண்டு! நல்ல மொழி என்கிறீர்களே, உமது தமிழ்; எமது இந்தி மொழியை, ஆட்சி மொழி ஆக்கிவிட ஆணையைப் பிறப்பித்துவிட்டு, உலா வரும் அஞ்சா நெஞ்சனாம் எமது பாபுவைப் பாராட்டி, ஒரு வாழ்த்துப்பா இயற்றுங்கள்; பரிசு வேண்டுமானால் பெறலாம்! என்றன்றோ, இந்தி வெறியர் பேசுவர்.

இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கிவிட்டால், சமாளிக்க முடியாத எதிர்ப்பு எழும். சண்டமாருதம் போலத் தமிழர் கொதித்தெழுந்து நிற்பர். அவர்கள் விழி உமிழும் கோபக்கனல் தீயாகித் திக்கெட்டும் பரவும் என்றெல்லாம் பேசுகிறார்களே. என்ன செய்ய இயலும், பிடியை எம்மிடம் சிக்கிட விட்டுவிட்ட தமிழர்களால், அடிமைத் தளைகளையே அணிபணி என்று எண்ணிக் கொண்டுள்ள ஏமாளிகளால், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு குழைந்து கிடக்கும் கும்பலால்! பவனி வருகிறார், பாபு! பல்லிளித்து நிற்க ஆட்கள் வேண்டுமா, காட்டுகிறோம், பாருங்கள்! பராக்குக் கூறிடுவோர், பாரீர்! - என்றல்லவா, பேசுவர், எதிர்ப்பு எதுவாயினும் அதனை முறியடித்து, எதிர்ப்போரின் இடுப்பொடித்தோ உயிர் குடித்தோ, எதிர்ப்பை அழித்தொழித்து, எமது இந்தியை ஆட்சிமொழி ஆக்கியே தீருவோம் என்று பேசி நிற்கும் வன்கணாளர்கள்.

"அம்மா! அது யார்?'' என்று கேட்கும் சிறுவனுக்கு, தாய் என்ன பதில் கூறுவது!

"அவர்தானடா, கண்ணே! "அம்மா' என்று எந்தத் தமிழ் மொழியால் இனிமை வழிய வழிய என்னை நீ அழைத்து அகமகிழச் செய்கிறாயோ, அந்தத் தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றுள்ள மக்களுக்கு, வேற்று மொழியை ஆட்சிமொழி ஆக்கிவிட்ட உத்தமர்! உன் தாய்மொழியை நீயே இகழ, இழக்கச் செய்திடும் "சத்புருஷர்!' - என்றா பதிலளிக்க முடியும்?

"ஐயோ, அம்மா! நம் தாய்மொழிக்கே ஆபத்துத் தேடியவரா, இவர்? இப்படிப்பட்டவர், என்னையும் உன்னிடம் இருந்து பிரித்து, எவளோ ஒரு வெள்ளாட்டியிடம் விரட்டி விட்டு, உன்னைப் பெற்றவள் இருக்கட்டும் ஒருபுறம்; இனி இவளிடமே நீ இருந்து வரவேண்டும்!'' என்று கட்டளை பிறப்பிப்பாரோ? பயம் மேலிடுகிறதே! அவரைக் காணவும் கூசுகிறதே!! என்றன்றோ சிறுவனும் கூறுவான்.

"அண்ணா! அண்ணா! அகம் என்பாய், புறம் என்பாய்; அழகுதரும் இலக்கியம் என்பாய்; அவனியோர்க்கே அறிவளிக்கும் அறநூலாகும் குறள் என்பாய்; அந்தத் தமிழ் மொழி பயின்றிடும் நமக்கு, ஆட்சி மொழியாக இந்தியா? அதற்கான கட்டளை பிறப்பித்தவர், இவர்தானா? இவர் விழாக் கொண்டாடும் நாட்டிலா, நாம் நடமாடிக் கிடக்கிறோம்'' என்று தம்பி கேட்பான், அண்ணனை.

தம்பி! தமிழகம், எதை எதையோ தாங்கிக்கொள்கிறது; பசி, பஞ்சம், பட்டினி, வேலையில்லாக் கொடுமை, விலையேற்றம், கடற்கொந்தளிப்பு எனும் ஏதேதோ இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது; எனினும் இதனையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்?

இந்தி ஆட்சிமொழி ஆகிவிடும்; தமிழர் தாய்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர் என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள தமிழர்களுக்கு ஒரு ஆறுதல் மொழி அளிக்காமல், இந்தி பேசாதாரின் எதிர்காலம் இருண்டுபோய் விடாது, இந்தி பேசுவோர் ஆதிக்கம் செலுத்தவும், மற்றையோர் அடிமைப் பட்டும் கிடக்கும் நிலை ஏற்படாது என்று உறுதிமொழி அளிக்காமலும், குடியரசுத் தலைவர் உலா வருவது எற்றுக்கு!

நேரு பண்டிதர் வாக்குறுதி அளித்தார், பாராளு மன்றத்தில், ஒரு முறைக்கு இரு முறை.

அதனைத் தம்பி! நிதி அமைச்சர், நினைவுபடுத்துகிறார் - தேவையில்லை. அமைச்சரிடம், நாம் இந்தத் "தபால்' உத்யோகம் பார்க்கும் ஆற்றல் இருப்பதை மட்டுமா எதிர்பார்க்க வேண்டும்! நேரு பண்டிதர் தந்த வாக்குறுதி நமக்கும் தெரியும், நாட்டுக்கும் நாம் இதனை அறிவித்திருக்கிறோம்.

ஆனால், விளக்கப்பட வேண்டிய பிரச்சினை, நேரு பண்டிதர் அளித்த வாக்குறுதிபற்றிக் குடியரசுத் தலைவரின் ஆணையிலே ஏன் விளக்கமான, திட்டவட்டமான குறிப்பு இல்லை - என்பதாகும்.

இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், அதற்கு என்னென்ன குழுக்கள் அமைக்கலாம் என்பதுபற்றி ஆர்வமும் அவசரமும் காட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது; அந்த ஆர்வமும் அவசரமும், இந்தி பேசாத மக்களுடைய கருத்து அறியவேண்டும், காலக்கெடுவின்றி ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதிலே ஏன் காட்டப்படவில்லை. அந்த வகையிலே என்ன முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன?

இந்தி பேசாத மக்களின் கருத்தை அறியவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் உறுதி இருக்குமானால், அந்த வகையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்! அதற்கான நடவடிக்கை, என்ன எடுத்துக்கொள்ளப்பட்டது?

அந்த நடிவடிக்கை எடுத்துக்கொள்ளப்படாமல், இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதற்கான வழிவகைகளிலே மட்டும், ஆர்வமும் தீவிரமும், அவசரமும் காட்டப்படுவதுதான், பேராபத்து என்கிறோம்.

தம்பி! இதற்காகத்தான், இந்தி எதிர்ப்பு அறப்போர் நடாத்த நமது கழகம் முடிவெடுத்திருக்கிறது.

இது, குடியரசுத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனைக் கண்ணுற்றவர், அது குறித்து ஏதும் கூறாமல், உலா வர மட்டும் ஏற்பாடு செய்கிறார் என்றால், உன்னையும் என்னையும், நம்முடன் திரண்டு நிற்கும் பல இலட்சக்கணக் கானவர்களையும், துச்சமென்று மதிக்கிறார் - இவர்களை ஏதும் செய்யலாம் என்று எண்ணுகிறார் என்றுதானே பொருள்.

குடியரசுத் தலைவரின் உலா, இந்த அவர் போக்கை, நாடு ஏற்றுக்கொள்கிறது, அனைவரும் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் என்று உலகுக்கு உணர்த்தவும், இந்தி ஆதிக்கக்காரருக்கு உச்சி குளிர வேண்டும் என்பதற்கும்தானே பயன்படும்!

தம்பி! குடியரசுத் தலைவரோ அல்லது இங்குள்ள எடுபிடிகளோ, நம்மை மதிக்காதது பற்றி, மனம் குமுறி என்ன பயன்? மெயில் பத்திரிகைக்கே, மதிப்பு இன்னும் ஏற்படவில்லையே. அறிவு அவ்வளவும் உருட்டித் திரட்டி, அந்த இதழ் நடாத்துவோரி'டம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது போலவும், இதழின் பணி, நாட்டு நிலைமையை எடுத்து விளக்குவது என்றிருக்க, அதை மறந்து, ஒரு பெரிய இயக்கத்துக்கு "புத்திமதி' கூறிடும் போதகாசிரியராகத் தன்னைத்தானே நியமித்துக் கொண்டு, அறப்போர் நடத்தாதீர்! என்று எழுதுகிறது.

ஏதோ, அந்த இதழுக்குத் தன் அறிவிலே அவ்வளவு அபாரமான நம்பிக்கை - முற்றிவிட்டிருக்கிறது - இருந்து போகட்டும். நமக்கோ நாட்டுக்கோ, அது நட்டமல்ல. விந்தை மனிதர்களை எவ்வளவோ காண்கிறோம். இது ஒன்று அதிலே! ஆனால், மெயில் வேறொன்று கூறி இருக்கிறது.

அதுதான், தம்பி! என் நெஞ்சை உள்ளபடி, குத்திக் குடைவதாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கிளர்ச்சிகளின் போது, துரைத்தனம், இலேசான தண்டனைகள் கொடுக்கிறதாம் - சீக்கிரம் சீக்கிரம் சிறையிலிருந்து விடுதலை தந்துவிடுகிறதாம். எனவேதான், கழகம், மறுபடியும் மறுபடியும் கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறதாம்! எனவே, மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று எழுதுகிறது.

துரைத்தனத்தின் மனம் ஏதோ இலவம் பஞ்சாக இருப்பது போலவும், இரும்பாக்கிக் கொள்ள வேண்டும் என்று தூண்டிவிட வேண்டிய பொறுப்புத் தனக்கு இருப்பதாகவும், இந்த இதழ் எண்ணிக்கொள்வது பேதமை - வேறென்ன?

பிடிக்காதவர்கள்மீது, வேறு சிலரைத் தூண்டிவிட்டு வேடிக்கைக் பார்ப்பவர்களை, மிகமிக மட்டமான மக்கள் என்பர் ஆன்றோர்.

மெயில் இதழுக்கு, நாம், கடுமையாகத் தண்டிக்கப் படுவதிலே என்ன அலாதியான மகிழ்ச்சி ஏற்படுமோ, எனக்குத் தெரியவில்லை - அதையும் அனுபவிக்க விரும்பினால், தாராளமாக அனுபவித்துவிட்டுப் போகட்டும்.

ஆனால், தம்பி! இந்த நேரத்தில், நாமும் ஒரு விஷயத்திலே, தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் கொண்டுள்ள கொள்கையின் தூய்மையிலே நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குமானால், நெஞ்சார நாம் அந்தக் கொள்கையிடம் பற்றுக்கொண்டிருப்பது உண்மை யானால், எத்துணை கொடுமை மிக்க தண்டனையையும் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா?

நீண்டகாலச் சிறைவாசம், சொத்துப் பறிமுதல், போலீஸ் தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் - எனும் அடக்குமுறையின் பல்வேறு உருளைகள், நம்மீது பாய்ந்து, நம்மைப் பிய்த்தெரியும் நிலை பிறக்கலாம்; தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா?

எதற்கும் தயாராக இருப்பதுதான், இலட்சியவாதிகளின் கடமை - இலட்சணம். நம்மை மாற்றார் மட்டுமல்ல, மந்தமதி படைத்தோரும், இவர்கள் இலட்சியவாதிகள் என்பதில் ஐயமில்லை, இல்லையெனில் உண்டு களித்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கும்போது, இவர்கள், அடக்குமுறையின் உறுமலைப் பொருட்படுத்தாமல், பயங்கரப் பற்களை அது நறநறவெனக் கடித்துக்காட்டிக் கிளம்பும் என்பது தெரிந்தும், அதன் பக்கம் நின்று "மெயில்' போன்ற இதழ்கள், விடாதே! கடி! பாய்ந்து பாய்ந்து கடி! பிய்த்துப் பிய்த்து எடு! என்று உசுப்புவது தெரிந்தும், தங்கள் கடமையைத் துணிந்து செய்கிறார்களே என்பதை உணர்ந்து புதுத் தெளிவு பெறவேண்டும்.

அறப்போர் பலவற்றில், நமது கழகத்தவர் ஈடுபட்டு ஏற்கனவே தியாகத் தழும்பு பல பெற்றுள்ளனர்; எனினும், இப்போதும், நமது வீரத்தையும் தியாகமேற்கும் திறத்தையும் பழித்துப் பேசிடத் துணிவு கொள்கின்றனர். ஒரேயடியாகத் தலைதூக்க முடியாதபடி அடித்து நொறுக்கிவிட வேண்டும், இவர்களின் தொல்லை தாளக்கூடியதாக இல்லை என்ற நினைப்பு, வெறி அளவுக்கு அவர்களுக்கு ஏற்பட்டு விட்டதால், எந்தக் கொடிய முறைகளைக் கையாளவும் தயாராகிக் கொள்வர். தயாராகும்படி மெயில் இதழ் போன்றவைகள் தூண்டிவிடும், தூபம் போடும். "உமது வீரதீரம் அபாரம்! உம்மிடம் நாடே சொக்கிக் கிடக்கிறது. அடக்குமுறை வீசினால், நாட்டு மக்கள் உள்ளத்தில் அருவருப்பு ஏற்படுமோ, வெறுப்புப் பீறிட்டு எழுமோ என்று எண்ணிக் கவலைப்படாதீர்! நாங்கள் இருக்கிறோம், உமக்குத் துதிபாட!! நீங்கள் அவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள் - செத்தொழிந்தன நாட்டைக் கெடுக்கும் பீடைகள்என்று தலையங்கம் தீட்டுகிறோம்; உமக்குத் திருப்புகழ் பாடுகிறோம்!'' என்று கூறிட இதழ்கள் உள்ளன.

ஆயினும், தம்பி! நம்மிலே பலர் வீழ்ந்துபட்டாலும், நமது உடலிலிருந்து கொட்டும் குருதி கண்டு, கள்ளமில்லா உள்ளம்கொண்டோர், சுயநலமற்றோர், நாடு, மொழி, இனம் என்பனவைகளிலே நம்பிக்கையும் பற்றும் கொண்டார், நமக்காக இரக்கம் காட்டி, ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால், போதுமடா, தம்பி! நாம் பட்ட கஷ்டமத்தனையும் பஞ்சாகப் பறக்கும். நமது உடலிலே ஏற்பட்ட புண் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாவாகி, உலகுக்கு, உண்மையை உரைத்திடும். சுற்றிச் சுற்றி வந்து ஊர் மக்களுக்கு, உண்மையை, விளக்கி வரும் நாம், சுடப்பட்டுக் கீழே சாய்ந்தால் காட்டிலே சந்தன மரங்களின்மீது கரி உராய்வதால் காடு முழுதும் மணம் பரவும் என்பார்களே, அதுபோல் நாடெங்கும் வீரம் பரவும். வெற்றி தொட்டணைத்து உச்சிமோந்து முத்தமிடும். வேண்டுவது, அடக்குமுறையின் தாக்குதலை ஏற்றுக்கொள்ளும் நெஞ்சுரம். அந்த நெஞ்சுரம், நாம் நேர்மைக்குப் பாடுபடுகிறோம் என்ற நம்பிக்கையிலே இருந்து பிறக்கிறது. அந்த உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், நாம் என்பதை உலுத்தர்கள் உணரமாட்டார்கள்; எனவேதான் அவர்கள், தெருக்கோடிச் சாவடியில் முடக்கிக்கொண்டு கிடக்கும் செயலாற்ற முடியாத நிலைபெற்ற "போக்கிரி', மற்றவர்களைப் பார்த்துக் கூறுவானல்லவா, "பயல்களை விடக்கூடாது! செம்மையாக உதைக்க வேண்டும்! கைகால்களை உடைத்திட வேண்டும்!' என்று. அதுபோலப் பேசுகின்றனர்.

பிறிதோர் நாள், தமிழகத்தில், நாம் நடத்தும் மாநாட்டிலே, பத்து இருபதுபேர், கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து வருகிறார்கள் என்று வைத்துக்கொள் - இப்போது நாம் திட்டமிடும் அறப்போரை அழித்திடும் ஆட்சியாளர், மெயில் தரும் மேலான அறிவுரையின்படி தடிகொண்டு தாக்கி, கால்களை ஒடித்துவிடுவதால் - தம்பி! பத்து இருபது பேர், காலிழந்து, கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து, மாநாட்டுக் கொட்டகைக்கு வந்தால், அதை விட வீரஞ் செறிந்த காட்சி, வெற்றித் திருவைத் தேடித் தந்திடவல்ல உணர்ச்சிமிக்க காட்சி, வேறென்ன இருக்க முடியும்!

"அதோ, கடிலாக்கில் வந்து இறங்குகிறாரே கனவான், கருத்த முகம், வைரக் கடுக்கன், அவர் காட்டிலாகா காண்ட் ராக்டர், ஒரே வருஷத்தில் கால்கோடி இலாபம் பெற்றவர். காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு இரண்டு இலட்சம் கொடுத்தார்.''

"அவரைப் பாருங்கள் - சிரித்தபடி இருக்கிறார். நாலைந்து சீமாட்டிகள் சூழ நிற்கிறாரே, அவர்தான் - அவர் அடுத்த முறை தேர்தலில் ஈடுபட, இப்போதே அச்சாரம் கொடுப்பதுபோல், தமது மாளிகையில் ஒன்றைக் காங்கிரஸ் காரியாலயம் நடத்திக்கொள்ள கால் காசுகூடப் பெறாமல், கொடுத்திருக்கிறார் - அநியாய வட்டி வாங்குபவர் என்று அழுகுரலிற் பேசுவர் சிலர் - வட்டி வியாபாரம்தான் - நல்ல பக்தர் - நாட்டுப்பட்டி மிட்டாதாரர்.''

"கவர்னர். பார், கவர்னர். அவருடைய மாளிகை எவ்வளவு பெரிது தெரியுமா? மான்கள் கூட்டம் கூட்டமாகத் துள்ளி ஓடிடும் காட்சியைக் காணவேண்டுமே, அவருடைய தோட்டத்தில் - மிக அழகாக இருக்கும்.''

"அதோ, அவர், உயர்நீதிமன்ற முதல்வர்! சட்ட நிபுணர்!''

"அந்தப் பக்கம் நிற்பவர், ஆறு ஆயிரம் மாதச் சம்பளம் பெறும், உயர்தர அதிகாரி. நிர்வாகச் செலவை எப்படிக் குறைப்பது என்பதுபற்றி அவ்வப்போது யோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பிரத்தியேக அதிகாரி.''

"இவர் சகலகலா பண்டிதர் சம்பூர்ணானந்தர். சமஸ்கிருத காவியங்களிலே விசேஷ பாண்டித்யம் இவருக்கு. அமெரிக்கா போய் வந்தார், சென்ற மாதம் - கீதைபற்றி "உபன்யாசம்' செய்ய!''

தம்பி! இவ்விதமெல்லாம், குடியரசுத் தலைவர் போன்றாருக்காக நடத்தப்படும் கோலாகல விழாக்களில் காணப்படுவோர் பற்றிப், பளபளப்புக் கண்டு பரவசம் அடைவோர், பேசட்டும்.