அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பாபுவின் பவனி
2

நமது எதிர்கால மாநாடுகளில், "அதோ காலிழந்து காணப்படும் கந்தசாமி, சிறுகடை வைத்துக்கொண்டு காலந் தள்ளிவந்தான் - ஆறு குழந்தைகள் - சொந்த வீடுகூடக் கிடையாது, ஏழை. ஆனால் கோழை அல்ல! எனக்கு வீடு இல்லாமலிருக்கலாம், என் தாய்மொழி நாடு இல்லாமல், நாதியில்லாமல் இருந்திட விடமாட்டேன் என்று கூறினான், இந்தியை எதிர்த்தான், அடக்குமுறை அவனை நோக்கிப் பாய்ந்தது, காலிழந்தான் வீரன், கண்ணீர் பொழிந்தனர் மக்கள். இதோ வருகிறான், வெற்றிநடை நடந்து! அவன் நடந்துவரும் பாதையை மக்கள் தமது கண்ணீர் தெளித்து வணங்குகிறார்கள். நாடு வாழத் தன்னை நொண்டியாக்கிக் கொண்டான். நாம் வாழ, அவன் வதைபட்டான்!''

"எழும்பி எழும்பிப் பேசுவானே, என் மொழி! என் நாடு! என்றெல்லாம், ஒரு இளைஞன், கவனமிருக்கிறதல்லவா, அவன்தான், அதோ தத்தித் தத்தி நடந்து வருபவன் - காலிழந்தான்.''

"அதோ, கண்ணிழந்தான்! கரமிழந்தான்!''

தம்பி! இப்படிப்பட்ட எழுச்சியூட்டும் பேச்சுக்கள் கிளம்பிடத்தக்க நிலையில், ஊர் காக்கப் புறப்பட்டு, உறுப்புகளில் சிலதை இழந்தவர்கள், நமது மாநாட்டிலே, வந்து சேரத்தக்க வகையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட வேண்டும்.

காலோ, கையோ, கண்ணோ, போனவர்களில் ஒருவனாக நான் இருக்க விரும்பவில்லை - தம்பி!

அதுமட்டும்தான் எனக்கு என்றால், நான் மெத்த வருத்தப் பட்டுக்கொண்டுதான் இருப்பேன்.

அப்படிப்பட்டதோர் மாநாடு நடக்கையிலே, நான் காலிழந்து, கரமிழந்து வருவதைவிட, அந்த மாநாட்டைக் காண முடியாத நிலையில், "உயிரிழந்தோன்' ஆகிவிடவேண்டும் என்று விரும்புகிறேன்.

என் விருப்பம் நிறைவேறும் அளவிலும், வகையிலும், அடக்குமுறையை அவிழ்த்துவிடும்படி, மெயில், இன்னும் சில முறை தூபமிட வேண்டுமென விரும்புகிறேன்.

இம்முறை நேரிடுமோ, பிறகோ, என்பதுவேண்டுமானால், விவாதிக்கப்படவேண்டியதாக இருக்கும் பிரச்சினையே தவிர, நம்மிலே பலர், இந்த நெருப்பாற்றில் இறங்கிய பிறகுதான், நாம் விரும்பும் இன்பத் திராவிடம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் அளவு, தம்பி! நான் படித்திருக்கிறேன்.

அங்ஙனம் இன்னுயிர் ஈந்து, இலட்சிய வெற்றி கண்டவர் களைப்பற்றிப் படித்து இன்புறும்போதெல்லாம், நமக்கு எப்போது அந்தப் பேறு கிடைக்கும் என்று எண்ணி எண்ணி இருந்திருக்கிறேன்.

நாம் இருக்குமிடத்திலிருந்து நெடுந்தொலைவில், முற்றிலும் வேறான சுற்றுச் சார்பில், வாழ்ந்துவரும், மெயில் போன்றார்கள், நாம் ஏதோ, விளைவு தெரியாமல், விளைவுகளைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்ற உறுதிகொள்ளாமல், விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டுள்ளனர். தம்பி! தமது! நமது தியாகத் தழும்புகளின் மீது செந்நிறம், ஆறாது இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் - ஏனெனில், நமது கொள்கையின் தூய்மையை உலகுக்குக் காட்டிட, இதனைவிட வேறு மகிமை வாய்ந்த சான்றுகளை நம்மால் பெற முடியாது.

அந்த நல்ல வாய்ப்பிலே ஒரு அளவு, இம் முறை எழ இருக்கும் அறப்போரின் பலனாக, நமக்குக் கிடைக்குமானால், நன்றி செலுத்தி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

நாம், அவ்விதமான உணர்ச்சி நிரம்பப் பெற்றவர்கள் என்பதைத் துளியும் அறியாததால்தான், குடியரசுத் தலைவரை இந்தச் சமயமாகப் பார்த்து வரவழைத்துக் கோலாகலமான விழா நடத்தத் திட்டமிடுகிறார்கள் - இங்குள்ளோர்.

குடியரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர், அவருக்கு நாட்டவர் அனைவரும் மரியாதை காட்ட வேண்டும் என்று இனி உபதேசம் செய்வார்கள்.

அவருடைய தனிச் சிறப்பு இயல்புகளை எடுத்துக் கூறி எப்படிப்பட்ட நல்லவர் தெரியுமா என்று கேட்போர் என்புருக எடுத்துக் கூறுவர்.

ஆமென்று நம்பி, அனைவரும் இருந்துவிட்டால், குடியரசுத் தலைவரின் உலா முடிந்ததும், அவர் தில்லி சென்று, உலகுக்கு அறிவிப்பார்.

"யாம் பத்து நாட்களாகப் பாரதத்தின் தென் பகுதி சென்று வந்தோம்.

சென்னை முதல் தூத்துக்குடி வரை சென்றோம். சென்ற இடமெங்கும் சிறப்பான வரவேற்பு, மக்கள் வெள்ளம்போல் கூடி நின்றனர்; வழிபட; வாழ்த்துப் பெற.

இந்தப் பகுதியில்தான், தனிநாடு, தனி இனம் என்ற தவறான பேச்சுப் பேசிக்கிடக்கும் ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம், இந்தியைக்கூட எதிர்க்கிறது!! - என்று எனக்குச் சிலர் கூறினார்கள்.

ஆனால், என் பத்து நாள் உலாவின்போதும், ஒரு இடத்திலாகிலும், ஒரு துளி எதிர்ப்பும், ஒரு சிறு அறிகுறியும் காணோம்.

இந்தியைத் தேசிய மொழியாக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதற்கு, என் விஜயம் வெற்றியுடனும் விமரிசையாகவும் நடைபெற்றது ஒன்றே போதும். ஜெய்ஹிந்த்!''

என்று அறிக்கை வெளியிடுவார். அகில உலக இதழ்களும், அதனை எடுத்து வெளியிட்டு, இந்தியை இந்தியர் ஏற்றுக்கொண்டனர் என்று கூறும் - தமிழர் என்றோர் இனம் உண்டு என்று எவரேனும் கூறினால், எந்தப் புதை குழியில், எத்தனை ஆயிரம் அடி ஆழம் தோண்டிப் பார்த்தால் கிடைக்கும் என்று வேடிக்கைக்காக அல்ல, உண்மையாகவே கேட்பர்.

ஏனெனில், தமிழ் இனத்தின் சிறப்பு என்றும், தமிழ் மொழியின் சிறப்பு என்றும், நாம் எடுத்துக் கூறி வருவதை மட்டுமல்ல, ஏற்கனவே, பேரறிவாளர் பலரும் எடுத்துச் சொல்வதையும் கேட்ட எவரும், அந்த இனம் அடியோடு அழிந்துபடா முன்பு, இந்தி ஆட்சி மொழியாகி ஆதிக்கம் செலுத்த முடியாது என்றே இயற்கையாகவே எண்ணுவர்.

குடியரசுத் தலைவரின் "விஜயம்' இந்தக் குறிக்கோளுக்காக அல்ல என்று விளக்கம் அளிக்கப்படும். உண்மையாகவும் இருக்கக்கூடும்.

ஆனால், அவர் உலாவின் விளைவு என்னவாக இருக்க முடியும்?

எனவேதான், தமிழர் தமது இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை எடுத்துக்காட்டத் தவறினால், உண்மை மறைக்கப்பட்டுப் போய்விடக்கூடும். உலுத்தர்கள் அதனையே சாக்காகக்கொண்டு, இந்திக்கு எதிர்ப்பே இல்லை என்று பேசி உலகை ஏய்ப்பார்களே என்ற கவலை, மிகவும் ஏற்படுகிறது.

நமக்கு ஏற்படும் இந்தக் கவலை குறித்தும், குடியரசுத் தலைவர் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், ஒவ்வொரு நாளும், குடியரசுத் தலைவர்,

சென்னை
தூத்துக்குடி
நாகர்கோயில்
கன்னியாகுமரி
கோவை
சேலம்மேட்டூர்
வேலூர்

ஆகிய இடங்களில் விழா நடத்திச் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார் - கவர்னர் உடன் வருகிறார் - காமராஜர்கூட வருகிறார் - என்ற செய்திகள், வெளிவந்த வண்ணமிருக்கின்றன.

என்ன செய்வது? நமது நாட்டிலே மூண்டுகிடக்கும் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, எப்படிக் குடியரசுத் தலைவர் உணரும்படி செய்வது?

உடன் வருவோர், அவரிடம் உபசாரம் பேசுவர், உண்மை நிலையைக் கூறப்போவதில்லை.

அவராகக் கேட்டாலும், தேர்தலில் தோற்ற ஒரு சிறு கூட்டம், காரணமற்று இந்தியை எதிர்க்கிறது என்று கூறி, அவருடைய புன்னகையைப் பரிசாகப் பெறவே முயற்சிப்பர்.

தமிழரின் தவிப்பை, தத்தளித்துக் கிடப்பதை அவர் அறியச் செய்வது எவ்வகையில்?

உமது ஆணை கண்டு, தமிழர் அஞ்சுகின்றனர் - இந்தி ஆதிக்கமொழியாகிட வழிவகுத்துவிட்டீர் என்று நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதியும் மீறப்படுகிறது என்று. இதை நீக்கும் வகையில்,

இந்தி பேசாத மக்களின் விருப்பம் அறியாமல், இந்தி திணிக்கப்படமாட்டாது.

அவர்களின் விருப்பப்படி, காலக் கெடுவின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருந்திடும்.

அதற்கான முறையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படும்.

என்று குடியரசுத் தலைவரை "அறிக்கை' பிறப்பித்துவிட்டுத் தமிழகம் வந்து, உலா நடத்திக்கொள்ளும்படி இங்குள்ள அமைச்சர்கள் கூற வேண்டும். அதை விட்டுப், போலீஸ் உண்டு, படை உண்டு, சிறை உண்டு, அடக்கிவிடுவோம், ஒரு துளியும் எதிர்ப்புணர்ச்சி தலைகாட்டாதபடி செய்துவிடுவோம் என்று கூறுவார்களானால், எந்தத் தலைவரின் உலா மிகச் சிறப்பாக, அனைவரும் கண்டு பெருமைப்படத்தக்க விதத்தில் நடைபெறவேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பார்களோ,அம் முறையில், உலா அமையாது என்பது மட்டும் எனக்கும் தெரிகிறது, உனக்கும் புரிகிறது.

ஜனவரி ஆறாம் நாள் நிகழ்ச்சி நினைவுக் குறிப்பில் இருக்கு மானால், இங்குள்ள அமைச்சர்களும் அறிந்துதான் இருப்பார்கள்.

அன்று கையாண்டதைவிடக் கடுமையாக இருக்கும், கெடுபிடி என்று அமைச்சர்கள் கூறுவரேல், நாம் என்ன சொல்ல முடியும்.

அன்று வீழ்ந்த பிணத்தைவிட, இன்னும் சற்று அதிக அளவில் கீழே சாயும்! அது உமக்குச் சிறப்பளிக்கும் என்றால் செய்துகொள்ளுங்கள் என்றுதானே சொல்ல முடியும். பாபு பவனி வந்தார், ஊருக்கு நாலுவீதம், மொத்தத்தில் நாற்பது ஐம்பது பிணங்கள் கிழே சாய்ந்தன தமிழகத்தில் என்று வரலாற்றிலே பதித்துக்கொள்வது, சிறப்புக்கும் அறிவுடைமைக்கும் அறநெறிக்கும் உகந்ததென்றால், ஆட்சியாளர், தமது இஷ்டப்படி செய்துகொள்ளட்டும்.

எதிர்ப்பு உணர்ச்சி காட்டாதிருந்தால், இந்திக்குத் தமிழகம் தலைசாய்த்துவிட்டது என்று பொருள்படும் என்று உணரும் தமிழர், அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள்! பாபுவின் பவனி முறையுமல்ல; அவருக்குத் தேடித் தரவேண்டிய சிறப்பினையும் இங்குள்ள அமைச்சர்கள், பெற்றளிக்கத் தவறி விட்டார்கள் என்ற பழிச்சொல்லே பெறப்போகிறார்கள்.

அந்த வழிதான் எங்கள் வழி என்று அமைச்சர்கள் எண்ணினால், நாம் தடுக்கவா முடியும்!

நமக்கு நமது வழி தெளிவாகத் தெரிகிறது.

நமக்கு எத்துணை கஷ்டம் நேரிடுவதாயினும், தாயகத்துக்கு மானக் குறைவு, இனத்துக்கு இழிவு, மொழிக்குத் தாழ்நிலை ஏற்படலாகாது, ஏற்படவிடக் கூடாது, அந்தத் தூய தொண்டாற்றவே, உயிர் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தமிழர், நீண்ட பல காலமாகவே அந்த வழி நடந்து பழகினவர்கள். அவர் வழிவழி வந்த நாம், வேறு வழியா நாடுவோம்!

"தவறான வழி செல்லாதீர்'' என்று உருக்கமாகப் பேசும் பாவனையில் சிலரும், "உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்'' என்று உருட்டுவிழி காட்டிச் சிலரும் பேசி வருகின்றனர் - காங்கிரஸ் வட்டாரத்தில்.

தமிழ்நாடு காங்கிரஸ் குழு மதுரையில் கூடி, இதைப்பற்றி விரிவாகப் பேசி - இந்தி எதிர்ப்பு அறப்போருக்கு ஆதரவு தராதீர் என்று தமிழக மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழர்கள், தங்கள் பக்கம்தான் நிற்பர், கழகத்தின் வேண்டுகோளை ஏற்கமாட்டார்கள் என்பதில், இந்த ஆண்மையாளர்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், ஒரு காரியம் செய்யச் சொல்லு பார்க்கலாம், தம்பி!

குடியரசுத் தலைவரின் ஆணை கண்டு குமுறிக் கிடக்கும் மக்கள், தங்கள் எதிர்ப்புணர்ச்சியை எடுத்துக் காட்ட, அவர் செல்லுமிடங்களில், அமைதியான முறையில். கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று கழகம், கூறிடட்டும்.

காமராஜரிலிருந்து கக்கன் ஈறாக, இன்னும் உள்ள நாராச நடையினர், அனைவரும் கூடி, தமிழக மக்களுக்குப் "புத்திமதி' கூறி, கருப்புக் கொடி காட்டாதீர்கள் என்று வேண்டுகோள் விடட்டும்.

ஒருவர் முயற்சியில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம்.

இரு சாராரும், மக்களிடம் சென்று, நிலைமையை விளக்கித் தமது கருத்துக்கு ஆதரவு தேடட்டும்.

அப்போது, தமிழர்கள் கருப்புக் கொடி காட்டித் தமது கண்டனத்தைத் தெரிவிக்க முன் வருகிறார்களா அல்லது காமராஜர் பேச்சைக் கேட்டு காலைக் கழுவி நீரைப் பருகிடும் பக்தர்போலாகி, குடியரசுத் தலைவரை வரவேற்கிறார்களா என்று பார்ப்போம்.

இந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாரா?

அந்த இலட்சணத்தைத்தான், நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டியபோதே கண்டோமே!

தம்பி! மக்களைக் கண்டு, இன்னின்ன முறையில், அமைதி கெடாமல், பலாத்காரம் துளியும் தலைகாட்டா வண்ணம், கருப்புக் கொடி காட்டுங்கள் என்று கூறக், கடற்கரைக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம் - மறுத்தனர் - மீறிச் சென்றோம் - வழியிலே வளைத்துப் பிடித்துக்கொண்டுபோய்ப் போலீஸ் கொட்டடியில் போட்டு அடைத்தனர்.

அவ்வளவுதான், அவர்களுக்கு மக்களிடம் உள்ள நம்பிக்கை.

நமது மாநிலத்தில், மிக நீண்ட காலமாகவே திறமையுடன் அமைந்துள்ள போலீஸ் படையின் தயவை நாடித்தான், காங்கிரசார் கிளர்ச்சிகளை ஒடுக்க முடிகிறதே தவிர அறிவுரையாற்றி, மக்களைத் தம் பக்கம் ஈர்த்திட முடிகிறதா? இல்லை, தம்பி! இல்லை! அந்தச் சக்தியை அவர்கள் இழந்து நெடுங்காலமாகிவிட்டது.

மெயில் இதழ்கூடக் காங்கிரசாருக்கு - அமைச்சர்கள் உட்பட - மக்களிடம் விளக்கம் கூறித், தம் பக்கம் கொண்டுவரச் செய்யும் ஆற்றல் இல்லை என்பதை அறிந்துதான், கடுமையான தண்டனை கொடுத்து அடக்க வேண்டும் என்று எழுதுகிறது.

மக்களின் நெஞ்சைத் தொடும் விதமாகப் பேசும், மக்கள் தலைவரே! காமராஜரே! கிளம்புங்கள்! ஊரூர் சென்று, கழகத்தின் போக்கை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று எடுத்துக் கூறுங்கள் - என்று எழுத மெயிலுக்கு மனம் வரவில்லை; நடவாத காரியமாயிற்றே என்று எண்ணுகிறது.

"புள்ளிவிவரப் புலியே! வாத வல்லுநரே! கோவைச் சிங்கமே! சுப்பிரமணியமெனும் அமைச்சர் ஏறே! போர் முழக்கம் செய்ய இன்றே புறப்படுக! உமது விவேகம் ததும்பும் பேச்சினைக் கேட்டால், மக்கள் தெளிவு பெறுவர்! உமக்கென்ன, காரசாரமாகவா பேசத் தெரியாது! ஏதோ, இந்த நாடு செய்த "தவப்பயனால்' "அமைச்சர்' எனும் மிகச் சாதாரணப் பதவியில் இருக்கிறீர் - நீர் விரும்பினால், அகில உலக அரங்கின் அரியாசனம் அமர்ந்து, பண்டிதரால் செய்து முடிக்க முடியாத பஞ்சசீலத்தைப் பாரில் வெற்றிபெறச் செய்ய இயலுமே! சில பயல்கள் பாபுவுக்குக் கருப்புக் கொடி பிடிக்கத் தூண்டினால் என்ன? உமது சங்கநாதம் கிளம்பினால், திக்காலொருவராக ஓடிவிட மாட்டார்களா? மக்கள், உமது பாதம் பணிந்து கட்டளையை எதிர்பார்த்து நிற்கமாட்டார்களா? அத்தகைய பேராற்றல் படைத்தவரல்லவோ! இன்றே புறப்படுக!'' என்று எழுதிட, மெயிலுக்குக் கூச்சமாக இருக்கிறது. கோவையார் போகாத ஊரில்லை, பேசாத நாளில்லை, மக்கள் கேட்டதாகத் தெரியவில்லையே! மறுபடியும் ஏன் வீண் முயற்சி என்று எண்ணுகிறது. எனவேதான், எது, அமைச்சர்களால், எளிதிலே செய்திட முடியுமோ, அதுவாகப் பார்த்து, கடுமையாகத் தண்டித்துக் கழகத்தை ஒழித்துக்கட்டுங்கள் என்று எழுதுகிறது.

மயில், காணும்போது தன் தோகையை விரித்தாடினால் காட்சி அழகாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றும்.கழுகைக் காணும்போது? இதன் கூரிய மூக்கினால் பிணங்களை எத்தனை வேகமாகக் கொத்துமோ! என்று வியப்புடன் நினைத்திடத் தோன்றும்.

மக்களாட்சி முறையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைத் தமது மறுப்புரை மூலம் பயனற்றதாக்க வேண்டும்; அந்த ஆற்றலுடன், அந்த ஆளுங்கட்சி இருந்தால், அத்தகைய ஆற்றல் அற்றுப் போனால்? பிடி! அடி! சுடு! இதுதான்!! இது புதிதுமல்ல; இதைக் கண்டு மருண்டு, எந்த இயக்கமும் சுருண்டு போனதில்லை. சிலர் மடிந்தனர்; வேறு பலர் எழுந்தனர்! சிலர் வாழ்வு பாழ்படுத்தப்பட்டது; ஆனால், இறுதியில் மனித குலத்துக்குப் புது வாழ்வு கிடைத்தது.

நிதி அமைச்சர் பேசாமலும் இல்லை.
ஏன் வீண் பீதி?
இந்தியை எங்கே திணிக்கிறார்கள்?
தமிழன்றோ ஆட்சிமொழியாகி இருக்கிறது.
ஆங்கிலம் அறவே போய்விடாது.

என்றெல்லாம் பேசி வருகிறார்.

ஒருவிதத்திலே மகிழ்ச்சிதான் எனக்கு.
எவனவன் இந்தியை எதிர்ப்பவன்?
இந்திதான் நமது தேசிய மொழி.
இந்திதான் ஆட்சி மொழி.
தமிழ் மொழி, தாய் மொழி என்று பேசலாகாது.

து. தமிழர் வேறு, இந்தியர் வேறு என்று கூறுவது மடமை. என்றெல்லாம் பேசவில்லை - பேச முடியவில்லை - பேசினால், இப்படியும் ஒரு தமிழ்த் துரோகி இருக்கிறாரே என்று பாமரரும் கூறிக் கண்டிப்பார்கள் என்ற பயம் மேலிட்டிருக்கிறது. தமிழ் இனம் விழிப்புற்று இருக்கிறது என்பது தெரிந்து, சுடச்சுடப் பேசுவதுதான் சுவைமிக்கது என்ற கருத்தில் நாவைப் பயன்படுத்தும் அமைச்சர், அடக்க ஒடுக்கமாகப் பேசுகிறார். அந்த மாறுதல், வரவேற்கத்தக்கது; ஆனால், உண்மையையா, அவர் பேசுகிறார்?

தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகச் சிரமப்பட்டு விளக்கி இருக்கிறார்.

தமிழகத்தில், தமிழ் ஆட்சிமொழி ஆகியிருப்பது, அதிசயத்திலே ஒன்றல்ல.

மொழிவழி மாநில அமைப்பின்போதே, இப்படித்தான் நடந்திடும் என்பதை அனைவரும் அறிவர்.

தமிழ் மாநிலத்தில் தமிழ் ஆட்சிமொழி என்றிருப்பது போலவே, பிறமொழி பேசிடும் மாநிலங்களிலேயும் ஏற்பட்டுள்ளன.

இதிலே அமைச்சர் சுப்ரமணியனாரின் அலாதியான வீரதீரம் ஏதுமில்லை.

இது, டில்லியால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு ஏற்பாடு. ஆனால், அமைச்சர் அறிவிக்காதது. ஆனால் நாடு அறிந்து கொள்ளவேண்டியது வேறொன்று உளது.

தமிழ் மாநில அரசு தில்லி அரசுக்குக் கட்டுப்பட்டு, அது இட்ட வேலையைச் செய்துகிடக்கக் கட்டுப்பட்டிருக்கிறது.

எனவே ஆட்டிப்படைக்கும் அதிகாரம், தில்லிக்கு.

அந்தத் தில்லிக்கு, ஆட்சி மொழி இந்தி!

பேரரசு என்ற நிலைபெற்று உள்ள தில்லியில், எம்மொழி ஆட்சி மொழியோ, அந்த மொழியைத்தான் உலக நாடுகள், உண்மையான ஆட்சிமொழி என்று ஏற்றுக்கொள்ளும் - மதித்திடும்.

இந்த உண்மையை எடுத்துரைக்காது மறைத்துவிடுகிறார் அமைச்சர்.

வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்த நடவடிக்கைகள், இந்தியா முழுவதுக்கும் (தமிழகம் உட்பட) என்று இயற்றப்படும் சட்டங்கள், உத்தரவுகள், எல்லாம் இந்தியில்தான்!

இந்தியப் பேரரசின் கட்டுக்கு அடங்கி நடக்கவேண்டிய இராணுவத்தில் இந்திமொழியில்தான், கவாத்து பழகுவதி லிருந்து, காரிய விளக்கங்கள் வரையில்.

இந்தியா முழுமைக்கும் என்று இருக்கிற உச்ச உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தி மொழியில்தான்.

இந்தியப் பேரரசு நடைபெறப் பணியாற்றிவரும் அலுவலகங்களிலே உள்ளோர், இந்தி கற்றுத் தேறியாக வேண்டும்.

இவைகள், எதைக் காட்டுகின்றன? இந்தி, ஆட்சி மொழியாகிவிடுவதை, ஆதிக்க மொழியாகிவிடுவதை!

இந்தியப் பேரரசு, மாநில அரசுகளை, அதிகாரமற்ற, தானம் கேட்டுப் பிழைத்திடவேண்டிய தலையாட்டிகளாக்கி வைத்திருப்பதைத், துணிவுடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் போக்கினராக உள்ள அமைச்சரேகூட, ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலைதான். பேரறிவாளர் பலரும் கூறி விட்டனர்.

அந்தப் பேரரசு, இந்தியை ஆட்சிமொழி என்றாக்கி விட்டால், இங்கு தமிழ்தான் ஆட்சிமொழி என்று கதைப்பதிலே, பொருள் என்ன இருக்க முடியும்!

நீதிமன்றங்களில்கூட, இனித் தமிழ்தான் என்றார் அமைச்சர்.

யார் அவ்விதம் சொல்வது? உச்ச உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தியில் இருந்து தீரும். அந்நிலையில், ஒவ்வொரு மாநிலமும், தத்தமது தாய்மொழியில், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்திச் சென்றால், குழப்பமல்லவா ஏற்படும். எனவே மாநில உயர்நீதிமன்றங்களும், இந்தி மொழியிலேயே நடைபெறவேண்டும் என்று அறைகிறார், தில்லி அமைச்சர் சென்!

இப்போதும், உயர் நீதிமன்றம் தமிழில்தான் நடைபெற வேண்டும் என்பதில், சென்னைத் துரைத்தனம் உறுதியாக இருக்கிறது என்று பேசுகிறார் நிதி அமைச்சர்.

உரத்த குரலிற்கூடப் பேசலாம் - ஆனால் உறுதியாக இருக்க இவருக்கு ஏது உரிமை?

உயர்நீதிமன்றங்கள் இப்படி இப்படி நடைபெற வேண்டு மென்று, தில்லி தீர்மானித்துவிட்டால், அதை மீறும் துணிவும், வழி வகையும், இவருக்கு ஏது?

இவரே அல்லவா, தமது ஆட்சியின் கீழுள்ள இந்த மாநிலத்தில், ஏதேனும் ஓர் இந்திய மொழி பயில வேண்டும் என்று தந்திரமாகக் கூறிவிட்டு, எல்லாப் பள்ளிகளிலும் இந்தியைத் திணித்திருக்கிறார்.

இவர், இந்தித் திணிப்பு இல்லை என்று பேசுவதை, எவர் மதித்திடுவர்.

இவைபற்றி எல்லாம் எண்ணிப்பார்த்தே, மெயில், இந்த அமைச்சர்கள் பேசிப் பயனில்லை - இவர்களுக்குத் தெரிந்ததும், முடியக்கூடியதும் ஒன்றே ஒன்றுதான். ஈவு இரக்கமின்றி எதிர்ப்பாளர்களை அடித்து நொறுக்குவது. அந்த வேலையைச் செய்யும்படி கூறலாம் என்ற போக்கிலே எழுதி இருக்கிறது.

கடுமையாகத் தண்டித்து விடுவோம் என்று மிரட்டினால், குடியரசுத் தலைவரின் விழாவின்போது, எதிர்ப்புத் தலைகாட்டாது என்று எண்ணுகிறார்கள் போலும்!

ஆளுங் கட்சியினர், அவர்களை அடுத்துப் பிழைப்போர், ஆகியோரை அணிபணி பூண்டு வரச்செய்து, குடியரசுத் தலைவரின் முன் நிறுத்திக் காட்டி, "இதோ வரவேற்பாளர்கள்! தமிழர்கள்! தங்கள் ஆணையைச் சீரமேற்கொண்டு "சேவை' செய்யக் காத்துக்கிடக்கும் "கர்ம வீரர்கள்!' என்று எடுத்துக் கூறுவர் போலும்!

தம்பி! முன்னமோர் நாள், ரோம் சாம்ராஜ்யத்தில் டைடஸ் ப்ளாவியஸ் டோமீμயன் என்ற மன்னர் மன்னன் இருந்தான். வீரனல்ல; எனினும் விருதுகள் பெற விரும்பினான். இதோ வாய்ப்பு என்றனர், உடன் நின்றோர். ஜெர்மன் இனத்தவரின் ஆளுகையில் இருந்த ஒரு நாட்டின்மீது படை எடுத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

போர் நடைபெற்றது! ரோம் நாட்டு மக்கள், தமது மாமன்னன் பெற்றளிக்கப்போகும் வெற்றியை விழாவாகக் கொண்டாடத் துடித்து நின்றனர். போர் முடிவுற்றது. மாமன்னன், வெற்றி உலா வந்தான் ரோம் நகரில்! வீதிகளெல்லாம் வளைவுகள், கொடிகள், தோரணங்கள், மாமன்னரே, வருக! மாற்றானை மண்டியிடவைத்த வீரரே வருக! ரோம் நாட்டுக் கீர்த்தியைப் பரப்பிய தலைவனே! வருக! வருக! என்று வாழ்த்தி வரவேற்றனர்.

மாமன்னன், தலைநகரில் பவனி வந்தான்.

பிடிபட்ட ஜெர்மானியர்கள், அந்த ஊர்வலத்திலே, அணி அணியாக இழுத்துவரப்பட்டனர்.

ரோம் நாட்டு மக்களுக்குப் பேருவகை! தோற்றவர்கள், பிடிபட்டனர், பிடிபட்டவர்களைப் பிடித்திழுத்து வருகிறார் மாமன்னர்! - என்று எக்காளமிட்டனர்.

ஆனால், தம்பி! உண்மையில் நடந்தது என்ன தெரியுமோ? போரிலே மாமன்னர் வெற்றி பெறவில்லை - விரட்டி அடிக்கப்பட்டார்.

தோற்றுப் போய்த்தான் தலைநகரம் திரும்பினார்.

ஆனால், வெட்கமாக இருக்குமல்லவா! அதனால், தோற்ற செய்தியை மூடி மறைத்தார் - வெற்றி உலாவே நடத்திக் காட்டினார்.

அங்ஙனமாயின், பிடிபட்ட ஜெர்மானியர்களைப் பிடித்திழுத்து வந்தாரே, அது எப்படி? என்றுதானே தம்பி! கேட்கிறாய்.

அவ்வளவுபேரும், மாமன்னரின் அடிமைகள்! அவர் களுக்கு, ஜெர்மானியர்போல் உடை அணிவித்து, அழைத்து வந்தார் - ஊரை ஏய்த்திட.

நாளை, குடியரசுத் தலைவர்முன் கொண்டுபோய் நிறுத்தப்படுபவர்கள், தமிழ் பேசுவோர், தமிழராகார்! தமிழரின் நடை உடை இருக்கும் நெஞ்சம் தமிழ் நெஞ்சமாக இராது! அடிமைகள் ஜெர்மன் உடையில்!! இவர்கள் அடிவருடிகள் தமிழர் கோலத்தில்!! பாபு இராஜேந்திரர், இந்தக் காட்சியைக் காணவா, தமிழகம் வரவேண்டும்! பரிதாபம்! மிகப் பரிதாபம்!!

அண்ணன்

31-7-1960