அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பயில்வான் வீட்டுக் காளை
1

காமராசர் பிறந்த நாள் நிதியும் மனோகரனின் கருத்தும்
நோட்டுக்கள் குவிப்பு ஓட்டு வேட்டைக்கு!
பாகல் மேட்டுத் திட்டமும் பாத யாத்திரைத் திட்டமும்
மரம் பழுத்த பிறகே வௌவால் வரும்!

தம்பி!

பார்த்தாயா இந்தப் பொல்லாத ஆசாமி நாஞ்சில் மனோகரன் செய்துவிட்டுள்ள வேலையை துணிச்சல் அதிகம் - காங்கிரசின் பெரிய தலைவரை பெரியவர் என்றுதான் அவரைப் புகழ்பாடிகள் அழைக்கிறார்களாம்! - காமராஜரை ஒரு சிக்கலான சங்கடத்தில் சிக்க வைத்து விட்டிருக்கிறார். இதழொன்றில் பார்த்தேன் - காமராஜரின் பிறந்த நாள் விழாவுக்காக என்று சொல்லித் திரட்டுகிறார்களே பத்து இலட்ச ரூபாய், அந்தத் தொகையை இந்தியாவை உருட்டி மிரட்டிய படியும் இந்திய எல்லைப் பகுதியை விழுங்கி ஏப்பம் விட்ட நிலையிலும் உள்ள சீனப் பகைவர்களை முறியடிப்பதற்கான நல்ல காரியத்துக்காக நன்கொடையாகக் கொடுத்துவிட வேண்டும் என்று ஓர் யோசனை வெளியிட்டிருக்கிறார். யோசனையா அது! வெடிகுண்டு தம்பி! பயங்கரமான வெடிகுண்டு! எந்த இலட்சங்களை நம்பிக் காங்கிரசார் சல்லடம் கட்டிக் கொண்டு தேர்தல் களத்திலே குதித்திடலாம் என்று துணிவைப் பெற்றிருக்கிறார்களோ, எந்த இலட்சங்களைக் கொண்டு ஏழை எளியோர்களுக்கு ஆசாபாசம் ஊட்டி, அவர்கள் மனத்திலே குமுறிக் கொண்டிருக்கும் வெறுப்பு, எதிர்ப்பு, அருவருப்பு ஆகிய உணர்ச்சிகளை உருக்குலையச் செய்து ஓட்டுக்களைத் தட்டிப்பறித்து மீண்டும் தர்பார் நடத்தலாம் என்று ஆசையாக உள்ளனரோ, எந்த இலட்சங்களைத் திரட்டிக் காட்டுவதன் மூலமாகவே எதிர்க்கட்சிகளை மிரட்டி விடலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ, காங்கிரசாவது இந்த முறை தேர்தலிலே வெற்றி பெறுவதாவது என்று அய்யப்பாடும் அச்சமும் கொண்டுள்ளவர்களை எந்த இலட்சங்களைக் குவித்துக்காட்டி, தைரியம் கொள்ளச் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த இலட்சங்களை, நாட்டை எதிரியிடமிருந்து மீட்டிடும் நல்ல காரியத்துக்காகக் கொடுத்து விடுங்கள் என்று கூறிவிட்டிருக் கிறார்! ஆத்திரம் அலை அலையாக அல்லவா எழும், பணம் திரட்டிச் செலவிட்டு மீண்டும் பட்டாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று தவமாய்த் தவம் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு, எதை எதையோ எடுத்துக் காட்டியும், ஏதேதோ வாக்குக் கொடுத்தும், அமைச்சர்களே ஊரூர் அலைந்தும், மிட்டா மிராசையும் செல்வவான்களையும், கெஞ்சியும் கொஞ்சியும் திரட்டும் பத்து இலட்சத்தை, அப்படியே கொடுத்து விடச் சொல்கிறார், நாட்டை மீட்டிடும் நல்ல காரியத்துக்கு. இப்படியா ஒரு இக்கட்டான நிலைமையை இந்தத் தம்பி ஏற்படுத்தி காங்கிரசின் பெரிய தலைவர்களைச் சங்கடத்திலே சிக்கவைப்பது!

நாட்டுக்கு இன்றுள்ள பேராபத்தான நிலையையும் அந்த நிலைமையை மூட்டிவிட்டுள்ள பகைவர்களை முறியடிக்கவே அவரவரும் தத்தமக்குக் கிடைத்திடும் பொருளையும் உழைப்பினையும் தந்திட வேண்டும். அஃதே உண்மையான நாட்டுத் தொண்டு என்பதனையும் எவரும் ஒப்புக் கொள்வார்கள்.

விருந்தும் வீண் ஆரவாரமும், விழாவும் வேடிக்கையும் வேண்டாம்; நேரமும் நினைப்பும் பணமும், இன்று இம்முறையிலே பாழ்பட்டுவிடக்கூடாது. பகைவன் உறுமியபடி இருக்கிறான், அவனை விரட்டியடித்திடவே பணம் அவ்வளவும் பயன்படவேண்டும். மற்ற எல்லாக் காரியங்களையும் பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்று ஊருக்கு உபதேசம் செய்த காங்கிரஸ் பெரிய தலைவர்கள் ஒரு பெரியவரின் பிறந்த நாள் என்பதன் பேரால் திரட்டிடும் இலட்சங்களை, உத்தமமான காரியத்துக்கே செலவிடல் வேண்டும் என்று யோசனை கூறும் போது அதனைத் தவறான யோசனை என்றோ தகாத திட்ட மென்றோ தள்ளிவிட முடியாது; ஊர் கேலி செய்யும். நாட்டை மீட்டிடும் நல்ல காரியத்துக்காக அந்தப் பெரியவர் பெயர் கூறித் திரட்டப்படும் பெரிய தொகை தரப்படுவது அவருக்கே கூடப் பெருமை தருவதாகவே அமையும், உலகு போற்றிப் புகழ்ந்திடும்; அய்யமில்லை! ஆனால், தேர்தல் வருகிறதே பெரியதோர் புயல்! வஞ்சகத்தை வீழ்த்திடவல்ல புயல்! வன்கணார்களை விரட்டி யடித்திடக்கூடிய புயல்! வரிமேல் வரிபோட்டு வாட்டத்தை மூட்டிவிட்ட ஆட்சியாளர்களை அகற்றிடும் வேகம் கொண்ட புயல்! அந்தப் புய-னால் வீழ்ந்து படாதிருக்க, எந்த இலட்சங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்களோ, அந்தத் தொகையை நாட்டு பாதுகாப்புக்காகத் தந்துவிட்டால் பிறகு பதவிப் பாதுகாப்புக்கு என்ன செய்வது! பண பாணம் வேண்டும், பதவியை மீண்டும் பெற்றிட! அந்தப் பணத்தை வேறோர் காரியத்துக்கு - அது எத்தனை உயர்வானதாக இருந்தாலும் - செலவிட்டு விட்டால் பதவியைப் பிடித்திடும் வழி அடைபட்டுப் போய்விடுமே! வெகு எளிதாகச் சொல்லிவிட்டாரே - இவருக்கு என்ன தெரியும் அந்த இலட்சங்களைத் திரட்டிட நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் வகையும் அளவும்! பத்து இலட்சம் என்றால் சாதாரணத் தொகையா! எத்தனை பேர்களிடம், என்னென்ன சொல்லிக் கேட்டுப் பெற்றது அந்தத் தொகை. அதனைத் தேர்தலுக்காகவா பயன்படுத்துவது, நாட்டைக் காத்திடும் பணிக்காகப் பயன்படுத்த வேண்டும். அதுதான் முறை அதுதான் அறம் என்று பேசுகிறாரே இந்தக் கழகத்துக்காரர் - இது வேண்டுமென்றே பொதுமக்களைக் கிளப்பிவிடுகிற தந்திரப் பேச்சல்லவா - ஏன் இந்தப் பக்தவத்சலம் காண்டீபத்தைத் தூக்காமல் இருக்கிறார் - இந்தக் கழகத்துக்காரர்களை வெளியே விட்டுவைத்தாலே ஏதேனும் பேசி நம்மை வம்பிலே சிக்கவைத்து விடுவார்கள் - எதற்காகத்தான் இருக்கிறது பாதுகாப்புச் சட்டம்! - என்றெல்லாம் எண்ணுவர் காங்கிரஸ்காரர்கள் - பிறந்த நாள் நிதியை நாட்டுக்காகச் கொடுத்துவிடச் சொல்லியது கேட்டு. பொல்லாத ஆசாமி, ஓசைப்படாமல் வீசுகிறார் காங்கிரசாரின் ஆசைக் கோட்டை யினைத் தகர்த்திடவல்ல ஒரு வெடிகுண்டெடுத்து.

ஒவ்வொரு நாளும் பத்துப் பேருக்குச் சாப்பாடு இலவசமாக! மருத்துவத்துக்குப் பணம்! கல்விக்குப் பணம்! துணிமணிகளுக்குப் பணம்! நந்தவனப் பாதுகாப்புக்குப் பணம்! இவ்வளவும் எமது "தர்மஸ்தாபனத்தின்' மூலம் நடந்து கொண்டிருக்கிறது என்றார் ஒரு முதியவர். அந்தச் செய்தி கேட்டவர் பூரித்துப் போனார். பொருள் தேடிப் பெறுவதே மற்றவர்களின் இன்னலைத் தீர்க்கத்தான்! அறம் செய விரும்பு என்ற ஆன்றோர் மொழிக்கு ஏற்ப நடந்துவரும் தங்கள் பெருமையைப் பாடிட நான் கவிவாணனாக இல்லையே என்றே கவலைப்படுகிறேன்! பத்துப்பேருக்கு ஒவ்வொரு நாளும் உணவளிக்கிறீர்! உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போரே! ஜீவாத்மாக்களைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் மேலான முறை ஏதும் கிடையாது பரமாத்மாவை வழிபட! உமக்கு இம்மையில் புகழ் மறுமையில் தேவ பதவி நிச்சயம் கிடைத்திடும். உண்டி தருகிறீர்! வந்துற்ற நோயையும் தீர்க்கின்றீர்! கல்விச் செல்வமும் அளிக்கின்றீர்! உமது கருணையே கருணை! என்று புகழ்ந்துரைத்துவிட்டு, "பத்துப்பேர் என்கின்றீரே. இன்னின்னார் என்று ஏதேனும், ஜாதி மதம் நிலை என்ற முறை உண்டோ?'' என்று கேட்டார். "இல்லை!'' என்றார் தர்மஸ்தாபனக்காரர். "அப்பதின்மர் ஒவ்வோர் நாள் வேறு வேறோ - ஒரு பதின்மரே ஒவ்வோர் நாளுமோ!'' என்று விளக்கம் கேட்டார். தர்ம ஸ்தாபனத்தார், "அப்பதின்மர் வேறு யாருமல்ல, நாங்கள் அண்ணன் தம்பிகள் மூன்று பேர், எமது துணைவியர் மூவர், எமது பிள்ளைகள் இருவர், அவர் மனைவியர் இருவர், ஆக மொத்தம் பதின்மர்!'' என்று விளக்கமளித்தார்.

எந்த ஊரில் உளது இந்த விந்தை அமைப்பு என்று கேட்கின்றனையோ தம்பி! எடுத்துக்காட்டுக்காகக் கூறினேன் - கற்பனைதான்! அவ்விதமான "தர்மம்' உண்மையான அறமாகாதன்றோ! அதுபோல, ஒரு கட்சியின் தேர்தல் செலவுக்காகப் பயன்படுத்தத் திரட்டப்படும் பணம், ஒரு பெரியவரின் பிறந்த நாள் நிதி என்ற பெயர் பெறுவது பொருத்தமில்லையே; பொருளுமில்லையே; பெருமையும் அளிப்பதாகாதே! அஃது சோறு சமைக்க அடுப்பை மூட்டிவிட்டு, அதனை வேள்வித்தீ என்று கூறுவது போலன்றோ இருக்கிறது ஏன் இந்தக் கேவலம்? காமராஜருக்குப் பெருமை வரத்தக்க முறையில், அவருடைய பிறந்த நாள் நிதி என்று திரட்டிடும் பெருந்தொகையை, பொதுநலம் தரத்தக்க் சீரிய காரியத்துக்குச் செலவிடுக! என்று கூறுகிறார் - அதனைத் தவறு என்று வாதாடி மெய்ப்பிக்க முடியாது. நாட்டுப் பாதுகாப்புக்கான காரியம், தேர்தல் வேலையைவிட முக்கியமானது என்பதையும் எவரும் எளிதில் மறுத்துவிட முடியாது; ஆனால் ஒப்புக் கொள்வார்களோ காங்கிரஸ்காரர்! எந்தப் பெரியவரின் பெயர் கூறி அவருடைய பிறந்த நாளுக்காக என்று குறிப்புக் காட்டிப் பணம் திரட்டப்படுகிறதோ, அந்தத் தொகையை நாட்டுக்கான நல்ல காரியத்துக்குக் கொடுத்து விடுங்கள் என்று அந்தப் பெரியவரே கூடச் சொல்லுவாரா! அவரா!

அத்தகைய இயல்பு உள்ளவராக அவர் இருப்பவரானால் எனக்கோ மனைவி மக்கள் இல்லை; என் அன்னையார் மட்டுமே உள்ளார், மூதாட்டியார்; ஆகவே, எனக்கு மாதச் சம்பளம் 1000, 1500; என்ற அளவு எதற்கு? தேவையில்லை; தருமமுமாகாது என்று கூறி விட்டிருப்பாரே! கூறினாரோ!!

ஆகவே, மனோகரன் பேசியது நியாயந்தான் என்று அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஓங்காரக் கூச்சலிட்டுக் கூறுவார்கள், தேர்தல் செலவுக்குப் பணம் வேண்டாமோ! பாவிகளே! உங்கள் தொல்லையைத் தாங்கிடப் பணம் வேண்டாமே!! என்று.

தேர்தல் செலவுக்காக என்று இத்தனை பெருந்தொகை தேவைதானா - அதுவும் ஒரு ஆளுங்கட்சிக்கு. . . என்ற கேள்விக்கு என்ன பதில் அளிப்பார்களோ தெரியவில்லை.

தேர்தலிலே அதிகமான அளவு பணம் செலவிடப்படுகிறது என்றும், அதன் காரணமாக ஜனநாயகமே கேலிக்கூத்தாக்கப் படுகிறது என்றும், தேர்தல் செலவைக் குறைத்திட வழிவகை கண்டாக வேண்டும் என்றும் அறிவாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இத்தனை இலட்சங்களைத் திரட்டுகிறது, தேர்தல் நிதியாக!

ஏன் இத்தனை பெரிய தொகை?

தேர்தல் செலவுக்காகத்தான்!

தேர்தல் செலவு என்றால், எந்த வகையான செலவு?

தேர்தலுக்கான பிரச்சாரச் செலவுதான்!

இப்படித்தான் பதில் அளிப்பர் சற்றுப் பொறுப்புணர்ந்த காங்கிரசார் - பொங்கி வழிந்திடுபவைகள் ஏதேதோ பொல பொலவென உதிர்த்திடும்.

தேர்தல் பிரச்சாரம் - ஆளுங்கட்சி தன் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறிடுவது - வேறென்னவாக இருக்க முடியும்?

இதனை ஒரு ஆளும்கட்சி தனியாகத் திட்டம் போட்டுக் கொண்டு, தனியாகப் பணம் செலவழித்துச் செய்திட வேண்டிய அவசியமே எழவில்லை.

சர்க்காரின் செய்தித் துறை பெரிய செலவில் அவ்வப் போது, சர்க்காரின் திட்டங்கள் பற்றியும், சாதனை குறித்தும், அழகழகான வழவழப்பான பளபளப்பான ஏடுகளை வெளியிட்டு வழங்கியபடி உள்ளது. படங்கள், கண்கவரும் விதத்தில். பொலி காளையைத் தடவிக் கொடுத்த நிலையில் ஒரு மந்திரி! மக்காளச் சோள மணியை வாயில் போட்டுக் கொள்ளும் நிலையில் மந்திரி! மல உரக்குழித் திட்டத் துவக்க விழாவில் மந்திரி! மார்கழி மாத பஜனைக்கூட ஆண்டு விழாவில் மந்திரி! கூடை முடைவோருடன் மந்திரி! குத்துவிளக்கு ஏற்றும் நிலையில் மந்திரி! கயிறு திரித்திடும் தொழிற்கூடத்தில் மந்திரி! - இவ்விதம் படங்கள், பக்கத்துக்குப் பக்கம் இந்த வெளியீடுகளில்.

இதழ்களும் அமைச்சர்களின் பவனி, பயணம், பேச்சு எதனையும் சிந்தாமல் சிதையாமல் வெளியிட்டபடி உள்ளன.

வானொலியும், அமைச்சர்களின் அறிவுரைகளை, அறை கூவலை, பரப்புவதில் தனித் திறமை காட்டுகிறது.

படக் கொட்டகைகளில் ஒவ்வொரு நாளும், சாதனைகள் பற்றிய காட்சிகள் - உருண்டோடும் வெள்ளம் - அதிலே வீழ்ந்து வேதனைப்படும் மக்கள் - அதனைக் கண்டு கண்ணீர் வடித்திடும் மந்திரி - அதுபற்றிய உருக்கமான பேச்சு, நித்த நித்தம்! பாலைவனம் சோலைவனமாகிறது. ஆங்குப் பசுங் கிளிகள் இசை பயிலுகின்றன - படக்காட்சியில்.

ஒவ்வொரு நாளும் ஒரு திறப்பு விழா! ஒவ்வோர் திறப்பு விழாவும் ஒரு பிரச்சாரக் கூட்டம்!!

இவ்வளவு நடைபெறுகிறது. சர்க்கார் பற்றிய செய்தி அறிவிப்பு என்ற பெயரால் - ஆளுங்கட்சிக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரம்.

இவ்வளவுக்குப் பிறகும் தனியாகச் செலவிட்டுத் தேர்தல் பிரச்சாரம் தேவைதானா - அதிலும் இத்தனை பெரிய தொகை - பத்து இருபது இலட்சங்கள் - அந்தப் பிரச்சாரத்துக்காகத் தேவையா! பேசுபவர்கள் வார்த்தைகளை வீசப் போகிறார்களா - அல்லது பொற்காசுகளை வீசப் போகிறார்களா!! ஏன் இத்தனை இலட்சங்கள்.

எதிர்க்கட்சிகளுக்கு இந்த வசதிகளும் வாய்ப்புகளும் இல்லை - கிடைத்திட வழி இல்லை. சர்க்காரின் வெளியீடுகளும், வானொ-யும் எதிர்க்கட்சிகளுக்கு எட்டாக் கனிகள். இதழ்களோ, பட்டும் படாமலும் சில நாட்கள் சிறிதளவு செய்திகளை வெளியிடுகின்றன - இதற்கே பாவம், பெரிய இடத்தின் சீற்றத்தால் தாக்கப்படும் நிலை.

எதிர்க் கட்சிகள் தமது கருத்தினை மக்களிடம் எடுத்துக் கூறிடும் முயற்சியில் எதிர் நீச்சலிடும் முறையில் ஈடுபட வேண்டி இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு இதுவா நிலைமை?''

பொதுப்பணத்தில் ஆளுங்கட்சி தன் பிரசாரத்தை மும்முரமாக நடத்திக் கொண்டபடி இருக்கிறது.

தம்பி! ஒரு இதழில் பார்த்தேன். யாரோ ஒருவர் மெத்தக் கவலையுடன் கேட்டிருக்கிறார், இது முறைதானா அரசியல் அறம்தானா என்று.

திருமதி இந்திராகாந்தி அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் ஊழியர்களுக்காக நடத்திய கூட்ட நிகழ்ச்சியையும்,

திரு. காமராஜரின் பிறந்தநாள் விழாவைக் காங்கிரஸ் கட்சி கொண்டாடிய நிகழ்ச்சியையும் வானொ-யில் விரிவாக ஒலி பரப்பியது அரசியல் அறமா, முறையா என்று கேட்டிருக்கிறார்.

முறையற்ற விதமாகவெல்லாம்கூட, தமது கட்சிப் பிரசாரத்தைப் பொதுப்பணத்தைச் செலவிட்டு நடத்திக் கொள்ளத் துணிவும் வாய்ப்பும் இருக்கிறது ஆளுங்கட்சிக்கு. இவ்வளவுக்குப் பிறகும், தனிச் செலவிட்டு, தனியாகத் திட்டமிட்டுப் பிரசாரம் செய்திட வேண்டுமா! ஏன்? அவ்வளவு தேவைப்படுகிறது பொய்யை மெய்யாக்க! மக்களை மயக்கிட!! கழகம் மக்களிடம் எடுத்துரைத்திடும் கருத்தினை மறுத்திட!! பத்து இலட்சம் - தம்பி! இது முதல் தவணை! இன்னும் பலப்பல இலட்சங்கள் குவித்திடப் போகிறார்கள் - குவித்தாக வேண்டும் - கழகம் இவர்களை இலேசாகவா வேலை வாங்கப் போகிறது! இளிப்பதை இப்போது முதல் தொடங்கியாகிவிட்டது - இனி 1967 தேர்தல் முடிகிறவரையில் இவர்களுக்கு இதேதான் வேலை!

இந்த இலட்சணத்தில் "பெரியவர்' முழக்கமிடுகிறார், கழகம் கலகலத்து விட்டது! ஓடி ஒளிந்து கொண்டார்கள்! என்பதாக. ஆமாம்! ஐயா! ஆமாமாம்! என்கிறார்கள் அடிவருடி மடி தடவிடுவோர்.

கொள்கையை விட்டுவிட்ட கழகம் - கோழைகள் உள்ள கழகம் - தடுமாறித் திரிந்திடும் கழகம் - கட்டுப்பாடற்ற கழகம் - குட்டையைக் குழப்பும் கழகம் - இவ்விதம் இந்தப் பெரியவர்களே பேசுகிறார்கள்! இந்தவிதமான குளறலைப் பேச்சு என்கிறார்கள் - பேருரை என்கிறார்கள் - தம்பி! தம்பி! இதற்கு அறிவுரை என்றுகூட விளம்பரம் செய்கிறார்கள்!

ஆண்டு பல காத்திருந்து முதலமைச்சர் ஆகியுள்ளவர் இருக்கிறாரே பக்தவத்சலனார். அவர் சென்ற கிழமைதான் தூத்துக்குடியில் பேசியிருக்கிறார் - ராஜகோபாலாச்சாரியார் கழகத்திடம் தூக்குக் கயிறு கொடுத்துவிட்டிருக்கிறாராம்; அதிலே மாட்டிக் கொண்டு கழகம் தன்னாலே ஒழிந்துவிடப் போகிறதாம்!

இவ்விதம், அலட்சியப்படுத்தத்தக்க, அடிப்படை அற்ற, கொள்கையற்ற, கோழைத்தனம் உள்ள கழகத்தை எதிர்த்துத் தேர்தலை நடத்தப் பத்து இலட்சம்! புரிகிறதா தம்பி! இந்தக் கேலிக்கூத்து!