அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பயில்வான் வீட்டுக் காளை
2

இரும்புக் கவசம் போட்டுக் கொண்டு, இடுப்பில் குத்துவாள் செருகிக் கொண்டு, கரத்திலே உடைவாள் ஏந்திக் கொண்டு, காற்றெனப் பறந்திடும் புரவி மீது அமர்ந்து களம் நோக்கிச் செல்கிறான் வீரன்! செல்லுமுன் சொல்லுகிறான். "பகைவன் படுகிழம்! கட்கம் தூக்கிடும் வலிவுமற்றவன்! பாதை தெரிந்து நடந்திட முடியாது. விழி பழுதானவன்!'' என்று பகைவன் இத்தகையவன் என்றால் அவனை எதிர்த்திட இத்தனை "முஸ்தீப்பா' என்று கேட்டுக் கைகொட்டிச் சிரித்திடுவாரன்றோ!

காங்கிரசார், கழகத்தை மிகக் கேவலமாகக் கூறிக் கொண்டே, அதனை எதிர்த்து நிற்க, தேர்தலுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே பலப் பல இலட்ச ரூபாய்களைத் திரட்டுவது கண்டு விவரமறிந்தோர் கைகொட்டி சிரித்திடத்தான் செய்கின்றனர்; அது காங்கிரசின் பெரிய தலைவர்களின் செவியிலே விழவில்லை பணம் சேரச் சேரக் காதும் கேட்காதாம். கண்ணும் தெரியாதாமே!

ஒரு பெரிய புள்ளியிடம் பணம் கேட்கச் சென்றபோது அவர் கேட்டே விட்டாராம்; கழகம் கலகலத்து விட்டது, கொள்கை இல்லை, கோழைத்தனம் மிகுந்து விட்டது, மக்கள் அதனை மதிப்பதில்லை என்றெல்லாம் "தலைவர்' கூறுகிறாரே, அவர் விவரம் தெரியாமலா பேசுவார். பொய்யா பேசுவார்; அப்படிப்பட்ட கழகத்தை எதிர்த்து நிற்க எதற்காக இவ்வளவு பணம் என்று. திரட்ட வந்தவர், குரலைத் தாழ்த்தி, "அது பிரச்சாரப் பேச்சு! உண்மையில் கழக வலிவு வளர்ந்தபடி இருக்கிறது; நாம் தவறான கணக்குப் போடக்கூடாது'' என்று. அந்தப் பெரிய புள்ளியே உன்னிடம் சொன்னாரா அண்ணா! என்றுதானே கேட்கிறாய் தம்பி! அவரிடம் பேசும் நிலையிலும் இடத்திலுமா நான் இருக்கிறேன்; அந்தப் பெரிய புள்ளியின் மோட்டார் ஓட்டும் தோழன் மூலம் கேள்விப்பட்டேன்.

கழகம் அத்துணை வலிவுள்ளது என்ற உண்மையை ஒப்புக் கொள்ளக் காங்கிரஸ் தலைவர்களுக்கு அச்சமாகவும் இருக்கிறது, கூச்சமாகவும் இருக்கிறது. எனவேதான், கழகம் எமக்கு ஒரு பொருட்டல்ல என்று ஓரோர் சமயம் கதைக்கிறார்கள்.

கழகம், உண்மையில் வலிவற்றது. மக்களின் ஆதரவை இழந்தது என்றால், ஒரு ஆளுங்கட்சி, இன்னமும் மகாத்மாவின் பெயர் கூறி மக்களை மயக்கிடும் வாய்ப்பை இழந்துவிடாத நிலையில் உள்ள கட்சி, தேர்தலுக்காக இத்தனை முன்னேற் பாடுகளையா மும்முரமாகச் செய்து கொண்டிருக்கும், இத்தனை இலட்சங்களையா திரட்டிக் கொண்டிருக்கும்! பேதையும் இதனை ஏற்கமாட்டானே! அறிவுத் தெளிவுள்ள தமிழக மக்களா இதனை ஏற்றுக் கொள்வார்கள்.

இதனைச் சுட்டிக் காட்டுவதற்காகவே மனோகரன், திரட்டியுள்ள இலட்சங்களை நாட்டுப் பாதுகாப்புக்கான நிதியாகக் கொடுத்துவிட்டு, உமது கட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி "ஒட்டு'க் கேளுங்கள் என்கிறார்.

மக்களிடம் பாவம் அவர்கள் எந்தச் சாதனையைச் சொல்வார்கள்!

உணவுப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டோம் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிவிட்டோம் தொழிலாளர் துயரம் துடைத்துவிட்டோம்

என்று கூறமுடியுமா - எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தாலும் கூறமுடியாதே! ஆக, சாதனைகளைக் காட்ட முடியாத நிலையில் என்ன செய்ய முடியும்! நோட்டுகளைக் குவிக்கிறார்கள் ஓட்டு வேட்டைக்காக!! அந்த நோட்டை நாட்டுக்குக் கொடுத்துவிட்டு, "ஓட்டு'க் கேட்க வாருங்கள் என்று சொல்லும் போது கோபம் கோபமாகத்தானே வரும் காங்கிரஸ்காரர்களுக்கு.

மக்களிடம் தமது சாதனைகளைச் சொல்லி ஓட்டு வாங்க முடியும் என்ற நம்பிக்கையுடன் காமராஜர் அதற்கான பல முறைகளையும் செய்து பார்த்தாகி விட்டது, பலிக்கவில்லை.

பாகல்மேடு திட்டம்
பாதயாத்திரைத் திட்டம்.

நினைவிலிருக்கிறதா, தம்பி! கிராமம் கிராமமாகச் செல்வது, மரத்தடியில் மாநாடு! கிராமத்து மக்களைக் கேட்பது உங்களுக்கு என்ன குறை? என்ன வேண்டும்? என்று. அவர்கள் தங்கள் தேவைகளைத் தெரிவித்ததும் உடனே, அந்த இடத்திலேயே அதற்கான உத்திரவுகளைப் போட்டு விடுவது. பிரச்சினையைத் தீர்த்துவிடுவது. இதுதான் பாகல் மேடு திட்டம். பாகல் மேடு என்ற சிற்றூரில் காமராஜர் நடத்திக் காட்டிய விளம்பர மிக்க நடவடிக்கை. அடே அப்பா! அதற்கு இதழ்களில் என்னென்ன விதமான வர்ணனைகள், படங்கள், பாராட்டுகள்!'' ஆனால், நடைபெற்றது என்ன? பாகல் மேடோடு பாகல் மேட்டுத் திட்டம் முடிந்துவிட்டது. தொடர்ந்து நடை பெறவில்லை.

பிறகு பாதயாத்திரை! அமைச்சர்களும் தலைவர்களும் கிராமம் கிராமமாகக் கால் நடையாகச் செல்வது. கால்நடை என்றால் என்னமோ போல இருக்கிறது என்பதாலே இதழ்கள் ஒரு சிறப்புப் பெயர் சூட்டின - பாதயாத்திரை என்று. அமைச்சர்கள் பாதயாத்திரையைப் பாதியாத்திரை ஆக்கிக் கொண்டனர். ஊர் எல்லை வருகிற வரையில் படகு போன்ற மோட்டாரில் பயணம், எல்லையிலே காரை நிறுத்திவிட்டு, ஊருக்குள்ளே நடந்து பயணம்; மறு எல்லை வந்ததும் மோட்டார்; இப்படிப் பாதி யாத்திரையாக்கிவிட்டனர், அதுவும் தொடர்ந்து நடைபெறவில்லை; பயன் இல்லை.

பிறகு "இளைஞர் காங்கிரஸ்' அமைத்தனர் - காங்கிரசில் புதிய இரத்தம் பாய்ச்ச! இளைஞர் காங்கிரஸ் திறப்பு விழாக்கள் - மாநாடுகள் - ஊர்வலங்கள் - முழக்கங்கள் - அடிதடி கலகம் - அவ்வளவும் நடைபெற்றன. பிறகு அதனாலும் பயன் இல்லை என்று கண்டு கொண்டனர். முதியவர்களே இளைஞர்கள் ஆகிவிட்ட விந்தைதான் நடந்தது; இளைஞர் காங்கிரசில் இளைஞர்கள் சேரவில்லை.

பிறகு மண்டலக் காங்கிரஸ் திட்டம் வகுத்தனர்; தீவிர மெம்பர் திட்டத்தை இணைத்தனர், அந்தத் திட்டம் மும்முரமாக வேலை செய்த நேரத்திலேதான், தம்பி கழகம் 15 இடங்களிலிருந்து 50 இடங்கள் என்ற அளவுக்கு வளர்ந்தது.

இவ்விதமாகப் பலப் பல திட்டங்கள் போட்டுப் பார்த்து, பலன் தராதது கண்டு, இப்போது பணம் திரட்டும் திட்டம் போட்டிருக்கிறார்கள். இதனைத் தகர்த்திட முனைந்து - அதற்காக ஒரு யோசனையும் சொன்னால், அவர்களுக்கு எப்படி இருக்கும்! கண்கள் கொவ்வையாகின்றன.

ஆனால் தம்பி! இந்தப் பணம் திரட்டும் திட்டமும் பலிக்கப் போவதில்லை; நீ மட்டும் விழிப்புடனிருந்தால், எழுச்சி குன்றாமல் பணிபுரிந்தால்.

இந்த முறை வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள். விளம்பரக் கோலத்துடன் - பணம் திரட்டுவதாக. ஆனால், போன தேர்தலில் பணம் திரட்டாமலில்லை. எராளமாகப் பணம்! அவர்கள் கொடுத்த கணக்கின்படியே பெரிய கம்பெனி களிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற தொகை மட்டும் 98 இலட்சம். ஆகவே இந்தப் பண பாணமும் புதிது அல்ல! ஜனநாயக உணர்வு வளர வளர இந்தப் படைக்கலன் கூர் மழுங்கிப் போய்விடக் கூடியது.

செல்வாக்கு சிதைந்து வரும் நிலையில் ஒரு கட்சி. பணம் சேர்த்து புதிய பலம் பெற நினைப்பது ஆடிக்கெட்ட முதியவன் ஆசை அடங்காததால் தங்க பஸ்பம் சாப்பிடுவதற்கு ஒப்பானது. முறுக்கு ஏறும்! வேகமாக!! அதைவிட வேகமாக முறுக்கு தளர்ந்துவிடும். முறிந்தே கூடப் போய்விடும்.

இவ்வளவு பணம் குவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்படுவார்கள், நாளைய தினம் தேர்தல் சம்பந்தமான வேலைக்காகத் தலைவர்கள் அழைத்திடும்போது, தாவிக் குதித்து வரமாட்டார்களா, பச்சை நோட்டை நீட்டுங்கள், பணி செய்வதைப் பாருங்கள் என்று! தன்னலமற்ற பணியா நடைபெறும்! எதற்கெடுத்தாலும் பணம்! ஒன்றுக்கு ஒன்பதாகச் செலவு! ஒரே வேலைக்கு ஒன்பது ஆள்! பல வேடிக்கைகள் நடைபெற இருக்கின்றன.

கழகத்தை ஒழித்துக் கட்டிவிடுகிறேன் என்று காமராஜரே கூறிவிட்டார் என்று பேசுகிறார்கள் - அந்த "ரே'வுக்கு என்ன பொருளோ தெரியவில்லை. அவர் என்னமோ இதுநாள் வரையில் கழகம் வளரட்டும் வாழட்டும் என்று கூறி வந்தவர் போலவும், இப்போதுதான் அதனை ஒழித்துவிடும் எண்ணம் அவருக்கு முளைத்திருப்பது போலவும் பேசுகிறார்கள்; பொருளற்ற பேச்சு.

"ரே' என்பதிலேயும் எந்தவிதமான தனிச் சிறப்புப் பொருளும் இருப்பதாக எனக்குப்படவில்லை. அவருடைய ஆற்றல் திடீரெனப் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கி விட்டதாகவும் நான் கருதவில்லை.

தேர்தல் வேலையைச் சுறுசுறுப்பாகக் கவனிப்பதில், பணம் இருக்கும் இடத்தைக் கண்டறிவதில், திரட்டுவதில் அவருக்கு எப்போதும் தனித் திறமை உண்டு.

திறமையைவிட, இன்று ஏற்பட்டுள்ள நிலை பணம் திரட்டுவதற்குச் சாதகமாக அமைந்திருக்கிறது.

எட்டு ஆண்டுகள் அமைச்சராக இருந்திருக்கிறார் - முதல் அமைச்சராக - இப்போது முதல் அமைச்சருக்கு மூக்கணாங் கயிறு போட்டு நடத்திச் செல்வதாகச் சொல்கிறார்கள் - இந்த நிலையில் பணம் திரட்டுவதிலே கஷ்டம் என்ன ஏற்பட முடியும். பணம் கொடுக்க முடியாது என்று கூறி அவரைப் பகைத்துக் கொள்ள யார் விரும்புவார்கள் - அதிலும் சர்க்காரின் தயவினாலேயே "கனதனவான்' ஆனவர்கள்!

இந்த எட்டு ஆண்டுக் காலத்தில், எத்தனை எத்தனை புதிய புதிய தொழிற்கூடங்கள் அமைத்துள்ளனர் முதலாளிகள்.

சென்ற கிழமைகூட 14 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட அலுமினியத் தொழிற்சாலை துவக்கி அதன் அதிபர் வெங்கடசாமி நாயுடு அவர்களைப் பாராட்டினார்களே!

முதலாளிகள் இத்தனை புதிய புதிய தொழிற்சாலைகள் நடத்தி இலாபம் குவித்திட சர்க்காரின் துணையின்றி முடியுமா? கடன், மானியம், அன்னியச் செலாவணிக்கான அனுமதி, யந்திர இறக்குமதிக்கான அனுமதி, இவ்வளவும் சர்க்கார் தருகிறது; இந்தச் சர்க்காரை நடத்தியவர் காமராஜர், எட்டு ஆண்டுகள் அவருடைய பிறந்த நாள் நிதி என்று சொல்லி, இவ்விதமாக முதலாளிகளை வாழச் செய்யக் கூடிய சர்க்கார் அமைத்திடும் காங்கிரசின் தேர்தல் செலவுக்காக என்றும் சொன்னால், எந்த இலாப வேட்டைக்காரன் பணம் தரமுடியாது என்று கூறிடும் மடத்தனத்தைக் காட்டிக் கொள்வான்; ஆகவே, அள்ளிக் கொடுக்கிறார்கள். இதைப் பெறத் தனித்திறமையா தேவை!! தம்பி! மனக்கண்ணால் பாரேன், பணம் திரட்டக் கையாளப்படும் முறை பற்றி. தம்பி! வாயேன் என்னோடு பெரியவர் வீட்டுக்கு.

வெளியே பார்த்தாயா பெரிய மோட்டார் - அமெரிக்க மோட்டார் - இறக்குமதி செய்ய அனுமதி இல்லை இங்கு - ஆனால் சீமான் - பெயர் எதற்கு - இதை வாங்கினார் - ஒரு இலட்சத்திற்குப் பத்தாயிரம் குறைவு, விலை. காத்துக் கொண்டிருக்கிறார், பெரியவரைக்காண.

பெரியவர் வெறும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது இந்தச் சீமான் இப்படிக் காத்துக் கொண்டிருந்தாரா? மரம் பழுத்த பிறகுதானே தம்பி! வௌவால் வரும். வந்திருக்கிறார்.

பெரியவர் குளித்துக் கொண்டிருக்கிறார் - தெரிய வில்லையா - வேலையாள் பரபரப்பாக, மடிப்புக் கலையாத வேட்டி சட்டைகளை வைத்துக் கொண்டு நிற்கிறானே, பயபக்தியுடன், புரிகிறதல்லவா!!

கூடத்திலே அமர்ந்திருப்பவர்? ஒரு அமைச்சர்!

வருகிறார் காமராஜர் - எழுந்திருக்கிறார் அமைச்சர்.

உட்காரச் சொல்லி கைகாட்டுகிறார் காமராஜர்.

நீயும் நானும் அமைச்சரும் கொஞ்சநேரம் காத்திருக்க வேண்டும் - ஐயா காலைச் சிற்றுண்டி சாப்பிடுகிற வரைக்கும்!

முடிந்தது. பேசுகிறார்கள், கேட்போம்.

"எதுக்காகப் பார்க்கணுமாம்?''

"சிமிட்டித் தொழிற்சாலை விஷயமாத்தான். . .''

"நல்ல கொள்ளையாமே சிமிட்டியிலே, ஒரே பிளாக் மார்க்கட்டாம். இல்லாமலா அத்தேப் பெரிய கார் வாங்கி யிருப்பான். . . சரி. . . நீ என்ன சொல்றே?''

"ஆள் நல்லவன்தான். . . கொஞ்சம் அழுத்தம்''

"அப்படியானா ஒரு அஞ்சாறு தடவை இழுத் தடிக்கணும்...''

"தேவையில்லே. பார்லிமெண்ட் சீட் ஒண்ணும் நாலு M.L.A. சீட்டும் அவனிடம் பொறுப்பா ஒப்புவித்து விடலாம்.''

"நம்பலாமா. . .? பின்னால கையை விரித்து விடுவானா. . .''

"அப்படிச் செய்யமாட்டான். . .''

"சரி. வரச்சொல்லு. . .''

சீமான் வருகிறார்! சிரிப்பு! பேச்சு! மகிழ்ச்சி! புரிகிறதல்லவா!!

தம்பி! வேறோர் ஊர் போவோமா, வேறோர் காட்சி காண?

இதோ இவர்தான் மண்டலம். ஆட்சித் தலைவர் சுற்றுலா மாளிகையில் வந்திருக்கிறார். பார்த்துவிட்டு வந்திருக்கிறார் மண்டலம். அவரோடு போய்வருவோமே.

மாளிகை பெரிது என்கிறாயா! ஆமாம்! இதுபோல மூன்று. இங்கு, ஊட்டியில் ஒன்று, கோடைக்கானலில் ஒன்று, விலை பேசிக்கொண்டிருக்கிறார்; கோடீஸ்வரர், பெயரா? அதுவா முக்கியம்! இலட்சுமி புத்திரன் என்று சொல்லுகிறார்கள்.

"யாரு, மண்டலமா? வாய்யா, டெலிபோன் செய்தது நீதானா. . .?''

"ஆமாம். . . நீங்க வெளியே பொறப்படறதுக்குள்ளே முக்கியமான விஷயம் சொல்ல வேண்டி இருந்தது.''

"உனக்கு எல்லா விஷயமும் முக்கியமான விஷயந்தான். கூட்டமா, மகாநாடா, ஊர்கோலமா; நன்கொடை கேட்கத் தானே. . .!''

"அதில்லங்க. நீங்க பசுபதீஸ்வரர் கோயில் தர்மகர்த்தா வாகணும்னு மனுக் கொடுத்திங்களா. . .''

"ஆமாம், ஆமாம். . . அது என்னோட பூர்வீக ஊர்லே உள்ள கோயிலு எனக்கு அந்தக் கோயிலுக்குத் தர்மகர்த்தாவாகிப் பசுபதீஸ்வரருக்குச் சேவை செய்யணும்னு நெடுநாளா ஆசை. .

.'' "ஒரு பேச்சு என்னிடம் சொல்லப்படாதா. . . சரி இருக்கட்டும். . . அது உங்களுக்கு வேணும். .

.'' "ஆமாய்யா, கிடைக்க என்ன வழிசொல். . .''

"கிடைக்கத்தானே போகுது, அவரு அதுக்காகவேதானே வந்திருக்காரு''

"யாரு கமிஷனரா?. . .''

"கமிஷனரை நியமிக்கிற எஜமானரு! கமிஷனர் வந்திருந்தா, அதைப் போயி ஒரு பிரமாதம்னு சொல்ல வந்திருப்பேனா. . . அவரு வந்திருக்காரு. . . தலைவரு. . .

"அப்படியா. . . எங்கே. . . நம்ம மாளிகையிலே அவரோட பாதம்படக் கூடாதா. . .?''

"அவசரமான வேலையா வந்திருக்கிறாரு. சுற்றுலா மாளிகையிலே இருக்கறாரு, கையோடு அழைத்துக் கொண்டு வரச்சொன்னாரு.''

"என்னையா! ஏன்யா, அவரே சொன்னாரா, என்னை அழைத்துக் கொண்டு வரச்சொல்லி?''

கிளம்பிவிட்டார்கள்! தம்பி! சுற்றுலா மாளிகை அறைக்குள்ளே போய்விட்டார் சீமான். நீயும் நானும் வெளியே இருந்து, அந்தச் சிரிப்புச் சத்தத்தைத்தான் கேட்க முடிகிறது. அந்த சத்தத்திற்கு என்ன பொருள் தெரியுமா, உனக்கு! பசுபதீஸ்வரருக்குச் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்துவிட்டது சீமானுக்கு - தேர்தல் நிதி சேர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கை மண்டலத்துக்கு. பசுபதீஸ்வரரின் மகிமையைச் சொல்ல மறந்துவிட்டேனே! முந்நூறு வே- அயன் நஞ்சை - நாலு கடைவீதி - இவ்வளவும் பசுபதீஸ்வரருக்கு இவ்வளவையும் கவனித்துக் கொள்ளப் போகிறவர் தர்மகர்த்தா.

தம்பி! ஆளுங்கட்சி தேர்தல் நிதி திரட்டுவது கண்டு மலைத்துவிட மாட்டார்கள் யாரும், பயில்வான் வீட்டுக் காளை பயிரை அழித்தால், அடித்து விரட்ட முடியுமா! தேவையான அளவு மேயும்!!

ஆளுங்கட்சி பணம் திரட்டுவதிலே காட்டிடும் ஆர்வத்தை முறியடிக்கத் தக்கவிதமாகக் கழகப் பிரசாரம் மும்முரமாக வேண்டும்.

சென்ற கிழமை நான் குறிப்பிட்டிருந்தேனே, கழகம் பற்றிய உண்மையான தகவலைத் தெரிந்து கொள்ளப் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று. அவர்களில் ஒருவர், "காங்கிரஸ் கட்சி பெரிய தொகை திரட்டுகிறார்களே'' என்று கூறினார். அதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள், கழகத்தின் வலிவு பற்றிய கணக்கினை என்று கூறினேன். தம்பி! உன் ஆற்றலை நம்பித்தான் அவ்விதம் கூறினேன், நான் கூறியது தவறல்லவே!

அண்ணன்,

11-7-65