அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


போஜராஜனும் காமராஜரும்
1

சிட்டுகள் வல்லூற்றை எதிர்க்கும் காலம்!
காமராஜர் நுனியில் இருந்துகொண்டு அடிமரத்தை வெட்ட முனைகிறார்!
ஜனநாயக சோஷியலிசம் பேசும் காமராஜர் தங்குவது மாளிகையில்! குலவுவது சீமான்களுடன்!
தர்மகர்த்தா தத்துவம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது!
இன்றைய சீமான்கள் நேற்றைய தர்மகர்த்தாக்களே!
மகாத்மாவால் முடியாததையா காமராஜர் தந்திடப் போகிறார்?
திருடர்களை "நள்ளிரவு உழைப்பாளர்' எனலாமா?
இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் இறைவன் தொடர்பு வைக்கவில்லையே!

தம்பி!

"நானோ என் மனைவியோ ஒரு குற்றமும் செய்யாத போது என் தாயாருக்குக் கோபம் வருகிறது.

நானோ என் தாயாரோ ஒரு தவறும் செய்யாத போது என் மனைவிக்குக் கோபம் வருகிறது.

என் தாயாரோ மனைவியோ ஒரு பிழையும் செய்யாதபோது எனக்குக் கோபம் வருகிறது.

இது யாருடைய குற்றம் அரசே?''

இப்படி ஒரு கேள்வியைப் புலவர் கேட்டபோது மன்னன் திகைத்துப்போயிருப்பான் என்றுதானே எண்ணிக் கொள்வாய்.

ஐயம் அகற்றுக! என்று புவியாளும் மன்னன் புலவரிடம் கேட்பது இயல்பு. இஃதோ அஃதன்று, புலவர் கேட்கிறார் விடை தரும்படி மன்னனை நோக்கி.

நிதி மட்டும் படைத்தவனாக இல்லை அம் மன்னன்; நிரம்ப மதி படைத்தவன். கேள்விக்கான விடை புரிந்துவிட்டது. பணியாளை அழைத்து, புலவருக்குத் தேவைப்படும் பணம் கொடுத்தனுப்பக் கட்டளையிட்டான்.

மன்னனுடைய மதிநுட்பத்தைக் கண்ட புலவர் பெரிதும் பாராட்டினார்.

காரணமற்ற கோபம் ஒவ்வொருவருக்கும்! ஒருவர்மீது ஒருவருக்கு - புலவர் அந்த நிலையைத்தான் எடுத்துரைத்தார்.

வறுமை நோய் வாட்டும்போது மட்டுமே இந்த நிலைமை இருக்க முடியும். கோபம் - ஒருவர்மீது ஒருவருக்கு. தன் குடும்பத்தை வறுமை வாட்டி வதைக்கிறது என்பதைத்தான் புலவர் எடுத்துரைத்தார் என்பதனை உணர்ந்துகொண்ட மன்னன், பரிசுப் பணம் கொடுத்துப் புலவரின் வறுமையை நீக்குவதன் மூலம் அவர் குடும்பத்தில் குதூகலம் மலர்ந்திடச் செய்தான்.

போஜராஜனுடைய அறிவுத் தெளிவையும், அவர் புலவர்களை ஆதரித்த பண்பினையும் விளக்கிட இந்தக் கதையினைக் கூறுவர். ஆனால் தம்பி! நான் இதனை எடுத்துக் காட்டுவது அதற்காக அல்ல; வறுமை என்னென்ன செய்து விடும், எவரெவருக்குக் கோபம் எழ வைத்துவிடும் என்பதை விளக்க.

புலவர், கற்றறிவாளர் காரணமற்றுக் கோபம் கொள்ளக் கூடாது என்பதனை நன்கு அறிவார். ஆயினும் புலவரே சொல்லுகிறார், ஒரு குற்றமும் செய்யாத என்மீது என் தாயாருக்கும் மனைவிக்கும் கோபம் வருகிறது, என் தாயாரும் மனைவியும் ஒரு பிழையும் செய்யாதிருக்கும்போதே எனக்கு அவர்கள்மீது கோபம் வருகிறது - என்பதனை.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளத்தக்க அறிவாற்றல் பெற்ற புலவருக்கே வறுமை, இந்த நிலைமையை உண்டாக்கிவிட்டது என்றால், பாட்டாளிகளையும் ஏழை எளியோரையும் நடுத்தர வகுப்பினரையும் வறுமை என்னென்ன எண்ணிட வைத்திடும்? என்னென்ன செய்திட வைத்திடும் என்பதனை விரிவாகவா விளக்கிட வேண்டும்?

அதிலும் தம்பி! கடினமாக உழைத்திடும் உத்தமன், வாழ முடியாமல் தவித்திடும்போது, அவன் மனம் என்ன பாடுபடும்?

தன்னை உருக்குலையச் செய்திடும் விதமான உழைப்பு, தனக்கு வாழ்வு அளிக்காமல், வேறு எவரெவரோ பளபளப்புப் பெற்றிடவே பயன்படுகிறது என்பதை உணரும்போது அவன் உள்ளம் எரிமலையாகாமலிருக்க முடியுமா?

அந்த எரிமலை வெடித்து ஆத்திரக் குழம்பு குபுகுபுவெனக் கிளம்பி வரும்போது, அதனைத் தடுத்திட தணியச் செய்திட எத்தனை நல்லுரைகள் தந்திடினும் என்ன பயன்?

பொறுத்துக்கொள்! பொழுது புலரும்!! - என்று கூறி எத்தனைக் காலத்துக்கு நம்பிக்கையை ஊட்டிக்கொண்டிருக்க முடியும்?

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற போதனை செய்து எத்தனை காலத்துக்கு அவனை இல்லாமை கொட்டுமிடத்தில் அடைத்து வைக்க முடியும்?

அவனைச் சுற்றிலும் சுகபோகிகள், களியாட்டம்! அவன் உள்ளத்தில் மட்டும் குமுறல்! எத்தனைக் காலம் அவன் சகித்துக் கொள்வான்?

அன்றலர்ந்த மலரின் கவர்ச்சி, அந்தி வானத்தின் அழகு, ஓவியத்தின் நேர்த்தி, மணிமாடத்தின் எழில் ஆகியவைபற்றி மகிழ்ச்சியுடன், கண்டவர் பேசிக்கொண்டிருப்பதை, எப்படி விழி இழந்த ஒருவன் கேட்டுக்கொண்டிருக்க முடியும்? ஏழையின் நிலையும் அது போன்றதே.

அவன் கொதிப்படைகிறான், குமுறுகிறான்; வெறுப் புணர்ச்சி கொள்கிறான்; தன்னை இந்த நிலையில் தள்ளி வைத்துவிட்டு, உல்லாச புரியினர் உண்டு களித்துக் கிடந்திடும் கொடுமையினை அழித்தொழிக்க வேண்டும் என்று ஆவேசம் கொள்கிறான்.

அவனுடைய கண்கள் பல காலம் புனலைக் கொட்டிக் கொட்டிக் இறுதியில் வறண்டு போகின்றன; அவைகள் பிறகு கனல் கக்கத் தொடங்குகின்றன! அப்போது அவனைப் பார்த்து ஆத்திரம் ஆகாது! வெறுப்புணர்ச்சி பெருந் தீது! இதனை ஆண்டவன் பொறுத்துக்கொள்ளமாட்டார் என்றெல்லாம் எவரேனும் பேசிட முற்படின், அவன் ஓர் ஏளனச் சிரிப்பொலி கிளப்பிடுவான்; அந்த ஓசை எந்த பீரங்கிச் சத்தத்தையும் அடக்கிவிடத் தக்கதாகிவிடும்.

ஏர் பிடிப்பவன்தானே! ஏனோதானோதானே! இடுப் பொடிந்தவன்தானே! என்று அவனைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தவர்களின் கண்களில் அச்சம் கப்பிக்கொள்ளும் வடிவம் கொண்டிடும் நிலை பெறுவான், சாவுக்கு அஞ்சாத நிலையினனாகிவிடுவான்! எதனையும் அழித்திடும் வல்லமை பெறுவான். விம்மிக் கிடந்த ஏழை, விழித்துக்கொண்டான் என்பது அதன் பொருள். சிட்டுகள் வல்லூறை எதிர்த்திடும் காலம் என்று கவிஞர் இக்பால் இதனைத்தான் குறிப்பிடுகிறார்.

விம்மிக் கிடந்திடும் ஏழை விழித்துக்கொள்ளும் நிலை பெறும்போது, அவனிடம் இதமாகப் பேசியும், அவனுக்காகப் பரிவு காட்டியும், அவனைக் காத்திடும் உறுதி தெரிவித்தும், அவனை அந்தக் கதிக்கு ஆளாக்கிய செல்வவான்கள்மீது சீற்றத்தைக் கொட்டுவதுபோலக் காட்டியும் நிலைமை மோசமாகிவிடாமல் தடுத்திட முனைபவர் சிலர் உண்டு.

காமராஜர் தம்மை அந்தப் பணிக்கு ஒப்படைத்துவிட்டார்!

ஏழை பங்காளர் என்றும், எளியோருக்காக வாதாடுபவர் என்றும், அவருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பணக்காரர்களின் ஆதிக்கத்தை அவர் அடக்கிடுவார், ஒடுக்கிடுவார் என்று பேசப்படுகிறது.

அவரேகூட, ஏழையைக் காத்திட வேண்டும் என்ற ஆர்வமும், உறுதியும் கொண்டவராக இருக்கக்கூடும்.

போலி நாடகம் ஆடுகிறார் என்றுகூடக் கூறத் தேவையில்லை.

உள்ளபடி ஏழைகளை ஈடேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவே இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால் அவரால் அதனைச் சாதிக்க முடியாது.

ஆற்றலற்றவர் என்று கூறவில்லை, கொள்கை நாணயமற்றவர் என்றும் கூறவில்லை; அவர் உள்ள இடம், தனக்கென ஏற்படுத்திக்கொண்ட சூழ்நிலை, அவருடைய வல்லமையைச் சொல்லளவு ஆக்கிவிடுகிறது.

அவர் எவ்வளவு ஆர்வத்தை வரவழைத்துக்கொண்டு பேசினாலும், சீமான்கள் அதுபற்றித் துளியும் அஞ்சாமலும், கவலைப்படாமலும் இருப்பதற்குக் காரணம், பணக்காரர் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட அவரால் முடியாது என்ற உணர்வுதான் நம்பிக்கைதான்.

பணக்காரர்களை நடுக்கூடத்தில் உட்கார வைத்துக் கொண்டு அவர் சோஷியலிசம் பேசுவது, நுனிமரத்தில் இருந்துகொண்டு அடிமரத்தை வெட்ட முனைவது போன்றதாகும்.

இதனை இங்குள்ள செல்வவான்கள் மட்டுமின்றி, வெளி நாட்டுச் சீமான்கள் குறிப்பாக அமெரிக்க நாட்டு கோடீஸ்வரர்கள் மிக நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் அவர் பேசிடும் ஜனநாயக சோஷியலிசம்பற்றி அவர்கள் துளியும் பொருட்படுத்தவில்லை.

ஏழைகளை மயக்க மட்டுமே அவருடைய ஜனநாயக சோஷியலிசப் பிரசாரம் பயன்படும் என்பதை சீமான்கள் மிக நன்றாக உணர்ந்துகொண்டுள்ளனர்.

அதனால்தான் கோடீஸ்வரரான பிர்லா, மறுபடியும் காங்கிரஸ் கட்சிதான் நாடாள வேண்டும் என்ற தமது விருப்பத்தை ஒளிவு மறைவு இல்லாமல் சில திங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

ஏழையின் மனம் எரிமலை ஆகி, புரட்சித் தீ கிளம்பிடாது தடுத்திடவேண்டுமானால், அந்த ஏழை, தனக்காக வாதாடவும் போராடவும், தன் நிலையைச் செம்மைப்படுத்தவும் பணியாற்றிட ஒருவர் இருக்கிறார், அவர் ஆற்றல் மிக்கவர், அஞ்சா நெஞ்சினர் என்ற நம்பிக்கையைப் பெற வேண்டும்.

இன்று காமராஜர் மூலம் அந்த நம்பிக்கை ஊட்டப் படும் முயற்சி நடைபெற்று வருகிறது.

சமூக அமைப்பும் பொருளாதார முறையும் புரட்சி கரமாக மாறாதிருக்கச் செய்திட, இப்படி ஒருவர் தேவைப்படுகிறார்.

ஆகவே, செல்வவான்களே இன்றைய தினம், காமராஜரின் செல்வாக்கை வலிவுள்ளதாக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்மையிலேயே காமராஜரால் தங்கள் ஆதிக்கத்துக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்திடின், சீமான்கள் காமராஜரை கவிழ்த்திட முனைவர், உச்சி மோந்து முத்தமிட மாட்டார்கள்.

ஜனநாயக சோஷியலிசம் பேசும் காமராஜர் தங்குவது மாளிகையில், குலவுவது சீமான்களுடன்!

அவர்களுடன் குலவிக்கொண்டே அவர்களின் கொட்டத்தை அடக்க முடியாதா என்று கேட்பரேல் தம்பி! முடியாது என்று கூறிட, "மாமேதை' தேவையில்லை.

அதுமட்டுமல்லாமல், ஒரு சில பணக்காரர்கள் பீதி கொண்டுவிடப் போகிறார்கள் என்ற கவலையுடன் அவர் வெளிப்படையாகவே, தாம் பேசும் சோஷியலிசத்தில் பணக்காரர்கள் இருக்கலாம், பணம் திரட்டலாம், ஆனால், அவர்கள் ஏழைகளின் தர்மகர்த்தாக்களாக இருக்க வேண்டும் என்று அறிவித்துவிட்டார்.

இந்த "தர்மகர்த்தா' தத்துவம் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல! பலப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே உலவிக் கொண்டிருக்கிறது.

சீமான் ஆடம்பரமாக உடுத்திக்கொண்டிருக்கிறானே என்று எண்ணி அருவருப்பு அடையாதே! நேர்த்திமிக்க நெசவாளர்களின் வாழ்க்கை உயருவதற்காகவே அவர் விலையுயர்ந்த வேலைப்பாடுமிக்க ஆடைகளை உடுத்திக் கொள்கிறார்.

கோட்டைபோன்ற மாளிகையில் கொலுவிருக்கிறாரே என்றெண்ணிக் கொதிப்படையாதே! கட்டடக் கலைஞர்கள் புகழ்பெற்றிடட்டும் என்ற நோக்கத்தால்தான் மாட மாளிகை கட்டினார்; தன் சுகபோகத்துக்கு அல்ல! - என்று தத்துவம் பேசப்பட்டது.

இவைகளுக்கெல்லாம் ஒரு காலத்தில் மதிப்பு இருந்தது! இன்று? இவைகளை ஏற்பார் இல்லை.

காலமும் கருத்தும் மாறிவிட்டிருப்பதை அறியாததால் காமராஜர், இந்தத் தர்மகர்த்தா தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறார்.

தர்மகர்த்தா வேலை பார்ப்பதே ஒரு புண்ணிய காரியம் என்றும், தர்மகர்த்தாவைத் தட்டிக் கேட்பதே பாப காரியம் என்றும்,

தர்மகர்த்தாவின் பொறுப்பிலேயே சொத்து இருக்க வேண்டும், அதுதான் முறை என்றும் நம்பப்பட்டு வந்த காலம் அல்ல இது.

அத்தகைய நம்பிக்கை இருந்து வந்த நாட்களிலேயே கூட தர்மகர்த்தாக்களாக இருந்துவந்தவர்கள், நெறி தவறி நடந்து கொண்டனர், சுயநலக்காரராயினர் என்ற குற்றச்சாட்டுகள் பலமாக உலவின. அந்த நிலை இன்று மேலும் எந்த அளவுக்கு ஆகிவிட்டிருக்கும் என்று கூறத் தேவையில்லை.

செல்வவானாக ஒருவன் இருப்பது அவன் செய்த புண்ணியத்தால் என்றும், ஏழையாக ஒருவன் நெளிவது அவன் செய்த பாபத்தால் என்றும் நம்பப்பட்டு வந்தது முன்பு. இன்று அந்த விதமான பேச்சு ஏளனம் செய்யப் படும் கட்டம் பிறந்துவிட்டிருக்கிறது.

ஆனால் காமராஜர் மூலம் அந்தப் பத்தாம்பசநம் பிக்கையை மீண்டும் புகுத்திடலாம் என்று அரசியலில் இடம்பெற்றுக்கொண்டுள்ள செல்வவான்கள் எண்ணுகின்றனர்.

நெறி தவறாதவராக ஒரு தர்மகர்த்தா இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்; அத்தகையவர் என்ன செய்திடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்?

உள்ள சொத்து தன் சுகபோகத்துக்கு என்று கருதி விடாமல், பொது நன்மைக்கு, அதிலும் குறிப்பாக ஏழை எளியோர்களின் நன்மைக்காகச் செலவிடப்பட வேண்டும். அதற்காகவே அந்தச் செல்வம் தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது என்று கருத வேண்டும்.

அந்தக் கருத்தின் அடிப்படையில், ஏழைக்கு இதம் செய்யத்தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அன்னதானம், சத்திரம் சாவடி கட்டுதல், பண உதவி தருவது போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும்.

வானமே கூரையாய், விண்மீன்களே விளக்காய், தரையே பஞ்சணையாகக் கொண்டு தத்தளிக்கும் தரித்திரவானுக்கு வீடு கட்டித் தர வேண்டும்

அவன் பிழைக்க வழியின்றி வேதனைப்படும்போது, காப்பாற்றுவதற்காகப் பண உதவி செய்திட வேண்டும்.

ஐயோ பாவம்! அவனும் மனிதன்! அவன் வதைபடப் பார்த்திடப் போமா! என்று எண்ணி, ஏழையின் வேதனையைத் துடைத்திடத் தன்னிடம் உள்ள செல்வத்தைத் தந்துதவ வேண்டும்.

இருளும் அழுக்கும் நிரம்பிய இடத்திலே ஏழையை இடர்ப்படவிடாமல், அவன் வாழ்வுக்கு ஒளியும் நறுமணமும் கிடைத்திடச் செய்திட வேண்டும். தன்னிடம் உள்ள பணத்தைக்கொண்டு, தன் மூன்றடுக்கு மாடியை நான்கு அடுக்கு உள்ளதாக மாற்றிக்கொள்ளாமல், இருட்குகை போலுள்ள இடத்திலிருந்து ஏழையை விடுவித்து அவனுக்கு இல்லம் அமைத்துத் தரச் செலவிட வேண்டும்.

தன்னிடம் உள்ள செல்வத்தைக்கொண்டு, செயற்கைக் குளம் அமைத்து அதிலே பன்னீரைத் தேக்கி வைத்து, அதிலே நீந்தி விளையாடி மகிழ்ந்திட முனையாமல், அந்தப் பணத்தைக் கொண்டு, ஏழைக்குப் போதுமான குடிதண்ணீர் கிடைத்திட ஊருணி அமைத்தளிக்க வேண்டும்.

உள்ள பணத்தைக்கொண்டு தனக்கொரு மணிமுடி தயாரித்துக்கொள்ள முனையாமல், ஏழையின் பிணி போக்க அப்பணத்தைச் செலவிட வேண்டும்.

தம்பி! யோசித்துப் பார்த்தால் இப்படிப் பல செய்திடலாம் என்பது புரியும்.

செல்வவான்கள் இவ்விதமாகவா தமது செல்வத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்திடின், நம்மைக் கவலை கப்பிக்கொள்ளும். ஆனால் நான் உன்னை அது பற்றிக்கூட ஆராந்திடச் சொல்லவில்லை. நான் கூறுவது வேறு; ஒரு அடிப்படைப் பிரச்சினை.

தர்மகர்த்தா, நெறி தவறாது நடந்திடினும் சமூக அமைப்பு மாறாது!

ஒருவர் தர்மகர்த்தாவாக இருக்கும் நிலை எதைக் காட்டும் என்றால், அவர் போன்ற ஒருவருடைய தரும சிந்தனையை எதிர்பார்த்துப் பலர் ஏழைகளாக இருந்தாக வேண்டும் என்பதனை

ஏழ்மை இருந்து தீர வேண்டும்; அப்போதுதான் ஏழைப் பங்காளர் என்று ஒருவர் திகழ்ந்திட முடியும்; ஆக, தர்மகர்த்தா முறை என்பது, ஏழை என்றும் பணக்காரர் என்றும் சமூகம் இரு பிரிவாக இருப்பதையும் அதனால் விளைந்திடும் வேதனையையும் மாற்றிவிடாது! சொல்லப் போனால் அந்த முறை இருந்து தீரும்.

இதனைப் பல நூற்றாண்டுகள் பார்த்தான பிறகுதான் சிந்தனையாளர்கள், தானம் - தருமம் - என்பவைகள் ஏழை பணக்காரன் என்ற பேதத்தை அடியோடு போக்கிடா என்பதை அறிந்தனர்; அவனிக்கு எடுத்துரைத்தனர்!

ஏழை என்று ஒரு பிரிவும் பணக்காரர் என்றோர் பிரிவும் ஏன் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்த நிலை ஒழிந்திட வழி செய்தாக வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதன் விளைவாக மனித குலத்துக்குக் கிடைத்த கருத்துக் கருவூலமே சோஷியலிசம் என்ற தத்துவம்.

தருமகர்த்தா முறை பரீட்சிக்கப்பட்டு அது போதுமானதாக இல்லை என்பது மெய்ப்பிக்கப்பட்ட காரணமாகவே, புதிய முறை வகுக்கப்பட்டது.

அந்தப் புதிய முறையே சமதர்மம் - சோஷியலிசம். இந்தப் புதிய முறையை எப்படி நடத்திச் செல்வது என்பதைச் சிந்தித்துச் செயலாற்றவேண்டிய காலம் இது. ஆனால், இந்தக் காலத்தில், மக்களைப் பின்னோக்கித் துரத்தும் விதமாக, "தர்மகர்த்தா' முறை பற்றிப் பேச முற்படுகிறார் காமராஜர்.

இன்று பிரபுக்கள் பலரிடம் சேர்ந்துள்ள சொத்திலே பெரும் பகுதி, ஒரு காலத்தில் தரும காரியத்துக்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மெள்ள மெள்ள அந்தச் சொத்தினை அவர்கள் தங்கள் சுகபோகக் கருவியாக்கிக்கொண்டனர் என்பதனைப் பொது மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.

கோயிலுக்காக, வேத பாடசாலைக்காக, அன்னதானத்துக் காக, அனாதைகளின் பராமரிப்புக்காக என்று குறிப்பிடப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பெரு நிதி, பிறகு சீமான்களின் சொந்தச் சொத்து ஆகிவிட்ட கதை பலப் பல.

இன்றைய சீமான்களிலே பலர், நேற்றைய தரும கர்த்தாக்கள்!