அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


போஜராஜனும் காமராஜரும்
2

இப்படித் தோற்றுப்போய்விட்ட ஒரு தத்துவத்தை, புதை குழியிலிருந்து வெளியே எடுத்து வைத்துக்கொண்டு, தமது புதிய கண்டுபிடிப்பு இது என்று பேசிப் பார்க்கிறார் காங்கிரஸ் தலைவர்.

சிலர் செல்வத்தைக் குவித்துக்கொள்வதற்கான ஏற்பாட்டினை வைத்துக்கொண்டு, பலர் பஞ்சைகளாகித் தவித்திடும் நிலையையும் வைத்துக்கொண்டு, இல்லாதாரின் இன்னலை உடையவர் துடைத்திடுவார் என்று உபதேசம் பேசி வருவது, கண்ணைப் பறித்துவிட்டு, கைக்கோல் தருவதற்கு ஒப்பானதாகும்; பாம்புப் புற்றுக்குப் பக்கத்தில் பச்சிலைச் செடி நட்டு வைத்துக் காட்டுவதுபோன்றதாகும்; கூரையைக் கொளுத்திவிட்டு, குடம் குடமாகத் தண்ணீர் தர முனைவதுபோன்றதாகும்.

இது பிரச்சினையைத் தீர்த்திடும் முறை அல்ல; மூடி மறைக்கும் முயற்சி.

ஆகவேதான் தம்பி! நாம் இந்தத் தர்மகர்த்தா முறைபற்றிய பேச்சினை ஏற்க மறுக்கிறோம்.

மேலும், தம்பி! இந்தப் போதனையை இவருக்கு முன்னாலே எப்படிப்பட்டவர்களெல்லாம் செய்து பார்த்துப் பலன் காணாது வாடிப் போயினர் என்பதை எண்ணிப் பார்த்திடும்போது கவலை அதிகமாகித்தான் தீரும்.

மகாத்மா காந்தியார் தமது ஆயுட்காலம் முழுவதும் இந்த போதனையைத்தான் செய்து வந்தார்!

ரμய நாட்டு தத்துவ மேதை டால்ஸ்டாய் - வேதாந்த வித்தகர் இந்தப் போதனை நடத்தியவர் - அறிவோமே.

அவர்களின் உபதேசங்கள் "பூஜ மாட' ஏடுகளாக்கப்பட்டு விட்டனவேயன்றி, புதிய முறையையா, சமூகத்திலே புகுத்தின? இல்லையே!

மகாத்மாவின் உபதேசம் சாதித்துக் கொடுக்காத தர்மகர்த்தா முறையையா, புதிய பெரியவரின் பேச்சு தந்திடப் போகிறது? அப்படிச் சொல்லிட ஒன்று நெஞ்சழுத்தம் நிரம்ப வேண்டும் அல்லது ஏய்க்கும் திறமை மிகுந்திருக்க வேண்டும்.

தருமகர்த்தா முறை செயல்பட்ட காலத்திலே கட்டப்பட்ட சத்திரங்களும் சாவடிகளும் ஏராளம். ஆனால் வளர்ந்துவிட்ட ஏழையின் தொகையோ அதனினும் ஏராளம்.

தருமகர்த்தாக்களாகச் சிலர் விளங்கிடவேண்டு மென்றால், அவர்களிடம் பெரு நிதி சேர்ந்திடவேண்டு மென்றால், நாட்டிலே உற்பத்தியாகிற செல்வத்திலே பெரும் பகுதி அவர்களிடம் போய்ச் சேர்ந்தாக வேண்டும்; பெரும் பகுதிச் செல்வம் செல்வர் சிலரிடம் சேர்ந்திடுமானால், சமூகத்தில் பெரும் பகுதி வறண்டுதானே கிடந்தாக வேண்டும்.

இதனால்தான், தம்பி! ஏழை பணக்காரன் பேதம் நீடித்துக் கொண்டு வருகிறது. இதனால்தான் தம்பி! வறுமையால் தாக்குண்டோர் தொகை வளர்ந்தபடி இருக்கிறது. இதனால்தான் தம்பி! வறுமையின் தாக்குதல், குடும்பங்களிலே குமுறலை, காரணமற்ற கோபம் கொண்டிடும் நிலையினை மூட்டி வைக்கிறது. இதனை உணர்ந்தோர், உயர் பதவியினர் தர்மகர்த்தா தத்துவம் பற்றிப் பேசுவதைக் கேட்கும்போதே எள்ளி நகையாடத் தான் செய்வர்.

தருமகர்த்தா தத்துவத்தைப் பற்றிக் காமராஜர் பேசி அது கேட்டு செல்வவான்கள் மனம் உருகி, ஐயகோ! நாம் சுகபோகத்தில் இருக்கிறோம், நமது உடன் பிறந்தோர் வறுமையிலே உழல்கிறார்களே! நாம் கனிச்சாறு பருகுகிறோம், அவர்கள் கால்வயிற்றுக் கூழும் கிடைக்காமல் தவிக்கிறார்களே! நமக்குப் பஞ்சணை, அவர்களுக்குக் கட்டாந்தரை! நாம் மாளிகையில், அவர்கள் மரத்தடியில்! நாம் புதுப்புது இன்பம் தேடிப் பெறுகிறோம், அவர்கள் புழுப்போலத் துடிக்கிறார்களே! இது சரியா, முறையா? மக்களிலே பெரும் பகுதியினர் வேதனையில் உழலும்போது, நாம் வாழ்க்கையையே விழாவாக்கி மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடப்பதா? மனிதாபிமானமாகுமா இது? சேச்சே! என்ன கொடுமை! என்ன கொடுமை! இரும்புப் பெட்டியிலே பணம்; ஏழை குடிசையில் பிணமாகிறான், பசி நோயினால்! எதற்கு இந்தப் பணம்? என்னிடம் உள்ள பணம், என்னிடம் உள்ள பணம் என் பணமா? ஏழையின் வியர்வை அல்லவா பணமாக மாறி என்னிடம் வந்தது? அந்த ஏழைகளைக் காத்திட இந்தப் பணம் பயன்படட்டும் என்றல்லவா இத்தனை பணம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது? குளத்திலே நீரைத் தேக்கி வைப்பது எதற்கு? ஊரார் பருகிட உதவ வேண்டும் என்பதற்கல்லவா? முதலைகள் புரண்டிடவா தடாகம்!! நான் தனவான்! கனவான்! சீமான்! பொருள் என்ன? தனவான் என்பது தருமவான் என்பதன் மறு பெயரல்லவா? கனவான் என்றால் மக்களைக் கவனிப்பான் என்றல்லவா பொருள்? சீமான் என்றால் சீர்செய்வோன் என்றல்லவா பொருள்? இதுதானே தருமகர்த்தா முறை! இதனை இதுநாள்வரை மறந்து கிடந்தேனே! மக்கள் துரோகியாகிக் கிடந்தேனே! இப்போதல்லவா உண்மையை உணர்ந்தேன்! கண் திறந்தது! இதயம் மலர்ந்தது! எல்லாம் பெரியவர் காமராஜர் தந்த தருமகர்த்தா உபதேசம் கேட்டதனால். இதோ, இனி என் செல்வம், ஏழைக்கு இதம் அளிக்க! என் கடன் பணி செய்து கிடப்பதே! யான் பெற்ற செல்வம் யாவர்க்கும் சொந்தம்! தந்தேன்! தந்தேன்! நான் தருமகர்த்தா! தருமகர்த்தா - என்றெல்லாம் நெஞ்சு நெக்குருகக் கூறி, தம்மிடம் உள்ள செல்வத்தை அள்ளித் தந்து ஏழையின் அல்லலைப் போக்கிடவா கிளம்புகின்றனர்? இல்லையே! ஒரு புன்னகையை உதிர்க்கின்றனர்; புதுத் தெம்பு கொள்கின்றனர்!

மதியற்றோரே! கேட்டீரா காமராஜர் பேச்சை! பணக்காரர்கள் என்றாலே பாதகர்கள் என்று பேசி வந்தீரே! சீமான் என்றால் ஏழைக்கு வைரி என்று ஏசி வந்தீரே! முதலாளி என்றால் பாட்டாளிக்குப் பகையாளி என்று பழி சுமத்தி வந்தீர்களே! காமராஜர் பேச்சைக் கேட்டீர்களா? நாங்கள் தர்மகர்த்தாக்கள்! ஆமாம்! தர்மகர்த்தாக்கள்! எம்மிடம், எமது தகுதி, திறமை, பண்பு பார்த்துச் செல்வம் வந்து குவிந்திருக்கிறது. இந்தப் பணம் எமக்கேவா சொந்தம்? இந்தப் பணத்தைக் கொண்டு நாங்களா சுகபோகத்தில் மூழ்கிடப்போகிறோம்? நீரைத் தன்னிடத்தில் நிரப்பி வைத்துக்கொண்டிருக்கும் குளம் எப்படி ஊராருக்குப் பயன் தருகிறதோ அப்படி ஏழைகளுக்கு இதம் செய்திட இந்தச் செல்வம். எம்மிடம் பணம் இருக்கிறதே என்பதற்காக பகைத்துக்கொள்ளலாமா? உங்கள் நலனுக்காக அல்லவா இந்தப் பணம் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது! நாங்கள் தந்திட! நீங்கள் பெற்றிட! நாங்கள் தந்திடவேண்டு மானால், எம்மிடம் பணம் சேர்ந்திடவேண்டுமல்லவா? அப்படிச் சேர்ந்திடும்போது, அடிக்கிறான் கொள்ளை, குவிக்கிறான் கோடி என்று கொக்கரிக்கிறீர்களே நியாயமா? நாங்கள் குவித்திடா விட்டால், உங்களுக்கு உதவி யார் செய்திடுவர்? எப்படிச் செய்திட முடியும்? தருமகர்த்தா இல்லாவிட்டால் தருமம் எப்படி நடக்கும்? தருமம் நடக்காவிட்டால், தரித்திரத்தால் தவித்திடும் உங்கள் வேதனை எப்படிப் போகும்? ஆகவே இனியாகிலும், அருவருப்பு, பொறாமை, பகை கொள்ளாதீர்கள்! மாளிகையில் மந்தகாசமாக வாழ்கிறான் என்று கோபம் கொள்ளாதீர்! மாளிகை வாசியினால்தானே மண் குடிசைக்காரரின் இன்னலைத் துடைக்க முடியும். உங்கள் இன்னலைத் துடைக்கத்தானே எம்மிடம் இலட்சங்கள் உள்ளன! நாங்கள் தர்மகர்த்தாக்கள்! எங்களை வாழவிடுங்கள், வளரவிடுங்கள்!! வாழ்த்துங்கள்! வணங்குங்கள்! உமக்கு வாழ்வளிக்கும் வல்லமையாளர் நாங்கள்!! என்று ஏழையைப் பார்த்துக் கூறிடும் துணிவு பெறுகின்றனர்.

சுயநலக்காரன்
சுரண்டல்காரன்
சுகபோகி
பணம் பெருத்தான்
இரும்புப் பெட்டிக்காரன்

என்றெல்லாம் பணக்காரர்கள் கண்டிக்கப்பட்டால், ஒரு கொதிப்பு எழும்; குமுறிக் கிடந்தவர்கள் சீறி எழுவர்; கூப்பிய கரங்கள் தாக்கிட எழும்; புனல் சொரிந்த கண்கள் கக்கும், புரட்சி மூளும், நமது நிலை அழியும். ஆனால் நாம் தர்மகர்த்தாக்கள் என்று காமராஜரே கூறிவிட்டார். ஆகவே ஏழை எளியோர் நம்மை வாழ்த்துவர், வணங்குவர்! நமக்கு எதிர்ப்பு எழாது, பகை மூண்டிடாது, நமது ஆதிபத்தியம் அழிந்துபடாது!! - என்று எண்ணுகின்றனர். அந்த எண்ணம் ஒரு துணிவைத் தருகின்றது.

காமராஜரின் தர்மகர்த்தாப் பேச்சு எதிர்காலத்தைப் பற்றி எண்ணி எண்ணி அஞ்சிக் கிடந்த பணக்காரர்களுக்குப் புதுத் தெம்பும், துணிவும் தந்துவிட்டது.

முதலாளித்துவ முறைக்கு இருந்து வரும் எதிர்ப்பு முறிந்திட வழி செய்கிறது.

ஏழையைச் சீமானிடம் பணிந்திடச் செய்கிறது.

தம்பி, இவைகளை அறிந்து திட்டமிட்டுக் காமராஜர் இந்தத் தர்மகர்த்தா முறை பற்றிப் பேசுகிறார் என்று நான் கூறவில்லை. தமது பேச்சு எதற்குப் பயன்படுத்தப்பட்டுவிடும் என்பதை உணர்ந்தறியாமல், - தித்திப்புப் பேச்சுப் பேசி வைப்போம், ஏழையின் உள்ளக் குமுறல் குறையட்டும் என்ற எண்ணத்தில் பேசுகிறார். தம்மீது வீசப்பட்டு வந்த பகைச் சொற்களும், எறியப்பட்ட எதிர்ப்புகளும் மாறி, மதிப்புமிக்க ஒரு பட்டப் பெயர் - தர்மகர்த்தா - என்ற பெயரல்லவா கிடைக்கிறது, இந்தப் பெருமையை நமக்கு அளித்தவர் காமராஜர் அல்லவா? அவரல்லவா நமக்கு உண்மை நண்பர்! அவர் வாழ்க! அவர் கூறிடும் தர்மகர்த்தா தத்துவம் வாழ்க! - என்று வாழ்த்துகின்றனர். "சோடசோபசாரம் செய்யவும் சொர்ணாபிஷேகம் செய்யவும்' முனைகின்றனர்! திருடர்களுக்கு நடுநிசி உழைப்பாளர் என்று சிறப்புப் பெயர் கொடுத்திடுவார் உண்டா? இல்லையல்லவா? அப்படி யாரேனும் துணிந்து கூறிடின், கூறுபவர் பெருந்தலைவர் வரிசையினராகவுமிருப்பின், "நடுநிசி உழைப்பாளிகள்' திருவிழா அல்லவா கொண்டாடுவர்!

காமராஜர் நடத்தும் ஜனநாயக சோஷியலிச விழாவில், சீமான்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வதன் காரணம், தமக்கு மதிப்புமிக்க ஒரு பட்டத்தை - தருமகர்த்தா என்ற பட்டத்தைச் சூட்டினாரே, நம்மை எதிர்த்திடுவோரை அழைத்து, ஏமாளிகளே! இவர்களை யாரென்று எண்ணிக்கொண்டு எரிச்சல் கொள்ளுகிறீர்கள்? இவர்கள் தர்மகர்த்தாக்கள்! என்று கூறுவதன் மூலம், நமக்கு ஒரு எதிர்காலத்தை உறுதிப்படுத்தியிருக்கிறாரே! இவருக்கல்லவா விழா எடுக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

ஆனால், அவர்களும் உண்மையைக் கண்டறிய முனையவில்லை. இந்த "தர்மகர்த்தா' தத்துவம் சாஸ்திரமாக, காப்பியமாக, கதையாக, கவிதையாக, எப்படிப்பட்ட மாமேதைகளால் முன்பு தரப்பட்டது! எவ்வளவு சடுதியில், எளிதாக ஏழை மக்கள் அதனை மறந்துவிட்டார்கள்! முன்பு தத்துவம் பேசியவர்கள், இன்றைய காமராஜரைக் காட்டிலும் பெரியவர்களல்லவா? அவர்களில் அருளாளர்கள் இருந்தனர்; கவிவாணர்கள் இருந்தனர்; புலமை மிக்கோர் இருந்தனர்; புவி எங்கும் உள்ள நிலைமைகளைத் தெரிந்த அறிவாளர்கள் இருந்தனரே! அவர்கள் அன்று பேசினர் தருமகர்த்தா முறை பற்றி. பேசி? கேட்டனர், தலை அசைத்தனர்! ஆனால், மீண்டும் மீண்டுமல்லவா அறம் அழிந்துபட்டது, செல்வச் செருக்கு கொக்கரித்துக் கூத்தாடிற்று.

அகவலாகவும் வெண்பாவாகவும் அறுசீராகவும் பிற வகையினதாகவும், உரைநடையாகவும் உரையாடலாகவும் பேரறிவாளர்கள் எடுத்துக் கூறிவந்த தர்மகர்த்தா முறையினை - மிக எளிதான முறையில்,

அறம் செய விரும்பு

என்று நம் ஆன்றோர் சொல்லிவைக்கவில்லையா? அதனைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருப்பதால் விளையப்போகும் பலன் என்ன?

செல்வவான்கள் தர்மகர்த்தாக்கள் என்ற பேச்சு, சமூகப் புரட்சி ஏற்படுத்தத் துணிவற்றவர்கள் நடத்திக் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு!

செல்வவான்களை தர்மகர்த்தாக்கள் என்று நாடாளும் பெரியவர்கள் கூறுவதைப் பயன்படுத்திக்கொண்டு முதலாளிகள் தங்கள் ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்திக்கொள்வர்.

இன்று காங்கிரசின் துணைகொண்டு முதலாளிகள் அந்தக் காரியத்தைத்தான் நடத்திக்கொண்டுள்ளனர்.

பணம் சிலரிடம் குவிந்திருக்கும்போது அதனை தருமகர்த்தா முறை என்று பேசி, பூசி மெழுகுகிறார்கள். ஏராளமான நிலபுலன்களைத் தமதாக்கிக்கொண்டிருந்த ஜெமீன்தாரர்களை ஒழித்தபோது இந்தத் தர்மகர்த்தர் தத்துவம் எங்கே போய்விட்டிருந்தது?

ஐநூற்றுச் சொச்சம் சமஸ்தானாதிபதிகளின் பட்டத்தைத் தட்டிவிட்டபோது, இந்தத் தர்மகர்த்தா தத்துவம் ஏன் பதுங்கிக் கொண்டது?

செல்வவான்கள், தர்மவான்கள் என்றால் ராஜாக் களும் ஜெமீன்தாரர்களும், கடவுளின் பிரதிபிம்பங்கள் அல்லவா!! ஒப்புக்கொள்வார்களா?

பணக்காரர்கள் ஏழைகளுக்காகவே சொத்தைப் பயன்படுத்தும் தர்மகர்த்தாக்களாக உள்ளனர் என்ற தத்துவம், அரசன் ஆண்டவனின் பிரதிநிதி, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்ற தத்துவத்தோடு சேர்ந்து பிறந்ததாயிற்றே; அரசன் ஆண்டவனின் பிரதிநிதி என்ற தத்துவம் தகர்க்கப்பட்டுப்போனது போலவே, சீமான்கள் தர்மகர்த்தாக்கள் என்ற தத்துவமும் தூளாகிப் போகாமல் தப்பித்துக்கொள்ள முடியுமா?

ஆனால் பலிக்கிற வரையில் பார்க்கலாம் என்ற முறையில் காமராஜர் இந்தத் தருமகர்த்தா முறை பற்றிப் பேசி வரலாம் என்று இருக்கிறார். இந்தத் தத்துவத்தில் முன்பு மக்களுக்கு இருந்துவந்த மயக்கம் இன்று பெருமளவு போய்விட்டிருக்கிறது. ஆகவே அவர்கள், காமராஜர், தருமகர்த்தா தத்துவம் பற்றிப் பேசிடக் கேட்டுக் கேலிப் புன்னகை செய்கின்றனர்.

பணக்கார ஆதிக்கத்தை ஏன் இன்னமும் விட்டுவைக்கிறீர்கள் என்று மக்கள் சீற்றத்துடன் கேட்கும்போது, அவர்களைச் சாந்தப்படுத்த காமராஜர்கள் இந்தத் தருமகர்த்தா தத்துவத்தைப் பேசிடலாம்.

பணக்காரர்களிடம் ஏழைகள் பகை உணர்ச்சி காட்டும்போது, அதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பணக்காரர், இந்தத் தருமகர்த்தா தத்துவத்தைப் பயன்படுத்திட முனையலாம்.

ஆனால், இதே தருமகர்த்தா தத்துவத்தை எடுத்துக் காட்டி ஏழை, பணக்காரனை அவனிடம் உள்ள செல்வத்தை ஏழைக்கு இதம் செய்திடச் செலவிடும்படிக் கேட்க முடியுமா? கேட்டிடின், பணக்காரர்கள் தருமகர்த்தா தத்துவத்தின்படி நடந்துகொள்ள முன் வருவார்களா? வரமாட்டார்கள்! சீறுவர்! கொதித்தெழுவர்.

தருமகர்த்தா என்ற பட்டத்தை, தனவான், கனவான், சீமான்! என்ற பழைய பட்டங்களுடன் சேர்த்து இணைத்துக்கொள்ள மட்டுமே பணக்காரர்கள் இசைவார்கள். அந்தத் தத்துவத்தின்படி, தன் சொத்து தனது சுகபோகத்துக்கு அல்ல, ஏழையின் நன்மைக்கு என்று கருதிச் செலவிட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்.

காமராஜர் பேசிடும் தருமகர்த்தா தத்துவத்தை நம்பிக்கொண்டு ஏழையர், செல்வர்களை அணுகி, ஐயன்மீர்! உலவிடும் மாளிகையும் அதிலுள்ள பெருநிதியும், வயலும் வளமும் அணிவனவும் பெறுவனவும், உம்முடையதன்று; எமக்காக உம்மிடம் ஒப்படைத்த செல்வமேயாகும்; நீவிர் எமக்காக இறைவனால் தருமகர்த்தா ஆக்கப்பட்டவர். எனவே, எடும் செல்வத்தை, கொடும் ஏழையர் துயர் போக்க என்று கேட்டிடின் என்ன கிடைத்திடும்?

தடியடி
சிறை
துப்பாக்கிச் சூடு!

"கேட்பதும் கிடைப்பதும்' என்ற தலைப்புடன், சிங்கைத் தோழர் உலகநாதன் என்பார் தந்துள்ள கவிதையின் பகுதி, செல்வவானின் போக்கை நன்கு எடுத்துக் காட்டுகிறது என்பதனால் அதனைத் தருகிறேன்.

"வாழ்வில்லை வளமில்லை
வலிவில்லை செழிப்பில்லை
சூழ்தொல்லை சிறிதில்லை
சுகமில்லை நலமில்லை'' என்றால்
மரமுண்டு கயிருண்டு
மரணத்தில் சுகமுண்டு
பிறகென்ன துயருண்டு?
பேசாதே போவென்று சொல்வார் - இவர்
கூசாமல் சாவென்று சொல்வார் - இங்கே
வாழ்வுக்கு வழி கேட்டால்
சாவுக்கு வழி காட்டிச் செல்வார்!

அவர்கள் கிடக்கட்டும் தம்பி! இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் ஈஸ்வரன் சம்பந்தம் வைக்கவில்லையே அம்மா என்று உழவன் கூறுவதாக நான் "ஓர் இரவு' என்ற கதையில் எடுத்துக் காட்டினேன், ஆண்டு பலவற்றுக்கு முன்பு. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் காமராஜருமா அப்படி இருக்க வேண்டும்?

வாழ்வுக்கு வழி கேட்டால், வகையற்ற பேச்சைத் தத்துவமாக்கியா தருவது?

இதென்ன புதிதா? மிக மிகப் பழையது! பலன் தருவதா? இல்லை! உபதேசக் குவியலுடன் சேர்த்து வைக்கத்தக்கது! அதைத்தான் தர முடிகிறது அவரால்! அதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

தம்பி! துவக்கத்தில் காட்டினேனே புலவர் கேள்வி, அதனை மறுபடியும் படித்துப் பார்!

ஒருவர்மீது ஒருவருக்குக் காரணமற்றுக் கோபம் வருகிறது அரசே! அதற்கு என்ன காரணம்? என்றல்லவா புலவர் கேட்டார். அதற்கு இதயம் படைத்த மன்னன் என்ன பதில் அளித்தான்? நிலைமையை உணர்ந்து, பரிசுப் பணம் கொடுத்துப் புலவரின் வறுமையைப் போக்கினான்.

போஜராஜன் காலத்தில் காமராஜர் இருந்திருந்து, போஜராஜனிடம் போய் நிற்காமல் அந்தப் புலவர் காமராஜரிடம் போய்க் கேட்டிருந்தால், பதில் என்ன கிடைத்திருக்கும்? கோபமா! உமக்கும் வருகிறது, உம் மனைவிக்கும் வருகிறது, உமது தாயாருக்கும் வருகிறதா? காரணமற்றுக் கோபம் வருகிறதா? சரி! சரி! அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்றா என்னைக் கேட்கிறீர்கள்? சரி! சரி! கூறுகிறேன் கேள் ஐயா புலவரே! ஆறுவது சினம்!! - என்ற இந்தப் பதிலைத்தானே தந்திருப்பார்!!

அண்ணன்,

9-10-66