அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கனடா பயணம் - (2)
1

கனடாவில் இரு ஆட்சி மொழிகள்
கனடா ஆங்கிலம் - பிரஞ்சு மொழி பேசுவோரின் சொந்த நாடு
க்யூபெக் மக்கள் கேட்பது சலுகை அன்று உரிமை!
இந்தி பெரும்பான்மையோர் பேசும் மொழி அன்று!
தமிழக அரசே இந்தி ஆட்சிமொழி ஆவதை எதிர்க்கும் நிலை ஏற்பட வேண்டும்!

தம்பி!

எங்கோ நெடுந்தொலைவிலே நடப்பதுபற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும், அது பற்றி ஏன் இவ்வளவு விரிவாக எழுத வேண்டும் என்று எண்ணி எங்கே சலித்துக் கொள்ளு கிறாயோ என்ற சந்தேகத்தால்தான், சென்ற கிழமையே முழுத் தகவலையும் கூறாதிருந்தேன்.

ஒன்று கூற விரும்புகிறேன், ஆதிக்க மனப்பான்மையும் அதன் விளைவாக ஏற்பட்டுவிடும் அடிமைத்தனமும், அது வேதனையாக வளர்ந்த பிறகு எழுகிற குமுறல், கிளர்ச்சி, புரட்சி ஆகியவையும் எவ்வளவு நெடுந்தொலைவிலே நடந்தாலும், நாம் அக்கறை காட்டியாக வேண்டும். ஏனெனில், அவைகளின் வகை மாறுபட்டிருக்கலாமே யொழிய அடிப்படை எங்கும் ஒரேவித மானதாகத்தான் இருக்கும், சில இடத்திலே இனம், சில இடத்திலே மதம், இன்னும் சில இடத்திலே மொழி, பற்பல இடத்திலே பணம் என்பவை ஆதிக்கத்துக்கான கருவிகளாக உள்ளன. கருவியின் வகை வேண்டுமானால் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வோர் விதத்தில் இருக்குமேயொழிய, ஆதிக்கமுறை, நோக்கம், போக்கு, விளைவு இவை எங்கும் கொடுமை தருவனவாகவே அமையும். எவ்வளவு நெடுந்தொலைவிலே நடைபெறும் ஆதிக்கமாக இருப்பினும், அதனை ஆராய்ந்து பார்ப்பதிலே நிச்சயம் பயன் கிடைக்கும்; அதனால்தான் கனடா நாட்டு நிகழ்ச்சி பற்றிச் சிறிதளவு விரிவாகவே விளக்க விரும்பினேன்.

பசி! பசி! பசி! என்று எப்போதும் இதே பல்லவிதானா என்று பணம் படைத்தவர் கேட்கிறார் அல்லவா, தன்னிடம் பாடுபட்டும் பராரியாகக் கிடப்பவனைப் பார்த்து, அதுபோல, ஆதிக்கத்தினால் தாக்குண்டு தத்தளிக்கும் நிலைமையில் இல்லாதவர்களும், மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ளவர்களும், வேதனைப் படுகிறவர்களிடம் ஒரு புன்னகையை உதிர்த்தபடி பேசுகிறார்கள்; இது என்ன குறுகிய மனப்பான்மை! என் மொழி! உன் மொழி! என்று சிறுபிள்ளைத்தனமான பேச்சு! மொழி ஆதிக்கம், மொழி ஏகாதிபத்தியம் என்ற பேச்சு! சேச்சே! எல்லோரும் மனிதர்கள்! அனைவருக்கும் சொந்தம் இந்த உலகம்! இதிலே இனம், மதம், மொழி என்ற அற்பக் காரணங்களுக்காகப் பிளவுபட்டு நிற்பதா பேதம் மூட்டிக் கொள்வதா!! என்று கேட்கிறார்கள். நான் அப்படியொன்றும் மேலே விழுந்து கடித்துக் குதறிச் சதையைப் பிய்த்துத் தின்றிடவில்லையே, இலேசாகப் பல்லால் தீண்டினேன், பாவிப்பயல் இதற்கே சுருண்டு கீழே விழுந்து செத்துத் தொலைத்தானே! என்று நல்லபாம்பு கூறுவதில்லை. ஆனால், சில நல்லவர்கள் கூறுகிறார்கள், என்ன கெடுதல் செய்துவிட்டோம் உங்களுக்கு, எல்லோருக்கும் பொதுவாக ஒரு மொழி இருக்கட்டும் என்கிறோம், வேறு என்ன சொல்லுகிறோம்; அந்த மொழி ஏற்கனவே பலர் பேசும் மொழியாக இருப்பதால் அதனைப் பொதுமொழி என்று ஏற்கச் சொல்கிறோம், இதுவா கொடுமை! இதுவா அநீதி! இதற்கா இத்தனை எதிர்ப்பு, எரிச்சல், கிளர்ச்சி!! - என்றெல்லாம்.

கனடாவின் அரசியல் சட்டதிட்டத்தை வகுத்தவர்கள் இதுபோல வாதாடவில்லை. கனடாவில் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் ஆங்கில மொழி பேசுபவர்கள், ஆகவே, கனடா நாடு முழுவதற்குமாக ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று விதி வகுத்திடவில்லை; மாறாக மிக நேர்த்தியான அரசியல் நுண்ணறிவுடன், சிறுபான்மையோரின் மொழி என்றாலும், அவர்கள் அம்மொழியைத் தாய்மொழி யாகக் கொண்டிருப்பதால், அவர்கள்மீது வேறு மொழியை ஆட்சி மொழியாகத் திணிக்கக் கூடாது என்று உணர்ந்து ஆங்கிலம், பிரஞ்சு எனும் இருமொழிகளையும் ஆட்சி மொழிகள் என்ற திட்டம் மேற்கொண்டனர்.

இரு மொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்ட தனால், எதிர்பாராத சிக்கல் பல ஏற்பட்டு, நிர்வாகம் சீர்குலைந்துபோய், புதிய ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிட வில்லை. இரு ஆட்சி மொழிகள் திட்டம் நடைமுறைச் சிக்க-ன்றி அமுலில் இருந்து வருகிறது. என்றாலும் இப்போது க்யூபெக் அரசு போர்க்கொடி உயர்த்தி யிருக்கிறது. அதற்குக் காரணம் இரு ஆட்சி மொழிகள் கொண்டிருப்பதால் ஏற்பட்ட குழப்பம் அல்ல. ஆங்கில மொழியினர், பிரஞ்சு மொழியினரின் மொழியைத் தாழ் நிலைக்குத் தள்ளிவிடவில்லை; சட்டம் இடம் கொடுக்க வில்லை; ஆனால், மற்றத் துறைகளில், பிரஞ்சு மொழி யினரான க்யூபெக் மக்களைத் தாழ்த்திவிட்டுள்ளனர்.

இரண்டு கருத்துக்களைப் பெறுகிறேன் தம்பி! நான் இந்தத் தகவலை ஆராய்வதில். ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் ஆட்சி மொழிகளாக இருப்பது முடியாது, சிக்கலும் குழப்பமும் ஏற்படும் என்று அச்சப்படத் தேவையில்லை; கனடாவில் இரு ஆட்சி மொழிகள் இயங்கி வருகின்றன; அதனால் சிக்கலோ, குழப்பமோ மூண்டுவிடவில்லை. இரண்டாவது, ஆதிக்கம் செலுத்துவதில் சுவை காண்பவர்கள், அதற்கு ஒரு கருவி பயன்படாமற் போய்விட்டால் வேறு கருவியைத் தேடிப் பெற்றுக் கொள்கிறார்கள்.

மொழி மூலம் தமது ஆதிக்கத்தைப் புகுத்துவது முடியாது என்பதை உணர்ந்த ஆங்கில மொழி பேசுவோர், பிரஞ்சுமொழி பேசுவோரைத் தாழ்த்தி அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த மத்திய அரசு அமைப்பிலே தமக்குள்ள மெஜாரிட்டி பலத்தைக் கருவியாக்கிக் கொண்டனர். இதனை எதிர்த்து நிற்கிறது க்யூபெக். கருவி எதுவாக இருந்தால் என்ன, ஆதிக்கம் ஆதிக்கந்தானே! ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கிறது - பொருளாதாரத் துறையில், அரசியல் அரங்கில், தொழில் துறையில், ஆங்கிலேயர் பெற்றுள்ள ஆதிக்கத்தை எதிர்க்கிறது.

இந்த எதிர்ப்பு வலுப்பெற்ற நிலையில் க்யூபெக் மக்கள் தங்கள் பிரஞ்சு மொழி, பிரஞ்சுக் கலாச்சாரம் ஆகியவற்றினைப் பாதுகாத்துக் கொள்ளவும், வளர்ச்சி பெறச் செய்யவும் தக்கவிதமான அரசியல் அமைப்பு தமக்குத் தேவை என்று கேட்டுக் கிளர்ச்சி செய்கின்றனர்.

1867-லேயே, இரு மொழிகளும் ஆட்சி மொழிகள் என்று சட்டம் வகுத்து, அதனைச் செயல்படுத்தி வந்ததனால் இப்போதைய மாச்சரியம், மொழிப் பிரச்சினையின் அடிப்படையிலே இல்லை.

ஆனால் இந்தியப் பேரரசோ, மொழியிலிருந்தே ஆதிக்க அரசைத் தொடங்க வேண்டும் என்று திட்டமிடுகிறது.

மொழி விஷயத்திலே மாச்சரியம் எழவிடாதபடி தடுத்த பிறகும்கூட, வேறு முறைகளிலும் துறைகளிலும் ஆதிக்கத்தைப் புகுத்திட ஆங்கிலேயர் முனைகின்றபோது, எதிர்ப்புக் கிளம்புகிறது கனடாவில்! இங்கோ மொழியிலிருந்து ஆதிக்கத்தைத் தொடங்குகிறார்கள்; ஏன் என்று கேட்பவர்களைக் கண்டிக்கிறார்கள்; பல்வேறு வகையில் அடக்கி ஒடுக்கப் பார்க்கிறார்கள்.

ஆதிக்கம் இருக்கிறதே தம்பி! அது மிக விந்தையானது. ஆதிக்கத்திலே சிக்கிச் சீரழிவோர் போக, அடிமைத்தனத்தைத் தாங்கித் தாங்கி உணர்ச்சியற்றுப் போனவர் போக, மீதமுள்ள வர்கள், ஏன் நாம் அடிமைப்படுத்தப் பட்டோம்? எந்தக் கருவி கொண்டு நம்மை அடிமைப்படுத்தினார்கள்? என்று எண்ணிப் பார்க்கத் தொடங்கி, நாம் யார்? நம்முடைய இயல்பு என்ன? மரபு என்ன? என்பன பற்றிச் சிந்திக்கத் தொடங்கி, நம்முடையன யாவை? என்று ஆராய்ந்து கண்டறிந்து, அவைகளைப் பேணி வளர்த்திடவும், அவற்றிலே பெருமை காணவும் முற்படுகின்றனர். ஆதிக்கம் துவக்கத்திலே தொல்லையையும் துயரத்தையும் தருகிறது. இறுதியில், நம்மை நாம் உணர்ந்து கொள்ளும் நல்லுணர்ச்சியை, உள்ளுணர்ச்சியைத் தருகிறது, எழுச்சி பிறக்கிறது!!

இந்த நிலை ஒவ்வோரிடத்தில் ஏற்பட ஒவ்வோர் விதமான முறை தேவைப்படலாம்; ஆனால், இந்த நிலையை இன்று பல்வேறு இடத்திலே, ஆதிக்கக் கரத்தில் சிக்கிக் கிடந்தவர்கள் பெற்று வருகின்றனர்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஏற்பட்டு விட்டிருக்கிற எழுச்சியை இருபது ஆண்டுகளுக்கு முன்பு எவரும் எதிர் பார்த்துக்கூட இருக்க மாட்டார்கள். ஆனால், இன்று விழிப்பால் விடுதலை பெற்ற "கறுப்பர்' நாடுகள், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முடிவுகளை உருவாக்கக்கூடிய செல்வாக்கினைப் பெற்று விட்டிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சிகளையும் அவை தரும் பாடங்களையும் நன்கு உணர்ந்திருப்பதால், கனடா, அரசாங்கம், க்யூபெக்கில் கிளம்பி யுள்ள எதிர்ப்பை அடக்க எத்தனை படை ஏவலாம், எத்தனை சிறைகளை நிரப்பலாம், எத்தகைய பயங்கரச் சட்டம் போடலாம் என்று திட்டமிடாமல், என்ன குறை? ஏன் இந்தக் குமுறல்? என்ன வேண்டும் உங்களுக்கு? என்று கனிவுடன் கேட்கவும், அக்கறை யுடன் அதற்காவன செய்திட முற்படவும் முனைந்திருக்கிறது.

இங்கே எக்காளம் எழுப்புகிறார்களே, இருக்கும் இடம் அதற்கு வசதி செய்து தருகிறது என்ற ஒரே காரணத்தால்; விட மாட்டோம்! பிடித்தடைப்போம்! சுட்டுத் தள்ளுவோம்!! ஒழித்துக் கட்டுவோம் என்றெல்லாம், அந்த முறையில் அல்ல; அனுபவம் மிக்க, அறிவாற்றல் கொண்ட ஒரு அரசு எவ்விதம் நடந்து கொள்ள வேண்டுமோ அந்த முறையிலே நடந்து கொள்ளக் கனடப் பேரரசு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. அங்குதான் லால்பகதூர் உலா வருகிறார் என்பதால், இதுபற்றி அறிந்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் இதனை எழுதுகிறேன்.

எதிர்ப்புத் தெரிவிக்கலாம், ஆனால், முறையாக, கட்டுக்கு உட்பட்டதாக அந்த எதிர்ப்பு இருக்க வேண்டும் என்று இங்கே பேசுகிறார்கள் பெரியவர்கள். தம்பி! க்யூபெக்கிலே தோன்றியுள்ள எதிர்ப்பு எந்த அளவுக்குச் சென்றது தெரியுமா! பிரிட்டிஷ் பேரரசியார் கனடா சென்றபோது, இங்கு வராதீர்! உயிருக்கே ஆபத்து உண்டாகும்!! என்று அவர்களை மிரட்டும் அளவுக்கு! அந்த மிரட்டலையோ, முறையையோ நான் சரி என்று கூறவில்லை. எனக்குப் பிடிக்காத முறை அது; நமது கழகம் வெறுத்தொதுக்கிடும் முறை அது. ஆனால், க்யூபெக் மக்கள் அந்த முறையிலே தமது எதிர்ப்பைக் காட்டினர்; அங்கு எந்தக் கருணாநிதியையும் பாளையங்கோட்டைக்கு அனுப்பியதாகத் தெரியவில்லை; எந்த இலக்குவனார் மீதும் பாதுகாப்புச் சட்டம் பாயவில்லை. மாறாக, இந்த மனக்குறையை வளரவிடக் கூடாது, க்யூபெக் மக்களைச் சாந்திப்படுத்த வேண்டும், சமாதானம் கூற வேண்டும் என்ற பெருநோக்குடன்,

மொழி
பண்பாடு
பொதுநிலை

ஆகியவை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து, கனடா உடைபட்டுப் போகாமலிருக்கத்தக்க வழி வகைகளைக் கூறும்படி, கனடா அரசு ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்தது - மத்தியப் பிரதேசத்திலிருந்து போலீசையும், மற்ற இடத்திலிருந்து பட்டாளத்தையும் அழைத்தார்களே, அகிம்சையின் அடிப்படையில் அரசு அமைத்துக் கொண்டுள்ள அறநெறி மறவாத அண்ணல்கள், அவர்கள் அறிந்து கொள்வதற்காகக் கூறுகிறேன், குமுறி எழுந்து க்யூபெக் கிளர்ச்சி செய்யக் கண்ட கனடா அரசு சீறிப்பாயவில்லை, மாறாக கமிஷன் அமைத்து, கிளர்ச்சி எழக் காரணம் என்ன என்று கண்டறிகிறது. அது ஜனநாயகம்!!

ஆண்ட்ரிலாரண்டாவ், என்பவரும், டேவிட்சன்டன் என்பவரும், இந்தக் கமிஷனுக்குக் கூட்டுத் தலைவர்கள்.

இந்தக் குழுவில் 10-பேர் உறுப்பினர்கள்.

1963 ஜூலை மாதம் முதற்கொண்டு இந்தக் குழு பணியாற்றி, இப்போது கருத்தளித்திருக்கிறது.

பிரச்சினையைத் தீர்த்துவைக்க என்னென்ன வழிகள் என்று கமிஷன் கூறவில்லை. பிரச்சினை என்ன என்பதனை விளக்கி இருக்கிறது.

இந்தியப் பேரரசு, பிரச்சினை இருப்பதாகவே இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதைத் தம்பி! இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

கனடாவில், பிரச்சினை இருக்கிறது, அதனை அடக்கு முறையினால் ஒழித்துவிட முடியாது, கூடாது, தேவையில்லை என்ற நுண்ணறிவு அரசோச்சுகிறது! இங்கு? என்று கேட்கிறாயா தம்பி! இது என்ன கேள்வி! இங்குப் பக்தவத்சலம் அரசாள்கிறார் - காமராஜரின் ஆசீர்வாத பலத்துடன்!!

212- பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை அந்தக் குழு வெளியிட்டிருக்கிறது; அந்த அறிக்கை எனக்குக் கிடைக்கவில்லை; அதனுடைய சுருக்கம் மட்டும் கிடைத்தது; அதிலேயே குழு எத்தனை அக்கறையுடன் பிரச்சினையை ஆராய்ந்திருக்கிறது என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

மிகப் பெரிய வகையான மாறுதல்களைக் காலத்திற்கேற்பச் செய்தாலொழிய நிலைமை பலர் எதிர் பார்ப்பதைவிட விரைவில் மோசமாகிப் போய்விடும்.

என்று குழு எச்சரித்திருக்கிறது.

இந்தி ஆட்சிமொழி ஆகலாமா என்பதுபற்றி அறிந்து கொள்ள இங்கு அமைக்கப்பட்ட மொழிப் பிரச்சினைப் பற்றிய ஆய்வுக்குழுவில் அறிவாளர்கள் பலர் - சிலர் காங்கிரசார் - எச்சரித்திருந்தனர், இந்தியை ஆட்சி மொழியாக்குவதால் ஆபத்தான நிலைமை மூண்டுவிடும், நிர்வாகம் சீர்குலைந்துவிடும், ஓரவஞ்சனை தலைவிரித்தாடும், மொழி ஏகாதிபத்தியம் கொக்கரிக்கும், இந்திய ஒற்றுமை குலைந்துபோகும் என்றெல்லாம். இந்தியப் பேரரசும் அதன் நடுநாயகர்களும் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. பிரச்சினை சிக்கலற்றது; வேண்டுமென்றே சிலர் இதுபற்றி எதிர்ப்புக் காட்டுகிறார்கள்; நாடு பிரச்சினையை ஒப்புக் கொண்டு விட்டது என்று பேரரசினர் வாதாடி வருகின்றனர்.

மொழிப் பிரச்சினை குறித்து இங்கு இந்தியப் பேரரசினர் ஒரு தவறான கருத்தை விடாப்பிடியாக வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தி மொழி பேசுவோர் மிகப்பெரிய அளவினராக - மெஜாரிட்டியாக - உள்ளனர்; மற்றமொழி பேசுவோர் சிறுபான்மையினராக உள்ளனர்; ஒரு நாடு ஆட்சி மொழியாக, பெரும்பான்மையினரின் மொழியைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதுதான் ஜனநாயகமுறை; சிறுபான்மை யோரின் மொழி அழியாதிருக்கப் பாதுகாப்புக் கேட்டுப் பெறலாம், ஆனால், பெரும்பான்மையினரின் மொழியைத்தான் ஆட்சி மொழியாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்த வாதம் ஜனநாயகப் பண்புக்கு உகந்தது அல்ல என்பதை 1867-லேயே கனடா அரசு உணர்ந்து சிறுபான்மை யோரின் மொழியான பிரஞ்சு மொழியையும் ஆட்சிமொழி என்று சட்டமூலம் அறிவித்தது.

நடைமுறையில், ஆங்கில மொழி பேசும் கனடியர்கள், பல்வேறு துறைகளிலும் தமது ஆதிக்கத்தைப் புகுத்தி, பிரஞ்சு மொழி பேசும் கனடியர்களை ஆத்திரம் கொண்டிடச் செய்துவிட்டனர், புதிய பிரச்சினையும் புகைச்சலும் புகையும் கிளம்பிவிட்டிருப்பதற்கு இதுதான் காரணம்.

நாம் அனைவரும் கனடியர்கள் அல்லவா! என்ற பேச்சு, அழகானது; பொது எதிரியைச் சந்திக்க வேண்டிய நேரத்தில், அந்தப் பேச்சு எழுச்சியூட்டக் கூடியது. ஆனால் ஒரு பகுதியினர் மற்றோர் பகுதியினர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, அந்த ஆதிக்கத்தை எதிர்க்கும் மக்களிடம், நாம் அனைவரும் கனடியர்கள் அல்லவா? என்று பேசும்போது, எழுச்சி எப்படி ஏற்படும்? எரிச்சல் அல்லவா உண்டாகும்!!

க்யூபெக்கில் மிகப் பெரும்பான்மையினர் பிரஞ்சு மொழியினர்; அவர்களுக்கும் பிரான்சுக்கும் மொழி தவிர வேறு எந்தவிதமான பந்தமும் பாசமும் இல்லை. கனடா அரசியலில் க்யூபெக் தனது பங்கினைச் செலுத்தி வந்தது; பிரான்சு நாட்டு நடவடிக்கைகளிலே க்யூபெக் எந்தவிதமான பங்கும் கொள்ளவில்லை.

இவ்விதமாக க்யூபெக் இருந்துவந்த போதிலும், கனடாவில் உள்ள ஆங்கிலமொழி பேசுபவர், இங்கிலாந்து நாட்டு நடவடிக்கைகளிலே அக்கறை காட்டவும். சொந்தம் கொண் டாடவும் தவறவில்லை. அதேபோது, எமது மொழி, எமது பண்பாடு, எமது பாரம்பரியம் என்று க்யூபெக் மக்களும், கனடாவில் இதர பகுதிகளில் உள்ள பிரஞ்சு மொழி பேசுபவர்களும் பேசிட முன்வந்தபோது, "இது என்ன குறுகிய மனப்பான்மை! நாம் அனைவரும் கனடியர் அல்லவா! என்ற பழைய பல்லவியைப் பாடி வந்தது.

ஆதிக்கம் செலுத்துபவர் நாம் அனைவரும் கனடியர் அல்லவா என்று பேசி, சொந்தம் கொண்டாடியது, க்யூபெக் மக்களுக்குக் கோபத்தைத்தான் கிளறிவிட்டது. அவர்கள் சீறி எழுந்து, "நாங்கள் கனடியர்கள் அல்ல! பிரஞ்சுக்காரர்கள்! எமது நாடு தனி! பண்பாடு தனி!'' என்று பேசத் தலைப்பட்டனர்.

கனடா ஒரே அரசு என்று சட்டம் ஏற்பட்ட நாளிலிருந்து, அதற்கு உட்பட்டு இருந்துவந்த க்யூபெக் இப்போது அந்த "ஓரரசு' ஏற்பாட்டினையே உடைத்து விடப்பார்க்கிறது, இது மிகப் பெரிய ஆபத்து என்று (கமிஷன்) குழுவினர் தெரிவித்துள்ளனர்.