அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


டில்லிக் கடிதம்
1

பத்திரிகை நிருபர்கள் மாநாடு : வினா - விடை
இந்தியை ஆட்சி மொழியாக்குவதையும் பரப்புவதையும் ஆட்சியாளர் விட்டுவிட வேண்டும்.
பக்தவத்சலனாரின் வேடிக்கைப் பேச்சு
எங்களுக்கு எந்த மொழிமீதும் வெறுப்பு இல்லை
பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும்.
தொடர்பு மொழியாகத் தமிழ் இருக்கலாம்.
துக்க நாளில் வன்முறை எழக் காரணமாய் இருந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்களே.
லால்பகதூரின் பேரப் பிள்ளை ஆங்கிலமொழி மூலம் கல்வி கற்பதாகக் கேள்வி.

தம்பி!

நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி முடித்தவுடன் எழுதுகிறேன் - மாணவர்கள் கல்விக் கூடங்களுக்குச் செல்லாமலிருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்து வேதனையுடன் எழுதுகிறேன். மொழிப் பிரச்சினையில் இயல்பாகவே அமைந்துவிட்டிருக்கிற சிக்கல்களையோ, இந்திக்கு ஆதரவான அணியினர், ஒரு சாதகமான, சமரசச் சூழ்நிலை எழவிடாதபடி தடுக்க, வன்முறைக் கிளர்ச்சிகளையும், அமளிகளையும் தென்னகம் மேற்கொண்டு விட்டிருக்கிறது என்பதைக் காட்டி வாதாடி, சிக்கலை வளர்த்துக்கொண்டிருக் கிறார்கள் என்பதனையோ, மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, மிக மிகப் பொறுப்புணர்ச்சியும் பொறுமை உணர்ச்சியும் தேவைப்படுகிறது என்பதனையோ உணர மறுத்து மாணவர்கள் இவ்விதமான போக்கினை மேற்கொண்டிருப்பது, தாங்கிக் கொள்ள முடியாத வேதனை தருகிறது. நாவலர் மாணவர்களுக்கு விடுத்த வேண்டுகோள் இன்று மாலை வானொலி மூலம் அறிந்து ஆறுதல் அடைந்தேன். அவர் கேட்டுக்கொண்டது போலவே நானும் மாணவர்களைக் கேட்டுக்கொள்வதாக இதழ்களில் அறிக்கை வெளியிடும்படிக் கேட்டுக்கொண்டேன்.

இங்கு, நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில், நான் பேசியதில், தொடர்பு - பொருத்தம் நீக்கிச் சில பகுதியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, முதலமைச்சர் பக்தவத்சலம் சட்டசபையில் பேசியது குறித்தும், அதற்கு மதியழகனும் தாமும் தக்க விளக்கம் அளித்ததுபற்றியும் நாவலர் கூறக் கேட்டேன்.

என் பேச்சிலே துண்டு துணுக்குகளைத் தூக்கி வைத்துக் கொண்டு, காங்கிரஸ் தலைவர்கள் விளையாடுவது இது முதல் தடவை அல்ல; ஒவ்வொரு தடவை அவர்கள் இந்த விதமான விளையாட்டிலே ஈடுபடும்போதும், "இதோடு தொலைந்தான் பயல்! இதோடு கழகம் ஒழிந்தது!'' என்று எக்களிப்புக் கொள்ளுவதை நாடு நன்கு அறியும்.

"உங்கள் அண்ணாதுரை இந்திக்குச் சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போட்டுவிட்டான், தெரியுமா!'' என்று முன்பு ஒரு முறை காங்கிரஸ் தலைவர்கள் மேடை தவறாமல் பேசியது எனக்கு நினைவிலிருக்கிறது. சட்ட சபையிலே நான் திட்டவட்டமாக, நான் அவ்விதம் கையெழுத்துப் போட்டேனா? என்று கேட்டபோதுதான், அப்போது அங்கு அமைச்சராக இருந்த சுப்பிரமணியம், "இல்லை! கையெழுத்துப் போடவில்லை'' என்று தெரிவித்தார். அதுவரையில் ஒரு பத்து நாள், விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதிலே அவர்களுக்கு ஒரு தனிச் சுவை! அனுபவித்துவிட்டுப் போகட்டும்.

மொழிப் பிரச்சினையிலே உள்ள சிக்கலைப்பற்றியும், தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருப்பதையும், அது குறித்துத் தக்கவிதமான கவனம் செலுத்தாமல், மேல் மட்டத்தில் உள்ளவர்கள் இருப்பதையும் எண்ணி எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு, காங்கிரஸ் தலைவர்கள் செய்வது போன்ற விளையாட்டிலே ஈடுபட நேரமுமில்லை, நினைப்பும் எழவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினேன். பலன்? என்ன கிடைக்கும் என்று எனக்கே தெரியவில்லை. லால்பகதூர் அவர்களின் பேச்சிலே, இதுபற்றிக் குறியும் தென்படவில்லை; கோடிட்டும் காட்டவில்லை. இந்த நிலை இங்கு, ஆளவந்தார் களின் அணியில்.

ஆனால், முன்பு நான் புதிய திருப்பம் என்ற கட்டுரையில், குறிப்பிட்டுக்காட்டிய "சூழ்நிலை' பொதுவாகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளில் தெரிகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் நந்தாவைக் கண்டு, மொழிப் பிரச்சினையில் ஒரு நல்ல தீர்வு கண்டாக வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். இரண்டொருவர் அதுபற்றி என்னிடமும் பேசினார்கள் நம்பிக்கையுடன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்தச் சமயம் பார்த்து அழித்துவிட, காங்கிரசிலே சிலர் துடியாகத் துடிக்கிறார்கள் என்பதற்கும் குறிகள் தென்படுகின்றன.

மாநிலங்கள் அவையிலே நான் பேசியதன் முழுவடிவம் கிடைக்கப் பெற்றிருக்கக்கூடும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள இதழ்கள் கூடுமானவரையில் இந்தப் பேச்சை வெளியிட்டிருக்கின்றன - அந்தந்தப் பத்திரிகை மேற்கொண்டிருக்கும் கொள்கைப் போக்கிற்கு ஏற்பத் தலைப்புகளிட்டும் - வெட்டி ஒட்டியும் - வெளியிட்டன. இது இயற்கை என்பது புரிவதால் எனக்கு எரிச்சல் எழவில்லை.

முதலமைச்சர் அளிக்கும் விளக்கம், சில இதழ்களில் முதலமைச்சரின் உறுதி என்ற தலைப்பிலும், வேறு சில இதழ்களில் முதலமைச்சரின் பிடிவாதம் என்ற தலைப்பிலும் வெளிவருவது காண்கிறோம் அல்லவா? அதுபோல, அவரவர் களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற தலைப்புகளுடன், என் பேச்சை இதழ்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், ஒரு இதழும், அடியோடு இருட்டடிப்புச் செய்துவிடவில்லை.

இந்தப் பேச்சினால் ஏற்பட்ட சமாதானச் சூழ்நிலை காரண மாகத்தான் பத்திரிகை நிருபர்கள் மாநாடு நடத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

பத்திரிகை நிருபர்கள் மாநாடு என்றால், நாம் சொற்பொழிவு நடத்த நடத்த, நிருபர்கள் குறிப்பு எடுத்து, இதழ்களில் வெளியிடுவது என்பதல்ல. பல இதழ்களின் நிருபர்கள் வருகிறார்கள்; கேள்விமீது கேள்வியாகத் தொடுத்தபடி இருக்கிறார்கள்; அவற்றினுக்கு நாம் அளிக்கும் பதில்களைக் குறித்துக்கொண்டுபோய், தத்தமது இதழ்களில் எந்தப் பகுதி தமக்குத் தேவை என்று அவர்களுக்குத் தென்படுகிறதோ அவைகளை வெளியிடுகிறார்கள்.

அன்று நடந்த நிருபர்கள் மாநாட்டில், எனக்குத் துணையாகத் தோழர் செழியன் இருந்தார்; அவருடைய இல்லத்தில்தான் நடைபெற்றது மாநாடு.

முப்பது நிருபர்கள் இருக்கும் வந்திருந்தவர்கள்; ஒரு மணி நேரத்திற்கு அதிகமாகவே நடைபெற்றது.

இத்தகைய நிருபர்கள் மாநாட்டில், மடக்குவது, குறுக்கிடுவது போன்ற முறைகளில் தேர்ச்சி பெற்ற நிருபர்களிடம், மிகத் தெளிவாகவும், அதிகமான பரபரப்புக் காட்டாமலும் பேச வேண்டும். அன்று நான் நடந்துகொண்ட முறை குறித்து விவரமறிந்தவர்கள் பாராட்டியது கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், நான் அப்போதே, திருமதி செழியனிடம் சொன்னேன், "எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தமிழ் நாட்டில் சில இதழ்கள், அண்ணாத்துரை இந்தியைப் பரப்ப ஒத்துக்கொண்டான் என்று மட்டும் வெளியிடும், பாருங்கள்'' என்று சொன்னேன், இதழ்களின் போக்கு எனக்கும் தெரியுமல்லவா! நானும் ஒரு பத்திரிகை நடத்துபவன்தானே!! நான் கூறியபடியேதான் சில இதழ்கள் வெளியிட்டன. முதலமைச்சர் பக்தவத்சலமும் அதை வைத்துக்கொண்டுதான் பேசியிருக்கிறார் என்று தெரிகிறது.

இதுவும் ஒரு நல்லதற்கே பயன்படுகிறது; ஏனெனில், அன்று நடைபெற்றது முழுவதையும் எழுத ஒரு தூண்டுகோல் கிடைத்திருக்கிறது! நிருபர்கள், எவரெவர், என்னென்ன கேள்விகளை, என்னென்ன நோக்கத்துடன் கேட்டனர் என்பதனையும், அவற்றினுக்குப் பதில் அளிக்கும் முறையில் நான் என்னென்ன கருத்துக்களை எடுத்துக் கூறினேன் என்பதனையும் கூறிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.

இந்து இதழிலே மட்டும், குத்திக் கிளறி ஒரு நிருபர் கேட்டபோது அறைகூவலாக அண்ணாதுரை, இந்தியை ஆட்சி மொழியாக்குவதை சர்க்கார் விட்டுவிட்டு, சர்க்கார் முன்னின்று இந்தி பரப்புவதை விட்டுவிட்டு, மக்களின் அமைப்பே இந்தியைப் பரப்ப முனைந்து, என் உதவியை நாடினால், செய்கிறேன் என்று கூறினார் என்று வெளியிட்டிருக்கிறது.

இந்து வெளியிட்டிருக்கிற முறையிலிருந்து, (1) சர்க்கார் இந்தியை ஆட்சி மொழியாக்குவதை விட்டுவிடவேண்டும் (2) இந்தியைப் பரப்ப சர்க்கார் முனையக் கூடாது என்பவைகளை நான் வலியுறுத்தி இருப்பது நன்கு விளங்கும்.

நமக்குத் தேவை, (1) இந்தியை ஆட்சிமொழியாக்கும் முயற்சியை சர்க்கார் கைவிட்டுவிட வேண்டும் என்பது (2) இந்தியைப் பரப்ப சர்க்கார் தனி அக்கறை காட்டும் போக்கும் நிறுத்தப்பட வேண்டும் என்பது. இந்த இரண்டும் சர்க்காரால் கைவிடப்பட வேண்டும்; ஐயா! இதனைச் செய்ய உம்மால் முடிந்து, செய்துவிட்டு வந்தால், பிறகு இந்தி பரப்புவதற்கு உதவி கேளும், செய்கிறேன் என்று நான் கூறியிருக்கிறேன்.

என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்ட நிருபர், சாஸ்திரி சர்க்காரிடம் பேசி, இந்தி ஆட்சி மொழியாக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிடச் செய்ய வேண்டும் முதலில்! செய்கிறாரா பார்ப்போமே!! அந்த முறையில், ஒ ஜ்ண்ப்ப் ற்ஹந்ங் ன்ல் ற்ட்ங் ஸ்ரீட்ஹப்ப்ங்ய்ஞ்ங் - நான் அந்த அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன் என்ற முன்னுரையுடன் நான் பேசினேன். இதைவிடத் தெளிவாகப் பேசியிருக்க முடியாது என்றும் நம்புகிறேன். இதனை வைத்துக்கொண்டு முதலமைச்சராகட்டும், மற்றவர்களாகட்டும், வேடிக்கை பேச என்ன காரணம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. போகட்டும். எத்தனையோ விதமான கலக்கத்தில் சிக்கிக்கிடப்பவர்களுக்கு, என் பேச்சு, சில விநாடி வேடிக்கைக்குப் பயன்படுவது பற்றி மனக்குறை கொள்வானேன்? நடந்தது முழுவதையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புப் பெறுபவர்கள், உண்மையை அறிந்துகொள்வார்கள்.

இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திடத் தொடங்கிய நாள் தொட்டு, நாம் தெளிவாக, ஒன்று கூறி வருகிறோம்; எங்களுக்கு எந்த மொழிமீதும் வெறுப்பு இல்லை; இந்தியை நாங்கள் அந்த விதத்தில் எதிர்க்கவில்லை; அது இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்பதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம்.

நமது கழகத்தின் தீர்மானம் தேசீய மொழிகளெல்லாம் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்பதாகும். அந்தப் பதினான்கு மொழிகளில் இந்தியும் ஒன்று.

இந்தியை அந்தப் பதினான்கு மொழிகளில் ஒன்று என்று கொள்ளமாட்டோம், கொள்ளக்கூடாது என்று நாம் சொன்னதுமில்லை; சொல்லப்போவதுமில்லை; சொல்லுவதில் நியாயமுமில்லை.

நாம் சொல்லி வருவதெல்லாம், இந்தி, இந்தியாவின் ஒரு பகுதியினரின் தாய்மொழி, அதனை இந்தியாவின் ஆட்சிமொழி என்று ஆக்குவது அடாது, ஆகாது, பெரும் தீது; அது இந்தி பேசாத மக்களை அநீதிக்கு ஆட்படுத்தும், இரண்டாந்தரக் குடிமக்களாக்கும். ஆகவே, அதனை ஒப்பமாட்டோம், எதிர்க்கிறோம் என்பதாகும்.

இந்த அடிப்படை மாறாது என்பது மட்டுமல்ல, நாம் மட்டுமே கூறிக்கொண்டு வருகிற இந்த அடிப்படையை இன்று வேறு பலரும் ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

நான், மாநிலங்கள் அவையில் பேசியானதும், பிற்பகல், இந்தியின் தீவிரக் கட்சியான ஜனசங்கத்தைச் சார்ந்த வாஜ்பாய் பேசினார். அவர் என்னையும் நான் சொன்ன கருத்துக்களையும் பலமாகத் தாக்குவார் என்ற நப்பாசை பலருக்கு இருந்தது.

அவரோ, அண்ணாதுரை சொல்லுகிற பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்ற திட்டத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வாஜ்பாய், மாறுபட்டது எதிலே என்றால், 14 - மொழிகளும் ஆட்சி மொழிகளாகக் காலம் பிடிக்கும்; அதுவரை ஆங்கிலம் தொடர்ந்து இருக்கட்டும் என்பதிலேதான். அவருடைய கருத்து இப்போதே 14 மொழிகளும் ஆட்சி மொழிகளாகி விடட்டும், ஆங்கிலம் அகற்றப்படட்டும் என்பது.

இதிலே நமக்கு என்ன ஆட்சேபம்! நாளைக்கே நமது தமிழ் மொழி, இந்தியாவின் ஆட்சி மொழியாகி அரியணை ஏறினால், ஆங்கிலம் நமக்கு ஆட்சிமொழியாக இருக்கவேண்டிய தேவை என்ன இருக்கிறது!

இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்ற சர்க்கார் கொள்கை விடப்பட்டு, இந்திக்காகச் சர்க்கார் பணம் செலவிட்டுப் பரப்பும் முயற்சியை நிறுத்திக்கொண்டு, பதினான்கு மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் என்று சட்டமாக்கப்பட்டு, அதன்படி நமது தமிழ் மொழி ஆட்சி மொழி என்ற நிலைபெற்று, பிறகு இந்தியைப் பரப்ப, மக்கள் அமைப்பு முயற்சி எடுத்துக்கொள்ளும்போது என் உதவி கிடைக்குமா என்று என்னை ஒருவர் கேட்கும்போது, கிடைக்கும் என்று கூறுவதிலே என்ன தவறு காண்கிறாரோ முதலமைச்சர், எனக்குப் புரியவில்லை.

அந்த நாள் வருகிறபோது, இந்தியை இங்குப் பரப்பும் முயற்சி மட்டுமல்ல, தமிழ்மொழியைப் பிற இடங்களில் பரப்பும் முயற்சியும் நடந்துவரும்.

இப்போதே, தென்னக மொழிகளில் ஒன்றை, இந்தி மாநிலத்தவர் படித்துக்கொள்ள வேண்டும் என்ற பேச்சு எழவில்லையா! நானேகூடச் சொன்னேனே, மாநிலங்கள் அவையில் பேசும்போது, தமிழ் கற்று, அம்மொழியில் உள்ள இலக்கியச் சுவையைப் பருகினால், வாஜ்பாயேகூட, தமிழ்தான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளுவார் என்று. உடனே அவர் என்ன துள்ளிக் குதித்தெழுந்து, "முடியாது!! முடியாது! அப்போதும் தமிழ் மொழியைத் தொடர்பு மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றா பேசினார்? இல்லை! ஏன்? வாதங்களின் பொருத்தத்தையும் நிலைமை விளக்கத்துக்கான பேச்சின் பொருளையும் உணருபவர்கள், முதலமைச்சர் காட்டும் போக்கினைக் காட்டமாட்டார்கள். ஆனால், முதலமைச்சர் இப்போது உள்ள நிலைமையில் நான் அவரிடம் அதிக அளவு நிதானத் தன்மையை எதிர்பார்ப்பதற்கில்லை.

நிருபர்கள் மாநாட்டிலேகூட ஒரு நிருபர், பதினான்கு மொழிகளும் ஆட்சிமொழிகளாக்கப்பட்டு, பிறகு காலப் போக்கில் மக்களின் முயற்சியால், சர்க்காரின் பலமின்றி, ஒரு மொழி தொடர்பு மொழியாகட்டும் என்று கூறுகிறீர்களே, அந்தக் காலம் வரும்போது, மக்கள் வளமுள்ள மொழியாகப் பார்த்துத்தானே தொடர்பு மொழியாகக் கொள்வார்கள் என்று கேட்டபோது நான், "ஆமாம்! வளமுள்ள மொழியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அதனால்தான் சொல்கிறேன், தமிழ் மொழியைத் தொடர்பு மொழியாகக் கொள்ளுங்கள் என்று. அது தொன்மையான மொழி - வளமான மொழி'' என்று கூறினேன். வேறோர் நிருபர் குறுக்கிட்டு, "சமஸ்கிருதத்தைக் கொண்டால் என்ன?'' என்று கேட்டார்; "அது பேச்சு வழக்கு அற்ற மொழி'' என்று பதிலளித்தேன். இவைகளையும் முதலமைச்சர் பக்தவத்சலம் மக்களிடம் எடுத்துக் கூறுவார் என்று நான் எதிர்பார்க்க முடியுமா!! ஆனால், இதனை நான் கூறியிருப்பதை நானே எப்படி மறந்துவிட முடியும்!

இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் நிருபர் காடிலால், பேட்டிரியட். நாளிதழ் நிருபர் கிரிஷ்மதுர், ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் நிருபர் ரன்ஜித்ராய், டைம்ஸ் ஆப் இந்தியா சுதர்சன்பாடியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் (டில்லி வெளியீடு) திரிபாதி, இந்துஸ்தான் ஸ்டாண்டார்டு சைலேன் சட்டர்ஜி, பி. டி. ஐ. அமைப்பிலிருந்து குப்தாவும் என். பாலசுப்பிரமணியமும், இந்து நிருபர்கள் இ. கே. ராமசாமியும் பட்டாபிராமனும், அமிர்தபஜார் பத்திரிகை நிருபர் தத்தா, ஈவினிங் நியூஸ் சி. பி. இராமச்சந்திரன், மெயில் பி. ராமசாமி, அகில இந்திய ரேடியோ நிலையத்திலிருந்து கே. ஜி. ராமகிருஷ்ணன், யூ. என். ஐ. அமைப்பிலிருந்து கணபதி, இன்பா அமைப்பிலிருந்து ராஜேந்திரகபூர், நவபாரத் இதழிலிருந்து ஜெயின், இந்துஸ்தான் இதழிலிருந்து சந்திராகர், இந்துஸ்தான் டைம்ஸிலிருந்து தார், தினமலர் ராதா கிருஷ்ணன், பிரீ பிரஸ் ஜர்னல் சுவாமிநாதன், நவ்பாரத் டைம்ஸ் ரக்பீர் சகாய், பினர்ன்μயல் எக்ஸ்பிரஸ் சந்தானம், சங்கர்ஸ் வீக்லி கோபு, திருச்சூர் எக்ஸ்பிரஸ் ஆர். சுந்தரம், ஜன்ம பூமி, சுயராஜ்யாவிலிருந்து ஏ. எஸ். ரகுநாதன், இவர்கள் அன்று வந்திருந்தவர்கள். சிலருடைய பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கக்கூடும், ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் கேள்விகள் கேட்க. நான் பதில் அளிக்க, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு மிகுந்த விதமாக அந்த மாநாடு நடைபெற்றது.

அத்தனை நிருபர்களை மொத்தமாகச் சந்திப்பது எனக்கு முதல் முறை. அவர்கள் ஒவ்வொருவரும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பலவற்றிலே பல முறை கலந்து பழக்கப்பட்டிருப்பவர்கள். என்றாலும், அவர்கள் அனைவருமே என்னிடம் மிகவும் நட்புரிமையுடன் நடந்துகொண்டனர். என் நன்றி அவர்களுக்கு. ஒரு சிலர், என் திறமையைப் பரீட்சிக்க வேண்டும் என்ற முறையில் கேள்விகளைக் கேட்கிறார்களோ என்ற எண்ணம் எழத்தக்கவிதமான பிரச்சினைகளைக் கிளப்பினார்கள் என்றாலும், மொத்தத்தில் எனக்கு, நமது நிலைமையைத் தெளிவுபடுத்தவும், கொள்கையை வலியுறுத்தவும் அவர்கள் நல்ல முறையில் வாய்ப்பளித்தார்கள். இது எனக்காக அவர்கள் செய்த உதவி என்பதனைவிட, நாம் ஈடுபட்டிருக்கும் தூய காரியத்துக்குத் துணை செய்திருக்கிறார்கள் என்று கூறுவதுதான் பொருத்தம் என்று எண்ணுகிறேன்.

வந்தமர்ந்த சில விநாடிகளுக்குள்ளாகவே ஒரு நிருபர் - டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் என்று நினைவு - "என்ன சொல்லப் போகிறீர்கள்? ஆரம்பிக்கலாமே!'' என்றார்.

"என் கருத்தினை மாநிலங்கள் அவையில் கூறியிருக்கிறேன். மேற்கொண்டு ஏதாகிலும் தேவை என்றால் கேளுங்கள் கூறுகிறேன்'' என்று நான் கூறினேன். கேள்விகள் புறப்பட்டன. ஒரு முறை எதிரே இருப்பவர், அடுத்தது வலப்பக்கத்தில் ஒருவர். திடீரெனக் கோடியிலிருந்து மற்றொருவர், அதைத் தொடர்ந்து இடப்புறத்திலிருந்து ஒருவர், பிறகு மூன்றாவது வரிசைக்காரர், இப்படிக் கணைகள்! சுவையும் இருந்தது, சூடும் தென்பட்டது. அன்பு ததும்பிடும் போக்கும் கண்டேன், அருவருப்பை அடக்கிக் கொள்ளும் போக்கும் இருந்தது.

ஜனவரி 26-ம் நாள், தி. மு. கழகம் என்ன திட்டம் மேற்கொண்டது? விளைவு என்ன? விளக்கம் என்ன? என்று ஒரு நிருபர் கேட்டார்.

ஜனவரி 26-ம் நாள், இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழி என்று ஆக்கிவிடுவதைக் கண்டிக்கத் துக்க நாள் நடத்த, தி. மு. க. திட்டமிட்டது, துவக்கத்திலிருந்தே முதலமைச்சரும் காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், வன்முறைச் சூழ்நிலை எழக்கூடிய விதமான முறையில் பேசலாயினர். காங்கிரஸ் இதழ்களில் அந்தப் பேச்சுகள் வந்துள்ளன. கறுப்புக் கொடிகள் அறுக்கப்படும், கொளுத்தப்படும், கறுப்புக் கொடி கட்டுபவன் கரம் வெட்டப்படும் என்பன போன்ற பேச்சுகள் பேசப்பட்டன. பல காங்கிரஸ் அமைப்புகள், இத்தகைய வன்முறையில் ஈடுபடப்போவதாக இதழ்களிலேயே அறிவித்தன. போலீஸ் கமிஷனர், பொது இடங்களில் கறுப்புக் கொடி கட்டக்கூடாது, அமளி ஏற்படும்; உங்கள் கட்சிக் காரியாலயத்தில், வீடுகளில் கட்டிக்கொள்ளுங்கள் என்று எங்களிடமும், கறுப்புக் கொடியைக் கண்டால் அறுக்காதீர்கள், எங்களிடம் கூறுங்கள் நாங்கள் அகற்றிவிடுகிறோம் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கும் சொன்னார். நாங்கள் அது போலவே பொது இடங்களில் கறுப்புக்கொடி கட்டவில்லை; எங்கள் வீடுகளில்தான் கட்டினோம். ஆனால், காங்கிரஸ் படையினரும், போலீசாரும் எங்கள் கட்டடங்களிலே அத்து மீறி நுழைந்து கொடிகளை அறுத்தனர்; சிலர் கொளுத்தினர். இந்தவிதமான வன்முறைச் செயல் எழக் காரணமாக இருந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்களே - என்று கூறினேன்.

விவரமாக நான் இந்தச் சம்பவங்களை விளக்கியது கேட்டு, பல வட இந்திய இதழ் நிருபர்கள், முதல் முறையாக இந்த விவரம் கிடைக்கிறது; இதுவரை தெரியாதிருந்தது என்று கூறி வியப்படைந்தனர்.

இன்னும் தெரியவேண்டியது நிரம்ப இருக்கிறது; நள்ளிரவில் மாணவர் விடுதிகள் தாக்கப்பட்டதும், அங்குக் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டதும், அமைதியாக இருந்த மாணவர்களின் கிளர்ச்சி அமளியாகிட வழி வகுத்த அடாத நடவடிக்கைகளும், இவ்விதம் பல உள்ளன. இவைகளெல்லாம் அனைவருக்கும் தெரிய வேண்டும், உண்மை அப்போதுதான் துலங்கும், எங்கள் கழகத்துக்கும் இந்த நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது மெய்ப்பிக்கப்படும். கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், விடுதித் தலைவர்கள், இதழாசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர்கள் சான்றளிக்கத் தயாராக உள்ளனர். ஆகவேதான் நீதி விசாரணை வேண்டுமென வற்புறுத்துகிறோம் என்று விளக்கமளித்தேன்.

அடுத்தபடியாக ஒரு நிருபர், "முதலமைச்சர்கள் மாநாடு பற்றி என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்டார்.