அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


டில்லிக் கடிதம்
2

முதலமைச்சர்கள் மாநாட்டிலும், காங்கிரஸ் காரியக் கமிட்டியிலும், பிரச்சினைபற்றிப் பேசி, சில சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில், அங்குக் காட்டப் பட்ட கருத்தோட்டத்தை ஒட்டி, எந்த விதமான மசோதா என்ன வார்த்தைகள் கொண்டதாகத் தயாரிக்கப்படுகிறது என்பதனைப் பார்த்த பிறகுதான் எங்கள் கருத்தைக் கூறமுடியும். பொறுத் திருந்து பார்க்க வேண்டும். மற்றொன்று; முதலமைச்சர்கள் காட்டிய மனோபாவத்திற்கு ஏற்றவிதமாகவே மசோதா கொண்டுவரப்படுகிறது என்றாலும், அது ஒரு தற்காலிகமான பரிகாரமாகத்தான் கொள்ளப்படும்; கோரிக்கையும் குறிக்கோளும் நிறைவேறிவிட்டதாக மக்கள் கருதமாட்டார்கள் . . . நாங்கள் (தி. மு. க.) விரும்புகிற பதினான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்ற இலட்சியப் பாதையில், அது ஒரு படி என்று மட்டுமே நாங்கள் கருதுவோம் என்று கூறினேன்.

ஆட்சி மொழிகள் சட்டத்தில் எந்தவிதமான திருத்தம் வரும் என்பது, இங்கு இத்தனை நாள் இருந்த பிறகும், என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுபற்றி சர்க்கார் எந்த அளவு சிந்தனை செய்திருக்கிறார்கள் என்றுகூட அறிந்துகொள்ள முடியவில்லை. போன காரியம் முடிந்தது; நூற்றுக்கு நூறு வெற்றி என்று எங்கள் முதலமைச்சர் டில்லியிலிருந்து திரும்பியதும் கூறியிருக்கிறாரே என்று நான் கூறும்போது, இங்குள்ள சிலர் கண் சிமிட்டுகிறார்கள், கேலியாக!!

"ஆட்சி மொழிகள் சட்டத்தில் திருத்தம் உடனடியாகக் கொண்டுவரச் சொல்லி, வற்புறுத்தப் போகிறீர்களா?'' என்று ஒரு நிருபர் கேட்டார்.

பாராளுமன்றப் பேச்சில் லால்பகதூர், இதிலே அவசரம் காட்டக்கூடாது; அவரவர்களும் தத்தமது கருத்துக்களைக் கூறியபடி இருக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருக் கிறார். ஆயினும், எல்லாக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துப் பேசப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அவ்விதம் அழைக்கப்பட்டால், நான் வலியுறுத்திப் பேசுவேன் என்று கூறினேன்.

இடையில் இதனையும் கூறிவிடுகிறேன். இங்கு பல கட்சித் தலைவர்களையும் கலந்து பேசும் முயற்சி இருக்கும் அறிகுறியே காணோம் - பத்திரிகைகளில் வந்த செய்தியைத் தவிர!!

"சௌரி சௌரா கலகம்பற்றிக் கூறினீர்கள். அந்தக் கலகம் நடந்தது கண்டதும் மகாத்மா, கிளர்ச்சியை வாபஸ் பெற்று விட்டாரே, நீங்கள் ஏன் அதுபோலச் செய்யவில்லை?'' என்று ஒரு நிருபர் கேட்டார்.

கிளர்ச்சி என் தலைமையில் நடைபெறவுமில்லை, கழகக் கிளர்ச்சியுமல்ல அது, நான் வாபஸ் பெற. எங்கள் கிளர்ச்சி, 26-ம் நாள் மட்டும், துக்க நாள் நடத்துவது. 25-ம் நாள் நள்ளிரவே நாங்கள் கைது செய்யப்பட்டு, பிப்ரவரி 2-ம் நாள்தான் விடுதலை செய்யப்பட்டோம்.

நாங்கள் உள்ளே இருந்தபோதும் பிறகும் தொடர்ந்து நடைபெற்ற மாணவர் கிளர்ச்சி, கழகம் நடத்தியது அல்ல. ஆகவே, அதனை நிறுத்திவிட எனக்கு எப்படி வாய்ப்பு இருக்க முடியும்? நாங்கள் திட்டமிட்டு, எங்கள் கழகத்தின் சார்பில் கிளர்ச்சி நடத்தினால், இன்னின்னார் மட்டும் இன்னின்ன முறையில் கிளர்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு, வரையறை வைத்திருப்போம். தீய சக்திகள் நுழையக் கண்டால் தடுத்து அப்புறப்படுத்தி இருப்போம் என்று கூறினேன்.

ஒரு நிருபர் கேட்டார், "இந்தி ஆதரவாளர்களாக உள்ள சில தலைவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களா? உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்.

லால்பகதூர் அவர்களின் பேரப்பிள்ளை, டில்லியில் அவ்விதமான பள்ளிக்கூடத்தில் படிப்பதாகக் கேள்விப்பட்டேன் என்று கூறினேன்.

உண்மையில், இங்கு நான் இதுபோலக் கேள்விப்பட்டேன்.

நான் கூறினதை எந்த நிருபரும் அன்றும் மறுக்கவில்லை; இன்றும் மறுக்கவில்லை.

தெரியுமா! தெரியுமா! உங்கள் அண்ணாதுரை என்ன சொன்னான் தெரியுமா! என்று சிலம்பு போடும் சீலர்கள், இந்தி ஆதரவாளர் லால்பகதூர் தமது பேரப்பிள்ளையை ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி இருக்கிறார் என்பதனைக் கூறவா செய்வார்கள், எப்படி எதிர்பார்க்க முடியும்? சிலர் பசுவிடமிருந்து பால் பெறுகிறார்கள்; சிலர் "கோமயம்' மட்டும் சிரமப்பட்டுச் செம்புப் பாத்திரத்தில் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள், அது அவரவர்களின் விருப்பம், தேவையைப் பொருத்தது?

"திராவிட முன்னேற்றக் கழகம் ஏதாவது கிளர்ச்சி செய்யப் போகிறதா?'' என்று ஒரு நிருபர் கேட்டார்.

பொதுக்குழு கூடித்தான் இதுபற்றித் தீர்மானிக்கும். என்றாலும், இப்போது சூழ்நிலை கெட்டுக் கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கிளர்ச்சி துவக்கினால் தீயசக்திகள் நுழைந்துவிடும் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது என்றேன்.

"அப்படியானால் மக்களிடம் உங்களுக்கு இருந்த செல்வாக்கும் பிடியும் குறைந்துவிட்டது என்று பொருளா?'' என்று ஒரு நிருபர் மடக்கினார்.

மக்களிடம் செல்வாக்கு இருந்ததாகவாவது ஒப்புக் கொள்கிறீரே, மெத்த மகிழ்ச்சி. அந்தச் செல்வாக்கு அப்படியேதான் இருக்கிறது. ஆனால், நாம் பேசிக்கொண்டது மக்களைப்பற்றி அல்ல; தீயசக்திகளைப் பற்றி!! - என்று நான் கூறினேன். அவர் விடவில்லை. "ஆக தீயசக்திகளை அடக்கிட முடியாது என்று அஞ்சுகிறீர்கள்?'' என்று குறுக்குக் கேள்வி கேட்டார். ஆமய்யா ஆம்! சர்க்காரால் முடியாதது போலவே, தீயசக்திகளை அடக்கிட என்னாலும் முடியாமற் போய்விடும் என்று அஞ்சுகிறேன் என்று பதிலளித்தேன்.

"மொழி விஷயமாக உமது கொள்கை என்ன?'' என்ற பொதுப் பிரச்சினையை ஒருவர் எழுப்பினார்.

தேசிய மொழிகளெல்லாம் ஆட்சி மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அந்தக் கட்டம் வரையில் ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடர்ந்து இருந்து வரவேண்டும். இதற்கு நாமாக ஒரு காலக்கெடு வைத்துக்கொள்ளக்கூடாது.

"பிறகு, ஒரு தொடர்பு மொழி வேண்டுமே. அது எது?''

அது எது என்பது மக்களாகப் பார்த்து, காலப்போக்கில், இயற்கையான சூழ்நிலையில், தீர்மானித்துக்கொள்ள வேண்டும். சர்க்கார் இன்ன மொழிதான் தொடர்பு மொழி என்று ஆணையிடக்கூடாது; ஆதரவு தரக்கூடாது; மக்களே தீர்மானிக்க வேண்டும்.

பதினான்கு மொழிகளில், எது தொடர்பு மொழியாகும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? என்று கேட்டார் நிருபர்.

பதினான்கு மொழிகளில் ஏதாவது ஒன்று. தமிழுக்கு என்ன! வளமான மொழி! தொன்மையான மொழி! இலக்கியச் செறிவுள்ளது! தொடர்பு மொழியாகத் தமிழ் இருக்கலாமே என்று நான் கூறினேன்.

"தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாமல்லவா?'' என்று கேட்டார் மற்றொருவர். "சமஸ்கிருதமா, அது பேச்சு வழக்கற்ற மொழியாயிற்றே!' என்றேன். மேலால் அவர் அந்தப் பிரச்சினையைத் தொடரவில்லை.

இந்தி ஆட்சி மொழி என்ற திட்டத்தைச் சர்க்கார் விட்டுவிட்டால், பிறகு இந்தி பரப்பப்படுவதுபற்றி உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே! என்று ஒருவர் கேட்டார்.

இல்லை! ஆனால், அந்தப் பரப்பும் காரியத்தைச் சர்க்கார் செய்யக்கூடாது. மக்களின் அமைப்பு (அதிகார பூர்வமல்லாதது) செய்ய வேண்டும் என்று கூறினேன்.

அப்போதுதான் அந்த நிருபர், கேட்டார், "நீங்கள் உதவி செய்வீர்களா?'' என்று. நான் உடனே கூறினேன், "நான் அந்த அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இந்தி ஆட்சி மொழி அல்ல என்று சர்க்கார் அறிவிக்கட்டும்; இந்தியைப் பரப்பும் காரியத்தில் சர்க்கார் ஈடுபடாமல் இருக்கட்டும்'' என்று கூறினேன்.

இதுதான் முதலமைச்சர் கரத்துக்குப் பந்தாயிற்று! என்ன வேடிக்கையான இயல்பு!!

இந்தியை ஆட்சி மொழியாக்கும் திட்டத்தைச் சர்க்கார் விட்டுவிடவேண்டும் என்றேனே அது?

இந்தியைப் பரப்பும் வேலையில் சர்க்கார் ஈடுபடக்கூடாது என்றேனே, அது?

பதினான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்றேனே, அது?

தொடர்பு மொழி என்று எதனையும் சர்க்கார் அறிவிக்கக் கூடாது என்றேனே, அது?

தொடர்பு மொழியாக, தொன்மையும் வளமையும் மிக்க தமிழ் ஏன் கொள்ளப்படக்கூடாது என்று கேட்டேனே, அது?

அவை ஒன்றுகூட முதலமைச்சருக்கு, முக்கியமானவை யாகப் படவில்லை!! ஏன் என்று கேட்க நான் யார்!! அவரோ முதலமைச்சர்!! நானோ கருணாநிதிக்கு அண்ணன்? நான் போய்க் கேட்கலாமா அவ்வளவு பெரியவரை, இந்தச் சங்கடமான கேள்வியை!!

ஒரு நிருபர் கேட்டார், "ஆங்கிலத்தை வெள்ளைக்காரன் புகுத்தியபோது ஏற்றுக்கொண்டீர்களே, இந்தியை அதுபோல ஏற்றுக்கொண்டால் என்ன?'' என்று.

உம்முடையே கேள்வியின் தோரணையே அச்ச மூட்டுகிறதே ஐயா! வெள்ளைக்காரன் எப்படி ஆங்கிலத்தைக் கற்கச் சொன்னானோ அதுபோல இந்தியை ஏற்கச் சொல்கிறோம் என்றால் என்ன பொருள்? வெள்ளைக்காரன் போல இந்திக்காரர் ஆட்சி செய்யத் திட்டமிடுகிறார்கள் என்பதல்லவா? இதைத்தான் இந்தி ஏகாதிபத்தியம் என்பது. மற்றொன்று, ஆங்கிலத்தை வெள்ளைக்காரன் திணிக்கவில்லை. நான் அறிந்த அளவில் ராஜாராம் மோகன்ராய் போன்ற சான்றோர்கள் ஆங்கிலக் கல்வி வேண்டும் என்று முறையிட்டு, பிறகே ஆங்கிலம் கற்பிக்கப் பட்டது என்றேன்.

"பன்மொழிகள் ஆட்சி மொழிகளாவது நடைமுறைக்கு ஒத்துவராது என்கிறேன்'' என்றார் ஒருவர்.

கடினம் - சங்கடம் என்றெல்லாம் சொல்லுங்கள்; நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறிவிடமுடியாது. பல மொழிகள் உள்ள இடத்தில், வேறு மார்க்கம் இல்லையே! என்று கூறினேன்.

மறுபடியும் ஒருவர் அடிப்படைக் கேள்வியைத் துவக்கினார். "என்ன காரணத்துக்காக இந்தியை வேண்டா மென்கிறீர்கள்'' என்றார்.

பல முறை பல காரணங்களைக் கூறியாகிவிட்டது. ஒன்று மட்டும் மறுபடியும் வற்புறுத்துகிறேன். இந்தி சிலருக்கு, தாய்மொழி - தன்னாலே வருவது - பரம்பரைச் சொத்து - அந்த மொழியை நாங்கள் கற்றுத் தேறி இந்திக்காரருடன் போட்டியில் வென்று இடம் பிடிப்பது, நிரந்தரமான இடையூறு - இது அநீதி என்றேன்.

"இயற்கையான சக்திகளால் மொழிகள் வளர வேண்டும், பிறகு அவைகளிலிருந்து தொடர்பு மொழி கிடைக்க வேண்டும் என்கின்றீர்? இயற்கையான சக்தியை என்ன செய்து பெறுவது?'' என்று கேட்டார்.

சக்தி இன்னவிதம் பெறக்கூடியது என்று திட்டமிட்டுக் கூறமுடியாது. பொதுவான சில யோசனைகள் கூறுகிறேன். சகிப்புத்தன்மை வேண்டும், மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் இயல்பு வளர வேண்டும், ஆதிக்க நோக்கம் அகலவேண்டும், வெறித்தனம் என்கிறார்களே அது ஒழிய வேண்டும். ஒரு உதாரணம் தருகிறேன். நான் நண்பர்களுடன் மோட்டாரில் வட இந்தியப் பகுதிகள் சென்றிருக்கிறேன் - மத்தியப் பிரதேசம் போன்ற இடங்கள். அங்கு வட இந்தியர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள், எங்களுக்கு இந்தி தெரியாது என்று தெரிந்த பிறகும், வேண்டுமென்றே பிடிவாதமாக நாங்கள் கேட்பவைகளுக்கு, இந்தியில்தான் பதில் அளித்தார்கள். இது என்ன மனோபாவம் என்றேன். அவர் புரிந்துகொண்டார் என்று எண்ணுகிறேன்.

டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர், வரும்போதே சொன்னார் "நான் இந்திவாலா'' என்று நான் கேட்காமலிருக்கும் போதே. அவர்தான், சில கேள்விகளை வேண்டுமென்றே, என் பொறுமையைக் கண்டறியும் முறையில் கேட்டார்.

அவர் கேட்ட கேள்வி இது.

"எவ்வளவுதான் நீங்கள் மறுத்தாலும், பொது மக்கள், தி. மு. கழகமும் வேறு சில அரசியல் கட்சிகளுந்தான் வன்முறைச் செயலுக்குக் காரணம் என்று எண்ணுகிறார்கள். அந்த நிலையில், தமிழ்நாடு, இந்தியாவின் மற்றப் பகுதியை மிரட்டிப் பணியவைக்க முயலுகிறது, இது முறையா?'' என்று கேட்டார்.

ஐயா! உம்முடைய கேள்வியின் அடிப்படையே தவறு. தி. மு. கழகம் வன்முறையைச் செய்யவில்லை, தூண்டவில்லை, பங்கு இல்லை என்று நான் பன்னிப் பன்னி மறுத்த பிறகும், நீர், அந்தத் தவறான எண்ணத்தை விட்டுவிடாமல், அதை அடிப்படையாக்கிக்கொண்டு, வாதங்களை அடுக்கும்போதே, உமக்கு நான் பதில் கூறமுடியாது என்று கூறும் உரிமை எனக்கு இருக்கிறது. என்றாலும், கேட்டதற்குச் சொல்கிறேன்; தமிழ்நாடு, இந்தியாவின் மற்றப் பகுதியை மிரட்டிப் பணிய வைக்கக் கிளம்பவில்லை. சொல்லப்போனால், இந்தியாவிலேயே, பலம் குறைந்த பகுதியாகத் தமிழ்நாடு இருக்கிறது என்று கூறினேன். கூறிவிட்டு, ஐயா! வன்முறைக்குக் காரணம் தி. மு. கழகம் என்று முதலமைச்சர் கூறியதை வைத்துக்கொண்டு பேசுகிறீரே, அதே முதலமைச்சர் சில நாட்களுக்குப் பிறகு, கள்ளச் சாராயம் காய்ச்சுவோரும், கள்ளக்கடத்தல் பேர்வழிகளும் போலீசாரிடம் தங்களுக்கு இருந்து வந்த வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று அறிக்கை விடுத்திருப்பது தெரியுமா என்று கேட்டேன். அப்படி ஒரு அறிக்கை வெளிவந்ததாகவே அந்த நிருபர் காட்டிக்கொள்ளவில்லை. கெட்டிக்காரர்!

"பாராளுமன்றக் கூட்டம் ஒரு தொடராவது தெற்கே நடத்தப்பட வேண்டும் என்று ஒரு யோசனை கூறப்படுகிறதே, அதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?'' என்று ஒரு நிருபர் கேட்டார்.

ஆமாம், மேலும் பல யோசனைகள்கூடக் கூறப்படுகின்றன. பிரதம மந்திரி வடக்கே இருந்தால், குடியரசுத் தலைவர் தெற்கே வசிக்க வேண்டும், கடற்படைத் தலைமைக் காரியாலயம் வடக்கே இருந்து தெற்கு மாற்றப்பட்டு கொச்சியில் அமைக்கப்பட வேண்டும், இத்தகைய அமைப்புகள் இந்தியாவில் பல்வேறு இடங்களிலே பரவலாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் யோசனைகள் கூறப்படுகின்றன. இவைகள், தென்னக மக்களின் மனத்துக்கு ஒருவிதமான ஆறுதல் அளிக்கலாம் - என்று கூறினேன்.

"மும்மொழித் திட்டப்படி இந்தி கட்டாய பாடமாக்கப் பட்டால், உமது போக்கு எப்படி இருக்கும்?'' என்று ஒரு நிருபர் கேட்டார்.

நான் என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன். இப்போதே அங்கு இந்திக் கற்றுத் தரப்படுகிறது. இந்தி தவிர வேறு எந்த இந்திய மொழி கற்பதற்கும் வகை செய்யப்படாததால் மறைமுகமாக இந்தி கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. வடக்கே உள்ளவர்களோ, தென்னக மொழியைக் கற்க முன்வரவில்லை. மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் படிக்கிறார்கள். இந்தியைக் கட்டாய பாடமாக்கினால் எங்கள் மக்கள் வேதனைப்படுவார்கள்; எதிர்ப்பார்கள் என்று தெரிவித்தேன்.

"மத்திய சர்க்கார் அலுவல்களுக்கான பரீட்சை சம்பந்தமாக என்ன கருதுகிறீர்'' என்று கேட்டார் ஒரு நிருபர்; அதுபற்றித் தெளிவான எந்தத் திட்டமும் வெளியிடப்படவில்லை, ஆகவே, அதுபற்றி நான் கருத்தைச் செலுத்தவில்லை என்று பதிலளித்தேன்.

"தொடர்பு மொழி இயற்கையான சூழ்நிலையில் வரவேண்டும் என்கிறீரே, மக்கள் ஒரு சிறுபான்மை மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுவிடக் கூடுமல்லவா?'' என்று ஒருவர் கேட்டார்.

அப்படியும் நடக்கலாம். மற்றும் ஒன்று. வளமானதாக இருக்கிறதா என்று பார்த்து அத்தகைய மொழியை மக்கள் தொடர்பு மொழியாகக் கொள்ளக்கூடும் அதற்காகத்தான் நான் தமிழுக்காக வாதாடுகிறேன். தமிழ் அத்தனை வளமான மொழி! - என்று கூறினேன்.

ஒருவர், "வங்காள மொழியும்தான்'' என்றார், சரி! தமிழ் போன்றே வங்காள மொழியும்; இருக்கட்டும் என்றேன். அவருடைய வங்காள மொழி ஆர்வம், பாராட்டத்தக்கது என உணர்ந்தேன்.

"சௌரி சௌரா பற்றிச் சொன்னீர்கள் - அங்கு வன்முறை நடந்து, கிளர்ச்சியை மகாத்மா வாபஸ் பெற்றுக்கொண்டார். ஆனாலும் அதற்காக, காங்கிரஸ், கிளர்ச்சி செய்யும் உரிமையை இழந்துவிடவில்லை அல்லவா?'' என்று கேட்டார்.

உண்மை நாங்கள்கூட கிளர்ச்சி செய்யும் உரிமையை இழந்து விடச் சம்மதிக்கவில்லை, வன்முறையைக் கண்டிக்கிறோம், வன்முறை எழமுடியாத முறையில் கிளர்ச்சிகள் அமைய வேண்டும் என்பதில் கண்ணுங் கருத்துமாக இருக்கிறோம். ஆனால், கிளர்ச்சி நடத்தும் உரிமையை விட்டுவிடவில்லை என்று கூறினேன்.

"இந்தி ஒழிக! என்று முழக்கமிடுகிறீர்களே, இந்தி ஆதிக்கம் ஒழிக என்பதுதானே முழக்கமாக இருக்க வேண்டும்?'' என்று ஒருவர் கேட்டார்.

இலட்சிய முழக்கங்கள் எடுப்பாக, சுருக்கமாக அமைய வேண்டும். சர்க்காரின் இந்தி ஆட்சி மொழியாக்கும் திணிப்பு ஒழிக! - என்று நீட்டி முழக்கிக்கொண்டிருக்க முடியாது. அதன் காரணமாகத்தான் இந்தி ஒழிக என்று சுருக்கமான முழக்கம் இருக்கிறது. மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு! என்ற இலட்சிய முழக்கம் தந்தார். அவர் விரும்பியது வெள்ளைக் காரர்கள் வெளியேற வேண்டும் என்பது அல்ல; வெள்ளையர் நடத்தும் ஆட்சி ஒழிய வேண்டும் என்பது. வெள்ளையர் இந்தியாவை ஆட்சி செய்வது வெளியேற வேண்டும் என்று விரித்துக் கூறவில்லை, சுருக்கமாக வெள்ளையனே வெளியேறு! என்றார். செய் அல்லது செத்துமடி என்பது அவர் தந்த மற்றொரு சுலோகம். என்ன செய்யவேண்டும், எப்போது, எப்படி, ஏன் சாகவேண்டும் என்றெல்லாம் விளக்கமாக்கி, விரிவாகக் கூறவில்லை. சுருக்கமாக, செய் அல்லது செத்துமடி என்றார். இலட்சிய முழக்கங்கள் அவ்விதந்தான் சுருக்கமாக அமையும் என்று கூறினேன்.

"இந்தி எதிர்ப்பு உணர்ச்சி காரணமாகக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள வேற்றுமை ஓரளவு குறைந்துவிட்டது உண்மையா?'' என்று ஒருவர் கேட்டார்.

உண்மைதான். பல காங்கிரஸ்காரர்கள் நாங்கள் கூறும் கருத்துக்களைப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சட்டசபையில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இந்தித் திணிப்பைக் கண்டித்துப் பேசியதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அரசியல் கட்சிகள் அமைத்துக்கொண்டுள்ள அரண்களை உடைத்துக்கொண்டு இந்தி எதிர்ப்புணர்ச்சி பீறிட்டுக் கிளம்பி விட்டது என்று கூறினேன்.

வேறொரு நிருபர், "பல ஆட்சிமொழித் திட்டமும் கூறுகிறீர், தொடர்பு மொழித் திட்டம்பற்றியும் கூறுகிறீர்; இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண் அல்லவா?'' என்று கேட்டார்.

எப்படி முரண்? முரண் அல்லவே! பல மொழிகள் இருப்பதனால்தான் ஒரு தொடர்பு மொழிப் பிரச்சினை எழுகிறது. இரண்டு திட்டமும் ஒன்றுக்கொன்று முரண் அல்ல; துணை என்று கூறினேன்.

இந்தவிதமாக ஒரு மணி நேரம் நடந்தது அந்த மாநாடு. பயனுள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சில நிருபர்கள் கேள்விகள் கேட்டது, அந்தப் பிரச்சினை புரியாததால் அல்ல, நான் என்ன சொல்லுகிறேன் பார்க்கலாம் என்ற நோக்கத்துடன். முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களுக்கும் தெரியாதா, நான் பேசியிருப்பதன் பொருளும் பொருத்தமும், தெரியும். தெரிந்தும் வேறுவிதமாகப் பேசுவானேன்? காரணம், யாருக்குத் தெரியாது. எதையாவது பிடித்துக்கொண்டு கரையேற எண்ணுவது தண்ணீரில் மூழ்கித் தத்தளிப்பவருக்கு எழும் எண்ணம்; துடிப்பு. நெடுநாட்களாக, கழகத்தை அழித்திட, என்ன கிடைக்கும், என்ன கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள், எதை எதையோ பேசுகிறார்கள், பிறகு எல்லாம் வீண் என்பது கண்டு விம்முகிறார்கள். இது அவர்களின் இயல்பு. இதனைக் கண்டு நான் வியப்படையவில்லை. இதுவும் ஒரு நன்மைக்குத்தான் என்ற முறையில் எடுத்துக்கொண்டு இங்கு நான் கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்துத் தெரிவித்திருக்கிறேன். மணி மூன்று, தூங்க முயலுகிறேன். நன்றி, வணக்கம்.

அண்ணன்

21-3-1965

பின் குறிப்பு :
நான் தில்லியிலிருந்து அனுப்பிய கடிதம் 12-3-65 அன்றுதான் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தது. அக்கடிதம் வந்து சேருவதற்குமுன் சென்ற கிழமை 14-3-1965 இதழ் அச்சாகி விட்டமையால், அதனை இந்தக் கிழமை (21-3-1965) இதழில் காணுகின்றீர்கள்.

அன்பன்,

அண்ணாதுரை