அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


டாக்டர்கள்! தேர்தல் முடிவு!
சிறைச்சாலை விதிகள்!
1

தம்பி!

காது, மூக்கு, வாய், இந்தப் பகுதிகளிலே ஏற்படக்கூடிய வியாதிகளைத் தீர்த்துவைக்கும் நிபுணர் டாக்டர் சத்தியநாராயணா, மருத்துவருக்கு இருக்கவேண்டிய நல்லியல்புகள் பெற்றவர். முன்பு ஒரு முறை நண்பர் ஏ. கோவிந்தசாமி அவர்களுக்கு, குரலொலி கெட்டுவிடத்தக்க நோய் ஏற்பட்டபோது, இதே டாக்டர் சத்தியநாராயணா அவர்கள்தான், தக்க அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார்கள். அப்போது அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்தார்கள். நான்கூட நண்பர் கோவிந்தசாமியைப் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன். நான் மறந்துவிட்டிருந்தேன் - டாக்டர் சத்தியநாராயணா நினைவுபடுத்தினார்கள். உயர்திரு. ஆச்சாரியார், அமெரிக்கா சென்றபோது உடன் சென்றிருந்தவர், டாக்டர் சத்தியநாராயணா. அவருடைய சீரிய மருத்துவ உதவிப் பெற்றுப் பெரும் பயன் அடைந்தேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள வலி போக்க, தனியாக எந்த மருந்தும் இல்லை என்பதால், இது மெள்ள மெள்ளத் தன்னாலேதான் போகவேண்டும், தேகப் பயிற்சி செய்வது ஒன்றுதான் இதற்குக் "கைகண்ட மருந்து', வலி அதிகமாகும்போது ஒத்தடம் கொடுக்கலாம், வலியை மறந்திருக்க மாத்திரை உட்கொள்ளலாம். வேறு ஏதும் செய்வதற்கில்லை என்று கூறி, மருத்துவ மனையிலிருந்து பிப்ரவரி 13-ம் நாள், என்னை மீண்டும் சென்னை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தார்கள். டாக்டர் சத்தியநாராயணா, 21-ம் தேதி வரவேண்டும். ஓரு ஊசி போடப்போகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். டாக்டர் இரத்தினவேலு சுப்பிரமணியம் அவர்கள், சில காலத்துக்கு, வாரம் ஒரு முறை மருத்துவமனை வந்து, பரிசோதித்துக்கொள்ள வேண்டும், அதுபற்றி நான் சர்க்காருக்கு எழுதி இருக்கிறேன் என்று கூறினார்கள். அவருடைய யோசனையை சர்க்கார் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. டாக்டர் சத்தியநாராயணா குறித்திருந்தபடி 21-ம் தேதி மருத்துவமனை சென்று, அரை மணி நேரத்திற்கெல்லாம் திரும்பினேன் - மறுபடியும், மார்ச் 20-ம் நாள் வரச்சொல்லி இருக்கிறார். இப்போதுகூட, வலி இருந்தபடி இருக்கிறது - இன்று. பிற்பகல்கூட, வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக்கொண்டேன். வமற ப்பதற்காக ஒரு நாளைக்கு மூன்று வேளை நொவால்ஜின் மாத்திரைகள் உட்கொள்கிறேன். மருத்துவமனை சென்று திரும்பியதில் வலிபற்றி அச்சம் எழத்தக்க குழப்பம் நீங்கி, என்னோடு நீண்ட நாள் இருக்கும் நினைப்புடன் இந்த வலி இருக்கிறது என்பது புரிந்துவிட்டது.

மருத்துவமனையிலிருந்து சிறை செல்லும் ஏற்பாடுபற்றி, ராணி பரிமளம் ஆகியோருக்கும் தெரியாது - ஆகவே அவர்கள் வழக்கம்போல் அன்று மாலை வருவார்கள் - ஏமாற்றமடைவார்கள். இதைத் தவிர்க்க முடியுமா என்று எண்ணினேன் - மேலும் நான் படித்து முடித்துவிட்ட புத்தகங்களை வீட்டிற்குக் கொடுத்தனுப்ப வேண்டும். எப்படி? என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் தோழர் ஆசைத்தம்பி வந்தார் - அவரிடம் புத்தகக்கட்டை கொடுத்து வீட்டிலே சேர்த்துவிடும்படியும், நான் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுபற்றிப் பரிமளத்திடம் கூறும்படியும் தெரிவித்தேன். ஆசைத்தம்பி, அதற்கு முன்பே இரண்டொரு முறை என்னை வந்து பார்த்தார் - மிகுந்த உற்சாகமாகத் தேர்தல் பணிகளைக் கவனித்துக்கொண்டு வருவதாகக் கூறினார். சென்னையில் வெற்றி நிச்சயம் என்று உறுதியாகக் கூறினார். நான் விடுதலையாகிற வரையில் வைத்திருக்கப்போவதாகக் கூறி, "தாடி' வளர்த்துக்கொண்டிருந்தார்.

மருத்துவமனையில் எனக்குத் துணையாக இருந்து வந்த டாக்டர் மோகன் எனும் இளைஞர், நான் சிறை செல்லக் கிளம்பும்போது, மெத்த வாட்டமடைந்தார். பல நாட்களாக, என்னுடன் பாசத்துடன் பழகிவந்த காரணத்தால், நான் மீண்டும் சிறை செல்வதறிந்து, ஒருவிதமான மனச்சங்கடம், அந்த இளைஞருக்கு. மருத்துவத் துறையில் ஈடுபட்டிருக்கும் இந்த இளைஞரின் தந்தை போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பவர்; தாயார் கல்வித் துறையில் சீரிய பணியாற்றிக் கொண்டு வருபவர்.

மருத்துவமனையில் எனக்குக் கிடைத்த முதல் நண்பர் டாக்டர் கிருஷ்ணன் - இவர் கோவை மாவட்டத்தவர் - என்னிடம் மிகுந்த பற்றுகொண்டு, எனக்குப் பெரும் துணையாக இருந்து வந்தார் - டாக்டர் இரத்தினவேலு சுப்பிரமணியம் அவர்களிடம், பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார் - ஆகவே அவர் என்னைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலும் இருந்தார். இனிய இயல்பு, அன்பு ததும்பும் மனம். மருத்துவத் துறைக்கு ஏற்றவர். அவருடைய பயிற்சிக் காலம் முடிந்தது. அவர் வேறு இடத்தில் வேலை பெறச் செல்லவேண்டி ஏற்பட்டது. என்னை விட்டுவிட்டுப்போக மனமின்றி, ஒரு வாரம், எனக்காகவே, மருத்துவமனையில் தங்கி இருந்தார். நான் மீண்டும் சிறை செல்லும் வரையில், இருக்க எண்ணினார் - நான் வற்புறுத்தி, அவரை அவருடைய கடமையை மேற்கொள்ளச் சொன்னேன். டாக்டர் கிருஷ்ணன், தான் போவதற்கு முன்பு, என்னைக் கவனித்துக்கொள்ளும்படி, டாக்டர் மோகனிடம்தான் சொல்லிவிட்டுச் சென்றார்.

இந்த இரண்டு இளைஞர்களையும் நான் என்றென்றும் மறப்பதற்கில்லை.

என்னைக் கவனித்துக்கொண்ட டாக்டர்களில், சுந்தரகாந்தி என்பவரும், சங்கர் என்பவரும் குறிப்பிடத்தக்கவர்கள். டாக்டர் சொக்கலிங்கம் எனும் என் நண்பரும் எனக்குத் துணை புரிந்தார்.

மருத்துவ மகளிர் பலர் - உடன்பிறப்புகள்போன்ற அன்புடன் பணியாற்றி வந்தனர்.

நாவலரும், நடராஜனும், கருணாநிதியும், வழக்கறிஞர் நாராயணசாமியும் அடிக்கடி வந்து என் உடல் நலம் குறித்து விசாரித்தவண்ணம் இருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன், ராஜாராம், முத்து ஆகியோரும், அரங்கண்ணல், சி. வி. ராசகோபால், கிட்டு மற்றும் பலரும் பல முறை வந்து அளவளாவினர்.

நகராட்சி மன்றத் தேர்தல்கள், நான் மருத்துவமனையில் இருந்தபோதே துவங்கிவிட்டன. பம்பரம்போலச் சுழன்று அதிலே பணியாற்றும் என் தம்பிகளுடன் இருந்து பொறுப்பை ஏற்கும் வாய்ப்பை இழந்து, மொத்தச் சுமையையும் அவர்கள் தாங்கித் தத்தளிக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டு, நான் மருத்துவமனையில் படுத்துக்கொண்டேன். தேர்தல் நிலைமைகளைப்பற்றி, களைத்துப் போய், இளைத்துப்போய், கருணாநிதியும், நடராஜனும், நாவலரும் மற்றவர்களும் என்னிடம் வந்து சொல்லும்போதெல்லாம், அவர்களை இவ்வளவு தவிக்கச் செய்கிறேனே என்று என்னை நானே நொந்துகொண்டேன். எத்தனை விதமான இன்னல்கள் - எத்தனை எத்தனை எரிச்சலூட்டும் நிலைமைகள் - எத்தகைய கொடிய, இழிதன்மை மிகுந்த எதிர்ப்புகள், என்னென்ன சிக்கல்கள், பிரச்சினைகள், புகைச்சல்கள் - இவ்வளவுக்கும் இடையிலே அவர்கள் உழன்றுகொண்டிருக்க, நான், மருத்துவமனையில்! எனக்கு அதனை எண்ணும்போது மிகுந்த வேதனையாகக்கூட இருந்தது. ஆனால் அந்த வேதனைக் கிடையிலேயே மற்றவர்களின் சாமர்த்தியம் தெரிந்தது. எதையும் பொறுப்பேற்று செம்மையாகச் செய்திடும் ஆற்றல் மிக்கதோர் அணி அமைந்துவிட்டிருக்கிறது - நாமே முன்னின்று செயல்பட வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை - என்னை மகிழ்விக்க வேண்டும் என்பதைத் தமது கடைமையாக்கிக்கொண்டு பணியாற்றும் பண்பினர் கொண்ட பாசறையாகிவிட்டது தி. மு. க. என்று எண்ணி, மன மகிழ்ச்சி பெற்றேன். முதல் கட்ட தேர்தல் முடிவுகள் மருத்துவமனையிலிருக்கும்போதே கிடைத்தன - நான் அகமகிழ்ந்தேன். இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும்போது, நான் சிறை வந்துவிட்டேன். சிறையில், இரண்டாம் கட்ட முடிவுகளைக் கண்டேன் - களிப்புற்றேன். இறுதியாக, சென்னை மாநகராட்சித் தேர்தலில், கழகம் பெற்ற போற்றத்தக்க வெற்றி பற்றிய முழு விவரத்தைப் படித்துவிட்ட பிறகுதான், விட்ட இடத்திலிருந்து, இந்தக் குறிப்பினை எழுதத் தொடங்கினேன்.

நகராட்சி மன்றத் தேர்தல், மாநகராட்சி மன்றத் தேர்தல், இதிலே நமது கழகம் பெற்ற வெற்றிகள், அதனால் பெறப்படும் அரசியல் பாடம், இவை தனியாகவே விளக்கப்படவேண்டிய பிரச்சினை. இந்தக் குறிப்பில் நான் பெற்ற மகிழ்ச்சியை மட்டுமே எடுத்துக் காட்டினேன். இந்த வெற்றிச் செய்தியைப் படித்துவிட்டு, சாப்பிட உட்கார்ந்தபோது, இது சிறையாக அல்ல, சிங்கார மாளிகையாக மாறிவிட்டது! சிறை உணவு, தனிச்சுவை பெற்றுவிட்டது! நீ சிறையில் இருக்கும்போதெல்லாம் இத்தகைய சிறப்பான வெற்றிகளை ஈட்டித் தருவோம் என்று கழகத் தோழர்கள் கூறுவதுபோலிருக்கிறது! வார்டர்களின் பார்வையிலே ஒரு பாவம், திடீரென்று மலருகிறது! அதிகாரிகளின் பேச்சிலே புதுமணம் வீசுகிறது. பூங்காற்று மிகுந்து இருக்கிறது! புள்ளினம் இசை பாடுகிறது! அந்த இன்ப உணர்ச்சியுடன், இன்றிரவு துயில்கொள்ளச் செல்கிறேன்.
25-2-1964

பல நாட்கள் எழுதாதிருந்ததால், மொத்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து, அளவைக் குறைத்து எழுதினேன். என் உடல்நிலை குறித்தும், தேர்தல்களைப்பற்றியும் எழுதியபோது, சிறையிலேயே ஏற்பட்டிருக்கிற மகிழ்ச்சி தரும் மாறுதலைக் குறிப்பிட மறந்துவிட்டேன். இப்போது நான் சிறை வந்த அன்று எந்தப் பகுதியில் நுழைந்தேனோ அதே இடத்தில்தான் இருக்கிறேன் - ஆனால் ஆறாம் எண் அறைக்கு வந்துவிட்டேன். நான் முன்பு இருந்த ஐந்தாவது என் அறையில் அன்பழகன் இருக்கிறார்; ஏழாவது அறையில் தையற்கலை ஆசிரியர் சுந்தரம்; எட்டாவது எண் அறையில் மதியழகன், கீழ் தளத்தில், தோழர்கள் பொன்னுவேல், வெங்கா, டி. எம். பார்த்தசாரதி. என் "தனிமை' ஒழிந்தது, இனிமை மலர்ந்தது தானாக அல்ல - மெத்தக் கஷ்டப்பட்டு.

மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் பழைய இடத்துக்கே கொண்டு செல்வார்களோ என்ற கவலை, கலக்கம். அவர்களெல்லாம் இருக்கும் இடத்துக்கே அழைத்துக்கொண்டு போகக்கூடாதா என்று கேட்டேன். இல்லை! அவர்களில் சிலர் இங்கு வருகிறார்கள்! என்று அதிகாரி கூறினார். அன்பழகன், மதியழகன், சுந்தரம் ஆகிய மூவரும் வந்தனர். தோளில் ஏற்பட்ட வலி, இருதய சம்பந்தமானது அல்ல என்று மருத்துவர் கூறியபோது ஏற்பட்ட, மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது, மூன்று நண்பர்களும் என்னுடன் இருந்திட வந்தபோது, பிரிந்திருந்த நாட்களிலே ஏற்பட்ட நிகழ்ச்சிகள்பற்றிப் பேசி மகிழ்ந்தோம். விளையாட்டுச் சாமான்கள் கிடைத்ததும் குழந்தைகள் குதூகலமடைவதுபோல, ஏதோ ஓர்வித மகிழ்ச்சி, சிரிப்பு, பேச்சு!

அன்பழகனைச் சுற்றி, ஒரே வள்ளுவர் மயம்! ஆமாம்! பரிமேலழகரின் வள்ளுவர், பரிதியாரின் வள்ளுவர், வரதராசனாரின் வள்ளுவர், இலக்குவனாரின் வள்ளுவர், குழந்தையின் வள்ளுவர், நாமக்கல்லார் வள்ளுவர், கி. வா. ஜெகனாதன் வள்ளுவர், மனக்குடவர் வள்ளுவர் இப்படிப் பலப்பல. திருக்குறள் ஆராய்ச்சி நூலொன்று திறம்பட ஆக்கிக்கொண்டிருக்கிறார் அன்பழகன். குறளாராய்ச்சி குறித்து உரையாடும் சுவைமிகு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

மதியழகன், சான்று விளக்க நூலும், அதுபோன்ற வேறு சட்டநுணுக்க ஏடுகளையும் படிப்பதும், சட்ட சபைத் துறைக்கு இங்கிருந்தபடியே, பல்வேறு பிரச்சினைகள்பற்றி கேள்விகள் தயாரித்து அனுப்புவதும், இடையிடையே, பல முன்னாள் - இந்நாள் பிரச்சினைகள்பற்றி உரையாடுவதுமாக இருக்கிறார்.

சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என்று நான் குழம்பிக்கிடந்தபோது, வெற்றி நமக்குத்தான் என்பதை, புள்ளிபோட்டே காட்டிவிட்டார். பெரும்பாலும், அவர் போட்டுக்காட்டிய "புள்ளி' மெய்யாகிவிட்டிருக்கிறது.

சிறுவர்களுக்கான உடைபற்றிய நூலொன்று தயாரித்துக் கொண்டிருக்கிறார், தோழர் சுந்தரம்.

நான் எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டுள்ள பிரச்சினைக்குத் தேவைப்படும் ஏடுகள் பெற முடியாமல், திகைத்துக் கிடக்கிறேன்; கிடைக்கும் ஏடுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

அறப்போரில் ஈடுபடுவதற்காக நான் சென்னை புறப்படுவதற்கு முன் இரவு, திருவத்திபுரத்தில் பேசினேன் - புலவர் கோவிந்தன் ஒரு காகிதக்கட்டு, மைக்கூடு, எழுதுகோல் இவைகளைக் கொடுத்து, தக்கதோர் நூல் எழுத வேண்டும் சிறையில், என்றார்.

சிறையில் உள்ள இடர்ப்பாடுகளை அவர் உணரவில்லை. அதிலும் இம் முறை, சிறையில் மிகுந்த கண்டிப்பு, கெடுபிடி!!

ஆறு புத்தகங்களுக்குமேல் அனுமதிக்க முடியாது. இப்படி ஒரு கண்டிப்பு.

அந்தப் புத்தகங்கள் அரசியல் சம்பந்தப்பட்டவைகளாக இருந்தால், அனுமதி மிகக் கடினம்.

புத்தகங்கள், இந்தச் சிறைக்குள்ளே நுழைந்ததும், நேரே எம்மிடம் வந்து சேர முடியாது. ஒரு வாரமோ, பத்து நாட்களோ, அவைகளுக்குக் கடுங்காவல் - அதிகாரிகளின் மேஜைக்குள்!

ஒரு வாரமாகிறது, "அடக்குமுறைக் கொடுமை' பற்றிய ஒரு ஆங்கில ஏடு, இங்கே தரப்பட்டு, மிகுந்த ஆவலுடன் அந்தப் புத்தகத்தைக் கொண்டுவரச் சொல்லி இருந்தேன். புதிய வெளியீடு - 19-ம் தேதி, பரிமளம் அந்தப் புத்தகத்தை என் எதிரில்தான் சிறை அதிகாரி ஒருவரிடம் கொடுத்தான் - அவர் மேலதிகாரியிடம் காட்டி, ஒப்புதல் பெற்ற பிறகு தருவதாகச் சொன்னார் - இன்றுவரை, புத்தகம் தரப்படவில்லை. தரப்படாதது மட்டுமல்ல, எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் சொல்லுகிறார்கள்.

"அடக்குமுறை' பற்றிய புத்தகம் என்ற உடனே, இந்த நாட்டு நிலைமை - இந்தச் சர்க்கார் செய்திடும் கொடுமைபற்றிய புத்தகமோ என்று எண்ணிக்கொள்ளாதீர்கள் ஐயா! இது அடக்குமுறை எனும் பிரச்சினைபற்றி, மேனாட்டார் ஒருவர் வெளியிட்டுள்ள புதிய புத்தகம் என்றுகூட மேலதிகாரியிடம் விளக்கம் சொன்னேன். அதையும் கேட்டுக்கொண்டார். அதுதான் அவர் எனக்காகச் செய்தது. புத்தகம் என் கைக்கு வரவில்லை. சட்டமும் சமுதாயமும் என்பதுபற்றி ஒரு நூலெழுத விரும்புகிறேன், அதற்காகப் பல ஏடுகள் தேவை - எங்கே கிடைக்கப்போகின்றன!

சிறையில் இம் முறை இத்தனை கண்டிப்பு இருப்பதற்குக் காரணம், புதிய சிறை அமைச்சருடைய "பெருந்தன்மை'தான் என்று தெரிகிறது. தெரிந்து?

வாரத்துக்கு ஒரு முறை, கைதிகளை, நண்பர்கள் உறவினர்கள் வந்து பார்க்கலாம் என்பது சிறைக்கான விதிகளில் ஒன்று.

உறவினர்கள் மட்டுந்தான் பார்க்கலாம், நண்பர்கள் கூடாது என்று இம் முறை ஆக்கிவிட்டிருக்கிறார்கள். சுயராஜ்யம் மலரமலர அத்துணை மணம் வீசுகிறது. நண்பர்களும் வந்து பார்க்கலாம் என்றிருக்கும் விதியைக் காட்டி, முதலமைச்சரிடம் பேசிப் பாருங்கள் என்று நாவலரிடம், மருத்துவமனையில் இருக்கும்போது சொல்லிவிட்டு வந்தேன். முயற்சி செய்து பார்க்கிறேன் என்றார்.
26-2-1964

இன்று நாவலரும், கருணாநிதியும், எம். ஜி. இராமச்சந்திரனும், கே. ஆர். ராமசாமியும், என்னைக் காண வந்திருந்தனர். முதலமைச்சரிடம் நாவலர் பேசியன் விளைவு. எல்லோரும் களைத்துப்போயிருந்தனர். தேர்தல் அலுப்பு! எல்லோருடைய கண்களும் கீதம் பாடின - தேர்தல் வெற்றியின் விளைவு.

நாங்கள் பேச உட்கார்ந்த இடத்தில் - பக்கத்தில் - சிறையின் மேலதிகாரிகள் இருவர் உட்கார்ந்துகொண்டனர் - என்ன பேசிவிடுகிறோமோ என்ற கவலையுடன். அவ்வளவு கண்காணிப்பு. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டோம் - மாநகராட்சித் தேர்தலில், சில இடங்களில் ஏற்பட்ட தோல்விகள்பற்றிக் காரணம் கேட்டறிய விரும்பினேன். எப்படிக் கேட்பது! அரசியல் பேசக்கூடாதே! ஆகவே மதுரை வழக்கு எப்போது, சட்டசபை எப்போது கூடுகிறது, மோட்டாரில்தானே வந்தீர்கள் என்ற இவைபற்றித்தான் பேசினோம். பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்; பேச முடிந்ததோ, இவ்வளவுதான். இதற்குள்ளாகவே ஒரு அதிகாரி தமது கைகடிகாரத்தைப் பார்த்துக்கொண்டார். இந்தச் சூழ்நிலையின் சங்கடம் எனக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. விரைவிலே பேசி முடித்து, அவர்களை அனுப்பிவிடுவதே நல்லது என்று தோன்றிவிட்டது.