அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எல்லாம் தருமத்துக்கு!
1

"எல்லாச் சொத்தும் தருமத்துக்கு எழுதி வைத்து விட்டேன்' - சீமான்.
"பாங்குகளைச் சமுதாயக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போகிறோம்.' - காங்கிரஸ்
ஏழைகளின் ஓட்டும் வேண்டும்! முதலாளிகளின் நோட்டும் வேண்டும்!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்
பாங்குக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெடிகுண்டு அல்ல! வெறும் புஷ்வாணம்!

தம்பி!

எங்கோ படித்ததாக நினைவு. நகைச்சுவைக்காக எழுதப்பட்டதுதான் என்றாலும் நான் கூற நினைக்கும் பிரச்சினைக்குப் பொருத்தமாக அமைந்திருப்பதால் அதனைச் சொல்லுகிறேன்.

ஒரு சீமான், பிள்ளை குட்டிகள் இல்லை. பெரிய சொத்து! இவ்வளவு சொத்தும் யாருக்குப் போய்ச் சேரப்போகிறதோ, யார் அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்களாக இருக்கிறார்களோ என்று ஊரார் பேசிக்கொண்டனர்.

ஒரு நாள் அந்தச் சீமான் பத்திரிகை நிருபரிடம் சொன்னார்,

என் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று.

துள்ளிக் குதித்தோடினார் நிருபர், இதழகத்துக்கு. கொட்டை எழுத்தில் செய்தியை வெளியிட்டார். இன்ன சீமான் தன் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டார் என்று.

சீமானின் படம், புன்னகை பூத்த முகத்துடன்!

பாராட்டுக் குறிப்பு அவருடைய இயல்பை மெச்சி.

மற்ற இதழ் நிருபர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பைத் தட்டிப் பறித்துக்கொண்டாரே இந்த நிருபர் என்று அவருக்குப் பாராட்டு!

இவ்வளவு பரபரப்பு மூண்டுவிட்டது. மற்ற நிருபர்கள் சீமானை மொய்க்கத் தொடங்கினார்கள் விவரம் கேட்டறிய. என்னென்ன தரும காரியத்துக்குச் சொத்தினை எழுதி வைத்திருக்கிறார்? சிவன் கோயிலுக்கு எவ்வளவு? மடத்துக்கு எவ்வளவு? பஜனைக் கூடத்துக்கு என்ன சொத்து? பள்ளிக் கூடத்துக்காக ஏதாகிலும் உண்டா? அனாதைப் பிள்ளைகளுக்காக? - என்று இப்படிக் கேள்விகள் அடுக்கடுக்காக!

சீமான், கேள்விக் கணைகளைத் தொடுத்தவர்களைப் பார்த்த பார்வையில், ஒரு திகைப்பே இருந்தது.

"என்ன கேட்கிறீர்கள்? இதெல்லாம் என்ன கேள்வி?'' என்று கேட்டார் சீமான்.

"தொல்லை கொடுப்பதாகக் கருதக்கூடாது. ஊரே எதிர்பார்க்கிறது விவரம் அறிய. அதனால்தான் கேட்கிறோம்'' என்றார் நிருபர்.

"என்ன விவரம்?'' - என்று கேட்டார் சீமான்.

"தாங்கள் தங்கள் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதி வைத்திருக்கிறீர்களே, அதற்கான விவரத்தைத்தான்'' என்றார்கள் நிருபர்கள்.

ஒரு வெடிச் சிரிப்புக் கிளம்பிற்று சீமானிடமிருந்து, "அட இழவே! நான் சொன்னதைத் தப்பர்த்தம் செய்துகொண்டீர்கள் என்றல்லவா தோன்றுகிறது. ஐயா! நான் என் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதிவைத்துவிட்டேன் என்றேன். உடனே உங்களுக்குக் கோயில், குளம், சத்திரம், சாவடி இவைகளின்மீது கவனம் போயிற்று; நான் அந்தத் தருமத்தைச் சொல்லவில்லை ஐயா! சொத்து முழுவதையும் என் பங்காளிகள் ஏதாகிலும் பிற்காலத்திலே பற்றிக்கொள்ளக் கிளம்புவார்களோ என்ற பயத்தில், இப்போதே என் மனைவி பேருக்கு எழுதிவைத்து விட்டேன். அதைத்தான் நான் சொன்னேன், சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று. என் மனைவி பெயர் தர்மாம்பாள் - செல்லமாக தருமு! தருமு! என்று அழைப்பேன்! அதனால் சொத்து அவ்வளவும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று சொன்னேன் என்றார். நிருபர்கள் திணறிப் போயினர்! விஷயம் இப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்காமல், சீமானை, வள்ளல் என்றும், தருமவான் என்றும் ஏகப்பட்ட தூக்கு தூக்கிவிட்டோமே! ஆசாமி நம்மைப் பைத்தியக் காரராக்கிவிட்டாரே! என்று எண்ணி வெட்கப்பட்டனர்.

தருமாம்பாளுக்கு என்று சொல்வதற்குப் பதிலாக தருமத்துக்கு என்று சொன்னதால் இத்தனை விபரீதமான அர்த்தம் எழும்பிவிட்டது.

இந்தக் கதைதான் தம்பி! நினைவிற்கு வருகிறது, காங்கிரஸ் கட்சி இப்போது பேசிக்கொண்டு வரும் பேச்சைக் கேட்கும்போது.

மறை பொருள்
இரு பொருள்
குறை பொருள்

இந்த முறையிலே கொள்கைகளையும் திட்டங்களையும் பற்றி அவர்கள் பேசுவதால், முழுப் பொருளை, உண்மைப் பொருளை அறிந்து கொள்ளாதவர்கள் மயங்குகின்றனர். வேறு விதமான பொருள் கொள்ளுகின்றனர்.

இதனைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள முனைகிறது காங்கிரஸ் கட்சி.

இந்த விதமான "இரு பொருள்' தரும் பேச்சை ஒரு பொறுப்புள்ள கட்சி பேசுவதை ஜனநாயகத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டினர் ஏற்கமாட்டார்கள். இங்கு?

தேள் கொட்டிற்று
தேனாக இனித்தது

என்று பேசிடக்கூட அவர்கள் துணிவு பெறுகிறார்கள். என்ன விபரீதமான பேச்சய்யா இது! - என்று கேட்டிடினோ, புருவத்தை நெறித்தபடி கேட்கவும் முனைகின்றனர்.

தேள் கொட்டாதா?
தேன் இனிக்காதா? - என்று.

வேடிக்கைக்காகச் சொல்லுகிறேன் என்றோ, அவர்களிடம் பகை உணர்ச்சி கொண்டதால் அவ்விதம் பேசுகிறேன் என்றோ எண்ணிக்கொள்வர். அவ்விதம் நான் பேசுபவன் அல்ல.

தீவிரத் திட்டம்
அதிதீவிரத் திட்டம்
புரட்சித் திட்டம்
புதுமைத் திட்டம்
பொது உடைமைத் திட்டம்

என்றெல்லாம் பாராட்டினர் பலர். சீமான் தன் சொத்து அவ்வளவையும் தருமத்துக்கு எழுதிவைத்துவிட்டதாகச் சொன்ன உடன் பாராட்டியதுபோல.

எப்போது கிடைத்தது அந்தப் பாராட்டு?

காங்கிரஸ் எர்ணாகுளத்தில் கூடி, நாட்டிலுள்ள பாங்குகளை இனி சர்க்கார் உடைமையாக்கிக்கொள்ளும் என்ற கருத்துப்பட, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதனைத் தேர்தல் அறிக்கையிலே இணைத்தபோது.

பாங்குகளைத் தேசீய உடைமையாக்க வேண்டும்; இன்று அந்த அமைப்புகள் முதலாளிகளின் ஆதிக்கத்தை வளர்க்கும் கருவிகளாக உள்ளன; உண்மையான நாட்டு முன்னேற்றத்துக்கு, மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுவதில்லை; முதலாளிகள் மேலும் மேலும் தங்கள் தொழில்களைப் பெருக்கிக்கொள்வதற்கே பயன்பட்டு விடுகின்றன என்ற கருத்து பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

துவக்கத்திலே இந்தக் கருத்தைத் துடுக்குத்தனம் என்றும், பொருளாதாரச் சீர்குலைவு உண்டாக்க வல்லது என்றும், தனி நபர் உரிமையைத் தகர்த்துவிடுவது என்றும் கூறித் தாக்கினர் காங்கிரஸ் அரசினர்.

விவரம் அறியாதார் பேச்சு என்றும், வீண் குழப்பம், மனப் பிராந்தி என்றும் கூறினர், கண்டித்தனர்.

ஆனால் இந்தக் கருத்து மக்களாலே வரவேற்கப்பட்டு வலிவு பெற்றது.

இந்தக் கருத்தினைக் கூறி, மக்களைத் தம் பக்கம் முற்போக்குக் கட்சிகள் இழுத்துக்கொண்டு விடுமோ என்ற அச்சம் ஆளவந்தார்களுக்கு ஏற்பட்டது.

அதனால்தான் ஆளவந்தார்கள், மக்களை மயக்கிட, பாங்குகளைத் தேசிய உடைமையாக்கத் திட்டமிட்டு விட்டிருப்பதாக அறிவித்தனர்.

எர்ணாகுளத்தில் இந்தப் பேச்சு திட்ட வடிவம் கொண்டது; ஆனால் அதற்கு முன்பே தமிழகத்தில் "நிலை அறிய'ச் சுற்றுப் பயணம் நடத்திய முன்னாள் நிதி அமைச்சர், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், அழுத்தந் திருத்த மாகக் கூறினார் பாங்குகள் தேசிய உடைமைகளாக்கப்பட வேண்டும் என்று.

அவர் சொன்னதன் விளைவுதான் எர்ணாகுளத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கருத இடம் இருந்தது. டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், பொருளாதாரத் துறையிலே புலி! நிதி அமைச்சராக ஒரு முறைக்கு இரு முறை வேலை பார்த்தவர்; வித்தகர் என்று பாராட்டப் பட்டவர்; அவர் கூறுகிறார், பாங்குகள் தேசிய உடைமையாக்கப் படவேண்டும் என்று.

காங்கிரசின் நடுநாயகர் அவர்!
பொருளாதாரத் துறையிலே நிபுணர் அவர்!

அவரே கூறவிட்ட பிறகு, அது பற்றி ஐயப்பாடு கொள்ளப் போமோ! பாங்குகளைத் தேசிய உடைமையாக்கினால் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும் என்ற அச்சத்தைக் கிளப்பிடுவோர் இனி வாய் மூடிக்கொள்வர் என்று காங்கிரஸ் பேச்சாளர்கள் விளக்கமளித்தனர்.

இதனைவிடத் தீவிரமான திட்டம் வேறு இருக்க முடியுமா?

இதைப்போன்ற புரட்சிகரமான திட்டத்தைக் காட்டிலும் வேறு என்ன திட்டம் காட்ட முடியும் எதிர்க் கட்சிகளால்?

என்றெல்லாம் எக்காளமிட்டனர்.

தம்பி! நம்மைப்போல விளக்கம் வேண்டும், இரு பொருள் கூடாது என்று கருதுபவர்கள், எர்ணாகுளத்துத் தீர்மானத்தில் பாங்குகளை தேசிய உடைமையாக்கிவிடப் போகிறோம் என்று திட்டவட்டமாகக் கூறக் காணோமே என்று கேட்டபோது சீறி விழுந்தனர், ஆளுங் கட்சிச் சீலர்கள். ஏடா! மூடா! தேசிய உடைமையாக்குவோம் என்று இவ்வளவு வெளிப்படையாகச் சொன்னால்தானா - ஏன்! - கோடிட்டுக் காட்டினால் போதாதா?

Social Control - சமுதாயக் கட்டுப்பாடு

என்று கூறியிருக்கிறோமே. அதன் பொருள் என்ன என்று அறிந்துகொள்ளக்கூடவா முடியவில்லை? அத்தனை மந்த மதியா? - என்றெல்லாம் பேசிக் கேலி செய்தனர்.

Social Control - சமுதாயக் கட்டுப்பாடு என்பதற்கும், Nationalisation - சர்க்கார் உடைமையாக்குவது என்பதற்கும் வித்தியாசம் இல்லையா? நிரம்ப!!

அதனைச் சிலர் எடுத்துக்காட்டியபோதுகூட, மறுத்தனர் இந்த மகானுபாவர்கள்.

பாங்குகளைத் தேசிய உடைமையாக்க வேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டிருக்கும் கிருஷ்ணமேனன், Social Control சமுதாயக் கட்டுப்பாடு என்பதற்கு உண்மையான பொருள், நடைமுறைப் பொருள் - Nationalisation தேசிய உடைமை யாக்குவது என்பதுதான் என்று விளக்கம் கூறினார்.

அப்போதுகூட ஆளவந்தார்கள், இல்லை! இல்லை! நாங்கள் கூறும் சமுதாயக் கட்டுப்பாடு வேறு, தேசிய உடைமையாக்குவது என்பது வேறு என்று அறிவிக்கவில்லை.

சொத்து அவ்வளவும் தருமத்துக்குத்தான் என்று கூறிய சீமான்போல இருந்துவிட்டனர்.

ஏழை எளியோர்களின் செவிகளுக்கு பாங்குகள் சர்க்கார் உடைமையாக்கப்படும் என்ற பேச்சு இசையாக அல்லவா இருந்திடும்? இனிப்பு கொஞ்சமா! மன மயக்கம் ஏற்படுமல்லவா? அந்த நேரமாகப் பார்த்து ஓட்டுக்களைத் தட்டிப் பறித்துக் கொள்ளலாமல்லவா? அந்த நினைப்புடன் இந்தப் பேச்சை உலவவிட்டனர்.

உண்மையிலேயே இவர்களுக்கு, பாங்குகளைத் தேசிய உடைமையாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதனை இரு பொருள்கொண்ட பேச்சாக்காமல், திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியினரின் நோக்கம் வேறு!

ஏழைக்கு இனிப்பு அளிப்பதாகவும் இருக்க வேண்டும், அதேபோது முதலாளிகளுக்குக் கோபமோ ஐயப்பாடோ ஏற்படாமலும் இருக்க வேண்டும்.

ஏழைகளின் ஓட்டுகளும் வேண்டும், முதலாளிகளின் நோட்டுகளும் வேண்டும்.