அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எல்லாம் தருமத்துக்கு!
2

சொல்லும் செயலும் இதற்குத் தகுந்ததாக அமைய வேண்டும்.

ஏழை எளியோர்களே! எப்படிப்பட்ட புரட்சித் திட்டம் கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறோம் பார்த்தீர்களா? பாங்குகளை இனி முதலாளிகளிடம் விட்டுவைக்கப் போவதில்லை, சர்க்காரிடம் அவை வந்து சேரும் என்று கூறவும்,

முதலாளிகளே! பயம் ஏன்? சந்தேகம் ஏன்? பாங்குகளைச் சர்க்கார் எடுத்துக்கொள்ளாது! எடுப்பதாக இருந்தால், Nationalisation - நாட்டுடைமையாக்குவது என்றல்லவா கூறியிருப்போம்; இப்போது நாங்கள் சொல்வது என்ன? கவனித்தீர்களல்லவா? கருத்துப் புரியவில்லையா? Social Control சமுதாயக் கட்டுப்பாடு என்றுதான் கூறினோம், வேறில்லை. ஆகவே வீண் குழப்பம் கொள்ளாதீர்கள் என்று கூறிடவும்,

ஏழைகளே! உங்களுக்காகப் பாடுபடும் எமக்கு உமது ஓட்டுகளைத் தாருங்கள்!! என்று கேட்டிடவும்,

முதலாளிகளே! உங்கள் ஆதிக்கத்தை அனுமதித்து வருகிறோம்; அது நிலைத்திருக்க வேண்டுமாயின் ஆட்சியில் நாங்கள் இருந்திட வேண்டும்; முற்போக்காளர் வந்திடின் Nationalisation - நாட்டுடைமையாக்கிவிடுவர் உம்மிடமுள்ள பாங்குகளை; நாங்கள் ஆட்சியில் இருந்திட வழி செய்திடின், Nationalisation - நாட்டுடைமையாக்குவது அல்ல, Social Control - சமுதாயக் கட்டுப்பாடு மட்டுமே திட்டமாக இருக்கும். ஆகவே எடும் நோட்டுகளை! கொடும் தாராளமாக!! என்று கேட்டிடவும், வழி செய்துகொள்ளவே இந்த முயற்சி.

நாணயக் குறைவான முயற்சி அல்லவா என்று கேட்கத் தோன்றும்; ஆனால் தம்பி! நாணயத்தின் மதிப்பையே குறைத்திடத் துணிந்தவர்கள் இதற்கா கூச்சப்படப் போகிறார்கள்!

அதெல்லாம் இல்லை உங்கள் அண்ணாத்துரை பழி போடுகிறான், எங்கள் நோக்கம் இரு பொருள் கொண்ட பேச்சுப் பேசி இரு தரப்பினரின் ஆதரவையும் பெறுவது என்பதல்ல; சமுதாயக் கட்டுப்பாடு என்றாலே நாட்டுடைமையாக்குவது என்பதுதான் பொருள் என்று தம்பி! யாரேனும் நாவாணிபம் புரிந்திடுவோர் வாதாட முன்வந்திடின் - அதற்காகவே தம்மை ஒப்படைத்துவிட்டோர் உளர் - அவர்களைக் காங்கிரஸ் மூலவர்களிலே ஒருவரும், இரயில்வே அமைச்சருமான எஸ். கே. பட்டீல் பேசியிருப்பதனைப் படித்துப் பார்க்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்.

பட்டீல், இவர்களின் குட்டு உடைபட்டுப் போகும் விதமாகப் பேசி இருக்கிறார்.

இவரும் எர்ணாகுளத்தில் இருந்தவர்தான்! பாங்குகள் பற்றிய திட்டத்தை எதிர்த்தவரும் அல்ல!

இவருடைய வார்த்தை கவனிக்கத் தக்கதல்ல என்று கூறிடவும் முடியாது.

இவருடைய "தயவு' தேவை இல்லை என்று காங்கிரசும் கூறிவிட முடியாது. இவர் மூலமாகவே, பெரிய புள்ளிகளிடம் பணம் பெறப்படுகிறது தேர்தல் நிதிக்கு-பொருளாளர்!

ஆகவே எஸ். கே. பட்டீல், பாங்கு சம்பந்தமாக ஏற்பட்ட தீர்மானத்தை விளக்கிக் காட்டியிருப்பது, உண்மை நிலைமையை எடுத்துக் காட்டுவதாகும்.

பேசவேண்டிய இடத்தில்தான் பட்டீல் பேசி இருக்கிறார்.

மகாராஷ்டிர கவர்னர் செரியன் தலைமை வகித்திட, செல்வ புரியினர் நாலாயிரவருக்கும் அதிகமாகக் கொலுவிருக்க, பம்பாய் நகர மணி மண்டபத்தில் இந்தத் திங்கள் இருபத்தி இரண்டாம் நாள் "சிறப்பு விருந்தின'ராக அழைக்கப்பட்டிருந்த பட்டீல், திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

பாங்குகள் தேசிய உடைமையாக்கப்பட மாட்டா என்று உறுதி அளிக்கிறேன் என்று.

கனரா பாங்கியின் வைர விழா கொண்டாட்டத்திலே அவர் சிந்திய முத்து இது!

எர்ணாகுளம் தீர்மானம் பற்றி, பலர் பலவிதமாகப் பேசிக்கொள்கிறார்களே, தீவிரவாதிகள், பாங்குகளைக் காங்கிரஸ் அரசு நாட்டுடமையாக்கிவிடும் என்று பொருள் கூறுகிறார்களே, பட்டீல் இதுபற்றி என்ன கூறுகிறார் கேட்போம் என்ற நோக்குடனேயே வைர விழா சொற்பொழிவாற்ற அழைத்தனர்.

எர்ணாகுளம் தீர்மானம் பற்றிய உண்மையான பொருளைக் கேட்டறிந்து கொள்வோம் என்ற நோக்கத்துடன் செல்வபுரியினர் நாலாயிரவர் கூடினர்.

எதற்கு அழைத்தார்கள் என்பதையும் அவர்கள் மனத்திலே எந்தவிதமான சந்தேகமும் அச்சமும் புகுந்திருக்கும் என்பதையும், அவர்களுடைய அச்சத்தைப் போக்காவிட்டால் தன் ஆட்சிக்கும் கட்சிக்கும் எத்தகைய இன்னலும் இழப்பும் ஏற்படும் என்பதையும் நன்றாகப் புரிந்துகொண்டே பட்டீல் பேசியிருக்கிறார்.

Mr. Patil asked Bankers not to entertain the fear that because the Congress election manifesto mentioned Social Control over banks and life-Insurance it had armed itself with blanket powers to nationalise banks overnight. There need be no such fear.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பாங்குகள், இன்ஷூரன்ஸ் அமைப்புகள் ஆகியவைமீது சமுதாயக் கட்டுப்பாடு ஏற்படுத்தப் படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதனால், திடுமென இவைகளை நாட்டுடைமை ஆக்கிவிடும் அதிகாரத்தைக் காங்கிரஸ் அரசு பெற்றுக்கொண்டுவிட்டிருக்கிறது என்று எண்ணி அச்சம் கொள்ளவேண்டாமென்று பட்டீல் பாங்குக்காரர்களைக் கேட்டுக்கொண்டார்! அவ்விதமான அச்சம் இருக்கத் தேவை யில்லை என்று அவர் கூறினார்.

தம்பி! எப்படி இருக்கிறது பார்த்தனையா, இவர்கள் போக்கு?எர்ணாகுளம் தீர்மானத்தைத் தூக்கிக்கொண்டு சந்தைச் சதுக்கம் சென்று சிந்து பாடுகிறார்கள் காங்கிரஸ் பேச்சாளர்கள்,

தீவிரமான திட்டம்
புரட்சித் திட்டம்
புதுமைத் திட்டம்
பொது உடைமைத் திட்டம்

என்றெல்லாம். ஆகவே எமக்கு "ஓட்டு' - என்று இரைச்சலிடுகின்றனர்.

பட்டீலோ, செல்வபுரியினரைக் கூட்டிவைத்து தேர்தல் அறிக்கையிலே ஏதோ நாலு வார்த்தை எழுதிவிட்டதால் என்ன குடி முழுகிவிடும்! ஏன் இந்தப் பயம்? யார் உங்கள் பாங்குகளை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்? ஒரு பேச்சுக்குச் சொன்னோம், Social Control சமுதாயக் கட்டுப்பாடு என்று! அதற்காகவா அச்சம்! இப்போது என்ன, பாங்குகளை எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தையா, அந்தத் தீர்மானம் கொடுத்துவிட்டிருக்கிறது? பயம் வேண்டாம் என்று கூறுகிறார்.

அதிகாரத்தில் உள்ளவர்களைக் கண்டு மயங்கிடுவோரும் மிரண்டிடுவோரும் அதிக அளவு இல்லாமல், ஆள்பவர்கள் நமது ஊழியர்கள், நம்மை ஆட்டிப் படைக்கும் தேவதைகள் அல்ல என்ற உணர்வு கொண்டோர் பெருமளவும் உள்ள எந்த நாட்டிலும், இப்படி "இரட்டை நாக்கு'க் கொண்ட ஒரு கட்சியை ஆட்சியிலே வைத்திருக்கமாட்டார்கள். இங்குதான் இடம் இருந்திட முடியும். அதுவும் அதிக நாட்களுக்கு அல்ல - இப்படி உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்களுக்கு.

காங்கிரசின் தேர்தல் அறிக்கை நாணயமானதாக இருந்திடின், பட்டீல் இப்படியா பேசியிருப்பார்?

ஆமாம். நண்பர்களே! பாங்குகளைத் தனியாரிடம் விட்டு வைப்பதாலே, நாட்டின் வளர்ச்சி, மக்களின் வாழ்வு குலைகிறது. பாங்குகள் முதலாளிகளின் ஆதிக்க வளர்ச்சிக்கே இயங்கி வருகின்றன. ஆகவே நாட்டு நலனைக் கருதி பாங்குகளை நாட்டுடைமை ஆக்கிடக் காங்கிரஸ் முடிவெடுத்திருக்கிறது - என்றல்லவா பேசியிருப்பார்?

அந்தவிதமான பேச்சை சந்து முனையில் சத்தம் எழுப்புவோருக்கு விட்டுவிட்டார்!

முதலாளிகளின் மனம் குளிரும் பேச்சை பட்டீல் பேசுகிறார்.

பட்டீல்தானே? அவர் அப்படித்தான்! - என்று கூறுவரோ! கூறிடின், கேள் தம்பி! பட்டீல் பேசியது தவறு! பாங்குகளை நாட்டுடைமையாக்கத்தான் போகிறோம் என்று இந்திரா அம்மையார் அறிக்கைவிடத் தயாரா என்று! பாராளுமன்றத்தில், பாங்குகளை நாட்டுடைமையாக்குவதற்கான சட்டம் கொண்டு வரச் சம்மதமா? கேளேன்!

பட்டீல், மேலும் உடைக்கிறார் குட்டுகளை.

அச்சம் வேண்டாம் என்று சொன்னால் மட்டும் போதாது; பாங்குகளை நாட்டுடைமையாக்கிடும் நோக்கம் இல்லை என்றால் எதற்காகத் தேர்தல் அறிக்கையில் பாங்குகள்மீது சமுதாயக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று குறிப்பிட வேண்டும் என்று செல்வபுரியினர் கேட்பார்களே என்று தோன்றுகிறது பட்டீலுக்கு.

அந்தக் கேள்விக்கும் சமாதானம் சொல்லிவிடவேண்டும். (இது அக்டோபர் - பிப்ரவரியில் பொதுத் தேர்தல் ) என்ற நினைவு உறுத்துகிறது.

ஆகவே அவர் வெளிப்படையாகவே பேசுகிறார்.

சமுதாயக் கட்டுப்பாடு என்ற சொற்றொடர் காங்கிரசின் பழைய தேர்தல் அறிக்கைகளிலேயே இருக்கிறது. அதுவேதான் இந்த அறிக்கையில் திரும்பவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனாலேயே அதற்கு ஒரு புது அர்த்தம் வந்துவிடுமா? அதனுடைய தாத்பரியம் என்ன என்றால் பாங்குகள், இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் பிரம்மாண்டமான பொருளாதார அமைப்புகள். ஆகவே அவைகளிலே மிக மோசமான ஊழல் நிர்வாகமோ, பணத்தை மோசடி செய்யும் போக்கோ தலைதூக்கு மானால் சர்க்கார் தலையிடும்! - என்பதுதான்!

தம்பி! எவ்வளவு தேன் தடவுகிறார் பார்த்தாயா? எவ்வளவு அக்கறை கவனித்தாயா? செல்வபுரியினரின் நேசத்தை உறுதிப் படுத்திக்கொள்ள.

ஒப்புக்கு ஒரு வார்த்தை என்பதோடு விடவில்லை பட்டீல்! இது எப்போதும் பேசுகிற பேச்சு! இதற்கு இப்போது என்ன புதிதாகப் பொருள் வந்துவிட்டது? உங்களை யார் என்ன செய்யப் போகிறார்கள்? மோசடி நடந்தால்தானே சர்க்கார் குறுக்கிடும் என்கிறார்.

மோசடி எங்கு நடந்தாலும் தம்பி! எப்போது நடந்தாலும் குறுக்கிடும் அதிகாரம் சர்க்காருக்கு உண்டு!

சர்க்கார் என்ற அமைப்பு இருப்பதே எந்தத் துறையிலும் மோசடி நடந்திடாமல் தடுக்கவும், மோசடி நடந்துவிட்டால் தண்டிக்கவும்தான்.

இதைத் தேர்தல் அறிக்கையிலே சேர்த்து, இதனைப் புரட்சித் திட்டம் என்று விளம்பரப்படுத்துவானேன்?

தம்பி! பட்டீலின் பேச்சைத்தான் படித்துப் பாரேன்.

The expression Social Control was to be found in the previous Congress manifestos and merely because it was repeated it did not acquire a new meaning. It meant that banking and insurance were institutions of such financial magnitude that it would be only in the case of gross mismanagement and misuse of funds that the Government might step in.

இவ்வளவு பேசியும் விளக்கம் தருகிறார், சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் பாங்குகளை நாட்டுடைமை ஆக்குவது என்ற திட்டத்தைக் கண்டிக்கக் காணோமே, ஒரு சமயம் மனத்திற்குள் அந்தத் திட்டத்தை ஆதரிக்கிறாரோ என்று எங்கே முதலாளிகள் எண்ணிக்கொள்ளுவார்களோ என்று கவலைப்பட்டு பட்டீல், பாங்குகளை நாட்டுடைமையாக்கும் திட்டமே, ஒரு கேலிக் கூத்தான திட்டம் என்று சாடியிருக்கிறார்.

a ridiculous proposition என்றே கூறியிருக்கிறார்.

தம்பி! வேறோர் நாடு தாங்கிக் கொள்ளாது இப்படிப்பட்ட போக்கினை.

ஏழைகளை மயக்க தீவிரமான திட்டம் - ஏட்டில்!

முதலாளிகளிடம் சென்றோ முகத்தைத் துடைத்துவிடுவது!

மிகப் பெரியவர்கள் அங்கு உள்ளவர்கள் என்பதால் முகத்தைத் துடைத்துவிடுவது என்று மட்டுமே கூறுகிறேன்.

நமது பேச்சின் தரம் கெட்டுவிடக்கூடாதே என்பதற்காக இவர்கள் மேற்கொள்ளும் போக்குக்கு ஏற்ற வார்த்தைகளைச் சொல்லாமலிருக்கிறேன்.

திட்டம் என்று ஒன்றைக் காட்டுகிறார்கள். இது முதலாளிக் கோட்டையைத் தகர்த்திடும் வெடிகுண்டு என்று வீரம் பேசுகிறார்கள். பிறகு அவர்களே, அது வெடிகுண்டு அல்ல, வெறும் புஸ்வாணம் என்று எடுத்துக் காட்டுகிறார்கள். ஏன்?

எதைச் சொன்னாலும் கேட்டுத் தீரவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்ற நினைப்பினாலா?

இதுவா மக்களாட்சியின் மாண்பு? இந்த மோசடியா காந்தியாரின் அறநெறி அரசியல்?

தம்பி! பாங்குக்காரர்களையும் செல்வபுரியினரையும் கூட்டி வைத்துப் பேசுகிறாரே பட்டீல். பயம் வேண்டாம், உங்கள் அமைப்புக்கோ ஆதிக்கத்துக்கோ ஆபத்து ஏற்படாது என்று. அவர்கள் எந்த அளவு ஆதிக்கம் இன்று செலுத்துகிறார்கள் தெரியுமா? பொருளாதாரத் துறையில், தொழில் துறையில் திடுக்கிட வைக்கத்தக்க அளவு! ஒரு கணக்குத் தருகிறேன், பார் தம்பி! பாடமும் அறிந்துகொள்.

தொழில் வளர முதல் வேண்டும். "முதல்' யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறதோ அவர்கள் "தொழில் உலகை'த் தம் கரத்தில் கொண்டு வர முடியும். இதற்கு விளக்கம் தேவையில்லை. இந்தப் பொருளாதாரப் பிடிக்குப் பயன்படும் கருவிகள், பாங்குகள்! ஆங்கு உள்ள பணம் எவ்வளவு? பாரேன் கணக்கினை.

1962-ம் ஆண்டு கோடிகள்
பம்பாயில் 442.83
டில்லி 316.11
கல்கத்தா 289.26
சென்னை 63.09

பாங்குகளில் சேர்க்கப்பட்டிருக்கும் "டிபாசிட்டு' பணத்தின் அளவு.

பம்பாயில் 442 கோடி ரூபாய். வளம் கொழித்திடும் விதமாகத் தொழில் அமைச்சர் வெங்கடராமனால் ஆக்கப் பட்டிருக்கிறதாமே தமிழகம், அங்கு பாங்குகளில் உள்ள டிபாசிட்டுத் தொகை 63 கோடி.

442

63 !

இடத்தின் இயல்பு ஒரு புறம் இருக்கட்டும், பிடி எவரிடம் என்பதைக் கவனிப்போம்.

தம்பி! எல்லா பாங்குகளிலும் சேர்ந்துள்ள "டிபாசிட்'' தொகை, 1960-ம் ஆண்டுக் கணக்குப்படி

1550 - கோடி ரூபாய்.

இந்தத் தொகையில் ஐந்தே ஐந்து பாங்குகளில் மட்டும்

625 - கோடி ரூபாய்!

மிச்சத் தொகை நாட்டிலே உள்ள எல்லா பாங்குகளிலும்! இந்த ஐந்து பாங்குகள் எவை?

1. சென்ட்ரல் பாங்க்
2. பாங்க் ஆப் இந்தியா
3. யுனைடெட் கமர்μயல் பாங்க்
4. பரோடா பாங்க்
5. பஞ்சாப் நேஷனல் பாங்க்

பெயர்கள் இருக்கட்டும். நாட்டிலே திரட்டப்படும் டிபாசிட் தொகையில் கிட்டத்தட்ட பாதி - 625 கோடி ரூபாயைக் கைவசம் வைத்துக்கொண்டு, அதன் மூலம் தொழில் உலகில் பிடியை அழுத்திக்கொண்டிருக்கும் இந்த ஐந்து பாங்குகளின் அதிபர்கள் யார்?

சென்டிரல் பாங்க், பாங்க் ஆப் இந்தியா
இவை இரண்டும் டாடாவின் கரத்தில்!

யுனைடெட் கமர்ஷியல் பாங்க், பரோடா பாங்க்
இவை இரண்டும் பிர்லாவின் ஆட்சியில்!

பஞ்சாப் நேஷனல் பாங்க், டால்மியா
ஜெயின் குடையின் கீழ்!

இவ்விதமான பொருளாதாரத்துறை ஆதிக்கத்தைத் தகர்த்திடத்தான், பாங்குகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று முற்போக்காளர் வலியுறுத்துவது.

1962-ம் ஆண்டு, நமது கழகத் தேர்தல் அறிக்கையிலே நாம் இதனை ஆதரித்திருக்கிறோம்.

காங்கிரஸ் அரசும் கட்சியும் இந்த முதலாளிகளுக்குக் கட்டியம் கூறிக்கொண்டும் மக்களிடம் மயக்கமொழி பேசிக் கொண்டும் வருகிறது.

பாங்குகளை சமுதாயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போகிறோம் என்ற பேச்சு, இப்போது யோசித்துப் பார் தம்பி! கதையிலே சீமான் சொல்கிறானே, எல்லாச் சொத்தும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று. அதுபோன்ற விந்தைப் பேச்சா, வேறா?

உனக்கும் எனக்கும் புரிந்திருக்கிறது. பயன்? நாட்டுக்கல்லவா புரியவேண்டும்?

அண்ணன்,

30-10-66