அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)
1

தம்பி!

மன்னனைக் காணப் பலர் வரக்கூடும்; இளவரசர்கள், தளபதி, வணிகர் கோமான்கள், கலைவல்லோர், மார்க்கத் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், இப்படிப் பலர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், மன்னனைக் காண்பது, அவருடன் உரையாடுவது என்பதிலே, ஒவ்வொரு முறை இருக்கும். கொலு மண்டபம், கோட்டை வெளி, விழாமன்றம், களியாட்டக் கூடம், காணாற்றுப் பக்கம் எனும் பல்வேறு அரங்கங்களில், மன்னனுடன் செல்வோர் அல்லது வந்து காண்போர், என்ன முறையில் வரவேற்கப்படுவர், எங்கு இடம் பெறுவர் என்பதற் கெல்லாம், கட்டுத்திட்டம் உண்டு; அது துளியும் கெடாதபடி பார்த்துக்கொள்வார்கள்; கெடவிடின், மன்னன், தன் நிலை அறியாது தடுமாறினான் என்று கேலி பேசுவர், கண்டிக்கக்கூடச் செய்வர்.

ங்கு வர இருக்கும் பிரிட்டிஷ் பேரரசிக்கு மணாளனாக இருப்பவர், வேறோர் நாட்டு அரச குடும்பத்தவர் எனினும், அரசர் அல்ல! பேரரசியுடன் அவர் செல்கிறார், பல நாடுகளுக்கு; பேரரசிக்குக் காட்டப்படும் சில தனிச்சிறப்புகள் இவருக்குக் கிடையாது; பெற இயலாது; கேட்கவும் மாட்டார். நாட்டுக்கு மட்டுமல்ல, நாயகனுக்கும், அவர் பேரரசி!

பேரரசியின் பாராளுமன்றத் துவக்க உரை நிகழ்ந்தபோது, பேரரசியின் தங்கை, அவையில் அரச குடும்பத்தினருக்கு என்றுள்ள இருக்கையில் காணப்படவில்லை. காரணம் என்ன என்று இதழ்கள் விளக்கின. ஒரு இதழ், உண்மையான காரணம், அவர் மட்டும்தான், அரச குடும்பத்தினர் இருக்கையில் அமரலாமேயொழிய, பக்கத்தில் கணவன் அமர முடியாது! ஏனெனில், அவர் அரச குடும்பத்தவர் அல்ல; தனக்கு ஒரு இடம், மணாளனுக்கு மற்றோர் இடம் என்று இருப்பதை விரும்பாத தாலேயே, அரச குமாரி பாராளுமன்ற விழாவில் கலந்து கொள்ளவில்லை, என்று எழுதிற்று. இது இந்த ஆண்டு!

இங்கு வர இருக்கிறாரே எலிசபத் பேரரசி, அவர் புவேட்டை காணப்போகிறார்? காண மட்டுமே! புலிவேட்டை ஆடப்போவதோ பேரரசியின் கணவர்.

தம்பி! பேரரசி, புலிவேட்டை ஆடுவது கூடாது! தரக் குறைவான செயல்! அவர் கணவர், வேட்டை ஆடலாம், அவருக்கு உள்ள நிலையின் அளவு அது! ஏன் இந்த வித்தியாசம் என்று வியப்பாக இருக்கிறதா? இதிலென்ன, தம்பி! வியப்பு? உண்மையாக நீ வியப்புறவேண்டியது எதை அறிந்து தெரியுமா? பேரரசியின் கணவன் பேரரசன் அல்ல; பேரரசனின் மனைவி பேரரசி ஆகலாம்!!

இத்தகைய சில தனிச் சிறப்புகள், இன்றும், அரசர்களுக்கு உள்ளன; மக்களும், இந்தச் சிறப்புகளைத் தருவதிலே தயக்கம் காட்டுவதில்லை; மன்னன் உலா, விழாபோல் இருக்கலாம் என்கின்றனர் மக்கள்; விழாவில் களிப்புப் பெறுகின்றனர்! மன்னன், கண்ணைக் கவரும் வனப்பு அளித்திடும் அணிமணி பூண்டிடலாம், மக்கள் அதனை அனுமதிக்கின்றனர்! கண்டு அகமகிழ்கின்றனர்; ஆனால் மன்னன், ஆட்சிப் பொறுப்பு அத்தனையும் வேண்டுமென்று கேட்டாலோ மறுக்கின்றனர்; உமக்கு எது நல்லது என்பது எமக்கன்றோ தெரியும் என்று மன்னன் பேசிடின், அதனை மமதை என்கின்றனர் மக்கள்!!

பிடி யாராரிடமோ உள்ளது, முடிமட்டும் நம் தலையில்! அரசன் என்று விருது இருக்கிறது, ஆட்சியோ நம் விருப்பப்படி இல்லை! அரண்மனை இருக்கிறது பெரிதாக; ஆனால் அது சிங்காரச் சிறைக்கூடம் போலாக்கப்படுகிறது! இந்நிலையில், அரசர்க்கான உடையும் முடியும் வெறும் சுமையாகிறது. பொன்னால் சமைக்கப்பட்டு நவமணிகள் இழைக்கப்பட்ட, "சிம்மாசனம்' எந்தச் சமயத்திலும் கடித்திடத் தயாராக இருக்கும் "சர்ப்பாசனம்' போலாகிறது! இந்த நிலையில், மன்னன் என்று இருப்பதைவிடக் குடிமகனாக இருப்பது மேல்! மன்னன் குடிமகனை, எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற முறை முறிந்து போய்விட்டது. குடிமகன், இன்று மன்னனை, எப்படி எப்படிக் காணவேண்டும் என்று எண்ணுகிறானோ, அதுபோல் ஆக்கிவிட முடிகிறது. இந்நிலையில், குடிமகனாக இருப்பது கோலேந்தியாக இருப்பதைக் காட்டிலும், எத்துணையோ மடங்கு மேலானது, என்று எண்ணிக்கிடந்திடும், மன்னர்களும் உளர்.

இவ்விதமான எண்ணம்கொண்ட மன்னனைத்தான் தம்பி! நாம் காணப் புறப்பட்டோம்.

அதோ பார்! ஏறு நடை! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக் கூடியவர் என்பதை எடுத்துக் காட்டிடும் பார்வை, கண்டவர் தன் நிலை உயர்ந்தது என்பதை அறிய வேண்டும் என்ற நோக்குடன், உடை அலங்காரம். ஆதிக்கக்காரருக்கு அடி பணிபவன் நான் அல்ல; நான் புரட்சி நோக்குடையவன் என்பதை எடுத்துக்காட்டும், சிகப்பு அங்கி. இவர் ஓர் அமைச்சர்! புதிதாக அமைச்சரானவர்!

அமைச்சரானேன், என்றார் இவர்.

அமைச்சர் ஆக்கினேன் என்பார், முதலமைச்சர்.

இவர், வணிகக் கோட்டத் துறைக்குத் தலைமை ஏற்றிருக்கும் அமைச்சர். பேரறிஞர் பெர்னாட்ஷா இந்த அமைச்சருக்கு போனார்ஜிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்.

தம்பி! நான், நமது வசதிக்காக, இந்த அமைச்சரை, புயலார் என்று அழைக்கிறேன். இந்த அமைச்சர், தமது அறிவாற்றலால், புரட்சிப் போக்கினால், முடி அரசு முறையையே வீழ்த்தத்தக்க புயல் கிளப்பு விடுவதாக எண்ணுபவர்; எனவே இவருக்குப் புயலார் எனும் பெயர் ஒருவகையிலே பொருத்தமானதுங்கூட.

அமைச்சர் அவையில் இடம் பெறுமுன், இவர், பொறி பறக்கப் பேசியும், புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டியும், ஆட்சி முறையிலே மதமதப்பு ஏற்பட்டு விட்டது என்று கடிந்துரைத்தும், மன்னராட்சி முறை உள்ளமட்டும் மக்களாட்சி மலராது என்று விளக்கியும், முடிதரிப்போரே இருத்தல் ஆகாது, முழுக்க முழுக்க குடிஅரசு ஏற்பட்டாக வேண்டும் என்று முழக்கமிட்டும், "பெரிய புள்ளி' ஆனவர்;"புயலார்'' ஆனவர்!

அவருக்கு அமைச்சர் அவையில் இடம் தரப்பட்டது.

புதிய அமைச்சர் மன்னனைக் காண வருகிறார்.

மன்னனைக் காண வந்திருக்கிறேன் - என்று புயலார் கூறிடும் போது, அச்சொல் கேட்டதும் அலுவலர்கள் அஞ்சி நடுநடுங்கி, ஐயனே! அமருவீர்! இதோ அரைநொடியில் அரசனை அழைத்து வருகிறோம் - என்று கூறிவிட்டு ஓடோடிச் சென்று, அரசனை அழைத்து வருவர், என்று எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். ஏனெனில், மன்னர்களைப் பேட்டிக் காணச் செல்வது பேதைமை என்றும், மக்களின் தலைவர்களை மன்னர்கள் காத்திருக்கச் செய்வது கொடுமை என்றும், அந்த முறையை வாழவிடுவது மடைமை என்றும், சந்தைத் திடலில், அவர், எத்தனையோ முறை முழக்கமிட்டிருப்பார். அப்படிப் பட்டவர், அமைச்சர் என்ற நிலையைப் பெற்று மன்னனைக் காண வந்திருக்கிறார் - மதியிலிகள், அவரை ஊர் என்ன? பேர் என்ன? உற்ற குறை யாது? என்று கேட்கிறார்கள்? - அவ்விதம் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டதால்!! புயலார் கோபம் கொள்ளா மலிருந்திருக்க முடியுமா?

கேட்பதென்ன! வந்தது மன்னனைக் காண - காணச் செல்வோம்!! - என்று எண்ணிக் கொண்டார் போலிருக்கிறது, உள்ளே நுழைந்தார், மன்னனுக்கு அனுப்பப் படும் மடல்களைக் கவனிக்கும் அலுவலர் இருவர் கண்டனர்; அவர்களில் ஒருவன், வந்தவர் யார் எனக் கண்டுகொண்டான். அவர் போக்கும் நோக்கும் தெரிந்தவன் என்ற முறையில் பேசினான்.

"வருக! அமைச்சரே! வருக! தாங்கள் அமைச்சரான தற்காகத் தங்களை நான் வாழ்த்துகிறேன். . . இல்லை, இல்லை தங்களைப் பெற்றதற்காக அமைச்சர் அவையை வாழ்த்துகிறேன்!''

பொல்லாதவன் இந்த இளைஞன். முடி அரசனோ, குடி அரசுக் கொள்கையுடையோனோ, எவனாயினும், புகழ்மொழி கேட்டால் மயங்கிப் போவர், என்ற உண்மையை உணர்ந்து, புயலாரிடமே, அந்த வித்தையை காட்டுகிறான். மன்னர்களா கிலும், பலருடைய புகழுரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருப்பர்! எனவே அவர்கள், தம்மைப் புகழ்பவர்களின் எண்ணிக்கை வளர வளர, ஓரளவு சலிப்புணர்ச்சிகூடக் கொள்ளக்கூடும். புயலார் போன்றவர்கள் அவ்விதம் அல்லவே! அங்காடியிலும், ஆற்றோரத் திடலிலும், முச்சந்தியிலும், மன்றங்களிலும், பாராட்டுரைகளைப் பெற்றிருப்பர். இது அரண்மனை! எந்த அரண்மனையைச் சுட்டிக் காட்டி, ஆணவம் குடிகொண்ட இடம்! அக்கிரமம் கொலு இருக்கும் இடம்! என்றெல்லாம் கண்டித்துப் பேசி இருக்கிறானோ, அதே அரண்மனை, அங்கு அவன் நுழைகிறான், மன்னனைக் காண, அமைச்சர் என்ற நிலை பெற்று! அந்த இடத்தில், தன்னைப் புகழ்கிறார்கள் என்றால், உச்சி குளிர்ந்திடத்தானே செய்யும்.

மன்னர்! என்று இளைஞர்களில் ஒருவன் அறிவிக்கிறான்.

உட்கார்ந்திருக்கும் புயலார், இருக்கையில் இருந்தபடியே, கதவுப்பக்கம் திரும்பிப் பார்க்கிறார் - எழுந்திருக்கவில்லை.

மன்னன் வருகிறார் என்ற உடன், எழுந்து நின்றால், செ! தன்மானத்தை, இழந்துவிடும் செயலாகி விடாதா! ஓ! பயல், நம்மைக் கண்டதும் மரியாதை காட்டுகிறான் என்று மன்னன் எண்ணிக் கொண்டு விடுவானே! நாடு, நமது கட்டளைக்காகக் காத்துக்கிடக்கிறது; நமது அறிவாற்றலால் இந்த அரசையே ஆட்டிப் படைக்கிறது - அப்படிப்பட்ட நாம், கேவலம் ஒரு முடிதாங்கியைக் கண்டு எழுந்து நிற்பதா? கூடாது. கூடவே கூடாது. நாம் உட்கார்ந்தபடி இருந்தால்தான் நமது நிலையின் உயர்வு தெரியும், தரம் புரியும், குடிஅரசுக் கோட்பாட்டுக்கு ஏற்றம் ஏற்படும், என்றெல்லாம் புயலார் எண்ணிக்கொண்டிருந்திருக்கக்கூடும்.

நாற்பத்தைந்து வயதிருக்கும் மன்னனுக்கு; நல்ல உயரம்; அறிவாளி என்பதைக் காட்டிடும் தோற்றம். கனிவுடன், கரங்களை நீட்டியபடி, புயலாரை நோக்கி வருகிறார்.

மன்:- என் சிறிய அரண்மனைக்கு வந்திருக்கிறீர் - நல் வரவேற்பு.

புயலாரே! அமருங்களேன்!! (மன்னன், அமைச்சருக்குத் தர வேண்டிய உரிய மதிப்பைத் தரவேண்டி, வரவேற்பு கூறுகிறான். மன்னனைக் காண வருபவர்கள், மன்னனைக் கண்டதும் எழுந்து நிற்பது வாடிக்கை யாக இருந்துவரும் மரியாதை முறை; அங்ஙனம் நிற்பவரை, அமருக! என்று அன்புடன் மன்னன் கூறுவதும் மரியாதை முறைகளிலே ஒன்று.

மன்னன், தனக்கென்று இருந்துவரும் மரியாதை முறைப்படி, அமைச்சரை வரவேற்றபடி, அமருக! என்று கூறினார். அமைச்சர் தான், வழக்கமான மரியாதை முறையைக் கையாள்வது தன் நிலைமையைக் குறைத்துவிடும், தாழ்வு மனப் பான்மையைக் காட்டும் என்று கருதி, எழுந்திருக்கவே இல்லையே, அதைக் கவனித்துவிட்டதாகக் கூட, மன்னன் காட்டிக் கொள்ளவில்லை. வழக்கமான மரியாதை முறை இருப்பதுபோலவே கருதிக்கொண்டு, அமருக! என்கிறார்.)

அமை: நான் அமர்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.

மன்: உண்மை, புயலாரே! நான் அதைக் கவனிக்கவில்லை. மன்னித்துக்கொள்க! அமருக! என்று கூறிவிட்டேன்!! பழக்கம் அப்படி!

(தம்பி! மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை எடுத்துக் காட்ட இந்த ஒரு பேச்சுப்போதும் என்று கூறலாம்.)

தேவையற்ற திமிர் என்றுதான், தெளிவுள்ள எவரும் கூறுவர், சாதாரண, வழக்கமான, மரியாதையை காட்டக்கூட மறுத்திட்ட, அமைச்சரின் போக்கை.

ஆனால், அதைக் கண்டும், காணாதது போலிருந்து விட்டது மன்னனுடைய பெருந்தன்மையை மட்டுமல்ல, அவனுக்கு உள்ள "எடைபோடும்' திறமையையும் நன்கு காட்டுகிறது.

ஆணவம் தலைக்கேறிவிட்ட நிலை இவனுக்கு; எனவே தான், கஷ்டமோ நஷ்டமோ தராத, மிக மிகச் சாதாரணமான மரியாதை முறையைக்கூடக் கைக்கொள்ளாதிருக்கிறான். இத்தனை முடுக்கும், முறிவுக்குத்தான் வழி அமைக்கும்!

இவன், கொந்தளிக்கும் உள்ளம் கொண்டவனேயொழிய, நின்று நிதானித்து, காரியமாற்றி, நீங்காப் புகழ் பெறும் வாய்ப்பினைத் தேடிக்கொள்பவனல்ல. எனவே இவன், நாம், கவனிக்கத்தக்க பகைவன் அல்ல! என்றுதான், மன்னன் எண்ணிக் கொண்டிருப்பான்.

அமருக! என்று கூறினேன், அட அறிவிலி! மன்னர்கள் அங்ஙனம் கூறுவது முறை! அதற்குப் பிறகு அமருவதே, பழக்கமாக இருந்து வருகிறது! என்று, மன்னன் கடிந்துரைக்க வில்லை. மாறாக, "மன்னித்தருள்க, பழக்கத்தால் அங்ஙனம் கூறிவிட்டேன்' என்று பேசினான்.

இங்கு அனேகர் வருகின்றனர், புயலாரே! அவர்கள் நான் நின்றுகொண்டிருக்கும்போது அமர்ந்து கொண்டிருக்க மாட்டார்கள் - அது பண்பு அல்ல என்பதால்! அவர்கள் நின்று கொண்டிருக்க, நான் அமருவதும், பண்பு அல்ல! எனவேதான், நான், அமருக! என்று கூறுவது வழக்கம். இங்கு எப்போதும் போலத்தான், முறை தெரிந்தவர்கள், மரியாதை அறிந்தவர்கள், பண்பு புரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டு வந்தேன். அவ்விதம் நான் எண்ணிக்கொண்ட தால்தான், வந்தவர் நின்றுகொண்டுதானே இருப்பார் என்ற நினைப்பில், அமருக! என்றேன். பண்புடன் நடந்துகொள் வோருக்கு, நான் காட்டும் மரியாதை அது. தேவையில்லை என்பதை அறியாது போனேன் - அமருக! என்று கூறியதற்காக மன்னித்திடுக! - என்றன்றோ, கூறுகிறான் கொற்றவன்!!)

இதற்குள், அலுவலர், ஓர் நாற்காலியை, புயலாருக்குப் பக்கத்தில் போடுகிறார் - மன்னன் காட்டிய குறி கண்டு.

பண்பற்று நீ நடந்து கொண்டாலும், நான் அங்ஙனம் நடந்து கொள்ளமாட்டேன், என்று இடித்துரைப்பதுபோல, மன்னன், புயலாரைப் பார்த்து,

"என்னை உட்கார அனுமதிக்கிறீர்களா?'' - என்று கேட்கிறார்.

மன்னன் பாடம் புகட்டக் கையாண்ட நேர்த்தியான இந்த முறை, அமைச்சர் புயலாருக்கு, புரிந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு இருந்த எண்ணமெல்லாம், ஒருவன் மன்னன் என்பதற்காக, நான் ஒரு தனி மரியாதையும் காட்டி, என்னைத் தாழ்த்திக் கொள்ளமாட்டேன் என்பதுதான். எனவே அமைச்சர்,

"அட உட்கார் ஐயா! உட்கார்! உன் வீட்டில்தானே நீ இருக்கிறாய்.

எனக்கு இந்தச் சம்பிரதாய உபசார முறைகள் கட்டோடு பிடிக்காது.''
என்றுதான் பேச முடிகிறது.

மன்னனைக் காணச் சென்றேன்! நானென்ன, மற்ற மற்றவர்களைப் போல நோஞ்சானா!! பல்லிளிக்கும் பேர் வழியா! மன்னன் அவன் என்றால், நான் மக்களின் தலைவன்! மன்னர் களின் மணி முடியைப் பறித்தெடுத்துப் பந்தாடக்கூட உரிமையும் வலிமையும் பெற்றவன். வந்தான் மன்னன், அவனிடம் கூலி வாங்கிக்கொண்டு கிடக்கும் பயல்கள், மன்னர்! மன்னர்! என்று பயபக்தியுடன் கூடினர். அந்தச் சொல்லைக் கேட்ட உடனே, நான் நடுநடுங்கிப்போவேன், கூப்பிய கரத்துடன் நிற்பேன் என்று எண்ணிக் கொண்டார்கள் போலிருக்கிறது. நானா, என்னைவிட ஒருவன் மேலானவன் என்பதை ஏற்றுக்கொள்வேன். என் வீரதீரம் எத்தகையது! அறிவாற்றல் எத்துணைச் சிறப்பானது! நான் மக்கள் தலைவன்! இவன் மன்னன்! இவனைக் கண்டு நான் எழுந்திருக்கவில்லை, உட்கார்ந்தபடியேதான் இருந்தேன். மன்னன் திருதிருவென்று விழித்தான். கோபம் கொண்டு ஏதாகிலும் கேட்பான், செம்மையாகக் கொடுக்கலாம் என்று இருந்தேன். கோழை, வாயைத் திறந்தானில்லை. குழைந்து குழைந்து பேசினான் - என்று பொறிபறக்கப் பேசிடுவார், நமது மாசற்ற தலைவர் என்று புகழ் பாடிடும் கூட்டத்தினர் முன்பு புயலார். அவ்வளவே! வேறு உருவான, சுவையான, பயன்தரும் விளைவு எதுவும் ஏற்படாது, பண்பு மறந்த அந்தச் செயலால், மன்னன் "எடைபோட்டு' இதனை அறிந்து கொண்டான்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தாங்கள் தேர்தலில் ஈடுபட்டீர்களே, அப்போதிருந்தே நான் தங்கள் அரசியல் வாழ்க்கையைக் கவனித்து வந்திருக்கிறேன். இப்போது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது.

காரணமற்ற மண்டைக்கனம் காட்டும் இந்த அமைச்சன், இரண்டொரு புகழுரைகளைப் பெற்றாலே, புத்தி தடுமாறி நிற்பான் என்பதைப் புரிந்துகொண்டு மட்டும், மன்னன் இதுபோலப் பேசினார் என்று கொள்வதற்கில்லை.