அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)
2

அரசுகளை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவனே, நான் உன் போன்றோர்களின் நடவடிக்கைகளை அறிந்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஏதுமறியாதவன் என்று என்னை எண்ணிக்கொள்ளாதே. முடிதாங்கியாக மட்டுமே இருக்கிறேன் என்று எண்ணி விடாதே. நான் நாட்டிலே கிளம்பிடும் நானாவிதமான சுழல்களையும் கூர்ந்து கவனித்தவண்ணம் இருக்கிறேன் - எனவே, நிலைமையை அறிந்து நடந்து கொள்ளக்கூடியவன், அப்படிப்பட்ட என்னை வீழ்த்துவது எளிதான செயலல்ல என்பதைத் தெரிந்துகொள் - என்று கூறாமற் கூறுகிறான் மன்னன்!

இன்று அமைச்சனாகி அரண்மனைக்கு வந்திருக்கிறாய், என்னைக் காண! என்னைக் காண வந்திருக்கும்போதே, என்னை அவமானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு, உன் சிறுமைக் குணத்தைத்தான் காட்டிவிட்டாய். இந்த அளவு உயர, இந்த நிலைபெற, இந்த இடம் பிடிக்க, நீ எத்தனை ஆண்டுகளாகப் பாடுபட்டு வந்திருக்கிறாய், என்னென்ன கரணம், எத்துணை "கூட்டு' - யாராருடைய "தயவு' - இவைகளைத் துணை கொண்டு, வளர்ந்திருக்கிறாய். இந்த வளர்ச்சியைக் காண, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் உழன்று வந்திருக்கிறாய் - தெரியும் - எனக்கு!! - என்று கேலிக் கசையடி அல்லவா தருகிறான் காவலன். இந்த உட்கருத்தினை அமைச்சர் கவனித்ததாகத் தெரியவில்லை; மன்னன், இருபத்தைந்து ஆண்டுகளாகவே, தன்னைக் கவனித்து வந்திருப்பதாகக் கூறினார். அவ்வளவு பெருமதிப்பு நம்மிடம் மன்னருக்கு! நம்முடைய தரத்தையும் திறத்தையும் மன்னர் போற்றுகிறார்! - என்று மட்டுமே எண்ணிக் கொள்ள முடிகிறது அமைச்சனால். அவ்வளவுதான் முடிகிறது, மகிழ்ச்சியுடன், தன் பெருமையைத் தம்பட்டமடித்துக் கொள்கிறான்.

"ஆமாம் அரசே! கவனித்திருப்பீர், இரண்டொரு முறையாவது, நான் உங்களை உலுக்கிவிட்டிருப்பேன், அல்லவா!''

என்று கூறுகிறான். புரட்சிவீரன்! அவன் சொல், மன்னனை உலுக்கிவிட்டதாம்!

புன்னகை புரிகிறான் மன்னன். புகழ்மொழி, இந்த புரட்சி வீரனை பூப்பந்தாக்கிவிடும் என்பது மன்னனுக்கு விளங்கி விடுகிறது. அதே வழியில், அவனை இழுத்துச் செல்ல விரும்புகிறான். உலுக்கிவிட்டிருக்கிறேன் என்று மட்டும்தானே கூறினான் அமைச்சன்; அரசன் மேலும் ஒருபடி சென்று.

"தங்கள் முழக்கம், என் சிம்மாசனத்தையே பலமுறை ஆடச் செய்து விட்டிருக்கிறதே!''

என்று கூறுகிறான். இந்தப் புகழ்மொழி, அமைச்சருக்கு போதை ஏறச் செய்துவிடுகிறது. மன்னனிடம் தனித்திருந்து பேச வேண்டும்; மனம் விட்டுப் பேச வேண்டும்; இவன் சாதாரண மன்னன் அல்ல; நமது ஆற்றலை அறிந்திருக்கிறான்; நமது தாக்கும் சக்தி இவனுக்குப் புரிந்து விட்டிருக்கிறது; இவனிடம் நாம் மிகத் தாராளமாகப் பேசலாம் - என்றெல்லாம் தோன்றுகிறது. அலுவலர் இருவர் ஆங்கு இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

"இவர்கள் இருவர் இங்கு உளர்! நாம் பேசுவதை எல்லாம் இவர்கள் கேட்டுக் கொண்டு இருப்பதா?''

என்று கேட்கிறார் அமைச்சர்.

அமைச்சர் புயலார், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாட்டுக்காரர்! எனினும், அவர், மன்னனுடன் தனித்திருந்து அரசியல் விஷயம் பேச வேண்டும் தவிர, கண்ட வர்களின் முன்பு பேசுவது முறையல்ல, என்று எண்ணுகிறார்.

அவருடைய "ஜனநாயகம்' எல்லோருக்கும், அல்ல! மன்னன் தன் மதிப்பை அறிந்து, தன்னிடம் அரசியல் விஷயமாகக் கலந்து பேசும் அளவுக்கு இருந்தால் போதும், என்று இருக்கிறது.

நாடாளும் மன்னன், அவனை எதிர்த்திடும் மக்கள் தலைவன், இந்த இருவர் கூடிப் பேசி நடத்துவதே ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று, எண்ணுகிறார்.

மன்னன் ஜனநாயகவாதியாகிறார் - அவர்கள் இருப்பதால் தவறு ஏதும் ஏற்பட்டுவிடாது என்கிறார். பிறகு உரையாடல் நடைபெறுகிறது.

அமை: இதுவரை மன்னர்கள்முன் எவரும் சொல்லிடாத விஷயங்களை நான் இப்போது சொல்லப் போகிறேன் என்பதை உணருகிறீரா?

மன்: மகிழ்ச்சி அமைச்சரே! மன்னர்களிடம் என்னென்ன சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லியாகி விட்டதாகத் தான் நான் கருதுகிறேன். ஏதேனும் சிறு அளவு புதுமை இருப்பினும், மகிழ்ச்சி!

அமை: எச்சரிக்கிறேன் மன்னரே! தித்திப்புச் பேச்சல்ல! நான் வெளிப்படையாகப் பேசுபவன்.

மன்: தாங்களா? இல்லை! இல்லை! தாங்கள் ஒரு புதிர்! எப்போதுமே எனக்குத் தாங்கள் ஒரு புதிராகவே இருந்து வருகிறீர்.

தம்பி! இந்தப் பேச்சு, அமைச்சருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தன் சொல், செயல், இவற்றின் உட்பொருள், வலிவு, விளைவு இவைகளைப் பிறர் அறிந்து கொள்ளவே இயலாது, புதிர்போல் இருக்கும் தனது நடவடிக்கை. இன்னதுதான் என்று அறியாமல், எவரும் ஏமாந்து போவர், வீழ்ந்துபோவர், என்று அமைச்சருக்கு உள்ளூற ஒரு எண்ணம். அடே, அப்பா! அவன் எமகாதகப் பேர்வழி திட்டம் என்ன போடுகிறான், வழி என்ன தேடுகிறான் என்று கண்டு பிடிக்கவே முடியாதே! கடலாழம் காணலாம், இவன் கருத்தாழம் காண இயலாது எவராலும். இவன் ஓர் நடமாடும் புதிர்! என்று தன்னைப் பற்றி எவரும் பேச வேண்டும் - புகழிலே இதற்கு நிகர் வேறு இல்லை - என்ற எண்ணம், இந்த அமைச்சருக்கு என்பதைக் கண்டுகொண்டுதான், மன்னன், அந்த நரம்பைத் தொட்டான். அமைச்சருக்கு அளவற்ற திருப்தி - மகிழ்ச்சி - புன்னகையை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை - ஏன் இந்தப் புகழ்மொழி! அப்படி எல்லாம் இல்லை! நான் சாதாரணம் - சாமான்யன் - புதிர் அல்ல - என்று கூற இயலவில்லை.

"ஆமாம் - ஒரு விதத்தில் உண்மைதான். நான் ஒரு புதிர்தான்!''

என்று தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறான், மன்னன், உள்ளூறச் சிரித்திருப்பான்!

"புதிர்போலிருக்கும் உம்மைப் புரிந்துகொள்ள முடிய வில்லை - முயற்சித்தும். விளக்கமாகப் பேசும் அமைச்சரே!''

"ஆம்! வெளிப்படையாகத்தான் பேச வந்திருக்கிறேன். முதலிலே இதை அறிந்துகொள்ளும், இந்த நாட்டை நீர் அல்ல, உமது அமைச்சர்கள் ஆள வேண்டும்.''

"கடினமான ஆட்சிப் பொறுப்பை அமைச்சர்கள் என் கரத்திலிருந்து எடுத்துக்கொண்டு பார்த்துக்கொள்வதற்கு நான் அவர்களுக்கு நன்றி கூறுவேன்.''

"உம் கரத்தில் இருப்பதாகச் சொல்வது தவறு. உமது அமைச்சர்களின் கரத்தில் ஆட்சிப் பொறுப்பு இருக்கிறது. கட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் காவலன், நீர்! தெரிகிறதா? பெல்ஜியத்தில் இந்த முறையை என்ன பெயரிட்டுச் சொல்கிறார்கள் தெரியுமா?''

"ரப்பர் ஸ்டாம்ப்? மந்திரி கை முத்திரை'' என்பார்கள்!

"ஆமாம் மன்னவா! ஒரு ரப்பர் ஸ்டாம்புதான். அப்படித்தான் நீர் இருந்தாகவேண்டும்.''

"ஆமாம், நாம் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறோம்.''

"அதென்ன, "நாம்' என்கிறீர்? என்ன பொருள்?

"நம்மிடம் காகிதங்களைக் கொண்டு வருகிறார்கள். கை எழுத்திடுகிறோம். அவைகளைப் படிக்க அமைச்சர்களாகிய உமக்கு நேரம் இல்லை. அது நல்லது. ஆனால், நான் எல்லா வற்றையும் படித்தாகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, சரியோ தவறோ கையொப்பமிடவேண்டும். குற்றமற்றவர்களுக்குக் கூடத் தண்டனை தரப்பட்டிருக்கும்; நான் கையொப்பமிட வேண்டும். தூக்குத் தண்டனை தரவேண்டிய குற்றம் செய்திருப்பார்கள் சிலர், தண்டனை தர எனக்கு அதிகாரம் இல்லை.''

"ஓஹோ கொண்டுவா அவனுடைய தலையை என்று கொக்கரித்த காலம் திரும்பிவரவேண்டும் என்கிறீரா?''

தம்பி! உரையாடலின்போதே, மன்னன், அமைச்சரின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொள்கிறான்.

அமைச்சரே! நான் மன்னனாக இருப்பதிலே ஒரு பிரமாதமும் இல்லை. அரச குடும்பத்தவன், அரசன் ஆனேன், மற்ற வாரிசுகள் செத்ததால். ஆனால் உங்கள் பெருமையே பெருமை. சாமான்யக் குடும்பம்! வறுமை சூழ்ந்த இளமை! உழைப்பாலும், அறிவுத் திறத்தாலும் உயர்ந்து, நாடாளும் அமைச்சரானீர்! மன்னனாக இருக்கிறேன், என்ன பலன்? குடிஅரசுத் தலைவராக இருப்பின், எவ்வளவு நிரம்பிய அதிகாரம் கிடைக்கும்! தாங்களே அப்படி, குடிஅரசுத் தலைவராகப் போவதாகவும் கூறுகிறார்கள் - என்று மன்னன் தேன் துளிகளாக்குகிறான் வார்த்தைகளை. சுவைத்து இன்புறுகிறார் அமைச்சர்.

"அதென்ன குடிஅரசுத் தலைவரானால் வலிவும் பொலிவும் அதிகம் என்கிறீர்! அப்படியானால் மன்னனாக இருப்பதைவிட குடிஅரசுத் தலைவராவதைத்தானா மேலானது என்று கருதி விரும்புகிறீர்.'' - என்று கேட்கிறார் அமைச்சர்.

அப்படிச் சொல்வதற்கில்லை. அரசனாக இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லையே தவிர, அவர்கள் அரசராக இருக்கும் போது, பாதுகாப்பு நிரம்ப இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தலைவர்களாக வருகிறவர்களுக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை. போற்றுகிற மக்களே தூற்றுக் கீழே இறக்கி விடலாம். போட்டி ஏற்பட்டுத் தலைமைப் பதவி போய்விடலாம். வேறு ஒரு தலைவன் தோன்றி, அதிக தீவிரம் பேசி, மக்களைத் தன் பக்கம் அழைத்துக் கொள்ளலாம். அப்போது பழைய தலைவர் பாடு ஆபத்தாகிப் போகும். மன்னன் என்றால் அந்த ஆபத்து இல்லை. நிம்மதி இருக்கும். பாதுகாப்பு இருக்கும். அதிகாரம் இருக்காது, பரவாயில்லை; ஆபத்தும் இல்லை அல்லவா?

மன்னன், எடுத்துக் காட்டியது, மறுக்க முடியாத உண்மை என்பது அமைச்சருக்குப் புரிகிறது! புரிகிற காரணத்தாலேயே அச்சமும் ஏற்படுகிறது.

ஜனநாயக முறையிலே ஈடுபட்டுத் தலைவர்களாக, அமைச்சர்களாக உயர்ந்துவிடுவதாலேயே, மண்டைக் கனம் கொண்டுவிடாதீர்கள். ஆபத்து எந்த நேரத்திலும் உமது பதவிக்கு, செல்வாக்குக்கு, தலைமைக்கு ஏற்படலாம்! மக்களின் மனம் மாறிவிடக்கூடும் - வீழ்ச்சி ஏற்பட்டுவிடும். எனவே அமைச்சர் என்ற நிலை கிடைத்ததும், இந்த உயர் இடம் என்றென்றைக்கும் இருக்கும், நம்மை மிஞ்சுவார் இல்லை, என்று எண்ணி இறுமாப்பு அடையாதீர். தலைக்கு மேல் ஆபத்து இருக்கிறது. அதைத் தெரிந்து, இந்தப் பதவி நிலையில்லாதது, இந்தச் செல்வாக்கு சரிந்து போகக் கூடியது என்பதை உணர்ந்து, பக்குவமாக பண்போடு நடந்துகொள்வதுதான் அறிவுடைமை - என்று மன்னன், இலைமறைகாய் முறையில் எடுத்துக் கூறுகிறான்.

நுழைந்தபோது இருந்த முடுக்கு, வெகுவாகக் குறைந்து தானே போகும், மறுக்கமுடியாத உண்மையினை மன்னன் எடுத்துச் சொன்ன பிறகு.

மன்னன் மகள் அங்கு வருகிறாள். மன்னன் வந்தபோது மரியாதை காட்டுவது வலிவற்ற தன்மையைக் காட்டுவதாகும் என்று எண்ணி, எழுந்து நிற்காதிருந்த அமைச்சர், மன்னன் தன் மகளை அறிமுகப்படுத்தியபோது, முகமலர்ச்சியுடன், எழுந்திருந்து, கனிவுடன் கை குலுக்குகிறான் அரசகுமாரியுடன். அரசகுமாரி, அவன் ஆடையைக்கூட, சரியில்லை என்று சுட்டிக் காட்டிக் கேலி செய்கிறாள். ஒரு விநாடி, அமைச்சருக்கு, "சூடு' பிறக்கிறது. இது உழைப்பாளியின் உடை அரசகுமாரி! உத்தமரின் உடை! இதை அணிந்துகொள்வதிலே நான் பெருமை கொள்கிறேன்! - என்று முழக்கம் எழுப்புகிறான். அரசகுமாரி வாதாடவில்லை.

அதெல்லாம் சரி, அப்படித்தான் சொல்லக் கேட்டிருக் கிறேன். ஆனால், உமக்கு உடை ஒத்துவரவில்லை. உம்மைப் பார்த்த உடனே, எவரும் சொல்லிவிடுவார்களே, ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் இவர் என்று. உமக்கு ஏன், உழைப்பாளி உடை?

அரசகுமாரி, இவ்விதம் பேசக் கேட்டு அமைச்சருக்குக் கோபம் வரவில்லை.

ஒருவிதத்தில் தாங்கள் சொல்வது சரிதான். என்று குழைந்து பேசத்தான் முடிகிறது.

மன்னன், மகளை அழைத்துக்கொண்டு செல்கிறான், மற்றோர் சமயம் பேசலாம் என்று அமைச்சரிடம் கூறிவிட்டு.

அமைச்சர், சென்று வருக! என்று மரியாதையாகக் கூறுகிறார்.

அவர்கள் சென்ற பிறகு, அலுவலரிடம், அமைச்சர்.

"என்னதான் சொல்லு, மன்னன், மதியிலி அல்ல'' என்று கூறுகிறான்.

மிரட்ட வந்தான் மன்னனை; மன்னன், அந்த அமைச்சரை மயக்கிவிட்டான்.

ஆணவமாக நடந்து அரசனை அவமதிக்கவேண்டும் என்று திட்டமிட்டு நடந்து கொண்டான் அமைச்சன்; இரண்டொரு உண்மைகளைக் கூறியும், உச்சி குளிரும்படி சில புகழுரை பேசியும், தாக்க வந்த அமைச்சனைத் தழதழத்த குரலிற் பேசுவோனாக்கிவிட்டான், மன்னன்.

மன்னன் மதிமிக்கவன்; மன்னராட்சியுடன் இணைந்த மக்களாட்சியில் இடம் பெற்ற அமைச்சனோ, மண்டைக் கனத்தை மட்டுமே நம்பிக் கிடந்தான். பிறகு? என்று கேட்கிறாய் தம்பி!

எனக்கு இந்த "ராஜா'' வேலை வேண்டாம்; விலகிவிடப் போகிறேன் - என்று மன்னன் கூறுகிறான். இந்த அமைச்சர் மட்டுமல்ல, முதலமைச்சர் உட்பட அமைச்சர் அவையே கூடி, மன்னனை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறது, மன்னா! மன்னனாகவே வீற்றிருக்கவேண்டுகிறோம்!! - என்று.

மன்னன் என்ன செய்தான் மேலால் என்று அறிய வேண்டுகிறாய். ஆகட்டும் தம்பி!

அண்ணன்,

20-11-1960