அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)
1

தம்பி!

நினைவிலிருக்கிறதல்லவா, குடிஅரசுக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்ட மன்னன் - முடிஅரசு முறையின் மூலத்தைக் கிள்ளி எறியத் தேவையில்லை. அதனை ஓர் சின்னமாக, அணியாக வைத்துக் கொண்டு, மக்களாட்சியை நடாத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையுடன் நாடாளும் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட அமைச்சர்கள், அவர்களில் ஒருவனை, மன்னன் தித்திப்புப் பேச்சுமூலமே, தீர்த்துக் கட்டிவிட முனைந்த கட்டம்! எதிர்த்துப் பேசச்சென்று, இளித்துவிட்டுத் திரும்பிய அவன் போக்கு - இதனைக் கண்டோம்.

மன்னன் முடிதரித்த - சிரம் கொண்டோன் மட்டுமல்ல; மனதிலே திடம், பேச்சிலே திறம், நடவடிக்கையிலே உறுதி, இவையெல்லாம் கொண்டவன். எனின், அவன் ஏன், மன்னனாக இரேன் என்று கூறினான் என்றன்றோ கேட்கிறாய்! அது, அவன் கையாண்ட முறை! மன்னனைப் பொம்மையாக்கி வைத்துக் கொண்ட பிறகும், மனக்கொதிப்புத் தீராமல், அடியோடு ஒழித்துக் கட்டிவிட்டு, பீடத்தை வெற்றிடமாக்கி விட்டால் மட்டுமே, எல்லோரும் இந்நாட்டு மன்னராகத் திகழ முடியும் என்று எண்ணிக் கனல்கக்கும் கண்ணினராய், தீச்சொல் உமிழும் வாயினராய், கொலுவிருக்கும் அமைச்சர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினான், மன்னன், அதற்காகவே, மன்னன், நான் அரசபீடத்தில் அமர்ந்திருக்க விரும்பவில்லை - விலகிக் கொள்கிறேன் - என்றுரைத்தான்.

இவன் மதிமிகு மன்னன்! இவனுக்கெனத் துறையில்லை, அலுவல் இல்லை, அதிகாரம் இல்லை! முத்திரை மோதிரம் இருக்கிறது. நமது விருப்பத்தைச் சட்டமாக்கி அதிலே தன் பெயரை, ஆணையினைப் பொறித்திட! இவ்வளவே அவன் பணி! எனினும் இவன், இதுபோதும் என்று எண்ணுபவனாக இல்லை. கலைமான்களையும், கலாபங்களையும், கிள்ளை மொழியையும் கிண்கிணி ஒலியையும், வண்ணத் தாமரையினையும், வட்டில் மோகினிகளையும், கண்டும் கொண்டும், காலமெல்லாம் களிநடம் புரியட்டும் - பணம் பாழாகும் ஓரளவு - எனினும், மக்களை ஆட்டிப்படைத்திடும் வாய்ப்பினை அதிகார மூலம் பெற விழைவு கொள்ளாதிருந்தால் போதும், என்று எண்ணினர் - அங்ஙனம் எண்ணியே, அரண்மனையில் அரசோச்ச அனுமதித்தனர். இம்மன்னனோ, அரண்மனையோடு தன் அரசோச்சுதல் இருந்து விடுவதில் மனநிறைவு கொண்டா னில்லை. அரசாளவேண்டும், அரசன் என்ற நிலை உண்மை என்றால். இல்லையேல், அரசாள அரசன் என்ற நிலையையே வேண்டாமென்று விட்டொழித்து விடுதல் வேண்டும் - என்று எண்ணினான். அவனைத்தான் பெர்னாட்ஷா, படம் பிடித்துக் காட்டுகிறார், தமது நாடகப் பெருநூலில். புயலார் என்று கூறத்தக்க போக்குடைய, புதிய அமைச்சரை, மன்னன், புன்னகை பூத்த முகத்தினனாக மட்டுமல்ல, அசட்டுச் சிரிப்புக்காரனாகவே, நொடியில் மாற்றி அனுப்பிய காட்சியினைக் கண்டாய். இனி அமைச்சர் அவை காணலாம்.

முதலமைச்சர், ப்ரோடியஸ் எனும் பெயருடையார், காட்சி மூலம், அவர் போக்கு விளங்கிடும் - அதற்கேற்பப், பொருத்தமான, வசதியான பெயரைத் தேடிச் சூட்டிவிடு, தம்பி! அவருடைய தலைமையிலே அவை கூடுகிறது.

முடி தரித்த மன்னன் பிடியிலே சிக்கிக் கிடந்தது நாடு! அவன் இட்டது சட்டம்! என்ற நிலை இருந்தது. மக்கள், வாயில்லாப் பூச்சிகளாக்கப்பட்டுக் கிடந்தனர். நம் போன்றாரின் உள்ளத்திலே ஓராயிரம் உன்னதமான எண்ணம் எழும் - பயனென்ன? - யாவும் மக்கி மண்ணாகிப் போகும் - அவைதமை மதித்திடான் மன்னன்! கலை அறியான் - எனினும், அவனே கலைக்கூடக் காவலன்! பொருள் ஈட்டும் வழி அறியான் - எனினும் பிறர் திரட்டியதைக் கொண்டு வந்து கொட்டச் சொல்வான், பெருநிதிக்கு உடையோன் ஆவான்! வாளேந்தான் - எனினும், அவனே படைகளுக்கெல்லாம் தலைவன் எனும் விருதுடையோன் என்பர்! இந்நிலையில் இருந்த முடி அரசு முறையினை எதிர்த்துப் போரிட்டுப் போரிட்டுக், குடிஅரசுக் கோட்பாட்டினை மெள்ள மெள்ள வெற்றிபெறச் செய்து, கொற்றவன் கொலுவிருக்கட்டும், ஆனால் அரசு நடாத்த, ஆற்றலுள்ளோர் அமைச்சர்களாகட்டும் - அந்த ஆற்றலை அளந்திடும் கோலாக, மக்கள் அளித்திடும் ஆதரவு அமையட்டும் - அந்த ஆதரவு பெறும் முறையாக, தேர்தல் முறை ஏற்படட்டும் என்றெல்லாம், திட்டம் தீட்டி, நடைமுறையாக்கி, மன்னனை இன்று, அரண்மனைவாழ் அலங்காரன் என்ற அளவுக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டோம்; உண்மையில் அரசாள்வது நாம் - என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து கிடப்போர், அமைச்சர்கள். முதலமைச்சரோ, அத்தகைய மகிழ்ச்சியால் மயக்கமுற்று உண்மை நிலைமையை அடியோடு மறந்துவிட்டவரல்ல - மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை உணர்ந்திருக்கிறார்.

சென்ற தேர்தலிலே, நாம் மற்ற எல்லாக் கட்சிகளையும் அழித்தொழித்து, இந்த மூன்றாண்டுகளாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறோம். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளும், உள்ளபடி, நாட்டை ஆள்வது, இந்த மன்னன்தான் என்பதை உணர்கிறீர்களா. . .? - என்று கேட்கிறார், முதலமைச்சர்!

***

முடி அரசு, நிலை குலையாமல் இருந்த நாட்களில், அரசன், சிலரை அமைச்சர் ஆக்குவான் ஆற்றல் அறிந்தேதான் என்பதல்ல - எவ்வகையாலோ, மன்னன் மனதில் இடம் பெற்றவனானால் போதும்! மன்னன் மகிழ மலர் கொடுத்திருக்கலாம் - காட்டு மல்லிகையோ, வீட்டு ரோஜாவோ, ஏதோ ஒரு மென் மலர்!!

அமைச்சர்கள் இருப்பர் - அரசாள அல்ல - அரசன் ஆட்சி நடத்துவான், இவர்கள் எடுபிடிகளாவர், இளித்துக் கிடப்பர்.

முடி அரசு முறையின் கேடு முறிக்கப்பட்டான பிறகு மன்னன் இருப்பான் - ஆனால், அரசாள்வோனாக அல்ல - முடி தரித்துக் கொலுவிருக்க! அமைச்சர்கள் இருப்பர் - முடி இராது சிரத்தில் - ஆட்சியின் பிடியோ, அவர்தம் கரம் இருக்கும்.

ஷா, குடிஅரசுக் காலத்துக் கொற்றவனைத்தான் காட்டுகிறார். எனினும், அவன் எங்ஙனமோ, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் தலைவன், அச்சத்துடன் ஆயாசத்துடன் உணரத்தக்க விதத்தில், வெறும் சின்னமாக இருந்து விடாமல், ஆட்சியை நடத்துபவனாக இருந்து வருகிறான். இதனைத்தான், முதலமைச்சர், மற்ற அமைச்சர் களுக்குக் கூறுகிறார். கூறுகிறார் என்று சொல்வதற்கில்லை - இந்த நிலையை உணர்ந்திருக்கிறீர்களா என்று கேட்கிறார்!

ஒரு அமைச்சர், இந்த அளவு உணர்வு பெறாததால், எனக்கு அப்படிப் புலப்படவில்லை. . .

என்று கூறிடத் தொடங்கும்போதே, முதலமைச்சருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

இதை உணர்ந்து கொள்ள உம்மால் முடியாவிட்டால், விலகி விடுமய்யா! நிலைமையை உணர்ந்துகொள்ளக் கூடியவர் களுக்கு இடம் கொடும்! இல்லையானால், என் வேலையை ஏற்றுக் கொண்டு கட்சியை நடத்திச் செல்லும் என்று பேசுகிறார்.

அமைச்சராயிற்றே! வேறு பல அமைச்சர்கள் முன்னிலையில், முதலமைச்சர் பேசிவிட்டார் என்பதால், கோபம் எழுமல்லவா. எனவே, அந்த அமைச்சர், சற்று முடுக்காக - ஆனால், ஆழ்ந்த அறிவின் துணையுடன் அல்ல - பேசுகிறார்:

முதலமைச்சர் ஐயா நீர்! முழுமுதற் கடவுள் அல்ல! மன்னன் என்ன செய்ய இயலும் என்கிறீர்? நாம் எதை எப்படிச் செய் என்று புத்திமதி கூறுகிறோமோ, அதைத்தான் செய்ய முடியும். அதிகாரம் அனைத்தும் நம்மிடம் இருக்கும்போது, அந்த மன்னன் எப்படி நாடாள இயலும்? சொல்கிறீரே!!

***

தம்பி! இந்த அமைச்சர் கேட்பதுபோலத்தான், பெரும் பாலானவர்களுக்குக் கேட்கத் தோன்றும். ஏனெனில், ஒப்புக் கொள்ளப்பட்ட ஏற்பாட்டின்படி, அமைச்சர்களிடமே எல்லா அதிகாரங்களும் - மன்னன் தானாக ஏதும் செய்ய இயலாது எனினும், இந்த மன்னன், ஒரு முதலமைச்சர் அச்சம் கொள்ளத் தக்க முறையில் அமுல் நடத்துகிறான்! எப்படி?

மன்னனும் அமைச்சர்களும் பேசிடும் கட்டத்தின்போது இது விளக்கப்பட்டிருக்கிறது - நாடக நூலில். தம்பி! நான் குறிப்புகள் மட்டுமே தருகிறேன்.

குடிஅரசுக் கோட்பாடும், கேடு களையப்பட்ட முடி அரசு முறையும் இணைந்ததோர் அமைப்பினைக் குடிக்கோனாட்சி முறை என்று கூறுவர்.

குடிக்கோனாட்சி முறையிலே, அமைச்சர்களே அனைத்துக்கும் பொறுப்பாளர்; மக்களே, ஆட்சி மன்றத் தினரைத் தேர்ந்தேடுப்பர்.

அமைச்சர்கள் ஆட்சிமன்ற மூலம் சட்டங்கள் இயற்றுவர், திட்டங்கள் தீட்டுவர் - நாடு அவைதமை ஏற்கும்.

இந்த முழு உரிமை அமைச்சர்களுக்கு - எனினும், ஏதேனும் ஓர் சட்டமோ திட்டமோ செயலோ முறையோ, மக்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று ஏற்படின், மன்னன், அதனைத் தன் மறுப்பு மூலம் தடுத்து நிறுத்தலாம்.

நாட்டை நடத்திச் செல்ல அமைச்சர்கள் - அவர்கள் நடத்திச் செல்வதிலே, மன்னன் குறுக்கிடவோ, அலுவலிலே பங்கு பெறவோ கூடாது - ஆயினும், நடத்திச் செல்லப்படுவதை, மக்கள் சார்பில், நாட்டின் சார்பிலே, கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்து, பேராபத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தோன்றினால், தடுத்து நிறுத்திட மன்னனுக்கு அதிகாரம் உண்டு.

மன்னர்கள் இந்தத் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை - அநேகமாக.

தேவைப்படுவதில்லை, ஆகவேதான், பயன்படுத்து வதில்லை என்று கூறுவார் உளர்.

தெரிவதில்லை, ஆகவே பயன்படுத்துவதில்லை என்றுரைப் பாரும் உளர். பயன்படுத்தத் தொடங்கினால், பிறகு இந்த அதிகாரமும் பறிக்கப்பட்டுப் போய்விடும் என்று அச்சம் - எனவே எந்த மன்னனும், தன்னுடையது என்று குறிக்கப்பட்ட, தடுத்து நிறுத்தும் உரிமையைப் பயன்படுத்துவதில்லை என்றும், கூறுவர் வேறு சிலர்.

***

தம்பி! இந்த மன்னன், இந்த "அதிகாரத்தை'ப் பயன்படுத்தி, அமைச்சர்களின் உரிமையைப் பாழாக்கினானில்லை,

இவன் செய்ததெல்லாம், சான்றோர் கூடிடும் இடங்களில், அல்லது மக்கள் மன்றங்களில் பேசும் வாய்ப்புப் பெறும்போது, மன்னனுக்கு உள்ள இந்த அதிகாரத்தைப் பற்றி விளக்கம் தந்து வருவது வாடிக்கை.

மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நோக்குடன் குடிஅரசு முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையின்படி, நாடாளும் பொறுப்பினை ஏற்றுள்ளோர் அமைச்சர்கள். அவர்கள் வழிதவறி நடப்பின், அல்லது முறைகேடான செயலில் ஈடுபடின், தீதுதரும் சட்ட திட்டத்தைப் புகுத்திடின், தடுத்து நிறுத்த, மன்னருக்கு அதிகாரம் உண்டு. எனவே, அமைச்சர்களின் ஆட்சியிலே என்ன கெடுதல் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் கலக்கமடையத் தேவையில்லை - மன்னன் இருக்கிறார், தடுத்து நிறுத்திடும் வல்லவராக!

இம்முறையில் பேசிக்கொண்டிருந்தார் இந்த மன்னர்.

இந்தக் கருத்துப்படி இதழ்கள் எழுதிய வண்ணம் இருந்தன - அந்த இதழ்களில் மன்னனுக்குத் தொடர்பு உண்டு!!

அமைச்சர் அவையின் மதிப்பு, இதன் காரணமாகக் குறையும் அல்லவா?

இவர்களைக் கண்காணிக்க ஒரு மேலோன் இருக்கிறான்.

இவர்கள் ஏதேனும், தெரிந்தோ, தெரியாமலோ, தவறுகள் செய்துவிடக்கூடும் என்பதால், அந்த மேலோனிடம், இறுதி அதிகாரத்தை - தடுத்திடும் உரிமையை - ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஆகவே, அந்த மேலோன்தான், உண்மையில், மக்களின் பாதுகாவலன்!

தம்பி! இந்தக் கருத்துக்களைத்தான், காவலன், பேச்சுக் கிளப்பியபடி இருந்தது.

அமைச்சர்கள், தவறு செய்யக் கூடியவர்கள் - தவறு செய்கிறோம் என்று தெரியாமலேகூட தவறுகளைச் செய்து விடக்கூடியவர்கள் - எனவேதான், ஒரு மேலோன், இருக்கிறான், தடுத்து நிறுத்த! அந்த மேலோன், எது நாட்டுக்கு, மக்களுக்கு, தீது பயக்கும், நன்மை பயக்கும், என்பதை அறிந்திடும் ஆற்றல் படைத்தவன் - தடுத்து நிறுத்திடும் தகுதி படைத்தவன்.

குடிஅரசு முறையையும் நடத்திக்கொண்டு, இந்தக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொண்டு இருப்பது, முரண்பாடாக மட்டுமல்ல, சிறிதளவு தரக்குறைவாகவேகூடத் தோன்றும்.

மமதை, மந்தமதி, அக்கரையற்றப் போக்கு, இவைகள் காரணமாக, தன்னிச்சையாக நடக்கும் மன்னன், நாடு கேடுறக் கூடிய காரியமாற்றுவான் - எனவே கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும் - என்று ஆர்த்தெழுந்து பலர் பேசிப் பேசி, கிளர்ச்சி பல நடாத்திக், கொடுமைகளை ஏற்றுக் கொண்டு, இறுதியில் பெற்றது, எல்லோரும் இந்நாட்டு மன்னர் - எனும் குடிஅரசுக் கோட்பாடு!

எனினும் அமைச்சர்களையும், கண்காணித்துவர, தவறாகச் சென்றால், தடுத்து நிறுத்திட ஒரு மேலோன் உண்டு! - அந்த மேலோனாக ஒரு மன்னன் இருந்துவருவான் என்பது, முடி அரசுக் காலத்திலே தரப்பட்டிருந்ததைவிட, வலிவான அதிகாரம் என்று, முதலமைச்சர் கருதினார்.

எனவே, மன்னன், இனி அந்த "உரிமை'யைப் பற்றி, எங்கும் பேசக் கூடாது, என்று உறுதிமொழி தந்தாக வேண்டும் - என்பது முதலமைச்சரின் திட்டம். அந்தத் திட்டத்துக்கு மன்னன் ஒப்பம் அளித்தாக வேண்டும் என்று வலியுறுத்தவே, அமைச்சர் அவை கூடிற்று, அரண்மனையில் ஓர் பகுதியில்.

***

அமைச்சர் அவையில் என்னென்ன போக்கினர், நோக்கினர், உளர், என்பதை பெர்னாட்ஷா எடுத்துக் காட்டு வதைப் படிக்கும்போது, நகைச்சுவைக்காக இருக்குமோ, என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மையான நிலைமை, எந்த அமைச்சர் அவையிலும் என்பது, தம்பி! எண்ணிப் பார்த்திடும் எவருக்கும் புரியும்.

ஐவர் கொண்ட அமைச்சர் அவை! இதில் இடம் பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பினர்! அம்மட்டோ! ஒருவரைக் குறித்து ஒருவர் கொண்டுள்ள கருத்துக்களோ, வேடிக்கை வேடிக்கையானவை! தமக்கன்றி மற்றவர்களுக்குத் தகுதியும் திறமையும், இல்லை, அமைச்சராக இருக்க - என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள எண்ணம்.

உற்றார் உறவினருக்கு, வரம்பு மீறிப் பதவிகள் கொடுப்பவர் என்று ஒருவரைப் பற்றி மற்றவர், புகார் கூறிக் கொள்வர்.

நம்மால் மட்டுமே இந்த அமைச்சர் அவை செயல்படுகிறது. அமைச்சர் அவை ஏற்படத்தக்க விதமான வளர்ச்சி கட்சிக்கு ஏற்பட்டது, என்று ஒவ்வொரு அமைச்சருக்கும், உள்ளூர எண்ணம்.

முதல் அமைச்சருக்கோ, அமைச்சர்கள் அனைவருமே, இடம் பிடித்துக் கொண்டவர்கள், என்ற எண்ணம்!!

இதனை விளக்கிடும் பான்மையிலே, அமைச்சர்களின் பேச்சினை அழகுற, அமைத்தளிக்கிறார், ஷா. கருத்து வேற்றுமைகளை எடுத்துக் கூறிக் கொள்வதிலே, கட்டுக்கு அடங்கும் தன்மையும் கைவிடப்பட்டு விடுவதுண்டு, முதலமைச்சர், மன்னனை எண்ணிக் கொள்கிறார்.

***

தம்பி! நாடகத்திற்கு ஷா சூட்டியுள்ள பெயர் ஆப்பிள் கார்ட் (Apple Cart) என்பது; தமிழில் இதற்கொப்பான பெயரிட வேண்டுமெனின், நெல்லிக்காய் மூட்டை எனலாம்.

மூட்டைக்குள் இருப்பதால், உருண்டோடி விடவில்லை; அவிழ்த்துவிட்டால், திக்காலொன்றாக உருண்டோடிவிடும்!

தீர்த்துக்கட்டிவிட வேண்டும் முடி அரசு முறையை! சின்னமும் கூடாது! முழுக்க முழுக்கக் குடிஅரசு மலர வேண்டும்! - என்று முழக்கமிட்டு அமைச்சரான புயலார் - ஒருவர்! இன்னொருவர், பெரிய முதல் போட்டு நடத்தப்படும் தொழிற் சாலை முதலாளியின் கையாள்! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீர்கேடு!

இந்தச் சீர்கேடுகளை அறிந்து, தக்கபடி பயன்படுத்திக் கொண்டு, தன் தலைமையைக் காப்பாற்றிக்கொண்டுள்ள முதலமைச்சர்.

மன்னன் இதனை நன்கு அறிவானே - இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வானே என்ற கவலை, முதலமைச்சருக்கு.

மன்னர்களுக்கு மதி ஏது! என்று எண்ணுபவர் - அதிகாரம் ஏது! என்று நினைப்பவர் - ஏது செய்ய இயலும்!! என்று பேசுபவர் - எதற்காக இப்படி ஒரு பதுமை என்று ஏளனம் பேசுபவர் - இப்படித்தான் அமைச்சர்கள் உளர்!

முதலமைச்சரோ, இந்த மன்னன் மதிமிக்கவன், வாய்ப்பினை நழுவவிடாது காரியம் செய்பவன் என்று உணர்ந்திருக்கிறார்.

மனதிலே திடமும் தெளிவும் கொண்டவன் மன்னன். தெளிவற்ற பத்துப் பேர்களைக்கூட, தெளிவும் திடமும் கொண்ட ஒருவன் வீழ்த்திட முடியும். மன்னன் அப்படிப் பட்டவன். நீங்கள் ஒருவருக்கொருவர் மாறுபாடுகளைக் குறித்துக் கூச்சலெழுப்பிப் பிளவுபட்டு நிற்பீரேல், மன்னன் பாடுதான் கொண்டாட்டம் என்பதனை முதலமைச்சர் எடுத்துக் காட்டுகிறார்.

தபால்துறை, எதனையும் இயக்குவிக்கும் வலிவுத் துறை, எனும் இரண்டினையும், மாதர்களிடம் ஒப்படைத்திருக்கிறார், பெர்னாட்ஷா, நாடகத்தில்!!

இந்த இருவரும், அமைச்சர் அவை கூடிடும்போது, உடனிருந்திருக்க வேண்டும் - எனினும் ஷா தீட்டிய நாடகத்தில், இந்த இரு பெருமாட்டிகளும் அமைச்சர் அவைக்கு மன்னர் வரும்போதுதான், அவருடன் வருவதாகக் காட்டியிருக்கிறார்!

அமைச்சர் அவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூடத்துக்கு, மன்னன், இந்த இரு மாதர்களும் இருபுறம் இருக்கும் நிலையிலேதான், வந்து நுழைகிறார்.

மன்னன், பேச்சாற்றல் மிக்கவன் என்பதை, தம்பி! முன்பே கண்டிருக்கிறாய் - ஆனால் அவனுடைய முழு ஆற்றல் இங்குதான் காண வேண்டும்.

என்னை வந்து காணும் உரிமையை, அமைச்சர் குழுவினரே! ஒரு சேர நீவிர் இன்று பயன்படுத்தி, எனக்குக் களிப்பூட்டிடும், காரணம் யாதோ! நாம் அதைக் கேட்டு இன்புறலாமோ!

என்று பேச்சைத் துவக்குகிறார் மன்னர்.

முதலமைச்சர், சுற்றி வளைத்துப் பேசாமல், அமைச்சர் அவையின் முடிவை எடுத்துக் கூறுகிறார்.

அதைத் தொடர்ந்து, சுவைமிக்க உரையாடல்கள் நடை பெறுகின்றன.

எமது ஆட்சியிலே, மக்கள், வாழ்வில் வளம் பெற்று மகிழ் கிறார்கள் என்றனர் அமைச்சர்கள்.

வாழ்வில் வளமா? யாருக்கு? மக்களுக்கா! இல்லையே! தொழில் அதிபர்கள் அல்லவா கொழுக்கிறார்கள்! என்றெல்லாம் சுட்டிக்காட்டி கேலி செய்கிறார் மன்னர்.

கடைசியில், இனி கட்டுக்கு அடங்கி நடந்து கொள்வதாக, இறுதி உறுதிமொழிச் சீட்டிலே மன்னன் கையொப்பமிட வேண்டும் - அதனைப் பெறாமல் அமைச்சர் அவை கலையப் போவதில்லை என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். அரசன், உறுதிமொழிகள் யாவை என உசாவுகிறான்.