அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)
2

மன்னர் இனி, சொற்பொழிவாற்றக் கூடாது!

அப்படியா! அமைச்சர் அவை தயாரித்துக் கொடுக்கும் சொற்பொழிவுகளைக் கூடவா நான் படித்துக் காட்டக் கூடாது?

ஆமாம். . . ஆமாம். . . அதை வைத்துக் கொண்டே, படிக்கும் முறையிலேயே, கேலியும் கண்டனமும் எழச் செய்துவிடக்கூடிய திறமைசாலி, நீர் - தெரியும்!

வாயைத் திறக்கவே கூடாதா? ஊமையாக இருக்க வேண்டும், உங்கள் மன்னர்! அப்படித்தானே!

ஒருவிதத்திலே, அப்படித்தான். அரசியல் பேச்சுகளைப் பொறுத்தவரையிலே, மன்னர் ஊமையாகத்தான் இருக்க வேண்டும். ஏதாவது திறப்பு விழாக்களிலே வேண்டுமானால், இதைத் திறந்து வைக்கிறேன் என்று கூறலாம்.

சரி! மற்றும், நான் செய்யவேண்டியது?

பத்திரிகைகளில் கட்டுரைகள், செய்திகள், எழுதக்கூடாது.

நானா எழுதுகிறேன், இல்லையே. . .

உங்கள் தூண்டுதலால், எழுதப்பட்டு வருவது தெரியும்.

நீங்கள் கூடத்தான் எழுதுகிறீர்கள்.

நாங்கள் எழுதுவோம்! நீர் எழுதக்கூடாது!

என்ன நியாயமோ!! சரி! ஆகட்டும்! பிறகு?

தடுத்து நிறுத்தும் உரிமை, அதிகாரம் இருந்து வருகிறதே, அதை அடியோடு விட்டுவிட வேண்டும்.

அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தவே இல்லையே, இது வரையில்.

அதைப்பற்றி பேசுகிறீர். . .

ஆமாம்! மக்களாட்சியிலே அமைச்சர்களுக்கு உள்ள அதிகாரம், உரிமைபற்றி, நீங்கள் பேசுகிறீர்கள். அதுபோல், மன்னனுக்கு உள்ள அதிகாரத்தைப்பற்றி நான் பேசினால் என்ன?

நாங்கள் பேசுவோம், நீர் பேசக் கூடாது.

இந்த உறுதிமொழியில் நான் கையொப்பமிடுவது, மிகக் கடினம். ஏனெனில், கையொப்பமிட்டுவிட்டால், அதன்படி நடக்க வேண்டும். என்னால், ஏதும் செய்யாமல், பொம்மையாக இருந்துவர இயலாதே.

மீறக்கூடாது. உறுதிமொழியில் கையொப்பம் இடத்தான் வேண்டும்.

மறுத்தால்?

மறுத்தால்! அமைச்சர் அவை, "ராஜிநாமா'ச் செய்யும், பொதுத் தேர்தல்! என் கட்சி மக்களிடம் சென்று, கட்டுக் கடங்கிய காவலன் வேண்டுமா, கண்மூடித் தர்பார் வேண்டுமா என்ற பிரச்சினையை வைத்துப், போட்டியிடும், வெற்றி எமது கட்சிக்கே!!

***

தம்பி! மக்களை, இந்தப் பிரச்சினை மூலம், கட்சி தன் வயப்படுத்திக் கொள்ளும் என்பதை உணர முடியாதவன் அல்ல, மன்னன்.

எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கிறான், இந்த ஏற்பாடு வேண்டாம் - என் இயல்புக்கு ஏற்றதல்ல - என்றெல்லாம்.

முதலமைச்சருக்கு இந்தப் பிரச்சினையிலே, மன்னன் பிடிவாதம் காட்டுவது, தன் கட்சிக்குப் பெருத்த இலாபமே பெற்றுத் தரும் என்பது நன்றாகத் தெரியும். எனவே, உறுதியுடன் பேசுகிறார்.

பொதுத் தேர்தலை, இவ்வளவு விரைவிலே வைத்துக் கொண்டால், பொருட்செலவு! மறுபடியும்!! இந்தக் கவலை சில அமைச்சர்களுக்கு - குறிப்பாக, புதிதாக அமைச்சரானவருக்கு.

பல கட்டங்கள், உள்ளன, இந்தக் காட்சியில்.

அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வது முதற் கொண்டு, "தொடர்புகள்' பற்றிய புகார்கள் வரையிலே! ஒவ்வொன்றும் படித்திட இனித்திடும், என்பது மட்டுமல்ல - வரிக்கு வரி குடிஅரசு, தக்கபடி நடைமுறைக்குக் கொண்டு வரப் படாவிட்டால், வெறும் கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போய் விடும் என்பது போன்ற அரசியல் விளக்கங்களைப் பெறலாம். பிறிதோர் சமயம், விரிவாகக் கூறிடக் கூட எண்ணுகிறேன் - இப்போது நாம், விரைவாக இறுதிக் கட்டம் கண்டாக வேண்டும்.

***

முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

ஆம்! உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டே தீர வேண்டும்.

வேண்டாம் முதலமைச்சரே! மன்னன், என்றோர் சின்னம் இருப்பது நாட்டுக்கும் நல்லது!

உங்களுக்கும் நல்லது! உபதேசம் வேண்டியதில்லை! உமது கையொப்பம், உடனே - தயங்காமல். .

. என்னால் முடியாது அமைச்சரே!

முடியாது என்றால், பொதுத் தேர்தல்! மன்னரின் முறை கேடு பற்றி மக்களிடம் சொல்லுவோம் - ஆதரவு திரட்டுவோம்...

என் இயல்பு, இதற்கு இடம் கொடுக்காது. உங்களுக்கோ ஒரு ஊமை மன்னன் வேண்டும்!

குடிஅரசு முறையால் அமைச்சரான உமக்கு, சிறு துளி அதிகாரம் கொண்ட அரசனையும் சகித்துக் கொள்ள விருப்பம் இல்லை. குடிஅரசுக்கும் கட்டுப்பட்ட காவலன் வேண்டும், உமக்கு.

அதுதான்! சரியாகச் சொன்னீர். குடிஅரசுக்குக் கட்டுப் பட்டு நடக்கும் காவலன் வேண்டும்.

என்னால் அப்படி இருக்க முடியாதே!

எங்கள் முடிவு அது!

உங்கள் முடிவு நியாயமானது.

அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

மகிழ்ச்சி! சரியான முடிவுக்கு வந்துள்ளீர்! இடும் கையொப்பம்!

உறுதி மொழியிலா! அது என்னால் முடியாதே! கட்டுப் பட்டுக் கிடக்க இயலாது!

கட்டுக்கு அடங்கும் மன்னன் தேவை என்ற எங்கள் முடிவு நியாயமானது என்று ஒப்பம் அளித்தீர்!

ஆமாம்! அதை மறுக்கவில்லையே! ஆனால் அப்படி, நான் இருக்க முடியாது என்கிறேன்.

அப்படியானால். . .?

சிக்கலான நிலைமை! நான் மன்னனாக இருப்பதானால், நீங்கள் சொல்கிறபடி கட்டுண்டு கிடக்க முடியாது. எனவே நான் ஓர் முடிவுக்கு வந்துவிட்டேன்.

உறுதிமொழியில் கையொப்பமிடச் சம்மதம். . . அப்படித் தானே. . .

இல்லை! உறுதிமொழியில் கையொப்பமிடக் கூடிய, மன்னனைத் தருகிறேன். . . என் மகன். . . உங்களின் இன்றைய இளவரசன்!

அப்படியானால், தாங்கள்?

நான் அரசப் பதவியைத் துறந்து விடுகிறேன். என் மகன், மன்னனாவான். உம் விருப்பப்படி, உறுதிமொழி தருவான். . .

காவலா! உம்மை இழக்கத்தான் வேண்டுமா?

வேறுவழி? சிக்கல் தீர நான் விலகுவதுதான் முறை. . .

கூடிக் கலந்து பேச வந்தோம், பிரிவு உபசாரக் கூட்டமாகி விட்டதே, இன்று.

உமது அன்புக்கு என் நன்றி! கொள்கையால் நாம் பிரிகிறோம் - எனினும் உமது அறிவாற்றலை நாங்கள் மறவோம், இனிச் செல்ல வேண்டியது தானா, வெவ்வேறு வழியாக. . .

ஏன், வெவ்வேறு வழி! நானல்லவா, உங்கள் வழிக்கு வந்து விடத் தீர்மானித்துவிட்டேன். . .

மன்னர் பதவியைத் துறந்து, பிறகு, யாது செய்யவல்லீர், அரசே!

அரச பதவியில் இருக்கும்போது, செய்ய இயலாததை யெல்லாம் செய்திடலாமே. . .

என்ன கூறுகிறீர் வேந்தே!

என் பேச்சு முற்றுப் பெறவில்லை, அமைச்சரே!

நான் அரச பதவியைத் துறப்பேன் - என் மகன் உமது கட்டுக்கு அடங்கும் மன்னனாவான்! மக்களால் தேர்ந்தெடுக்கப் படும், பெருவாரிக் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, அந்தக் கட்சியினர் ஆணையின்படி நடந்து கொள்வான். நான் பதவியிலிருந்து விலகுமுன், என் அதிகாரத்தைக் கொண்டு, எனக்குள்ள அரச குடும்பத்துக்கான தனி உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை நீக்கிக் கொண்டு, சாதாரணக் குடிமகனாகிவிடப் போகிறேன்.

கொற்றவன் குடி மகனாவதா?

குடிமகனாவதற்காகத்தானே, நான் கொற்றவனாக இருக்கும் நிலையையே துறக்கிறேன்.

ஏன்? எதற்கு? என்ன செய்யத் திட்டமிடுகிறீர்?

உம்மோடு உறவாடி மகிழ! உடனிருக்க! அடுத்த பொதுத் தேர்தலில், சாதாரணக் குடிமகனாக ஈடுபட!

வெற்றி நிச்சயமல்லவா மன்னருக்கு!

எதிர்த்து எவர் போட்டியிடுவர்?

வெற்றி பெறக்கூடும்! ஏன்! நான் ஒரு கட்சியைத் துவக்கி, தலைவனாகித், தேர்தலில் போட்டியிடக்கூடும். இப்போது, நான் மன்னன் என்று இருப்பதால், என்னைக் குற்றம் கூறிப் பேச உம்மால் முடியவில்லை. எனக்கும் மன்னனாக இருப்பதால், அமைச்சர்களின் அவலட்சணங்களை எடுத்துப் பேச முடிய வில்லை. குடிமகனானால், இருவருமே, தாராளமாக, காரசாரமாகக் கண்டனக் கணைகளை ஏவிக் கொள்ளலாம்...

இதெல்லாம் எதற்கு மன்னவா?

எதற்கா! என் கட்சி, மகத்தான வெற்றி பெற! உமது உறுதிமொழியில் கையொப்பமிட்டுக் கட்டுண்டு கிடக்கும் காவலன், என் மகன், எந்தக் கட்சிக்கு அதிக இடம் கிடைக்கிறதோ, அந்தக் கட்சித் தலைவனை அழைத்துத்தானே அமைச்சர் அவை அமைக்கச் சொல்லி, அதன் ஆணைக்கு அடங்கி நடப்பான்! என் கட்சி அத்தகைய வெற்றி பெற்றால், என்னையே அழைத்து, அமைச்சர் அவை அமைக்கச் சொல்லக் கூடும்! குடிமகன் ஆகிவிட்டால், அமைச்சரே, கொற்றவனாக நான் இருக்கும்போது கிடைக்காத வாய்ப்பு, வலிவு, எனக்குக் கிடைக்கிறது!!

***

தம்பி! இந்த உரையாடல், அமைச்சர் அவையினருக்கு அதிர்ச்சியை, அச்சத்தை, வெகுவாக எப்படி ஏற்படுத்தாம லிருந்திருக்க முடியும்? ஏதேது இவன் அசகாயசூரன்! மன்னனாக இருப்பதாலாவது, இந்த அளவுக்குக் கட்டுப்படுகிறான் - இவன் குடிமகனாகி, கொற்றவனாக இருந்து அந்தப் பெரும் சிறப்பினையே துச்சமென்று துறந்த தியாகி, வீரன், மக்கள் தொண்டன் என்ற பெயரும் பெற்றுத், தேர்தலில் ஈடுபட்டால் எவரே அவனைத் தடுக்க முடியும்! ஆட்சி அவன் கரம் செல்லும்! முடி அரசு, மகன் மூலம்! குடிஅரசு தந்தை மூலம்! இதற்கு இடமளித்தால், நாம் யாரும் தலைதூக்கவே முடியாது - என்று எண்ணினர் - வியர்த்தனர் - வெடவெடத்துப் போயினர்.

முதலமைச்சர் ஒரு முடிவுக்கு வந்தார்.

மன்னா! அந்த உறுதிமொழிப் பத்திரம் எங்கே என்று கேட்டார். நான் கையொப்பம் இடவேண்டிய பத்திரம் தானே; இதோ! - என்று கூறியபடி, பத்திரத்தை, மன்னன் தந்தான். முதலமைச்சர், அதைச் சுக்கு நூறாகக் கிழித் தெரிந்தபடி, அமைச்சர் அவைக்கூட்டம் கலைகிறது! - என்று கூறிவிட்டுச் சென்றார்!!

***

தம்பி! மன்னன் என்னென்ன எண்ணிச் சிரித்திருப்பான் என்பதைக் கற்பனை செய்து பார்க்கப் பார்க்கச் சுவை சொட்டும் அல்லவா!

முடி அரசாகட்டும் குடி அரசாகட்டும், அதை நடாத்திச் செல்வோரின் திறமையைப் பொறுத்தே, அந்த முறை மூலம் பெறத்தக்க பலன், சுவை, கிடைக்கும். வெறும் முறையினால் மட்டும், போலிச் சுவைதான் கிடைக்கும்; காகிதப்பூவாகத்தான் இருக்கும்! கவர்ச்சி இருக்கும் வண்ணத்தால்; மணம் கிடைக்காது.

கொற்றவனைக் குட்டிக் குட்டிக் குனியவைக்கக் கிளம்பினர், குடிஅரசு முறையைக் கருவியாக்கிக் கொண்டவர்; கூர்ந்த மதிபடைத்த கொற்றவனோ, நான் குடிமகனாகிக் கோலோச்சும் பேறு பெற்றிருந்தபோது இருந்ததைவிட ஏற்றத்துடன் இருந்திடுவேன், என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினான் - குடிமகனாக வேண்டாம்! கொற்றவனாகவே இருந்திடு!! - என்று கூறாமற் கூறிவிட்டுச் சென்றான், குடிஅரசு முறையால், தலைமை பெற்றவன்.

குடிஅரசு, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொள்கையைத் தருகிறது.

அந்தக் கொள்கையைச் சாதகமாக்கிக்கொண்டு எவரெவர் அந்த இடத்தைப் பெற்று, என்னென்ன செய்யக்கூடும் என்பதை எண்ணிப் பார்த்து, தெளிவு தேடிப் பெறவே, இது குறித்து, பன்னிப் பன்னிச் சொன்னேன்.

தம்பி! முன்பு கொற்றவன் என்ற நிலையிலிருந்து கொண்டு ஆதிக்கம் செலுத்த இருந்த வாய்ப்பினைவிட, இன்று குடிமகன் என்ற நிலையில் இருந்து கொண்டு, நல்லது செய்யவும், வாய்ப்பு அதிகம்; கேடு செய்திடவும் வழி கிடைத்துவிடுகிறது.

எனவே மமதை, மந்தமதி எனும் கேடுடைக் குணம் கொண்ட மன்னன் நாடாள்வது, தீது தரும் என்பதால் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற ஏற்புடைய, குடிஅரசுக் கோட்பாட்டை நிலைபெறச் செய்துவிட்டதாலேயே, ஆட்சியிலே சீரும் சிறப்பும், மக்கள் வாழ்விலே நலனும் தாமாக வந்து தழைத்திடும் என்று எண்ணிவிடுவது, பேராபத்து. முன்பாவது ஒருவர் மன்னர்! இன்று எல்லோரும் மன்னர்கள்! எனவே, எல்லோருக்குமே, ஆட்சி நடாத்தத்தக்க அறிவாற்றல் இருக்க வேண்டும். அதேபோது ஆணவம் இருத்தல் ஆகாது - திறம் இருக்க வேண்டும், தலைக்கனம் இருத்தலாகாது!

இந்தப் பண்புகள் உள்ள சில பலரிடம், சில பல குறிப்பிட்ட காலத்துக்கு, ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டுப், பொது மக்கள், உழவு, நெசவு, தொழில், தொண்டு, கலை, கல்வி, களியாட்டம் எனும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, நல்வாழ்வு, முழுவாழ்வு, பெற வேண்டும்! அவர்கள் அத்தகைய நல்வாழ்வு பெறத்தக்க சூழ்நிலையைத் தக்கபடி ஆக்கிக் காத்து அழிந்துபடாது பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பை ஏற்றுத், தன்னல மறுப்புடன் நடந்திடும் பேராற்றல் வளர்ந்தால்தான், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற சுவைமிகு கொள்கை, பயன்தரும் முறையாகி நிற்கும். . . அதற்காகப் பணியாற்ற, எங்கோ, யாரோ உளர், வருவர், என்று எதிர்பார்த்து நின்று, பிறகு இலவுகாத்த கிளியாகிப் போய்விடலாகாது. அதற்கான பணியாற்றும் கடமை, நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

அண்ணன்,

4-12-1960