அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எண்ணப் பிணைப்பு!
இதயக் கூட்டு!
வண்ணக் கலவை!
1

கோபமும் கொள்கையும் - சந்தி சிரிக்கும் காங்கிரஸ்

தம்பி!

ஜெப்பர்சன் என்ற பெயருடையார் அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக இருந்தார். அவர் ஒரு பொன்மொழி கூறி இருக்கிறார். "கோபம் எழும்போது, உடனே பதில் பேசிவிடாதே! பேசுவதற்கு முன்பு 10 எண்ணிக்கை எண்ணிக் கொண்டிருந்து விட்டுப் பேச ஆரம்பி - கோபம் அதிகமாக இருந்தால், பத்துப் போதாது, நூறு வரையில் எண்ணிவிட்டுப் பிறகுதான் பேச வேண்டும்.''

நான் பல ஆயிரம் எண்ணிவிட்டுத்தான் பேசுவதோ, எழுதுவதோ வாடிக்கை. கோபம் கொதித்துக் கரைந்து, உலர்ந்து பொடிப் பொடியாகித், தூளாகித் தூசியாகிக், காற்றாகக் கலந்து போகிற வரையில்கூடப் பதில் பேசாது இருக்கும் போக்கிலே, நிரம்பப் பயிற்சியும் உண்டு. அது தக்க பலனையும் - எனக்கு அல்ல - என் மூலமாக - நாட்டுக்குத் தந்துள்ளது என்பதையும் உணருகிறேன். கோபமே எழாதபடியான மனநிலை பெற வேண்டுமென்று விழைகிறேன் - வெற்றி எளிதிலே கிடைப்ப தாகத் தெரியவில்லை; எனினும் முயற்சியைக் கைவிட்டு விடுவதாகவும் இல்லை.

என்ன அண்ணா இது! சென்ற கிழமை மடல் அனுப்ப வில்லையே? கோபம் எனக்கு; நிரம்ப. அப்படி இருக்க, நீ, ஏதோ கோபத்தை அடக்கிக் கொண்டு இருப்பது பற்றிப் பேசுகிறாயே; என் கோபம் இதைக்கேட்டு வளரத்தானே செய்கிறது - என்றுதானே தம்பி! கேட்கிறாய். உன் கோபம் நியாயமானது - மறுக்கவில்லை - ஆனால், என் நிலை, உணர்ந்து பார்த்தால், அனுதாபத்துக்கு உரியது என்பதனை அறிவாய். பல நாட்களாக நிறுத்தி வைத்திருந்த ஆங்கில இதழ், உன் வற்புறுத்தல் காரணமாக, மீண்டும் வெளியிட வேண்டிய நிலை - அதற்கான பணியும் சேர்ந்து, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது - எனவேதான், சென்ற கிழமை உன்னுடன் அளவளாவும் அக மகிழ்ச்சியை நான் பெற முடியாது போயிற்று. மணி பன்னிரண்டு, தம்பி! எழுதிக் கொண்டிருக்கிறேன் - இன்று எழுதாவிட்டால், இந்தக் கிழமை எழுத வேறு வாய்ப்புக் கிடைக்காதே என்பதால், பன்னிரண்டு என்று மட்டும்தானே சொன்னேன். தம்பி! இரவு!!

கோபம் கூடாது என்று நான் கூறினேன் - கோப உணர்ச்சி எழவிடக்கூடாது என்று கூறினேன் - ஆனால், எத்தகைய கோபம் என்பதை விளக்க வேண்டும். நம்மைப் பற்றித் தவறாகவோ, பகை யுணர்ச்சி காரணமாகவோ, தூற்ற வேண்டுமென்றோ, எவரேனும் ஏதேனும் பேசினால், செய்தால், எழக்கூடிய கோப உணர்ச்சிக் குத்தான் இடமளிக்கக் கூடாது என்றேன். நமது நாட்டை எவரேனும் இழித்துரைத்தால், மொழியைப் பழித்தால், கழகத்தின் மீது பகை உமிழ்ந்தால், கொள்கைகளை இகழ்ந்தால், முயற்சிகளை ஏளனம் செய்தால், கிளர்ச்சிகளை அழித்திட முனைந்தால், எழக்கூடிய உணர்ச்சிகளை அடக்கிவிட வேண்டும், அவைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது, என்று கூறுவதாக எண்ணிவிடாதே. அந்த உணர்ச்சிதான், உலகைத் திருத்த, உரிமைகளைப் பெற, உயர்வை அடையப் பயன்பட்டு வந்திருக்கிறது! அத்தகைய உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள் தான், விடுதலைப் பெறக் களத்திலே இறந்தனர்; இறவாப் புகழ்பெற்றனர்; உரிமைகாக்கத் தூக்குமரம் ஏறினர்; தாம் மடிந்து மற்றவர்களை வாழ வைத்தனர். கவிதையும் காவியமும் அந்த உணர்ச்சி பொங்கி வழிந்தபோது காணக்கிடைத்த வடிவங்களே! எழுச்சிமிக்க கிளர்ச்சிகளை, அந்த உணர்ச்சிதான் தூண்டி விட்டது! மனிதகுல முன்னேற்றமே அந்த உணர்ச்சியின் காரணமாகத்தான் ஏற்பட்டது. எனவே, தம்பி, கோபமும் கொதிப்பும் எழலாகாது என்று நான் கூறும்போது, ஏற்படினும், அந்த உணர்ச்சியால் ஆட்டிப்படைக்கப்படும் நிலைமைக்கு நம்மை ஆளாக்கிக் கொள்ளக்கூடாது என்று கூறும்போது, அருள்கூர்ந்து, பொது நோக்கத்துக்காக, பொது நலனுக்காகத், தூய கொள்கைக்காக, விடுதலைக் கிளர்ச்சிக்காக, நாம் மேற்கொள்ளும் முயற்சிகளைக் குலைத்தும், பழித்தும், எதிர்த்தும், ஏளனம் செய்தும், இன்னல் மூட்டியும், இழிவைத் தூவியும், சிலரோ, பலரோ இருப்பரேல், அப்போது, உணர்ச்சியற்றுக் கிடக்கச் சொல்கிறேன் என்று எண்ணிக் கொள்ளாதே. அப்போது உணர்ச்சி ஏற்படுவதுதான், உள்ளத்திலே கொள்கைப்பற்று இருப்பதற்கே அடையாளம்.

உனக்கென்ன தெரியும்? என்று ஒருவன் கேட்கும்போது, கோபம் எழத் தேவையில்லை. ஏற்பட்டுவிடினும், கண் சிமிட்டிச் சிரிப்பொலி எழுப்பி, ஆமப்பா! எனக்கு ஒன்றும் தெரியாது! என்று செப்பிவிடலாம். கஷ்டமும் இல்லை; நஷ்டமும் இல்லை. உன்னால் என்ன ஆகும்? என்று ஒருவன், ஆணவத்தை, அறிவின் முதிர்ச்சி என்று நம்பிக் கொண்டு, நம்மைக் கேட்டிடின், ஒன்றும் ஆகாதப்பா! என்று கூறிவிடுவதால், நமது ஆற்றலும் அழிந்து விடாது, மரியாதையும் மங்கிவிடாது. ஆனால் உன் தமிழ்மொழியில் என்ன உண்டு? உன் தாய் மொழியால் என்ன ஆகும்? என்று கேட்க ஒருவன் முற்பட்டால், உணர்ச்சியற்றுப் பதிலளிக்கா திருந்தால், மரபும் மானமும், நாடும் மொழியும் ஏளனத்துக்கு இலக்காகிச் சிதைவுபடும்; ஈடுசெய்ய முடியாத நஷ்டம், துடைக்க முடியாத பழி, போக்க முடியாத கறை, அப்போதுதான் ஏற்படும். எனவே, நம்மைத் "தனிப்பட்ட முறையில் தாக்கியோ, தரக்குறைவாகப் பேசியோ, இழிவுபடுத்த ஒருவன் முனைந்தால், தாங்கிக்கொள்ளலாம், கோபத்தை அடக்கிக் கொள்ளலாம். ஆனால், தமிழர் என்ற இனத்தை, தமிழ்மொழி என்ற தாய் மொழியை, நமது மரபினை இழித்தும் பழித்தும் பேசினால், தாங்கிக்கொள்ளும் அளவும்கூட அறமாகாது; உணர்ச்சியே எழவில்லை என்றால், தமிழ் இனம் வாழாது.

வெள்ளையரை முதலில் எதிர்த்த பெரியவர்களையே எடுத்துக் கொண்டு பார்த்தாலும், இது புரியும். அவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலே, வெள்ளையர்களால் ஒரு இழிவும், இன்னலும் ஏற்பட்டதில்லை. மாறாகப் படித்தவர்கள், வசதி பெற்றவர்கள், மேட்டுக்குடியினர், என்ற முறையில், அவர்களைத் தட்டிக் கொடுக்கப் பட்டம் அளிக்க, பதவி தந்திட, பரிவு காட்டிட, வெள்ளை அரசு தயாராகக்கூட இருந்தது. எனினும், நாடு கெடுகிறது; மக்கள் மதிக்கப்படுவதில்லை; தொழில் நசிந்து போகிறது; வறுமை தாண்டவமாடுகிறது, என்ற பொது நிலைமைகளைக் கண்டுதான், அவர்கள் ஆத்திரமடைந்தனர்; எழுச்சிபெற்றனர்; தொடுத்தனர் போர்; பெற்றனர் வெற்றி.

அஃதே போன்றே, இன்று, டில்லிப் பேரரசு, நம்மில் யாரையும், தனிப்பட்ட முறையில் தொல்லை கொடுத்துக் கொண்டும் இல்லை, இழிவு படுத்தியும் வரவில்லை; ஆனால், நமது நாடு, மொழி மரபு பாழாக்கப்படுகிறது; நமது மக்களின் வாழ்வு இருண்டுகிடக்கிறது; தொழில் பட்டுப்போன வண்ண மிருக்கிறது என்ற "பொதுநிலை'மைதான். நம்மை, டில்லிப் பேரரசை எதிர்த்தாக வேண்டும் என்ற எழுச்சி கொள்ளச் செய்கிறது.

தம்பி! தனிப்பட்டவர்களுக்குத் தனிப்பட்ட காரணங் களுக்காகக், கோப உணர்ச்சி கொதித்தால், அவர்களுக்கு உள்ள பலமும் போய்விடும்; மற்றவர்கள் கண்டு, எள்ளி நகையாடவும் செய்வர். ஆனால், பொதுநல நோக்கத்துக்காக, இனத்துக்காக, மொழிக்காக, உணர்ச்சிப் பிழம்பாக நாம் மாறும்போது, புதியதோர் வலிவு பெறுகிறோம்; காண்போர் கனிவு காட்டுகின்றனர்; அவர்களேகூட எழுச்சி பெற்றவர்களாகி விடுகின்றனர்.

ஜுரவேகத்தில் இருப்பவனை, நாலு பேர் சேர்ந்து அழுத்திப் பிடித்தாலும், நெம்பிக் கொண்டு எழுவான். அது வலிவின் அடையாளமல்ல; நோயின் தன்மை. கட்டான உடலை, உடற்பயிற்சி முறைகளால், மேலும் வலிவுள்ளதாகவும் பொலிவு மிக்கதாகவும் ஆக்கிக் கொண்டால், பத்துப்பேர் பிடித்திழுத் தாலும், நிலைகுலையாத தன்மை கிடைக்கும்; அது உண்மையான. . . வலிவுக்கு அடையாளம்.

தனிப்பட்ட காரணத்துக்காக ஏற்படும் கோபம் எழுவதும், விரைவில் முறிவதும், அஃதேபோல! இடையிலே, பிறகு எண்ணிப் பார்த்தால், வெட்கப்படத்தக்க, ஆர்ப்பரிப்பு இருக்கும்.

பொது நலனுக்காக உணர்ச்சி ஏற்படுவது எளிதுமல்ல; எல்லோருக்கும் ஏற்பட்டு விடுவதுமில்லை; விரைவிலேயும் ஏற்பட்டு விடாது. ஏற்பட்டான பிறகோ, அந்த எழுச்சியை அழித்தொழிக்க வல்லது எதுவும் இருக்க முடியாது என்று கூறலாம். அவ்வளவு நேர்த்தியானதாக எழுச்சி இருக்கும்!

எஃகு, எளிதிலே தயாரிக்கப்படுவது அல்ல; இரும்பு காய்ச்சிக் காய்ச்சி, ஊட்டம், அழுத்தம் ஏறி ஏறி, எஃகு ஆக்கப் படுகிறது. எஃகு ஆக்கப்பட்ட பிறகே, எதையும் தாங்கும் நிலை பெறுகிறது; வளையாது, முறியாது. எனதருமைத் தம்பியரெலாம் எஃகுக் கம்பிகளாக வேண்டும் என்பதுதானே எனக்குள்ள அவா! மாற்றாரின் ஏளனம் செவியில் விழத்தான் செய்கிறது. "எஃகுக் கம்பிகளா, உன் தம்பிகள்!! ஆமாம்! வேறு எப்படி இருப்பார்கள்? தங்கக் கம்பிகளாகவா இருக்க முடியும்!'' என்கின்றனர். தம்பி! நமது, இல்லாமை'யைக் குறை கூறுகிறார்கள்; இயல்பை அல்ல; எனவே, அதைக் கேட்டு நமக்குக் கோபம் எழத் தேவையுமில்லை.

அண்ணா! எல்லா நல்லுரையும் சொல்லுகிறாய், அதிலே வல்லமை பெற்றிருப்பதால்; ஆனால், உன்னையும்தான் சிலர் சொல்லுகிறார்கள் "கோபம் வந்தது' - என்று, எனச் சொல்லத் துடிக்கிறாய்; தெரிகிறது, தம்பி! நானே, அதைக் கூறத்தான், இந்தப் பிரச்சினையையே தொடங்கினேன்.

காங்கிரஸ் நண்பர்கள், நான், சென்ற கிழமை சட்ட மன்றத்தில் கோபமாகப் பேசினேன் என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். கோபமும் கொதிப்பும் கூடாது என்று ஊருக்கெல்லாம் கூறிவிட்டு, இவர் மட்டும் ஆத்திரத்தைக் கக்கலாமா, கோபமாகப் பேசலாமா, என்று கேட்டனர்; அறிவேன்.

சிலர், உன்னிடமும் வந்து, இதனைக் கூறி இருக்கக்கூடும். எனவேதான், கோபப்படாத அண்ணன், கோபமாகப் பேசக் காரணம் என்ன என்று கூற எண்ணுகிறேன். என்ன பேசினேன் என்பதுதான், இதழ்களில் ஓரளவு வந்திருப்பதால், உனக்குத் தெரியுமே, என் கோபத்துக்குக் காரணம். நான் இகழப்பட்டதால் அல்ல; என்னை எவரேனும் ஏளனம் செய்ததால் அல்ல. அந்த மாதிரி நேரங்களில் நான், மரக்கட்டை, தம்பி! ஆமாம்!! ஆனால், நமது கழகத்தை மிகக் கேவலப்படுத்தும் முறையில், அமைச்சர் சுப்ரமணியம், சட்டமன்றத்தில் பேசினார். நிதிநிலை அறிக்கையும், தொழில்நிலை விளக்கமும், பொது நிலை அறிவிப்பும், புதுத்தொழில் துவக்கமும் ஆகியவைக் குறித்துப் பேச வேண்டிய மன்றத்தில், ஆட்சிப் பொறுப்பதனை ஏற்று, ஆற்றல் மிக்கவர்கள், அனுபவமிக்கவர்கள், ஈடு இணையற்றவர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவனி அறிந்தவர்கள் என்றெல்லாம் விருதுகளைச் சூட்டிக் கொண்டுள்ள விவேகிகள், நொந்து கிடக்கும் நமது கழகத் தோழர்களின் மனத்தை மேலும் புண் படுத்தும் முறையில், ஆணவத்தின் முகட்டினில் நின்றுகொண்டு, பழித்துப் பேசினர்.

உங்கள் யோக்கியதைதான், சந்தி சிரிக்கிறதே! என்று செப்பினாராம், கொங்கு நாட்டுக் கோமகன், கனம், சுப்ரமணியம், வெல்வெட் மெத்தையிலே சாய்ந்தபடி, விழியிலே கேலி வழிய, நமது தோழர்களைப் பார்த்தபடி.

கட்சிகளிலே எது கலகலத்துப் போய்க் கொண்டிருக்கிறது, எதிலே குழப்பம் மூண்டு கிடக்கிறது, உட்பகையும் உருக்குலைக்கும் சதியும் எங்கு புற்றரவுபோல் இருந்து கொண்டிருக்கிறது, என்பது பற்றிய ஆய்வுரை நடத்த அல்ல, சட்டமன்றம் நடைபெறுவது. எந்த வரி, மக்களை எந்த வகையிலே தாக்கும்; என்ன தொழிலைத் துவக்கினால் மக்களுக்கு நன்மை பெருகும், என்ற இவை பற்றிய விளக்கம் அளிக்கச் சட்டமன்றம் நடைபெறுகிறது. போதை ஏறிய பூபதி, இருக்கையில் புரண்டபடி, எதிரில் தெரியும் எவரையும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் பான்மைபோல், எண்ணிக்கை என்பதன்றி ஏற்றம் உள்ளது என்றுரைக்க வேறேதும் இல்லாதார், இறுமாந்து கிடப்பதும், தொடர்பேதுமற்ற முறையில், நமது கழகத்தைப் பழித்துரைப்பதும் எற்றுக்கு?

இவர் ஒரு அறிஞரா? என்று கேட்டுவிட்டு, இடி இடி யெனச் சிரிக்கட்டும்; நான் கோபம் கொள்ளமாட்டேன்; பொருட்படுத்தக்கூட மாட்டேன். இந்தக் கழகத்தின் யோக்கியதை தெரியாதா, சந்தி சிரிக்கிறதே! என்று கழகம் காண, கட்டிக் காத்திட, கலாம் எழாதபடி தடுத்திட, உழைத்து உயர்த்திட, ஊர் நலனுக்கு உகந்ததாக்கிடப், பாடுபட்டுக் கொண்டு வரும், நமது தோழர்களின் காதிலே நாராசம் பாய்ச்சுவதுபோல, ஏசுவதா - ஒரு அமைச்சர் - படித்தவர் - பண்பு அறிந்தவர் என்று பேசப்படுபவர்?

நான் கோபம் கொண்டேன் என்பது உண்மை; ஆனால், என் பொருட்டு எழுந்தல்ல அந்தக் கோபம்; உன்னையும் என்னையும் ஆளாக்கிவிட்டதும், இந்த அமைச்சர்களுக்கே கூட முன்பு எப்போதும் ஏற்படாத அளவு மதிப்பை, வலிவை, கவனிப்பை, மேய்ப்பை, தேய்ப்பைப் பெற்றுத் தருவதுமான கழகத்தைக் கேவலப்படுத்துகிறார்களே என்பதால் ஏற்பட்டது.

முட்டாளே! - என்று ஒருவன் சொன்னால் ஏற்படக்கூடிய கோபத்தைவிட, முட்டாள்பய மகனே! என்றால், எழக்கூடிய கோபம் அதிகமாக அல்லவா இருக்கும்.

கழகத்தில் உள்ள தனிப்பட்டவர்களைத் தாழ்வாகப் பேசுவதைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம் - நாக்கு அப்படி ஆகி விட்டது, நாராசத்தில் பட்டுப்பட்டுக் கெட்டுக் கிடக்கிறது என்று எண்ணிக் கொண்டு இருந்துவிடலாம் - ஆனால், நம்முடைய கூட்டு முயற்சி, குலக்கொழுந்து, மரபு காத்திடும் மாவீரர் மன்றம், விடுதலை வீரரின் பாசறை என்ற நிலைபெற்றுத் திகழும், கழகத்தைத் தரக்குறைவாகப் பேசுவது, அதைக் கேட்டுக் கொண்டு, நாம் வாளா இருப்பது என்றால், அமைச்சர், நம்மை என்ன அவ்வளவு உணர்ச்சியற்ற உதவாக்கரைகளாகவா கருதி விட்டார். எதனால்? நம்மிடையே, வெளியே தெரியும்படி கிளம்பிய, சில கருத்து வேற்றுமைகள் காரணமாகவா? இதுவா அமைச்சருக்கு, இத்துணைத் துணிவினைத் தருவது? நாமே நடந்துவிட்டதை எண்ணி எண்ணி, நெஞ்சு நெக்குருகிக் கிடக்கிறோம் - மற்ற எந்தக் கட்சிகளிலும் மாடுபிடி சண்டை வரலாம், மண்டை உடையும் அமளி நடக்கலாம். கழுத்தறுப்பு வேலைகள் நடக்கலாம்; கல்லைத் தூக்கி மண்டையில் போட்டிடும் பாதகம் நடைபெறலாம் - அவை சமூகத்தை, நாட்டை, இனத்தை, மரபைப் பாதிக்காது; பங்குச் சண்டை என்று மக்கள் பரிகாசம் செய்வதோடு விட்டுவிடுவர் - நமது கழகம் அப்படிப்பட்டதல்ல - இது ஏழையின் இல்லத்துக்கு ஒளி அளிக்கும் அழகு மகள்போல இருக்கிறது; இருள் சூழ்ந்த நெடுவழி கடக்கக் கிடைத்திட்ட அகல்விளக்காக இருக்கிறது; சோர்ந்து போனவன், கடுவழி சென்றிடப் பயன்படும் ஊன்றுகோலாக இருக்கிறது; இதற்கு ஒரு ஊறு நேரிட்டால், இதிலே ஒரு குலைவு ஏற்பட்டால், அது நாட்டுக்குப் பேரிடியாகும்; விடுதலை முயற்சிக்குப் பெரியதோர் விபத்தாகிப் போகும் என்று எண்ணி எண்ணி, மனம் குமுறிக் கிடக்கிறோம்; இதனை அறிந்திட ஆற்றலற்று, உணர்ந்திடும் அளவு மனிதத் தன்மையற்றுச், சந்தி சிரிக்கிறது என்றா கேபேசுவது - இதுவோ அமைச்சரின் கடமை!

"மூட மகனே! மொழியொணா வார்த்தையினைக்
கேடுவால் அறியாய் கீழ்மை யினாற் சொல்லிவிட்டாய்
புள்ளிச் சிறுமான் புலியைப் போய்ப் பாய்வதுபோல்
பிள்ளைத் தவளை பெரும்பாம்பை மோதுதல்போல். . .