அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எண்ணப் பிணைப்பு!
இதயக் கூட்டு!
வண்ணக் கலவை!

2

என்னவோ பேசிவிட்டீர் அமைச்சரே! என்று கூறக்கூட நம்மில் எவரும் எழமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டாரோ? பாரதியார் ஆக்கித்தந்த பாஞ்சாலி சபதத்தைத்தான் அவரும் பார்த்ததும் இல்லை போலும்? பாரெல்லாம் தன் அடியில் படுத்துக்கிடப்பதுபோல், பண்பெல்லாம் தம்மடியில், அடப்பத்தில் அடக்கிப் போட்டிருப்பதுபோல், கட்டிப்போட்ட வேங்கைமீது கல்வீசிக் கைகொட்டிச் சிரித்திடும் ஓர் பித்துப் பிள்ளை விளையாட்டினை ஓர் வீரச் செயலெனக் கொண்டவர் போலாகிப் பேசிவிட்டார் சுடுசொல்; வீசிவிட்டார் இழிசொல். - கேட்டவர் இருக்கின்றார்; நாட்டவர்க்கு உரைக்கின்றோம்.

தம்பி! கழகத்தின் போக்குப்பற்றிச் சந்தி சிரிக்கிறது என்று அமைச்சர் செப்பிக் கிடந்தபோது, அவரை அமைச்சராக்கி வைத்த அரும் காங்கிரசு உள்ள நிலை யாது என்பதனை எவரே அறியாதார்! பாஞ்சால நாட்டினிலே, படுகளமான நிலை! பண்டித நேருவின் தொட்டிலெனக் கூறிடலாம், பாரத அரசுக்கே சூத்திரதாரி எனப் பட்டம்பெற்று விளங்கும், உத்தரப் பிரதேசம்; ஆங்கு கொள்கையால் வந்ததல்ல, செயல்முறைக்கு ஏற்ற ஒரு திட்டம் எதுவென்று பேசிவந்ததாலல்ல, மந்திரியாய் இருந்திடவே, யார் வாய்ப்புப் பெறுவது? உனக்கா? எனக்கா? என்று ஒரு கை பார்த்திடலாம். உன் பக்கம் உள்ளவர் யார்? உமக்குள்ள கருவி எது? உடனே உரைத்திடுக! காலம், களம், குறிப்போம்! மாண்டவர்போக மீதம் உள்ளவர்களே, உத்தரப் பிரதேசத்து ஆட்சி!! - என்று கூறியன்றோ, இருதரப்பும் மோதிற்று. சென்று சென்று வந்தாரே, செயல் வீரர், நேரு பிரான், கண்ட பலன் என்ன? கலாம் தீர்த்துவைத்தாரோ? கைகொட்டிச் சிரிக்காதார் எவர் உண்டு, அறியோமா? போனவர் போகட்டும், புதியவர் ஆளட்டும்; ஆள்மாறி விட்டாலும், அனைவருமே கதர் அணிவோர்; ஆகவே, அவருக்கும் ஆதரவு தந்திடுவோம் - என்றா கூறினர் ஆங்குள்ள காங்கிரசார். இன்னும் எத்தனை நாள்? பார்த்தேவிடுகின்றோம்! இது குறித்துப் பண்டிதர்தான் எது கூறி நின்றாலும், எமக்குக் கவலை இல்லை! எம்மை இம்சித்தார் தம்மை விடமாட்டோம்! இஃதே எமக்கின்று தேசியம், ஆமாம்? என்று சம்பூர்ணானந்தர் சாற்றுகின்றார்; அது கேட்டுக், குப்தா கூட்டத்தார் குலை நடுக்கம் கொள்கின்றார்; இருதரப்பும் எழுப்பிடும் இரைச்சலைக் கேட்டன்றோ, இனி நாம் இருந்து இதனைத் தாங்குவதும் இயலாதென்று, முதுபெரும் கிழவர், காங்கிரஸ் மூலவரில் முந்தியவர், கோவிந்த வல்லப பந்தும் உயிர் நீத்தார்! ஒன்றல்ல இரண்டல்ல, உள்ள ஓட்டைகள்! எங்கும் உடைப்பு, விரிசல்; காழ்ப்பு, கலாம்; அறிக்கை, மறுப்பு; ஆள் பிடித்தல், கோள் மூட்டல்; ஆந்திரம் விலக்கில்லை; மைசூர் பெரும் தொல்லை; என்ற நிலை காண்போர், என்ன செய்கின்றார் என்று, எம்மை இழிமொழியால் ஏசிய அம் மந்திரியார் கிஞ்சித்தேனும் எண்ணிப் பார்த்தாரா; அவர் அறிவு ஏனோ அதுசமயம் அவர்க்குத் துணை செய்யவில்லை.

சந்தி சிரித்ததென்றார்; தன் முதுகுப் புண்ணதனைத் தான் காணாதான், மற்றொருவன் முகம் தன்னில் இருந்திட்ட மாசு, மருவு, தான் கண்டு! ஏளனம் செய்தது போல.

ஏன் அமைச்சர் அதுபோல ஏளனம் செய்தார் என்று சிறிது நாம், தம்பி! சீர்தூக்கிப் பார்த்திட்டால், சிந்தை தெளிவதுடன், சிறப்பான புதுப்பாடம், கண்டு பயன் பெறலாம்; கருத்துக் கருவூலம்.

கோபம் எழவே தான் அன்று, கோலோச்சுபவர் எனினும், கொடுமைக் கணைகள் தமை என் மீது வீசிடவும் அதிகாரம் கொண்டவர்கள்தான் எனினும், மனதிற்பட்டதனைக் கூறாது இருந்திடுதல், மரபுக்கு அழகல்ல என்பதனால், "எதிர்வீட்டுப் பலகணியை எட்டிப் பார்த்திடும் போக்கு நல்லதல்ல. அமைச்சரே! விட்டுவிடும் அச் செயலை' என்று கூறிவிட்டேன்.

கோபம் குறைந்ததா? என்று கேட்கின்றாய், தம்பி! ஆமாம், அது உண்மை. ஆனால் சோகமன்றோ, வந்தென்னைத் துளைக்குதடா, தம்பி! எதனாலே எவரெவரோ, ஏசுகிறார் நம்மை? எண்ணிப் பார்த்தனையா, இதற்கான காரணத்தை? சின்னத்தனமாக நாம் நடந்து கொண்டோமா? இல்லை! எவரும் எண்ணிப் பார்த்திடக் கூசும் விதமான, நாட்டு விடுதலை எனும் திட்டம், நமது என்று கூறிவிட்டோம். பத்து நாள் பேசுவர், புளித்துப் போகும் அவர்க்கே, பிறகு பக்கம் வந்து நிற்பர், பராக்குக் கூறிப் பிழைப்பர், என்றுதான், நம்மைப் பற்றி மாற்றார் முதலில் கணக்கிட்டனர். இளைஞர் பெரும்பாலும், இல்லாதார் எல்லோரும், இவர்கள் எத்தனை நாள், என் நாடு! என் அரசு! என்றெல்லாம் பேசுவர்; எவர் கேட்பர் இவர் உரையை! நாடு, இவர் பக்கம் நாட்டம் செலுத்தாது. வீடோ, வறுமைக் கூடம்! என் செய்வர்? இவரெல்லாம், பிழை பொறுப்பீர், ஐயன்மீர்! வழி அறியாமல் சென்றோம். வதைபட்டோம்; ஏதோ சிறு பதவி எமக்கென்று அளித்துவிட்டால், இவர்போல் இத்துறையில் எவர் உண்டு! என்று ஏத்தித் தொழுது கிடக்கின்றோம், தொல்லை எம்மால் வராது! என்று நாம் கூறிடுவோம், எதிர்ப்பு ஏதும் இருக்காது என்றுதான் எண்ணிக் கிடந்தார்கள்; இந்த அமைச்சரெல்லாம் காத்திருந்து பார்த்தார்கள்; காரியம் பலிக்கவில்லை; கடுங்காற்றுபோல் கழகம் கொள்கை பரப்பிற்று. காணாரும் கால் முடமானாரும், கடுகி நடந்துவந்து, கனிவுடனே பார்த்து, நம்மை, கழகம் சேர்ந்திடுவோம், மீட்டிடுவோம் நம் நாடு! என்று கூறலுற்றார். ஏதேது, இக்கழகம், காளான்போல் பூத்துக் கடுகி அழியுமென்று எண்ணி ஏமாந்தோம் - ஆல்போல் தழைத்திடும் என்று அச்சம் கொண்டிடத்தக்க விதமாகக் கழகமது வளருவது, ஆபத்து எனவே, இதனை அழித்திட, நாம் எப்பாடு பட்டேனும், முனைந்திடுதல் முதல் வேலை! - என்று பேசி நின்றார். அந்த வேளையினில், நமக்குள் ஐயப்பாடுகள் எழ, அமளியாக இது வடிவெடுக்கும் என்பது பல்விளக்கிக் கிடந்தார்கள், பகை முடித்து, நம்மை ஒழித்து, பசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற நப்பாசை கொண்டவர்கள். கழகம் என்ன, கூளமா காற்றினில் பறந்து போக? எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை! எனவே, பேதம் என்பது ஏதுமில்லை, என்று அறிவித்துவிட்டது அணிவகுப்பு. இதனால் வந்த ஏமாற்றம், அமைச்சரை அதுபோலப் பேச வைத்தது.

எனவே தம்பி! அமைச்சருக்கும், அவர் போன்றாருக்கும் அறைகூவலாக, நமது கழகம் நிலைத்து நிற்பது மட்டுமல்ல, ஓங்கி வளர வேண்டுமே, அதற்கு ஆவன செய்திட, நாம், நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டாமா என்பதனை எண்ணும் போதுதான், சோகம் கப்பிய நிலை என்றேன் நான்.

நீ எப்போதும் இப்படித்தான் அண்ணா! எத்துணை வெற்றிகளை நான் பெற்றளித்துக் காட்டினாலும், இதுதானா? என்று கேட்பதும், இன்னும் உளதோ ஏராளம்; செய்திட, உன்னால் முடியுமா? என்று உசுப்பி விடுவதுமே உன் வாடிக்கை, நான் அறிவேன்! - என்றுதானே தம்பி, கூற எண்ணுகிறாய். நானறிவேன், உனை நன்றாய், நம்பிக்கைக் குறைவல்ல, நான் பேசும் காரணம். நமக்குள்ளே கலாம் வந்து நாசமாய்ப் போவோம் என்று எண்ணினவர் ஏமாந்துபோனதாலே; இனி நம்மைத் தாக்குவதில், முறை என்ன? நெறி யாது? என்று கூட எண்ணாமல், அழிப்பதற்கு என்னென்ன உண்டோ அவ்வளவும் அவிழ்த்துவிட்டு, ஆர்ப்பரிப்பார். அவைதமைத் தாங்கிடவும், அறநெறியை அப்போதும் காத்திடவும், நாம் முனைந்து நிற்கவேண்டும். அச்சம் கொண்டிட ஒரு அணுவளவும் காரணமில்லை. மச்சுமீதேறி நிற்போர், மேலோர் ஆகார்; தரையினிலே நாம் நின்றால், தரம் குறைவு என்றாகாது.

சந்தி சிரிப்பதாகச் சாற்றினாரே, அமைச்சர்! தம்பி! அவர் தம் கட்சியிலே உள்ள நிலை, அங்காடியில் இன்று அடிபடுவது, அறிவேன் நான்.

இன்று அங்கு, மண்டலக் காங்கிரசுக்கும், இளைஞர் காங்கிரசுக்கும், மடிபிடிச் சண்டை.

நடமாட வக்கின்றி, நாவசைக்க அறியாமல், கிடந்தார் இப்பெரியோர்கள், தலைவர்களாய்; அவ்வேளை நாங்கள் கிளம்பி வந்தோம், நாப்பறையால் நாடதனில் கட்சி வளர்த் திட்டோம்; காங்கிரசுக்குக் கிழப்பருவம், கண் மங்கி, வாய் குளறி, ஈளை கட்டி, இருமி இழுத்துக் கிடக்குது என்ற பேச்சை மாய்த்திட்டோம், இளைஞர் காங்கிரசதனால்! புது இரத்தம் எம்மாலே! புது முறுக்கு! எமது பணி - என்ற எக்காளம், எழுப்பினர் இளைஞர் காங்கிரசார், குற்றாலத்தில் கூடிக், கொடி நாட்டிக் கூட்டம் சேர்த்து.

அதனை நாம் மறுத்தோமா? ஆமாம், உமது ஆற்றல் தன்னால், ஆங்காங்கு அடிதடியும் அமளியும்தான் என்றாலும் பேச்சுக்கு வழிகோலிப் பெருந்தொண்டு செய்துள்ளீர், பாராட்டு, நன்றி - வேறு என்ன கைம்மாறு? என்று பெருந் தலைவர்கள் பேசிடவே, கொதித்தது கோபம், தடித்தன வார்த்தைகள்.

என்னதான் உள்ள குறை, எடுத்துக் கூறிடுக! என்று கேட்டிடவே, இளைஞர் காங்கிரசார், கூறலுற்றார்:

அடுத்து வருகின்ற பொதுத் தேர்தலுக்கு, யாரை எங்கெங்கு நிறுத்துவது என்பதனை, யாரோ சில பேர்கள் கூடி முடிவு செய்தால், கேடாகத்தான் போகும்; அந்தக் காரியத்தை அருமையாகச் செய்யும் ஆற்றல், எமக்குண்டு, அறிந்திடுவீர் - என்று கூறினார், இடித்துரைக்கும் போக்குடனே.

பிள்ளைகளா! இது கேளும்! பெரியவர்கள் பார்த்துச் செய்வது, இந்தத் தேர்தல் வேலை - பேச்சாலே, தேர்தலிலே பெரும் வெற்றி கிடைக்குமென்று, எண்ணாதீர் - தவறாகும். எங்கெங்கு எவரெவருக்கு என்னென்ன விதமான செல்வாக்கு என்பதனைக் கண்டறிந்து, இடம் கொடுக்கத் திறம் வேண்டும் - தனித்திறமை! மேடை பல ஏறிவிட்டால், கூடி விடுவதல்ல அந்தத் திறமை. அதற்கே மெத்த முறையுடனே அமைத்துள்ளோம் மண்டலக் காங்கிரஸ். மேதா விலாசம் உண்டு, மேட்டுக் குடியினர் உண்டு, இரும்புப் பெட்டி உண்டு, கரும்புத் தோட்டம் உண்டு, வடபாதி மங்கலத்தார், வலங்கைமான் உறைவார், பூண்டிப்பதிமேவும் வாண்டையார், வானூரார். கானூரார், வகை வகையாய் நாம் அறிவோம். அவரெல்லாம் சேர்ந்ததுதான், மண்டலக் காங்கிரசு. அதுதான், ஆள் பொறுக்கும்; அறிவிக்கும் வேலை உமக்கு - என்று தலைவர்கள் கூறிடவே, இளைஞர் காங்கிரசார் எரிச்சல் மிகக் கொண்டு! இதுதான் முறை என்றால், எமக்கு இங்கு வேலை அல்லை; மண்டலமோ கமண்டலமோ, எதுவானால் எமக்கென்ன, என்றனராம் கோபம் மிகக் கொண்டு.

இதுமட்டுந்தானா? சென்னை செங்கற்பட்டு, தென் ஆற்காடு தன்னுடனே வடஆற்காடும், எந்தன் வசம் விட்டுவிடும் என்று, வேளாண்குடிப் பெரியோன், அமைச்சர் பதவிக்கென்றே தம்மை அர்ப்பணித்துவிட்ட, சமயோசிதம் தர்மம் என்ற பக்குவம் மிக உணர்ந்த பக்தவத்சலனார் கூற; நானிருப்பது அங்கு; நாயகராக வேறு ஒருவர் வருவதுதான், நல்லதோ, நாடாளும் நண்பரே! கூறும் என்று, மனம் குமுறிக் கேட்கின்றார் மாணிக்கவேலர்! ஓ! ஓ! இவர் என்ன வடாற்காட்டில், "பட்டாமணியமா' பொய்! பொய்! கூட்டுறவுத் துறை மூலம் நானே அங்கு காட்டிடுவேன் என் வலிவை! என்னிடம்தான் வடாற்காடு இருந்திடவேண்டும் என்று இயம்புகிறார், மற்றோர் பக்தவத்சலனார்.

எவர் என்ன கேட்டாலும், இது கேளும், என் தலைவா! இராமன் உள்ள இடம் அயோத்தியாம் என்பார்கள்; அரிசனங்கள் உள்ள இடம், அடியேனுக்கு அரசு அன்றோ! அங்கு ஆகும் முறை அனைத்தையும் நான் கூற, அருள் கூர்ந்து உரிமைதனைத் தந்திடுவீர் இன்றே! - என்று கனம் கக்கன் கேட்கின்றார்; காமராஜர் கலங்க.

தென் ஆற்காடதனில், திக்குக்கொரு தலைவர், நானில்லா விட்டால், சிதம்பரம், நமக்கேது, கழகம்தான்! - என்று பேசிப் பதவி கேட்கும் பெரியார் சாமிக்கண்ணு.

நேற்று இவர் வந்தார், நெருக்கடியில் நான் இருந்தேன் - சோற்றுப் பானைக்குள்ளே ஏதேதோ வந்து விழும்! நானன்றோ எந்நாளும், உங்கள் பக்கம் என்று சொந்தம் கொண்டாடி நிற்கும், சீனுவாசர் மற்றோர் பக்கம்.

ஊர் கூட்டிப் பயன் என்ன? சேரிகள் சேர்ந்தாலன்றித், தேர்தலில் வெற்றி ஏது? சேரிகளிலே, யார் உள்ளார். என்னைப் பின்பற்றாதார்! எங்கோ நெடுந்தொலைவில் எனை அனுப்பி வைத்துவிட்டு, இங்கு எவரெவரோ குதியாட்டம் போடுவதா? இம்முறை என் இன மக்கள், இதை ஒப்பார் - அறிந்திடுமின்! அமைச்சர் ஆகத்தக்க அருகதை எனக்கு என்று, அறிவித்தா லன்றித், தேர்தல் ஆபத்தாய் முடியுமென்று இடிமுழக்கம் எழுப்புகின்றார், இளைய பெருமாள்.

இவரைச் சாய்த்திடவல்ல வலிவு எனக்குண்டு! கடைக் கண்ணைக் காட்டி என்னை கைத்தூக்கி விடுவரேல், காற்றாய்ப் பறந்துவிடும், கக்கனுக்கு எழும் எதிர்ப்பு, என்று பேசுகிறார், சிவசுப்பிரமணியப் பெயரார்.

இந்நிலையில், இருப்பதுதான் என்றாகிவிட்டால், என்னைத் தலைமையாகக் கொண்ட இனம், சுதந்திரம் ஆகிப் போகும்! எனவே எனக்கென்ன? அதனைக் கூறும் - இதுபோல் வேறு இடத்திலிருந்தும் வந்தவண்ணம் இருக்கிறது பேரம் - என்று வெங்கடகிருஷ்ணா ரெட்டியார் பேசுகிறார், பிறிதோர் பக்கம்.

இது அல்ல பிரச்சினை - நானோ தமிழ்நாட்டுக் காங்கிரசுக்குத் தலைவன்! நாடோ, நாடார்! நாடார்! என்று நாடுவது, அவரையன்றோ. காமராஜருக்குக் கட்டியங் கூறத்தானா, நான் உள்ளேன் செச்சே! இஃது நான் ஒப்ப முடியாத பிச்சைப் பிழைப்பு ஆகும். நாடாளத் தக்கவர்கள், பட்டியலை நான் தருவேன்! அவரே தேர்தலில் ஈடுபட வேண்டும். அதனை நாடாளும் காமராஜர் நன்றாய் அறிந்திடவேண்டும். ஏறுமாறாக இவர் நடந்திடத் துணிவாரேல். எனக்கா, இவருக்கா, நேருவிடம் செல்வாக்கு என்பதனைப் பார்த்தே விடுகின்றேன், பயம் என்ன? என்று பக்கம் நிற்போரிடம் பக்குவமும் மறந்து, அழகேசனார் பேசி, அகலக் கடைகின்றாராம்.

இத்தனையும், புல்தரையில் படுத்துறங்கும் பாம்புபோல!

படமெடுத்து ஆடுவதும், தீண்டித் தீர்த்துக் கட்டுவதும் அடுத்த படலம் என்று அறிந்தோர் உரைக்கின்றார்.

ஆகவே தம்பி! அங்கொன்றும் வாழவில்லை - அஞ்சாது பணியாற்று!

பதவிக்காக அவர்கள்; பண்பு காத்திட நாம்!

மந்திரிகளாகிவிட மார் உடையப் பாடுபடும், மகானுபாவர், அவர்; மரபு காத்திடும் மாவீரர் வரிசையிலே உள்ளோம் நாம்.

இலட்சங்கள் எம்மிடத்தில் என்கின்றார் அவர்!

இலட்சியமே எமக்குள்ள அணிகலனும், படைக்கலனும் என்கிறோம் நாம்!

அமைச்சுக் கேட்போர் அவர்; அரசு கேட்போர், நாம்!

நம்மை அவர்கள் பழிக்கின்றார்; நாடோ நம்மிடம் பரிவு காட்டுகிறது!

சந்தி சிரித்தது என்றார் அமைச்சர்! நெஞ்சில் இதனைக் கொள் - அந்தப் பழி துடைத்திடப், பகை அழித்திட ஏறுநடை யுடையோனே! எங்கே காட்டு, உன் திறம்!!

வீடெல்லாம் அறிந்திடச் செய், இவர்தம் ஆட்சியால் வந்திட்ட கேடெல்லாம்!

மாடாய் உழைத்து ஓடாய்ப்போனார் மக்கள் என்பதை, மனைதொறும் மனைதொறும் எடுத்துரைத்திடு!

சிங்களச் சீமையிலே செத்திடும் தமிழர் பற்றிச் சிறுவிரலும் அசைக்காத செருக்குக் காணீர் என்று கூறு!

வடக்குக்கு அடிமைப்பட்டு, வாழ்விழந்த தமிழர்களை மேலும் வாட்டி வதைத்திடும் வஞ்சகத்தை விளக்கு நன்றாய்!

சந்தி சிரித்தது, என்றார் அமைச்சர்! தம்பி! உன் பணியால் வீடுதோறும் உள்ளவர்கள், வீழ்த்திடுவோம், வீணராட்சி என்று வீறுகொண்டு எழுந்திடக் காணல் வேண்டும்.

அறம்போன்ற கூர்வாளை, அவனி அறிந்ததில்லை. அஃது நம் கரத்தில் - அச்சம் ஏன், இனி நமக்கு?

சிரித்தாராம்! சிரிக்கட்டும்! இரத்தம் இன்று சிந்திடுவோர் நாம் - ஓர் நாள் வெற்றிப் புன்னகை புரிந்திடுவோம், திருவிடத்தை விடுவிப்போம்.

அதுவரையில், செருக்கு மிக்கோர், சிரிக்கட்டும்; வெட்கமே வேலாகி நம் விலாவைக் குத்தட்டும்; வெற்றி எட்டுத் திக்கும் என்று முரசு கொட்டிய இனம், வீறு கொண்டெழுந்து, விடுதலை காணட்டும்; திராவிடம் மலரட்டும். அப்போது நாம், இன்றைய மாற்றார்களைக் கண்டுகூட, ஏளனச் சிரிப்புச் சிரித்திட மாட்டோம். இன்பத் திராவிடத்தில், பூவையாள் ஈன்றெடுத்த பொற்கொடி, பூங்காவில் துள்ளி விளையாடி, மல்லிகைக் கொடியைத் தூக்கி மாதாவின்மீது வீசும், பாம்போ என்று அன்னை மருளக் கண்டு கைகொட்டிச் சிரித்திடும் - காண்போம்.

அண்ணன்,

19-3-1961