அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


என்னை வாழவிடு!
1

விலைகளைக் கட்டுப்படுத்து!
இரட்சா பந்தன நாளில் இலால்பகதூரிடம் தாய்க்குலம் விடுத்த வேண்டுகோள்.
செஸ்டர் பவுல் கூற்றின் பொருள்.
ஐந்தாண்டுத் திட்டங்கள் பயன் தராமைக்குக் காரணங்கள்
விஷச் சக்கரச் சுழற்சி.

தம்பி!

தாய்க்குலத்தின் தனித்திறமையிலே எனக்கு எப்போதுமே தளராத நம்பிக்கை உண்டு; அந்த நம்பிக்கை மேலும் வளரத்தக்க விதத்திலே ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது; மன நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தத்தக்க நிகழ்ச்சி அது.

இந்தக் கிழமை, வடக்கே உள்ளவர்கள் ஒரு நோன்பு கொண்டாடுகின்றனர்; அதனை ரட்சாபந்தன தினம் என்கிறார்கள் - நோன்பிருந்து கங்கணம் கட்டிக்கொள்வது.

இந்தத் திருநாளைக் கொண்டாடும் தாய்மார்கள், டில்லிப் பட்டணத்தில் லால் பகதூர் அவர்களைக் கண்டு தமது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் கூறிவிட்டு, அங்கு உள்ள முறைப்படி ஒரு ரட்சையை - நோன்புக் கயிறு - அவருடைய கரத்தில் கட்டினார்கள்,

மரியாதை செலுத்தவும் அன்பு தெரிவிக்கவும் மேற் கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சியை, தாய்மார்கள் மெத்த அறிவுக் கூர்மையுடன், இன்று நாட்டின் நாயகர் எதனை மேற்கொள்ள வேண்டும் உடனடியாக என்பதனைச் சுட்டிக் காட்டிட ஒரு நல்வாய்ப்பாக்கிக்கொண்டு, "அண்ணா! இந்தத் திருநாளில் எமக்கொரு பரிசு தரவேண்டும்'' என்று கேட்டனராம்; "என்ன வேண்டுமம்மா?'' என்று கேட்ட லால்பகதூரிடம் அந்தத் தாய்மார்கள், எமது குடும்பங்களுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் வசதிகளைச் செவ்வனே செய்து கொடுக்க, உணவு, உடை, கல்வி ஆகியவற்றைப் பெற்று வாழ்வினை நடாத்த, தாங்கள் உடனடியாக ஒன்று செய்ய வேண்டும்; என்னவெனில்,

பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கள்ளச் சந்தையை ஒடுக்க வேண்டும்.
கலப்படத்தைப் போக்க வேண்டும்.

என்று கூறினராம்!

குற்றுயிராகக் கிடக்கும் கணவன் பிழைத்தெழ வேண்டும் என்பதற்காக, கசியும் கண்களுடன் மருத்துவரின் தாள் தொட்டுக் கும்பிட்டபடிக் கேட்பதுண்டல்லவா, "எனக்கு மாங்கல்யப் பிச்சை தாருங்கள்'' என்று, அதுபோலவும், பெற்றெடுத்த குழந்தைக்குப் பேராபத்து ஏற்பட்டது கண்டு, மருத்துவரிடம் சென்று, "என் குலவிளக்கு அணையாதிருக்க வழி கூறுங்கள்.'' "என் குலக்கொடி பட்டுப்போகாதிருக்க ஒரு மார்க்கம் காட்டுங்கள்'' என்று கெஞ்சி நின்றிடும் முறையிலும், இந்தத் தாய்மார்கள், எமது குடும்பம் சிதையாதிருக்க, எமக்கு வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்திடச் செய்யுங்கள் என்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள லால்பகதூரிடம் கேட்டு நின்றனர்.

லால்பகதூர் ஏழைக்குடியில் பிறந்தவர், வாழ்க்கை இன்னல்களை நன்கு உணர்ந்தவர். வாழ்க்கை இன்னல்களை ஏற்றுக்கொள்ளும் துணிவற்று, குடும்பம் என்பதே பெரியதோர் சுமை, இதனைத் தாங்கிட நம்மால் ஆகாது என்று ஒதுங்கி விடாமல், ஒண்டிக்கட்டையுமாகிவிடாமல் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும், அதனை நடத்தி வருபவர். எனவே அவருக்கு, ஏழை, நடுத்தர வகுப்பினர் ஆகியோரின் இன்னல்கள் பற்றி நன்கு தெரிந்திருக்க நியாயம் இருக்கிறது. எனவே, "அண்ணா! எமக்கு உணவு, உடை இவைகளேனும் கிடைத்திடச் செய்திடுவீர்!'' என்று அந்தத் தாய்மார்கள் கேட்டு நின்றது கண்டபோது அவருடைய கண்களில் நீர் துளித்திருக்கும்,

மாடுமனை கேட்கவில்லை.
ஆடை அணி கேட்கவில்லை.
ஆடம்பரப் பொருள் கேட்கவில்லை.

உணவு - உடை - குடும்பம் நடாத்திச் செல்ல வழி, இவைகளையே கேட்டனர் அந்த மாதர்கள்.

அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் - நாலாவது ஐந்தாண்டுத் திட்டம் - இருபத்து இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிடப் போகிறார்கள் சர்க்கார் - நாட்டை வளப்படுத்த. செல்வம் கொழித்திடும் நிலை காண! தெரியுமா, தம்பி! 22,000 கோடி ரூபாய்.

இந்த நிலையின்போது, அந்தத் தாய்மார்கள் கேட்டிருப்பது, உணவு, உடை இவையே. என்ன அதன் பொருள்? ஆண்டு பதினேழு ஆகியும், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களைக் காட்டிய பிறகும், எல்லோருக்கும் உணவு கிடைத்துவிட்டது, உடை இருக்கிறது, உறையுள் இருக்கிறது என்று கூறிடத்தக்க நிலை நாட்டிலே இல்லை. இதனை மறந்த ஒரு தலைவர் இருக்கிறார். அவர் அரசோச்சும் நிலைபெற்றும் இருக்கிறார், அவரிடம் சென்று முறையிடுவோம் என்று தோன்றிற்று அந்தத் தாய்மார்களுக்கு என்பதன்றோ பொருள்.

பாலுந்தேனும் கலந்தோடும்! சுயராஜ்யம் சுகராஜ்யமாக இருக்கும்! தனியொருவனுக்கு உணவில்லை எனும் முறை ஒழிந்திடும்! என்றெல்லாம் காங்கிரசார் எழுப்பிய முழக்கமதைச் செவிமடுத்திருப்பாரன்றோ, இந்தத் தாய்மார்கள். அஃதேபோல் நடந்திடும், நாடு சீர்படும், வாழ்வு வளம்பெறும் என்று எதிர் பார்த்திருக்கிறார்கள். அவசரப்படேல்! என்றனர், ஆமென்றனர் தாய்மார்கள், வித்திடுகிறோம் என்றனர் ஆட்சியினர், முளை காணத் துடித்தனர் தாய்மார்கள்; கதிர் ஒருமுழம் காணீர்! என்றனர் நாட்டின் காவலர், களிநடமிடுவோம் என்றனர் மாதர்கள்; பசிப்பிணி ஒழிந்திடும், வறுமை ஒழிந்திடும் என்று கருதினர். ஆனால் மேலும் மேலும் அறுவடை நடந்தது; நிரம்பி நிரம்பி வழிந்தது களஞ்சியம், ஏழை எளியோர் குடிலில் அல்ல, எத்தர்கள் கட்டிய சூதுக் கோட்டைகளில். வயலின் பசுமை, தொழிலின் மாண்பு என்பவை பொன்னாகிப் பொருளாகிப் பருகுவனவாகிப் பூசுவனவாகி உடுப்பனவாகி உல்லாசமுமாகி, உப்பரிகை வாழ்வோரிடம் சென்று சிறைப்பட்டிடவே, ஏழையர் வறியராயினர், ஏக்கமே அவர்கள் கண்டு பெற்றது. இந்நிலை இவராட்சியின்போது ஏற்பட்டுவிட்டதனை எத்தனை பக்குவமாகச் சுட்டிக்காட்டுகின்றனர் தாய்மார்கள், எமக்கொரு வரம்தாரும்! உயிர் இருந்திட வழி கூறும்!! என்று.

எவரும் மலைத்து நிற்பர் இந்நாட்டில் இந்தப் பதினேழு ஆண்டுகளாகக் கொட்டப்பட்ட பணத்தின் அளவினை அறிந்திடும்போது - எனினும், அத்தனையும் தமக்குப் பயன்படாமல் எங்கெங்கோ சென்றுவிட்டதை உணரும்போது, உள்ளம் நொந்திடத்தானே செய்யும்? அந்நிலை பெற்றவரெனின் அரிவையர், இடித்துரைப்போர் பலர் உளர், நாம் இவர் இதயம் தொட்டிடும் இனிய முறையில் நாடு உள்ள நிலையைக் கூறுவோம் என்று கருதி - மெல்லியலாரன்றோ மாதர் - நோன்புக் கயிறு கட்டிவிட்டு, லால்பகதூரிடம் கேட்டிருக்கிறார்கள்,

விலைகளைக் கட்டுப்படுத்துக
கள்ளச் சந்தையை ஒழித்திடுக
கலப்படத்தை ஒழித்திடுக!

என்று. ஆண்டு பதினேழு ஆகியும் இந்த மூன்று அடிப்படை களையும் செய்திடக் காணோமே, நாங்கள் எங்ஙனம் குடும்பம் நடாத்துவது? உண்ணும் பொருளில் மண் கலந்து உள்ளதை மறைத்து விலை ஏற்றி, அளப்பதில் நிறுப்பதில் அநியாயம் செய்து எமை அலைக்கழிக்கின்றார் அறமறியார். அரசு முறை அறிந்தவரே! ஏழையின் துயர் ஈதெனத் தெரிந்தவரே! விலைகளைக் கட்டுப்படுத்தி, கள்ளச் சந்தையை அழித்து, கலப்படத்தை ஒழித்து எமைக் காத்திடுவீர் என்று கேட்டனர் அக் காரிகையர்.

பக்ராநங்கல் பாரீர்! தாமோதர் திட்டம் காணீர்! சித்தரஞ்சனின் சிறப்பறிவீர்! பிலாய் ரூர்கேலா பெருமை காணீர்!! என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பதினேழாண்டுகள் ஓட்டியாகிவிட்டது, இனியும் ஒட்டிய வயிற்றினருக்கு இந்தப் பட்டியல் அளித்திடுதல் புண்ணிலே புளித்ததைத் தெளித்திடுவது போன்ற செயலாகும். எமக்கு வாழ வழி செய்து காட்டுங்கள்! இந்த நன்னாளில் எமது வேண்டுகோள் இதுவே! உணவு! உடை! பிள்ளை குட்டிகள் பிழைத்திருந்து படித்திட வசதி! இவை போதும், இவற்றினை எமக்கு அளித்திடுக! - என்று கேட்டுள்ளனர். இம்மட்டோடு விட்டார்களில்லை மாதர்கள்.

லால்பகதூரின் கரத்திலே அவர்கள், உடன்பிறப்பாளர் எனும் பரிவுணர்ச்சியுடன் கட்டிய "ரட்சை' இருக்கிறதே, அது புதுவிதமானதாம்! அந்த ரட்சையில் ஒரு குழந்தையின் படம் பொறிக்கப்பட்டிருக்கிறதாம்! அந்தப் படத்திலே

என்னை வாழவிடு!
விலைகளைக் கட்டுப்படுத்து

என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாம்!

நிச்சயமாக லால்பகதூரின் நெஞ்சம் நெகிழ்ந்துதான் இருக்கும். படிப்போருக்கே நெகிழ்கிறதே.

முதலாளிகள் கேட்கிறார்கள் லால்பகதூரை; புதிய புதிய யந்திரங்கள் வாங்கிட அன்னியச் செலாவணி உரிமை கொடுங்கள் என்று.

தொழிலதிபர்கள் கேட்கின்றனர், எமக்குக் கடன் கொடுங்கள், வட்டியின்றி அல்லது மிகக் குறைந்த விகிதத்தில் என்று.

குழந்தை கேட்கிறது, என்னை வாழவிடு! விலைகளைக் கட்டுப்படுத்து!! என்று.

புதிய மாளிகை கட்ட இரும்புக் கம்பங்களும் "டன் டன்னாகச்' சிமிட்டியும் தருக, உடனே - என்று கேட்டிடும் பணம் படைத்தான்கள் உளர் - லால் பகதூர் கண்டதுண்டு,

சென்ற ஆண்டு கிடைத்ததைவிட இவ்வாண்டு கிடைத்த இலாபம் குறைவாக இருக்கிறது; இந்த நஷ்டத்தால் மெத்தக் கஷ்டப்படும் எமக்கு, வரியில் சலுகை செய்தளியுங்கள்; நாங்கள் செல்வத்தைப் பெருக்கிடும் சேவையில் ஈடுபட்டு இருப்பவர்கள் என்று கேட்டிடும் சீமான்கள் உள்ளனர்; லால்பகதூர் பார்த்திருக்கிறார்.

ஒரு பச்சிளங் குழந்தை என்னை வாழவிடு! விலையைக் கட்டுப்படுத்து!! என்று கேட்டிடும் காட்சியை அவர் கண்டதில்லை; காண்கிறார்; காணச் செய்தனர் தாய்மார்கள்.

எத்தனை உள்ளம் உருக்கும் நிகழ்ச்சி இது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளோர், காணக் கூசிடத் தக்கதோர் நிலை நாட்டிலே நெளிகிறது என்பதைக் காட்டிடவன்றோ, குழந்தையின் படம் பதித்த "ரட்சை'யைக் கட்டினார்கள் தாய்மார்கள்.

விலைவாசி விஷமென ஏறியபடி இருப்பது, எத்தகைய விபரீதமானது, என்னென்ன கொடுமைகளுக்கு வழி செய்திடக் கூடியது என்பதனை விளக்கிட, அஃது எதிர்காலத்தையே ஆபத்தானதாக்கத்தக்கது என்பதனை எடுத்துக்காட்ட, ஒரு குழந்தை, நான் வாழவேண்டும், நான் வாழவேண்டுமானால் என்னை வளரச் செய்திட என் குடும்பம் வழி பெறவேண்டும், அந்த வழி கிடைக்கவேண்டுமானால், விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கூறிடுவதுபோல,

என்னை வாழவிடு
விலைகளைக் கட்டுப்படுத்து

என்று கேட்டுக்கொள்வதாக வாசகத்தைப் பொறித் தளித்துள்ளனர்.

கட்டி முடித்த தொழிற்கூடங்கள், அமைத்தாகிவிட்ட தேக்கங்கள், உருண்டு ஒலி கிளப்பும் யந்திரச் சாலைகள் எனும் இவைகளைப் படம் போட்டுக் காட்டித்தான் என்ன பலன், இந்தக் குழந்தையின் படம் கண்வழிச் செல்லாமலேயே எவர் நெஞ்சிலும் சென்று பதிந்துவிடுகிறதே!

உள்ளத்தை உருக்கி விடுகிறதே!! தாயைத்தான் தேடுகிறேன் என்று புலம்பிடும் குழவியைக் காட்டிலும், உள்ளத்தை உருகச் செய்திடக்கூடிய காட்சி இருந்திட முடியாது என்று இது நாள்வரை நான் எண்ணிக் கொண்டிருந்தேன், தம்பி! இந்தக் காட்சி இருக்கிறதே - படமாக மட்டுமே உளது எனினும் - அதனையும் மிஞ்சுவதாக உளது. நான் பிழைப்பதும் மடிவதும், ஆட்சிப் பொறுப்பின் முதல்வரே! உமது கரத்தில் இருக்கிறது. என்ன செய்து என்னை வாழ வைத்திடுவது என்று எண்ணி வாட்டம் கொள்ளவேண்டாம், நானே சொல்கிறேன் தக்க வழிதனை; விலைகளைக் கட்டுப்படுத்துங்கள், நான் பிழைத்துக்கொள்வேன் என்றன்றோ குழந்தை கூறுவதாகத் தெரிகிறது "ரட்சை'யில் பொறித்துள்ள வாசகத்தைப் பொருள் பிரித்துப் பார்த்திடும்போது.

எந்த ஒரு ஆட்சியும் இந்த நிலை வந்துளது என்பதனைக் கண்டு கண் கசியாதிருந்திட முடியாது. அதிலும் குடும்பம் நடாத்தி, ஆங்குக் குமுறலும் கொதிப்பும், பசித் தீயினால் பதைப்பும், பிணிக் கொடுமையால் வேதனையும் கிளம்பிடுவதைக் கண்டு மனக் கலக்கம் கொண்ட பழக்கம் பெற்றுள்ள எவருக்கும் கண் கசிந்திடாதிருந்திட முடியாது.

இல்லை! இல்லை! மிகைப்படுத்திக் கூறுகிறார்கள்; உணவு நிலைமை அப்படியொன்றும் மோசமாக இல்லை, விலைகள் ஓரளவு ஏறி இருக்கிறது என்றாலும், பெரிய நெருக்கடி ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்று இங்கு நாட்டின் நாயகர்கள் பேசுகின்றனர் - எதிர்ப்புக் குரலையும் ஏக்கப் பேச்சினையும் மறுத்திடவும் மறைத்திடவும்.

இலண்டனில் உள்ள இதழ் - இந்திய சர்க்காரிடம் ஆதரவு காட்டும் இதழ் - எழுதுகிறது.

சீனப்படையெடுப்பின்போது எத்தகைய நெருக்கடி நிலை இருந்ததோ, அதுபோன்றதோர் நெருக்கடி நிலைமை உணவு முனையிலே இன்று இந்தியாவில் ஏற்பட்டு விட்டிருக்கிறது என்று.

இதனையும் லால்பகதூரின் அரசு மறுத்திடும்; ஆனால், வார்த்தைகள் மறுப்புரைக்குமே தவிர, இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதனைக் காட்டுகின்றன? நெருக்கடி நிலை இல்லாமலா,

கோதுமை! கோதுமை!
மேலும் மேலும் கோதுமை!
அரிசி! அரிசி! மேலும் சிறிதளவு அரிசி!

என்ற "கோஷமிட்டபடி' இந்தியத் தூதரக அலுவலர்களும் துரைத்தன மேலதிகாரிகளும் பல்வேறு நாடுகள் சென்றபடி உள்ளனர்.