அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


என்னை வாழவிடு!
2

கேட்டோம், தருகிறார்கள்!
வருகிறது உணவுப் பண்டம் கப்பல் கப்பலாக!

என்று துரைத்தனம் அறிவிப்பது எதற்காக? அச்சம் கொள்ளாதீர், கவலை காட்டாதீர் என்று கேட்டுக்கொள்ளவன்றோ.

உணவு உற்பத்தி பெருகி வருகிறது! விளைச்சலின் தரம் மிகுந்திருக்கிறது என்று முன்பு பேசிய பேச்செல்லாம் பொய்த்துப் போச்சே.

எத்தனை காலத்துக்கு உணவுப் பொருளுக்காக வெளிநாட்டை நம்பிக்கிடப்பது - வேதனையாக இருக்கிறது - வெட்கமாகக்கூட இருக்கிறது - இனி அந்தப் பழக்கத்தை விட்டொழிக்கத் திட்டமிட்டுவிட்டோம் - வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருளை வாங்கமாட்டோம் என்று முழக்கிய உறுதி மொழிகள் உயிரற்றனவாகிவிட்டனவே.

இப்போது அமெரிக்கா அனுப்புகிறது; பாகிஸ்தான் விற்றிருக்கிறது; தாய்லாந்துக்கு ஆட்கள் போகிறார்கள் அரிசி வாங்க என்று செய்திகளைச் சர்க்காரே தந்தபடி உள்ளனர்.

ஒரு பெரிய பஞ்சம், பெருவெள்ளம் அல்லது மழையே பொய்யாத நிலை, நிலநடுக்கம் எனும் ஏதேனும் ஓர் இயற்கைக் கோளாறு ஏற்பட்டு, ஒரு நாடு சோற்றுக்குத் திண்டாடும்போதும், பெரும்போரிலே சிக்கி வயல்களின் பசுமை காய்ந்து போய்விடும் போதும் வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களைக் கேட்டுப் பெறுவது முறை, நியாயம். ஆனால், அவ்விதமான இயற்கைக் கேடுகளோ, மூட்டிவிடப்பட்ட போரோ ஏதுமின்றியே, நாம், உணவுப் பொருளுக்காக, அமெரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து எனும் பல நாடுகளிடம் தஞ்சம் அடைகிறபோது, உதவி பெறுகிறபோது, இங்கு இந்த நிலைமை ஏற்படக் காரணமாக இருந்த அரசிடம் மதிப்பா பிறந்திடும்? அனுப்புகிறார்கள் உணவுப்பொருள். . . ஆனால், அவைகளை அனுப்பும்போது எத்தகைய கேலிப் புன்னகை எழுந்ததோ யார் கண்டார்கள்!

அமெரிக்கத் தூதுவர் செஸ்டர் பவுல்ஸ் கூறுகிறார்,

"இப்போது நாங்கள் அனுப்பத் திட்டமிட்டிருப்பது நாற்பது இலட்சம் டன் கோதுமை, 300,000 டன் அரிசி. இதுவரை நாங்கள் அனுப்பியிருப்பது 230 இலட்சம் டன் உணவுப் பொருள்'' என்கிறார்.

படிக்கும்போது இந்தச் செய்தி பாகெனவா இனிக்கும்?

இன்று நேற்றல்ல, நெடுநாட்களாக உங்களுக்கு நாங்கள் உணவுப் பொருளை அனுப்பியபடி இருக்கிறோம் என்று சுட்டிக் காட்டுவது - குத்தலுக்காக அல்ல என்றே வைத்துக்கொள்வோம் - பொருளற்றதா?

இப்படி உணவுப்பண்டத்துக்கே திண்டாடுகிறீர்களே! இத்தனைக்கும் விவசாய நாடு என்கிறீர்கள், கிராமங்களே முதுகெலும்பு என்கிறீர்கள், புதிய தேக்கங்கள் கட்டியிருக்கிறீர்கள், அணைகள் பலபல என்று பட்டியல் காட்டுகிறீர்கள், நவீன விஞ்ஞான முறை எனப் பேசுகிறீர்கள், ஜப்பானிய முறை என்கிறீர்கள், சத்து உரம் என்கிறீர்கள், மின்சார இறைப்பு என்கிறீர்கள், சமுதாய நலத் திட்டமென்கிறீர்கள், கூட்டுறவு என்கிறீர்கள், நிலச்சீர்திருத்தச் சட்டம் என்கிறீர்கள், பொறுக்கு விதை, பொலிகாளை, எருக்குழி, மண் அரிப்புத் தடுப்பு என்று பலப்பல பேசுகிறீர்கள், என்றாலும் இந்த ஆண்டுகளில் நாங்கள் டன்களை உங்களுக்கு அனுப்பி இருக்கிறோமே, என்ன ஆயிற்று உங்கள் திட்டங்கள்? என்ன கதியாகிவிட்டது கொட்டிய ஆயிரமாயிரம் கோடிகள் - என்றெல்லாம் செஸ்டர் பவுல்ஸ் கேட்கிறார் என்றல்லவா பொருள்! சுதந்திர தின விழாவன்று கிடைத்திடும் பொற்பதக்கமா இது? பொறுப்பிலுள்ளவர்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும், போய்ச் சேர்ந்ததுகள் அல்ல!

தம்பி! அமெரிக்கத் தூதர் சொல்கிறார், எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம் உணவுப் பொருள். எம்மிடம் தயாராக இருக்கிறது. ஏற்றிச் செல்லும் கப்பல்களும் உள்ளன, தேவைக்கு அதிகமாகவே. ஆனால் நாங்கள் ஏற்றி அனுப்பும் பொருளை இறக்கி எடுத்திட முடியவில்லையே இந்திய சர்க்காரால், நாங்கள் என்ன செய்ய என்று கேட்கிறார். ஆமாம் என்கிறார்கள் லால்பகதூர்கள்; அப்படியானால். . . . . என்று கேட்கிறார் செஸ்டர் பவுல்ஸ். துறைமுகத்தில் பண்டங்களை இறக்க. . . . என்று இழுத்துப் பேசுகிறது இந்தியப் பேரரசு. அதற்கான வழிமுறை கூற, உடனிருந்து உதவ நிபுணர்களையும் அமெரிக்காவிலிருந்து தருவிக்கிறேன் என்று கூறுகிறார் செஸ்டர் பவுல்ஸ்.

தம்பி! ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன் - அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள் இங்கு வருவதை நான் குறை கூறவில்லை - அதுவும் இல்லையென்றால் உணவு நெருக்கடி பேராபத்தை மூட்டிவிடும். இந்நிலையில், உணவுப் பொருளை இனாமாகவோ, கடனுக்கோ, பண்ட மாற்றுக்கோ பணம் பெற்றுக்கொண்டோ கொடுத்துதவுவோர் பலப்பல இலட்சக்கணக்கானவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறவர்கள் ஆகிறார்கள் - அனைவரின் நன்றிக்கும் உரித்தானவர்களாகிறார்கள்; இதனை நான் மறந்திடவுமில்லை, மறுத்திடவுமில்லை; ஆனால், 17 ஆண்டு ஆட்சி நடாத்திய பிறகு. இந்த நிலையைத்தானா நாடு பெற வேண்டும், காங்கிரசின் மூலம் என்று கேட்கிறேன்.

தம்பி! ரேவுத் துறையிலே மூட்டைகளை எப்படி, விரைவாக, இலகுவாக இறக்குவது என்பதற்கு அமெரிக்க நிபுணர்கள் வருகிறார்கள் என்று கூறினேனல்லவா! வருகிற நிபுணர்கள் இந்தத் துறைக்காக மட்டுமல்ல, என்னென்ன துறைகளுக்கு, நிபுணர்கள் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்தபடி இருக்கிறார்கள், சொல்லவா! கேலிக்காக அல்ல, நாடும், அதற்கு அமைந்துள்ள ஆட்சி முறையும் இருக்கிற இலட்சணத்தைத் தெரிந்துகொள்ளச் செய்வதற்காக.

விவசாயிகளுக்குக் கட்டுபடியாகக்கூடிய விலையைக் கண்டறிந்து நிர்ணயம் செய்ய அமெரிக்காவிலிருந்து ஒரு நிபுணர் குழு வருகிறது; தாங்களாக அல்ல; சர்க்காரின் விசேஷ அழைப்பின் பேரில்.

மண் வளம் பெருக்க, பாசன முறையைத் தரமானதாக்க, வடிகால் பிரச்சினையை விளக்கிட, ஒரு நிபுணர் குழு - அமெரிக்காவிலிருந்து; பயிர் கெடுக்கும் பூச்சிகளை அழித்திட, பூச்சி மருந்தை விமான மூலம் தெளித்திட, முறைகூற, உடனிருந்து உதவி செய்ய ஒரு அமெரிக்க நிபுணர் குழு வருகிறது.

புதிய பண்ணைகள் அமைத்திடத் திட்டம் தயாரிக்க ஒரு குழு.

இங்கு நிறைவேற்றப்பட்ட நிலச் சீர்திருத்த சட்டத்தின் பலன்களைக் கண்டறிய ஒரு குழு.

தம்பி! எனக்கே சலிப்பாக இருக்கிறது, முழுப் பட்டியலைக் கூற. ஒன்றை மட்டும் கூறிவிடுகிறேன் - பொருளும் திட்டமும், நிபுணர்களும் மட்டும் அல்ல, ஆயிரம் பொலிகாளைகள் கூட வருகின்றன அமெரிக்காவிலிருந்து.

உணவு முனையில் இதுவரை துரைத்தனம் மேற்கொண்ட முறைகளும் திட்டங்களும் எந்த அளவு பலனற்று, பாழ்பட்டுப் போயிருந்தால், இந்த அளவுக்கு அமெரிக்க உதவி நமக்குத் தேவைப்பட்டிருக்கும் என்பதை மட்டும், எதற்கெடுத்தாலும் எரிச்சல் கொள்பவர்களை விட்டுவிட்டு,

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'

என்ற பண்பறிந்தவர்களிடம் மட்டுமாவது கேட்டுப்பார்.

திட்டமிடுகிறார்கள், தெளிவில்லை; ஆயிரமாயிரம் கோடிகளை அள்ளி வீசுகிறார்கள், ஓரவஞ்சனை நடக்கிறது, ஒழுங்கீனம் இருக்கிறது, ஊழல் மலிந்திருக்கிறது என்று நம்மைப் போன்றவர்கள் கூறியபோதெல்லாம், காங்கிரஸ் துரைமார்கள், கனைத்தனர், கண் சிமிட்டினர், காகிதத்தில் எழுதப்பட்டிருந்த புள்ளி விவரங்களைப் படித்துக்காட்டினர், நமக்குப் பொருளாதார அறிவு போதுமான அளவுக்கு இல்லை என்று நையாண்டி செய்தனர் - நினைவிலிருக்கிறதல்லவா? இப்போது காங்கிரஸ் அரசில், மேல் மட்டத்திலேயே ஆராய்ச்சி நடத்துகிறார்கள்,

திட்டங்கள் ஏன் போதுமான பலன் தரவில்லை என்பதுபற்றி,

காங்கிரஸ் தலைவர்களிலே சிலர், திட்டம் தீட்டியதிலே தவறு இல்லை, அதை நிறைவேற்றிய முறையிலேதான் கோளாறு வந்துவிட்டது என்கின்றனர்.

திட்டக் குழுவின் துணைத் தலைவரான அசோக் மேத்தாவோ, இல்லை! இல்லை! நிறைவேற்றிய முறைகளிலே மட்டுமல்ல, திட்டங்களிலேயே கோளாறு இருக்கிறது என்று கூறுகிறார்.

தொழில் மந்திரியாக உள்ள சஞ்சீவய்யா, "திட்டங்களினால் ஏன் தக்க பலன் கிடைக்கவில்லை என்பதைக் கண்டறிய வேண்டும். நாம் இதுவரை, திட்டங்கள் வெற்றிபெற, பணம் வேண்டும், மூலப்பொருள் வேண்டும் என்பது பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்துவிட்டோம்; ஏமாந்துவிட்டோம்; திட்டங்கள் வெற்றிபெற மக்களிடம் இலட்சிய ஆர்வம் எழ வேண்டும் - வயலில் உழைப்பவன், தொழிற்சாலையில் வேலை செய்பவன் எனும் எவருக்கும் திட்டம் வெற்றிபெற நான் பாடுபடுவேன், திட்டத்துக்காக நான் உழைத்தால், எனக்கு இன்னின்னது கிடைத்தாலும் என் வாழ்க்கை வளமாகும் என்ற நம்பிக்கை எழவேண்டும், அவ்விதமான ஆர்வம் வேண்டும். அவ்விதமான ஆர்வம் எழத்தக்க விதமாகத் திட்டங்களின் விளைவுகள் இருந்திட வேண்டும். அது இல்லாததால்தான், திட்டங்கள் மூலமாகக் கிடைக்கவேண்டிய பலன் கிடைக்க வில்லை'' என்று பேசுகிறார்.

திட்ட அமைச்சராக இருந்த நந்தா அவர்களோ, திட்டத்திலே தவறு இல்லை. முறைகளிலே குறை இல்லை, சத்தியம் கெட்டுவிட்டது. இதோ அழைக்கிறேன் சாதுக்களை, அவர்கள் அதர்மத்தை அழித்தொழித்துத் தர்மத்தை நிலை நாட்டுவர் என்று உபதேசிக்கிறார்.

லால்பகதூர், நிலைமைகளைக் கவனித்த பிறகு, சரி சரி, பெரிய பெரிய தொழில்களிலே போய்ச் சிக்கிக்கொள்ள வேண்டாம்; இனி, திட்டத்தில் உடனடியான பலன் தரத்தக்க, மக்களின் அன்றாடத் தேவைப் பொருள்களைப் பெற்றுத் தரத்தக்கவைகளிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

திட்டத்துக்காகவோ பெரும் பொருள் செலவாகிவிட்டது; வெளிநாடுகளில் பெரிய அளவு கடன் வாங்கியாகிவிட்டது; மக்கள் மீது தாங்க முடியாது வரிச் சுமையை ஏற்றியாகிவிட்டது; விளம்பரமோ அமோகமாகச் செய்தாகிவிட்டது; விழாக்களோ ஆடம்பரமாக! கடைசியில் உட்கார்ந்து பேசுகிறார்கள் ஒவ்வொருவராக, முடிவிலே நாட்டுக்குத் தெரிவிக்கிறார்கள்,

திட்டம் போதுமான, எதிர்பார்த்த பலன் தரவில்லை,

எனவே, இனித் திட்டமிடுவதிலும், திட்டத்தை நிறைவேற்றுவதிலும் ஒரு மாற்றம் செய்யப்போகிறோம் என்று.

திட்டங்களின் மூலமாகக் கிடைக்கவேண்டியவைகள் கிடைக்காது போன நிலையில் வெறும் பணம் மட்டும் தண்ணீர் பட்ட பாடு என்பார்களே, அதுபோலப் புரள ஆரம்பித்ததால், விலைகள் ஏறின. விசாரம் வளர்ந்தது; விலைகள் ஏறவே கூ- உயர்ந்தது; கூ- உயரக் கண்டதும் விலையை மீண்டும் ஏற்றினர்; விலை மேலும் ஏறவே கூ- உயர்வு மீண்டும் தேவைப்பட்டது; இவ்விதம் ஒரு விஷச் சக்கரம் சுழல்கிறது. அதன் கொடிய பற்களிலே நாடு சிக்கிச் சங்கடப்படுகிறது.

பணப் புழக்கம் அதிகமாகி உள்ள அளவுக்குப் பண்டங்களின் உற்பத்தி அளவும் வளர்ந்தால் நிலைமையில் நெருக்கடி ஏற்படாது; பசு தின்னும் தீனி அளவுக்காவது பால் கிடைக்கவேண்டுமே! அவ்விதமின்றி தீனிக்குப் பசுவாக இருந்து, பாலுக்காகச் செல்லும்போது, பசு காளையாகிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும்! அந்த நிலை இப்போது. தம்பி! திட்டங்களுக்காகக் கொட்டிக் கொடுத்தாயிற்று; அதற்காக அவிழ்த்துக் கொட்டப்பட்ட பணம் ஊரெங்கும் உருள்கிறது. ஆனால், அந்த அளவுக்கு பண்டங்கள் பெருகவில்லை திட்டத்தின்படி. எனவே பண வீக்கம்; பண வீக்கத்தால் விலை ஏற்றம்; விலை ஏற்றத்தால் பணத்தின் மதிப்பு சரிந்துவிட்டது!

திட்டக் கமிஷனில் உள்ள பொருளாதார நிபுணர் அகர்வால்,

"ரூபாயின் மதிப்பு கட்டுப்படியாகவில்லை' என்கிறார்.

"ரூபாயின் மதிப்பு வீழ்ந்துவிட்டது என்றால், என்ன பொருள்? விலைவாசி ஆறு மடங்கு அதிகமாகி விட்டது என்று பொருள். இந்த ஏற்றம் மக்கள் தாங்கக் கூடியதல்ல.'

இதனையும் பொருளாதார நிபுணர் அகர்வால் விளக்கியுள்ளார்.

இந்த நிலையில், தம்பி! தாய்மார்கள், லால்பகதூரிடம் வேண்டுகோள் விடுத்ததிலே தவறென்ன இருக்க முடியும்?

வாழவிடு
விலையைக் குறை!

என்பதுதான் இன்று நாடெங்கும் எழுந்துள்ள முழக்கம்.

ஆனால், எல்லா முழக்கங்களையும்விட, லால்பகதூரின் உள்ளத்தைத் தைக்கத்தக்கதாக, எவர் நெஞ்சையும் நெகிழ்ந்திடச் செய்யத்தக்கதாக அமைந்துவிட்டது, தாய்மார்கள், லால்பகதூருக்குத தந்த "ரட்சை'யில் குழந்தையின் உருவத்தைப் பொறித்து, அதிலேயே,

என்னை வாழவிடு!
விலைகளைக் கட்டுப்படுத்து!!

என்றும் பொறித்திருப்பது.

பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு, நாட்டின் ஆளவந்தார்க்கு, இத்தகைய ஒரு வேண்டுகோள் தரப்படுகிறது. அந்த நிலைக்கு ஆட்சியிலுள்ளோர், நாட்டினைக் கொண்டுவந்துவிட்டனர். ஆனால், காமராஜர் கூறுகிறார், "எம்மையன்றி எவருளார் ஆள!' என்று!! என்ன செய்வது, தம்பி! சிரிப்பதா அழுவதா! தெரியவில்லையே!

அண்ணன்

30-8-1964