அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!
1

தேர்தல் ஆர்வத்தை வரவேற்கிறேன்
"அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாள்!'
கழகத்துக்கு அச்சாணி அருமைத் தம்பிகளே!
உள்ளன்பு முதலில்! உடன்பாடு பின்பு!
"திமுக இல்லாத நிலையில் தமிழகத்து அரசியலைப் புரிந்துகொள்ள முடியாது!'
வலக் கம்யூனிஸ்டுகள் காடுமலை கடந்து பேச வருகிறார்கள்!
ஆறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு கண்டுள்ளோம்!

தம்பி!

நாடெங்கும், வீடெல்லாம் தேர்தல் பற்றிய பேச்சொமேலோங்கி இருந்திட காண்கின்றாய். "சூடும் சுவையும் நிறைந்த பேச்சு'. காரணம் கணக்கு இணைந்த பேச்சு! முன்னாள் இந்நாள் நிலைமை விளக்கம் காட்டும் பேச்சு! அங்கு முன்போல் இல்லை! இங்கு முன்பு இருந்ததைவிட ஆர்வம் அதிகம் என்பனபோன்ற பேச்சுக்கள் எங்கும் ஒலித்துக்கொண்டுள்ளன. உமது கருத்து என்ன? எனக்கு நிலைமை நன்கு புரிந்ததால்தான் இவ்விதம் கூறுகிறேன். எவரெவரிடம் பேசவேண்டுமோ அவர்களிட மெல்லாம் பேசிப் பார்த்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். இன்னின்னார் நம் பக்கம் நிற்பார்கள் என்ற உறுதியைப் பெற்ற பிறகே கூறுகிறேன்! என்ற இவ்விதமான பேச்சு பலப்பல! பொதுவாக பொதுத் தேர்தல் பற்றிய பேச்சு பலமாகிவிட்டது.

இது தவறு, தேவையற்ற பரபரப்பு, பிற அலுவல்களைக் கெடுத்திடும் காரியம், நாட்டின் பொதுப் பிரச்சினைகளைக் கவனிக்கும் போக்கைப் பாதிக்கும் நிலைமை இது. ஆகவே இது தீது என்று கூறுவார் உளர்.

ஆனால் மக்களாட்சி முறை பொருளும் பயனும் தரத்தக்கதாக இருந்திட வேண்டுமானால், பொதுத் தேர்தல் பற்றி, நாட்டு மக்கள் இவ்விதமான ஆர்வம் காட்டுவதும், காரணம் கண்டறிவதும், கணக்குப் போட்டிடுவதும் தேவை, கடமை, வரவேற்கத்தக்க நிலைமை என்ற கருத்துடையவன் நான் என்பதை அறிவாய்.

அக்கறையற்று, ஆர்வமற்று, கடமை உணர்ச்சியற்று, எப்படியோ ஆகட்டும், எவரோ அரசாளட்டும் என்ற போக்கு கொள்வது ஜனநாயகமாகாது; பொறுப்புணர்ச்சியு மாகாது. ஆகவே நாடெங்கும் மிகுந்துள்ள தேர்தல் ஆர்வத்தை நான் வரவேற்கிறேன்.

மலர்க்குவியலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டே, மணம் தரும் இனிமையை உணராதிருப்பதுபோல, மழலை கேட்டும் புன்னகை காட்டிடாது இருப்பதுபோல, இசைக் கூடத்திலே அமர்ந் திருந்தும், இடித்த புளியாகக கிடப்பதுபோல, நாட்டு அரசியல் வாழ்வை உருவாக்கக்கூடிய பொதுத் தேர்தலுக்கான சூழ்நிலை உருவாகும்போது, நமக்கென்ன என்ற முறையிலே இருந்திடுவது; இயல்பை அறிந்திடாதார், இனிமை நுகர்ந்திட முடியாதாரின் போக்குக்கு ஒப்பானதாகும். அத்தகையோரின் தொகை குறைந்து விட்டது. பொதுத் தேர்தல் என்பது நாம் மேற்கொள்ளவேண்டிய பொறுப்பு என்ற கடமை உணர்ச்சி மிகுந்திருக்கக் காண்கிறேன். வரவேற்கிறேன்.

பொதுத் தேர்தலில் பொது மக்கள் ஆர்வம் காட்டாதிருந்திடின், அது கட்டாயக் க-யாணம்போல, ஒப்புக்கு உண்ட விருந்துபோல, சுவையற்றதாகிப் போகும். தமிழகத்தில், எந்த முனையிலும் அந்த நிலை இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலும், அளவிலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் ஆர்வம் காட்டுகின்றனர். தம்மை ஜனநாயகத்துக்குத் தகுதி உள்ளவர்கள் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகின்றனர் மகிழ்ச்சி.

அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாளாகும் என்று ஆங்கில அறிஞனொருவன் சொன்னது முற்றிலும் உண்மை. இருப்புப் பிடியிலே நாட்டை வைத்துக் கொண்டுள்ள முடிமன்னன் நாட்களிலும், "கப்சிப்' தர்பார் நடாத்தும் சர்வாதிகாரியின் நாட்களிலும், பொது மக்களுக்கு அரசிய-லே அக்கறை ஏற்படாது, ஆர்வம் எழாது. மாறாக சலிப்பும், சங்கடமும், அருவருப்பும், அச்சமும் எழும். யார் ஆண்டால் நமக்கென்ன? நாம் எப்படி ஆள வேண்டும் என்று கூறிட நாம் யார்? நாம் கூறினாலா கேட்கப் போகிறார்கள்? நல்லதைச் சொல்லப்போய் பொல்லாங்கு தேடிக் கொள்வானேன். எதையாவது பேசித் தொலைத்து எவனுடைய பகையாவது மூண்டுவிட்டால் நம் பாடல்லவா ஆபத்து! நினைத்து நினைத்து மனம் குமுறலாமே தவிர பேசி வம்பிலே சிக்கிக்கொள்ளலாகுமா! - என்ற இந்தவிதமான பேச்சுகள் உலவிடும் நாடு, ஜனநாயகத்துக்கு ஏற்ற நாடு அல்ல.

குருடன் எதிரே வைரக் கற்களைக் கொட்டி வைப்பது போன்றதாகும், அக்கறையும் ஆர்வமுமற்ற மக்களிடம், ஆட்சி அமைத்திடும் அதிகாரச் சீட்டான ஓட்டுகளை அளித்து வைப்பது.

முறையாகத் தமிழ் கற்றிராதான் முன்பு நைடதத்தை நீட்டுவதற்குச் சமமாகும்.

கூந்தலற்றாள் கரத்தில் முல்லைச் செண்டு தருவது போன்றதாகும்.

வழுக்கைத் தலைப் பெரியவரிடம் வாசனைத் தைலம் தருவது போன்றதாகும்.

தமிழகம் அந்த நிலையில் இல்லை! அது குறித்து நாம் பெருமிதம் கொள்ளலாம்! ஜனநாயக உணர்வு நல்ல முறையிலே வளமாகி இருக்கிறது. இந்த நிலை எழ, தம்பி! நீ ஆற்றியுள்ள தொண்டு மகத்தானது. பாறைகளைப் பிளந்து கொண்டுவந்து குவித்து வைத்துள்ளாய்; இனி சிற்றுளிகொண்டு சிலை வடித்திட வேண்டும்! ஆடைக்கு ஏற்ற நேர்த்திமிகு நூல் குவித்துள்ளாய்; இனி வண்ணம் கூட்டி வகையாய் நெய்து அறுத்தெடுக்க வேண்டும். காலம் கனியும் நிலையை உண்டாக்கி வைத்துள்ளாய்; இனி சாறு பிழிந்தெடுத்து சத்துணவு ஆக்கிட வேண்டும்.

எடுப்பும் தொடுப்பும் மிடுக்குடன் அமைத்துவிட்டாய், இனி ஏற்றதோர் முடிப்பு, உன் பண்ணுக்கு அமைதல் வேண்டும். மலர் பறித்து, குடலையில் சேர்த்துள்ளாய். இனி மாலை தொடுத்திட வேண்டும்.

அதுவும் உன்னால் முடியும்.

உன்னைக் கொண்டுதான் அதனை முடித்திட முடியும்.

முடித்தளிக்க நீ இருக்கிறாய் என்ற துணிவுதான், என்னை ஆதிக்கக்காரரின் அறைகூவலை ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறது.

முடித்துத் தருவதற்கேற்ற அறிவாற்றல் உன்னிடம் நிரம்ப உளது என்பதை உணர்ந்திருப்பதால்தான் ஆதிக்கக்காரர்கள் அத்தனைப் படைக்கலன்களைத் தேடுகிறார்கள், போர் முறைகளை மாற்றுகிறார்கள்.

கடுங்கோபத்தால் தாக்கப்படுகிறார்கள்.

உன் நோக்கம் அவர்களுக்குப் புரிந்துவிட்டது.

உன் சொல் நாட்டு மக்கள் செவி புகுந்து மனத்திலே பதிந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டுவிட்டனர்.

நாட்டு மக்கள் உன் பக்கம் திரண்டு நிற்பதை அவர்கள் காணுகின்றனர்.

அடங்கிக்கிடந்தவர்கள் ஒடுங்கிட மறுக்கின்றனரே! கட்டளைக்குக் காத்துக்கிடந்தவர்கள் காரணம் கேட்கின்றனரே! சொல்வதையெல்லாம் நம்பிக்கிடந்த வர்கள், பொருள் என்ன? பயன் என்ன என்று கேட்கத் தொடங்கிவிட்டனரே!

அச்சம் கப்பிக்கொண்டிருந்த கண்கள் இன்று கேள்விக் குறிகளாகிவிட்டனவே!

காலம் மாறிவிட்டதே! குட்டு வெளிப்பட்டு விட்டதே! - என்றெல்லாம் எண்ணுகின்றனர் ஏகாதிபத்தியப் போக்கினர். எரிச்சல் எழுகிறது, ஏதேதோ செயல்களின் மீது அவர்களின் மனம் பாய்கின்றது.

எந்த அளவுக்குக் காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள் தமது ஆதிக்கச் சுவையை இழந்திட மனமின்றிச் செல்லுகின்றனர் என்பதனைக் காணும்போது தம்பி! வியப்பு மிகுந்திடுகிறது, வேதனையும் பிறக்கிறது. உள்ளதைப் பறித்திடுவேன் உருத்தெரியாமல் ஆக்கிவிடுவேன் என்ற உருட்டல் மிரட்டலாலும், கடன்பட்ட நீயா கட்சி பேசுகின்றாய்? என் நிலத்தில் உழுதுகொண்டே எனக்கேவா எதிர்ப்பு காட்டுகின்றாய்? என் ஜாதிக்காரனாக இருந்துமா இடையூறு செய்கின்றாய்? குளம் அறியும், கொடுவாளறியும் என் கோபம் எவரெவரை என்ன கதி ஆக்கிற்று என்று. இருந்தும் இட்ட கட்டளையை மீறுகின்றாய், புலிமீது இடறிவிழுகின்றாய்! உன் தாய்மாமன் நாய்போல் என் முன்னால் நத்திக்கிடக்கின்றான்! நேற்றுத்தான் உன் பெரியப்பன் வேற்றூர் ஓடி இருக்கின்றான் எனக்கு அஞ்சி! நீ காட்டுகின்றாய் உன் எதிர்ப்பை, கடுகளவும் புத்தியின்றி. என்னை எதிர்த்தோர் எவர் பிழைத்தார்? எண்ணிப்பார்! எவனையும் பிடித்து ஏவி உன் ஆவி பறித்திடுவேன்! சட்டம் என்ன செய்யும்? சமூகமும் ஏது செய்யும்? பொன்னை உருக்கிடுவேன், உண்மையைக் கருக்கிடுவேன். போதுமான சான்று தேவை எனில் போய்க் கேள், கண்ணிழந்த காத்தானை, முப்பதே வயதிலே முதுமைக்கோலம் கொண்ட முத்தனை, நத்தத்து முனியனை, கரம் இழந்த கண்ணப்பன், காலொடிந்த காட்டேரி - இவர்களெல்லாம் கதை கதையாய்க் கூறிடுவார்; கேட்டுத் தெளிவு பெறு! - என்றெல்லாம் பேசிப் பணியவைத்திட முனைகின்றார். வெற்றியும் காண்கின்றார். அம்மட்டோ!

கழகத்தின் சார்பிலே வேட்பாளராக தம்பியொருவன் நிற்பான் என்றறிந்து காங்கிரசின் பெருந்தலைவர் சிலர் கூடி, அவன் அண்ணனையே வேட்பாளராக்கி மிரட்டு கின்றார். குடும்பத்துக்குள்ளே குழப்பம் மூட்டியேனும் பதவிப் பசி போக்க இரைதேடி அலைகின்றார். இத்தகைய சூழ்நிலையில், ஊர் மக்கள் உணர்ச்சி பெற்று, உண்மைக்குப் பரிந்துரைத்து உறுதியுடன் பணியாற்றிடாது இருப்பரேல், என்னாகும்? ஜனநாயகம் மடிந்துபோகும். உரிமை உணர்வு அழிந்தொழியும்! உண்டு உறங்கிடு! உன் போன்றிருந்திட குழந்தைகளைப் பெற்றுத் தந்திடு! உரிமை உணர்ச்சி என்றோ, உலகப்போக்கென்றோ உற்ற துயர் போக்கிட வழி யாது கூறிடுக என்றோ, பேசிடாதே என்று கூறி, கருத்துக்கு விலங்கிடும் கயமை நிறைந்த சர்வாதிகார முறை தலை எடுக்கும். பிறகோ தலை நிமிர்ந்து நடந்திடவும் தடை பிறக்கும் மாக்கள் மக்கள் என்பதற்கான வேறுபாடு காட்டிட உள்ள "சிந்தனா சக்தி' செத்தொழியும் வாயுண்டு வயிறுண்டு என்ற நிலை நிலைக்கும். மக்கள் மாக்களாவர்! ஆகவே தம்பி! வர இருக்கும் பொதுத் தேர்தல் எழுப்பிடும் கேள்வி, எவர் அமைச்சர் என்பதல்ல, நாடு பெறப்போவது எதனை?

சர்வாதிகாரமா?
ஜனநாயகமா?

இதுவே கேள்வி, இதுவே பிரச்சினை! இதற்கே பொதுத் தேர்தல். இதனை நன்கு உணர்ந்திருப்பதாலேதான், இந்நாட்டு மக்கள் இன்று இத்தனை ஆர்வம் காட்டுகின்றார், பொதுத் தேர்தல் குறித்து.

எங்குத் திரும்பிடினும் இதே பேச்சு! அங்காடியாயிடினும் ஆலயமுற்றமெனினும், பூங்காவிலும், விழாக் கூடந்தனிலும், அலுவலகந்தன்னிலும், ஆற்றோர மணற்பரப்பிலும், எங்கும் இதே பேச்சு. இம் முறை கழகம் வெற்றிமிகப் பெற்றிடுமாமே! ஆட்சி அமைத்திடுமாமே! இயலுமா? - என்று கேட்பார் ஒருவர்; மக்கள் திரள் திரளாய்க் கூடுவதனையும் பேச்சாளர் தந்திடும் விளக்கந் தனையும் கணக்கெடுத்துப் பார்க்கும்போது, "ஆம்' என்று கூறிடவே தோன்றுகிறது என்று விடை அளிப்பார் மற்றொருவர்; இன்னொருவர் ஏழெட்டு இலட்சத்தை எடுத்து அடித்தால் எளியோர்கள் வாய்பிளந்து, எல்லாம் மறந்துபோய் ஓட்டளித்து விடுவராமே; எதிர்வீட்டு எல்லப்பன், கதர்க் கடையின் கணக்காளன்; எவரெவரோ தலைவர்கள் கூடிப் பேசினராம், கூறுகின்றான் திட்டத்தை என்று செப்புகின்றார்; காளை ஒருவன் கொதித்தெழுந்து கூறுகின்றான், "இலட்சம் பல வரட்டும், இளித்துக்கிடந்திடப்போவதில்லை ஏழையரும்; இடுப் பொடிக்கத் துணிந்துவிட்டார் இறுமாப்பு மிக்கதோர் ஆட்சியினை; இதற்கான சான்று என்னிடம் பல உண்டு' என்று முழங்குகின்றான்.

இந்தத் தொகுதிக்கு இவர் முடிசூடா மன்னனாம்! இரு மூன்று தலைமுறையாய் இந்தக் குடும்பமே கோலோச்சி வருகிறதாம்! இவராகச் சொல்லவில்லை இழுத்துச் சென்று இம் முறை முடி உமக்கே, பிடியும் எழுதுகோலை, இங்கே ஓர் கையொப்பம், இனி மற்றக் காரியம் எம்மிடம் விட்டுவிடும்; வெற்றி உமக்குத்தான்; வேறோர் விஷயம் கூறுகின்றோம், வெளியே கூறிடாதீர்; மந்திரி வேலையொன்று உமக்கென்று உண்டு! போமய்யா போம்! அணைக்க வருகின்றாள் "அதிர்ஷ்டம்' எனும் மங்கை! யோக பலன் உமக்கு அதுபோல் அமைந்துள்ளது என்று கூறி, உல்லாச புரி வாழும் செல்வப்பிரபு இவரை, "தலைவர்' கொண்டு வந்து தந்துவிட்டார் - என்றெல்லாம் பேச்சு, ஆளுங் கட்சியினர் கூடிடும் இடந்தன்னில்.

மாளிகையிலா உள்ளார் நம் தோழர்? இல்லை! அவர் இல்லம், சிறிய விடு, கூரை, கொட்டகை; நடைபாதையுங் கூடத்தான்; நமது நிலை நாட்டாட்சி உள்ளவிதம் காட்டிடுவது அறிவாய்.

விந்தை என்னவெனில் தம்பி! அந்தத் தோழர், விழிப்புடன் உள்ளார்; எழுச்சி பெற்றுள்ளார்; பணம் படைத்த சீமான் முன் பணிந்திருக்கும் காலம் அல்ல இது; பணம் அங்கு குவிந்த விதம் அறிந்துள்ளோம்; எமது உழைப்பன்றோ இவரை ஆக்கிற்று சீமானாய்; ஓடப்பராய் நாங்கள் இருந்திடச் செய்தவரே இந்த உயரப்பர், அறிவோமே; இவர்போன்றார் இருப்பைப் பெருக்கிக் கொள்ளத் தேடுகின்றார் ஆட்சி, பதவி; இவர்க்கா ஓட்டளிப்போம்! இவர்க்கு ஓட்டளித்து இழி நிலையைத் தேடிப்பெற, நாங்களென்ன அறிவை இழந்தவரோ? இல்லை! இல்லை! உள்ள செல்வம் அறிவு ஒன்றேதான்! அதனை இழந்திடவா துணிந்திடுவோம்? அறிவையும் இழந்திடின் என்னாகும்? அவர் கால் தனக்கு நாங்கள் தூசு ஆவோம்! மானம் அழித்திடுவார், மாக்களாக்கிடுவார்! விவரம் புரிந்துகொண்டோம்; விளக்கம் பெற்றுவிட்டோம்; நாங்கள் வீழ்ந்து அழிவதற்கு நாங்களா ஆழ் குழியை வெட்டிடுவோம்? இல்லை! இல்லை! ஓட்டு என்ற ஒன்றன்றோ ஆணவக் கோட்டையைத் தகர்த்திட நாங்கள் பெற்றுள்ள வேட்டு! - என்றெல்லாம் பேசுகின்றார்

அவர் விழி பேசும் மொழி அறியும் பயிற்சியினால் கூறுகின்றேன்.

கழகத் தோழர்கள் நன்கு அறிந்துள்ளார் கனதனவான்களெல்லாம் காங்கிரசில் உள்ளார் என்பதனை. இரும்புச் சீமானும் கரும்புக் கனவானும், பட்டம் சில பெற்ற பட்டணத்துப் பிரபுவெல்லாம் கொட்டம் அடிக்கின்றார் காங்கிரசைக் கொலு மண்டபமாகக் கொண்டு என்பதனை அறிந்துள்ளார். எனினும் பார் தம்பி! அவர்க்குள்ள ஜனநாயக உணர்வை!

எதிர்த்து நின்றிட இயலுமா என்று கேட்கின்றேன். என் கடமையன்றோ! என்கின்றார்.

ஊரில் பெரியவராம் உள்ள செல்வம் குன்றனவாம், அவருக்கு எதிராக நின்றிட அச்சம் எழவில்லையோ என்று கேட்கின்றேன்; பாமர மக்கள் பாராளும் காலம் அண்ணா! என்ன வேடிக்கை இது; சொன்னது நீ அண்ணா! உனக்கே நான் கூறிடவா? என்று கேட்கின்றான் ஓர் தம்பி; சிரிப்பை அடக்கிக் கொள்ள வெகு பாடுபடுகின்றேன்.

வேண்டுமென்றே எவரேனும் மும்முனைப் போட்டி தனை மூட்டிவிடின் என் செய்வாய் என்கின்றேன்; நாமாகச் சென்று வீணுக்கு மும்முனைப் போட்டியினை மூட்டிட லாகாது; ஆயின் அண்ணா! அச்சம் ஊட்டுதற்கும், அலைச்சல் உண்டாக்குதற்கும் மும்முனைப் போட்டியினை எவரேனும் மூட்டிவிட்டால், அது கண்டு மூலைக்குச் சென்றிடவா! இல்லை அண்ணா களம் நிற்பேன் என்கின்றான் ஓர் காளை; கடமை அறிந்துள்ளான்.

ஆய்வுக் குழுவினராம் அருமைத் தம்பியர் நாடெங்கும் கண்டறிந்த "சேதிகளை' இரவெல்லாம் கூறினர், கேட்டு இன்புற்றேன்; இருநூற்றுச் சொச்சம் தொகுதிகளிலும் நாம் வேட்பாளர் பெற்றிடலாம், உண்டு அதற்கான உறுதி; ஓட்டுகள் மொத்தத்தில் எந்த அளவு பெற்றிடலாம் என்ற கணக்கு மட்டும் போதும் என்பது நம் திட்டமெனின் எங்கும் நின்றிடலாம், எங்கும் உளர் நம் தோழர். எதிர்ப்புக்கு அஞ்சாதார்; விளைவுபற்றிக் கவலை கொள்ளாதார் என்கின்றார். ஓட்டுகள் மொத்தமாகப் பெற்றிடுவது மட்டுமல்ல நம் திட்டம். மற்றக் கட்சியினருடன் கலந்து உரையாடி, கணக்கெடுத்து காங்கிரசாட்சியினை வீழ்த்துதற்கு ஏற்ற முறையான தொகுதி உடன்பாடு காண வேண்டும் என்பதற்கே இன்னின்ன தொகுதிகளை இன்னின்ன கட்சிகட்கு என்று குறித்திட இசைகின்றோம் என்கின்றார்.

ஆய்வுக் குழுவினர் அளித்த விவரம், விளக்கம், அவர் காட்டும் வாதத் திறமை, தம்பி! இரவெல்லாம் நான் கேட்டு இனிய விருந்துண்டேன். ஒன்றைவிடவில்லை, ஒப்புக்குக் கூறவில்லை, உண்மை கண்டறிய திறம் காட்டி உழைத்துள்ளார்; நன்றி அவர்கட்கு; பெருமகிழ்ச்சி பெற்றுள்ளேன்.

ஒன்றில் மட்டும் அவர்கள் உறுதி மிகுந்திருக்க காண்கின்றேன். ஒரு தொகுதி தருவது மற்றவர்க்கு என்றாலும் எளிதில் இசைய மறுக்கின்றார்; நானே மறுக்கொணாத காரணம் காட்டுகின்றார்; இறுதியில், தோழமைத் தொடர்பு பெற தொகுதி உடன்பாடு பெற இது தேவை என்பதனை வலியுறுத்தும்போது "ஆமண்ணா' என்கின்றார். அப்பப்பா! அவர்களிடம் என் கருத்தைப் புகுத்திடுதல் எளிதல்ல! ஆயினும் தம்பி! அவர்களன்றோ இயக்கத்து அச்சாணி! அவர் பொறுப்பும் அருந் திறனும், ஓயா உழைப்புமன்றோ நமக்கோர் கழகத்தை - இல்லை தம்பி! - நாட்டுக்கோர் கழகத்தைத் தந்துளது. ஆகவே அவர் சொல்லை நான் கேட்குங் காலை தனிச் சுவையே காண்கின்றேன். எவர்க்கும் கிட்டா ஆற்றல் மிக்கோரைப் பெற்றுள்ளேன் என்பதனால் இணையற்ற பெருமிதமும் கொள்கின்றேன்.

இத்தனை விழிப்புடனே, பொறுப்புடனே பணியாற்றிக் கட்சி பலவற்றுடனும் கலந்து பேசி, கட்டத்திற்குக் கட்டம் என் கருத்தைக் கேட்டுப் பெற்று கட்சி பலவற்றுடனே கண்டுள்ளார், கனிவு மிகு தொகுதி உடன்பாடு; அதனை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். மாவட்டச் செயலாளர், மற்றுமுள்ள கழகத்துக் காவலர்கள் ஒப்பம் பெற்று, எனினும் முழு மகிழ்ச்சி பெற மாட்டாய்; ஏனண்ணா இந்தத் தொகுதியைக் கொடுத்திட்டீர்! என்ன கோபம் எங்களிடம் உழைத்து வெற்றிதனை உருவாக்கி இருப்போமே! உடைத்துப் போட்டீரே எமது விருப்பமதை என்றெல்லாம் கூறிடும் தம்பியர்கள் கண்ணெதிரே தெரிகின்றார், அவர் விடுத்த மடல் பலவும், இதோ என் அருகில்! ஆயினும் தம்பி! தொகுதி உடன்பாடு எனில், சில தொகுதி நாம் கொடுத்திடுவது, சில நாம் பெறுவது என்பதன்றோ பொருள்! எல்லாத் தொகுதியும் நமக்கே என்பதா? அறிவாயன்றோ. எந்தத் தொகுதியினை இழப்பதெனினும் அந்த தொகுதியினர் இழந்திட மனம் ஒப்பார்; வேறோர் தொகுதியினைக் காட்டிடுவார்; இது இயற்கை. அம்முறையில் வருத்தம் தெரிவித்தோர்க்கு, தான் கொண்ட வருத்தங்களை அடக்கிக்கொண்டு மதுரை முத்து ஓர் விளக்கம் தந்திட்டார்.

வாதம் பல புரிந்தேன். வந்தது வரட்டும் போவது போகட்டும் என்றா நான் இருந்திட்டேன்? ஆயினும் நிலைமையை உணருகின்றேன். கட்சி பலவற்றுடனே தொகுதி உடன்பாடு காண்பதெனின் எளிதான காரியமா, இயலுமா உம்மாலே என்றெல்லாம் காங்கிரசின் தலைவர் இடித்திடித்துப் பேசி வந்ததனை அறிவாயே! இத்தொகுதி போய்விடுமே அந்தத் தொகுதி கிடைத்திடாதே என்பதெண்ணித் தொகுதி உடன்பாடு காணமுடியாமல், முறிந்துபோயின், என் சொல்வார்? ஏளனம், எங்கெங்கும் எழுமன்றோ! எங்கிருந்து வந்திடும் இவர்கட்கு உடன்பாடு காண்பதற்கான அறிவு, ஆற்றல்? எமக்கு அப்போதே தெரியும், பேச்சு வெற்றி தராதென்று. அதற்கு ஏற்ற பக்குவம் தெரிந்தவரே அண்ணாதுரை! பாவம், விவரம் அறியாதவன்; பேசுவான் ஏதேதோ! நாலு கட்சியினர் கூடிப்பேசி உடன்பாடு கண்டிட வைக்கும் ஆற்றல் ஏது அவனுக்கு? அவன் என்ன, கேரளத்து நம்பூதிரிபாதோ? அவர் வெற்றி கண்டார் உடன்பாடு திட்டத்தில். புலியைப் பார்த்துப் பூனை சூடிட்டுக்கொண்ட கதைபோல, நானும் தொகுதி உடன்பாடு காண்பேன் என்று மேடையெல்லாம் கூறி வந்தான், மேதை இவன்! முடிந்ததோ இவனாலே? முறிந்ததே திட்டம்!! என்றெல்லாம், கேவலம் பேசுவர்; ஊர் சிரிக்க ஏதேதோ மூட்டுவர்; நம் அண்ணனையும் ஏசுவர்; ஆகவே கேரளத்து நம்பூதிரிபாத் பெற்ற உடன்பாடு வெற்றிபோல, நாமும் வெற்றி பெற்றிடும் ஆற்றல் உண்டு என்பதனை நாடு காண்பதற்கு நாம் பாடுபடக் கடமை உண்டு. அதற்கேற்ப உடன்பாடு திட்டம் காண முனைந்து நின்றோம். சில தொகுதி நமக்கு இல்லை என்றாலும் உடன்பாடு காண்பதிலே வெற்றி பெற்றோம்; இதிலே தோல்வி காண்போம் துளைத்தெடுத்துவிடலாம் என்று காங்கிரசுத் தலைவர்கள் போட்டிருந்த திட்டத்தை பொடிப் பொடியாய் ஆக்கிவிட்டோம்; ஆகவே அமைதிகொள்; அண்ணன் மேற்கொள்ளும் முயற்சி எல்லாம் நமது மாண்பினை உயர்த்திவிடும், நோக்கம் ஈடேறச் செய்திடும், வெற்றிக்கு வழி காட்டும், அறிந்து இருக்கின்றோமே இத்தனை ஆண்டுகளாய்; எடுத்துக் கூறத்தான் வேண்டுமா அந்த விவரமெல்லாம்?

இதுபோலப் பேசினார் முத்து, குறை கண்ட தோழரிடம். என்னிடமோ ஏ! அப்பா! என்னென்ன விதமான கோபமெல்லாம் காட்டினார். எல்லாம் எதன் பொருட்டு? கழகத்தின் வலிவும் பொலிவும் மிகுந்திட!