அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!
2

தம்பி! நாம் மேற்கொண்ட தொகுதி உடன்பாடு வெற்றியே தந்துள்ளது.

காங்கிரசை எதிர்த்து நிற்கும் பிற கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு கொள்ள வேண்டும் என்ற முயற்சி சென்ற பொதுத் தேர்தலின்போதே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முடியாது போயிற்று. முஸ்லீம் லீக் மட்டுமே நம்முடன் தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் செய்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

சென்ற பொதுத் தேர்தலின்போது தொகுதி உடன்பாட்டுக் காக, நம்முடன் கலந்து பேசிய கட்சிகள், லீக், சுதந்திரா, கம்யூனிஸ்டு கட்சி.

அப்போதே நம்முடன் கலந்து பேசுவதும், தோழமை கொள்வதும், தொகுதி உடன்பாடு செய்திடுவதும் கூடாது - கொள்கைக்கு ஒத்து வராது - தத்துவ ரீதியாகவேகூட அது தீது - என்ற கருத்துக்கொண்ட பகுதி கம்யூனிஸ்டு கட்சியிலே இருந்தது. மேடைகளிலேயும் பேசினர்; இதழ்களிலும் எழுதினர்; காரசாரமாக; கண்டிப்புடன். ஆயினும் தயக்கம், தடுமாற்றம் எனும் தடைகளை மீறிக்கொண்டு அவர்கள் கழகத்திடம் பேச இசைந்தனர்.

இதற்கிடையில் நாட்கள் வேகமாக உருண்டோடிக் கொண்டிருந்தன.

கழகத் தோழர்கள் கசப்புணர்ச்சி கொள்ளும் விதமாகவும், மனம் புண்படும்படியாகவும் கம்யூனிஸ்டு கட்சியினர் பேசியும் எழுதியும் வந்தனர்.

இதன் காரணமாகத் தொகுதி உடன்பாடு பற்றிய பேச்சு துவக்கப்பட்டபோதே ஒரு கனிவு காணப்பட வில்லை.

கட்சிகளாகட்டும், தனித்தனியானவர்களாகட்டும், தோழமை கொள்ளவேண்டுமென்றால், தொகுதி உடன்பாடுகொள்வதென்றால்.

நட்பு முறை, ஒருவரை ஒருவர் மதித்திடுதல்.

ஒரு கனிவு, ஒரு இனிமை, சூழ்நிலையாக அமைந்திட வேண்டும்.

மிரட்டல் வற்புறுத்தல் வறட்டுவாதம்.

இவைகளின் பிடியிலே சிக்கிக்கொண்டால், தோழமைத் தொடர்பு ஏற்பட முடியாது.

கழகத்தைப்பற்றிக் கேவலமாகப் பேசுவதுடன், உள்ளூர ஒரு வெறுப்புணர்ச்சியையும் வைத்துக்கொண்டு "உடன்பாடு' காண்பதென்பது முடியாத காரியம்;

கூடாத காரியமுங்கூட.

ஒப்புக்கு ஒரு உடன்பாடு ஏற்படுத்திக்கொள்வது இடையிலே முறிவைத்தான் மூட்டிவிடும்.

கழகத்துடன் கம்யூனிஸ்டு கட்சியினால் சென்ற தடவை உடன்பாடுகொள்ள முடியாமல் போய்விட்டதற்குக் காரணம், கழகத்திடம் நட்போ, மதிப்போ துளியுமற்ற மனப்போக்கைக் கம்யூனிஸ்டு கட்சி வைத்துக்கொண்டிருந்ததுதான்.

லீகுடன் நேசத் தொடர்பு நீண்டகாலமாக இருந்து வருவதாலே தொகுதிபற்றிய பேச்சு கனிவான ஒரு தொடர்பிலே ஒரு ஏடு என்ற விதமாக இருந்தது. உடன்பாடு ஏற்பட்டது.

உள்ளன்பு முதலில், உடன்பாடு பிறகு என்ற நிலை கண்டோம்.

கம்யூனிஸ்டு கட்சியினரோ, உள்ளத்தில் கசப்பை வைத்துக்கொண்டே உதட்டளவு உறவுகாட்டிப் பேசினர். உடன்பாடு ஏற்படவில்லை.

சுதந்திரக் கட்சியின் நிலை இதுபோல இல்லை. தொகுதி உடன்பாடு பற்றிய பேச்சு எழுவதற்கு முன்பே, ஒரு தோழமைத் தொடர்பு அமைந்திருந்தது.

தொகுதிகள் பங்கிடுவதற்கான பட்டியல் இரு கட்சிகளுக்குமிடையில் உடன்பாடு காண்பதைத் தடுத்துவிட்டது.

என்றாலும், ஒரு கட்சியை மற்றோர் கட்சி மதித்ததாலும் ஒரு கட்சிக்கும் மற்றோர் கட்சிக்கும் இடையில் நேசத்தொடர்பு அமைந்திருந்ததாலும், உடன்பாட்டுத் திட்டத்திலே ஒத்த கருத்து ஏற்பட முடியாதுபோயிற்று என்றாலும், காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற பொதுத் திட்டத்திலே கருத்து வேறுபாடு எழவில்லை. உடன்பாடு இல்லை என்று ஆகிவிட்ட பிறகு ஒரு கட்சியை மற்றோர் கட்சி மதிப்புடன் நடத்த முடிந்தது. உள்ளன்பு மிகுந்திருந்தது.

தம்பி! இதனால்தான், பொதுத் தேர்தல் முடிந்த பிறகு சுதந்திரக் கட்சியும் கழகமும் பேதம், பகை ஏதுமற்ற நிலையில், உடன்பாடு கொள்ளவில்லை என்ற நினைப்புமற்று, பொதுக் காரியத்தில் ஒன்றுபட்டுப் பணியாற்றி வர முடிந்தது.

இந்த நல்ல சூழ்நிலை, இம் முறை உடன்பாடு பற்றிய பேச்சுக்குத் தேவைப்படும் கனிவினைத் தந்திருந்தது. ஆகவேதான் சுதந்திரக் கட்சியுடன் பொருத்தமான ஒரு தொகுதி உடன்பாடு செய்துகொள்ள முடிந்தது.

கம்யூனிஸ்டு கட்சி சென்ற தேர்தலிலே உடன்பாடு செய்து கொள்ளத் தவறிவிட்டது மட்டுமல்ல, பழையபடி கழகத் தோழர்கள் கசப்புணர்ச்சி கொள்ளும் விதமாகவும், மனம் புண்படும் விதமாகப் பேசவும் எழுதவும் தலைப்பட்டது. தொகுதி உடன்பாட்டுக்கான முயற்சி எடுத்துக்கொண்டபோது கழகம் ஒரு பொறுப்பான கட்சியாகத் தென்பட்டது. ஆனால் அதே கம்யூனிஸ்டு கட்சியின் கண்களுக்கு, பிறகு கழகம்

பிற்போக்குக் கட்சியாக
வகுப்புவாதக் கட்சியாக
அரை வேக்காட்டுப் பேர்வழிகளின் கட்சியாக
மொழிவெறி கிளப்புவோரின் கட்சியாக
கொள்கையற்ற கட்சியாக
திட்டமற்ற கட்சியாகத் தெரியலாயிற்று.

தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சி கழகத்தைக் கேவலப்படுத்தும் செயலைச் செய்துகொண்டு வந்ததுடன், காங்கிரசுக் கட்சியுடன் குலவவும், கூட்டு முயற்சிகளில் ஈடுபடவும் முனைந்திருந்தது.

தேசிய அணி - முற்போக்கு அணி - என்ற பல பெயரிட்டுக்கொண்டு, காங்கிரசுடன் உறவாடிக்கொண் டிருந்தது; கழகத்தைப் பல முனைகளிலும் எதிர்த்துக் கொண்டு வந்தது.

சில தொகுதிகளை விட்டுக் கொடுப்பதா வேண்டாமா என்ற விஷயமான கவலை ஏற்படுவதைவிட, எந்த ஒரு கட்சியிலும், அதிலும் அதற்காகத் தமது உயிரையும் கொடுக்கத் துணிந்து பணியாற்றி வருபவர்களுக்கு, மற்றோர் கட்சி பேசிக்கொண்டு வரும் கேவலத்தைத் தாங்கிக்கொள்வதுதான் அதிகக் கலக்கத்தைக் கொடுக்கும்.

நண்பரே! இந்த மூட்டை பளுவாக இருக்கிறது. தூக்கிப்போட ஒரு "கை' கொடுத்து உதவும் என்று கேட்கும்போது, உதவி செய்திடத் தோன்றுகிறது. ஆனால், ஏ! பயலே, இந்த மூட்டையைத் தூக்கடா, பளுவு அதிகமாக இருக்கிறது என்று கூப்பிட்டால், மானமுள்ள எவனும் வரமாட்டானல்லவா?

எத்தனையோ தத்துவ ஏடுகளைப் படித்தவர்கள் என்கிறார்கள் கம்யூனிஸ்டுகளை. ஆனால் எனக்குத் தெரிந்த அளவில் அவர்கள் உளநூல் படிப்பதில்லை; ஏடுகளைக் கூட வைத்துக்கொண்டிருக்கக்கூடும்; ஆனால் மக்களை உளநூற்களாகக் கொள்வதில்லை.

இந்த நிலை காரணமாக, சுதந்திரக் கட்சியுடன் நேசத் தொடர்பு வளர்ந்துகொண்டு வந்த அதே காலத்தில், கழகத் தோழர்களுக்குக் கம்யூனிஸ்டு கட்சியுடன் கசப்பு அதிகமாகிக் கொண்டு வந்தது.

இந்தக் கசப்புணர்ச்சியை அதிக அளவிலும், மிக மும்முரமாகவும் வளர்த்துக்கொண்டும் வந்த முன்னணியினரே இன்றைய வலதுசாரி கம்யூனிஸ்டு கட்சியில் நிரம்பி இருக்கிறார்கள்.

இடதுசாரி கம்யூனிஸ்டு கட்சியினர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கழகத்திடம் நெருங்கிய தொடர்பு கொள்ளவும், நேசம் விரும்பவுமான நிலைமையை ஏற்படுத்திக்கொண்டனர். கழகத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் ஆய்ந்து பார்த்து இவைகள் முற்போக்கானவை என்பதை உணர்ந்தனர். ஊருக்கும் எடுத்துரைத்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பிற்போக்குக் கட்சி என்று கூறுவது சரியல்ல, முறையல்ல என்று வெளிப்படையாகவே பேசலாயினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைமையைக் கணக்கில் எடுக்காமல், தமிழகத்து அரசியலைப் புரிந்துகொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.

யார் மேற்கொள்ளுகிற நடவடிக்கையானாலும், முற்போக்கு நடவடிக்கையென்றால் அதிலே பங்குகொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தயங்கியதில்லை என்பதனை அக மகிழ்ச்சியுடன் எடுத்துக் காட்டினர்.

சுருக்கமாகக் கூறுவதானால், தோழமைத் தொடர்பு கொள்வதற்கும், தொகுதி உடன்பாடு கொள்வதற்கும், இடதுசாரி கம்யூனிஸ்டுகள் கழகத்திடம் வருவதற்கு முன்னாலேயே, அதற்குத் தேவைப்படும் பாதையை ஒழுங்காக அமைத்துக்கொண்டனர். அதனால், தொகுதி உடன்பாடு குறித்து கழகத்துடன் இடதுசாரி கம்யூனிஸ்டுகள் பேச்சு நடத்தியபோது, ஒருவரை ஒருவர் மதித்து நடந்துகொள்ளும் இரண்டு நண்பர்களுக்கிடையே நடந்திடும் உரையாடலாக அமைந்தது.

உண்டா? இல்லையா? அதிகம்! குறைவு! இந்த இடம், அந்த இடம், இதற்கென்ன நியாயம்? அது எப்படிப் பொருந்தும்? என்ற விதமான மோதல்கள் இருந்தன. என்றாலும் மகிழ்ச்சி தரத்தக்க சூழ்நிலை இருந்தது.

இந்தச் சூழ்நிலை காரணமாக கழகத்துக்கும் இடதுசாரி கம்யூனிஸ்டுகளுக்கும் தேர்தல் உடன்பாடு வெற்றியுடன் அமைந்துவிட்டிருக்கிறது.

இதற்கு நேர்மாறாக, வலதுசாரிகள் நடந்துகொண்டு வந்தனர். சொல்லப்போனால் இந்த இரண்டு ஆண்டுகளாக வலதுசாரி கம்யூனிஸ்டுகள் கழகத்தைக் கேவலப்படுத்திப் பேசுவதைத் தங்களின் நேர்த்திமிக்க கலையாக்கிக் கொண்டனர். பற்பல ஆண்டுகள் முயன்றாலும் துடைக்கப்பட முடியாத அளவுக்குப் பகை உணர்ச்சியை மூட்டிவிட்ட வண்ணம் இருந்தனர்.

கழகத்தைக் கேவலப்படுத்துவதுடன் காங்கிரசுடன் குலவுவதையும் தங்கள் திட்டமாக்கிக்கொண்டனர்.

காங்கிரசுடன் சேர்ந்து கூட்டுக் கூட்டங்கள் நடத்துவதிலே மும்முரமாயினர்.

கழகத்தைத் தாக்கிப் பேசும் பகுதியையே காங்கிரஸ், இவர்களிடம் ஒப்படைத்துவிட்டது என்று நாடு கருதத்தக்க முறையிலே பேசி வந்தனர்.

காங்கிரசுடன் மட்டுமல்ல கழகத்தை எதிர்த்திட யார் புறப்பட்டாலும் உடனே "அட்சதை' போட்டு "ஆசீர்வதிக்கவும்' கைலாகு கொடுத்து வரவேற்கவும், கூட்டுச் சேர்ந்து கேவலம் பொழியவும் முனைந்தனர்.

இவ்வளவையும் தம்பி! நான் மறந்துவிட்டுத்தான் அவர்களை அழைத்தபடி இருந்தேன் தேர்தலில் ஒன்றுபட்டுப் பணியாற்ற, காங்கிரசை வீழ்த்த, தொகுதி உடன்பாடு காண வருக! என்று கேட்டுக்கொண்டேன். என் சொல் இவர்கள் செவி புகவில்லை என்பது மட்டுமல்ல, எங்களை யார் என்று அறியாமல், எமது தீவிரம் புரியாமல், பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்ளாமல், தங்களுடன் கூட்டுச் சேரும்படி அழைக்கிறார்களே தீனா மூனாக்கள், வேடிக்கையாக இருக்கிறதே! - என்று கேலி பேசினர்.

தேர்தல் வரப்போகிறது ஓராண்டில் என்ற நிலை பிறந்ததும், எண்ணத்தை அல்ல - சொற்களைக்கூட அல்ல - குரலைச் சிறிது மாற்றிக்கொண்டு பேசலாயினர்; கூட்டுச் சேரவேண்டுமா? சேருவோம்! ஆனால் பிற்போக்குக் கட்சியான சுதந்திராவுடன் உள்ள உறவை அறுத்துக்கொள்! வகுப்பு வாதத்தை விட்டுவிடு! பிறகு சேரலாம்! - என்று பேசலாயினர்.

குளித்துவிட்டு, தீட்டுப் போக்கிக்கொண்டு வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வை என்று வைதிகர்கள் கூறுவார்களே அந்தப் பாணியில்.

பொறுத்துக்கொண்டேன். சில இதழ்கள்கூட என்னைக் கேலி செய்தன. துளியாவது இந்த அண்ணாத்துரைக்கு ரோஷம் இருக்கிறதா? வலதுசாரிதான் கூட்டுச் சேர முடியாது என்று பேசுகிறான், உன்னைக் கண்டபடி ஏசுகிறான், வா! வா! என்று கூப்பிட்டபடி இருக்கிறானே, சே! - என்று எழுதின. பொறுத்துக் கொண்டேன்.

ஆனால் அப்போது விடாமல் நான் கூறிக்கொண்டு வந்தேன், கடைசியில், இந்த வலதுசாரிகளும் கழகத்தின் தோழமையை நாடி வரத்தான் போகிறார்கள் என்று.

அதனையும் கேலி பேசினர் வலதுசாரிகள். ஆனால் அவர்களின் பிடிவாதத்தை அவர்களே மெள்ள மெள்ள கலைத்துக்கொள்ள வேண்டி நேரிட்டது.

உங்களுடனா? நாங்களா? என்ன துணிச்சல் எங்களை அழைக்க!

உங்களுடனா? எங்களையா அழைக்கிறீர்கள்? எங்கள் பாரம்பரியம் தெரியுமா?

வீரதீரம் தெரியுமா? தியாகத் தழும்பு தெரியுமா? எங்களையா? சுதந்திராவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டா?

எங்களையா? சுதந்திராவுடன் உள்ள உறவைத் துண்டித்துக்கொள், அப்போது பார்க்கலாம்.

இந்த விதமான வீம்புடன், வழக்கமான தூற்றுதல் கழகத்தின்மீது.

அந்தச் சமயம் பொன்மலை சென்றிருந்த நான், பொதுக்கூட்டத்திலே கனிவுடன் அழைத்தேன் தோழமைத் தொடர்பு கொள்ளும்படி. கணக்குக் காட்டியும் பேசினேன். அந்தப் பக்கத்து வலதுசாரித் தலைவரான கலியாணசுந்தரம் அவர்களேகூட கருதவில்லை தி. மு. க. ஒத்துழைப்பு இல்லாமல் இம் முறை வெற்றிபெற முடியாது என்று.

சீறினார்! சிம்ம கர்ஜனை எழுப்பினார்! எனக்கா உன் ஒத்துழைப்பு? யாருக்கு வேண்டும்? யார் கேட்டார்கள்? ஒருவருடைய ஒத்துழைப்பும் வேண்டாம், அதிலும் உன்னுடைய ஒத்துழைப்பைப் பெற்றா நான் ஜெயிக்க வேண்டும்? அது தோல்வியைவிடக் கேவலம். உன்னுடைய ஒத்துழைப்பு இல்லாமல் நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நான் ஜெயிப்பேன் என்று பேசி இதயக் கதவைத் தாளிட்டுக்கொண்டார்.

நம்ம முதலியார் இன்று அண்ணாத்துரையை வெளுத்துக் கட்டிவிட்டார் என்று கொண்டாடினார்கள் வலதுசாரிகள்.

எனக்கு உள்ளூரச் சிரிப்பு - இதே "முதலியார்'தான் சென்ற தடவை தமிழ்நாடு முழுவதற்குமான உடன்பாடு பற்றிய பேச்சு முறிந்துபோன பிறகு, "தன் வரையில்' மாவட்ட மட்டத்தில் கழகத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டவர்.

இவருடைய ராஜதந்திர முறையை மணலி, தஞ்சை வரையில் என்று கடைப்பிடித்திருப்பாரானால், பாராளுமன்ற உறுப்பினராகி இருந்திருப்பார். மறுத்து நின்றார். அதனாலேயே எனக்கு அவரிடம் மதிப்புகூட வளர்ந்தது. தனக்கென்று ஒரு ஏற்பாடு செய்துகொள்ளும் நிலைமைக்கு அவர் தம்மைத் தாழ்த்திக்கொள்ளவில்லை. மிகக் கடுமையாகக் கலியாணசுந்தரம் அவர்கள் பேசிய பிறகும் நான் சொல்லிக்கொண்டு வந்தேன்,

பாருங்கள், வலதுசாரிகள் கழகத்தோடு உடன்பாடு தேடி வருகிறார்களா இல்லையா என்று.

நான் எதிர்பார்த்தபடி வலதுசாரிகளின் போக்கிலே மாறுதல் ஏற்பட்டது. கூடிப் பேசினார்களாம்! தத்துவ விளக்கம் - யதார்த்த நிலைமை அறிதல் போன்றவைகளின் மூலம், வெகு எளிதாக இடதுசாரிகள் முன்னதாகவே தெரிந்துகொண்ட "காலகட்ட' கருத்தைக் கண்டுபிடித்து,

சுதந்திராவுடனோ வேறு யாருடனோ தி. மு. க. உறவு வைத்துக்கொண்டிருந்தாலும் கவலையில்லை, பொருட்படுத்தவில்லை. ஆனால், தேர்தல் உடன்பாடு செய்வதானால் அது ஒரு குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில்தான் அமைய வேண்டும், அதற்குச் சம்மதம் தெரிவித்தால் பிறகு பேசலாம் என்றார்கள்.

நான் அதற்கும் இணங்கவில்லை. காரணம் ஆணவம் அல்ல. நான் விடுத்திடும் தோழமை அழைப்பு - எந்தக் கட்சிக்காக இருப்பினும் - கொள்கை அடிப்படையில் அல்ல; தொகுதி நிலைமை அடிப்படையில். ஆகவே இதற்கு அடிப்படைத் திட்டம் எதுவும் தேவை இல்லை என்பது என் எண்ணம்.

அந்தக் கருத்தையும் சில மாதங்கள் கடுமையாகக் கண்டித்துவிட்டு, போகட்டும், இப்போது இல்லா விட்டாலும், ஆட்சி அமைக்க நேரிடும்போது அந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டனர்.

அவர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை.

ஏற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தவில்லை, பரிசீலனை செய்வீர்களா? பரிசீலனைகூட வேண்டாம், பேச்சின்போது அதன் அடிப்படையில் பேசுவோமா? சரி! அதுவும் முடியாதா? போகட்டும், அது எங்கள் திட்டம். நாங்கள் யார்மீதும் திணிக்க விரும்பவில்லை; பேச வரலாமா, தொகுதி உடன்பாடு பற்றி?

இந்த விதம் வலதுசாரிகள், காடு மலை வனம் வனாந்திரங்களைக் கடந்து பேச வரலாமா என்று கேட்டிருக்கிறார்கள். இருபத்தொன்றாம் தேதிக்குமேல் வரலாம் என்று வலதுசாரி களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு இடையில் இடதுசாரிகளுடன் பேசுகிறார்களாம்.

அந்தப் பேச்சு வெற்றிபெறவேண்டுமென விரும்புகிறேன்.

ஏனெனில் அந்தப் பேச்சு வெற்றி பெற்றிடின், வலதுசாரிகளுடன் கழகம் பேச்சு நடத்துவது மேலும் வசதியாக இருக்கும்.

அவர்களுக்குள்ளே பேச்சு வெற்றி பெறாவிட்டால் இடதுசாரிகளுடன் கழகம் செய்துகொண்ட உடன் பாட்டிலே குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளைத் தவிர மற்றத் தொகுதிகளைப் பற்றி மட்டுமே பேச முடியும். அதுதான் முறை. அதுதான் சாத்தியம்.

இதற்கிடையிலே தம்பி! கழகம் நடத்திய தோழமைத் தொடர்பும், தொகுதி உடன்பாட்டுப் பேச்சும்,

முஸ்லிம் லீக்
சுதந்திரக் கட்சி
பார்வார்டு பிளாக்
இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி
பிரஜா சோஷியலிஸ்டு கட்சி

ஆகிய கட்சிகளுடன் நமது கழகம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள முடிந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேறு கட்சிகளுடனும் உடன்பாடு காண முயற்சி நடைபெறுகிறது.

ஒன்று நினைவிலே நாம் கொள்வது நல்லது. தேர்தல் உடன்பாடு பற்றி நாம் பேசத் தொடங்கியபோது, அடிப்படையாக,

தி. மு. க.
முஸ்லிம் லீக்
சுதந்திரா

என்றுதான் துவங்கிற்று. இதனை முக்காலிக் கூட்டு என்று கூடக் கேலி பேசினர்; காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, வலது கூடத்தான்!

இந்த மூன்று கட்சிகளும் ஒன்று சேர முடியாது என்று காமராஜப் பெரியவர் மேடை தவறாமல் பேசிக்கொண்டு வந்தார். மட்டங்கள், மூன்று விரலைக்காட்டி - மூன்று கட்சிகள் - தெரிகிறதல்லவா பொருள்? மூன்று விரல் - நாமம்! - என்று நையாண்டி பேசின. இதைக் கேலி செய்து விதவிதமான படங்கள். சித்திரக்காரர்களுக்கு நல்ல வருமானம். ஏகப்பட்ட ஆரூடங்கள், இது நடக்காது என்று.

ஆனால் இப்போது முக்காலிக் கூட்டு என்றுகூட அவர்கள் கூறுவதற்கில்லை. ஏனென்றால், தொகுதி உடன்பாடு கையொப்பமாகி இருப்பது.

தி. மு. க.
முஸ்லிம் லீக்
சுதந்திரக் கட்சி
பார்வார்டு பிளாக்
இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி
பிரஜா சோஷியலிஸ்டு கட்சி

ஆகிய ஆறு கட்சிகளுக்கிடையில் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் தமிழர் இயக்கத் தலைவர் ஆதித்தன் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தக்க பலன் தரத்தக்க முறையில் வடிவம் தந்திருக்கிறது. சம்யுக்த சோஷியலிஸ்டு கட்சித் தலைவர் நல்லசிவம் அவர்களுடன் நடந்த நட்புமிக்க பேச்சு, "செங்காய்' என்ற வகையில் இருக்கிறது. உழைப்பாளர் கட்சித் தலைவர் எஸ். எஸ். இராமசாமி படையாச்சியாருடன், நான் ஒரு முறை பேசினேன்; ஆய்வுக் குழுவுடன் ஒரு முறை பேச்சு நடந்திருக்கிறது.

எனது மதிப்புமிக்க நண்பர் ம. பொ. சிவஞானம் அவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சு பற்றியும் குறிப்பிட வேண்டும். கழகம் தனது நிலைமையை அவரிடம் விளக்கிக் கூறியிருக்கிறது; விளைவு கனிவான நேசமாகவே இருந்திடும் என்று நம்புகிறேன்.

தம்பி! நான் செய்யக்கூடியவைகளைச் செய்துகொண்டு வருகிறேன்; முடிந்ததை. மூன்று கட்சிகளின் "அணி' அமைக்க முயற்சி எடுத்துக்கொண்டோம். அரசியல் ஆரூடக்காரர்களின் பேச்செல்லாம் பொய்த்துப்போகத்தக்க முறையில், இப்போது ஆறு கட்சிகளின் அணி என்று சொல்லத்தக்க, தொகுதி உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இனி உன் வேலை தொடங்கட்டும்.

அண்ணன்,

18-12-66