அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கங்கா தீர்த்தம் - 2
2

ஆனால் சோஷியலிசம் பேசும் காங்கிரசின் ஆட்சியில் மக்களிடையே காணக் கிடக்கும் பொருளாதார பேதம் விரிவாகி விட்டிருக்கிறது; ஆழமாகியும் விட்டிருக்கிறது.

இதனை சர்க்காரே அமைத்த மகனாலோபிஸ் குழுவினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஏழை - பணக்காரன் பேதத்தைப் பயங்கரமான அளவு வளர்த்துவிட்டவர்கள், வளர்த்துக்கொண்டு வருபவர்கள் சோஷியலிசம் எமது திட்டம் என்றும் பேசுகிறார்கள்! விந்தையை என்னென்பது?

நானும் சைவன்தான் என்று பேசினானாம், ஆட்டு இறைச்சியின்றி ஒருவேளைகூட இருக்க முடியாதவன். வியப்பாக இருக்கிறதே! நீயா சைவன்? என்று கேட்டானாம் நண்பன்! ஆமாம்! அதிலென்ன சந்தேகம்! புல், பச்சைத்தழை இவைதானே ஆடு தின்கிறது, அதை நான் தின்கிறேன் என்றானாம். அது வேடிக்கைப் பேச்சு. காங்கிரஸ் ஆட்சியினர் முதலாளித்துவத்தை வளர்த்துக்கொண்டே சோஷியலிசம் பேசுகிறார்கள்; தங்கள் நாணயத்தை எவரும் சந்தேகிக்கக்கூடாது என்றும் கூறுகிறார்கள் - கூறுகிறார்களா! கட்டளையிடுகிறார்கள்!

இவ்விதம் பேசுவது காங்கிரசின் எதிரிகளின் போக்கு என்று கூறித் தப்பித்துக்கொள்ள முயற்சிப்பார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

தம்பி! நான் எடுத்துக்காட்டிய இந்தக் கருத்துரைகள் சில காங்கிரஸ்காரர்களே பேசியவை.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு காங்கிரஸ்காரர் அன்சர் ஹர்வாணி என்பவர். அவர் மனம் நொந்து பேசியிருக்கிறார்:

சோஷியலிச வழியிலே காங்கிரஸ் அரசு செல்லவில்லையே!

கொள்ளை இலாபமடிக்கும் முதலாளிகளின் கொட்டத்தை அடக்குவதற்குப் பதிலாக அவர்களுடன் கூடிக் குலவுகிறீர்களே! இது அடுக்குமா!

வரி கொடுக்காமல் ஏய்க்கும் வணிகக் கோமான்கள் இருக்கிறார்கள்; அவர்களைப் பிடித்திழுத்துத் தண்டிக்காமல், அவர்களின் மாளிகைகளிலே விருந்துண்ணச் செல் கிறீர்களே! நியாயமா?

என்றெல்லாம் கேட்டிருக்கிறார்.

சோஷியலிசம்கூட அல்ல, காந்திய வழியிலேகூடச் செல்லவில்லையே, முறையா? கைகூப்பி, மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன், காந்திய வழியிலே நடவுங்களய்யா என்று காங்கிரஸ் ஆட்சியினரைக் கேட்டுக்கொள்கிறார் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்துவந்த தேபர்.

இவர்களின் மனக்குமுறலையுமா, காங்கிரசாட்சியினர் எதிர்க்கட்சியினரின் எரிச்சலூட்டும் பேச்சு என்று அலட்சியப்படுத்திவிடப்போகிறார்கள்!!

சென்ற கிழமை கல்கத்தாவில் பேசிய மாளவியா எனும் காங்கிரஸ் தலைவர், நேரு மறைந்ததற்குப் பிறகு, காங்கிரசின் சோஷியலிசப் பணி பின்னுக்குச் சென்று விட்டது என்று நிருபர்களிடம் கூறியிருக்கிறார்.

சோஷியலிசப் பாதையில் வேகமாக நடைபோடுவதாக இங்கு காமராஜர் முழக்கமெழுப்புகிறார். சோஷியலிசத்தில் இதுவரை இருந்து வந்த ஆர்வமும் மங்கிவிட்டிருப்பதாக மாளவியா கூறுகிறார். அவரும் காங்கிரஸ்காரரே! அவரைக் கண்டிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம், காமராஜரை!! செய்யமாட்டார்!!

சோஷியலிசம்பற்றி இங்கு காமராஜர்கள் பேசும்போது, மக்கள்,

தனி முதலாளிகளின் கொட்டம் அடக்கப்படும், வருவாய் தரத்தக்க பெரிய தொழில்கள் பொதுத்துறைக்கு ஒதுக்கப்படும்,

பொருளாதார பேதம் ஒழிக்கப்படும் அல்லது குறைக்கப்படும்,

தொழில்கள் வெறும் இலாபவேட்டைக் கூடங்களாக இனி இராமல், மக்களுக்கு வசதி தேடித் தரும் அமைப்புகளாகிவிடும்,

ஓடப்பர் உயரப்பராகி எல்லோரும் ஓப்பப்பராகிவிடுவார்!

என்றெல்லாம் எண்ணிக்கொள்கிறார்கள். பாவம் அவர்கள் அறியார்கள், காங்கிரசின் சோஷியலிசம் அது அல்ல என்பதனை.

சோஷியலிசம் பேசுகிறார்களே இவர்கள் ஆட்சி செய்யும் நாட்டிலே நாம் எப்படி நம்பி, பெருந்தொகைகளை முதல் போட்டுத் தொழில் நடத்துவது என்று ஐயப்பட்ட அமெரிக்க முதலாளிகள் இங்கு உலா வந்தனர், உரையாடினர், உசாவிப் பார்த்தனர், உண்மையை உணர்ந்துகொண்டனர், உவகையுடன்ஊர் திரும்பி மற்ற முதலாளிகளைக் கூட்டிவைத்து, அஞ்சற்க! அங்கு பேசப்பட்டு வரும் சோஷியலிசம் நம்மை ஒன்றும் செய்யாது. அது குறித்து நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்தியாவிலுள்ள முதலாளிகளே அதுபற்றிக் கவலைப்பட வில்லை; காங்கிரஸ் பேசும் சோஷியலிசம், ஏழையின் செவிக்கு இனிப்பளிக்கத்தான், வேறு எதற்கும் அல்ல; நாம் "நமது' முதல் போட்டுத் தொழில் நடத்த ஆரோக்கியமான சூழ்நிலை இந்தியாவிலே அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளனர்.

போன வாரத்திலே, ஜி. எல். மேத்தா, இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார், வர்μங்டன் நகரில்.

இந்திய முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து தொழில் நடத்தும் அமெரிக்க முதலாளிகளுக்கு மேத்தா அன்புரையும் நன்றியுரையும் வழங்கினார். அவர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் 67 முதலாளிகளாம்.

முதலாளிகளுக்காக இல்லை காங்கிரசாட்சி, ஏழைக்காகவே இருக்கிறது; பணக்காரரின் கொட்டம் அடக்கப்படும், பாட்டாளியின் வாழ்வு உயர்த்தப்படும் என்றெல்லாம் இங்கே காமராஜர் சோஷியலிசம் பேசுகிறார். அங்கே ஜி. எல். மேத்தா அமெரிக்க முதலாளிகளைக் கூட்டி வைத்து,

காங்கிரஸ் அரசுமீது சந்தேகம் கொள்ளாதீர்கள்.

தனிப்பட்ட முதலாளிகளின் தொழில் அமைப்பு களுக்குக் காங்கிரஸ் அரசு விரோதம் காட்டவில்லை.

காங்கிரசாட்சியில், 17 ஆண்டுகளில் தனியார் துறை விரிவடைந்திருக்கிறது, வளம் அடைந்திருக்கிறது. தனியார் துறைக்குக் காங்கிரஸ் அரசு உதவி அளித்து வருகிறது.

என்று எடுத்துக்கூறி, அமெரிக்க முதலாளிகளுக்கு அன்பழைப்பு விடுத்திருக்கிறார்.

உள்நாட்டு முதலாளிகளை எதிர்த்து, சமாளித்துச் சோஷியலிசத்தை நிலைநாட்டுவதே கடினமானது என்று விவரம் அறிந்தோர் கவலை கொள்கின்றனர்.

ஆனால், சோஷியலிசம் பேசிக்கொண்டே காங்கிரஸ் அரசு, பிரிட்டிஷ் - அமெரிக்க முதலாளிகளை இங்கு ஆதிக்கம் செலுத்த அழைக்கிறது. அவர்களும் இங்கு முகாம் அமைத்துக்கொண்டால், சோஷியலிசம் வெற்றிபெறுவது எளிதாக முடியக்கூடியதா!

வெள்ளைக்காரன் காலத்திலே இருந்ததைவிடப் பலத்துடன் இன்று முதலாளி முகாம் இருக்கிறது என்பதை எந்தக் காங்கிரஸ் தலைவரும் மறுக்க முடியாது.

தன்னை வரவேற்க வந்த காங்கிரஸ் அமைச்சரையே ஒருபுறம் போகச் சொல்லிவிட்டு, பிர்லாவுடன் மோட்டாரில் பேசிக்கொண்டே பவனி வந்தாராமே நந்தா கல்கத்தாவில் போன மாதம், அதிலிருந்தே புரியவில்லையா முதலாளிகட்குக் காங்கிரஸ் அரசிடம் உள்ள பிடிப்பு.

பச்சையாகவே பேசிவிட்டாரே காங்கிரஸ் அமைச்சர் படீல், சுயராஜ்யப் போராட்டக் காலத்தில் எத்தனையோ கோடிக் கணக்கான ரூபாய்களைக் காங்கிரசுக்குக் கொடுத்தவர்கள் முதலாளிகள் என்று. மிரட்டும் குரலில் பிர்லாவும் பேசி விட்டாரே, முதலாளிகளைக் காங்கிரஸ் சர்க்கார் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று.

இவைகளை எல்லாம் மக்கள் மறந்தேவிடுவார்கள் என்ற எண்ணத்தில், சோஷியலிசம் பேசிச் சுவை ஊட்டப் பார்க்கிறார்கள்.

சோஷியலிசத்தின் அடிப்படை ஒன்றைக்கூட அமைத்துக் கொள்ளாமல், சோஷியலிசத்துக்கு வெடி வைக்கும் போக்கை மாற்றாமல், சோஷியலிசம்பற்றிப் பேசுவது, எப்படிப் பொருளுள்ளதாகும்? என்ன பயனைத் தரும்?

இங்கே சோஷியலிசம் பேசுகிறார் காங்கிரஸ் தலைவர்; பிர்லா அறிவிக்கிறார் சென்ற வாரம், அமெரிக்காவிலிருந்து:

3,00,000 டன் உற்பத்தி செய்யக்கூடிய தேன் இரும்புத் தொழிற்சாலையை 1967லில் துவக்கப்போவதாக! அமெரிக்க முதலாளியின் கூட்டுறவுடன்!!

அலுமினியத் தொழிற்சாலையை விரிவுபடுத்தப் போவதாக! அமெரிக்கக் கூட்டுறவுடன்.

உர உற்பத்தித் தொழிற்சாலை விரிவான முறையில்! அமெரிக்கக் கூட்டுறவுடன்!!

அதேபோது, இந்தியப் பேரரசின் தொழில் அமைச்சர் சஞ்சீவய்யா,

தொழிலாளர்களுக்குப் போதுமான வசதிகளைத் தொழில் அமைப்புகள் செய்து தரவில்லை என்று தெரிவிக்கிறார்.

பிர்லா புதுத் தொழில் அமைக்கிறார்; தொழிலாளி பழைய வேதனையைத் தொடர்ந்து அனுபவித்து வருகிறான்; காமராஜர் சோஷியலிசம் பேசுகிறார்; நாடு கேட்டுக்கொள்ளவேண்டி இருக்கிறது.

நாடு நம்புகிறதா என்று கேட்கிறாயா, தம்பி! நான் என்னத்தைச் சொல்ல! எதை எதையோ நம்பிக் கிடக்கும் மக்கள் இன்னமும் ஏராளமாக இருக்கிறார்களே!

அனுப்பிய மணியார்டர் வந்து சேர்ந்ததாகக் கடிதம் வருவதற்குள் துடிதுடிக்கும் அதே மக்கள், மேலுலகு சென்று விட்ட பெரியவர்களுக்கு, "திவசம்' செய்வதன் மூலம், பண்டம் அனுப்பிவைப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்களே! எனவேதான் தம்பி! காங்கிரஸ் பேசும் சோஷியலிசம் பதர், நெல் அல்ல என்பதையும், காட்டும் கனிவு வெறும் கபடம் என்பதையும், அமைத்துள்ள முறை முதலாளியைக் கொழுக்கவைப்பது என்பதையும் விளக்கிக் காட்டவேண்டியிருக்கிறது. தெளிவு தேவைப்படும் அளவு இருந்தால், இன்றைய காங்கிரசில் நடுநாயகர்களாகக் கொலுவிருப்பவர்கள் யாரார் என்பதைப் பார்த்தாலே போதும் இந்தக் காங்கிரசினால் சோஷியலிசத்தை நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்பதைப் புரிந்து கொள்ள புள்ளிமான் குட்டிக்குப் புலி பால் தராது என்பதை நான் மட்டுமா, இன்று பூஜை செய்து வரம் கேட்டுக் கொண்டிருக்கும் தம்பிகளும் சேர்ந்து சொன்னார்கள். விளக்கம் போதும் என்று நாம் இருந்துவிடுவதற்கில்லையே; தெளிவு அரசோச்சும் வரையில் எடுத்துக் கூறியபடி இருந்தாக வேண்டும்.

காங்கிரஸ் பேசிவரும் சோஷியலிசம் பொருளற்றது; பயனற்றது,

காங்கிரசின் பேச்சுக்கும் நடத்தைக்கும் பொருத்தம் இல்லை.

என்பது மேலும் மேலும் விளக்கப்பட்டாக வேண்டும்,

ஏழைக்காகப் பரிந்து பேசுவது போதும், அதனையே இந்த மக்கள் சோஷியலிசம் என்று ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள்.

ஏழைக்காகப் பரிந்து பேசுவதும், ஏழையை வதைக்கும் செல்வவான்களுக்கு அறநெறி, அன்பு வழி பற்றிக் கூறுவதும், புதிய கண்டுபிடிப்பு அல்ல, மூவர்ணச் சரக்கும் அல்ல; மிக மிகப் பழையது.

வறுமையால் தாக்குண்டு கிடப்பவர்கள், தெளிவு பெற்று, தமது நிலைமைக்கான காரணம் கண்டறிந்து, உரிமை உணர்வு பெறுகிற வரையில், தானம் தருமம், பரிவு பச்சாதாபம், உதவி சலுகை இவைகளைப் பெற்றுக்கொள்வதில், மகிழ்ச்சிகொள்வர், நன்றியும் கூறிடுவர், இது நல்ல திட்டம் என்றும் ஒப்புக்கொள்வர். ஆனால், பொருளாதார யந்திர அமைப்பின் தன்மையையும், அதனைச் சமைத்திட்ட அரசியல் அமைப்பின் போக்கையும் விளங்கிக்கொண்ட பின்னர், என்ன கூறுவர்?

இருளது விட்டு வந்துளோம் வெளியே!

அய்யோ பாவம்! எனு மொழி கேளோம்!

ஐயமளித்திடும் கரமது வேண்டோம்!

என்றன்றோ கூறுவர். உரிமை கேட்பர், உதவி அல்ல!

1881-ம் ஆண்டு பிறந்தவர் ஜான் நைஹார்ட் எனும் கவிஞர், அவர் அந்த நாளிலேயே பாடி வைத்தார், தெளிவு பெற்ற ஏழை, விழிப்புற்ற பாட்டாளி என்னவிதமாகப் பேசுவான் என்பதனை.

"ஆணவக் கோட்டை
அமைத்திடுவோரே!
அடிமைகள் கண்டினி
நடுங்கிடுவீரே!

உலகிடை எழுந்திடும்
போர்கள் எதிலும்
இருப்பவர் யாமே
மறுப்பவருளரோ!

மன்னர் பெற்றிடும்
வலிவனைத்தும்
அளிப்பவர் யாங்கள்
அறிந்திடுவோமே.

ஞானிகளும் மோனிகளும்
முன்பு காட்டிய வழிகண்டு
காலகாலமாயுள கடுந்தளைகளை
உடைத்தெறிந்துமே

உலக இதயமதை
எம் முரசாகக்கொண்டு
இருளது விட்டு
வந்துளோம் வெளியே

அய்யோபாவம்! எனுமொழி
கேளோம்
ஐயமளித்திடும் கரமது
வேண்டோம்

பேரூர் சமைத்தவர்க்கேன்
பிச்சைதானும்!
என்றுதான் புரியுமோ
உமக்கிப் பேருண்மை.

குலப்பெருமை குடிப்பெருமை
விட்டொழிப்பீர்
வார்ப்படப் பொற்கடவுள்
வாணிபமும் விடுவீர்!

அவரவர் பெறும் தகுதி
ஆக்குந்திறன் வழியதாகும்.
உழைப்போர் நாங்கள்
உற்பத்தியாளர்
ஊமைகளாயிரோம்
இனியுந்தானே!

சுரண்டிடுவோரே!
சோம்பிக் கிடந்திடுவோரே!
பரவிப் பாய்ந்து வந்துளோம்
பாரினில்
பொழுது புலர்ந்தது
புவியெங்குமே, காண்!

இருளும் ஒழிந்தது
வாள் வெளிவந்தது.
உறையையும் வீசி
எறிந்தோம் கீழே!

தம்பி! கவிதையிலே குலுக்கிடும் எழுச்சியைக் கண்டனையா! இவ்விதமான எழுச்சி முரசு கேட்டு உலாவந்து வெற்றிகண்ட முறை சோஷியலிசம்.

இங்கோ, பதர் கொடுத்து நெல் எனக் கூறிடுவார்போல, அய்யோபாவம்! என்பதனையே சோஷியலிசம் என்று கருதிக் கொள்ளச் சொல்கிறார்கள்.

அவர்கள் கூறிடும் சோஷியலிசத்தில், பொருள் இல்லை; பயன் இல்லை!

பொருளற்றதைப் பேசிடுவதுடன், சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமற்ற முறையில் ஏழைக்காகப் பரிந்து பேசிவிட்டு, ஏழையின் அந்த நிலைமைக்குக் காரணமாக உள்ள முதலாளிகளுடன் கூடிக்குலாவுவதும், அவர்களைக் கொழுக்க வைப்பதுமான செயலில் ஈடுபடுகிறது காங்கிரஸ் கட்சி.

இதனை மெய்ப்பிக்கும் விதமாகவே இருந்திருக்கிறது காமராஜரின் மேடைப் பேச்சும், அவருடன் கூடிக் குலாவியவர் களின் பட்டியலின் தன்மையும், இதனை எடுத்து விளக்கிட வேண்டும். இது வெறும் கிணற்றுத் தண்ணீர்; கங்காதீர்த்தம் என்று கூறுவது ஏமாற்றுப் பேச்சு என்பதனை எடுத்துக் கூறிட வேண்டும் - தொடர்ந்து.

அண்ணன்

6-6-1965