அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயம் வென்றிட. . . (1)
1

காந்தியார் காங்கிரசும் ஆளுங்கட்சிக் காங்கிரசும்
இழந்தது சரிகைத் தொப்பி; பெற்றதோ மந்திரி வேலை!
மக்களின் இதயத்தை வென்றிடும் தன்மை மட்டும் போதாது கழகத்துக்கு!

தம்பி!

இரத்த ஆறு ஓடும் - பிணமலை குவியும் - வீடுகள் தீக்கிரையாகும் - வயல்கள் கருகும் - எங்கும் அல்லோலகல் லோலம் - அமளி - அழிவு,

காட்டுத் தீபோல, கட்டுக்கு அடங்காத பெருவெள்ளம் போல, நெருப்பைக் கக்கும் எரிமலையின் குமுறல்போல, செங்கிஸ்கான், தைமூர், அட்டில்லா போன்ற வெறி பிடித்தலைந்தவர்கள் அவனியில் நடமாடி அழிவை ஏவியபோது, நிலைமை இருந்தது.

அவர்களின் படைகள் பாய்ந்து வருகின்றன என்றால் ஒரே பீதி! எதிர்த்து நிற்க முடிவதில்லை; தடுத்திட முடிவதில்லை! அழிவு ! அழிவு! பெரும் அழிவு! எதிர்ப்பட்டதெல்லாம் அழிக்கப்படும்! வாள்! வேல்! ஈட்டி! இவை மட்டுமல்ல, நெருப்பு, விஷம், சித்திரவதைக் கருவிகள் இவைகளையும் கொண்டுதான் அந்த வெறியர் போர் நடத்தினர்.

போர் முறை, அதிலே ஒரு நெறி; ஆயுதமற்றவர்களைத் தாக்காதிருக்கும் பண்பு, பெண்டிரிடமும் குழந்தைகளிடமும் பச்சாதாபம் காட்டும் உணர்வு; சொத்துக்களை நாசமாக்கா திருக்கும் முறை எனும் எதற்கும் அவர்கள் கட்டுப்படுவதில்லை. எதையும் நாசம் செய்வது, வதைப்பது, வாட்டி எடுப்பது, அதிலே மக்கள் துடிதுடிப்பது கண்டு மகிழ்வது, இப்படி அவர்கள்.

அவர்களின் வெறித்தனத்தை இன்று கண்டிக்கிறோம்; வரலாற்றுச் சுவடிகள் அவர்களை நடமாடிய நாசம் என்று குறிக்கின்றன. ஆனால், அவர்கள் படைபலமும் போர்வெறியும் காட்டி நாடு நகரங்களை அழித்தும், மக்களைக் கொன்று குவித்தும் நாசத்தை மூட்டிவிட்டபோது அவர்களின் செயலைக் கண்டிக்க முடியவில்லை. கண்டிப்பவனின் நாக்கு துண்டாடப் பட்டுவிடும்.

அவர்களைக் கண்டிக்காதது மட்டுமல்ல, அவர்கள் பெற்ற வெற்றிகளைக் கொண்டாட விழாக்கள்! கோலாகலப் பவனிகள் நடைபெற்றன!

ஒருபுறத்தில் அக்கொடியவர்கள் வெட்டி வீழ்த்திய உடலங்கள் குவியல் குவியலாக; மற்றோர் புறத்திலே அந்த மாபாவிகளின் கொலு!

அது மட்டுமல்ல! அந்த அக்கிரமக்காரர்களின் வெறித் தனத்தை வீரம் என்றும் படுகொலைகளை வெற்றிகளென்றும் கூறிடவேண்டிய கொடுமைக்கும் சிலர் ஆளாக்கப்பட்டனர். கவிதைகளை இயற்றித் தந்தனர் சிலர்! அவர்களின் கொடுஞ் செயல்களைக் காவியமாக்கித் தந்தனராம் சிலர்! அதற்காகவே சிலர், அந்த வெறியர்களால் அமர்த்தப்பட்டிருந்தனராம்.

அவர்களின் "காலம்' முடிந்த பிறகே, அவர்களின் செயல் எத்துணைக் கொடுமை நிரம்பியது என்பதனைக் கூறிட முடிந்தது. அவர்களின் ஆதிக்கம் இருந்து வந்தபோது, புகழாரம் சூட்டிடவும் வேண்டி நேரிட்டது, புண்பட்ட நெஞ்சினரால்! தமது புலமையை அந்தக் கொடியவர்களுக்குப் பகொடுத் திடவேண்டியும் நேரிட்டதாம்!

கொடுமைகளை எதிர்த்து ஒழித்திட முடியாத நிலையில் பலர் அதற்கு இரையாகிவிடுவதுடன், சிலர் அந்தக் கொடுமையைக் கொடுமை என்று கூறிடவும் முடியாத நிலையினராகிக் குமுறிக் கிடந்திடுவதுண்டு.

வெற்றி வெறி தலைக்கேறிய அந்தத் தருக்கர்களும், தம்மை எதிர்த்து நிற்பார் இல்லை என்பதைக் களம் பலவற்றில் கண்டு கண்டு இறுமாந்து, தமக்கு இந்த ஆற்றலை ஆண்டவன் அளித்திருப்பது, அதனைக் கொண்டு இந்த அவனியை அஞ்சிட வைத்திடவும், அடக்கி ஆண்டிடவுமே என்றுகூடக் கருதினர்.

ஆண்டவனே அனுப்பிவைத்த அழிவாயுதம் என்று தமக்குத் தாமே விருதும் சூட்டிக்கொண்டனர் அந்தக் கொடியவர்கள்.

இப்போதுதான் எடுத்துக் காட்டப்படுகிறது: அவர்களிடம் இருந்து வந்த படைகளின் தன்மையும், அவர்கள் கையாண்ட போர் முறையும், அவர்கள் காட்டிய வேகமும் துணிவுமே அவர்களைக் கண்டோர் மருண்டிடத்தக்க, கேட்டோர் கிலி கொள்ளத்தக்க வெற்றிகளைப் பெற்றிடச் செய்தது என்பதனை.

நெடுங்காலத்துக்குப் பிறகுதான், எவ்வளவோ நாசத்துக்குப் பிறகுதான், அவ்விதமான அழிவுச் சக்தியை எப்படித் தடுத்து நிறுத்துவது, எப்படி எதிர்த்து ஒழிப்பது என்ற போர் முறையை வகுத்திடவும், வெற்றி காணவும் முடிந்தது. அந்தக் கட்டம் பிறந்திடும் வரையில் அந்தக் கொடியவர்கள், எவராலும் தோற்கடிக்கப்பட முடியாத மாவீரர்கள் என்று கூறிக்கொள்ள முடிந்தது.

உலகை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டானல்லவா இட்லர்! சென்ற இடமெங்கும் வெற்றி என்றனர்! சேதி சொல்லி அனுப்பினால் போதும், சரண் அடைய நாடுகள் காத்திருந்தனவே.

அவனை வெல்வார் இல்லை! என்று உலகே பேசிற்று. எதுவரையில்? அவனை வீழ்த்துவதற்கான முறை செம்மைப் படுத்தப்படும் வரையில்,

கொன்று குவித்திடும் கொடுமை நிரம்பிய களம் நின்றவர்களின் இறுதியே, தோல்வி என்றாகிவிட்டது என்கிற போது, ஆயிரத்தெட்டுத் தந்திரங்களின் துணைகொண்டு, அரசியல் ஆதிக்கத்தைப் பெற்றுவிடும் ஒரு கட்சி, என்றென்றும் வல்லமைமிக்கது, வீழ்த்தப்பட முடியாதது என்ற நிலையில் இருந்துவிடும் என்று பேதையும் கூறிடான். கொடுமைகளைத் தாங்கித் தத்தளித்த உலகு இறுதியில் அந்தக் கொடுமையினை ஒழித்துக் கட்டியது என்பதனைக் காட்டிடுவது வரலாற்றுச் சுவடி. இதனை மறந்து தேர்தல் களத்திலே பெற்றுவிட்ட ஒரு வெற்றியைக் கண்டு காங்கிரசின் தலைவர்கள் எமக்கு இனி எவரே இணை! எவர் இனி எம்மை என்ன செய்திட முடியும்! என்றெல்லாம் இறுமாந்து பேசுகின்றனர்.

அது கேட்டு நமது தோழர்கள் கோபித்து ஆகப்போவது ஒன்றுமில்லை.

வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சி பேசுவதில், ஆணவம் நெளிகிறது; உண்மை. ஆனால், அந்தப் பேச்சைக் கேட்டுக் கொள்வது, கழகத்துக்கு நன்மையே செய்திடும் என்று நான் நம்புகிறேன். எனவே, வெற்றி வெறியிலே அவர்கள் பேசுவதை வரவேற்கிறேன்.

தோல்வியால் துயரமும், வெற்றி வெறியாளரின் பேச்சால் கோபம் கலந்த வேதனையும் கழகத் தோழர்களிடம் மூண்டிட மூண்டிட, அவர்கள் தமது முறைகளைச் செம்மைப் படுத்திக்கொள்ள முனைவர் என்பது என் எண்ணம். நான் கடிந்துரைப்பதன் மூலம் நடைபெறக்கூடியதைக் காங்கிரசின் வெற்றி வெறிப் பேச்சினர், நடத்திக் கொடுக்கிறார்கள். கடிந்துரைத்திடும் இயல்பும் எனக்கும் இல்லை.

தேர்தல் களத்திலே ஏற்பட்டுவிடும் ஒரு தோல்வி நம்மைச் செயலற்றவர்களாக்கிவிடாது என்பதனை நான் அறிவேன், நானே தேர்தலிலே தோற்கடிக்கப்பட்டவன்.

தோல்வி, துடைக்க முடியாத இழுக்கை ஏற்படுத்தி விடும் என்று கவலை கொள்பவனுமல்ல; வெற்றி அதனைப் பெற்றவர்களுக்கு, என்றென்றும் ஒளிவீசும் புகழாரம் சூட்டி விடாது என்பதனையும் அறிந்திருக்கிறேன்.

போட்ட புள்ளிகள் பொய்த்துப்போவதும், தீட்டிய முறைகள் கெட்டுப்போவதும், எதிர்பார்த்தவைகள் நடை பெறாமல் போய்விடுவதும், நாம் இதற்கு முன்பு காணாததுமல்ல; ஒவ்வொரு தனி மனிதரும் சரி; கட்சியும் சரி, இத்தகைய நிலையினைக் கண்டதுண்டு; அறிவோம்.

மோப்பம் பிடிப்பதிலும், பதுங்கிப் பாய்வதிலும், பாய்ந்து பற்றுவதிலும், பற்றுவதைப் பிய்த்து எறிவதிலும் காட்டிலே புலிக்கு உள்ள திறமை, நாட்டிலே தேர்தல் களத்திலே காமராஜருக்கு உண்டு என்று பேசாதார் இல்லை, புகழாதார் இல்லை.

எனினும், திருவண்ணாமலையிலும் திருச்செங்கோட்டிலும், மாநகராட்சி மன்றத் தேர்தலிலும், கேரளத்திலும் காமராஜரின் கணக்குச் சரியில்லை, வாக்குப் பலிக்கவில்லை, முயற்சி வெற்றி பெறவில்லை; அதனால் அவருடைய மூக்கு அறுபட வில்லை, முகாம் கலைக்கப்படவில்லை, முடுக்குக்கூட குறையவில்லை!

ஐயாயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிக்கொடி நாட்டுவோம் என்ற பிரகடனம் செய்தவர்தான் காமராஜர் திருவண்ணாமலைத் தேர்தலின் போது!!

மாநகராட்சி மன்றத்தேர்தலை முடித்துக்கொண்டு டில்புற ப்பட்ட காமராஜர், ஹைதராபாத்திலே, நிருபர்களிடம், தொலைந்தது கழகம்! வென்றது காங்கிரஸ்! கார்ப்பரேஷனைக் காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது! என்று அறிவித்தார்.

நினைத்தது நடக்கவில்லை; நடந்துவிட்டது கண்டு அவருடைய நினைப்புத் தளரவில்லை, நிலை தடுமாறவில்லை; பேச்சிலேகூட ஒரு அச்சம், ஆயாசம் எழவில்லை.

அதனை நான் எடுத்துக்காட்டுவது அவரைக் கேலி செய்ய அல்ல.

வெற்றியை எதிர்பார்த்து, அதற்காகப் பாடுபட்டு, நிச்சயமாகக் கிடைக்கும் என்று நம்பி, தோல்வியைக் கண்டால், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான கருத்தினைக் கழகத் தோழர்கள் பெற வேண்டும் என்பதற்காகவே இதனைக் கூறினேன்.

சில காலமாக நமக்கு ஓர் எண்ணம் வளர்ந்துவிட்டிருக் கிறது; நம்முடைய முயற்சி எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்ற எண்ணம்.

காரணமற்றதுமல்ல அந்த நம்பிக்கை.

நாம் மேற்கொள்ளும் முயற்சி நியாயமானது என்பதால், அந்த முயற்சி வெல்லும் என்று கருதுவதும்,

நாம் மேற்கொள்ளும் முயற்சிக்கு மக்களின் பேராதரவு இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் நிரம்பத் தெரிவதால், வெற்றி கிடைத்திடும் என்று கருதுவதும் தவறு அல்ல.

ஆனால், நம்முடைய முயற்சி நியாயமானது என்பதை எடுத்து விளக்கும் செயலிலும்,

நம்முடைய முயற்சிக்குப் பேராதரவு அளித்திடும் விருப்பம் கொண்டுள்ள மக்கள் முழுத் திறமையுடன் நமக்குத் துணை நின்றிடச் செய்திடும் செயலிலும், நாம் பெறவேண்டிய வெற்றியைப் பெற்றோமில்லை.

மற்றொன்று, நாம் காங்கிரசுக்கு உள்ள "தேர்தல் யந்திரத்தின்' அளவு, தாங்கும் சக்தி, தாக்கும் சக்தி இவைபற்றிய கணக்கிலேயும் தவறு செய்கிறோம்.

காங்கிரஸ், தனது தூய காந்தீயக் கொள்கையை இழந்து விட்டது; ஆகவே, அதற்குக் காந்தியார் காலத்தில் இருந்துவந்த மதிப்பு இப்போது மங்கிவிட்டது.

ஆகவே, காங்கிரசின் செல்வாக்குச் சிதைந்துவிட்டது என்பது நமது கருத்து.

இந்தக் கருத்தினைக் கொண்டோர், வேறு பலரும் உளர். இந்தக் கருத்து தவறானதுமல்ல; உண்மை; மறுக்க முடியாதது.

கொள்கைக் கூடமாகக் காங்கிரஸ் இல்லை, கொள்கை யாளர் அதிகம் பேர் அங்கு இல்லை என்பது உண்மை. அதனால் மதிப்பு மங்கிவிட்டது என்பது உண்மை; ஆனால், ஒரு விசித்திரமான உண்மை என்னவென்றால், தம்பி! கொள்கையை இழந்துவிட்ட பிறகு காங்கிரசுக்குத் தூய்மையான அமைப்பு என்ற செல்வாக்கு இல்லை என்றாலும், தேர்தலில் ஈடுபட்டு வெற்றி ஈட்டத்தக்க கட்சி என்ற வலிவு வளர்ந்திருக்கிறது.

கொள்கையை இழந்துவிட்டது காங்கிரஸ், எனவே, அதனுடைய வீழ்ச்சி நிச்சயம் என்பது பொதுவான உண்மை என்றபோதிலும், கொள்கைச் சிறப்புடன் காங்கிரஸ் இருந்து வந்தபோது, அதனுடன் நெருங்க முடியாத நிலையினில் இருந்து வந்த பலர், கொள்கையைக் காங்கிரஸ் இழந்துவிட்ட பிறகு, அச்சமற்று அதிலே சேர்ந்துகொள்ள முன்வந்தனர்.

அவர்கள், ஓட்டு வேட்டையாடும் வலிவினைக் காங்கிரசுக்குப் புதிதாகச் சேர்த்துக்கொடுத்துள்ளனர்.

மகாத்மாவின் காலத்தில் அதன் தூய்மை காரணமாகக் காங்கிரசிடம் மக்கள் "பக்தி' செலுத்தினர். காங்கிரசின் வலிவு மிகுந்திருந்தது.

காங்கிரசின் கொள்கை புதையுண்ட பிறகு, அதிலே புகுந்துகொண்ட புதியவர்கள், இலாப நோக்கத்துடன், திட்டமிட்டு, காங்கிரசுக்கு வலிவு ஊட்டியுள்ளனர்.

காந்தியார் காலத்துக் காங்கிரஸ், மக்களின் இதயத்தை வென்றிடும் வலிவு கொண்டிருந்தது.

கொள்கையை இழந்துவிட்ட காரணத்தால் காங்கிரசுக்கு, முன்பு இருந்த வலிவு இல்லை என்று நாம் கூறும்போது, தம்பி! மக்களின் இதயத்தை வென்றிடும் வலிவு இல்லை என்பதைத்தான் எண்ணிச் சொல்கிறோம்.

கொள்கை இழந்த பிறகு காங்கிரசைத் தமது கூடாரமாக்கிக் கொண்டவர்கள், மக்களின் இதயத்தை வென்றிடும் வல்லமையைக் காங்கிரஸ் பெறும்படி செய்யவில்லை; அவர்களால் முடியாது; ஆனால், அவர்கள் மக்களின் "ஓட்டுகளை'த் தட்டிப் பறித்திடும் வலிவினைக் காங்கிரசுக்குத் தேடிக் கொடுத்துள்ளனர்.

பத்தினி கெட்டால் பளபளப்பு அதிகமாகும், துவக்கத்தில்! இறுதியில் இழிவு நாசம்! ஆனால், இடையிலே ஒரு புது மினுமினுப்பு, குலுக்கு, தளுக்கு ஏற்படும்.

காங்கிரசைத் தமது கூடாரமாக்கிக் கொண்டவர்கள் அதனுடைய பழைய புனிதத்தன்மையை மாய்த்துவிட்டனர்; ஆனால் ஒரு புதிய பளபளப்பைத் தந்துள்ளனர்;

அந்தப் பளபளப்பு விவரமறியாதாரை மயக்கவல்லது என்பதனை மறந்துவிடக்கூடாது.

தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்குடன் அல்லது நிலைமையை விளக்குவதற்காகக் கூறுகிறேன்; காங்கிரஸ் தூய அமைப்பாக இருந்தபோது, பழைய கோட்டைப் பட்டக்காரரும், சங்கரண்டாம் பாளையத்தாரும் பூண்டி வாண்டையாரும், மூப்பனாரும் மற்றவர்களும் அதிலே இல்லை. அது, சிறை செல்ல, சொத்து இழந்திட, தடியடி பட, துப்பாக்கிக் குண்டடி ஏற்க அழைத்த காங்கிரஸ்.

எங்குச் செல்கிறோம் என்றும் தெரியாது, என்னென்ன இடர்ப்பாடுகள் என்பதும் புரியாது. எத்தனை நீண்ட பயணம் என்ற கணக்கும் அறியாது என்ன கிடைக்கும் என்று நினைக்கவும் முடியாது, ஒரு தூய தொண்டாற்றுகிறோம், இதயம் கூறுகிறது, அதன்படி நடக்கிறோம் என்று மட்டுமே உணர்ந்து பலர் காங்கிரசில் ஈடுபட்ட காலத்தைக் குறிப்பிடுகிறேன்.

அப்போது, வ. உ. சிதம்பரனாரும், திருப்பூர் குமரனும், சர்தார் வேதரத்தினமும் தேவைப்பட்டனர்; கிடைத்தனர்.

அவர்கள் காலத்துத் தூய்மை மங்கிற்று; மடிந்தது; காங்கிரஸ் ஒரு கட்சியாக வடிவமெடுத்தது; அரசியல் ஆதாயம் தரத்தக்க அமைப்பாயிற்று; வாண்டையாரும் பட்டக்காரரும் நெடும்பலத்தாரும் சேதுபதியாரும் காங்கிரசிலே சேர முடிந்தது. அவர்கள் சேர்ந்ததால் மக்களின் இதயத்தை வெல்லும் சக்தியைக் காங்கிரஸ் இழந்தது; ஆனால், மக்களிடம் உள்ள "ஓட்டுகளை' மயக்கியோ மிரட்டியோ பெற்றிடும் வலிவினை அந்த வித்தையில் மெத்தத் தேர்ந்தவர்களான அவர்கள் காங்கிரசுக்குக் கொடுத்துள்ளனர்.

இந்தக் கணக்கினை நாம் கவனிக்காமலிருப்பது தவறு; மிக மிகத் தவறு.

பழைய கோட்டைப் பட்டக்காரரால், உப்புக்காய்ச்ச முடியவில்லை, சட்டம் மீறமுடியவில்லை, கைராட்டை சுற்ற முடியவில்லை, வரிகொடா இயக்கம் நடத்த முடியவில்லை; ஆனால், அவரால் இன்று, தம்மைப் பெரிய புள்ளி என்றும் பட்டக்காரர் என்றும் விளக்கிக்கொள்வதன் மூலம் ஏற்படும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஓட்டுகளைப் பெற்றுத் தந்திட முடிகிறது.

இத்தகையவர்கள் நிரம்ப உளர், இன்றைய காங்கிரசில்; அதன் காரணமாக, இதயத்தைப் பெறமுடியாத நிலையைப் பெற்ற காங்கிரசினால், ஏழையின் ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக் கொள்ளும் புதிய வலிவினைப் பெறமுடிந்திருக்கிறது.

இதயத்தை வென்றிடும் வல்லமையைக் காங்கிரஸ் இழந்து விட்டது என்பது மட்டுமல்ல, மக்களின் இதயத்தை வென்றிடும் தன்மை கழகத்திடம் வளர்ந்துகொண்டு வருகிறது.

மக்களின் இதயத்தை வென்றிடும் வல்லமையையோ காங்கிரஸ் இழந்துவிட்டது; மக்களின் இதயத்தை வென்றிடும் நிலையோ கழகத்துக்கு இருக்கிறது, இந்நிலையில் காங்கிரசால் கழகத்தைத் தோற்கடிக்க முடியுமா என்ற எண்ணம் நமக்கு.

இந்த வாதத்தில் தவறு இல்லை; பொருள் இல்லாமற் போகவில்லை, தவறு எங்கே இருக்கிறது என்றால், தேர்தல் களம் என்பது, முழுக்க முழுக்க இதயத்தை வென்றிடும் இடம் என்று நினைத்துக்கொள்வதுதான்.

"சரியல்ல என்று தெரிகிறது என்றாலும் செய்ய வேண்டி இருக்கிறதே''

"நான் என்ன செய்ய! என் நிலைமை அவ்விதம் ஆகிவிட்டது''

"விருப்பத்தோடா நான் ஆதரவு கொடுத்தேன்!'' இவ்விதமான பேச்சைத் தேர்தல் சமயத்திலே கேள்விப் படலாம்,

"அந்தக் கட்சிக்காக அல்ல, நிற்கிறாரே அவர் எனக்கு மிகவும் வேண்டியவர்.''

"நிற்கிற ஆள் எனக்குத் தெரியாது, ஆனால், கம்பெனி முதலாளி அவர் பக்கம்; நான் வேறு பக்கம் இருக்க முடியுமா?''

"என்ன செய்வது, கடன் கொடுத்தவன், கழுத்தின்மீது கத்தியை நீட்டுகிறான்; இந்தத் தேர்தலில் அவன் பக்கம் நான் இருந்தால்தான், தலை தப்ப முடியும்.''

"என்னவோ என் கஷ்டம் போக ஏதாவது வழி கிடைக்காதா என்று பார்க்கிறேன். கொள்கை கோட்பாடு என்று பேசிக்கொண்டிருந்தால், என் குடும்பத்தைக் கவனிக்கவேண்டுமே! பெரிய மனிதர் வாக்குக் கொடுத்திருக் கிறார், உதவி செய்வதாக. அதனால்தான் அந்தப் பக்கம் இருக்கிறேன்.''

"நம்ம சம்பந்திக்கு வேண்டியவராம். நான் அவர் பேச்சைத் தட்டி நடக்க முடியுமா?''

"என் மானம் சொத்து எல்லாம் இந்த வழக்கிலே நான் வெற்றி பெறுவதைப் பொறுத்து இருக்கிறது. இதற்கு முக்கியமான சாட்சி ஒருவர். அவர் வந்து சொல்கிறார். இன்னாருக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும் என்று. எப்படி நான் மீற முடியும்?''

இவ்விதம் பேசுபவர்களையும், தம்பி! தேர்தலின்போது காணலாம்.

தேர்தலின்போது அனைவருமே இதயத்தின் கட்டளைப்படி நடந்துகொள்வார்கள் என்று எண்ணிவிட முடியாது. கட்டளை, கனிவுரை, எச்சரிக்கை, வரம், வாக்குறுதி, மிரட்டல் எனும் பல்வேறு வகையின கிளம்பும், பல்வேறு முனைகளிலிருந்து.

"பார்ப்போமே, பயல் என்னை மீறி நடக்கிறானா என்பதை''

"கண்டிப்பாகச் சொல்லிவிடு! இதிலே என் சொல்லை மீறி அவன் நடந்தால், பிறகு எவ்விதமான பந்தமும் பாசமும் எனக்குக் கிடையாது என்பதை.''

"என்ன ஏகப்பட்ட ஆட்டம் போடுகிறானாமே! கேட்டு விட்டுவா, சொத்தை ஏலத்துக்குக் கொண்டு வரவா என்பதை.''

என்று இவ்விதமாக மிரட்டித் திரியும் பேர்களைக் காணலாம் தேர்தல் காலத்தில்.