அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயம் வென்றிட. . . (1)
2

மற்றச் சமயத்தில் இதயம் பேசும் - தேர்தல் சமயத்தில் இதயம் தூங்கிவிடும் அளவுக்கு மயக்கமூட்டும் காரியம் நடைபெறும். அதைச் செய்திட வல்லவர்கள் இருக்கிறார்கள்.

மக்களின் இதயம் நமது பக்கம், ஆகவே, தேர்தலில் வெற்றி நமது பக்கந்தான் என்று எண்ணுவது இயற்கை; வாதம் நியாயமானது. ஆனால், தேர்தல் நேரத்தில் நீதியைக்கூடச் சாய்த்துவிடத்தக்க வல்லவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள்.

கட்சியின் சிறப்பு, கொள்கையின் தூய்மை, வேட்பாளரின் திறமை என்பவைகளைக் காட்டி ஆதரவு திரட்டுவது மேடைகளில், நம்முடைய முறை.

வீட்டுக்குள்ளே உட்கார்ந்து முன்பின் தொடர்புபற்றிப் பேசி, இன்னாருக்கு இன்னார் வேண்டியவர், இதைச் செய்தால் இது கிடைக்கும் என்பதுபற்றி விளக்கி,

எனக்காக இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்தால் இன்ன பயன் உண்டு, இதைச் செய்யச் சொல்லி "இவர்' சொல்லி அனுப்பியிருக்கிறார்.

எப்படியும் என் பேச்சை நீங்கள் தட்டி நடக்க மாட்டீர்கள் என்று கூறிவிட்டு வந்திருக்கிறேன். என் மதிப்பு உங்கள் கையிலேதான் இருக்கிறது.

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன், மறந்துவிடாதீர்! இந்த உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன்.

என்று இச்சகம் பேசியும் நச்சரித்தும், ஏற்கனவே கொண்டுள்ள நினைப்பை மாற்றிக்கொள்ளச் செய்வதிலே தனித்திறமை பெற்றவர்கள், தேர்தல் சமயத்திலே சுறுசுறுப்படைகிறார்கள்.

யார் வெற்றி பெற்றால் எங்களுக்கு என்ன? எந்தக் கட்சியினால் எங்களுக்கு என்ன? எங்களுக்கு வேண்டியது மூவாயிரம், கோயில் கோபுரம் கட்டி முடித்தாக வேண்டும். அந்தத் தொகை கொடுப்பவருக்கு இந்தக் கிராமத்து ஒட்டு முழுவதும்.

என்று பேரம் பேசிடும், பெரியவர்களைப் பார்க்கலாம் தேர்தல் காலத்தில்,

இப்பத்தானய்யா, நம்ம கிராமத்துக்கு நல்ல காலம் பிறக்கப்போவுது. ஏரி மதகு புதிதாக வேணும் என்று இந்தப் பத்து வருஷமாக முயற்சி செய்கிறோம் அல்லவா! நேற்றுத்தான் அதற்கு வழி பிறந்தது. தாசில்தார் ஒத்துக்கொண்டு விட்டார். நாளைக்கு வருகிறார்கள் அளவு எடுக்க! நம்ம கஷ்டம் தீர்ந்தது.

பரவாயில்லையே, புதுத் தாசில்தார் நல்லவர் போலிருக்கிறது. நம்ம நியாயம் அவருக்குப் புரிந்திருக்குது.

புரியும்படி செய்தாரு கதம்பத்தூராரு. . .

கதம்பத்தூராருக்கு நம்ம ஏரி மதகுபற்றி என்ன அக்கறை?

அவருக்கு எதுக்காக அக்கறை ஏற்படும்? நான் ஏற்படுத்தி வைத்தேன் அந்த அக்கறையை.

அது எப்படி? உன்னோடு பேச்சுக்கு அவர் கட்டுப் படுவானேன்?

அவரோட பேச்சுக்கு நாம கட்டுப்படுவதாக ஒப்புக் கொண்டதாலேதான். . .

அது என்ன ஏற்பாடு? விளங்கச் சொல்லேன்!

நம்ம கிராமத்து ஓட்டு அவ்வளவும், அவர் கட்சிக்கு நாம போடணும்; ஒத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.

இவ்விதமாகக் கிராமத்துப் பெரியதனக்காரர் ஊர் கூட்டிப் பேசிவிடுவதும் உண்டு, பல இடங்களில்.

"உன்னோட கட்சி கொள்கை கொடி எல்லாத்தையும் நீ அடுத்த தடவைக்குப் பார்த்துக்கொள்ளு. இந்தத் தடவை நான் சொல்றபடி செய்துவிடு! காரணம் இருக்குது''

என்று பேசி, தன் மகனை மடக்கிப் போட்டுவிடும் தகப்பனாரைக் காணலாம் தேர்தல் நேரத்தில்.

தர்மபுரித் தேர்தலின்போது ஒரு கிராமம் - நமக்கு ஆதரவான இடம் - அங்கு ஒரு இளைஞர், கழகத்தவர் - நமக்காகச் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் ஒருநாள், சேலம் மாவட்டத்துக் காங்கிரஸ் தலைவர்களிலே ஒருவர் அவரைச் சந்தித்தார்; கூட்டுறவுத் துறையிலே அவர் பெரியவர்; கழக இளைஞர் கூட்டுறவுத் துறையில் தொடர்புள்ளவர். அந்தத் தொடர்பையே காரணமாகக் காட்டி, அந்தக் காங்கிரஸ் தலைவர், கழக இளைஞரைத் தன் பக்கம் இழுக்கும் தந்திரத்தில் ஈடுபட்டார்,

"என்னப்பா! நாம இருவரும், கூட்டுறவுத் துறையிலே உள்ளவர்கள். நமக்குள்ள எந்த விதத்திலும் சச்சரவு பேதம் வரக்கூடாது. கூடிப்பழகி வருபவர்கள்,''

"கூடிப் பழகுவதற்கும் கட்சிக்காக ஓட்டுக் கேட்பதற்கும் என்னங்க சம்பந்தம்? நான் என் கட்சிக்கு வேலை செய்வதும், நீங்க உங்க கட்சிக்கு வேலை செய்வதும், நம்ம இருவருடைய சிநேகிதத்தையும் எப்படிங்க பாதிக்கும்.''

"நாம இரண்டு பேரும், வேறு வேறு கட்சி அல்ல. இருவரும் ஒரே கட்சி, கூட்டுறவுக் கட்சி; தெரிகிறதா!''

"கூட்டுறவு ஒரு கட்சியாகுங்களா! எந்தக் கட்சிக் காரரும் அதிலே இருக்கலாமே. . .''

"இருக்கலாம்; ஒப்புக்கொள்கிறேன்; ஆனா. நாம இருவரும் தேர்தலிலே வேறு வேறு கட்சிக்கு வேலை செய்தா எப்படியும் நமக்குள்ளே பகை உண்டாகிவிடும், அது நம்ம கூட்டுறவுத் தொடர்பையே கெடுத்துவிடுமே. . .''

"எனக்கு என்று ஒரு கட்சி இருக்குதுங்களே.''

"கழகம்! தெரியும்! இப்ப நடக்கப்போற தேர்தலில் கழகமே ஜெயித்தாலும், சர்க்காரா மாறப்போகுது? பொதுத் தேர்தலின்போது எந்தக் கட்சி மெஜாரட்டியாக வருதோ அது சர்க்காரை அமைக்கும். பொதுத் தேர்தலின்போது நீ உன்னுடைய கழகத்துக்கு வேலை செய்து, வெற்றி தேடிக் கொடுத்து, சர்க்கார் அமைத்துக்கொள்; நான் தடுக்க வில்லை; வேண்டாமென்று சொல்லவில்லை. இப்ப நடப்பது இடைத் தேர்தல். இதிலே, எனக்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுத்தா, என்ன கெட்டுவிடும், யோசனை செய்து பாரு! இந்தத் தேர்தலில் என் கட்சி ஜெயித்தால் எனக்கு மதிப்பு - எனக்கு மதிப்பு என்றால், நாம நம்முடைய கூட்டுறவுத் துறையை நம்ம மாவட்டத்திலே மேலும் வளரச் செய்ய முடியும், எவ்வளவோ செய்யவேண்டி இருக்குது. செய்ய வேண்டுமானால் என் வார்த்தைக்கு மதிப்பு உயர வேண்டும், அது உயர, என்ன வழி? இந்தத் தேர்தலிலே நான் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும். அதனாலேதான் உன்னைக் கேட்டுக்கொள்கிறேன், இந்த முறை கட்சிக்காகப் பிடிவாதம் பிடிக்காதே.''

"எப்படிங்க முடியும். நாலுபேர் என்ன சொல்லுவாங்க.''

"சரி, நீ காங்கிரசுக்கும் வேலை செய்யாதே, கழகத்துக்கும் வேலை செய்யாதே. ஒதுங்கி இருந்துவிடு.''

இவ்விதம் மேடையில் பேச முடியுமா! பேசவேண்டிய இடத்தில் பேசினார் அந்தக் காங்கிரஸ் தலைவர்; கழக இளைஞரும் ஒதுங்கிக்கொண்டதாகக் கேள்வி.

இதயத்தை வேலை செய்யவிடாமல் தடுத்திடும் முறைகள், புதிது புதிதாகக் கிடைத்திடும் வேளை, தேர்தல் காலம்.

மக்களின் இதயம் நம்மிடம் என்ற எண்ணத்தை மட்டுமே நாம் கொண்டிருந்தால் போதாது; அதனைக் கெடுத்திடத்தக்கன தேர்தல் நேரத்தில் என்னென்ன கிளம்பக்கூடும் என்பதனைக் கண்டறியவும், தடுத்திடவும், அவைகளை மீறி, வெற்றி கிடைத்திடவுமான முறையில் பணியாற்ற வேண்டும்.

காங்கிரஸ், ஆளுங்கட்சியாகிவிட்ட பிறகு, ஆதாயம் தேடுவோர், தாமாக அதிலே நுழைந்துகொள்ளவும், நட்புத் தேடவும் முற்பட்டுவிட்டனர்.

காங்கிரஸ் ஆட்சி நடத்தினால் மட்டுமே, தமது நிலைமை பாதுகாக்கப்படும் என்று உணர்ந்த செல்வவான்கள், தேர்தலின் போது, காங்கிரசின் பக்கம் திரண்டு நிற்கிறார்கள்.

மகாத்மாவின் காங்கிரஸ் தனது தூய்மையைக் காட்டி மக்களின் இதயத்தை வென்றது என்றால், ஆளுங்கட்சியாகிவிட்ட காங்கிரஸ், தன்னிடம் உள்ள சலுகை தரும் சக்தியைக்காட்டி ஆசை ஊட்டவும் கெடுத்துவிடும் வலிவைக் காட்டி மிரட்சியை மூட்டிவிடவும் செய்கிறது.

காந்தியாரின் காங்கிரசைக் கண்ட பொதுமக்களின் கண்களில் நீர் துளிர்த்தது - பக்தியால், பாசத்தால்.

இன்றைய காங்கிரசைக் காணும் பொதுமக்களின் கண்களில், மிரட்சி தெரிகிறது, எதிர்த்தால் என்ன கெடுதல் வந்துவிடுமோ என்ற எண்ணத்தால். இந்த நிலையை மீறி, இதயம் பேசவேண்டும்; எளிதானது அல்ல!!

தம்பி! நான் குறிப்பிட்டுக் காட்டினேனே, பட்டக்காரர், வாண்டையார், நெடும்பலத்தார் என்றெல்லாம்: அவர்களின் "ரகம்' ஒவ்வொரு வட்டத்திலும் உண்டு. அவர்களில் பெரும்பாலோர் முன்பு காங்கிரசை எதிர்த்து நின்றவர்கள், தங்கள் நிலைமைகளை, சொத்து சுகத்தை, அதிகாரம் அந்தஸ்துகளைக் காப்பாற்றிக் கொள்ள. அதனாலே மிகுந்த கஷ்ட நஷ்டத்துக்கு ஆளானவர்கள்.

அவர்களைக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. தன் தூய்மையை இழந்ததால்.

காங்கிரசில் தங்களுக்கு இடம் கிடைத்ததும் அதனை எதிர்த்து எதிர்த்து எரிச்சலும் ஏமாற்றமும் கொண்டவர்கள், இது பொன்னான சந்தர்ப்பம் என்று கண்டுகொண்டனர்; எதை எதை. காங்கிரசை எதிர்த்தபோது பெற முடியாமல் தவித்தார்களோ, அதனையும், அதனைவிட மேலானவற்றையும் காங்கிரசில் இருந்துகொண்டு அவர்களாலே பெற முடிகிறது என்றால், அவர்களுக்கு காங்கிரஸ் கசக்குமா! அந்தக் காங்கிரசை வலிவு படுத்துவதும் அவர்களுக்கு நஷ்டமா!

காமராஜர் நல்லவர், பச்சைத் தமிழர். ஆகவே நான் காங்கிரசை ஆதரிக்கிறேன் என்று பெரியார் சொன்னாலும், அவர் காங்கிரசை ஆதரிப்பதற்கான உண்மையான காரணம் எனக்குத் தெரியும்!! எனக்குத் தெரியும் என்பது அவருக்கும் தெரியும்!!!

யாராருக்காகப் பெரியார், வாதாடி, அவர்களின் நிலைமைகளைக் காப்பாற்றக் காங்கிரசுடன் போராடிப் போராடி வந்தாரோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரசிலே சேர்ந்து எல்லா வாய்ப்புகளையும் பெற்று, நிம்மதியாக, நிலை உயர்ந்து இருக்கக் காண்கிறார். அவர்களுக்கு இந்த இடம் கொடுத்திருப்பதால், காங்கிரசை ஆதரிக்கிறார். வேறு காரணம் யாவும், திறமையான வாதம்! வேறில்லை!

ஒரு உதாரணம் பாரேன்! தஞ்சைத் தரணியில் நெடும்பலம் சாமியப்பாவின் நிலை காப்பாற்றப்பட, அவரை எதிர்த்து வந்த காங்கிரசைப் பெரியார் மிகப் பலமாகத் தாக்கி வந்தார். இப்போது நெடும்பலத்தாரின் திருக்குமாரன் காங்கிரசில் புகுந்து, தந்தை பெற முடியாதனவற்றைக்கூடப் பெற்று ஒளியுடன் விளங்குகிறார். இந்த ஒளி மங்கிவிடக்கூடாது என்பதற்காகப் பெரியார், இப்போது இந்த ஒளியைத் தந்துதவும் காங்கிரசை ஆதரிக்கிறார். எட்டும் எட்டும் பதினாறுதான், பத்தும் ஆறும் பதினாறுதான்; கணக்கு வகைதான் வேறு, முடிவு ஒன்றுதான்.

பெரிய புள்ளிகளின் கணக்கு எப்போதும் இந்தவிதமாகத் தான் சோடையாக இருப்பதில்லை. காங்கிரசை எதிர்த்தனர், சுவையும் பயனும் கிடைக்கும் காலம் வரையில் - வெள்ளைக் காரன் துணை இருக்கும் வரையில். பிறகு காங்கிரசை ஆதரித்து, சுவையும் பயனும் பெறுகின்றனர்.

அவர்கள் இதைப் பெற இழந்தது என்ன? கிளாஸ்கோ மல்லும் சரிகைத் தொப்பியும்! பெற்றது என்ன? மந்திரி வேலை வரையில்! விவரம் தெரியாதவர்களா! அவர்களுக்கே உரிய கணக்குத் திறமையுடன் காரியமாற்றுபவர்கள் இந்தக் கனதனவான்கள் - நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவிற்கு வருகிறது.

ஒரு நண்பர் - குறிப்பிடத்தக்க புள்ளி - பஸ் முதலாளி - பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கிளாஸ்கோ மல் வேட்டி உடுத்திக் கொண்டு பாப்ளின் சட்டை போட்டுக்கொண்டு பட்டைக்கரை சரிகை அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு வந்தார், என்னைக் காண! தெருத் திண்ணையில் உட்கார்ந்தோம் பேச.

முனிசிபாலிடி, பஞ்சாயத்து இவற்றின் உறுப்பினர்களாலே தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற மேல் அவைக்குச் செல்லும் தேர்தலில் தாம் நிற்க விரும்புவதாகச் சொன்னார்; என் உதவி கேட்டார்.

எனக்கு வேண்டியவர்கள் அந்த அமைப்புகளிலே அதிகம் கிடையாது. அவருக்கும் தெரியும். ஆனாலும், தேர்தல் என்றால் எல்லோரையும் பார்க்க வேண்டுமே! அந்த முறைப்படிப் பார்த்தார் என்று எண்ணுகிறேன்.

நான் சொன்னேன் இந்த விதமான தேர்தலிலே நிறையச் செலவாகிறதாமே என்று.

அவர் பச்சையாகவே பேச ஆரம்பித்தார். எனக்கு ஓட்டுப் போடுபவர்கள், கேட்டால் பணம்கூடத் தர நான் தயார் என்றார்.

எவ்வளவு என்று கொடுக்க முடியும். நிறையச் செலவாகுமே என்றேன்.

உடனே அவர், மளமளவென்று கணக்குப் போட்டுக் காட்டினார்.

இருபதனாயிரம் செலவாகிறது என்றே ஒரு கணக்குக்கு வைத்துக்கொள்ளுவோம். என்ன நஷ்டம் அதனாலே - ஐந்து வருடம் மேல் அவை உறுப்பினராக இருந்தால்; மாதம் 150, வருடத்துக்கு 1800. ஐந்து வருடத்துக்கு 9000! இதன்றிப் படி வேறு இருக்கிறது. இந்த ஐந்து வருஷத்தில் ஒரு பஸ் ரூட்டாவது கிடைக்காதா! எத்தனை மந்திரிகள், அதிகாரிகள் தொடர்பு ஏற்படும்! போதுமே! முன்னாலே போட்டுப் பின்னாலே எடுக்க வேண்டியதுதானே என்றார். தம்பி! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. எனக்கு மட்டுமா, இப்போது உனக்குத் தூக்கிவாரிப் போடப்போகிறது பாரேன்! சொன்னபடியே செய்து காட்டினார் அந்தப் புள்ளி!!

சொன்னதற்கு மேலும் செய்து காட்டிவிட்டார்! காங்கிரசில் சேர்ந்து தலைவராகிவிட்டார்!

இப்போது அவர் மகாநாட்டுத் திறப்பாளர், அமைச்சர், பேச்சாளர்! அவர் அழைக்கிறார், அமைச்சர் செல்கிறார்; அவர் கேட்கிறார், அமைச்சர் அக்கறை காட்டுகிறார்! பெரிய காங்கிரஸ் தலைவராகிவிட்டார். முடிந்தது பாரேன்! இவ்வளவு எளிதாக எப்படி ஏற்பட முடிகிறது இந்த உறவு? இதயம் இருக்கட்டும் ஒரு பக்கம் என்று இருசாராரும் இருந்துகொள்வதால்.

இப்படிப்பட்டவர்களின் முகாம், இன்றைய காங்கிரஸ். இவர்களின் துணையுடன் நடத்தப்படும் தேர்தலின்போது, மக்களின் இதயம் நமது பக்கம். ஆகவே வெற்றி நமக்குத்தான் என்று எண்ணி ஏமாறக்கூடாது. விழிப்புடனிருந்து, தேர்தலின் போது சுறுசுறுப்பாகப் பணியாற்றும் விந்தை மாந்தர்களைக் கவனித்தாக வேண்டும்; அவர்களில் சிலரை, அடுத்த கிழமை காட்டுகிறேன்.

அண்ணன்

25-4-1965