அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இடியோசையில் கிடைக்காது இன்ப நாதம்
1

ஜனநாயகமற்ற நாடுகளின் நிலை
மாற்றுக் கருத்தைச் சந்திக்க அஞ்சும் ஆட்சியாளர்கள்
அகம்பாவம் அரசோச்சும் புதிய பல நாடுகள்
ஜனநாயகம், அரசுமுறை மட்டுமன்று; வாழ்க்கை நெறி!

தம்பி!

பென்பெல்லா பதவியிலிருந்து விரட்டப்பட்டார்; அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது; இருக்குமிடம் அறிவிக்கப் படவில்லை; என்ன கதி என்பது பற்றிக் கேட்பவர்களிடம், கொடுங்கோலர்கள் என்ன கதி அடைந்தார்களோஅதுதான் இவருக்கும் என்ற பதில் அளிக்கப்படுகிறது; பட்டாளத்துத் தலைவர் பட்டத்துக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. திடுக்கிடச் செய்திடும் இந்தத் திடீர்மாற்றம், அல்ஜீரியா நாட்டில் நடைபெற்றிருக்கிறது.

பென்பெல்லாவிடம் அல்ஜீரிய மக்கள் சொக்கிக் கிடக்கிறார்கள் என்றும், அவருடைய சுட்டுவிரல் அசைவு கண்டு அதன்படி நடந்திடத் துடித்தபடி உள்ளனர் என்றும், அவருடைய அறிவாற்றலையும் தன்னலமற்ற போக்கையும் ஆபத்துக்களைத் துச்சமென்றெண்ணிச் செயலாற்றும் துணிவினையும், நாடுவாழ் மக்கள் ஏற்றம் பெற ஓயாது உழைத்திடும் ஆர்வமிகுதி பற்றியும் கனிவுடன் பேசினர் பலப்பலர்; கவிதைகள் புனைந்தனர் மற்றும் சிலர்; காட்சிகளைப் படமாக்கிப் பாரினுக்குத் தந்தனர் செய்தி அறிவிப்போர்.

அல்ஜீரிய விடுதலைக்காக பென்பெல்லா போராடி வந்த நிகழ்ச்சியே நாட்டின் பெருங்காப்பியமாகி விட்டது என்று கூறப்பட்டது. பென்பெல்லா பிரஞ்சு அரசினரால் சிறைப் படுத்தப்பட்ட செய்தி கேட்டபோது அல்ஜீரிய மக்கள் பதறினர்; உள்ளம் உருகிடும் நிலையினராயினர். பென்பெல்லா, பிரஞ்சுச் சிறையினின்றும் எப்படியோ தப்பித்துவிட்டார்; பிடிபடவில்லை; பிரஞ்சுக் கொடியவர்களின் கரங்களால் தீண்டப்பட முடியாத நெடுந்தொலைவு சென்று விட்டார்; உலவுகிறார் முழக்கமிட்டபடி; அல்ஜீரியா விடுதலை அடையா முன்பு நான் இறந்துபடுவேனோ! நான் இருப்பது எதற்கு? என் நாட்டை விடுவிக்க! என் நாடு விடுவிக்கப்பட்டது என்ற இன்பச் செய்தி கிடைத்த பிறகே அந்தச் செய்தி எனது இமைகளைத் தடவிடும்போதுதான் எனக்குத் துயில் கொள்ளவே இயலும்! இப்போது எனக்கு வேறு எதற்கும் நேரம் இல்லை; விடுதலைப் போராட்டத்துக்குத் தவிர - என்றன்றோ கூறுவார் எம் தலைவர்!! அவரைக் கொன்றுவிட முடியுமா பிரஞ்சுக் கொடியவர்களால்! எழுச்சியை மாய்த்திட இயலுமோ!! என்றெல்லாம் நாட்டுப்பற்று மிக்கவர்கள் கூறினர் எக்களிப்புடன்; புரட்சிப் போக்கினர் பிரஞ்சுக்காரர்களை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தாக்கினர், வெட்டி வீழ்த்தினர்; புரட்சியாளர் பலப்பல ஆயிரவர் சுட்டுத் தள்ளப்பட்டனர். இறந்துபடுமுன்பு அவர்கள், வாழ்க அல்ஜீரியா! வாழ்க பென்பெல்லா! என்றே முழக்கமிட்டனர். அந்த இன்ப எண்ணம் தந்த புன்னகை பூத்த முகத்துடனேயே வீழ்ந்தனர் அவ்வீரர்கள்.

காவியச் சிறப்புக்குரியதான வீரதீரச் செயல்களை வெற்றியுடன் நடத்திக்காட்டியவர், நாட்டுப்பற்றுமிக்கவர், மக்களுக்கு வழிகாட்டி என்றெல்லாம் புகழாரம் சூட்டப்பட்ட நிலையில் இருந்து வந்தவர் பென்பெல்லா. நாடுகள் பல, அவரே அல்ஜீரியா நாட்டின் ஒப்புயர்வற்ற தலைவர் என்று ஏற்றுக் கொண்டன. அவருடைய அழைப்பினைப் பெற்ற பல நாடுகள், அல்ஜீரியத் தலைநகரில் கூடி, பாண்டூங் மாநாட்டிலே பெற்ற "பஞ்ச சீல'த்தை மேலும் பேணி வளர்த்திட வழி காண மாநாடு நடத்தவும் திட்டம் வகுத்தன. அதற்கான ஏற்பாட்டிலே மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் பென்பெல்லா என்ற செய்தி அடிக்கடி வெளிவந்தபடி இருந்தது. குமுறல் எதிர்ப்புணர்ச்சி குறிப்பிடத்தக்க அளவு இருப்பதாகக்கூடத் தகவல் ஏதும் தரப்படவில்லை. சிரித்திடும் முல்லைக்கொடி, குதித்திடும் பூங்கா, திடீரெனக் கிளம்பிய புயலால் பெயர்த்தெறியப்பட்டுவிடுவது போல, வெடித்த எதிர்ப்பு, பென்பெல்லாவை உச்சியிலிருந்து ஒரே அடியாகக் கீழே உருட்டி விட்டது. அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து வந்தவர் பெதோயின் என்பார் இப்போது, அல்ஜீரிய அரசு எம்மிடம்! இராணுவத்திடம்! இராணுவம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, கொடுங்கோலனை வீழ்த்த நடவடிக்கை எடுத்துக் கொண்டது; இது அல்ஜீரியாவின் மக்களின் நலனுக்காகச் செய்யப்பட்டுள்ள மாறுதல்; மற்ற எந்தத் துறையிலும், அதிலும் குறிப்பாக வெளிநாடுகளுடன் அல்ஜீரியா கொண்டுள்ள தொடர்பு நிலையைப் பொருத்த வரையில், எந்தவிதமான மாறுதலும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

வெளி உலகுக்குக் கனிவுடன் செய்தி அளித்திடும் புதியவர், பென்பெல்லா பற்றிய கேள்வி எழும்போது மட்டும் கொதிப்புடன் பேசுகிறார்; பென்பெல்லா செய்துள்ள கொடுமைகள் உங்களுக்குத் தெரியாது என்கிறார்.

பென்பெல்லாவுக்கு நேரிட்டு விட்டது பற்றி எண்ணிடும் போது, திகைப்பாகவும் இருக்கிறது; அதேபோது நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவனுக்கா இந்தக் கதி! என்று பதைபதைத்துக் கேட்கவும் தோன்றுகிறது.

பென்பெல்லாவிற்கு ஏற்பட்டது பற்றிப் பதறுகிறோம்; ஆனால், பென்பெல்லா அரசுத் தலைவரான உடன் எதிரிகள், வேண்டாதவர்கள், கருத்து மாறுபாடு கொண்டவர்கள் ஆகியோரை என்ன செய்தார் என்று பார்க்கும்போது அருவருக்கத்தக்க, கண்டிக்கத்தக்க முறையிலேதான் நடந்து கொண்டார் என்பது தெரிகிறது. விடுதலைப் போரில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவரும், பென்பெல்லா அல்ஜீரியாவில் இல்லாத நாட்களில் தலைமை ஏற்றிருந்தவருமான அபாஸ், சிறையில் தள்ளப்பட்டார்; வேறு பலர் சுட்டுத் தள்ளப்பட்டனர்; பலர் நாடு கடத்தப்பட்டனர்; சிலர் தப்பி ஒடிவிட்டனர்; அப்படித் தப்பி ஓடியவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, "மரண தண்டனை' தரப்பட்டது.

அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட கிதர் என்பார், ஸ்பெயினில் மாட்ரிட் நகரில் தங்கியிருக்கிறார்; அவருடைய திட்டப்படிதான், பென்பெல்லா கவிழ்க்கப்பட்டார் என்றும் செய்தி உலவுகிறது.

பென்பெல்லாவின் ஆதரவாளர்கள் கிளர்ச்சி நடத்துவ தாகவும், அதனை அடக்குமுறையால் புது அரசினர் அழித்திட முனைவதாகவும், துருப்பு நடமாட்டம், டாங்கிகள் நடமாட்டம், வேட்டுச் சத்தம் மும்முரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.

தம்பி! இந்த மடல் உன் கரம் கிடைத்திடுவதற்குள் வேறு என்னென்ன நிகழும் என்று கூறுவதற்கில்லை.

நான் எழுதுவது நடைபெற்றது நியாயமா அல்லவா என்பது பற்றிய கருத்துத் தெரிவிக்கவோ, எதிர்காலத்தில் என்ன நடந்திடும் என்று ஆரூடம் கணித்திடவோ அல்ஜீரியாவின் நிலை பற்றி எடுத்துக் கூறவோ அல்ல.

பொதுவான இரண்டு கருத்துக்களை எடுத்துக்காட்ட மட்டுமே, பென்பெல்லா கவிழ்க்கப்பட்டது பற்றிக் குறிப்பிட்டேன்.

ஒன்று உண்மையான ஜனநாயகம் நிலைத்து நின்றாலொழிய அரசியல் என்பது அதிர்ச்சிகளும், அமளிகளும், திடுக்கிடும் நிகழ்ச்சிகளும் திடீர்மாற்றங்களும் கொண்டதாகி விடும்; சதிகாரர்கள், பதுங்கிப் பாய்வோர், அடுத்துக் கெடுப்போர், அமளி மூட்டுவோர் ஆகியோர் மட்டுமே பங்கு கொள்ளத்தக்க துறையாகிவிடும் அரசியல்.

வெடிகுண்டுகள்தான் பிரச்சினைகளைத் தீர்க்கும்; கூடிப் பேசுதல், கருத்தறிதல், விட்டுக் கொடுத்தல், இணைந்திருத்தல் என்பன, பொருளற்ற பேச்சாகிவிடும். சுடு! அல்லது சுடப்படு! கொல்லு! அல்லது மடிந்துவிடு! என்ற நிலை ஏற்படும். ராணுவத்தை எவர் தமது பக்கம் கொண்டு செல்ல முடிகிறதோ, அவரே மற்றவர்களை மீறிடவும், அரசினைக் கைப்பற்றிடவும் முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிடும். அந்த நிலையில், அரசியல் நடவடிக்கைகளிலே பொதுமக்களுக்குத் தொடர்பு, தோழமை ஏதும் இருந்திட முடியாது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றாகி விடும். அரசு அமைப்பவர்களாக அல்ல, அரசுக்கு அஞ்சி நடப்பவர்களாகிவிடுவர் மக்கள். எந்தச் சமயம் என்ன நேரிடும், எந்த முறை எத்தனை காலம் இருக்கும், எவர் எத்தனை நாள் தலைமையில் இருப்பார், எவர் வழி ஏற்ற வழி, எந்த வழி நீண்ட நாட்களுக்கு மேற்கொள்ளத்தக்க வழி என்பது பற்றி எல்லாம் ஒரே குழப்பம் ஏற்பட்டு, பீதி ஏற்பட்டு, மக்கள் பதறிக் கிடப்பர். அந்த நிலையில் வாழ்வு செம்மையாக இருந்திட இயலாது; தொழில் வளம் ஏற்படாது; அகப்பட்டதைச் சுருட்டுவது, அடிவருடிக் கிடப்பது, வதைபட்டுச் சாவது என்ற கொடுமை மிகுந்துவிடும். படைபலம் காட்டிப் பதவி பறிப்பவன் இறுதிவரை அந்தப் படைபலத்தை நம்பியே வாழ வேண்டும்; அதுபோன்ற படைபலம் வேறு எவரிடமும் சேர்ந்துவிடாதபடியும் பார்த்துக் கொண்டாக வேண்டும்; தனக்குக் கிடைத்துள்ள ஈடு எதிர்ப்பற்ற பதவி மீது எவருக்கும் ஆவல் எழாதபடி பார்த்துக் கொண்டாக வேண்டும். எவருக்கேனும் அவ்விதமான ஆசை தோன்றினால், முளையிலேயே கிள்ளி எறிந்திட முனைய வேண்டி நேரிடும்! எவரிடமும் சந்தேகம்! எதற்கெடுத்தாலும் ஆத்திரம்! எவரிடமும் உண்மையைக் கூறாமலிருக்கும் போக்கு! இப்படிப்பட்ட இயல்புகள் நோயாகிவிடும்!

நோய் முற்ற முற்ற என்னாலன்றி வேறு எவராலும் இந்தச் செயலைச் செய்திட முடியாது என்ற எண்ணம் இறுமாப்பாகி, எவரேனும் நட்புரிமையுடன் இதனை இப்படிச் செய்திடலாமே என்ற யோசனையை, கனிவுடன், மரியாதையாகக் கூறினால் கூடக் கொதித்துக் குதித்து, என் முறையில் தவறு கண்டுபிடிக்கும் அளவு பெரியவனாகி விட்டாயா! அவ்வளவுக்கு வளர்ந்து விட்டதா உன் ஆணவம்! என்று கொக்கரிக்கவும், அவனைப் பகைவனாகக் கருதிக் கொள்ளவும் முற்படுவர். விளைவுகள் வேதனை தருவனவாகி விடும் - நாட்டுக்கு - மக்களுக்கு.

உண்மையான ஜனநாயகத்திலேதான் எத்தனை பெரிய வலிவுடன் உள்ள ஆட்சித் தலைவரிடமும், குறைகாண, மாற்றுமுறைகூற, திட்டத்தைக் கண்டிக்க மற்றவர்களுக்கு உரிமை கிடைக்கிறது.

குறை கூறுவதில், கண்டிப்பதில், எதிர்ப்பதில் ஒரு சுவை இருக்கிறது என்பதற்காக அல்ல, அந்த முறை இருப்பது; குறை கூறும் உரிமை கொண்டவர்கள் இருக்கிறார்கள், எதிர்த்திடும் வாய்ப்புப் பெற்றவர்கள் இருக்கிறார்கள், அவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுத்தான் அரசாளும் அவையில் அமர்ந்திருக்கிறார்கள். நம்முடைய ஆட்சியிலே மக்கள் அருவருப்பு அடைவார்களானால், எதிர்வரிசையினரை அழைத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிடக்கூடும். ஆகவே அவர்கள் குறை சொன்னால் பொறுமையுடன் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும், பொறுப்புடன் பதிலளிக்கத்தான் வேண்டும் என்ற மரபு ஏற்படுகிறது, அதன் காரணமாக எவரும் எம்மை மிஞ்சுவார் இல்லை என்ற இறுமாப்பு பெறமுடியாது போகிறது; மக்களை மதித்து நடந்திடும் மாண்பு மணமளிக்கிறது. இவ்வளவும் உண்மையான ஜனநாயகம் இருக்கும் இடத்தில்! ஒப்புக்கு ஜனநாயகம் உள்ள இடத்தில் அல்ல! உள்ளத்தில் ஜனநாயகம் குடிகொண்டுள்ள இடத்தில்; உதட்டளவு உறவாடும் இடத்தில் அல்ல!

உண்மையான ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் இடத்தில் அரசாள்வோர் மாறுவர்; அதிர்ச்சி காரணமாக அல்ல, அமளி காரணமாக அல்ல, மக்களின் விருப்பத்தினைக் கேட்டுப் பெற்றிடும் முறையினால், ஆட்சித் தலைவர்கள் மாறுவார்கள், தலைகள் உருளாது! அரியணையில் புதியவர் அமருவார், பழையவர் சிறைப்படமாட்டார்! அரசியலில் நாகரிகம் மிளிரும்; நட்புரிமை திகழும்! நாட்டுக்குத் தொண்டாற்றுவதில் போட்டி இருக்கும், "நானா நீயா'' என்ற காட்டுமுறை எழாது.

இந்தப் பண்பு புதிய ஜனநாயகத்தின் மூலமாக மட்டுமே பெற முடியும்.

நாட்டாட்சி நடத்திடும் உரிமை அனைவருக்கும் உண்டு என்ற எண்ணமும்,

நாடு எப்படி ஆளப்பட்டு வருகிறது என்று விழிப்புடனிருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு என்ற எண்ணமும்,

நாட்டு மக்களைக் கெடுத்திடும் போக்கிலே ஆட்சி நடத்துவோரை நீக்கிடும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்ற எண்ணமும், உண்மையான ஜனநாயகத்துக்கு அடிப்படை! அந்த வலிவு மிக்க அடிப்படை மீது அமைக்கப்படும் அரசுகளில் அதிர்ச்சிகளும் அமளிகளும், தூக்கிலிடுதலும் சுட்டுத் தள்ளுவதும், சிறையில் பூட்டுவதும் சித்திரவதை செய்வதும், நாடு கடத்துவதும் நாசம் விளைவிப்பதும் ஏற்படாமல், அரசாள்வோர் மாறிடுவர்; மாற்றப்படுவர்.

அவ்விதமாக அதிர்ச்சியற்ற, அமளியற்ற முறையிலே மாற்றம் ஏற்பட்டால்தான், சமூகம் பீதியின்றி, கட்டுக்கோப்பு குலையாமல் இருந்திட முடியும்; மக்கள் தமது வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ளும் செயலில் தொடர்ந்து அக்கறை காட்டி ஈடுபட்டு, பலன்பெற முடியும்.

பூங்காற்று வீசுமிடத்திலேதான், இனிமை அளித்திடும் குழலோசை எழுப்பிட இயலும்; வேட்டுச் சத்தம் காதினைத் துளைத்திடும் களத்தில்? இயலாது!

அல்ஜீரியாவில் மட்டுமல்ல, உண்மையான ஜனநாயகம், நல்ல வலிவான அடிப்படையில் அமையாதிருக்கும் நாடுகளிலே, அரசியல் அமளி நிரம்பியதாக இருந்து வருவதும், அதன் காரணமாக மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருவதும், காண்கிறோம், அத்தகைய இடங்களில் பகை கப்பிக்கொள்கிறது, பழி தீர்த்துக் கொள்ளும் போக்கு தலைவிரித்தாடுகிறது, மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படியோ என்ற பீதியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அல்ஜீரியாவில் ஏற்பட்டது பற்றிப் படித்தபோது தம்பி! நான் உண்மையான ஜனநாயகத்தின் அருமையினை உணர்ந்து உவகை கொண்டேன்; அதனை உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கன்சர்வெடிவ் கட்சித் தலைவரிடமிருந்து தொழிற் கட்சித் தலைவர் வில்சன் ஆட்சிப் பொறுப்பைப் பறித்துக் கொண்டார்; பறித்துக் கொண்டார் என்று கூறுவது கூடத்தவறு; பெற்றுக் கொண்டார்.

இப்போது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பதவி இழந்த ஹோம், பதவி வகிக்கும் வில்சனுக்கு எதிர் வரிசையில் அமர்ந்திருக்கிறார். பெதேயின் வந்தார், பென்பெல்லா காணப்பட வில்லை! என்ற நிலைமை இல்லையல்லவா!!

ஆகவே, தம்பி! சமூகம் அமளியில் ஈடுபடுத்தப்படாமல் அரசியல் நடைபெற ஜனநாயகம் மிக மிகத் தேவை; மறந்துவிட வேண்டாம், உண்மையான ஜனநாயகம்!!

அல்ஜீரியச் சம்பவத்திலிருந்து நான் பெறும் மற்றோர் கருத்து, விடுதலை வீரர்கள் ஆட்சித் தலைவர்களாகும்போது, சர்வாதிகாரம் செலுத்தலாம் என்ற சபலம் வெகு எளிதாக ஏற்பட்டுவிடுகிறது; அந்தப் சபலத்தை அடக்கினால் மட்டுமே அவர்கள் ஜனநாயகத் தலைவர்களாக முடியும், மக்களுக்கு அவர்களால் பலன் பெற முடியும் என்பதாகும்.

விடுதலை வீரன் நான்! என் குருதி கொட்டி இந்த நாட்டை அன்னியர் பிடியிலிருந்து விடுவித்தேன்! நாட்டு விடுதலைக்காக, சொத்து இழந்தேன், சுகம் இழந்தேன், உயிரையும் இழந்திடச் சம்மதித்தேன் என்று விடுதலை வீரன் பேசும்போது, அந்தப் பேச்சு உள்ளத்தை உருக்கும்; ஐயமில்லை.

அந்த விடுதலை வீரனுடைய செயலைச் சிந்து ஆக்கிப் பாடிடலாம்; கூனன் நிமிருவான், குருடன் பார்வை பெறுவான்.

ஆனால், அந்த விடுதலை வீரன், தான் கொட்டிய குருதி பற்றி நினைவுபடுத்தியபடி, நாட்டு மக்களின் குருதியைக் குடித்து இன்புற எண்ணினால், நாடு சம்மதிக்குமா?

புதிது புதிதாக விடுதலை பெற்ற நாடுகளிலே எழுச்சிமிக்க தலைவர்கள் உள்ளனர், கோலோச்சும் நிலையில். அவர்களின் அறிவாற்றலை எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்; அவர்களுக்கு மக்கள் தமது இதயத்தைக் காணிக்கையாக்கிடத் தயங்கிடவுமில்லை.

ஆனால், அவர்கள் அந்த நிலையுடன் திருப்தி அடைவதாகத் தெரியவில்லை.

கொடுங்கோல் முறிந்தது, செங்கோலோச்ச வந்திருக்கிறார் விடுதலை வீரர், இனி மக்களுக்கு உரிமைகள் தாராளமாக வழங்கப்படும், மக்களின் கருத்தறிந்து அரசு செயல்படும், மக்களில் நலிந்து கிடப்போருக்காக அரசு தனி அக்கறை காட்டும் என்றெல்லாம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கனியிலே சுவை காண எண்ணுவதும், விளக்கிலே ஒளி காண விழைவதும், யாழிலே இனிய நாதம் எழும் என்று எதிர்பார்ப்பதும் இயல்புதானே! அதுபோல.

ஆனால், நாட்டை விடுவித்த மாவீரன், மக்களுக்கு எது நல்லது, எது தேவை என்பது எனக்குத் தெரியும் - எனக்கு மட்டுமே தெரியும் - மக்களுக்குத் தெரியாது என்ற நினைப்புடன் அரசாளத் தொடங்கினால், அவனையுமறியாமல், மக்கள் உரிமை யற்றவர்களாகி, அரசிடம் அக்கறையற்றவர்களாகி, பழைய கொடுமை தொலைந்தது, புதியது புகுந்தது என்றெண்ணிக் குமுறுவர். பல நாடுகளிலே இன்று இந்த நிலை.

ஆப்பிரிக்க பூபாகத்தில் வெள்ளை, பிரஞ்சு போன்ற வல்லரசுகளிடமிருந்து போராடி விடுதலை பெற்ற நாடுகளில், விடுதலை வீரர்கள் மக்களுக்கு நல்வாழ்வு பெற்றுத்தருகிறோம் என்று அறிவிக்கிறார்கள். ஆனால், மக்களாட்சி முறையை ஏற்க மறுக்கிறார்கள்:

முன்பு அந்த நாடுகளை ஆண்டுவந்த வல்லரசுகள், தமது ஆட்சி முறை பற்றி எவரும் ஏதும் கூற அனுமதி அளித்திடாது இருந்து வந்தது போலவே, விடுதலை வீரர்கள் என்ற விருதுடன் அரசாள வந்துள்ளவர்கள், தமது ஆட்சி முறை பற்றி மக்கள் அல்லது மக்களின் ஆதரவு பெற்ற தலைவர்கள், மாற்றுக் கருத்தினைக் கூற அனுமதிக்க மறுக்கின்றனர். இதற்காக வேண்டி, தமது நாட்டில் ஆளும் கட்சி தவிர வேறு கட்சி கூடாது என்று சட்டம் இயற்றி விட்டனர்!! இதற்கு மக்களின் "சம்மதம்' கிடைத்து விட்டது. அதற்கான தேர்தல் நடத்தியாகிவிட்டது. ஆகவே, இதுவும் ஜனநாயக ஆட்சிதான் - இதுதான் வலிவான, பயனுள்ள ஜனநாயகம் என்றும் வாதாடுகின்றனர்!!

நான் இதுபற்றி இவ்விதம் கருதுகிறேன்! - என்ற பேச்சே, எதிர்ப்பு என்று கருதப்பட்டு, நாட்டுக்குத் துரோகம் என்று அறிவிக்கப்பட்டு, அந்தக் கருத்தே அழிக்கப்படுகிறது; கருத்து பொருளற்றது என்று விளக்கி மக்களைத் தமது கருத்தின் வழி ஈர்த்திடும் முறையினால் அல்ல; மாற்றுக் கருத்தினைக் கூறிடுவோரை மாய்த்திடுவதன் மூலம் அல்லது விரட்டிவிடுவதன் மூலம் அல்லது சிறையில் தள்ளிவிடுவதன் மூலம்!?

எமக்கு இதயம் தங்கம்! கரம் மட்டுந்தான் இரும்பு! - என்று கூறுவார் போலுள்ளனர் இந்த ஆட்சித் தலைவர்கள்.

என்னென்ன உரிமைகளை வல்லரசு அழித்துவிடுகிறது என்று கூறி, மக்களைத் தட்டி எழுப்பி, விடுதலைப் போரினை நடத்தினார்களோ, அதே உரிமைகளை விடுதலை பெற்ற பிறகு அரசாளவந்துள்ள தலைவர்கள் மக்களிடமிருந்து பறித்துக் கொண்டுள்ளனர். வயிறாரச் சோறு! வேறென்ன வேண்டும்!! - என்று கேட்கத் துணிகின்றனர்.

காரணம் என்ன காட்டுகின்றனர்? மக்களுக்கு என்ன தேவை என்பது எமக்குத் தெரியும், எப்படித் தருவது என்பதும் எமக்குத் தெரியும்; அந்தத் தொண்டிலே நாங்கள் ஈடுபட்டிருக்கும் வேளையில், அவரவர் தத்தமக்குத் தோன்றியதைக்கூறி, கருத்து மாறுபாடு எழச்செய்வது, காரியத்தைக் கெடுத்துவிடும். ஆகவே, ஒருவரும் ஆட்சிக் கட்சிக்கு எதிரான கருத்தினைக் கூறலாகாது என்கின்றனர்.

தம்பி! தமது அறிவாற்றலில் அவர்களுக்கு அளவற்ற நம்பிக்ளை இருப்பது மட்டுமல்ல மற்ற எவருக்கும் அத்தகைய அறிவாற்றல் கிடையாது என்ற எண்ணமும் தடித்துக் கிடக்கிறது. முன்னது தவறான கணக்காகக்கூட இருக்கலாம்; பொறுத்துக் கொள்ளக்கூடியதுகூட; ஆனால், இரண்டாவது இருக்கிறதே, வேறு ஒருவருக்கும், யோசனை கூறிடக்கூடத் திறமையும் உரிமையும் கிடையாது என்ற எண்ணம், அது சகித்துக் கொள்ள முடியாதது; அது வெறும் அகம்பாவம்; வெறும் அகம்பாவமா! மெள்ள மெள்ள அழிவைத் தந்திடும் அகம்பாவம்.

ஆனால், புதியநிலை பெற்றுள்ள பல நாடுகளில் இத்தகைய அகம்பாவம் அரசோச்சுகிறது; மக்கள் அச்சத்தின் பிடியிலே சிக்கியுள்ளனர்; ஆனால், எப்போது அங்கெல்லாம் என்ன நேரிடும் என்று கூறிடுவதற்கில்லை; போன வாரம்தானே மகிழ்ச்சிப் பெருக்குடன் முழக்கமிட்டார் பென்பெல்லா, எமது அரசாளும் குழுவிலே எந்தவிதமான பேத உணர்ச்சியும் இல்லை என்று!!