அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இலவுகாத்த கிளி!
2

ஆனால், இங்கு அத்தகைய அக்ரமமான, அநீதி நெளியும் அமைப்பு நீண்டகாலமாக இருந்து வருவதற்குக் காரணம், ஜாதி முறையில் ஆழ்ந்த நம்பிக்கை அனைவருக்கும் புகுத்தப் பட்டிருப்பதாகும்.

அந்த நம்பிக்கை ஆழப் பதிந்ததற்குக் காரணம், இந்த ஜாதி முறை என்பது, சுகபோகியாவதற்கு வழிகாண விரும்பிய சூதுக்காரன், எதற்கும் தலையாட்டும் போக்கினர் மீது சுமத்திய சூழ்ச்சித் திட்டம் என்ற தெளிவு, நெடுங்காலமாக ஏற்படாததாகும்.

ஜாதி முறை என்பது கடவுளின் ஏற்பாடு என்று மக்களிடம் பேசப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டதால், இந்தத் தெளிவு ஏற்படவில்லை.

கடவுள் எனும் புனிதம், எத்தகைய அக்ரமமான காரியத்துக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை எண்ணும்போது, எவருக்கும் மன அதிர்ச்சி ஏற்படாமலிருக்க முடியாது.

கடவுள் எனும் புனிதத்தைப் பயன்படுத்தி இந்தச் சூழ்ச்சிக் காரியம் நடைபெற்றுக் கொண்டு வந்ததால், இந்தச் சூழ்ச்சித் திட்டத்தை எதிர்ப்போர் கடவுட் கொள்கைக்கு எதிரிகள் என்று கூறி, அழித்திட, சூழ்ச்சிக்காரர்களுக்கு எளிதாக முடிந்தது.

நமக்கேன் இந்தப் பகை என்ற அச்சம் காரணமாகப் பலரும், இந்த அக்ரமத்தினைக் கண்டிக்காமலிருந்து விட்டனர்.

பல பொருள் உணர்ந்தோரே, இதனைக் கண்டிக்காத காரணத்தால், இது மெத்தச் சரியான, தேவையான, தூய்மையான திட்டம் போலும் என்ற எண்ணம் வெகுவாகப் பரவிற்று.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரேகூட இந்த மனமயக்கத் துக்கு ஆளாயினர் - தமக்குச் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் அநியாயமானது என்ற உணர்வு பெறவும் முடியாமலிருந்தது.

மேலும் அவர்கள், தமக்குள் ஒருவருக்கொருவர் தரம் பார்த்துக்கொள்ளவும், உயர்வு தாழ்வு பேசிக்கொள்ளவும் தலைப்பட்டு, மொத்தத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்திட ஆர்வம் காட்டாமல், தமக்குள் "மேல் கீழ்' பேசிக் கிடக்கவும், ஏசி மோதவும் தலைப்பட்டனர்.

மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்தவர்களும், மேனாடுகளில் உள்ள சமூக அமைப்பு கூடுமான வரையில் நீதி நிலவ வழி செய்கிறது என்ற உண்மையைத் தெரிந்தவர்களும், இங்கு அரசியல் நடவடிக்கைகளிலே ஈடுபட்டபோதுதான், வகுப்பு நீதி, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற முறைகளைப் பற்றிப் பேசலாயினர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று.

அதன் பயனாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தத்தமது வகுப்பின் சக்தியைத் திரட்டவும் அந்தச் சக்தியை அரசியலுக்குக் கருவியாக்கிக் கொள்ளவும், முற்பட்டனர்.

சென்ற தேர்தலின்போது, இந்தக் "கருவி' மிக நன்றாகப் பயன்பட்டது.

ஜஸ்டிஸ் கட்சி, மொத்தமாக பார்ப்பனர் - பார்ப்பன ரல்லாதார் என்று சமூக அமைப்புத் திட்டத்தைக் கவனித்து, அதற்கேற்றபடி, தன் அரசியல் முறைகளை அமைத்தது.

வகுப்பு நீதி - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற திட்டங்கள் அமுலுக்கு வருவதற்கான சூழ்நிலையை ஜஸ்டிஸ் கட்சி உருவாக்கிற்று. அதுவும் போதுமானதல்ல என்பது மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக உணரப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த திட்டம் உருவாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

ஜஸ்டிஸ் கட்சிக்கு, இந்தத் திட்டத்தை உருவாக்கி, அமுலாக்குவதற்கான வாய்ப்புத் தரப்படவில்லை. இதற் கிடையில், காங்கிரஸ், சர்க்காரை நடத்தும் கட்சியாகி விட்டது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினையை, காங்கிரஸ் கட்சி கவனிக்க மறுத்தது.

கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குக் காங்கிரசின் செல்வாக்கு, நிகரற்றதாக அப்போது இருந்தது.

அத்தகைய செல்வாக்கு காங்கிரக்கு இருந்ததற்குக் காரணம், நாட்டு மக்களிடம், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பன போன்றவைகளெல்லாம், அற்பமான பிரச்சினைகள் - யாரோ சிலருடைய பதவி ஆசையைப் பூர்த்தி செய்யும் காரியம், மக்களுக்கு அது அல்ல உயிர்ப் பிரச்சினை; உயிர்ப்பிரச்சினை, வெள்ளைக்கார ஆட்சியை விரட்டிவிட்டுச் சுயராஜ்யம் பெறுவதுதான், என்று எடுத்துக் கூறப்பட்டது.

நாடு, அடிமைப்பட்டிருப்பதை உணர்ந்து, அந்த இழி நிலையைப் போக்கித் தீரவேண்டும் என்ற "தேசிய' உணர்வு பெற்ற மக்கள், இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

வகுப்புப் பிரச்சினைகளைக் கவனிப்பது சிறுமைத்தனம், "சிரழிவு, தேசத் துரோகம், என்று கருதினர். எனவே , காங்கிரஸ், அந்தப் பிரச்சினையை, "குப்பைக் கூடை'க்கு அனுப்பிவிட்டு, தன்னிகரற்ற செல்வாக்குடன், கொலுவிருக்க முடிந்தது. இந்தச் செல்வாக்கு நிலைத்திருக்க முடியாதது, சிதையலாயிற்று சென்ற தேர்தலில். இதற்குச் சான்று கூறுவது போன்ற சம்பவங்கள் பல நடைபெற்றன.

பிற்பட்ட வகுப்பினரின் நம்பிகையைப் பெற்ற தலைவர்கள் பலர், காங்கிரசை முறியடித்தனர்; காங்கிரஸ் கட்சி சார்பிலேயே நின்று வெற்றிபெற்ற சிலரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின் செல்வாக்கைத் துணைகொண்டே வெற்றிபெற முடிந்தது.

பிற்பட்ட வகுப்பனரிடையே ஏற்பட்ட இந்த அரசியல் எழுச்சியைக் கண்ட பிறகுதான், காங்கிரஸ் கட்சி, அருவருப்புடன் பேசி அலட்சியப்படுத்திவிடத்தக்க பிரச்சினை அல்ல இது என்பதை அறிந்தனர்; அறிந்தவர்கள், பிற்பட்ட வகுப்பு மக்களை முன்னேற்றடையச் செய்ய என்ன வழி என்று நல்லெண்ணத்துடன் திட்டம் வகுக்கவில்லை; மாறாக, பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான பணியாற்றுவதாகக் கூறி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, சட்டசபைக்குள் நுழைந்துள்ள வகுப்புத் தலைவர்களை எப்படி வலைபோட்டுப் பிடிப்பது என்ற தந்திரத் திட்டம் வகுத்தனர்.

வழக்கபடி, இத்தகைய தந்திரத்தில் ஆச்சாரியார் வழி காட்டினார்; மாணிக்கவேலர் கிடைத்தார்.

காமராஜர், அதே திட்டத்தைப் பின்பற்றினார், ந.ந. இராமசாமி கிடைத்தார்.

அமைச்சர் அவைக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இருவர் கிடைத்தனர்.

அப்படிக் கூறுவதைவிட, பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பேரால், இருவர் அமைச்சர்களாயினர் என்பதுதான் பொருந்தும்.

இவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டதும், பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா என்பதே இப்போதுள்ள பிரச்சினை; பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் தீவிரமாக எண்ணிப் பார்க்கவேண்டிய பிரச்சினை.

இதைப்பற்றி எண்ணுவதற்குத் துணைபுரிவதற்காக, ஒரு உண்மையை அவர்கட்கு எடுத்துக் காட்டவேண்டி வருகிறது.

குறிப்பிடப்பட்ட, இரு அமைச்சர்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்தைக் கவனித்துக்கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்கள் அல்ல. மாணிக்கவேலர் வரி வசூலிக்கவும், எஸ். எஸ். இராமசாமி "ஸ்தல ஸ்தாபன'ங்களை ஆளவும் அழைக்கப்பட்டனர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் வசதி, வாய்ப்பு, உரிமை ஏதும் அவர்களிடம் தரப்படவில்லை.

எனவே, இருவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் திரண்டெழுந்த சக்தி காரணமாக, அமைச்சர்களாக முடிந்ததே தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான வழி வகுக்கும் பொறுப்பைப் பெறவில்லை.

எனவே, இவர்கள் இருவரும் அமைச்சர்களான காரணத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடவில்லை.

அதற்கான வழியேகூட ஒரு வகையில் அடைபட்டுப் போய்விட்டது என்று கூறலாம்.

இந்த இருவரும், அமைச்சர்களாகாமல் வகுப்புத் தலைவர் களாக இருந்துவந்த போதாவது, பிற்பட்ட வகுப்பினருக்கு உற்ற குறைகளை எடுத்துக்கூறவும், கிளர்ச்சி நடத்தவும், சர்க்காரை வற்புறுத்தவும் வழி இருந்தது.

இவர்களே அமைச்சர்களாகிவிட்டதால், அந்த வழியும் அடைபட்டுப் போய்விட்டது!

இவர்களும் "தேசியம்'' பேச ஆரம்பித்துவிட்டனர்!

உழைப்பாளர் கட்சியும், பொதுநலக் கட்சியும், கலைக்கப் பட்டுவிட்டது - எல்லாம் காங்கிரசில் கரைக்கப்பட்டுவிட்டது என்று, இரு தலைவர்களும் கூறும் அளவுக்கு அந்தத் "தேசியம்' முற்றிவிட்டது.

அந்தத் "தேசியம்' பேசும் போக்கில்தான், அமைச்சர் S.S. இராமசாமி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகன், காங்கிரஸ்தான்! பொதுத் தேர்தல் வருகிறது, பிற்படுத்தப்பட்ட மக்களே! காங்கிரசை ஆதரியுங்கள் என்று பேசி இருக்கிறார்.

அமைச்சர் இவ்விதம் பிரதாபம் பேசுகிறார், ஆனால் வன்னிய குலத்தவர் காங்கிரசின் சேவை குறித்தும், அமைச்சர் போன்றார் குறித்தும், என்ன கருதுகின்றனர்?

எல்லாம் பேச்சளவிலேதான்; செயலளவில் ஒன்றும் பலனில்லை. இதைக் கண்டு நம்மால் போற்றிப் பாராட்டி அனுப்பிய தலைவர்கள், அவர்களின் சுயநலத்திற்காக அவர்கள் கைக்கொண்ட முறையைப் பின்பற்றும் நம்மையும் எங்களோடு நாங்கள் சேர்ந்துள்ள கட்சியில் சேருங்கள் என்று நமக்கு வேறு புத்தி கற்பிப்பதுடன், தனக்கு ஒரு கண் போனதால் மற்றவர்களுக்கும் கண் போகட்டும் என்பதுபோல் உபதேசம் செய்ய முற்பட்டதைத் தவிர நாம் கண்ட பலன் யாது என்பதை மனவேதனையுடன் கேட்கின்றோம்.''

"உழைப்பாளி'யில், பட்டம்மாள் என்றோர் அம்மையார் இது போல எழுதுகிறார்.

வகுப்பின் பெயர்கூறிக்கொண்டு சட்டசபை சென்ற "தலைவர்கள்' தங்கள் சுயநலத்தைத்தான் கவனித்துக் கொண்டார்கள் - என்று மனவேதனையுடன் அந்த அம்மையார் கூறவேண்டிய நிலைமை இருக்கிறது.

"மக்களின் ஓட்டைப்பெற்றுச் சட்டசபைக்குச் சென்று பச்சோந்தியைப்போல் நிறத்தை (லேபிலை) மாற்றிக்கொண்டு'' என்றும் "என் பதவிக்கு ஆபத்து வரும், என் வருவாய் போய் விடும்' என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லியது தவிர நாம் கண்ட பலன் என்ன? - என்றும் கேட்டுள்ளார்.

சுயநலம் - பச்சோந்திக் குணம் - பதவிப் பாசம் - என்பவைகளுடன், புதுச்சேரி பொம்மைகள் போல சட்ட சபையில் கொலுவிருக்கிறார்கள் என்றும் கேலி செய்திருக்கிறார்.

இந்த நற்சான்று கிடைக்கிறது மருத்துவருக்கு - ஆனால், அவரோ என் மருந்து கைகண்டது - என்று கூவிக் கூவி விற்கிறார் - பிற்பட்ட வகுப்பினர் அனைவருமே இதை உட்கொள்ளலாம் என்று "சிபாரிசு' செய்கிறார்!

தம்பி! சாதித்தது என்ன? என்ற தலைப்பில் இரா. வீரசம்பு என்பார், "உழைப்பாளி' 1-7-56 இதழில் தந்துள்ள கட்டுரையில் உள்ள காரசாரமான பகுதியை வேறோர் இடத்தில் அடிகள் வெளியிட்டிருக்கிறார் - படித்துப் பார்.

நம் வகுப்பு மந்திரியை நம் வகுப்புத் தோழனே இப்படிச் சந்தி சிரிக்கச் செய்யலாமா என்று வேண்டுமானால், கட்டுரையாளர் மீதோ இதழாளர் மீதோ பெரிய இடம் கோபித்துக் கொள்ளுமே தவிர, இதிலே குறிப்பிட்டுள்ள எந்த விஷயத்தை, ஆதாரம், புள்ளி விவரம் காட்டி, மறுக்க முடியும்?

உண்மையிலேயே, இலவுகாத்த கிளிபோல்தான் ஆகிவிட்டது. ஐயமில்லை! ஆகவேதான், பிற்பட்ட வகுப்பு இளைஞர்கள் மீண்டும் மீண்டும், ஏமாற்றத்துக்கு ஆளாகாம லிருக்கத்தக்க முறையைக் கண்டறிய வேண்டும்.

வகுப்புத் தலைவர்கள், வகுப்பு நலன் குறித்துப் பேசுவது கேட்டுப் பூரிப்படைந்து, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை மறந்து, கட்சி மாறும்போது திகைப்படைந்து, அவர்கள் உயர் பதவி பெற்றது கண்டு உள்ளூர மகிழ்ந்து, அந்த உயர்வு, வகுப்பு முன்னேற்றத்துக்கு வழிகோலாதது கண்டு மனம் உடைந்து போவதுதானா, இளைஞர் கடமை!!

பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதிலே ஒருவரிருவர் உயர் பதவியில் அமருவதால் ஏற்பட்டுவிடாது என்று அவர்கள் அறிந்துகொண்ட உண்மையை, இனமக்கள் அறியும்படி செய்யவேண்டிய கடமை அந்த இளைஞர்களுக்கு இல்லையா? திறம் இல்லையா?

பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்கான தனியானதோர் திட்டம் காணவும், அதற்கான பண வசதியைப் பெறவும், சட்ட பூர்வமான திட்டம் தீட்ட, பிற்பட்ட வகுப்புத் தலைவர்கள் ஒன்றுகூடிட வேண்டாமா? காங்கிரசுக்குள் சென்று "குடித்தனம்' நடத்த ஆரம்பித்துவிட்டால், இந்தக் காரியம் செய்யும் ஆற்றலை எப்படி அவர்கள் இழக்காமலிருக்க முடியும்!

விதை நெல்லை வேகவைத்துத் தின்றுவிட்டால், வயலில் தூவ நெல் எங்கிருந்து பெறுவது? அம்பை ஒடித்து மாடோட்டும் தார் குச்சியாக்கிவிட்டால், வில் வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும்?

பிற்பட்ட வகுப்பினரின் நிலைமை சகல துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கான சட்டபூர்வமான திட்டத்தைப் போராடிப் பெறவேண்டிய தலைவர்கள், வகுப்பு முன்னேற்றம் தானாக வருகிறபோது வரட்டும், முதலில் எங்கள் முன்னேற்றத்துக்கு வகை செய்து தாருங்கள் என்று ஆளும் கட்சியிடம் கொஞ்சவும், கெஞ்சவும் முற்பட்டபோது, வகுப்பு இளைஞர்கள் மட்டும் சிறிதளவு விழிப்புணர்ச்சியுடன் இருந்திருந்தால், தம்பி, இலவுகாத்த கிளியானோமே! பச்சோந்தி களாகிவிட்டார்களே! புதுச்சேரிப் பொம்மைகளாக இருக்கிறார்களே! என்றெல்லாம் கூறித் துக்கிக்கவேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டிராது.

இப்போது மனம் குமுறிப் பேசினாலும் எழுதினாலும், அமைச்சர்களாகிவிட்ட குலப் பெரியவர்கள், எங்களுக்கு உங்கள் ஆதரவு தர முடியாது என்றால்கூட நாங்கள் அச்சம் கொள்ளமாட்டோம்; ஏனெனில், எங்களுக்கு வேலை செய்ய காங்கிரஸ் கட்சியே காத்துக் கிடக்கிறது என்றல்லவா சொல்லுவார்கள்!!

எனவே, பிற்பட்ட வகுப்பிலே உள்ள இளைஞர்கள், அந்தப் பிரச்சினையை நன்கு ஆராய்ந்தறிந்து, தலைவர்களின் தந்திரத்துக்கும், ஆசை வார்த்தைக்கும், வகுப்பின் பெயர் கூறி ஊட்டும் மயக்கத்துக்கும் மக்கள் பலியாகாமற் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் இளைஞர்கள் வெற்றி பெற முடியாது போனால், நீண்டகாலத்துக்கு, பிற்பட்ட வகுப்பின் பெயர் கூறிக்கொண்டு தலைவர்கள் ஆவர்; மந்திரிகளாவர்; கட்டுரையாளர் கூறுவதுபோல, இனமக்கள் என்றும்போல் சுமைதாங்கிகளாகவே இருப்பர்; மந்திரிகளானவர்கள், பச்சோந்திகளாயினும், பளபளப்புடன் பவனி வருவர். பலன் பெறுவர். புதுச்சேரிப் பொம்மைகள் என்று கேலி பேசினாலும், கவலைப்படமாட்டார்கள்; இனமக்களின் நிலைமையோ "இலவு காத்த கிளி'யாகத்தான் இருக்கும்.

பலன் எந்த அளவுக்கு ஏற்படும் என்பது பற்றியும், நமக்குக் கிடைத்திடக் கூடிய வசதி எத்தகையதாக இருக்கும் என்பது குறித்தும், கவலையற்று, நாம், தம்பி, இந்தத் தேர்தலின்போது, இந்த உண்மைகளை ஊரறியச் செய்ய வேண்டும்.

பிற்பட்ட வகுப்பினர் பிரச்சினைக்குப் பரிகாரம் என்ன என்ற உண்மையை எடுத்துரைத்து, பிற்பட்ட வகுப்பினருக்கு உரிமையும் நல்வாழ்வும் பெற்றுத் தருவதாக வாக்களித்தவர்கள் போக்கு எப்படி மாறிவிட்டது என்பதை எடுத்து விளக்கி, அடுத்த சட்டசபையிலேனும், பிற்பட்ட வகுப்பினரின் உரிமைக்காக, நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஆளும் கட்சியின் புன்னகைக்கு மயங்காமல், கோபம் கண்டு அஞ்சாமல், வாதாடக்கூடிய, போராடக்கூடிய, தூய்மையும் ஆற்றலும் கொண்ட பிற்பட்ட வகுப்பு இளைஞர்கள் ஒரு சிலராவது இருந்தால்தான், பிற்பட்ட வகுப்பைப் பிடித்துக்கொண்டுள்ள பிணி நீங்கும் மாமருந்தே யொழிய பிற்பட்ட வகுப்பின் பிணி தீர்க்கும் மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று வாணிபம் நடாத்துவோரால் நிச்சயமாக முடியாது; முடியவே முடியாது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில், ஆற்றல் மிக்கவர்கள், தியாகிகள், வீரர்கள் இருக்கிறார்கள்.

நாடு ஆளும் தகுதியும் திறமையும் அவர்களிடம் இருக்கிறது; நிரம்ப இருக்கிறது.

ஆனால் அவர்கள் காங்கிரஸ் கூடாரத்தில் குடிபுகுந்து விட்டால், இனம் குறித்துப் பேசவும், இனமுன்னேற்றத்துக்கான திட்டம் தேடவும் முடியாது, அனுமதி கிடையாது! எனவேதான்,

பச்சோந்திகளாய்

புதுச்சேரிப் பொம்மைகளாய் இருக்கவேண்டி நேரிட்டுவிடுகிறது.

எனவேதான், தம்பி, கொடி கட்டி ஆளும் கட்சியில் கோடீஸ்வரர்களும், கோலெடுத்துத் தாக்க வருவோரும் இருப்பது தெரிந்தும், ஒடுக்கப்பட்டோர் நசுக்கப்பட்டோர் ஒதுக்கி வைக்கப்பட்டோர் சார்பில் பேசும் ஜனநாயகக் கடமையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், தேர்தலில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம் - வெற்றி பெற்று விடுதலைத் திட்டம் பிரகடனம் செய்துவிடப் போகிறார்களோ இந்த சூரப்புலிகள் என்று வீராவேசமாகக் கேட்கின்றனர் வெந்த மனதினர் தமது நொந்துபோன நிலையினை நாடு கண்டறியலாகாதே என்ற எண்ணத்தால் - கேட்கட்டும் தம்பி, அதனால் என்ன!

நமது கடமையை நாம் செய்வோம், மக்களுக்கு, உண்மையான உழைப்பாளர்கள், உறுதி படைத்த வாதாடுவோர், குறுக்குவழி செல்லாதவர்கள் தேவை என்றால் நம்மை ஆதரிக்கட்டும்! இலவுகாத்த கிளியானோம் என்று இன்று மனவேதனைப்படுகிறார்களே இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துச் சொல்லிக் கேட்போம். உண்மையை மக்கள் உணரும்படி செய்வதற்கேற்ற ஆற்றல் வெற்றி பெற்றால் வெற்றி கிடைத்தே தீரும்; இல்லையென்றாலும், நஷ்டம் நமக்கல்ல, நாட்டுக்கு என்று மன அமைதிகொள்ளவும் நமக்குத் தெரியும். இனி என்ன கவலை! தம்பி! இலவுகாத்த கிளி போன்ற நிலைமையில், வன்னியர் மட்டுமல்ல, பொதுவாகப் பிற்பட்ட வகுப்பு மக்கள் அனைவருமே அதே நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம், உண்மைகளை எடுத்துரைக்கும் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு வருவோம்; பெரியார் அடிக்கடி சொல்லுவார் கவனமிருக்கிறதா, தம்பி, ஊதுகிற சங்கை ஊதுவோம், விடிகிறபோது விடியட்டும் என்று. அதைவிடச் சற்று அதிகமான நம்பிக்கை கொள்ளக்கூடிய விதமான அறிகுறிகள், நம்பிக்கை தரும் நிலைமைகள் நாட்டில் தென்படத்தான் செய்கின்றன; எனவே, நமது பணி, ஆர்வமும் எழுச்சியும் கொண்டதாகவே அமைந்திருக்கிறது.

அன்பன்

12-8-1956