அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இன்ப நாளிது! இதயம் பாடுது !
1

ஆரியம் நுழையா அறிவுத் திருநாள்
ஆடிக் காட்டிட ஓர் அருங்காட்சி
புறநானூற்றுப் புலவர்கள் வரிசை
சுந்தரர் காட்டும் இயற்கைக் காட்சி

தம்பி!

திருநாளாம் திருநாள்! திருநாள் என்ன வேண்டிக் கிடக்கிறது நமக்கு? துக்கம் துளைக்கிறது, வேதனை கொட்டு கிறது, இந்நிலையில், மனையில் மகிழ்ச்சி மலரும் வகைபற்றி எழுதுதல்தான் இயலுமா? - என்று எண்ணிடும் நிலையில் உள்ளேன் என்பதை அறிந்துள்ள தம்பி, வெதும்பித்தான் கிடக்கும் அண்ணன் மனம், விழா நாளன்று வழங்கும் வகை வகையான களிப்பூட்டும் கருத்துக்களை இம்முறை பெறப் போவதில்லை என்று நிச்சயம் தீர்மானித்துத்தான் இருந்திடுவாய் என்பதை அறிவேன்; அடிகள் கிட்டிப் போட்டுப் போட்டு, கடாவிக் கடாவி, மனநிலையை விளக்கிடும் மடலேனும் தீட்டித் தருக என்று பணிந்து, எனை வேலை வாங்குகிறார்.

ஆம்! தம்பி! ஆறாத்துயர் தாக்கிய நிலையால், ஆண்டுக்கோர் முறை தமிழர்தம் இல்லம் தங்கி இன்புறச் செய்து, இல்லாமை, இயலாமை என்பனபோன்ற இடுக்கண்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை அளித்திடும், விழாக்கோலம்கூட, எனக்கு வேம்பாகிக் கிடக்கிறது. ஆறுதல் பெறும் வழி வந்துற்ற அல்லலை எண்ணி எண்ணி மனம் அழிந்துபடுதலன்று, மற்றையோரின் மகிழ்ச்சி கண்டு மனநிறைவு பெறுதலும், மற்றையோருக்கு மகிழ்வு அளிப்பதன்மூலம் மனநிம்மதி பெறுவதுமே, சாலச் சிறந்த முறை என்பதை உணர்ந்திட முடிகிறது. ஒருபுறம், வெதும்பிய நிலை, மற்றோர் புறம், தமிழர் தம் மனைதொறும் மனைதொறும் அரும்பி அழகளித்து மலர்ந்து மணம் பரப்பிடத்தக்க மாண்புமிகு திருநாள் குறித்தெழும் எண்ணங்கள்!

சதங்கையும் கிண்கிணியும், கிளிமொழியும், குழலிசையும், இல்லங்களில் எழவேண்டும்; எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்; எழில் பூத்திடவேண்டும், ஏற்றம் கண்டிடல்வேண்டும், எண்ணத்திலே புது வண்ணங்கள் சேர்ந்திடவேண்டும்; எக்குறையும் இலாதொழியவேண்டும், பட்ட பாட்டின் பலன் நுகரவேண்டும், அதனாலாய பண்புபெற்று அகமகிழவேண்டும்; மகவு கண்டு தாயும், மானைக் கண்டு மணாளனும், அக்காட்சி கண்டு பெற்றோரும், களிப்படைதல்வேண்டும்; கனி மொழியும் கருணை மொழியும் விழியும், தோழமையும் எங்கும் வழிந்திடல் வேண்டும்; புன்னகை பொலிவளிக்க, பூவிதழ் "இச்சொலிக்க', புத்தாடை அழகளிக்க பொங்கலோ! பொங்கல்! என்று மனை யுளார் மகிழ்ந்தொலிக்க, ஊரெல்லாம் உள்ளமெல்லாம், உவகை பொங்கிடவேண்டும். என் உள்ளத்திலே சுமை ஏறி நெரித்திடு வதால், எங்கும் பொங்கிடவேண்டும் என்று யான் விழையும் நல்லெண்ணம் எங்ஙனம் பிறவாதிருக்கும்; அஃது அடாதது மட்டுமன்று, அறமுமாகாதன்றோ! எனவே, என்னை வாட்டிய வேதனையை, எங்கும் எழுந்திடும் இன்னிசைகொண்டு, வீழ்த்தத் துணிவுகொண்டேன், விழாவில் பங்கேற்க முன்வந்தேன்.

இஃதென்ன புதுமையோ! அன்று, அன்று! கரும்பு சுமந்து வந்து, இரும்பு மனம் படைத்த பண்ணையாரிடம் தந்துவிட்டு, வழிந்திடும் வியர்வையைத் துடைத்திடக் கந்தலெடுத்து, அதிலுள்ள பொத்தல் கண்டு மெத்தவும் வருத்தப்பட்ட நிலையில் நிற்கிறானே, உழவன், உழைத்தவன், உருக்குலைந்த உத்தமன், ஏரடித்துச் சீரளித்தோன், எவர் வாழ்வுக்கும் ஏற்றம் தந்தோன், அவனுக்குக் காய்ச்சலால், வாய்க்கசப்பு! எனின், அவனளித்திடும் கரும்பு? இனிப்பு! இனிப்புத்தானே! அவனுக்கும் விழாதான்! நிலைமையை ஆய்ந்தறிந்தால் அவன் மனத்தில் என்னென்ன எண்ணமெலாமோ நெளியும்; நெரித்த புருவத்தினனாவான், நீர் சொரியும் கண்ணினனாவான்! ஆனால், அந்த நல்லோன், இன்று விழா! திருநாள்; அறுவடை அளித்திடும் அகமகிழ்வு அனைவருக்கும் கிடைத்திடும் இன்ப நாள்! இன்று இன்னலை எண்ணிடல் முறையல்ல, என் நிலை யாது? என்று உசாவிடல் சரியல்ல; நாடு விழக்கோலம் பூண்டிடும் வேளை இது, நானோர் களங்கம் தேடிடல் ஆகாது; என்றன்றோ எண்ணி, அடிமைப் படுத்திக் கொடுமை புரிந்து, சுரண்டிச் சுக்கு நூறாக்கி, ஏய்த்து ஏமாளியாக்கி, மிரட்டி வேலை வாங்கி மேனாமினுக்கியாகும் பண்ணை முதலாளிகளைக் கண்டும், துளியும் காயாமல், முகத்திலே முறுவலை வருவித்துக் காட்டுகிறான், பேச்சிலே சுவை கூட்டுகிறான். பேழையுடையானுக்கு, ஏழை தானெனினும் எடுத்தளிக்கிறான் இனிமை. அவன்போன்றோர், காட்டிடும் அறநெறியும் அமைதியும், பொறையுடைமையும் பொறுப் புணர்ச்சியுமன்றோ, நாடு அதிரும் பேரிடிகள் ஏற்படாமலிருப்ப தற்குக் காரணம்? அந்த நல்லான், தொல்லைகளைத் தாங்கிக் கொள்ளுவது தெரிந்த பிறகு, நான், மனதிலே கப்பிக்கொண்ட துயரத்தைத் துரத்திவிட்டுக் கடமையில் களிப்புக் காண முனைவதா, கடினம்? இல்லை, இல்லை! என்னரும் தம்பி! பொங்குக இன்பம்! தங்குக மனைதோறும்! என்ற என் நல்லுரை தந்து மகிழ்கிறேன். பெருக! மகிழ்க! பெருகிடும் மகிழ்ச்சியில் தருக என் பங்கு! கொள்வோம், கொடுப்போம், கொளக் கொளக் குறையாது, கொடுத்திடவும் குறையாது நல்லுரை, தருவோர் பெறுவோர் இருபாலர்க்கும் இன்பம் சேர்த்திடும், தன்மை பெற்றது.

தீதான கருத்துகளும், தீயோரின் கூட்டுறவும் திருவழிக்கும் போக்குகளும்கொண்டவனாக, விழாக்கள், விரதங்கள், வீணாட்டம், வெறிச் செயல்கள் அடுக்கடுக்காய்ப் பெற்றிருந் தோம், அனைத்தையும் விட்டொழித்தோம். அசுரன் அவன் அழிந்துபட்டான், அப்பம் சுட்டுண்போம், ஆகாசவாணிக்கு அக்காள் திருமணமாம், ஆமைவடை பாயசம் அடுக்களையில் ஆக்கிடுவோம், வனவாசம் நீங்கிய நாள் வந்துற்ற காரணத்தால், விலைவாசி பாராமல், வெள்ளியால் விளக்களிப்போம், இரவெல்லாம் கண்விழித்து இறையவனின் அருள்பெறுவோம், என்றெல்லாம் பல கூறி, ஏதேதோ விழாக் கண்டார். எல்லாம் எத்தர்கள் பித்தர்களை ஏய்த்திடும் ஏற்பாடென்று எடுத்தியம்ப, எழுந்தது அறிவியக்கம். அவ்வியக்கம் நம் மனத்தின் நீண்டநாள் மயக்கமதை மாய்த்தொழித்துவிட்டதாலே, நாமே நமை அறிந்தோம். நமது ஏதுவென உணர்ந்தோம், நாடிது அந்நாளில் நானிலம் வியந்திட வாழ்ந்து, நல்லன பல கண்டு நயந்தோர்க் கெலாம் அளித்து, அறிவுத் தெளிவுடனே, ஆண்மை அறம் கூட்டி அரசோச்சி வாழ்ந்திட்ட அருங்காதையாவும் கண்டோம். அறுவடை விழாவாக, அனைவர்க்கும் அகமகிழ்வு தருவதாக அமைந்திட்ட அரும் நாள், தமிழர் திருநாள், பொங்கற் புதுநாள்; அந்நாளில், அடிபணியச் செய்து அடிமடியில் கையிட ஆரியம் நுழைவதில்லை; நெல்லும், கரும்பும், இஞ்சியும், மஞ்சளும், இச்சையைக் கிளறிவிடும் பச்சைக் காய்கறியும், பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும், காயும் கனியாகும், தொட்டால் துளிர்த்துவிடும், எடுத்தளித்தால் இனிமை தரும் கரம்பட்டால் மணம் சேரம் என்றெல்லாம் எண்ணிடச் செய்யும், இனியாளின் இன்மொழியும், இன்னமுமா உங்கள் ஆட்சி? இதோ வந்தேன் இளவரசன் என்று கூறாமற் கூறிடும் குழந்தைதரும் மழலையும் பல்போனால் சொல்தான் போகும், பரிவு காட்ட இயலாதோ என்றுரைக்கும் வகையான முதியோரின் பொக்கை வாய்ச் சிரிப்பும், இவையன்றோ ஏராளம், எனவேதான் பொங்கற் புதுநாளை, தமிழர் திருநாளைப் போற்றுகிறோம் மனமார. அந்தத் திருநாளில் அறிவுசால் என் தம்பி! அகமகிழ்தல் போன்றே நம் எண்ணம் வளர்தல்வேண்டும். நாடுபற்றி எண்ணிடவும், நானிலத்தின் நிலை குறித்து அறிந்திடவும், நாம் கொண்ட குறிக்கோளில் வெற்றி கண்டிட செய்யத்தக்கன பற்றிய வழி வகைபற்றிக் கலந்துரையாடிடவும், கருத்தில் இதுபற்றிக் கவலையற்றிருப்போர்க்குக் "கதை கதையாய்' தமிழ் வாழ்வை எடுத்தியம்பி நிற்பதற்கும் இந்நாள் அமைந்ததாகும். வானிலுறை தேவர் குழாம், வடித்தெடுப்பது எப்பானம்? வந்திடும் கலாம் பலவும் வார்குழலால் என்பாரே. கலாம் விளைத்த கடவுளர் யார்? படுத்துறங்கும் பகவனுக்கு, பாரழிக்கும் தேவனுக்கும் இருக்கும் உறவு என்ன? அங்குச் செல்லும் வழி எது? சென்றோர் தொகை என்ன? என்றெல்லாம் கதை பேசும் "பண்டிகை'யல்ல. பரம்படித்துப் பதப்படுத்தி, உழுது, நீர் பாய்ச்சி, விதைத்து முளை வளர்த்து, களை பறித்து, கதிர் கண்டு, அறுத்து அவித்தெடுக்கும் அருங்கலைக்கு விழாவெடுக்கும் அறிவுத் திருநாள், பொங்கற் புதுநாள்.

அந்த நாளில், வாளும் வேலும், போதும், நாளும் கோளும் என் செய்யும்? கரியும், பரியும் இருப்பின், புகையும் புல்லருரையும் எற்றுக்கு? என்று அறிந்து வீறென நடைபோட்டு, களத்திலே வீரக்கலாபம் விரித்தாடி, வெற்றிக் கழலொலியால் வளையொலி யாள் காதலினைக் காணிக்கையாகப்பெற்ற, வீரர் கோட்டமாக, நம் நாடு விளங்கிய வரலாறு நினைவிலே வந்து நிற்கவேண்டும்; நெஞ்சிலே தேனூறும்! நம்மவர் அங்ஙனம் இருந்தகாலை, பாரிலே மற்றையோர், மந்தை முறையில் வாழ்ந்தனராம். நொந்து கிடந்தனராம், மொழி வளமே கிடையாதாம். வரைமுறை அறியாராம், அறிவளிக்கும் நூலின்றி, அறம் காக்கும் அரசின்றி, வாழ்வளிக்கும் வகையின்றி, நாடே காடாக, நலிந்தனராம். கடலில் நம் கலமாம்! கடாரம் நம் காலடியாம்! பொன்னும் மணியும் எங்கெங்குமாம்! போர் முரசு கேட்டால் பேரரசுகள் நடுக்குறுமாம்! கவிதை புனைவாராம் புலவர் குழாம், காவலர் தருவாராம் கனகமணி! அகமும்புறமும் கண்டவர் யார்? அவனி புகழ வாழ்ந்தோர் யார்? என்றால், அவர்தாம் தமிழர், என்று எவரும் கூறும் நிலைபெற்று, நம்மவர் வாழ்ந்தார் சீரோடு, நாம் அவர் வழிவழி, மறத்தலாமோ!!

இவரிடம் உளது என்? இல்லாமை, போதாமை, இயலாமை! இருட்டறிவு! குலபேதம், மதபேதம், குருட்டறிவு, அடிமை நிலை, அச்ச நிலை, நச்சரவுபோன்ற நானாவிதமான பிச்சு நினைப்புகள், பேதைமை! அரசிழந்தார், வளமிழந்தார், கொத்தடிமை செய்தேதான் சாகாதிருக்கின்றார்! - என்றெல்லாம் இன்று நமை எவரும் கூறிடலாம். கோபம் கொப்புளிக்கும். ஆவது என்? உண்மை நிலைதான் அஃது? உலகறியும், நம் உள்ளம் அறியும்! ஊமையர்தாமறிவர்!

இந்நாளில் இந்நிலை; அந்நாளை அறிந்திடவோர் வாய்ப்புமின்றி இருந்த நிலை மாறிற்று, விழி பெற்றோம், வழி காண விழைகின்றோம்; பிழை தோன்றும்; கவலையில்லை; மனத்திலோர் உறுதி உண்டேல் வழி காண்போம், வெற்றி காண்போம்! நாம் காணும் செந்நெல்தனை அவன் கண்டான்; உழுமுன் அத்தனையும் காடு மேடு! மான் கண்டு மயங்கும் தன்மை தான்கொண்ட விழியின் நல்லாள், தேன் தந்தாள், அதைச் சேர்த்திடச் சென்றோன், மலை சென்றான், பிலம் சென்றான், மட்டற்ற இன்னல்பட்டான், கொட்டிய ஈக்கள் உண்டு, கொணர்ந்தான் தேன்.

அறுந்தது நூல்! அவிழ்ந்தது கட்டு! இருண்டது கண்! அலுத்தது உடலம்! நெய்தான் நேர்த்தியாக, செம்பொற் சித்திரம் அழகளிக்க அதை உடுத்தாள்! அருகிற் சென்று அன்னமே என்றழைக்க, அவள்பெற்ற செல்வமோ வழியும் விட்டான்!!

பொங்கற் புதுநாளன்று நம் கண்முன் தோன்றும் பொரு ளெலாம், நமக்குத் தரும் பாடம், அருமை மிகுந்ததொன்றாகும். மனையிற்பெறும் அந்தப் பாடம், நமது மனத்தில் உறையும் குறிக்கோளை நாம் அடைய, உதவும் வகையானதாகவேண்டும். அதற்கு, இன்பம் எனது இல்லத்தில் இருந்தால் போதும் என்ற தன்னலம் தகர்த்தொழித்து, நாடு வாழ, நாம் வாழ்தல் வேண்டும், கூடி வாழ்வதே கேடில் வாழ்க்கை என்ற பொது நெறி பூத்திடவேண்டும்; நாடு வாழ்ந்திட நாம் ஆற்றவேண்டிய பணிகள் யாவை என்ற கேள்வி எழும்; அதற்குக் கிடைத்திடும் விடை, நம்மை வீரராக்கும் விழா, விலாப்புடைக்கத் தின்பதற்கு அல்ல; வீர உள்ளம் பெறுதற்கும் வழிகோலுவதாதல்வேண்டும்; அஃது இல்லையெனில், மேய்ந்திடும் ஆனிரையும், மானின் குருதி குடித்த வேங்கையும் பிணத்தைக் கொத்தித் தின்றிடும் பெரும் பறவையும் வயிறு நிரம்பியபோதெல்லாம், விழாக் கொண்டாடு வதாகத்தானே கூறவேண்டும்! மிருகங்கள்போலன்றி, மக்கள் "திருநாள்' எனத் தனி நாள்களைக் கொண்டாடுவது, விருந்துக்காக அல்ல, அந்த நாள்களை, நற்கருத்துக்கள் பெறுவதற்கான வாய்ப்புகளாக்கிக்கொள்ளும் நோக்கத்துக்காகத்தான். தமிழர், பொங்கற் புதுநாளை இம்முறையிலேதான், சில ஆண்டுகளாக வேனும் கொண்டாடி வருகின்றனர். அவர்க்கு அந்த நோக்கம் கிடைத்திடச் செய்த பணியில், நாம் பங்குபெற்றவர் என்ற முறையில் நமக்கு பெருமை நிச்சயம் உண்டு; உரைத்திடார் யாரும் இதுபோது; உலகு கூறும்; நாம் வாகை சூடிய பின்னர்! அதோ ஆடிப்பாடிடும் நம் அருந்தங்கை ஆற்றலரசனைப்பெற்று, ஆண் மகவு ஈன்றெடுத்து, "ஆளப் பிறந்தவனே! என் ஆருயிரே கண்வளராய்'' என்று தாலாட்டுப் பாடப்போகிறாள். சில ஆண்டுகள் சென்றபின் என்று கூறட்டும், கோல் ஊன்றி நடந்திடும் நம் குடும்பப் பெரியார்; "கெக்கெக்கே! வெவ்வெவ்வே!'' என்று கேலி செய்து, கோணல் நடை காட்டி நாணிடுவாள் நம் செல்வி! மாற்றார் என்றுரைத்து, நமைத் தூற்றிடும் தூயோரெல் லாம், அவள் போன்றாரே! அடையா முன்னம், அடைவோம் என்று அறியார்! அறியச் சொல்வோரை அறைவார்! அஃது உலக வழக்கு!

ஆமாம், தம்பி! வீறுகொண்ட மக்கள் எவருள் விரல்விட்டு எண்ணிடத்தக்க, விடுதலை விரும்பிகளைத்தான், முதல் அணியில் பெற்றிருந்தார். சூழ இருந்ததெல்லாம் தொல்லை. சூதும் சூழ்ச்சியும்கூட உண்டு! சூறைக் காற்று மோதினாலும், அசையாது நின்றிடும் குன்றேபோல, உள்ளத்தில் கொள்கை கொண்டோர், களம் நின்றார்; கண்டார் வெற்றி; காண்கிறோம் கவின் அரசு பலவும் புதிது புதிதாக இன்று.

ஆங்கிலேயரின் சந்தை இது, அடிமைகளின் கூடாரம், காமக் களியாட்டத்தில் காலமெல்லாம் ஈடுபடும் கனதனவான் கூட்டமதைப் போட்டிக்கிழுத்து வாட்டமின்றி வெற்றிபெறும் வேந்தன் பரூக்கின் விளையாட்டு மைதானம் என்றுதான் எவரும் முன்னர் இயம்பினர் இகழ்ச்சியாக, எழில் குலுங்கும் நாடாம் எகிப்துதனை! இன்று? கண்டு நடுங்குநரும், காணாது வியப்போரும், அண்டிப் பிழைத்திட ஓர் அழைப்புண்டா என்று கேட்போரும்; நான் நண்பன்; நானே நண்பன், நான் தருவேன் கேட்பதெல்லாம், கேளாமல் நான் தருவேன்! என்று உந்திக் கொண்டும் முந்திக்கொண்டும் உறவு நாடும் வல்லரசுகளும், எகிப்து நோக்கி நின்றிடக் காண்கிறோம். அதுபோன்றே பல்வேறு தேயங்கள் பஞ்சையர், பராரிகள் என்று ஏசப்பட்டு வந்த நிலையினின்றும் தமை விடுத்துக்கொண்டு, "எமை மதிப்போர் நண்பர்; ஆதிக்கம் கொளவருவோர் மாள்வர்!'' என்று எக்காளமிடக் காண்கிறோம்.

தம்பி! தீவுகளெல்லாம் போர்க்கோலம் பூண்டுள்ளன! பரமண்டலத்துக்கு வழிகாட்ட வல்லார் என்றனர், மகாரியாஸ் பாதிரியாரை. அவர், தம் தாயகமாம் சைப்ரஸ் தீவு, விடுதலை பெற வழி அமைக்கத் துணிந்துவிட்டேன் என்று சூள் உரைக்கிறார்!

கர்த்தர் கருப்பரைப் படைத்ததே கடினமாக உழைத்து, நம்மை வெள்ளையராக்கத்தான்! - என்று ஆணவமாகப் பேசினர் முன்பு. இன்று நீக்ரோக்கள், விடுதலை முரசு அறையக் கேட்டு, இடி கேட்ட நாகமாகின்றனர், இறுமாப்பைத் தமக்கு இயல்பு ஆக்கிக்கொண்ட வெள்ளையர்! எங்கும் இன்று எமது அரசு! எமக்கு விடுதலை! எவர்க்கு எவர் அடிமை? என்ற முழக்கம் மிகுந்துவிட்டிருக்கிறது. அத்தகையதோர் சூழ்நிலையில் தமிழகம், தன்னிலை உணர்ந்து, தன்னரசு கேட்கும் வீறுபெற்று நிற்கிறது. விழாக் காணும் குழாம், தமிழகம் பெறவேண்டிய நிலையும் பெற்றால், கோலம் எங்ஙனம் பொலிவுடன் இருந்திடும் என்பதை எண்ணிப் பார்த்திடவேண்டும்; இன்பம் பெறமட்டுமல்ல, எழுச்சி பெற; வீரம்கொள; வெற்றிக்கு உழைக்க!

புத்தறிவு புகுந்துவிட்டது தம்பி, இனி அதை வீழ்த்த வல்லோர் இல்லை; தம் காலம் உள்ளமட்டும் கதையின் கருப் பொருளைக் காரணத்தோடு கழறக் கேண்மின்! கடவுள் நெறிக்கு உரமூட்டத்தந்தார் காதை! என்று சிலர் ஆச்சாரியாராகிப் பார்ப்பர்; என்ன பலன்? தோற்பர்! பண்டுமுதற் கொண்டதிது என்று கூறிப் பலனே இல்லை. இன்று உள நிலையே வேறு. எதற்கும் ஓர் விளக்கம் கேட்பர்! "எப் பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'' என்றார் வள்ளுவர்; ஆமெனக்கொண்டார் அறிவாளர். வான வெளியிலே வருவார் நாரதர், கானம் எழுப்பியே! என்றனர் கதைப்போர்! "யாம் விடுத்த செயற்கைக்கோள், சந்திரமண்டலத்தையும் கடந்து சென்றுளது'' என்கின்றனர் சோபித மிகுந்த சோவியத் நாட்டு விஞ்ஞான வித்தகர்கள். தாரை தழுவிட, வழுவினான் சந்திரன்! "தகாதது புரிந்தாய், தேய்வாய்'' என்று சாபமிட்டார் குருவும் கண்டு என்று சாற்றினார் புராணிகர் சந்திரன்பற்றி. "சற்றே பொறுத்திரும், ஆண்டு மூன்று ஆகட்டும்; ஆங்குக் குடியேறி அருமையாக வாழ்ந்திடலாம்; வழி அறிவோம்; முறை காண்போம்,'' என்று கூறுகிறார்கள் ரμய நாட்டவர். இந்நிலையில் "லீலைகளும் விளையாடல்களும், அவதார மகத்துவமும்'' எத்தனை நாள் விலை போகும்? வீண் முயற்றி! எல்லாப் புராணமும் எலிவாலைப் பிடித்தவன், ஏழ் கடலைத் தாண்டினான் எனும் கதைபோன்றதுதான் என்று, எவரும் துணிந்துரைக்கும் நிலைபெற்றார். கவிதையில் அழகுண்டு, மெருகுண்டு - சுவையுண்டு - என்று கூறிடும் வாரியாருக்கு, சுவைமிக்க அருங்கவிதை, வேறு பல உண்டன்றோ, பழந்தமிழர் அளித்துள்ள பாடலெல்லாம் போதாவோ, பதுமத்தில் உறைபவனை, பாஞ்சசன்யம் கொண்டவனை, நெற்றிக்கண் நேர்த்தியனை, அவன் பெற்றெடுத்த இரு மகவை, தவமாய்த் தவமிருந்து மணமுடித்த அம்மையரை, ஆமையாய், அழகற்ற பன்றியாய், கொல்லும் அரியாய், குரங்கேறி நின்றவனாய், இவ்வாறெல்லாம் வந்த இறையவனைக் காட்டுதற்கோ, உவமையும் உருவகமும், அணியும் பிறவும் பயன்படுத்துதல் வேண்டும்? குன்றும் களிறும், கொங்கும், தெங்கும், வண்டும், நண்டும், வாளையும், வாவியும், புன்னையும் புறவும், மயிலும் குயிலும், மாலை மதியமும் காலைக் கதிரோனும், இன்ன பிற அழகெல்லாம் இன் கவிதையாக்கி, எட்டுத்தொகை என்றும் பத்துப்பாட்டென்றும் தந்துளரே தமிழ்ப்புலவோர், போதாவோ என்று கேட்க, இளம் தமிழர் எழுந்துவிட்டார்; ஏற்றம் தமிழுக்கு; எங்கும் தமிழ் முழக்கம்! இந்நிலையில், ஆடலிலும் பாடலிலும் கூத்திலும் கூட்டத்துப் பேச்சிலும், பழமைகள் படும்பாடு, கொஞ்சமல்ல; பரிதாபம்! அன்றோர் நாள், அண்ணா! ஆடிக் காட்டிட அருங்காட்சி ஒன்றளிப்பீர் என்று எனைக் கேட்டார், உனைப்போன்ற உடன்பிறந்தார். தந்ததைத் தருகின்றேன், சிந்தை மகிழ்ந்திடும் காண்.

மாடி வீடு; கூடம்! செல்வர் அங்கு; அவரை அண்டி, வாடிக்கையாக வேலை செய்திடும் வீராச்சாமி! செல்வர் பேர், மாசிலாமணி. இருவர் பேசும் நிலைதான் காட்சி. பேச்சோ கொச்சை, எனினும் காணக் கருத்துகள் புதியன பலவும் உண்டு. தம்பி! படிக்கலாம்! நடிக்கலாம்; பகுத்தறிவு காண!

மாசிலாமணி: டே! வீராச்சாமி! ஏன், வேலைக்காரி, கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தா, உள்ளே.

வீராச்சாமி: கொஞ்சம் திட்டிப்போட்டேனுங்க. . . .

மா: ஏண்டா!

வீ: பாருங்க எஜமான், நான் குளிக்கணும்னு தண்ணி எடுத்து வைத்தேன். அவ போயி, கையைக் கழுவினா அதிலே அவ கையிலே அழுக்கு, அதைப் போயி அதிலே கழுவி, குளிக்கிற தண்ணியையே அசுத்தப்படுத்திவிட்டா.

மா: இதுக்காடா கோவிச்சிக்கிட்டே. அட மடப்பயலே! ஏண்டா! போன வருஷம் நீ, தஞ்சாவூர் போயிட்டு வர்ரேன்னு என்கிட்ட புளுகிட்டு, கும்பகோணம் போனேயேல்லோ. . . .

வீ: போனேனுங்க. . . . மா: எதுக்குடா? பன்னீரிலேயா குளிச்சே! ஏண்டா! சேத்திலே தானேடா புரண்டுட்டு வந்தே, எருமைபோலே! வீ: மாமாங்கம்ங்க. . . . .

மா: ஆமாங்க, மாமாங்கங்தானுங்க, ஆனா தண்ணி எப்படி இருந்தது, சேறுதானே. . . .!

வீ: ஆமாங்க. . . . .

மா: சுத்தமாவா இருந்தது?

வீ: இல்லிங்க. . . .

மா: அதைவிடவா, அவை கை கழுவின தண்ணி அசுத்தமாப் போச்சி. . . .

வீ: அழுக்குக் கையைக் கழுவினாங்க. . . .

மா: அட அறிவு கெட்டவனே! அவ, அழுக்குக் கையைக் கழுவினா, அதனாலே தண்ணி அசுத்தமாப் போச்சுன்னு சொல்லறயே, இந்தப் புத்தி அண்ணிக்கு எங்கேடா, போச்சு?

வீ: நான் மட்டும் இல்லிங்க. . . . ரொம்பப் பேரு. . . .

மா: அவனை எல்லாம் நான் போயிக் கேட்கவா? நீ, ஏண்டா, புரண்டே அந்தச் சேத்திலே?

வீ: தெரியாமெத்தான். . . .

மா: ஆயிரமாயிரமா விழுந்திங்களே குளத்திலே, தண்ணியோ குறைச்சலு, அதிலே இவ்வளவு பேரும் போய் விழுந்தா, குழம்பிச் சேறாத்தானே போகும். . .

வீ: ஆமாங்க. . .

மா: குளிக்கப்போயிச் சேத்தைப் பூசிக்கொள்றவனுக்கு என்னடா பேரு. . . ?

வீ: தெரியாதவன்னுதான் சொல்லணும். . .

மா: நல்லா, பச்சையாத்தான் சொல்லேண்டா, மடப் பயலே! வேலைக்காரி கையைக் கழுவிட்டா, அந்த அழுக்கு, தண்ணியை அசுத்தப்படுத்திவிட்டதுன்னு சொல்லமட்டும் அறிவு இருக்கு. மகாமகம் கதை தெரியுமாடா உனக்கு. . .

வீ: தெரியும்ங்க. பாவத்தைப் போக்கிக்க 12 வருடத்துக்கு ஒரு முறை போறது. . . மா: பழைய கணக்கைப் பைசல் செய்தூட்டு, புதுசா தயார் செய்றதுக்கு? ஏண்டா, அப்படித்தானே, அதைக் கேட்கலே, மகாமகத்துக் கதையைக் கேட்டேன். வீ: புண்யம் வருதுங்களாம், குளிச்சா.

மா: புண்யம் வருவதும், வராததும் தெரியறதில்லை சரியா, ஆனா ஊர்லே கால்ரா வருது. அது தெரியுது விளக்கமா. . . எவனெவனோ என்னென்ன நோய் பிடித்தவ னெல்லாமோ, விழுந்து எழுந்திருக்கிறான் அந்தக் குளத்திலே அதிலே போய் குளிக்கிறதாம், அதுக்கு பேறு புண்யமாம், என்ன புத்திடா, டே!

(ஒரு, ஊர்ப் பெரியவர் வந்து உட்காருகிறார்)

("சதாசிவம்! சம்போ! மகா தேவா!'' என்று கூறிக் கொண்டு, கட்டுக் கட்டாக விபூதி; கையில் சில புத்தகங்கள். மாசிலாமணி அவரைப் பார்த்துவிட்டு; பிறகு வீராசாமியைப் பார்த்து. . .)

மா: டே! வீராசாமி! யாருடைய அது. . .

வந்தவர்: நமஸ்காரம். நான், இந்த ஊர்தான், பிரசங்க பூஷணம் பிரம்மானந்த மூர்த்தி ஸ்வாமிகள்னு பேர்.

மா: இங்கே, என்ன காரியமா வந்தீர்கள். . .?

வந்: இங்கே வராமல் வேறே எங்கே வரமுடியும்? தாங்கள் தானே, எங்களைப்போன்றவளை, ஆதரித்து இரட்சிக்க வேண்டியவா.

மா: டே! வீராச்சாமி, எதற்கு வந்ததார், என்ன விசேஷம்னு கேட்டு, பதில் சொல்லி அனுப்பு போ. . .

வந்: அவனுக்கு என்ன தெரியும்? நான் இந்த ஊரிலே புராணப் பிரசங்கம் செய்யப்போகிறேன். அதற்குத் தாங்கள் ஆதரவு தரவேண்டும்.

மா: இப்ப, இப்படிக் கிளம்பிவிட்டிங்களா? உங்களைக் கூப்பிட்டனுப்பின காலம் போயி, இப்ப நீங்களாகவே கிளம்பிவர ஆரம்பிச்சாச்சா. சரி, சரி, மார்க்கட் ரொம்ப டல்லாயிடுத்து போலிருக்கு.

வந்: நிலைமை ஒரு விதத்திலே அதுதான். ஆனால், நான் புராணத்திலே சில புது உண்மைகளை, சில அற்புதமான விஷயங்களைக் கண்டுபிடித்து இருக்கிறேன்; ஊரிலே இப்போ இந்தச் சுயமரியாதைக்காரா கொஞ்சம் தொந்தரவு தருகிறா பாருங்கோ, அவாகூட, என்னுடைய புராணப் பிரசங்கத்திலே தப்புக் கண்டுபிடிக்க முடியாது. சகலருக்கும் பிடிக்கும்படியா, ஒருவருக்கும் மனக்கஷ்டம் வராத விதமா இருக்கும் நம்ம பிரசங்கம்.

மா: வெண்டைக்காய்போல, வழவழப்பு இருக்கும்னு சொல்லுய்யா; அதானே! பணத்துக்குத்தானே!

வந்: பணத்துக்காக அல்ல. சிவ! சிவ! பணம் எதற்கு? என்ன பிரயோஜனம்? யார் அதை மதிப்பா? காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சொல்லி யில்லையோ. . .

மா: ஆமாம்! காதற்ற ஊசி கடை வழி வரத்தான் செய்யாது, காதறுந்த ஊசியை யாரு வாங்குவாங்க. போய்யா எழுந்து.

(புராணிகர் எழுந்து போகிறார். பிறகு வேலையாளிடம்.)

மா: இவனுங்க தொல்லை பெரிசாப்போச்சு. இவனுங்களுக்கு வேறே பிழைப்பு இல்லை, இப்படிப் புளுகிக்கிட்டு, ஊரைக் கெடுத்துகிட்டு இருக்கறானுங்க. . .

வீ: புராணம், படிச்சாலும் கேட்டாலும், கைலாயம் போவலா முங்களாமே.

மா: கைலாயம் போவணுமாம் கைலாயம்! டே வீராசாமி! கழுதைகூடப் போயிருக்குடா கைலாயம். . . ஏண்டா! நான், போக்கிரித்தனமாகப் பேசுவதாக நினைக்கறயா, நிஜத்தைச் சொன்னேண்டா. ஒரு புராணம் இருக்கு, அதுபோல.

வீ: கழுதை, கைலாயம் போனதாகவா?

மா: ஆமாண்டா, கழுதை, எருது, எல்லாம் போனதாகக் கதை, புண்ய கதை இருக்கு. ஒரு ஆதித் திராவிடப் பெண்ணு, புல்வெட்டிப் பிழைக்கிறது.

வீ: உம்.

மா: ஆதித்திராவிடப் பெண் வேறே என்னடா செய்யும், பிழைப்புக்கு. அது என்ன ஐயமார் வீட்டுப் பெண்ணா. நாட்டியம் ஆடி, மெடல் வாங்க; புல் செதுக்கி ஜீவிக்கிறது வழக்கம். ஒரு நாள் ஒரு பிள்ளையார் கோயில் பக்கமா, புல்லைக் கொட்டி வைச்சுது. யாரு?

வீ: அந்தப் பொண்ணு.

மா: அப்ப, கேளுடா, கழுதை எருது இரண்டும் புல்லை மேய ஆரம்பிக்கவே, அந்தப் பொண்ணு, இரண்டையும் அடிச்சு விரட்டிச்சி. எதை?

வீ: கழுதையும், எருதையும்.

மா: கழுதையும் எருதும், அந்தக் கோயிலைச் சுற்றிச் சுற்றி ஓட ஆரம்பிச்சுது.

வீ: அடிதாங்கமாட்டாமே. . .

மா: அடியும் தாங்க முடியல்லே, புல்லையும்விட மனம் இல்லை. ஓடினபோது, புல்லும் கொஞ்சம் கொஞ்சம் கீழே விழுந்தது.

வீ: ஓடின வேகத்திலே.

மா: ஆமாம்! இவ்வளவுதாண்டா நடந்தது. உடனே புள்ளையார் கோயிலைச் சுற்றி வலம் வந்து, அருகம் புல்லைக்கொண்டு கழுதையும் எருதும் அர்ச்சனை செய்ததுன்னு, சொல்லி, வந்துவிட்டார்கள் சிவகணங்கள்.

வீ: வந்து?

மா: வந்து, என்ன? கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து, தேர் திருவிழாச் செய்து, தேவ பூஜை எல்லாம் செய்து, பக்திமான்க, எங்கே போகிறாங்க? கைலாயத்துக்குத்தானே, அந்தக் கைலாயத்துக்கு இந்தக் கழுதையையும், அழைச்சி கிட்டுப் போனாங்க. . .

வீ: எஜமான், எவன் எழுதினான் இது மாதிரி கதையை? ரொம்ப முட்டாத்தனமா இருக்கே. . .

மா: வேணுமானா, யாராவது புராணம் படிக்கிறவனிடம் கேட்டுப்பாரு, இப்படி ஒரு கதை இருக்கா இல்லையான்னு. இதுமட்டுமாடா; ஒரு ஆசாமி, ஒரே காமவெறி பிடித்த வனாகி, தன் தாயாரையே. . .

வீ: கொன்றுபோட்டுவிட்டானா.