அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"இந்தியர்' ஆகின்றனர்!! (1)
1

கழகத்தைக் குலைக்கத் திட்டம் -
விலகியோர் குரல் -
டில்லியின் போக்கு -

தம்பி!

கொளுத்தும் வெயில் கொட்டும் மழை கடுங்குளிர் கருக்கல் பேய்க்காற்று இவை எதனையும் பொருட்படுத்தாது, அவர்கள், கருமமே கண்ணாயினர்; பழச்சாறு பருகினர்; பூங்காற்றுத் தேடினர்; புதுப்புனலாடினர்; இசைகேட்டு இன்புற்றனர்; களிப்புத்தர வல்லனவற்றிலே எல்லாம் மாறிமாறி ஈடுபட்டனர்; மற்றவர்கள். அவர்கள், எல்லாம் பெற்றாகிவிட்டது. இனி நமக்குக் குறையேதும் இல்லை; வாழ்க்கை ஒரு இன்பப் பூங்காவாகி விட்டது; கேட்டது கிடைக்கிறது; தொட்டது மலருகிறது; நினைப்பது நடக்கிறது; இனி நாம் பெற்றவைகளைச் சுவைத்து மகிழத்தான் காலத்தைப் பயன்படுத்த வேண்டும்; கொளுத்தும் வெயில் எனில், குன்றேறிக் குளிர்ச்சி நாடுவோம்; கடுங்குளிர் எனில், கம்பளம் உண்டு. அழகியதாய், வசதியதாய், குளிரைப் போக்கிக் கொள்வோம்; பேய்க்காற்றும் பெருமழையும் குடிசை களைப் பிய்த்தெறியும், மண் சுவரினைக் கீழே சாய்த்திடும், நம்முடைய கோட்டைமீது வீழ்ந்து அவை தம் வலிவிழந்து போகுமேயன்றி, வேறென்ன கெடுதலைச் செய்திட இயலும்? எனவே, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம், அடையவேண்டியதை எல்லாம் அடைந்துவிட்டோம் என்று அகமகிழ்வோம் என்று இருந்தனர். சிலர் மட்டும், ஓய்வுக்கு நேரம் இல்லை; உறக்கமோ வருவதில்லை; இடுக்கண்கள் இருப்பதாலே எடுத்த காரியத்தை முடித்திட மேலும் மும்முரமாகப் பணியாற்றிட வேண்டும்; எனவே! கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கடுங்குளிர், பேய்க்காற்று, கருக்கல் எனும் எதனையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியபடி இருந்தனர். மற்றவர் எள்ளி நகையாடினர். "ஏடா மூடா! ஏன் இந்த வீண் வேலை! நான்தான், நீயும் மனித இனம்தானே என்றெண்ணி, மனம் இளகி, எண்ணற்றவர்கள், இருந்திட ஏற்றதாம் என் எழில் மணிமாடத்தில் ஆனினம் தங்கிட அமைந்ததோர் இடத்தினிலே, சென்று தங்கிடுவாய், செய் தொழிலைக் காட்டிடுவாய்; நல்ல ஊழியன் என்ற பெயரெடுத்து நாலாறும் பெற்றுக் காலத்தைக் கடத்திடுவாய்; உண்ணத் தந்திடுவேன், உழல்வானேன் வயல்தேடி; வண்ணம் இல்லை எனினும், இருந்ததுதான் இந்த ஆடை; அங்கம் மறைத்திட அது போதும் அல்லவோ சொல்; தந்திட நானிருக்கத் தவிப்பானேன் வேறுபெற; வந்திடு என் முற்றம்; வாழ்வளிக்க முடியும் என்னால்; வதைபட்டுச் சாகாதே, வரம் தந்தேன் உதறாதே!'' என்று பேசினர். ஆனால், அந்த உழைப்பாளிகளோ, ஓயவில்லை, உறங்கவில்லை, மயங்கவில்லை, மனம் மாறவில்லை. வேலை! வேலை! வேலை! செய்தவண்ணம் இருந்தனர்.

வெட்ட வெளி! பொட்டல் காடு! தண்ணீர் கிடைக்காத வறண்ட திடல்! - இருக்க இடம் இதிலாம்! எழில் இல்லம் இவ்விடமாம்! சுற்றும் மணற்பரப்பு செடி கொடியும் வாழாது! இங்கு வயலாகும், வாழ்வளிக்கும் வகை பெறுவோம் என்று கதைக்கின்றார், கருத்தறியாச் சிறார்போலே!! வெட்டி வரும் வேளையிலே பாறை இருந்திடுமே - பெயர்த்தெடுக்கும் கருவி எங்கே? பெரும் பள்ளம்தனைத் தூர்க்க எளிதாகுமோ இவரால்! உவர் மண்ணால் சுவர் எழுப்பி, உயரம் கண்டதுமே! ஒரு நொடியில் சாய்ந்திடாதோ, கூரைமேல் ஏறியதும், கதவெங்கே, தாள் எங்கே? கனமான பூட்டுமுண்டோ? ஓடுண்டோ, ஒய்யாரம் தரவல்ல பலகணியும் தானுண்டோ! கள்ளிக்கும் சுள்ளிக்கும், கடும் விஷப்பாம்பினுக்கும் அல்லாமல், கனி குலுங்கும் தருக்கள் வளருதற்கோ, தக்க இடம் இஃது! ஈதெல்லாம் அறியாமல், ஏதேதோ எண்ணமிட்டு ஓயாது உழைக்கின்றார், ஒரு பலனும் காணார் காண்!! - என்று "உடையவர்கள்' இகழ்ச்சியுடன் பேசி நின்றார்; இவர்களோ அவர் வார்த்தை எமக்கல்ல என்று எண்ணி, இதயம்தனில் பதிந்த "எழிலிடம்' அமைந்திடும் ஓர் ஏற்றமிகு செயலதனில், ஆற்றலெல்லாம் செலவிட்டார்.

பாறை கண்டபோது பதறினார் இல்லை அவர்; பிளந்து பெயர்த்தெடுத்து, பொடியாக்கி, கீழ்பரப்பி, வலிவூட்டும் வகை பெற்றோம், இல்லத்தின் அடித்தளம் தனக்கென்று மகிழ்வுற்றார். கல் உடைக்கக் கரம் உண்டு; கருத்திலே உறுதி உண்டு; என்ன இனி நமக்குக் குறை; எழுப்பிடுவோம் நம் இல்லம்; எத்தனைதான் அழகியதாய் இருந்திடினும் மற்றதெல்லாம் இன்னொருவர் இடமன்றோ; இருந்திடலாம் என்கின்றார்; தயவன்றோ காட்டுகின்றார்; கொத்தடிமை ஆக்குதற்கே கூவி அழைக்கின்றார்; இத்தரையில் நமது இல்லம் இனிதாய் அமைத்திட்டால், என் இல்லம்! எழில் இல்லம்! என்றெண்ணி மகிழ்ச்சியுடன் இருந்திடலாம் காலமெல்லாம். இன்று பாழ்வெளியாய் இருந்திடும் இவ்விடத்தில், முன்னம் ஓர் நாளில், உலவினராம் முடியுடையோர்; படைகடந்த இடம் இதுவாம்; பண்புக்குப் பெட்டகமாம்; பார்புகழ வாழ்ந்தனராம்; பலநூலும் கண்டனராம்! அந்த இடம் தனக்கே, நாம் உரியர் என்பதனை இன்று அறிந்திட்டோம். இனி ஏற்பது இகழ்ச்சி அல்ல எனக் கூறித், தந்தது தின்று, தெந்தினம்பாடித், தருக்கரின் தாளில் தலையினை வைத்து இழுக்கினைத் தேடிக்கொண்டிடப் போமோ! செச்சே! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று நவின்றாரே கவிஞர்பிரான்; நமக்கும் நற்பாடம், அக்கவிதை தாராதோ!! "நாமிருக்கும் நாடு நமது' என்பது கண்டோம் என்ற கவிதை, நமக்கும் சேர்த்தன்றோ! ஏன் இனி நமக்கு இச்சகம் பேசிப் பிழைத்திடும் பிச்சை வாழ்வு! ஏற்கோம் இனி இழிநிலை - எடுப்போம் புதுமுயற்சி - கட்டிமுடிப்போம், எமதிடம் - என்று சூளுரைத்தார். எதிர்ப்பட்டோர்கள் இடி இடியெனச் சிரித்து, "கண்டீரோ பெருவீரர்! அறிந்தீரோ இவர் தீரம்!! குன்று பெயர்த்தெடுத்துச் செண்டு ஆக்கப்போகின்றார்! நின்றிடுக என்று கூறி, கடல் அலையைத் தடுத்து நிறுத்தப்போகின்றார்! மணலெல்லாம் குவித்தெடுப்பார், மரகதக் குவியலாக்கிடுவார்! நத்தையில் முத்தெடுப்பார்; தாழையில் வாழை காண்பார்; தந்தம் பெற்றிடுவார் தத்திடும் அணில் அதனில்; ஏ! அப்பா! இவர் ஆற்றல், எவர்க்குண்டு? கண்டுரைமின்!'' - என்று எவரெவரோ ஏளனம் பேசி நின்றார். பணிபுரியும் போக்கினரோ "நீராடி நீந்துகையில், நீர்புரளும் மீனினம் கொத்திடும் விதமாக இவர் ஏதோ சத்தமிட்டுக் கிடக்கின்றார், நமக்கென்ன இதுபற்றிக் கவலை என்று கூறுவதுபோலாகித் "தூற்றுவோர் தூற்றட்டும் புழுதிவாரி வீசுவோர் வீசட்டும் நம் கடன் பணிசெய்து கிடப்பதே'' அவர்க்குரிய ஆற்றலை அவர் காட்டி நிற்கட்டும்; நம் கடமை நாமறிந்து நமது இல்லம் அமைத்திடும் ஓர் நற்பணியில் இறங்கிடுவோம்; வண்டாடும் சோலையிலே வண்ணமயில் ஆடுகையில், வளைந்த வால்காட்டித் தாவிடுமாம் மந்தியுந்தான்; மந்தி நடந்திடும் ஓர் நாட்டியமே பாடமாகக் கொண்டிடுவோம் என்று அந்தக் கோலமயில் எண்ணிடுமோ? ஏதேதோ இன்ப நினைவுடனே ஏந்திழையாள் இடுப்பில் குடம் வைத்து, இன்பம் இதயம் துவைத்துச் செல்கையிலே, குப்பை கிளறிடும் ஓர் குக்கல் காணின், நின்று, என்னே! இதன் திறமை! எதற்குண்டு இவ்வாற்றல்! என்றா எண்ணி நின்று எக்களிப்பு கொள்கின்றாள்? இவரோ "இருப்பவர்கள்' - இருப்பதுவோ பறித்தவைகள் - நமக்கோ இடம் இல்லை, நம் இடமோ மாற்றாரால் பாழாகிக் கிடக்கும் இடம்! நாம் அதனை அறிந்த பின்னர், திருத்த, புதுப்பிக்க, திறம்பெற்று பணிபுரியத் துடித்திடுவதல்லாமல், தூற்றல் கணைதொடுத்து தூய்மையினைக் கெடுத்திடுதல் நன்றாமோ! அழைக்கிறது, அறம், அன்பு!! ஆற்றலெல்லாம் அவை தமக்கே! என்று எண்ணி, ஈடுபட்டார் எடுத்தபணியதனில். பாழ்வெளியில் ஓர் பசுமை பாங்குறவே வந்தது காண்! வெட்டவெளியதுவும், வேற்றுருவம் பெற்றது காண்! சின்னஞ் சிறு கூடம் - கேணி ஆங்கொன்று - அதன் பக்கம் பூச்செடிகள் - மாடியும் அமைத்திடலாம், அடித்தளம் வலிவுற்றதென்பதனால்; காற்றும் வெளிச்சமும் களிப்பூட்ட வருமாறு கட்டினர் காண் புது இல்லம்!

அழகுண்டு அளவறிந்து; வசதியுண்டு, வகை அளவு; இந்த முறையில் நல்லில்லம் அமைத்து, அவரும் இன்புற்று, நம் உழைப்பு வடிவம் பெற்று, நமதாகி நின்றது காண்! எவர் எண்ணினர் இது இயலும்! என்று முன்னம்! என்னென்ன ஏச்சுகள், எத்துணை ஏளனங்கள்! கூடை எடுத்து நாம் சென்றிடுவோம், குரலெழுப்பி, கல் வீசிக் குலைத்திடுவார் நம் ஆர்வம். எழுப்பிய சுவர்தன்னைக் கைத்தடியால் சாடி, "ஏடா! பயலே! இஃது இரு நாட்கள் நின்றிடுமோ?'' என்று கூறி, அச்சம் எழச்செய்து மகிழ்வுற்றார். கட்டியவர் எவர் அப்பா? கல் உடைக்கும் சொல்லரசா? அன்றி, மண்பிசையும் மன்னரா? எவர் திட்டம் இட்டவர்கள்? இளங்கோவா, கடுங்கோவா? குழி தோண்டி நின்றவர்கள், கூலி மிகப் பெற்றனரோ? கழி வாங்கச் சென்றவர்கள், கணக்குக் காட்டினரோ, சரியாக? செம்பியன் எனும் உங்கள் தோழன், செப்பினானாம், மற்றவர் மரப்பொம்மை, நானே மாமேதை! என் திறமே, இவ்வில்லம்!! என்றெல்லாம். அறிவீரா! ஏன் அந்த ஆணவம் என்று கேட்டுக் கொதித்தானாம், இரும்பொறையன், உண்மையா? என்னமோ, பிள்ளைகளா! எப்படியோ ஒரு வழியாய் இல்லம் அமைத்தீர்கள்! இனித்தான் இருக்கிறது, உமக்கு இன்னல் அடுக்கடுக்காய்; இடம் பிடிக்க முனைவோர்கள், இடித்துக்கொள்வரன்றோ! என்னால் இது என்பதனால், எனக்கோ எல்லாமென்று, எவனேனும் எக்காளம் எழுப்பிடலாமன்றோ! நான் எழுப்பியது இந்தச் சுவர் - இதை நானே இடித்திடுவேன் என்று இறுமாப்பாளன், எடுத்திடுவான் கடப்பாரை!! ஆன செலவு அதிகம் காட்டி, அடித்தான் இலாபம் இவன் என்று, ஒருவன் மற்றொருவன்மீது உமிழ்ந்திடுவான் கோபத்தை! கலாம் விளையும் இல்லத்தில், கண்டவர் ஏசிடுவார்!! கார் தந்த நீர்த்துளியால் கலம் நெல் விளைவதுண்டு - கருத்தறியாதார் வயலுக்கு உரியரென்றால், களமன்றோ களமாகும்!! என்ன நேரிடுமோ? எத்தனை நாள் இவ்வாழ்வோ? எனக்கென்னவோ இஃது நீடித்த இன்பம் எனத் தோன்றிடவே இல்லை, சொன்னேன். கூடி வாழ்ந்திடும் குணம் கொண்டோர் என்று இன்று கூறுகின்றீர், கேட்கின்றேன்; ஆயின், குமுறும் உள்ளத்தான், குறை காணும் எண்ணத்தான், குலவி இருக்கின்றான்; ஓர் நாள் குத்திக் குடலெடுக்கத் துடிக்கின்றான்! அறிந்ததை அறைந்தேன்; ஆசீர்வாதம், வாழ்க! - என்று பெரியவர்கள் சில பேர்கள் பேசினார், இல்லம் கண்டு. கட்டி முடித்திட்ட களிப்பதனில் மூழ்கியவர், கலகமூட்டும் பேச்சுக்குக் காதும் கொடுக்கவில்லை; கல்லெல்லாம் கதை சொல்லும், இல்லம் இஃதன்றோ! மண்ணதனில் சிந்தியது மழை நீரோ? இல்லை, இல்லை! செந்நீரும் கண்ணீரும் கொட்டியன்றோ, செம்மை கண்டோம். இந்த இல்லத்தில், அன்பு அரசோச்சும், அறிவு ஒளி அளிக்கும்; அறம் வழி காட்ட, ஆற்றல் நடைபோட, அனைவரும் நாம், இலட்சியம் அடைந்திடும் முறை வகுக்க, பாசறையாக அமைந்தது காண் நமது இல்லம்; அனைவருக்கும் இது இல்லம் - அனைவரும் அமைத்த இல்லம் - அவர்க்கு எது இவர்க்கு எது என்று அளவு காணும் முறைக்கு இங்கு அணுவளவும் வேலை இல்லை. இகல் வெல்லவேண்டுமெனில், நம் இதயங்கள் ஒன்றாகி, வெவ்வேறு உருவங்கள், எண்ணமோ ஒன்றேதான் என்று எவரும் எண்ணிப் போற்றிட, வாழ்ந்திடுவோம். இல்லம் அமைத்ததுவும், இருந்து மகிழ்ந்திடவா? இல்லை! இல்லை! மன்றமாக்கி, இம்மனையில் நாம் இருந்து, கொண்ட நம் குறிக்கோள் தனக்காக, தொடர்ந்து பணியாற்ற, தக்கமுறை, வழி பலவும், கண்டறிய, திட்டமிட! இந்த எண்ணம் நம்மை ஆட்கொண்டதென்றால், இடத்தில் இடம் காண, எண்ணுவரோ, எவரேனும்! கேணித் தண்ணிர் இறைத்து, கீழ் உள்ள கற்களை எடுத்துப் பங்குபோட, கருதுபவர், கசடரன்றோ! நாமென்ன இந்த விவரமெல்லாம் அறியாமல், வீண்வாதம், மனபேதம், கொண்டிடக் கடையவரோ? நம்மில் சில பேர்கள் கூடம் இருந்திடுவர், அவ்வேளை, திண்ணையே நமக்குக் கூடமாய், அமையாதோ! தோட்டத்து வேலைதனைத் துரைசாமி கவனித்தால், கூட்டி மெழுகிட குப்பன் முன்வாரானோ? கூட்டி மெழுகிடும் குப்பன், மற்றோர் நாள், கூடத்தில் இருக்கையிலே ஓய்வாகச் சாய்ந்துகொண்டு, ஒரு முழுங்கு தண்ணீர் பருகிடத் தருவாய் என்று அண்ணலை அழைத்திட்டால், கேணி வேலை வேணி பார்ப்பாள், என் வேலை அஃதல்ல என்றா கூறிடுவான். நாமெல்லாம் ஓர் குடும்பம் - நமது இல்லம் இக்கூடம் - இங்கு, நான் மேல், நீ அல்ல என் பேச்சுக்கே இடமில்லை என்றெல்லாம் எண்ணி அவர் இதயம் களித்திருந்தார்.

ஏதேதோ திட்டமிட்டோம், எப்பலனும் கிட்டவில்லை. சிண்டு முடிந்துவிட்டோம், சிக்கறுத்துக்கொள்கின்றார். கலகம் மூட்டுகிறோம், கைகொட்டிச் சிரிக்கின்றார். கண்காட்டி அழைக்கின்றோம், கைவீசிப் போகின்றார். ஏதேது இந்த இல்லத்தார், ஏற்றம் மேல் ஏற்றம் பெற்று, எடுத்த காரியம் முடித்து, இன்பத் திராவிடம் அமைத்து, எளியோர் எனினும் வலியோர் பெற்றிடா வெற்றிதனையும், கூடிப்பணியாற்றி, கொள்கை காத்து நின்றால், பெற்றிடுவார் என்ற பேருண்மைதனை நிலைநாட்டி விடுவார் போலும் எங்ஙனம் சுண்டிடுவோம். இவர் வெற்றி பெறுவதனை! என்னாகும் நமது முன்னைய பேச்செல்லாம்! மண்ணாகிப் போச்சுது பார், மற்றவர் பேச்செல்லாம். கண்ணீர்த் துளிகளன்றோ, காரியத்தை முடித்து விட்டார், என்றெல்லாமன்றோ ஏசுவர்; மற்றவர்கள். நாம் இதற்கு என் செய்வோம், அணிவகுப்புதனைப் பிளக்க ஆயிரத்தெட்டும் செய்தோம்; அத்தனையும் ஆடிக் காற்றிடைப்பட்ட பஞ்சாகிப் பறந்தனவே! பேதம் வருமென்று, பேராவல் கொண்டிருந்தோம் - அண்ணன் தம்பி என்று அவர் குலவுகின்றார்! ஐயய்யோ! ஆபத்து! நாம் அழிந்திடுவோம், இது வளர்ந்தால், என்ன விலை கொடுத்தேனும், எப்பாடுபட்டேனும், சின்னத்தனமான செயலெல்லாம் செய்தேனும், பொன்னைத்தான் இழந்தேனும், கண்ணே! மணியே! என்று கனிவு பேசிப் பார்த்தேனும், உடைத்தாகவேண்டும் இந்த உள்ள உறவுதனை; பிளந்தாக வேண்டும் இந்தப் பெரும் படையை; அணிவகுப்பை என்று எழுந்தனர், மனம் பொறாத மாற்றார்கள் - கன்னிப் பெண், கண்ணுக்கு மையிட்டு, கார்க் கூந்தல்தன்னிலே மணமல்லிதனைச் சூடி, சின்ன இடை துவள, அன்ன நடை நடந்து, மணப்பந்தல் போகுமுன்னம், மணவாளன் காணுமுன்னம், கண்ணாடி முன் நின்று, கோலம் திருத்த எண்ணிச் சென்றிடும் வேளையிலே, கண்ணாடி அதன்மீது, கல்வீசி ஒரு சிறுவன், உடைத்திட்ட பான்மைபோல, மாற்றாரின் திட்டம், மனையில் கலாம் விளைத்து மகிழ்ச்சிதனைக் குலைத்து, உறவு முறித்து, ஓர் ஊனம் ஏற்படச் செய்துவிட்டது, சென்ற திங்கள் ஒன்பதாம் நாள் - அந்நாள் துந்துபி முழக்கினர் மாற்றார், துடியாய்த் துடித்தனர், இல்லம் கண்டோர் - இன்பத் திராவிடம் காணப் பாசறை அமைத்தோர் - திராவிட முன்னேற்றக் கழகத்தினர் - நீயும் நானும் - நமது உடன் பிறப்பாளர்களாகிவிட்ட இலட்சக்கணக்கான திராவிடரும்.

ஆனால், தம்பி! மாற்றார் திட்டமிட்ட அளவுக்கோ, விரும்பிய வகையிலேயோ, நமது கழகத்துக்கு ஊறு நேரிட்டு விடவில்லை என்பது இந்த ஒரு திங்களிலேயே தெள்ளத் தெளியத் தெரிந்துவிட்டது. ஏற்பட்ட ஊனம், நமக்கு அதிர்ச்சி தரத்தக்கதாகத் தெரிவதற்குக் காரணம், அதன் அளவு அல்ல; நமது குடும்பம் அத்துணை பாசத்தால் கட்டுண்டு இருப்பதால், இதிலே சிறு பேதம், கீறல், வெடிப்பு, பிளவு, ஏற்பட்டாலும் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நாம் படும் வேதனையைக் காணும் அரசியல் வட்டாரத்தினர் பலரும் வியப்படைகின்றனர். இதென்ன இப்படிக் கலங்குகிறார்களே! ஒரு கட்சி என்றால், சிலர் விலகுவதும், வேறு சிலர் புகுவதும், சாதாரண நிகழ்ச்சிதானே!! இதற்கும் பிறகு இருக்கத்தக்கது தானே, கட்சி என்ற பெயருக்கே பொருத்தமுள்ளதாகக் கருதப்படும் - என்று கூறுகின்றனர் - கேட்கின்றனர். எனக்கேகூட, அவர்கள் அப்படிக் கேட்கும்போது வெட்கமாகக்கூட இருக்கிறது. இருப்பினும் என் இதயம்தான், நீ அறிவாயே தம்பி! எவர் நம்மை விட்டுப் பிரியினும், என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இது தெரிந்துதான், அண்ணா! சிலர், உன்னை மிரட்டுகிறார்கள்? என்றுகூடத் தம்பியரில் சிலர் கூறுகின்றனர்.

தம்பி! சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்ட மொன்றில், ஆர்வம் கொந்தளிக்கும் நிலையில் பேசிய தம்பி ஒருவர், சொன்னார், "அண்ணா! ஆயாசப்படாதீர்கள்! சிலர் உம்மைவிட்டுப் பிரிந்தனர்; நானும்தான் வருந்துகிறேன்; ஆனாலும் என்ன? நாங்கள் இருக்கிறோம் அணி அணியாக, உம்மை அண்ணாவாக ஏற்றுக்கொண்டவர்கள். அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்; கழகத்தின் ஆணைப்படி நடப்பவர்கள், தம்பிமார்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள், அண்ணா! கவலைப்படாதீர்கள்!'' என்று பேசினார். இனிய இசையாக இருந்தது அந்தப் பேச்சு - ஆனால் ஒரு கணம்தான் - மீண்டும் அந்தப் பழைய நினைப்பு - பழைய கவலை! நான் பேசும்போது சொன்னேன்: "எட்டுக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய், திருவிழா காணச் சென்றபோது, ஒரு குழந்தை காணாமற் போய்விட்டால், பரவாயில்லை. எட்டில் ஒன்று போனால் என்ன. ஏழு இருக்கிறதே, என்றெண்ணியா திருப்தி அடைகிறாள்? இல்லையே! ஏழு பிள்ளைகளையும், திக்காலொருவராக அனுப்பி, காணாமற்போன பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி அல்லவா அனுப்புவாள்! அதுபோல, என்னுடன் எண்ணற்றவர்கள் உள்ளனர். ஆயினும், அதனால் பிரிந்தவர்கள்பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடிகிறதா? எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற தாய், காணாமற்போன பிள்ளையைக் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி, மற்ற ஏழு பிள்ளைகளைக் கேட்டுக்கொண்டது போலத்தான், என்னுடன் இருக்கும் தம்பிமார்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் - விலகிய, வழி தவறிய அந்தத் தம்பிகளையும் தேடிக் கண்டுபிடித்துத் திருத்தித் திரும்ப அழைத்துக்கொண்டு வாருங்கள்!'' என்று.

தம்பி! நான் சொன்னது கவைக்காக அல்ல - என் மனம் அப்படி.

விலகியவர்களிடம், பாசம் குறையாமல் இருப்பதற்கு, வேறோர் காரணமும் இருக்கிறது - அவசியம் கூடத்தான் இருக்கிறது.

நாம் ஈடுபட்டிருப்பது, தாயக விடுதலைக்கான அரும் பணியில். இதற்கான ஆற்றல் அளித்திடவல்ல எவரையும் நான் இழந்துவிட விரும்பலாமா? வாட்போர் புரியும் வீரன், குத்தீட்டியையும் கூடத்தானே வைத்திருக்கிறான். அஃதே போலத்தான், நாட்டு விடுதலை எனும் நற்பணிக்காக, அனைவரும் தேவைப்படுகிறார்கள். இதிலே இழப்பின் அளவும், தரமும் அல்ல, இழப்பு என்பதே இதயத்துக்கு அதிர்ச்சி தரத் தக்கதுதான். கிடைக்கும் வாய்ப்பினை எல்லாம் ஒன்று திரட்டி, களம் செல்லவேண்டிய வேளையில், களத்தில் பயிற்சி பெற்றவர்கள், அதைவிட்டு விலகுவது என்றால், மனதுக்குச் சங்கடமாகத்தானே இருக்கும்?

தலைவிரி கோலமாக ஓடி வருகிறாள் ஓர் மூதாட்டி - வாழ்ந்தவள் இன்று வதைபடுகிறாள் என்பது பார்க்கும்போதே புரிகிறது. இரத்தம் சொட்டும் வாயுடன் ஓநாய் அவளைத் துரத்திக்கொண்டு வருகிறது. அலறுகிறாள் அம்மூதாட்டி, அந்தக் கதறல் கேட்டு, வேறோர் புறமிருந்து ஓடோடி வருகிறான் ஓர் வீரன் - கையில் வேல்கொண்டு! அவனை நோக்கி ஓடுகிறாள் அந்த அபலை. தன்னைத் துரத்தும் ஓநாயைத் திரும்பிப் பார்க்கிறாள் - திகில் கொள்கிறாள் - ஆனால் எதிர்ப்புறம் பார்க்கிறாள், வேல் உடையோன் வருகிறான் - அப்பா! காப்பாற்று! என்று கூறியபடி கீழே விழ்கிறாள். ஓநாயைக் கொன்று மூதாட்டியைக் காப்பாற்ற வேலாயுதத்தைப் பயன் படுத்தவேண்டியவன், வழியில் உள்ள காட்டாற்றினிலே துள்ளிடும் வாளைமீது அந்த வேலினை வீசிடக் கண்டால், தம்பி! மூதாட்டியைத் தள்ளிவிடு, ஓநாயேகூட அல்லவா, இப்படி ஒரு மனமா? என்றெண்ணித் திகைத்துவிடும்!!

அதுபோலல்லவா செய்துவிட்டனர்!

எந்த இடத்திலே உறுதியை எதிர்பார்த்தேனோ, அங்கு அல்லவா, ஏற்பட்டுவிட்டது, மனத்தளர்ச்சி!

என் சங்கடத்துக்குக் காரணம் அதுவன்றோ!

ஒன்று சொல்வேன் தம்பி! எனக்கென்னமோ, பேசத் தெரிந்தவர்களெல்லாம், திரு இடத்தைப்பற்றியே பேசவேண்டும்; எழுதத் தெரிந்தவர்களெல்லாம் இன்பத் திராவிடத்தைப்பற்றியே எழுதவேண்டும்; ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் தமது ஆற்றலை, இந்த அருமைத் திராவிடம் விடுதலைபெறப் பயன்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. காணும் செங்கரும்பு அவ்வளவும் நமது குழந்தைக்கு வேண்டும் என்று எண்ணுவது போன்ற பேதை நெஞ்சம்; என் செய்வது!

எனினும், என் மனநிலை அறிந்து பலர், முன்னிலும் அதிக மும்முரமாகப் பணியாற்றி, என் மனச்சோர்வினைப் போக்கி வருகின்றனர். அஞ்சற்க என்றும், கழகப்பணிக்கு ஆவன செய்வோம் என்றும், களிப்பூட்டும் முறையில் எழுதுகின்றனர்.

விலகியோர், நம்மைவிட்டும் கழகத்தைவிட்டும் விலகினா ரில்லை. ஆண்டு பலவாக அரும்பாடுபட்டு நாம் கட்டிக் காத்து வரும் கொள்கையை விட்டுமன்றோ விலகிச் சென்று விட்டனர். இனி, அவர்தம் போக்கு, நம் மாற்றார்க்கு நிலாச் சோறு! நாம் அது குறித்துக் கவலையற்றுப் பணியாற்றிச் செல்வதே முறை என்று கூறுகின்றார்.

திராவிட நாடு பகற்கனவு என்றும், பிரிந்துபோக வேண்டியதில்லை என்றும், பிரியும் உரிமை மட்டும் சட்டப்படி கேட்டுப் பெற்றுக்கொண்டால் போதுமென்றும், வடநாட்டுடன் ஒட்டி வாழலாம், உறவு கொண்டாடலாமென்றும், வடநாடு கண்டு அச்சம் ஏன் கொள்ளவேண்டும், வடநாடு நரகலோகமு மல்ல, வடவர் யமகிங்கரருமல்லவென்றும், இத்துணை வேகமாக அவர்தம் இந்தியபக்தி முற்றிவருகிற நிலை காணும்போது, இனி ஒரு புதிய சட்டமே செய்து, நாட்டுப் பிரிவினை கேட்போரைக் கடுஞ்சிறையில் தள்ளவேண்டும், அப்போதுதான் இந்திய ஒற்றுமை நிலைக்கும் என்று நேரு பண்டிதருக்கே யோசனை கூறக்கூடும் என்றன்றோ தோன்றுகிறது.