அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"இந்தியர்' ஆகின்றனர்!! (1)
2

தம்பி! இதனைக் கவனித்தாயா? திராவிட நாடு கூடாது என்பதற்கு இந்திய பக்தியை இன்று பெற்றுவிட்டவர்கள், புதிய காரணம் எதுவும் கூறினாரில்லை. கூறாததுடன், ஏற்கனவே நேரு போன்றார் காட்டிய காரணங்கள் தமது மனதைப் பெரிதும் கவர்ந்து, தம்மை இந்நிலைக்குக் கொண்டுவந்தது என்றும் கூறாமல், நேரு பண்டிதரின் பேச்சைக் கேட்க மறுத்தவர்களும், இன்று தனது பேச்சைக் கேட்பர், திருந்துவர், ஒப்புதல் அளிப்பர் என்று எண்ணுகின்றனர். எத்துணைத் துணிவு இருத்தல் வேண்டும், அப்படி எண்ணிட!

"நான்'' சொல்கிறேன் கேளுங்கள்! - என்று கூறும்போது, அந்த "நான்' என்பதற்குப் பொருள் யாது கொள்வதோ? நான், நேருவினும் பெரிய நிலைபெற்றோன்; நேருவுக்கு காட்ட இயலாத காரணம் காட்டவல்லோன்; நேருவுக்கு இல்லை உமது மனம் மாற்றும் ஆற்றல், நான் கொண்டுள்ளேன் என்று பொருளோ - செச்சே! இப்போது அப்படிச் சொல்ல மாட்டார்கள் - நவ இந்தியாவும் - சக்தியும் விளக்கை அணைத்து விடுவார்களே! இருட்டிலா உழல்வது!

நான் என்று தம்மை நேருவினின்றும் வேறுபடுத்திக் காட்டுவது, மேலோன் என்பதற்காக அன்று; உங்கள் இனத்தவன் என்ற உரிமையால், நான் கூறுகிறேன் என்பதாகும். - நேரு பெரியவர், பேரறிவாளர்; எனினும் வேறு இனத்தவர்! எனவேதான், அவர் பேச்சே ஏற்க மறுத்துவந்தீர்! இப்போதோ, சொல்வது நான்! சொந்த இனத்தான்! அந்நியன் அல்ல! எனவே நான் சொல்வது கேண்மின் என்ற பொருள்கொள்வது என்றால், அப்போது, ஒரு அடிப்படை உண்மையை, நாட்டுக்கும் உலகுக்கும் அறிவிக்கவேண்டும். திராவிட நாடு பகற்கனவு என இவர்களும் பேசுகின்றனர்; நேருவும் பேசுகிறார்; எனினும் இவர்கள் இனம் வேறு - நேரு இனம் வேறு.

இந்த உண்மையைக் கூறும் துணிவாவது ஏற்படவேண்டும்; அல்லது இந்தியா, இந்தியன் என்ற உணர்வுதான் உண்மை யானது, தேவையானது, கொள்ளவேண்டியது என்று கூறும் நாணயமாவது இருக்கவேண்டும்; இரண்டும் இன்றி, நான் கூறுகிறேன் திராவிட நாடு வேண்டாமென்று, என் பேச்சைக் கேளுங்கள்; நேரு இதனைச் சொன்னபோது ஏற்க மறுத்தீர்கள் - மறுத்தோம். தவறில்லை, ஏனெனில் நேரு எவ்வளவு பெரியவ ராயினும் நம்மவர் அல்ல, திராவிடர் அல்ல! நானோ திராவிடன்! எனவே, என் சொல் கேண்மின்!! என்று கூறுவது வெறும் கேலிக் கூத்தாகும்.

"ஐயன் அழைக்கின்றார்! அகிலம் அறிந்துள்ள ஆற்றல் மிக்கோன் அழைக்கின்றார்! மேதினி கொண்டுள்ள மெய் யெல்லாம் உணர்ந்தவர்காண்! வரலாறு பலவும் கற்றறிந்த பேரறிவாளர்! அவர் காணா நாடில்லை! அவர் உரை கேளா மாந்தரில்லை! அவர் அழைக்கின்றார்! திராவிடம் தனி நாடு என்றெல்லாம் பேசுகிறீர்! பித்துப் பிள்ளைகள்போல் பேதம் பேசலாமோ என்று மெத்த வருத்தப்பட்டு, மேலோன் கேட்கின்றார். உலகமே ஓர் அரசாய் ஆகிவரும் நாட்கள் இவை. இந்நாளில் என் நாடு, என்னுடைய மொழி என்று இயம்பிடுதல் ஆகாது, அறிவீனம் என்கின்றார். அவர் அறியாதனவற்றை எவர் அறிவார், கூறுங்கள். ஐயன் அழைக்கின்றார், வந்திடுவீர், சொந்தமுடன். விந்தியமும் இமயமும் விளங்கி நிற்பதுவும், காவிரியும் கங்கையும் கரைபுரண்டு ஓடுவதும், பாரதம் எனும் இந்த மணித்திரு நாடதனில்! இந்த உண்மையினை ஏற்றிடுவீர், வாழ்ந்திடுவீர்! சொந்த நாடு ஒன்று உண்டென்று பேசி நீவிர் தொல்லை வளர்க்காதீர்'' என்றெல்லாம் பேசி அழைத்தனரே காங்கிரசார், அப்போதெல்லாம் தோன்றா மனமாற்றம் இப்போது அரும்பும், மலரும் என்று எதனாலே எண்ணுகிறார்?

எடுத்துரைக்கத் தெரியாமல், ஏமாந்தனரோ காங்கிரசார்!

இவர் எடுத்துக் கூறும் வகையால் எவர் மனமும் மாறிடுமோ! என்னே பெருந்துணிவு! ஏன் கொண்டார் இப்போக்கு!

"இல்லையாமே, அண்ணா! இவர் கேட்பது தமிழ் நாடாம்; இன்றுள்ள நிலைமையிலே அதுதான் ஏற்புடைத்தாம். அது பெறவே முயலுவது அறிவுடைமை ஆகுமாம்.'' என்று கேட்டிடுவாய்; என் தம்பி! இதனைக் கேள்! நீ கூறும் முறையில் அல்ல நமைவிட்டுப் பிரிந்தார்கள் பேசுவது, பிரிவினை தேவை யில்லை - பிரியும் உரிமை மட்டும் பெறுவோம் என்று பேசுகின்றார்; முன்பகுதி கேட்டு, காங்கிரஸ் ஏடுகள் இடம் தரட்டும்; பின்பகுதி காட்டி, பெற்றிடுவோம் ஒரு கூட்டம் என்றன்றோ கொண்டுள்ளார்; புத்தம் புதுப்போக்கு.

தம்பி! தமிழ் நாடு மட்டும் போதும்; அதுமட்டுமாகிலும் பிரிந்து தனி நாடு ஆகிவிடட்டும் என்ற கொள்கையினை, ஆதித்தனார் அளிக்கும் அறிவுரையால் கொள்கின்றார் என்றே வைத்துக்கொள்வோம், வாத முறைக்காக. என்ன பலன் அதனால்? எவ்வகையில் உதவி செய்யும்?

திராவிட நாடு கேட்டால் மட்டும், வடவர் சீறுவர்; தமிழ் நாடு கேட்டால், வாரி வழங்குவரோ? "கேள் கொடுக்கப்படும், தமிழ் நாடு திராவிட நாடு அல்ல' என்று நேரு பெருமகனார் செப்பினரோ, என்றேனும் அவருக்கு ஒரே நோக்கம் - பாரதம் ஒன்று என்பதே அவர் திட்டம். இந்நிலையில், திராவிட நாடு என்ற திட்டத்தைத் தமிழ்நாடு என்று மாற்றிக் கொள்வதனால் வந்திடும் வசதி என்ன? காரியம் எளிதாகும் என்பரேல் காட்டட்டும் காரணம்!!

இதனைத்தான் எழுதிக் கேட்கின்றார் ஏற்காடுதனில் இருந்து, தன்மான இயக்கம் கண்ட நாள் முதலாய் நம்மோடு இருந்துவரும் தகைமையாளர் - திருவொற்றியூர் சண்முகனார்.

மற்றொன்றும் கேட்கின்றார் நம் நண்பர்.

திராவிட நாடு கேட்கும்போது கொதித்து எழும் காங்கிரசார், தமிழ் நாடு என்று அளவைக் குறைத்துக்கொள்ளும் போது, மகிழ்ச்சி கொள்கின்றனரோ? அங்ஙனமாயின், தமிழ் நாடு தனி நாடு ஆவதற்குக் காங்கிரசார் இசைவரோ? இசைவதாயின், பெறலாமே! பெற்று, காமராஜரே முதலமைச்ச ராக வீற்றிருக்கலாமே! - என்று கூறுகின்றார். உண்மைதான் தம்பி! காங்கிரசார் என்னமோ, திராவிடநாடுதான் எட்டி, தமிழ் நாடு இனிப்பு என்று எண்ணுவதுபோலவும், ஆகவே, தமிழ் நாடு என்று நாம் திட்டத்தை மாற்றிக்கொண்டால், வெற்றி நிச்சயம் என்று கொள்வது போலவும் அன்றோ பேசுகின்றார்.

ஆனால் உண்மை என்னவென்றால், இன்று திராவிட நாடு கோரிக்கை வலிவுபெற்று வருகிறது; இந்திய துணைக் கண்டத்துக்கு இது ஒரு பெரிய தலைவலியாகிப் போய்விட்டது; வெளிநாடுகளிலெல்லாம் "திராவிட நாடு' கிளர்ச்சிபற்றியும் எழுச்சிபற்றியும் வெகுவாகப் பரவிவிட்டது; எனவே, முதலில் அதனை உடைத்துவிடவேண்டும்; அதற்கு ஒரு ஊனம் ஏற்படுத்த, ஒரே அடியாக, ஏக இந்தியா - பாரதம் என்று பேசுவதுமட்டும் போதாது - திராவிடம் என்ற எண்ணம் கொண்டோர்களிடத் திலேயே, ஒரு பேதத்தை, பிளவை மூட்டிவிட்டு, திராவிடம் வேண்டாம். தமிழகம் போதும் என்று பேசவைத்து, அவ்விதம் பேசும்போதும் தமிழகத்தின் தொன்மை, தனித் தன்மை, வடவரிடம் சிக்கியதால் வந்த சீரழிவு என்பன குறித்து அதிகம் பேசாமல், அந்தச் சீரழிவுக்குக் காரணமாக உள்ள டில்லி அரசின் போக்கைத் தாக்காமல், திராவிடம் என்று பேசுவோரைத் தாக்கியும் திராவிட நாடு எனும் திட்டத்தைக் கண்டித்தும், அந்தத் திட்டத்துக்குப் பேராதரவு பெற்றளித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து ஏசியும், பூசலைக் கிளப்பியும், பகை கக்கியும், படிப்படியாகப் பிரிவினைக் கொள்கையையே அழித்து ஒழிப்பது என்பது, அவர்கள் திட்டம்! எனவேதான், தம்பி! திராவிடம் பகற்கனவு; திராவிட முன்னேற்றக் கழகம் கேவலமானவர்களின் கூடாரம்; சுயநலமிகள் கொட்டமடிக்கும் இடம்; அறிவிலிகளின் அரங்கம் என்ற இத்தகைய பேச்சுக்களுக்கு, காங்கிரஸ் ஏடுகள், இத்தனை முன்னிடம் கொடுத்து உசுப்பி விடுகின்றன. இது பழைய வித்தைதான்; இதிலே பழக்கமும் பயிற்சியும் அதிகம் இருப்பதால், அதனை மும்முரமாகச் செய்து வருகின்றனர், புதிய கட்சியினர். "இவ்வளவு எமது அறிவாற்றலைப் பாராட்டுகிறீர்களே, எமக்கு ஆதரவு காட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்குகிறீர்களே; நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப்பற்றியும் திராவிட நாடு கூடாது என்பதுபற்றியும் பேசுவதைச் சிந்தாமல் சிதைக்காமல் மெருகும் மிகக் கொடுத்து வெளியிடுகின்றீர்களே! அங்ஙனமாயின், ஐயன்மீர், தமிழ் நாடு தமிழர்க்கு எனும் திட்டத்துக்கு ஆதரவு காட்டுவீரோ?'' என்று கேட்பரேல், அந்த இதழினர், இடிஇடியெனச் சிரித்து, "என்ன மதியீனம்! எத்துணை ஏமாளி எண்ணம்! உமது பேச்சை எல்லாம் வெளியிட்டோம். எதற்காக? உமதுநிலை உயர்வானது என்பதற்கா? ஐய்யே இதனையுமா, அறைந்திடவேண்டும். நாடுகள் ஓங்கி வளர்ந்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகமதை உருக்குலைத்து உடைத்துவிட, உம்மைக் கருவியெனக்கொண்டோம்; வேறென்ன? அவர் கேட்கும் திராவிடத்தை உடனிருந்து ஆதரித்த உம்மை உசுப்பிவிட்டு, அதனையே தாக்கிக் களிப்புப் பெற்றோம். எந்தத் திருவாயால் ஏசினீரோ நேருதனை, அதே வாயிலிருந்து, அண்ணாவாம் துரையாம்! யார் இந்த அறிஞன்! எவன் தந்தான் இப்பட்டம்! எனக்கும் இவனுக்கும் உள்ள ஒட்டென்ன உறவென்ன! - என்று முத்துகள் உதிர்ந்தனவே, அவைதாம் எமக்குத் தேவை, அவைதமை எடுத்தெடுத்து அழகாய்த் தொடுத்து, அனைவருக்கும் அளித்திட்டோம். அத்தோடு தீர்ந்ததய்யா, எமக்கு இருந்த அரிப்பெல்லாம். அவ்வளவே! அறிந்திடுக! திராவிடம் தீது என்று தித்திக்கத் தித்திக்கப் பேசினீர், சுவைத்திட்டோம், அதுகண்டு நீர், புதுச்சரக்கு இதுகொள்க என்று! தமிழ் நாடு பிரிவினை என்று பேசுகின்றீர் - பேரறிவோ? திராவிடம் வேண்டாமென்று சொல்லுவதற்கு உள்ள எல்லாக் காரணமும், நீர் கேட்கும் "தமிழ் நாடு தனி நாடு' என்பதற்கும்தான் பொருந்தும். திராவிட நாடு பகற்கனவு என்றீர் - உமது "தமிழ் நாடும்' அஃதேதான்!! ஏனோ இதனை நீவிர் அறிந்திடாது இருக்கின்றீர். விட்டிடுவீர் வீண் வேலை! விலைபோட்டுக்கூட வாங்கவேண்டாம்? கதராடை. புத்தம் புதிய ஆடை தருகின்றோம். புறப்படுவீர். பொன் அவிர் மேனியான், இந்தப் புவிக்குள்ள தலைவர்களுள், மாணிக்கம் போன்ற மதிப்புடையான், மாமேதை நேருவிடம் மண்டியிட்டுச் சேவை செய்ய!!'' - என்றல்லவோ கூறுவார்கள். இஃது அவர்களை இன்று பயன்படுத்திக் கொள்பவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியுமே! ஊரறிந்த இரகசியமல்லவோ இது!

தம்பி! நினைவிலிருக்கிறதா, சில ஆண்டுகளுக்கு முன்பு, ம. பொ. சி. அவர்கள், திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்தி வந்த காதை! ஊரூருக்கும்!! நாட்டுப் பிரிவினையை எதிர்க்க, தடுக்க, ஏக இந்தியா எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கும் காங்கிரசுக்கு இல்லாத பலமும் வசதியும், ம. பொ. சி. அவர் களுக்கு உண்டா? இல்லை! என்றாலும், அவர் கிளம்பினார். கண்டோமே திராவிடம் என்ற சொல்லாராய்ச்சியிலிருந்து தொடங்கி, கழகத் தோழர்களுக்கு - விலகியவர்களும் இங்கு இருந்தபோதுதான்! "விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்ற விநோதப் பட்டம் சூட்டும்வரையில் பேசினார். ஏன் செய்தார் அந்த எதிர்ப்பு? தார்கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி, தாரைக் கழுவிடத் தமது கழகத்தோரை அனுப்பிவைத்தார். வடநாட்டுக் கடைகள் முன் பெரியாரின் தொண்டர்கள் மறியல் செய்தபோது, இவரது கழகத் தொண்டர்கள் எதிர்மறியல் நடத்தினர். இவைகளுக்கு, இன்று விலகியோர் பெறுகின்ற அளவிலும் வகையிலும், விளம்பரம், காங்கிரஸ் ஏடுகளில் வெளிவந்தன, அறிவாயல்லவா? ம. பொ. சி. யின் தேசபக்தி, இலக்கிய மேதாவித்தனம் ஆகியவைகளைப் பாராட்டினர், காங்கிரஸ் தலைவர்கள். அவருடைய அறிவுரை கேட்டாகிலும் திராவிட மாயையிலிருந்து விடுபடுங்கள் என்று கூறினர். அவர் நடத்திய மாநாடுகளில், காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். காமராஜரே, சென்னையில் ஒரு மாநாட்டிலே, நடுநாயகமாக அமர்ந்திருந்தார். இதெல்லாம், ம. பொ. சி.க்கு அவர்கள் காட்டிய மதிப்பு, ம. பொ. சி. அவர்களின் பேரறிவை அவர்கள் போற்றுவதற்கான சான்று என்றா கொள்வர்? ஏவிவிட, தக்க சமயம், பயன்படுத்திக் கொள்வோம் என்பதன்றி வேறென்ன!

சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் பக்தவத்சலம், தூக்கி எறிந்தாரே, இதே, ம. பொ. சி. அவர்களை. "நாங்கள் ஒன்றும் இவருடைய கிளர்ச்சி கண்டு நடுநடுங்கி, தமிழ்நாடு என்று பெயர் மாற்றிடவில்லை; நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்; அவருக்கே அது தெரியும்; அதன்படியே நாங்கள் நடந்து கொண்டோம்'' என்று மதிப்பளிக்க மறுத்தாரே! நானல்லவா, மாநகராட்சி நடத்திய விழாவொன்றில், ம. பொ. சி.யைப் பாராட்டி, நன்றி கூறினேன். நண்பருக்கு இப்போது, என் பாராட்டுதல் தேவைப்படாமல் இருக்கக்கூடும்; ஒரே இடத்திலிருந்து பாராட்டுரைகள் கிடைப்பதைவிட, புதுப்புது இடமிருந்து வருவது சுவையாகத்தான் இருக்கும். அதற்கல்ல, நான் கூறுவது. திராவிட இயக்க எதிர்ப்பு நடத்துவோர் எவராயினும், அவருக்கு ஆதரவு அளித்து, தூக்கிவிட்டு வேலை வாங்குவது, காங்கிரசுக்கு நீண்ட நாள் பழக்கம் என்பதை விளக்கத்தான். அந்த முறைப்படி இப்போது "விலகினோர்க்கு' வீரகண்டாமணி கிடைக்கிறது. வேறென்ன! இதைப் பெறுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தை இவர்கள் கண்டித்துத் தீரவேண்டும், வேறென்ன செய்கிறார்கள். தமிழ்நாடுதான் பெறவேண்டும் என்பதற்கா தமது பேச்சில் முதலிடம் கொடுக்கிறார்? கொடுப்பதாயின், தமிழ் நாடு தனி நாடாக இல்லாதிருக்கும் தன்மை, அதனால் ஏற்படும் இழிவுகள், இன்னல்கள், சுரண்டல், அந்தச் சுரண்டலால் வடநாடு கொழுத்து வரும் பயங்கரமான உண்மை, இவைபற்றி அல்லவா பேச்சு, விறுவிறுப்பாக, வீரம் கொப்பளிப்பதாக அமையும்! எங்கிருந்து வரப்போகிறது அந்த எண்ணம்! அதுதான் சொல்லிவிட்டார்களே,

வடநாடு நரகமுமல்ல. வடநாட்டுக்காரர் யமகிங்கரருமல்ல,

வடநாட்டோடு ஒட்டி வாழலாம்,

வடநாட்டு முதலாளியும் இங்கு வந்து தொழில் நடத்தலாம்

என்று. இது போதாதா, இவர்களைப் பொட்டிட்டு, ஆலத்தி எடுத்து, ஐஞ்சும் மூணும் அடுக்காய்க் கொடுத்து, பாராட்ட, போற்ற, வாழ்த்த! கசக்கிறதா அந்த ஏடுகளுக்கு. எந்த மாவீரன் வடநாட்டானிடம் சிக்கிக்கொண்டிருக்கிற வரையில், திராவிடன் தலைதூக்க முடியாது என்ற முழக்கமிட்டாரோ, அவரே முன்வந்து, அதே முழக்க மொழியில்,

வட நாட்டு முதலாளி இங்கு வந்து தொழில் நடத்தலாம்

என்று கூறுவதை, கொட்டை எழுத்தில் வெளியிட! குதூகலம் கொள்ள!! புண்ணிய க்ஷேத்திரங்களிலே உள்ள பண்டாக்கள், தம்மை நாடிவருவோர் எழுதிக்கொடுக்கும் நற்சான்றுகளைப் படித்துப்படித்து மகிழ்வதைப்போலல்லவா, அவர்கள், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சியை, வரிந்து கட்டிக்கொண்டு ஊட்டிவந்தவர், வாயார, மனமார, வாழ்க வடநாடு! என்று கூறும் முறையில் பேசுவது கேட்டு மகிழ்ந்து, தமது இதழ்களிலே வெளியிட்டு, அதனைத் திரும்பத்திரும்பப் படித்துப் பார்த்து, மகிழ்ச்சி கொள்வார்கள்.

பக்ரா - நங்கல் நிர்வாக ஊழல்.

சிந்திரி தொழிற்சாலையில் காணப்பட்ட சீரழிவு.

வெளிநாட்டுக் கடன் சுமை அதிகமாகி அழுத்துவது.

ஏற்றுமதி குறைந்து, இருப்புத் தேய்வது.

நோட்டுப் பெருக்கத்தால் பணவீக்கம் ஏற்பட் டிருப்பது.

மறைமுக வரிகளினால் ஏழை மக்கள் துயர் அடைவது.

வருமானவரி ஏய்க்கும் வன்கணாளரை விட்டு வைக்கும் கொடுமை.

முந்திரா போன்றார் தரும் பணம் பெற்றுத் தேர்தல் நிதி குவிக்கும் கேவலத் தன்மை.

எல்லையில் இடம் பிடித்த சீனரிடம், ஏதும் செய்ய இயலாமல், நேரு திண்டாடித் திணறுவது.

கரடியாய்க் கத்தினாலும் சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைக்காத கல்னெஞ்சப் போக்கு.

சேதுசமுத்திரத் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் இன்னமும் ஏட்டளவில் இருந்துவரும், உள்ளம் வாட்டிடும் நிலைமை.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் அடுக்கடுக்காய் இருப்பதனை, கணக்கு ஆய்வாளர் காட்டி வரும் கொடுமைமிகு சீர்கேடு.

கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழரின் குரல் கேட்டு, உதவி புரிய முன்வராது, நேரு பெருமகனார் உள்ள போக்கு.

திட்டங்கள் அத்தனையும் வடக்கையே வளப்படுத்தும் போக்கு.

மூன்றாம் திட்டத்திலும் முகத்தில் கரிபூசப்பட்ட கேவலம்.

எதற்கு எடுத்தாலும் டில்லிக்கு எடுக்கும் காவடி, சிந்து.

இவைபோல் அடுக்கடுக்காய் எத்தனையோ, உண்டன்றோ! எடுத்தியம்பக் கேட்டீரோ இவைபற்றி எல்லாம்! இல்லை! ஏன் இல்லை? பேசுவரேல், கூசாமல் இன்று இடங்கொடுக்கும் ஏடுகளின் நேசம் முறிந்துவிடும்; இருட்டடிப்புப் பின் தொடரும்!! எனவே, விலகியோர் இவைபற்றிய பேச்சைக் கட்டிவைத்து விட்டனர் மூட்டை! இப்போது இருப்பதெல்லாம் என்னை இழிவுசெய்யும் திருவாய் மொழி - அதற்கே இடம் உண்டு, அந்த இதழ்களிலெல்லாம். வேறு, சட்டத்திலே உள்ள சத்தற்ற நிலைமைகளை மெத்தச் சிரமப்பட்டுப் படித்துப் பொருள் அறிந்து, இத்தனை தொல்லை நமக்கு இருப்பதனால், தமிழ் நாடு தனியே இயங்க ஒரு தன்மான முயற்சி வேண்டும் என்று பேசத் தொடங்குவரேல், அவன் போனான் - இவர் வந்தார்; அடைத்திடு கதவை என்று அன்றே கட்டளை பிறக்கும்.

மாற்றார் மனம் மகிழ நடந்துதான் வாழ்ந்திட இயலும் என்ற நிலை பிறந்துவிட்டால், பெற்றுவிட்டால், இடையே நின்று ஒரு திருத்தம் பெறவும் இயலாது. மணல்மேடு ஏறிநின்றார். கால் இடறிப்போமானால், எங்கு வந்து வீழ்வார்? எவரறியார் இந்த நிலை? எனவே, வேகமாய் இவர்கள் "இந்தியா' ஆகியே தீரவேண்டும்; வேறு வழியில்லை; வேறில்லை முறைகூட!

இவர்கள் இதுபோல்தான், இப்போதே என்று வடக்கே உள்ள சில ஏடுகள், வரைந்திருக்கக் கண்டேன். இங்கு தமிழரிடை, இப்போதே, இந்தியராகுங்கள் என்று இயம்பச் சிறிது கூச்சம் இருக்குமன்றோ! திராவிடர் வேண்டாமென்று, தமிழர் என்ற நிலைகொண்டு, மெள்ளமெள்ள இந்தியராதல் ஒன்றே இவர்க்கு இனி எதிர்காலம்.

வடக்கே வெளியாகும் டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் நிருபர் பேட்டி கண்டாராம் புதியவரை! பெற்றாராம் அவர் கருத்தை! வெளியிட்டிருக்கின்றார்; படித்தேன்! பதைபதைத்தேன்.

பொது உடைமையர் போன்றோ சமதர்மவாதி போன்றோ; புரட்சிப் போக்கினர் அல்ல, நாங்கள்.

எந்த (சமதர்ம) தத்துவமும் பிடித்தலையும் போக்கில்லை, எனக்கு.

தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும் என்ற ஆர்வமும் எமக்கு இல்லை.

என்றுரைத்தாராம், புதிய கட்சியின் தலைவரவர், வெளிவந்து இரு கிழமை ஆகிறது; இதுவரையில், மறுப்பும் வரவில்லை என் சொல்ல! கைப்புண் காணக் கண்ணாடியா வேண்டும்? உள்ளம் இருப்பது, வடக்கே உள்ள இதழில் வந்தது; மெள்ள மெள்ள இங்கும் அதனை எடுத்துரைக்கப் போகின்றார்; உடன் இருப்போரில் ஏழெட்டுப் பேர்கள் இலட்சியம் போற்றிடுவோர்! எங்கே அவர் கோபம் எழுந்திடுமோ என்ற அச்சம். இல்லை யெனில், இப்போதே இயம்பிவிடுவார் ஜெய் இந்தும்! முன்பே இதை உணர்ந்து மொழிந்தது "மெயில்' இதழும், திராவிடப் பிரிவினையை உதறினார்; தக்க செயல், என்றாலும், இஃதேனோ தமிழ் நாடு என்ற ஒரு தத்துவம் பேசுகிறார்; அதற்குப் பொருள் இல்லை; ஆகப்போவதுமில்லை; உடனடியாய் அனைத்தையும் உதறிட அஞ்சி, ஒரு பொருளற்ற திட்டத்தைக் காட்டுகிறார் தோழர்கட்கு; சின்னாட்கள் சென்றதும், இதனையும் போட்டிடுவார் மண்மீது'' - என்றெல்லாம். அதற்கும் மறுப்பு இல்லை. அச்சம்!

அறிவீர், ஐயன்மீர்! இந்தியா என்பது போலி, சூது, சூழ்ச்சி, ஒரு சுரண்டல் யந்திரம்; இதுவே என் கருத்து.

தமிழர், தனி இனம் - தாழ்ந்த நிலையினில் இன்றுளர் - அதற்குக் காரணம் வடவர்.

வடவர் வாழ்ந்திட வழி வகுத்ததுதான், இந்திய அரசியல் சட்டமென்னும் பொறி.

இதில் சிக்கி இருக்குமட்டும், தலைநிமிர்ந்து வாழ்ந்திடான் தமிழன் எனும் இனத்தான்.

அவன் மானம் அழிக்கின்றார், மொழியைப் பழிக்கின்றார்; வாழ்க்கை வழியை அடைக்கின்றார்!

வளமெல்லாம் வடக்கேதான்; வாட்டம்தான் தமிழர்க்கு; இந்தியா என்பதிலே இதுவும் ஓர் இடம் என்று இயம்புமட்டும், தன்மானமும் இல்லை, தழைத்திடப் போவதுமில்லை.

வடநாட்டு ஆதிக்கம் அழித்திடவே இருக்கின்றேன்; வந்திடுவீர் என்னோடு; தனி அரசு காண்பதற்கே!!

என்று இவ்விதமெல்லாம், எடுத்துரைக்க முன்வந்தால், ஏது ஏடுகளிலே இடம்!! எனவேதான், அவை இன்று, வெளியே, காணோம். அம்மட்டோ, தம்பி! திராவிடம் என்றால் கசப்பு - ஆயின, வடநாடு எனின், இனிப்பேயன்றோ காண்கின்றனர்.

எனவே தம்பி! எனைவிட்டுப் பிரிந்தனரே, என்செய்வேன் என்று எந்தன் மனம் பட்டபாடு மிக அதிகம் என்றாலும், இவர் நமது இன்னுயிராம் இலட்சியத்தையே, மறந்து, "இந்தியர்' ஆகின்றார் என்பது புரிவதனால், துக்கம்தனையே நான் தூக்கி ஓர் பக்கம் தொலைவாக வைத்துவிட்டு, திராவிட நாடு பெற, தக்கவர்கள் பல இலட்சம், அன்றுபோல் இன்றும், ஆற்றலோடு இருப்பதைக் கண்டு அகமகிழ்ந்து, புத்தார்வம் கொள்கிறேன். எங்கும் நம் தோழர்கள், புரிந்துகொண்டார், நிலைமையினை; என்னைவிட விரைவாக. என் நெஞ்சா அவர் நெஞ்சம்!!

அண்ணன்,

21-5-61