அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இந்நாட்டில் வாழ்வதற்கு!
1

இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள்
ஓ ஹென்றியின் கதை


தம்பி!

விரைவிலே நீ, காண இருக்கும் தமிழ்ப் படம் ஒன்றினை, சென்ற கிழமை நான் காணும் வாய்ப்பினை படப்பிடிப்பாளர்கள் ஏற்படுத்தித் தந்தனர் - படம், தம்பி இராஜேந்திரன் நடிக்கும் "தங்கரத்தினம்'.

துவக்கத்திலே ஒரு காட்சி. இயற்கை எழில் குலுங்கும் சிற்றூரின் மருங்கு. பச்சைப் பட்டாடை அணிந்த நிலமகள்! அவளுடன் வண்ணத்தில் போட்டியிடும் எண்ணத்துடனோ என்னவோ, விண்ணழகி, நீலநிற ஆடையினை நேர்த்தியாக அணிந்துகொண்டிருந்தாள். கனி குலுங்கும் மரங்கள், பூ உதிர்க்கும் செடிகள், கோலமளிக்கும் கொடிகள், வழிநெடுக. நாலைந்து கன்னியர், இரட்டை மாட்டு வண்டியிலே செல்கிறார்கள் - ஓட்டுபவள் கள்ளங்கபடமற்ற இளமங்கை!

என்ன அண்ணா! காட்சியிலே, என்ன இருக்கிறது, புதுமை யாக? வயலையும் வாவியையும், வட்டமிடும் வானம்பாடி களையும், வளைந்தோடும் அருவிகளையும், இப்போதெல்லாம் எந்தப் படக்காட்சியிலும் காண முடிகிறதே! - என்று கூற எண்ணுகிறாய். உண்மை, தம்பி! உண்மை! கண்களுக்குக் குளிர்ச்சி தரும் வண்ணமிகு, வெளிப்புறக் காட்சிகளை இப்போது, நிரம்பக் காணுகிறோம். ஆனால், என் மனதை ஈர்த்தது, கண்கண்ட காட்சி அல்ல - கருத்தைத் தொட்டிடும் வகையிலே, நான் கேட்ட இசை.

கிராமத்துக் கட்டழகி - விளக்கமாகச் சொல்வதானால் சேரிவாழ் சிங்காரி - தன் தோழிகளுடன், வண்டி ஓட்டிக் தொகுதி மூன்று 15 கொண்டு போகும்போது, சூழ இருந்த இயற்கைச் செல்வத்தைக் கண்ட மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில், பாடிய பாடல், கூடச் சென்ற தோழிகளைப் பார்த்தல்ல, நாட்டு மக்களைப் பார்த்தே, பாடுவதுபோலிருந்தது.

இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு!

என்பது, பாடலின் எடுப்பு! என் செவியிலே, அந்த "எடுப்பு' இன்னமும் ஒலித்த வண்ணம் இருக்கிறது.

நம் நாட்டின் இயற்கை வளம், மக்களின் உழைப்புத்திறம், அறிவு மேம்பாடு, இவைபற்றி எல்லாம் அந்தப் பாடலிலே அழகான "அடிகள்' உள்ளன; பொருட்சுவை இசை இனிமை யுடன் குழைந்து வருகிறது; எனினும், "எடுப்பு' இருக்கிறதே, அது ஒரு பாடலுக்காக மட்டுமல்ல, நமது நாட்டு மக்கள் எப்போதும் எண்ணிப் பார்த்திட, ஏற்றம் பெற்றிடத் தூண்டிடும் முறையிலே, அமைந்திருக்கிறது.

இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! - இது பாடலின் எடுப்பாக அமைந்திருந்தது, என்றாலும் தம்பி! இச்சகம் பேசியோ, இளித்துக் கிடந்தோ, ஏவல் பல புரிந்தோ, எடுபிடி ஆகியோ இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று எண்ணிக் கிடக்கிறார்களே சிலர், அவர்கள் ஒரு நாள் ஒரு பொழுதாகிலும், தம்மைத்தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்,

இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு! - என்று

இன்னொருவர் தயவை மட்டும் தேடித், தாள் தொட்டுக் கிடந்தன்றோ வாழமுடியும் என்று எண்ணிக் கிடக்கின்றனர், இருப்பதை மறந்துவிட்ட இயல்பினர்.

ஏதோ இந்நாடு, பாலைவனமும், பாழ்வெளியும், காடு மேடும், மட்டுமே கொண்டதாக இருப்பது போலவும், இங்கு விதைத்தால் முளைக்காது, வெட்டினால் ஊற்றுச் சுரக்காது என்று கூறத்தக்க நிலை இருப்பதுபோலவும், எதிரிப் படைகள் நாற்புறமும் சூழ்ந்துகொண்டு, தாக்கியபடி இருப்பது போலவும், ஓர் மனமயக்கத்தைத் தாமாக ஏற்படுத்திக் கொண்டு, ஓர் "மேலிடம்' நாடி, அவர் தயவினைத் தேடிப்பெற்று மட்டுமே, வாழ்வினைச் செம்மையாக்கிக் கொள்ள முடியும் என்று எண்ணி, அடிமை மனப்பான்மையினராகி அவதியுறுவதுடன், அந்தப் "பிச்சைப் பிழைப்பை இச்சையுடன் ஏற்றுக் கொள்வது தான் அறிவுடைமை; மறுப்பது மடைமை! - என்றெல்லாம் பேசியும் வருகின்றனரே, அவர்களின் நினைப்புத் தான் வந்தது, பாடலின் எடுப்பைக் கேட்டதும்.

சோம்பித் திரிந்திடாமல், சுரண்டிக் கெடுக்காமல், உழைத் தால் அனைவரும் உண்டு மகிழ்ந்திருக்கத்தக்க அளவு, வளம் கொண்டதாகவே நம்நாடு இருந்திடக் காண்கிறோம்.

கோடிகோடியாகப் பொருளைக் கொட்டிப் புதுத் திட்டங்களைத் தீட்டி நடத்தி, பெருஞ்செல்வத்தை உற்பத்தி செய்து குவித்திடுவோம் - என்று இன்று கூறுகின்றனர். தம்பி! நான் அந்தத் தனிமுயற்சியை மனதில் வைத்துக் கொண்டுகூட அல்ல, உழைப்பைக் குறைத்துப் பொருளைப் பெருக்கித் தரத்தக்க விஞ்ஞானக் கருவிகள், கிடைக்காது போயினும்கூட, அறிவுத் தெளிவுடன் கூடிய உழைப்பின் மூலம் மட்டுமே, பெறத்தக்க வளமேகூட, இந்நாட்டு மக்களை, நிம்மதியாக வாழ்ந்திடச் செய்திடும் வகையிலும், அளவிலும், இருப்பதைக் குறிப்பிடுகிறேன். இது இல்லையே? இதற்கு என்ன செய்வோம்? என்று ஏங்கித் தவித்திடும் நிலையில் நாம் இல்லை - நமது நாடு, போதுமான அளவு, வளம்பெற்றிருக்கிறது. அதனை அறிந்து, அனைவரும் கபடமற்று, உழைத்துக் கயமத்தனத்தைத் தலை காட்ட ஒட்டாது வெட்டிச் சாய்த்திட்டால், "இன்னொருவர் தயவு எதற்கு? இந்நாட்டில் வாழ்வதற்கு?' என்று இசைபாடி மட்டுமல்ல, இசைபட வாழ்ந்திடவும் முடியும்.

புத்தம் புதுக்கருவிகள், புதுப்புதுத் திட்டங்கள், இங்கு நிம்மதியான வாழ்க்கையை மட்டுமல்ல, எங்கும் பொன் கொழிக்கும் நிலையை ஏற்படுத்தித்தரும், என்று திட்டம் தீட்டுவோர் அறிவிக்கின்றனர். அந்த நோக்கத்துடனேயே, இரண்டு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது மூன்றாவது திட்டம் கருவில் உருவாகி வருகிறது என்றும், கூறிக் களிப்பூட்டுகின்றனர். ஆனால், கவனித்திருப்பாயே, தம்பி! இந்தக் கிழமை, நேரு பண்டிதர், பேசியிருப்பதை.

இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களாலும் பெருகிய செல்வம், எங்கே சென்று தங்கிவிட்டிருக்கிறது, என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்காக ஒரு தனிக்குழு அமைத்திட வேண்டும்.

பத்து ஆண்டுகள், பாடுபட்டதிலே கிடைத்த பலன், எங்கே இருக்கிறது என்பது, கண்டுபிடிக்கப்படவேண்டியதாக, தனிக் குழு அமைத்துக் கண்டுபிடிக்கப்படவேண்டியதாக இருக்கிறது.

திட்டத்தின் வெற்றிக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்! தேடுகிறார்கள். பலன் எங்கே என்று!!

"நான் தம்பி! இப்போது அந்தத் திட்டங்களை மனதிலே கொண்டு அல்ல, இயற்கை நமக்கு அளித்துள்ள செல்வத்தை மட்டுமே மனதிலே கொண்டுதான், கூறுகிறேன், ஒழுங்கான முறையில், ஒருவரை ஒருவர் அழித்திடும் கெடுமதியின்றி, அனைவரும் உழைத்தால், எவரும், இல்லாமை எனும் நோயால் பீடிக்கப்படாமல், நிம்மதியாக வாழ்ந்திட முடியும்.

***

உலகிலே, பல நாடுகள் உள்ளன - சில நாடுகளிலே சில பகுதிகளும் உள்ளன - இன்னொருவர் தயவு இருந்தால் மட்டுமே வாழ்ந்திட முடியும் என்று கூறத்தக்க நிலையில், வளம் குறைந்த நாடுகள் உள்ளன. குடிவளமற்ற நாடுகள் உள்ளன. இன்றும் வேட்டையாடுதல், மீன்பிடித்தல், இவைகளை மட்டுமே வாழ்க்கைக்கு வழிகளாகக்கொண்ட நாடுகள் உள்ளன. சில இடங்கள் உள்ளன - கதிரவனை வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே காண முடியும்! சில நாடுகளிலே, அடிக்கடி, கடல் கொதித்தெழுந்து, படை எடுத்து அழிவை உண்டாக்கிவிடும்!! சில நாடுகளிலே, எப்போதும் மூடுபனி. புல் பூண்டு கூட முளைத்திட முடியாத நிலையிலே பனிப்பாறைகள் நிரம்பிக் கிடக்கும் இடங்களும் உள்ளன. இந்நாடு, பல ஆயிரம் ஆண்டுகளாகவே, இயற்கையின் பேருதவியைப் பெருமளவு பெற்றுத் திகழ்ந்து வந்திருக்கிறது. அந்த வளத்தை, பழம்பெரும் புலவர்களின் பாக்களில் காண்கிறோம். அவர்களின் காலத்திலே, அற்புதம் செய்தளிக்கும் கருவிகள் இல்லை; உண்மை. ஆயினும் வளம் கொஞ்சிக் கிடந்தது. துள்ளிடும் வாளைக் கண்டனர்; புள்ளிமான் கோலம் கண்டனர்; கிள்ளைமொழி கேட்டு இன்புற்றனர்; சந்தன மனம் பெற்று மகிழ்ந்தனர்; கடலிடை முத்தும், கைத்திறனுள்ளோர் செய்தளிக்கும் அணிபணியும் கண்டனர்; பழமுதிர் சோலைகள், பாங்கு நிறை வயல்கள், செங்கரும்புக் கழனிகள், என்ற இன்னோரன்ன வளம்கண்டு பாடினரேயன்றி, வெடித்துக் கிடக்கும் வயல்கள், கொதித்துக் குழம்பிடும் கும்பிகள், நெருப்பைக் கக்கிடும் எரிமலைகள், அழிவினை ஏவிடும் நில நடுக்கங்கள் - எனும் கொடுமைகளைக் கண்டார்களில்லை. பன்னெடுங்காலமாகவே, இன்னொருவர் தயவு எதற்கு, இந்நாட்டில் வாழ்வதற்கு? என்று பண்பாடியே, வாழ்ந்தனர், தமிழர்.

உண்டிக்கும் உடுத்துவதற்குங்கூட, வழிவகை யற்றுப் போய், மற்றவர்களை அண்டிப் பிழைத்திட வேண்டிய அல்லல் நிரம்பிய நிலையில், நாடுகள் இருந்தன; இருக்கின்றன; பிச்சைப் பிழைப்பு நம் நாட்டு மக்களை, முன்பு தீண்டினதில்லை. நாடு மட்டுமா, தனி மனிதனே, பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை இருக்குமானால், அது எத்துணை வெறுக்கத் தக்கது என்று, நமது ஆன்றோர் கருதினர் என்பதற்குச் சான்றுகளைத் தேடி அலைவானேன்.

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான்

என்றன்றோ, வள்ளுவப் பெருந்தகை கூறினார்.

அப்படிப்பட்ட நாடு, இன்று எதிலாகிலும், தன்னிறைவு பெற்று இருந்திடக் காண்கிறோமா?

எதிலாகிலும், தன்னிச்சைப்படி நடந்திடும் உரிமை பெற்றிருக்கிறதா, நாடு?

இல்லை! இல்லை! என்பதை, நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைக்கூடத் தள்ளிவிடட்டும், தம்பி! ஒவ்வொன்றுக்கும், நமது அமைச்சர்கள் அளிக்கிறார்களே, பதில்கள், அவைகளை கவனித்தாலே, புரிகிறதல்லவா!

நம் நாட்டிலே, உழவுமுறை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதிலிருந்து, உரையாடுவது எம்மொழியில் என்பது வரையில், இன்னொருவர் தயவுகூட அல்ல, இன்னொருவரின் கட்டளையை எதிர்பார்த்தல்லவா, நடந்துகொள்ளவேண்டி இருக்கிறது.

துறைமுகங்கள் உள்ளன இங்கே, தூர்ந்து போன நிலையில்; அவைகளைப் பழுது பார்க்கலாமா, ஆழப்படுத்தலாமா என்று யோசிக்கக்கூட, நமக்கு, அங்கிருந்து "நிபுணர்கள்' தேவைப்படும் நிலையல்லவா, காண்கிறோம்.

தூத்துக்குடித் துறைமுகத்தைப் பற்றிய சோகக் கதை தான், தெரியுமே, தம்பி! உனக்கு. ஓட்டு வேட்டைக்குச் செல்லும் போது, அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களைக் கவனித்தால், அடே! அப்பா! ஒரே மாதத்திலே, அவர்களே, தூத்துக்குடித் துறைமுகத்தை விரிவுபடுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி, கப்பலே ஓட்டிவிடுவார்கள் என்று எண்ணிடத் தோன்றும் - அவ்வளவு கனிவு, குழைவு, தாராளம், வீரம், விவேகம் ததும்புகின்றன. பொங்கி வழியும் அந்த ஆர்வம், பெட்டியில் விழுந்ததை எண்ணிப் பார்த்ததும், இருக்குமிடம் தெரியாமல் வறண்டுபோயே விடுகிறது ஏன்? இன்னொருவர் கட்டளைக்குக் காத்துக் கிடக்கவேண்டி இருப்பதால்! இதைச் சொன்னால், இப்போதெல்லாம், நமது மந்திரிமார்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. கோபம் பிறந்து என்ன பலன்? எதிர்க்கட்சிகளைத் தாக்கத்தான் அந்தக் கோபம் பயன்படுமேயன்றி, டில்லிப் பட்டினத்தருகே கூடச்செல்லும் வலிவு இல்லையே அதற்கு!! ஏன்? எதற்கும் டில்லியின் தயவை நாடிக் கிடக்க வேண்டிய இழி நிலையை, இவர்களாக ஏற்படுத்திக் கொண்டதனால்! இவர்களின், நெஞ்சுக்கு உரம் ஊட்ட அறிவுக்குத் தெளிவு கிடைக்கத்தான், நமது கழகம்,

இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு!

என்று பண்பாடியபடி இருக்கிறது.

***

தம்பி! சில நாடுகள், இயற்கை வளமற்று, தொழில் திறனுள்ள மக்களற்று இருப்பதால், பேரரசு ஒன்றினுக்கு உட்பட்டு, அடங்கிக் கிடந்து, வாழ்க்கையை நடத்தித் தீர வேண்டியவைகளாகி விடுகின்றன. வேறு சில நாடுகள், வளம் இருந்தும், அதனைக் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை பெறாததாலோ, உரிமை பறிக்கப்பட்டுப் போய்விடுவ தாலோ, அடிமைக்கோலம் பூண்டு, பேரரசு இடும் பிச்சையை உண்டு வாழ வேண்டி நேரிட்டுவிடுகிறது. நம் நாட்டு நிலை, மிக வியப்பான தொன்றாகும். நம் நாட்டு வளம் ஒரு பேரரசுக்கு வண்ணமளிக்கவும், நம் நாட்டுத் தொழில் திறமை வேறோர் இடத்துக்கு வலிவும் பொலிவும் தேடித் தரவும், பயன்படுத்தப் பட்டு வருகிறது.

நம் நாட்டு இரும்பு, நமக்கு இன்னமும் பயன்படவில்லை; நம் நாட்டுக்கோ, வேற்றிடத்து இரும்பு வருகிறது; அது மட்டுமல்ல வேடிக்கை; அந்த வேற்றிடத்து இரும்பை வெட்டி எடுக்கவும், அதற்கான திட்டமிட்டுச் செயல்படவும், நம் நாட்டவர் வேற்றிடம் செல்கிறார்கள்!!

நாட்டிலே, காவிரிக் கரையிலே எண்ணெய் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

நம் நாட்டுக்கு இப்போது எண்ணெய் வேற்றிடத்திலிருந்து வருகிறது.

அதுமட்டுமல்ல, வேற்றிடத்தில் உள்ள எண்ணெய்த் தொழிலிடங்களில், நம் நாட்டு உழைப்பாளிகளும், நிபுணர் களும், வேலை செய்து வருகிறார்கள்.

சந்தனத்தை அரைத்தெடுத்துக் கொடுக்கிறோம் - சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவன் - மார்பிலே பூசிக்கொள்கிறான், மகிழ்ச்சியுடன்; அரைத்ததால் கையிலே வந்துற்ற "சுளுக்கு'க்காக ஈரக் களிமண்ணை அப்பிக்கொண்டு, நாம் வேதனைப்படுகிறோம்.

என்ன செய்யலாம்! நாம் வந்த வழி அப்படி!! - என்று பேசிப் புலம்புவர், வழி அறியாதார். அது போலன்றோ, ஆளவந்தார்களும் பேசுகின்றனர். என்ன செய்வது? நாம், டில்லியின் தயவை எதிர்பார்த்துத்தான் வாழவேண்டி இருக்கிறது, என்று. என்ன இல்லை இங்கே? ஏன் கை ஏந்திக் கஷ்டப்படுகிறீர்கள்? என்று கேட்டுவிட்டாலோ, உருட்டு கிறார்கள், மிரட்டுகிறார்கள், தம்பி! குத்திக் குடலெடுக்கிறார்கள், கொன்றே போட்டுவிடுகிறார்கள்.

உண்மையிலேயே இந்த நாடு, இன்னொருவர் தயவை நாடினால் மட்டுமே வாழ முடியும், என்ற விதத்திலே, இருக்குமானால், நீயும் நானும், நமது பக்கம் திரண்டு நிற்கும் நற்பண்பாளரும், ஏன், தனி அரசு என்று பேசப் போகிறோம்! நமக்கு என்ன, ஆளவந்தார்களின் அருவருப்பைத் தேடிக் கொள்வதிலே, இலாபமா? சுவையா? தலையாட்டிகளெல்லாம் தர்பாரில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்; எங்கோ கிடந்ததுகள் சாமரம் வீசிப் பங்காளிகளாகிவிடுவதைக் காண்கிறோம்; எதிர்த்துப் பார்த்தோம், பலன் இல்லை; இனி எடுபிடியாகிப் பார்ப்போம், பலன் கேட்போம், என்ற முறையிலே, ஓங்காரக் கூச்சலிட்டு ஒரு காலத்தில் உலவி வந்ததுகளெல்லாம், இன்று புகழ் "ரீங்காரம்' செய்து, வட்டமிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறோம்! எனினும் ஆளவந்தாரின் போக்கினை எதிர்த்து, இன்னல் வந்துற்றால் ஏற்றுக்கொள்கிறோம். என்ன காரணம்? நமது உள்ளத்தில் ஆட்சி செய்யும் உணர்வு, நம்மை உந்திக்கொண்டிருக்கிறது.

இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு!

என்ற பண், செவியில் கேட்டபடி இருக்கிறது. இந்நாட்டு அருவியின் சல சல ஒலியிலும், செந்நெல் மணிகளின் கலகல ஒலியிலும், இந்தப் பண்தான் கேட்கிறோம். ஓங்கி உயர்ந்த மலைகளும், தேனினைச் சொரிந்திடும் தருக்களும், நமக்கு இந்தப் பண்ணினைத்தான் இசைத்தபடி உள்ளன. அதன் வயப்பட்டு விட்டோம்; மற்ற எதுவும், நம்மை மயக்கிடாது; எந்த எதிர்ப்பும் நமது எண்ணத்தை மாய்த்திடாது; உடலைச் சாய்த்திடலாம்; இருட்டு நேரம், முரட்டு ஆள், கூர்மையான கத்தி, நேர்மை மறக்கும் அதிகாரி, இருந்தால் போதும், அதற்கு. ஆனால், எண்ணம், என்றும் இறந்துபடாது! காணும் காட்சிகள், கேட்டிடும் இசை எல்லாம், அந்த எண்ணத்தை மேலும் வலிவுள்ளதாக்கும்!!

தம்பி! உடன் பிறந்த தங்கைமார் கூடி, நிலாச் சோறு செய்து உண்டு களிப்பர் - கண்டிருக்கக்கூடும். பல்வேறு இல்லங் களின் செல்வங்கள் ஒரு இடத்தில் இருந்து, ஒன்றாகச் சமைத்து, ஒருசேர இருந்து உண்டு, ஆடிப்பாடி மகிழ்வர். எனினும், அந்த "விளையாட்டு' முடிந்ததும், அவரவர் இல்லம் செல்வர்; பிறகு, உண்பதும், உறங்குவதும் அவரவர் இல்லத்திலேயே.

அதுபோல், வேடிக்கைக்காக அல்ல, காரணத்தோடு, ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக, பல நாட்டவர், பல இனத்தினர் ஒரு இடத்திலிருந்து, ஒன்றுபட்டுக் காரியமாற்றலாம் - காரிய மாற்ற வேண்டி நேரிடும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரியம் குறைவின்றி நடந்தேறிய பிறகு, ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு இனமும், தத்தமது எல்லை நின்று, உழைத்து, உயர்ந்து, உயர்வினை உலகுக்கு விரும்பி அளித்து, உலகப் பொதுநலனை வளர்த்திடவே முனைதல் வேண்டும்.

உலகே ஒரு பெரும் நாடு ஆகி - எல்லைக் கோடுகள் அழிக்கப்பட்டு - இன இயல்புகள் நீக்கப்பட்டு - யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும், நன்னாள் வருமெனின், எவர் குறுக்கே நிற்பர்! ஜெர்மனி, ஜெர்மனி என்ற உணர்வை இழந்து, இத்தாலி தன் தனிப் பெயரை விட்டுக் கொடுத்து, பிரான்சு தன் பண்பு தனியானது என்று பேசுவதை விட்டொழித்து, அதுபோன்றே, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இரμயா ஆகிய எல்லா நாடுகளும், தத்தமது எல்லைகள் இயல்புகள், அரசு முறைகள், வளமூட்டும் வாய்ப்புகள் அனைத்தையும் "தியாகம்' செய்து, "ஒரே உலகு' ஆகிவிடத் திட்டமிட்டாலும், நாங்கள் மட்டும், "திராவிடம்' தனி நாடுதான் என்ற திட்டத்தை விடவேமாட்டோம் என்று, எவரும் கூறத் துணியார். ஆனால், "ஒரே உலகு' என்பதே உயர்ந்த இலட்சியம், எனவே உனக்கென ஒரு நாடு, ஒரு அரசு, வேண்டுமென்று கிளர்ச்சி நடத்தாதே, அது குறுகிய மனப்போக்கு என்று பேசுவது, பேரறிவினைக் காட்டுவதுமாகாது, நேர்மையுமாகாது.

***


"தேசியம்' என்பது கூட, ஒரு போலித் தத்துவந்தான்! மனித குலம் ஒன்றேயன்றி, அதிலே, மஞ்சள், கருப்பு, வெள்ளை, மாநிறம் என்றெல்லாம் குறிப்பிட்டு இது என் நாடு, இது என் அரசு, என்று வாதாடுவது பேதைமை என்றுகூடப் பெரியவர்கள் பேசுகிறார்கள் - சுவை இருக்கிறது பேச்சில், சூடுகூடப் பிறந்து விடுகிறது; ஆனால் செயல்முறை, எங்ஙனம் இருக்கிறது என்று கவனிக்கும்போதுதான், அந்தப் பெரியவர்கள் பேசுவது, மற்றவர்கள் கேட்டுத், தம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்க அல்ல என்பது விளக்கமாகத் தெரிகிறது.

***

ஓ, ஹென்றி சுவைமிகு சிறுகதைகள் பல எழுதிப் புகழ் ஈட்டிய, அமெரிக்க எழுத்தாளர். கதைகளில் சுவை என்றால், சொல்லடுக்கால், கட்டுக்கோப்பு முறையால் கிடைத்திடும் சுவை மட்டுமல்ல, கதையிலே இடம்பெற்று, படிப்போரின் நெஞ்சைத் தொட்டிடும் கருத்தால் கிடைத்திடும் சுவை.

***

ஒரு உணவு விடுதி! மிகப்பெரியது, புகழ்வாய்ந்தது. எப்போதும் இங்கு ஒரே ஆரவாரம், கூட்டம், குதூகலம், எங்கெங் கிருந்தெல்லாமோ, வருகிறார்கள் இந்த உணவு விடுதிக்கு.

கூட்டத்திலே சேராமல், ஆனால் அனைவரையும் கூர்ந்து கவனித்தபடி, ஒருவன் இருக்கிறான் - அவன் ஒரு சிந்தனையாளன். அரசியல், பொருளியல், மன இயல், இவைகளைப் பற்றி எல்லாம் நிரம்பத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. இந்த விடுதியிலே பலர் வருகிறார்கள், பல விஷயங் களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதற் காகவே வந்திருக்கிறான்.

விந்தையான மனிதர்கள், வேடிக்கையான இடம்! என்று எண்ணியபடி அவன் உட்கார்ந்திருக்கிறான். "நடமாடும் விந்தை என்று சொல்லத்தக்க விதத்தில், ஒருவன், உள்ளே நுழைந்து, ஒரு அதிர்வேட்டுச் சிரிப்பை வீசிவிட்டு, உட்கார இடம் தேடி, ஒதுக்குப்புறமான இடத்தில், தனியாக உட்கார்ந்திருக்கும் சிந்தனையாளனைப் பார்க்கிறான். என்ன எண்ணிக் கொண்டானோ, தெரியவில்லை. நேராக, அதே இடம் வந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறான்.

மயக்கும் பார்வை! இனிக்கும் பேச்சு! அந்த விந்தை மனிதனுக்கு.

"தாங்கள் எந்த ஊரோ?'' என்று கேட்டான் சிந்தனையாளன்.

"நானா? நான், நார்வே! அல்லது பலஸ்தீன்! பாரிஸ்!'' என்று எதாவது பதில் சொல்லுவான் என்பது சிந்தனையாளன் நினைப்பு. விந்தை மனிதனோ, உடனே பதில் கூறவில்லை. ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஏளனம், பச்சாதாபம், வியப்பு எல்லாம் கலந்த ஒரு புன்னகையைக் காட்டியபடி, "நானா? எந்த ஊர் என்றா கேட்கிறாய்! நான், என்ன சொல்ல! என் ஊர், உலகம்!! இப்போது பீகிங் நகரிலிருந்து புறப்பட்டு வருகிறேன்; டமாஸ்கஸ் நகர வியாபாரி ஒருவருக்கு காஷ்மீர் கம்பளம் தேவை என்று வெனிஸ் நண்பன் கூறக்கேட்டு இன்றிரவு பாக்தாத் கிளம்பு கிறேன், அந்த வியாபாரியைக் கண்டு பேச!'' என்று பதிலளித்தான்.

ஊர் எது என்று கேட்ட உடன், மளமளவென்று உலகையே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறானே என்று, ஆச்சரியம் சிந்தனையாளனுக்கு.

"உலகம், எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அவரவர்களுக்கு என்று ஒரு நாடு, ஒரு ஊர் உண்டு அல்லவா?'' என்று கேட்டான் சிந்தனையாளன்.

"இளைஞனே! பொதுவாகப் பலருக்கும் இருக்கும் பித்தம் உனக்கும் இருக்கிறது. என் நாடு, என் ஊர், என்பது அர்த்தமற்ற பேச்சு!! நாட்டின் மீது பற்றுவைப்பது என்ற தத்துவமே, போலி - சொத்தை. மண்ணும் விண்ணும், மரமும் மலரும், குதலை மொழிக் குழந்தையரும், குழல்மொழிக் குமரிகளும், எல்லா இடத்திலும், உலகமெங்கும் உண்டு! இதிலே, ஒரு குறிப்பிட்ட எல்லையை நாமாக வகுத்துக் கொண்டு, இது எனது நாடு, இதற்கு உலகிலே எங்கும் இல்லை ஈடு, என்று பேசுவது பேதைமை. ஒரு குறிப்பிட்ட இடத்தின்மீது பற்று இருப்பதாகப் பேசுவதும் பொருத்தமற்றது. எனக்கு இமயமலை பனிமூடி இருக்கும் காட்சியும், இலண்டன் மாநகரம் மூடுபனியில் மூழ்கிக் கிடப்பதும், நைல் நதியின் நேர்த்தியும், நேப்பிள்ஸ் நகர வசீகரமும், பெர்லின் நகரத் தொழிற்சாலையும், பிரான்சு நாட்டு மதுவகையும், மணிபுரி நடனமும், மாட்ரிட் நகர மாட்டுச் சண்டையும், எல்லாமே பிடிக்கும்! எல்லாம் என்னுடையவை என்ற உணர்ச்சிதான் எனக்கு - என் நாடு! அதிலே என் ஊர்! அதிலே என் தெரு! அதிலே நான் பிறந்த வீடு! நான் விளையாடிய மண் மேடு! அங்கு நான் கலைத்தெறிந்த குருவிக் கூடு! - என்றெல்லாம் பேசுவது கிடையாது. நான் மனிதன்! இந்த நாட்டுக்காரன் - அந்த நாட்டுக்காரன் என்று, என்னையே நான் மதிப்புக் குறைவாக்கிக்கொள்ளமாட்டேன். என் நாடு உலகம்!! மசூதியும் மாதாகோயிலும், தேரும் திருவிழாவும், உண்டு, இதிலே இதுதான் என்னுடையது, இது என்னுடையது அல்ல என்ற பேத உணர்ச்சி எனக்குக் கிடையாது. நான் சில வேளைகளில், சில இடங்களில் தங்குவேன் - ஆனால், அதிலே இன்ன இடம் என் இடம் என்று கூறி, மற்ற இடங்களை இழந்து விடுவேனா! மதியற்றவனல்லவா, அப்படிச் செய்வான்! நான் அரேபிய பாலைவனத்திலே ஒட்டகத்தின்மீது அமர்ந்து செல்வேன் கேரளத்திலே படகேறிச் செல்வேன். டார்ட்டாரியில் குதிரை! இலண்டனில் விமானம்! இரμயாவில், ரயில்! - இப்படி!! ஆனால், இதிலே இதுதான் என் நாடு, மற்றவை மற்ற எவரெவருக்கோ என்று பேசும், பஞ்சப் புத்திக்காரனல்ல நான்! எனக்கு. உலகம் உறைவிடம்! உலகநாதன் என்று என்னை அழைக்கலாம்.''

சிந்தனையாளன், வியப்பிலே அமிழ்ந்தே போனான்.

நாடு, நாட்டுப்பற்று, நாட்டுவிடுதலை, அதற்கான போர், அதிலே தியாகங்கள், வீர வரலாறுகள், இவைகளை எல்லாம் படித்து, நெஞ்சு நெக்குருகி இருக்கிறான் - இதோ "ஒருவன், தன்னை உலகநாதன் என்று கூறிக் கொள்கிறான் - நாட்டுப் பற்று என்று பேசுவதே சிறுபிள்ளைத்தனம் என்று கேலி செய்கிறான் - இவனல்லவா, தலைசிறந்த தத்துவவாதி - நாட்டுப் பற்று எனும் பாசத்தைக்கூடக் கடந்தவன்! - என்று எண்ணி வியந்தான்.

"என் நாடு இங்கிலாந்து என்று கூறிவிட்டால், உனக்குக் கரித்துண்டு மட்டும்தான் சொந்தமாகும்; ஆப்பிரிக்காவிலே உள்ள வைரம், உனக்கு இருக்காது - தமிழ்நாட்டு முத்து உனக்கல்ல, ஆப்கன் நாட்டு பழவகை உனக்கில்லை...'' என்று விந்தை மனிதன் கூறக்கேட்டு, சிந்தனையாளன், இவனே "இலட்சிய புருஷன்' - இவன் கூறுவதே உண்மையான தத்துவம், தேசியம் என்பதுகூடச் சொத்தை வாதம், நாமும் "உலகநாதன்' ஆகிவிடவேண்டும், குறுகிய மனப்பான்மை கூடாது, எல்லைக் கோடுகளிலே சிக்கிக் கொள்ளலாகாது என்றெல்லாம், தீர்மானித்தான்.

உலகநாதன், சிறிது நேரம் இருந்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டு, கிளம்பினான்.

"சிந்தனையாளன், செந்தேன் உண்டவன் போலாகி, அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

திடீரென்று, பெருங் கூச்சல் கேட்டது.

ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதும், தாறுமாறாகப் பேசிக் கொள்வதும், கேட்டது.

உதைப்பேன்! கொன்றுவிடுவேன்! சுட்டுத் தள்ளுவேன்! - என்று கூக்குரல் கிளம்பிற்று.

பரபரப்பு ஏற்பட்டது. அமளி மூண்டுவிட்டது. மேஜைகள் நாற்காலிகள், பறந்தன, உடைந்தன. உண்டு களித்திருந்தோர் மூலைக்கு ஒருவராக ஓடலாயினர்.

பலப்பல நூற்றாண்டுகளாகப் பாவாணர்களும், அரசியல் ஆசிரியர்களும், எழுச்சியூட்டி நிலைநாட்டிய தேசியம் - நாட்டுப் பற்று - என்பதே போலித்தத்துவம் என்ற பேருண்மையை, உலகநாதனின் உன்னதமான விளக்கத்தால் பெற்றுப் பெருமிதம் அடைந்திருக்கும் வேளையில், ஏதோ ஒரு அற்ப விஷயத்துக்காக, இங்கு அமளி செய்கிறார்களே அறிவற்றவர்கள் பேருண்மையைக் கேட்டறியாப் பித்தர்கள், என்று எண்ணி வெறுப்படைந்தான், சிந்தனையாளன்.

இதற்குள், அமளி பலமாகிவிட்டது. ஒருவன் பலமாகத் தாக்கப்பட்டுக் கீழே சாய்ந்தான். அவன் உடலில் பல இடங் களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

"ஐயோ பாவம்! எவனையோ, பலமாகத் தாக்கி விட்டார்களே!'' என்று முணு முணுத்தபடி, அந்த இடம் நோக்கிச் சென்றான், சிந்தனையாளன். அடிபட்டவனைக் கீழே கிடத்தி இருந்தார்கள். அருகே சென்று பார்த்தான். திடுக்கிட்டுப் போனான்; அடிபட்டுக் கீழே கிடந்தவன், உலகநாதன்.

"ஐயா! இவரை ஏன் இப்படித் தாக்கினீர்கள்? அமளிக்குக் காரணம் என்ன?'' என்று பரிவுடன் சிந்தனையாளன் கேட்டான்.

"பயல், முன்கோபக்காரன். யாரோ ஒருவன், இவனுடைய ஊரிலே சாக்கடை நாற்றம் மூக்கைத் துளைக்கும் என்று சொன்னானாம். ஆஹா! என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்? என்று கூவி, அவன் மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக; பயல் கீழே உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது! முட்டாள் தனமல்லவா அது!'' என்று ஒருவர் விளக்கம் தந்தார்.

உலகநாதனைப் பார்த்தான் - அவன் தன்னிடம், தேசியமே போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் - அவன் ஊரைப்பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற எல்லைக் கோடு மீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! - என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு.

***

தம்பி! ஓ ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில், புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து - அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை.

"ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம் தமது நாடு தமது ஊர் என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக் கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால் பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக் கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ, ஹென்ரி.

திராவிட நாடாவது, தமிழ் நாடாவது, இந்தியா ஒரே நாடு, இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப் பான்மை, என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி! ஓ ஹென்ரியின் கதையை நினைத்துக்கொள்.

***

நாம், திராவிடம் கேட்கும்போது, பாரதம் - ஒரே இந்தியா - என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள் - பலர் - மேதாவித்தனம் என்ற எண்ணத்தில். அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன் தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள், தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.

அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி.

பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.

மகாராஷ்டிரம் கிடைத்த பிறகுதான், பம்பாய், ஆமதாபாத் அமளி அடங்கிற்று.

"நாக நாடு' என்று தனி அந்தஸ்துத் தருகிறோம், ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் செலவுக்குத் தருகிறோம், இந்தியாவில் ஒரு பகுதி என்ற ஏற்பாட்டுக்காகிலும் இணங்குக, என்று முகவாய்க் கட்டையைப் பிடித்துக் கொண்டு, டில்லி, கெஞ்சுகிறது, பார்க்கிறோம்.

இவர்களேதான், "திராவிடம்' என்று நாம் பேசும்போது, செச்சே! என்ன பேதைமை! பாரத தேசம் என்று சொல்லுங்கள்! - என்று உபதேசம் பேசுகிறார்கள் - உணவு விடுதியிலே கண்டோமே உலகநாதன், அவனைப் போல.

***

நமக்கு வேண்டிய உரிமையின் அருமையை, மற்றவர்கள், புரிந்துகொள்வார்கள், அக்கரை காட்டுவார்கள், ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதானே!

நமக்குத்தானே, பிரச்சினை புரிய முடியும். நாம்தான், கேட்டுக் கொள்ள வேண்டும்,

இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு?

என்ற கேள்வியை.

அண்ணன்,


28-8-'60