அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இந்நாட்டில் வாழ்வதற்கு!
2

"தேசியம்' என்பது கூட, ஒரு போலித் தத்துவந்தான்! மனித குலம் ஒன்றேயன்றி, அதிலே, மஞ்சள், கருப்பு, வெள்ளை, மாநிறம் என்றெல்லாம் குறிப்பிட்டு இது என் நாடு, இது என் அரசு, என்று வாதாடுவது பேதைமை என்றுகூடப் பெரியவர்கள் பேசுகிறார்கள் - சுவை இருக்கிறது பேச்சில், சூடுகூடப் பிறந்து விடுகிறது; ஆனால் செயல்முறை, எங்ஙனம் இருக்கிறது என்று கவனிக்கும்போதுதான், அந்தப் பெரியவர்கள் பேசுவது, மற்றவர்கள் கேட்டுத், தம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்க அல்ல என்பது விளக்கமாகத் தெரிகிறது.

***

ஓ, ஹென்றி சுவைமிகு சிறுகதைகள் பல எழுதிப் புகழ் ஈட்டிய, அமெரிக்க எழுத்தாளர். கதைகளில் சுவை என்றால், சொல்லடுக்கால், கட்டுக்கோப்பு முறையால் கிடைத்திடும் சுவை மட்டுமல்ல, கதையிலே இடம்பெற்று, படிப்போரின் நெஞ்சைத் தொட்டிடும் கருத்தால் கிடைத்திடும் சுவை.

***

ஒரு உணவு விடுதி! மிகப்பெரியது, புகழ்வாய்ந்தது. எப்போதும் இங்கு ஒரே ஆரவாரம், கூட்டம், குதூகலம், எங்கெங் கிருந்தெல்லாமோ, வருகிறார்கள் இந்த உணவு விடுதிக்கு.

கூட்டத்திலே சேராமல், ஆனால் அனைவரையும் கூர்ந்து கவனித்தபடி, ஒருவன் இருக்கிறான் - அவன் ஒரு சிந்தனையாளன். அரசியல், பொருளியல், மன இயல், இவைகளைப் பற்றி எல்லாம் நிரம்பத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. இந்த விடுதியிலே பலர் வருகிறார்கள், பல விஷயங் களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதற் காகவே வந்திருக்கிறான்.

விந்தையான மனிதர்கள், வேடிக்கையான இடம்! என்று எண்ணியபடி அவன் உட்கார்ந்திருக்கிறான். "நடமாடும் விந்தை என்று சொல்லத்தக்க விதத்தில், ஒருவன், உள்ளே நுழைந்து, ஒரு அதிர்வேட்டுச் சிரிப்பை வீசிவிட்டு, உட்கார இடம் தேடி, ஒதுக்குப்புறமான இடத்தில், தனியாக உட்கார்ந்திருக்கும் சிந்தனையாளனைப் பார்க்கிறான். என்ன எண்ணிக் கொண்டானோ, தெரியவில்லை. நேராக, அதே இடம் வந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறான்.

மயக்கும் பார்வை! இனிக்கும் பேச்சு! அந்த விந்தை மனிதனுக்கு.

"தாங்கள் எந்த ஊரோ?'' என்று கேட்டான் சிந்தனையாளன்.

"நானா? நான், நார்வே! அல்லது பலஸ்தீன்! பாரிஸ்!'' என்று எதாவது பதில் சொல்லுவான் என்பது சிந்தனையாளன் நினைப்பு. விந்தை மனிதனோ, உடனே பதில் கூறவில்லை. ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஏளனம், பச்சாதாபம், வியப்பு எல்லாம் கலந்த ஒரு புன்னகையைக் காட்டியபடி, "நானா? எந்த ஊர் என்றா கேட்கிறாய்! நான், என்ன சொல்ல! என் ஊர், உலகம்!! இப்போது பீகிங் நகரிலிருந்து புறப்பட்டு வருகிறேன்; டமாஸ்கஸ் நகர வியாபாரி ஒருவருக்கு காஷ்மீர் கம்பளம் தேவை என்று வெனிஸ் நண்பன் கூறக்கேட்டு இன்றிரவு பாக்தாத் கிளம்பு கிறேன், அந்த வியாபாரியைக் கண்டு பேச!'' என்று பதிலளித்தான்.

ஊர் எது என்று கேட்ட உடன், மளமளவென்று உலகையே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறானே என்று, ஆச்சரியம் சிந்தனையாளனுக்கு.

"உலகம், எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அவரவர்களுக்கு என்று ஒரு நாடு, ஒரு ஊர் உண்டு அல்லவா?'' என்று கேட்டான் சிந்தனையாளன்.

"இளைஞனே! பொதுவாகப் பலருக்கும் இருக்கும் பித்தம் உனக்கும் இருக்கிறது. என் நாடு, என் ஊர், என்பது அர்த்தமற்ற பேச்சு!! நாட்டின் மீது பற்றுவைப்பது என்ற தத்துவமே, போலி - சொத்தை. மண்ணும் விண்ணும், மரமும் மலரும், குதலை மொழிக் குழந்தையரும், குழல்மொழிக் குமரிகளும், எல்லா இடத்திலும், உலகமெங்கும் உண்டு! இதிலே, ஒரு குறிப்பிட்ட எல்லையை நாமாக வகுத்துக் கொண்டு, இது எனது நாடு, இதற்கு உலகிலே எங்கும் இல்லை ஈடு, என்று பேசுவது பேதைமை. ஒரு குறிப்பிட்ட இடத்தின்மீது பற்று இருப்பதாகப் பேசுவதும் பொருத்தமற்றது. எனக்கு இமயமலை பனிமூடி இருக்கும் காட்சியும், இலண்டன் மாநகரம் மூடுபனியில் மூழ்கிக் கிடப்பதும், நைல் நதியின் நேர்த்தியும், நேப்பிள்ஸ் நகர வசீகரமும், பெர்லின் நகரத் தொழிற்சாலையும், பிரான்சு நாட்டு மதுவகையும், மணிபுரி நடனமும், மாட்ரிட் நகர மாட்டுச் சண்டையும், எல்லாமே பிடிக்கும்! எல்லாம் என்னுடையவை என்ற உணர்ச்சிதான் எனக்கு - என் நாடு! அதிலே என் ஊர்! அதிலே என் தெரு! அதிலே நான் பிறந்த வீடு! நான் விளையாடிய மண் மேடு! அங்கு நான் கலைத்தெறிந்த குருவிக் கூடு! - என்றெல்லாம் பேசுவது கிடையாது. நான் மனிதன்! இந்த நாட்டுக்காரன் - அந்த நாட்டுக்காரன் என்று, என்னையே நான் மதிப்புக் குறைவாக்கிக்கொள்ளமாட்டேன். என் நாடு உலகம்!! மசூதியும் மாதாகோயிலும், தேரும் திருவிழாவும், உண்டு, இதிலே இதுதான் என்னுடையது, இது என்னுடையது அல்ல என்ற பேத உணர்ச்சி எனக்குக் கிடையாது. நான் சில வேளைகளில், சில இடங்களில் தங்குவேன் - ஆனால், அதிலே இன்ன இடம் என் இடம் என்று கூறி, மற்ற இடங்களை இழந்து விடுவேனா! மதியற்றவனல்லவா, அப்படிச் செய்வான்! நான் அரேபிய பாலைவனத்திலே ஒட்டகத்தின்மீது அமர்ந்து செல்வேன் கேரளத்திலே படகேறிச் செல்வேன். டார்ட்டாரியில் குதிரை! இலண்டனில் விமானம்! இரμயாவில், ரயில்! - இப்படி!! ஆனால், இதிலே இதுதான் என் நாடு, மற்றவை மற்ற எவரெவருக்கோ என்று பேசும், பஞ்சப் புத்திக்காரனல்ல நான்! எனக்கு. உலகம் உறைவிடம்! உலகநாதன் என்று என்னை அழைக்கலாம்.''

சிந்தனையாளன், வியப்பிலே அமிழ்ந்தே போனான்.

நாடு, நாட்டுப்பற்று, நாட்டுவிடுதலை, அதற்கான போர், அதிலே தியாகங்கள், வீர வரலாறுகள், இவைகளை எல்லாம் படித்து, நெஞ்சு நெக்குருகி இருக்கிறான் - இதோ "ஒருவன், தன்னை உலகநாதன் என்று கூறிக் கொள்கிறான் - நாட்டுப் பற்று என்று பேசுவதே சிறுபிள்ளைத்தனம் என்று கேலி செய்கிறான் - இவனல்லவா, தலைசிறந்த தத்துவவாதி - நாட்டுப் பற்று எனும் பாசத்தைக்கூடக் கடந்தவன்! - என்று எண்ணி வியந்தான்.

"என் நாடு இங்கிலாந்து என்று கூறிவிட்டால், உனக்குக் கரித்துண்டு மட்டும்தான் சொந்தமாகும்; ஆப்பிரிக்காவிலே உள்ள வைரம், உனக்கு இருக்காது - தமிழ்நாட்டு முத்து உனக்கல்ல, ஆப்கன் நாட்டு பழவகை உனக்கில்லை...'' என்று விந்தை மனிதன் கூறக்கேட்டு, சிந்தனையாளன், இவனே "இலட்சிய புருஷன்' - இவன் கூறுவதே உண்மையான தத்துவம், தேசியம் என்பதுகூடச் சொத்தை வாதம், நாமும் "உலகநாதன்' ஆகிவிடவேண்டும், குறுகிய மனப்பான்மை கூடாது, எல்லைக் கோடுகளிலே சிக்கிக் கொள்ளலாகாது என்றெல்லாம், தீர்மானித்தான்.

உலகநாதன், சிறிது நேரம் இருந்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டு, கிளம்பினான்.

"சிந்தனையாளன், செந்தேன் உண்டவன் போலாகி, அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

திடீரென்று, பெருங் கூச்சல் கேட்டது.

ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதும், தாறுமாறாகப் பேசிக் கொள்வதும், கேட்டது.

உதைப்பேன்! கொன்றுவிடுவேன்! சுட்டுத் தள்ளுவேன்! - என்று கூக்குரல் கிளம்பிற்று.

பரபரப்பு ஏற்பட்டது. அமளி மூண்டுவிட்டது. மேஜைகள் நாற்காலிகள், பறந்தன, உடைந்தன. உண்டு களித்திருந்தோர் மூலைக்கு ஒருவராக ஓடலாயினர்.

பலப்பல நூற்றாண்டுகளாகப் பாவாணர்களும், அரசியல் ஆசிரியர்களும், எழுச்சியூட்டி நிலைநாட்டிய தேசியம் - நாட்டுப் பற்று - என்பதே போலித்தத்துவம் என்ற பேருண்மையை, உலகநாதனின் உன்னதமான விளக்கத்தால் பெற்றுப் பெருமிதம் அடைந்திருக்கும் வேளையில், ஏதோ ஒரு அற்ப விஷயத்துக்காக, இங்கு அமளி செய்கிறார்களே அறிவற்றவர்கள் பேருண்மையைக் கேட்டறியாப் பித்தர்கள், என்று எண்ணி வெறுப்படைந்தான், சிந்தனையாளன்.

இதற்குள், அமளி பலமாகிவிட்டது. ஒருவன் பலமாகத் தாக்கப்பட்டுக் கீழே சாய்ந்தான். அவன் உடலில் பல இடங் களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

"ஐயோ பாவம்! எவனையோ, பலமாகத் தாக்கி விட்டார்களே!'' என்று முணு முணுத்தபடி, அந்த இடம் நோக்கிச் சென்றான், சிந்தனையாளன். அடிபட்டவனைக் கீழே கிடத்தி இருந்தார்கள். அருகே சென்று பார்த்தான். திடுக்கிட்டுப் போனான்; அடிபட்டுக் கீழே கிடந்தவன், உலகநாதன்.

"ஐயா! இவரை ஏன் இப்படித் தாக்கினீர்கள்? அமளிக்குக் காரணம் என்ன?'' என்று பரிவுடன் சிந்தனையாளன் கேட்டான்.

"பயல், முன்கோபக்காரன். யாரோ ஒருவன், இவனுடைய ஊரிலே சாக்கடை நாற்றம் மூக்கைத் துளைக்கும் என்று சொன்னானாம். ஆஹா! என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்? என்று கூவி, அவன் மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக; பயல் கீழே உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது! முட்டாள் தனமல்லவா அது!'' என்று ஒருவர் விளக்கம் தந்தார்.

உலகநாதனைப் பார்த்தான் - அவன் தன்னிடம், தேசியமே போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் - அவன் ஊரைப்பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற எல்லைக் கோடு மீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! - என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு.

***

தம்பி! ஓ ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில், புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து - அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை.

"ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம் தமது நாடு தமது ஊர் என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக் கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால் பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக் கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ, ஹென்ரி.

திராவிட நாடாவது, தமிழ் நாடாவது, இந்தியா ஒரே நாடு, இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப் பான்மை, என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி! ஓ ஹென்ரியின் கதையை நினைத்துக்கொள்.

***

நாம், திராவிடம் கேட்கும்போது, பாரதம் - ஒரே இந்தியா - என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள் - பலர் - மேதாவித்தனம் என்ற எண்ணத்தில். அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன் தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள், தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.

அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி.

பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.

மகாராஷ்டிரம் கிடைத்த பிறகுதான், பம்பாய், ஆமதாபாத் அமளி அடங்கிற்று.

"நாக நாடு' என்று தனி அந்தஸ்துத் தருகிறோம், ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் செலவுக்குத் தருகிறோம், இந்தியாவில் ஒரு பகுதி என்ற ஏற்பாட்டுக்காகிலும் இணங்குக, என்று முகவாய்க் கட்டையைப் பிடித்துக் கொண்டு, டில்லி, கெஞ்சுகிறது, பார்க்கிறோம்.

இவர்களேதான், "திராவிடம்' என்று நாம் பேசும்போது, செச்சே! என்ன பேதைமை! பாரத தேசம் என்று சொல்லுங்கள்! - என்று உபதேசம் பேசுகிறார்கள் - உணவு விடுதியிலே கண்டோமே உலகநாதன், அவனைப் போல.

***

நமக்கு வேண்டிய உரிமையின் அருமையை, மற்றவர்கள், புரிந்துகொள்வார்கள், அக்கரை காட்டுவார்கள், ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதானே!

நமக்குத்தானே, பிரச்சினை புரிய முடியும். நாம்தான், கேட்டுக் கொள்ள வேண்டும்,

இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு?
என்ற கேள்வியை.

அண்ணன்,

28-8-'60