அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இது போதாதா?
1

வினோபா பாவே, கஜேந்திர கட்கர்
ஜெயப்பிரகாசரின் இடித்துரைகள்
மக்களின் ஆர்வம் நாட்டுப் பாதுகாப்பிலே
போர்ச் சூழ்நிலையில் கட்சிக் கண்ணோட்டத்துடன் காரியமாற்றுகிறது காங்கிரஸ் கட்சி.

தம்பி!

மகன், மன்னன்போல இருக்கிறானா! உன் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறதா அந்தக் காட்சி! மெத்தவும் நல்லவனப்பா நீ!! மெத்தவும் நல்லவன். ஆனால், உன் கண்களுக்குத் தெரிவது போல என் கண்களுக்குத் தெரியவில்லை. பாசம் நிரம்பிய மனம்; என்ற போதிலும் என் கண்கள் அவனுடைய உண்மை வடிவத்தைத்தான் காண்கின்றன. அவனைக் கண்டு நான் அகமகிழ்ச்சி கொள்வதற்கும் இல்லை; பெருமைப்படுவதற்கும் இல்லை; மனம் வெதும்பிடும் நிலையில் நான் இருக்கிறேன்.''

ஊர் கொண்டாடும் நிலையை, மகன் தன் தந்திரத்தாலே ஏற்படுத்திக் கொண்டாலும் அவனுடைய உண்மையான இயல்பு அறிந்து மனம் நொந்து கிடந்திடும் நிலையில் உள்ள தந்தை பேசுவது, முன்னாலே தரப்பட்டிருப்பது.

வினோபாபாவே, தமது பிரார்த்தனைக் கூட்டங்களில் இன்றைய ஆட்சிபற்றிப் பேசுவதைக் காண்பவர்களுக்கு, இத்தகைய தந்தையின் மனக்குமுறல்தான் நினைவிற்கு வரும்.

போர் நெருக்கடி காரணமாக, நாட்டிலே ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பொன்னான வாய்ப்பாக்கிக் கொண்டு, ஆளுங்கட்சி யான காங்கிரஸ் கட்சி, தனக்கு புதுப் பொலிவும், அசைக்க முடியாத வலிவும் கிடைத்து விட்டதாகப் பெருமிதம் கொண்டிருக்கிறது.

நாட்டினைப் பாகிஸ்தானியர் நாசமாக்கிடக் கிளம்பியது கண்டு கொதித்தெழுந்த மக்கள், நாட்டினை ஆண்டிடும் கூட்டத்தினர் மீது தமக்கு உள்ள வெறுப்பினையும் மறந்து அவர்க்குத் துணை நின்று, பகைவர்களை வீழ்த்திடும் செய-னைச் செம்மையாகச் செய்து வருகின்றனர். இது ஆளுங்கட்சிக்கு, ஒரு இன்பமான மனமயக்கத்தைத் தரத்தான் செய்யும். இயற்கைதான். ஆனால், இந்த நிலை காரணமாக, மக்கள் இந்த ஆட்சியாளர்களால் தொடர்ந்து அடைந்து வரும் தொல்லைகளை மறந்தே போவார்கள், துரைத்தனத்தை நடத்தத் தகுதியுள்ளவர்கள் இந்தக் கட்சியினரே என்று நம்பி விடுவர் என்று கருதுவது எத்தனை பெரிய தவறு என்பதனை எடுத்துக் காட்டுவதுபோல ஆசார்ய வினோபாபாவே பேசி வருகிறார்.

இந்த நேரத்தில், எத்தனை மனக்குமுறல் இருப்பினும் மக்கள் அதனை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலே மூழ்கி, மேலும் தொடர்ந்து மோசமான முறையிலே ஆட்சியை நடத்திடுவரே, நாமாகிலும் உரிய நேரத்திலேயே இடித்துக் கூறுவோம் என்ற எண்ணத்தில், வினோபா பேசி வருகிறார் என்று தெரிகிறது.

இந்தியா - பாகிஸ்தான் போர் என்பது இரு நாடுகளுக் குள்ளே நடைபெறும் போர் என்று மட்டும் கருதுவது முழு அளவு உண்மையாக இருக்க முடியாது; இரு வேறு அரசு முறைகளுக்குள்ளே ஏற்பட்டுள்ள மோதுதல் இது என்பதே முழு உண்மை என்பதனை அடிக்கடி லால்பகதூர் விளக்கிக் காட்டிய படி இருக்கிறார்.

மக்களின் நலனைக் கவனியாமல் மமதை ஆட்சி நடப்பது மக்களின் உரிமைகளை மதிக்காது மதோன்மத்தர்கள், மதத்தைக் காட்டி மக்களை மாக்கள் நிலைக்குத் துரத்துவதுமான ஆட்சி நடப்பது பாகிஸ்தானில்; உரிமைகள் வழங்கப்பட்டு, நலன்கள் பேணி வளர்க்கப்பட்டு வருவதான ஆட்சி நடப்பது இந்தியாவில் - இந்த இரு வேறு ஆட்சி முறைகளுக்கும் மோதல் நடைபெறுகிறது என்பது வாதமாக மட்டுமின்றி, நிலைத்து நிற்கத்தக்க உண்மையாகிட வேண்டுமென்றால், இங்கு மக்களின் நலன் பேணி வளர்க்கப்படுவதிலும், உரிமைகள் வழங்கப்படு வதிலும், ஆட்சியினர் திறமையையும் காட்டிட வேண்டும்; தகுதியினையும் சந்தேகத்துக்கு இடமின்றி மெய்ப்பித்து வர வேண்டும்.

நாட்டுக்கே பேராபத்து என்கின்றபோது, தனி மனிதர்கள் தமது நலனையா முக்கியமானதாகக் கருதுவது என்று கேட்பர். பேதையும் நாட்டுக்கு நெருக்கடி இருந்திடும்போது தனது நலத்திலே நாட்டம் காட்டிட மாட்டான். நாடு ஓர் போரினில் ஈடுபட்டிருக்கும்போது, மக்கள் கட்டுப்பாட்டு உணர்ச்சிக்கு மதிப்பு அளித்திட வேண்டுமேயன்றி அந்தச் சமயத்திலா, தங்களுக்கான உரிமைகளைப் பற்றிப் பேசுவது என்று கேட்பர். எந்த அறிவி-யும், நாட்டுக்கு ஆபத்துச் சூழ்ந்துள்ள வேளையில், தனது உரிமைகளை வலியுறுத்தமாட்டான்.

இதுபற்றி எள்ளளவும் ஐயப்பாடு கொள்வதற்கு இடமின்றி நம் நாட்டு மக்கள் நடந்து காட்டியுள்ளனர்; பல்வேறு அரசியல் கட்சிகளும் நடந்து கொண்டுள்ளன. எனவே, பன்னிப் பன்னி, போர்க் காலத்திலா, என் நலம்! என் உரிமை! என்று எக்காளமிடுவது? நாட்டுப்பற்று அற்றவர்களன்றோ இந்தப் போக்குக் கொள்வர் என்று பேசிக் கொண்டிருப்பது அறமுமல்ல, பொருத்தமுமாகாது.

போர்ச் சூழ்நிலையின் காரணமாக, எத்தனை பெரிய தியாக உணர்ச்சி காட்டவும் மக்கள் முன்வந்துள்ளனர்; உண்மை; ஆனால், அதேபோது, ஆட்சி நடாத்துவோர் மீது, அவர்களின் நடவடிக்கைகளாலும், மேற்கொண்டுள்ள முறைகளினாலும் ஏறிப் போயுள்ள கறை அடியோடு துடைக்கப்பட்டு விட்டதாகவோ, தூய்மையாளர்களாகி விட்டனர் என்றோ மக்கள் நம்பிக் கிடந்திட மாட்டார்கள்; நல்லாட்சி முறைகள் குறித்து வலியுறுத்தத் தவறவும் மாட்டார்கள்.

பல்வேறு போர்முனைகளில் வீரர்கள் வெற்றி ஈட்டித் தந்தனர்; பகைவர்களை முறியடித்துள்ளனர்; பாராட்டுதலுக்கு உரியவராகின்றனர். ஆற்றல் மறவர்களைப் போற்றி வரவேற்கின்றனர்; அவர்கள் பெற்றுள்ள புண்கள் புகழ்க் குறிகள் என்று எழுச்சியுடன் செப்புகின்றனர்; இத்தகு திறம் படைத்த வீரர் துணை இருக்கும்போது இனி எதற்கு நாம் பயப்பட வேண்டும்; ஜெயமுண்டு! பயம் இல்லை மனமே! என்று சிந்து பாடுகின்றனர்.

அந்தப் பெருமிதத்துடன், எழுச்சியுடன், நம்பிக்கையுடன், ஆட்சி நடாத்திடும் கட்சியினர் குறித்து மக்கள் பேசிட முடிகிறதா! வினோபா பாவேவாலேயே முடியவில்லையே!

எமது படையினர் எதிரியை முறியடித்திடுவர் என்ற நம்பிக்கை எமக்கு நிரம்ப உண்டு, அவர்தம் ஆற்றலை, அக்னூர் முனையிலிருந்து பார்மார் முனைவரையில், டாங்கிச் சண்டையி லிருந்து விமானப் போர் வரையிலே கண்டோம்; பாய்ந்து சென்றிட, உயிரைத் துச்சமென்று எண்ணி வீரப் போரிட்டுப் பகைப் படையினை முறியடித்திட அவர்கள் தயக்கம் காட்டினார்கள் இல்லை. தம்மிடம் தரப்பட்டுள்ளனவற்றினைக் காட்டிலும், வலிவுமிக்க படைக் கருவிகளைப் பகைவர்கள் கொண்டுள்ளனர் என்ற போதிலும், வலிவிலே குறைந்த தரமுள்ளது என்று நிபுணர்கள் கூறத்தக்க விதமான படைக் கலன்களே இருந்தபோதிலும், கருவியின் வலிவு அதனைக் கொண்டோனின் கரத்தைப் பொறுத்தது, திறத்தைப் பொறுத்தது, நெஞ்சின் உறுதியைப் பொறுத்தது என்ற நேர்த்தியான நம்பிக்கை கொண்டு, வீரதீரம் காட்டி வெற்றி ஈட்டினர், தமது குருதி கொட்டி அவர்கள் சூழ்ச்சித் திறன்மிக்க, போர்க்கருவிகளின் துணை மிகக் கொண்ட பகைப் படையினை, திறத்தாலும் தீரத்தாலும், தன்னல மறுப்புடனும் தளராத நம்பிக்கையுடனும் வீழ்த்தினரே, விரட்டி அடித்தனரே, அதுபற்றி மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் பேசிடும்போது, மக்களின் மனத்திலே மற்றோர் வினா தன்னாலே எழாமலிருந்திடுமா! இத்துணை ஆற்றல் பெற்றுள்ளனரே இந்த வீரர்கள்! எத்தனை பெரிய ஆபத்தினின்றும் நாட்டை மீட்டளித்துள்ளனர்! இவர் காட்டிடும் திறம்போன்ற திறம் காட்டி, பகைவர்களை இவர்கள் வீழ்த்தியதுபோல, நம்முடைய போற்றுதலுக்கு உரியவர்களாகக் கடந்த 18 ஆண்டுகளாக விளங்கி வருபவர்களும், ஆதரவினைத் தொடர்ந்து பெற்று வருபவர்களுமான ஆட்சி நடாத்திவரும் காங்கிரஸ் கட்சியினர் மக்களின் நலனைப் பெற்றளித்திடும் துறையில், பசியோடும் பஞ்சத்தோடும் பற்றாக்குறையோடும், வறுமையுடனும் பேதத்துடனும் மூண்டிட்ட போரினிலே, வெற்றி ஈட்டிக் காட்டினரா? வேதனையைத் துடைத்தனரா? என்று தம்மைத் தாமே கேட்டுக் கொள்ளத்தான் செய்கின்றனர். கிடைத்திடும் பதில் என்ன? லாகூருக்கு வெளியே முகாம் அமைத்திருக்கிறோம்! காசூர் முனையிலே வலிவுடன் நிற்கிறோம்! பாகிஸ்தானிய டாங்கிப் படையிலே பெரும் பகுதியினை அழித்துவிட்டோம்! விமானங்களை வீழ்த்திவிட்டோம்! எல்லா முனையிலும் இறுமாப்பாளர்கள் இடுப்பொடிந்த நிலையில் தான் உள்ளனர் என்று படையினரால் கூறிட முடிகிறதே, அவர் தம் பேச்சே இசையாகி இனிப்பளிக்கிறதே, அதுபோல 18 ஆண்டுகளாக ஆட்சி நடாத்திடும் காங்கிரஸ் கட்சியினால் மக்களின் உரிமைகளை வழங்குவதிலும், அவர் நலன் பேணி வளர்ப்பதிலும் பெற்ற வெற்றிப் பட்டியலைக் காட்டிட முடிகிறதா! வினோபா பாவே உள்ள பட்டியலைக் காட்டுகிறார், காண்போரின் கருத்திலே உண்மை நிலை பதிந்திடும் வகையில்.

பீகார் மாநிலத்தில் சகார்சா என்னும் இடத்தில், சென்ற திங்கள் முப்பதாம் நாள் மூதறிஞர் வினோபா பேசுகிறார்.

சுதந்திரம் கிடைத்த இந்த 18 ஆண்டுக் காலமாக, உழவன் வாழ்வும் செம்மைப்படவில்லை, அன்றாடத் தேவைப் பொருள்களான உணவு, பால் வெண்ணெய் போன்ற பண்டங்களின் உற்பத்தியும் பெருகவில்லை, இது வருந்தத்தக்கது.

உழவன் வாழவில்லை என்றால் நாடே வாழவில்லை என்பதுதான் பொருள். ஏனெனில், நூற்றுக்கு எண்பது பேர் இங்கு உழவர்கள். இவர்களின் வாழ்வே செம்மைப்படவில்லை. பதினெட்டு ஆண்டுக் காலமாகக் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடாத்தியதில்!

போர்முனை வெற்றி பற்றிப் பூரித்து நிற்கிறோம், அந்த வெற்றியினைப் பெற்றளித்த வீரர் தம்மை வாழ்த்தி மகிழ்கிறோம், ஆனால், இந்த 18 ஆண்டுகளாக ஏர்முனை யைக் கூடச் செம்மைப்படுத்த முடியவில்லையே ஆட்சி நடாத்தும் காங்கிரசினால், இதனை எண்ணிடும்போது நெஞ்சு பிளந்து போகும் நிலையன்றோ எழுகிறது!

படைவீரர்களிடம் கொடுத்ததுபோலப் பட்டம் சூட்டிக் கொண்ட காங்கிரஸ் கட்சியிடம் தேவைப்படும் பொருளை, கருவியைத் தராமலிருந்தனரோ மக்கள்! கேட்டதை எல்லாம் கொடுத்தனர், தட்டாமல் தயங்காமல் பல ஆண்டுகள்; தத்தளித்திடும் நிலையிலும் தந்தனர்.

அன்னியனான வெள்ளையன் உருட்டி மிரட்டி, ஈட்டிமுனை காட்டிப் பெற்ற வரித் தொகையுடன், ஆட்சி நடத்த முற்பட்ட காங்கிரஸ் கட்சி, உதட்டிலே புன்னகை காட்டி, மகாத்மா படத்தைக் காட்டி, சத்தியாக்கிரகக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டிப் பெற்றுள்ள வரித் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்திடின், எவ்வளவு பெரிய அளவிலே படைக்கலனை மக்கள் தந்துள்ளனர் என்பதும், எத்தனை நம்பிக்கையுடன் அளித்துள்ளனர் என்பதும் விளங்கிடும்.

கட்டாந்தரை! மழையோ இல்லை! கரமே கடப்பாரை! நான் என்ன செய்வது! படாதபாடு படுகிறேன், பலன் இன்னமும் கிடைத்திடவில்லையே எனப் பதறுகிறீரே, பலன் கிடைத்திடு வதற்கு ஏற்ற வசதியினைத் தந்துள்ளீரா என்று ஏழை உழவன் கேட்பதில்லை; கற்கள் நிரம்பிய இடத்திலும் எதனையாவது பயிரிட்டுக் காட்டுகிறான். காங்கிரசார் ஆட்சிப் பண்ணையை ஏற்றதும், மக்கள் பணத்தை ஏராளமாகவும் தாராளமாகவும் வாரி இறைத்தனர். பலன்? சிலர் சுகபோகச் சேற்றிலே அமிழ்ந்து கிடக்கின்றனர். பண்ணையோ பசி போக்கிடத் தக்கவிதமான பலனைத் தந்திடவில்லை. அமெரிக்கப் பண்ணையிலிருந்து வருகிறது அரிசி! இங்கு முன்பு மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று ஆனைகட்டிப் போரடித்தனராம்! இப்போது? அரிசி மட்டும் அனுப்பினால் போதாது, ஆடு வேண்டும், மாடு வேண்டும், கோழி வேண்டும், எல்லாம் உடனே வேண்டும், தொடர்ந்து வேண்டும், கடனுக்கு வேண்டும்; முகம் கோணாமல் தந்திடவும் வேண்டும் என்று கேட்டிடும் நிலை. கட்சியினரைக் கூட்டிவைத்து லால்பகதூராரின் ஒப்புதலையும் எடுத்துக்காட்டி, அமெரிக்கா பொதுச் சட்டம் எண் 480 எனும் திட்டத்தின்படி, உணவுப் பொருள் தந்தாலொழிய, நாடு பிழைத்திட இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் உணவு அமைச்சர் சுப்பிரமணியம்! இந்த நிலை, 18 ஆண்டுக் கால ஆட்சிக்குப் பிறகு!

போம்டில்லாவிலே தோல்வி, தேஜ்பூரை விட்டு வெளி யேற்றம் என்று நிலை ஏற்பட்டதே, மூன்றாண்டுகளுக்கு முன்பு; சீனத் தாக்குதலின்போது! பாவம் கிருஷ்ணமேனன் ப-யானார்!! படைத் தளபதிகளைப் பற்றி எல்லாம் கடை வீதிகளில் பேசப்பட்டது. அந்தப் போர் முனையின் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தவர், விலகினார் உடல் நலம் இல்லை என்பதால். போர்முனையில் "திறம்' காட்டாவிட்டால், கொதிப்பு வருகிறது, கோபம் எழுகிறது; திட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறோம், இதற்கேற்ற தளபதியைக் கொண்டு வா என்கிறோம்.

ஆட்சி நடத்திடும் காங்கிரசிடம், மக்கள் பலப்பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொடுத்து, வாழ்த்திப் பாராட்டி, அர்ச்சித்து ஆலவட்டம் சுற்றி, பதினெட்டு ஆண்டு களுக்குப் பிறகு கண்ட பலன் என்ன? மக்களின் நம்பிக்கைகள் பாட்டன் டாங்குகளைப் போல நொறுக்கப்பட்டு விட்டுள்ள நிலையைத்தானே? அதனைத்தான் வினோபா எடுத்துக் காட்டுகிறார். பதினெட்டு ஆண்டுகளாயின. உழவன் வாழ்வும் செம்மைப்படவில்லை என்று.

பிரார்த்தனைக் கூட்டத்திலேதானா, இந்த அரசியல் நிலைமையைக் கூறிட வேண்டும் என்று சிலருக்கு வியப்பு ஏற்படக்கூடும். இதிலே வியப்பதற்குக் காரணம் இல்லை. மக்களிடம் இந்த நிலைபற்றிப் பல கட்சிகள் எடுத்துக் கூறியும் பலனைக் காணோம், அதனால் இதுபற்றி ஆண்டவனிடமாவது முறையிடுவோம் என்று வினோபா எண்ணியிருக்கக் கூடும் அதனால்தான் பிரார்த்தனைக் கூட்டத்திலே இது குறித்துப் பேசினார் என்று கூறத் தோன்றுகிறது. உழவன் வாழ்வு செம்மைப்படவில்லை; உணவுப் பொருள் உற்பத்தி பெருக வில்லை என்று கூறுகிறாரே வினோபா, பதினெட்டு ஆண்டுகளாக ஒரு பலம் வாய்ந்த கட்சி ஆட்சி நடத்திடும்போது ஒன்றுமேவா விளையாது போகும் நம்ப இயலவில்லையே என்று ஐயப்பாடு எழுமல்லவா, வினோபா அதனையும் போக்கத் தவறவில்லை, என்ன பெருகிவிட்டிருக்கிறது என்பது பற்றியும் கூறுகிறார்.

உணவுப் பொருள் பெருகவில்லை. ஆனால், சிகரெட்டும், பீடியும், ஒயினும், மற்ற போதைப் பொருளும் அமோகமாகப் பெருகி இருக்கிறது. டில்லி போன்ற பெருநகர்களில், மாநிலத் தலைநகர்களில்!

வினோபா தந்துள்ள பட்டியல் முழுமை பெற்றதல்ல, பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவை பல உள! புதிய புதிய சேரிகள், சாக்கடை ஓரக் குடிசைகள், நடைபாதை வாசிகள், ஆயிரத் தெட்டுப் பிணிகள், இவைகளுக்கு இடையில் நவநாகரீக நாரிமணிகள், அவர்களின் இதழுக்கு அழகளிக்கும் வண்ணப் பூச்சுகள், அதனால் ஈர்க்கப்படும் காசாதிபதிகள், அவர்கள் நடத்திடும் கள்ள வாணிபம், அதன் பலனாகக் கிடைத்திடும் மாளிகைகள், அங்குக் காணக் கிடக்கும் மந்தகாச வாழ்வு முறைகள், அம்மவோ! பலப்பல உற்பத்திகள் பெருகி உள்ளன. அவை குறித்துக் கூறிட இயலவில்லை, தூயவரால். நாடு நன்கு அறிந்திருக்கிறது நிலைமையினை!

துரைத்தனத்தின் போக்கை மாற்றிட முடியவில்லை. காங்கிரஸ்காரர்களால் என்றும் கூறுகிறார்.

ஆட்சியை நடத்துகிறது காங்கிரஸ்! அலங்கோலம்தான் விளைந்திருக்கிறது; அதனை தடுத்திடத் திறமையற்று உள்ளனர் காங்கிரசார். இது நிலைமை! இதனை எங்ஙனம் மக்கள் மறந்துவிட முடியும்; இந்த நிலைமை நீடித்திட எப்படி விரும்புவர்? இதனால் ஏற்படும் வேதனையை அடக்கிக் கொண்டுள்ளனர், வெளியே கொட்டிக் காட்டாமல் உள்ளனர் என்றால், மறந்துவிட்டார்கள் என்பதல்ல பொருள், மாற்றான் நம்மை மல்லுக்கு இழுத்திடும் நேரத்தில், நமது வேதனையைக் கூட வெளியே காட்டிக் கொள்ளத்தான் கூடாது! என்ற பொறுப் புணர்ச்சிதான் காரணம். மக்களின் அப்பழுக்கற்ற நாட்டுப்பற்று, அவர்களை வேறு எது குறித்தும் இந்த நேரத்தில் எண்ணிக் கொண்டிருக்கக்கூடாது என்ற ஒரு உன்னதமான கட்டு திட்டத்தை மேற்கொள்ளச் செய்திருக்கிறது. இது பழக்கமாகி, இயல்பே ஆகிவிடும். இனி நாம் எந்த முறையிலே ஆட்சி நடத்தினாலும் இந்த மக்கள் ஏனென்று கேட்டிட மாட்டார்கள், எதிர்ப்புக் குரல் எழுப்பிட மாட்டார்கள் என்று எண்ணிக் கொள்வது ஏமாளித்தனம்.