அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இது போதாதா?
2

மக்கள் எழுச்சி பெற்றிருப்பது, ஆற்றல் மறவர்களின் வெற்றிகளைக் கண்டு; காங்கிரசாட்சியின் சாதனைகளைக் கண்டு அல்ல; சாதனைக்குச் சான்றாகத்தான் அளவரிசி முறை இருக்கிறதே!

மக்கள் ஒன்றுபட்டு நிற்பது காங்கிரஸ் ஆட்சியினிடம் கொண்ட பரிவு காரணமாக அல்ல; பாகிஸ்தானும் சீனாவும் பகை கக்கி நிற்பதைக் காண்பதால்!

மக்கள் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுப்பதும், காங்கிரசின் ஆட்சித்திறம் கண்டு மகிழ்ச்சி கொண்டு பரிசு வழங்கிடும் முறையிலே அல்ல! இவர்களின் ஆட்சித் திறத்தை நம்பி நாடு கெட விட்டுவிடக் கூடாது; நம்மாலான எல்லாவற்றையும் நாம் அளித்து, நாடு காத்திடும் நற்பணியிலே ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தால், ஆர்வத்தால்!

இந்த ஆர்வம், நாட்டுப் பாதுகாப்புக்காக, காங்கிரஸ் ஆட்சியின் பாதுகாப்புக்காக அல்ல.

நெல்லுக்கு இறைத்திடும் நீர் புல்லுக்கும் பாயுமாமே. அதுபோல. நாட்டுப் பாதுகாப்புக்காக மக்கள் காட்டிடும் ஆர்வம். ஓரளவு காங்கிரஸ் கட்சிக்கும் போய்ச் சேர்ந்திடக்கூடும். அது இடையிலே நேரிட்டு விடும் நிகழ்ச்சி; மக்கள் மேற்கொண்டு விட்ட ஆதரவு ஆகிவிடாது. அதுபோல எண்ணி ஏமாறாதீர்கள், இன்று காணப்படும் எழுச்சியும் ஆர்வமும், உதிர்ந்து போய்விடும், உலர்ந்து போய்விடும். இப்போதே அதனைப் பக்குவப்படுத்தாவிடின் என்று இந்தியாவின் பிரதம நீதிபதி கஜேந்திர கட்கார் எச்சரித்துள்ளார், சென்ற திங்கள் பத்தாம் நாள், புது தில்லியில்.

இன்று மக்களிடம் காணப்படும் ஆர்வமும் எழுச்சியும் தக்கவிதத்தில் பக்குவப்படுத்தாவிடின், உதிர்ந்துபோய் விடும், கலைந்து போய்விடும் என்று அஞ்சுகிறேன்.

என்று கூறிவிட்டு, கஜேந்திர கட்கார், அந்த அவையிலே அமர்ந்திருந்த பாதுபாப்பு அமைச்சர் சவான் அவர்களைச் சுட்டிக் காட்டியபடி,

இன்றைய ஆர்வம் எப்போது கலைந்து விடும் என்று எனக்குத் தோன்றுகிறது என்றால், இதோ இருக்கிறாரே பாதுகாப்பு அமைச்சர் சவான், அவர் பாராளுமன்றத்தில் எழுந்து நின்று நிலைமை சரியாகிவிட்டது என்று அறிவிக்கிறாரே, அப்போது என்றும் குறிப்பிட்டார்,

வினோபாவும் கஜேந்திரகட்கரும் ஓட்டுவேட்டைக்காகவே உழல்பவர்கள் அல்ல; எதையாவது இட்டுக் கட்டிப் பேசியாவது பதவி பிடித்தாக வேண்டும் என்ற அரிப்புக் கொண்டவர் களுமல்ல. அதன் காரணமாகவே அவர்களின் கருத்தாழம் மிகுந்த கண்டனம் வலிவு மிக்கதாகிறது இவர்கள் இடித்துரைக்கும் அளவுக்கு ஆட்சியை நடத்திச் சென்றிடும் காங்கிரஸ் கட்சி இன்று போர் வீரர்களின் புகழாரங்கள் தந்திடும் புதுமணம், தமது ஆட்சி எழுப்பிடும் நறுமணம் என்று தவறாகப் பொருள் கொண்டுவிடக்கூடாது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் "தேர்தல் சூரர்கள்' இப்படித்தான் எண்ணிக் கொண்டுள்ளனர், சுவை காணுகின்றனர். நெருக்கடி நிலைமை காரணமாக, எல்லா விதமான கருத்தோட்டமும் தடைபட்டுப் போயிருப்பதனைச் சாதகமாக்கிக் கொண்டு, போரில் கிடைத்த வெற்றிக்கான மகிழ்ச்சி ததும்பிக் கொண்டிருக்கும் மனத்தைப் பக்குவமாகத் தடவிக் கொடுத்தபடி இருந்தால், ஆட்சிப் போக்கினாலே ஏற்பட்டு விட்டுள்ள கசப்பு போய்விடும், கனிவு பிறந்திடும். ஓட்டுக் குவிந்திடும் என்ற கணக்கினைப் போட்டுப் பார்த்துப் பூரித்துக் கிடக்கின்றனர்.

போர்ச் சூழ்நிலையில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும், கட்சிக் கண்ணோட்டத்துடன் காரியமாற்றக் கூடாது என்ற கண்ணியத்தை மற்றக் கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றபோது, ஆளுங்கட்சி தன் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ளும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது! இதனைக் கண்ட பிறகும், போக்கை மாற்றிக் கொள்ளக் கழகம் விரும்பவில்லை; நாடு பெரிது, மற்ற எதனையும்விட என்ற எண்ணத்தில்!

நாட்டிலே நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதனை, மற்ற கட்சிகள் உணர்ந்து அதற்கு ஏற்ற முறையில் ஒழுகி வருவதுபோல, காங்கிரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆட்சித் துறைகள் செயல்படுகின்றனவா என்றால், இல்லை என்றே தெரிகிறது.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் சென்ற மாத இறுதியில் இதுபற்றிக் குறிப்பிட்டார் திகைப்புடன்,

புதுதில்லியில் நடைபெற்ற மாநாட்டில் - காங்கிரஸ் அமைச்சர்களிலே சிலரும் இதிலே கலந்து கொண்டனர் - பேசும்போது, ஜெயப்பிரகாசர் மனம் நொந்து பேசியிருக்கிறார்,

சர்க்கார் அலுவலகங்கள் பலவற்றில், பிரதம மந்திரி சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் உட்பட, எப்போதும் போல "தூங்கி விழுந்திடும்' போக்கிலேயே அலுவல் நடைபெற்றுக் கொண்டு வருவதனை நான் அறிவேன், நாட்டிலே ஒரு நெருக்கடிநிலை மூண்டு விட்டிருப்பது பற்றிய எண்ணமே அந்த இடத்தில் உள்ளவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பழைய மந்தத்தனம், அக்கறையற்ற போக்குத்தான் இப்போதும் இருக்கிறது.

என்று கூறியிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியை நடத்திச் செல்வோர் இதுகுறித்துக் கவலைப்படுவதாகவேக தோன்ற வில்லை. காரணம், எத்தனை பாட்டன் டாங்குகளை நொறுக் கினார்கள் தெரியுமா! எத்தனை விமானங்களை வீழ்த்தினார்கள் தெரியுமா! பாகிஸ்தானியப்படை எப்படி மிரண்டு ஓடிற்று தெரியுமா! - என்று பேசினால், எழுச்சி பெற்ற மக்கள் அகமகிழ்கிறார்கள், வாழ்த்துகிறார்கள். அந்தச் சமயமாகப் பார்த்து, "அப்படிப்பட்ட வீரவெற்றிகள் பெற்றிருக்கிறோம். ஆகவே உமது ஓட்டுகளை எமக்கே அளித்திட வேண்டும் என்று கேட்டுப் பெறலாம் என்று நினைக்கிறார்கள். சித்தத்தில் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரச்சினைகளைப் பற்றிய சிந்தனைத் திறம் குறைந்து காணப்படும் அல்லவா அதனை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருவோம் என்றும் பேசி வருகின்றனர்; இந்த நேரத்தில் இவர்கள் தீட்டிடும் திட்டங்களிலே உள்ள குறைபாடுகளைக் குறித்தும், அவைகளை நிறைவேற்றுவதிலே உள்ள திறமைக் குறைவு பற்றியும், முளைத்து நெளியும் ஊழல் குறித்தும் ஒருவரும் ஒரு பேச்சும் பேசமாட்டார்கள் என்ற எண்ணத்துடன். பேசுவது இல்லைதான், எந்தக் கட்சியும், அதிக அளவில். காரணம் என்ன? குற்றங் குறைகள் இல்லை என்பதாலே அல்ல, அவைகளைக் கூறிக் கொண்டிருக்க இதுவா நேரம் என்றல்லவா ஆட்சியில் அமர்ந்தவர்கள் கேட்பார்கள்; அதனால்.

நெருக்கடி நிலை பற்றிய கவலையற்று, கிண்டி குதிரைப் பந்தயத்தைக்கூட நடத்த விட்டிருக்கிறார்கள்; ஆனால், ஆட்சியினரின் திட்டங்களிலே உள்ள குறைபாடுகளைச் சொன்னால். இந்தச் சமயத்திலா இதனை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது என்று கேட்கிறார்கள்.

திட்டங்கள் இதனைப் போட்டும், போதுமான அளவிலே பொருத்தமான பலனை ஏன் மக்கள் பெற்றிட இயலவில்லை என்ற கேள்விக்கு, யார் பதில் கூறுகிறார்கள்? நெருக்கடி நீங்கவில்லை! என்பதன்றி வேறு பேச்சு வேண்டாம் என்றல்லவா கருதிவிடுகிறார்கள்! ரஷியாவிலே தாம் கண்ட பெருவியப் பளிக்கத்தக்க முன்னேற்றத்தைப் பற்றி கஜேந்திர கட்கர் குறிப்பிட்டுப் பேசுகையில்,

அங்கு யாரைக் கண்டு பேசினாலும் சரி, நீதிபதி யானாலும் வழக்கறிஞரானாலும், ஆலைத் தொழிலாளி யானாலும், அவர்கள் முகத்தில் ஒரு வெற்றிக்களை இருந்திடக் காண்கிறேன். இந்த முன்னேற்றத்தில் நம் பங்கு இருக்கிறது என்ற பெருமிதம் கொண்டுள்ளனர். இது இந்நாட்டுக்குத் தேவை. இலட்சோப இலட்சம் மக்களும் உணர்ந்து உவகை கொண்டு பங்கேற்றுப் பலன் பெற்றுப் பெருமிதம் கொள்ளத்தக்க விதமாக முன்னேற்றத் துக்கான முயற்சிகள் அமைந்திட வேண்டும் என்று கூறினார்.

அப்படித்தான் அனைவரும் அகமகிழ்ச்சியுடன், ஆர்வத்துடன் தத்தமது பங்கினைச் செலுத்தி வருகின்றனர் என்று கூறிடுவர், ஒளிவிடு கண் பெற்ற காங்கிரஸ் நண்பர்.

பங்கினைச் செலுத்துவது பகைவனை வீழ்த்திட எடுக்கப்படும் முயற்சிகளில். நாட்டை வளப்படுத்த என்ற பெயரால் நடத்தப்பட்டு வரும் காரியங்களிலே பங்கு கிடைப்ப தில்லை; தரப்படுவதில்லை.

திட்டங்கள் வெற்றிபெற வேண்டுமானால், வய-லே வேலை செய்திடுபவனும், ஆலையிலே பாடுபடுபவனும், திட்டத்தின் பலன் தமக்கும்தான் என்ற நம்பிக்கை பெற்றிடத் தக்க நிலை எழவேண்டும் என்று முன்பு, அமைச்சர் சஞ்சீவய்யா குறிப்பிட்டார்.

இப்போது இரண்டு கிழமைகளுக்கு முன்பு சர்க்கார் துறையிலே செயல்பட்டு வரும் தொழில் அமைப்புகளிலே நிர்வாக அமைப்பிலே பங்குபெறும் திட்டம் தனக்கு மகிழ்ச்சி தரத்தக்க முறையிலே நடைபெறவில்லை என்று சஞ்சீவய்யா வருத்தம் தோய்ந்த குரலில் பேசினார்.

முதலாளிகளிடம் சென்று, தொழிலாளர்களுக்கு உரிய பங்கு கிடைத்திடச் செய்திடுக என்று நான் கூறும்போது, அவர்கள் திருப்பிக் கேட்கிறார்கள், சர்க்காரிடம் உள்ள தொழில் அமைப்புகளிலே இந்த யோசனை எந்த அளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது, சொல்லுங்கள் கேட்போம் என்கிறார்கள்; என்னால் தகுந்த பதில் கூற முடியவில்லையே என்று அமைச்சர் சஞ்சீவய்யா ஏக்கத்துடன் பேசியிருக்கிறார், கடந்த மாதம்.

வினோபா பாவே ஏக்கக் குரலிலே அல்ல, சிறிதளவு கோபக் குரலிலேயே பேசுகிறார் திட்டங்கள் நிறைவேற்றப் படுகிற முறை குறித்து,

பீகார் மாநிலத்து சகார்சாவில் அக்டோபர் 30-ம் நாள் ஐந்தாண்டுத் திட்டங்கள் வெற்றி அளிக்காத காரணம் என்ன என்பது பற்றி வினோபா தமது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். கட்சி மாச்சரியத்தால் திட்டங்களைப் பற்றிக் கண்டபடி உளறுகிறார்கள் என்று காங்கிரசின் பெரிய தலைவர்கள் முழக்கம் எழுப்பிக் காட்டுகிறார்களே, அவர்கள் வினோபாவின் கண்டனத்தைக் கேட்டு, வாயடைத்துப் போவதுமட்டுமல்ல, சமயத்தைத் தேடிப் பெற்றுக் கொண்டு அவருடைய காலைத் தொட்டுக் கண்களிலே ஒற்றிக் கொண்டு, மகாத்மாவுக்குப் பிறகு எமக்குத் தாங்களே வழிகாட்டி என்று புகழாரம் சூட்டிவிட்டு, பத்திரிகை நிருபர்களிடம் வினோபாவிடம் மனம்விட்டுப் பேசியது பற்றிய சேதியையும் இலேசான ஒரு புன்னகையையும் வீசிவிட்டுப் படகு மோட்டார் ஏறிப் பறந்துவிடுகிறார்கள். மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார் வினோபா.

ஐந்தாண்டுத் திட்டங்களில் மக்களுடைய ஒத்துழைப்புக் கிடைக்காத காரணம் என்ன? திட்டம் தீட்டுபவர்கள், மக்களுக்குத் தமக்கு ஏற்ற திட்டம் எது என்று கண்டறியத் தெரியாது என்ற எண்ணத்தில் மக்களை மாடுகள் என்று எண்ணிக் கொண்டு நடத்திவருவதுதான், மக்களை மக்களாகவே கருதுவதில்லை. எங்கோ மேலே அமர்ந்து கொண்டு திட்டத் தீட்டி விடுகிறார்கள்!

இந்தக் கடுமையான கண்டனம் காங்கிரஸ் கட்சியிடம் உள்ள பதவியைப் பறித்துக் கொள்ள வேண்டும் என்ற பதைப்பின் விளைவு அல்ல. மக்களின் பேராதரவை, ஆசை காட்டியும் நம்பிக்கை ஊட்டியும் பெற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சி, மக்களை மாக்களாகக் கருதி நடத்துகிறதே என்பதனை எண்ணிடும் போது, ஒரு உத்தமர் உள்ளம் கொதித்துக் கூறிடும் உண்மை உரை.

திட்டத்தால், ஏழையும் நாசமாகின்றான், பணக்காரனும் பாழாகிறான். ஒரு சிலரைத்தான் திட்டம் பணம் படைத்தோன் ஆக்கிவைக்கிறது. அதனால் அவன் உள்ளம் காலிப் பாண்டமாகி விடுகிறது. போக போக்கியத்தில் புரளும்படி அவனைத் தூண்டுகிறது. ஏழை மக்களோ, தங்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

உண்மைக்கு மாறான வினோபா பேசமாட்டார், ஆனாலும் சிறிதளவு மிகைபடப் பேசிவிட்டிருப்பாரோ என்று சந்தேகப்படு பவர்கள் இருந்திடின், அவர்களின் ஐயப்பாட்டினை இந்தச் செய்தி போக்கிவிடும்:

அகோலா
நவம்பர் 2

மராட்டியத்தின் கிராம முன்னேற்ற அமைச்சர் டாக்டர் ஏ.இ. கேட்கார், நிம்பா என்ற கிராமத்திற்கு விஜயம் செய்தபோது, ஆண் பெண்கள் அடங்கிய ஐந்நூறு பேர் கொண்ட கூட்டம் அவருடைய மோட்டாரைச் சுற்றி வளைத்துக் கொண்டு உணவு கொடு! வேலை கொடு! என்று முழக்கமிட்டது. பக்கத்துக் கிராமமான ஊரலில் உள்ள சர்க்கார் தானியக்கிடங்கிலிருந்து 20 மூட்டை சோளம் அனுப்பி வைப்பதாகக் கூறிவிட்டு அமைச்சர் சென்றார்.

தங்கள் கிராமத்திலிருந்து சோள மூட்டைகளை எடுத்துச் செல்லக்கூடாது என்று ஊரல் கிராமத்தவரில் சிலர் தடுத்திட முயன்றதாகத் தெரிகிறது.

மிகச் சிறிய செய்தி இது என்று தள்ளிவிடத் தோன்றினால், நாட்டிலே ஏற்பட்டுள்ள உணவு நிலை நெருக்கடியைப் பார்க்கும்போது, அமெரிக்காவிடம் பி.எல். 480 திட்டப்படி உணவுப் பொருள் பெற்றாக வேண்டும் என்று உணவு அமைச்சர் சுப்பிரமணியம் உருக்கமுடன் பேசியதை இந்தச் செய்தியுடன் இணைத்துக் கொள்ளட்டும்!

கொடு! கொடு! என்று அமைச்சர்கள் கேட்கிறீர்கள்; நாங்களும் கொடுத்தபடி இருக்கிறோம்; ஆனால் உங்கள் நாட்டிலே விவசாய வளர்ச்சியைப் போதுமான அளவு வெற்றிகரமாக நடத்திக் காட்டத் தவறியபடி இருக்கிறீர் களே! எத்தனை காலத்துக்குக் கொடுத்துக் கொண்டு இருப்பது! எவ்வளவு என்று கொடுப்பது? நீங்கள் அங்கே உணவு உற்பத்தியைப் பெருக்கிட என்னதான் திட்டமிட்டி ருக்கிறீர்கள்? அதனை எப்படிச் செயல்படுத்துகிறீர்கள்? விவரம் கூறுங்கள்! கணக்குக் காட்டுங்கள். உதவி செய்தால் அதனால் உருப்படியான பலன் கிடைக்க வேண்டுமே

என்று அமெரிக்கா கேட்கிறது. எதிர்க்கட்சிகள் இதுபோல, விவரம் தரச்சொல்லிக் கேட்டால், கணக்குக் காட்டச் சொன்னால், "எம்மிடமா கணக்குக் கேட்கிறீர்கள்? அத்தனை ஆணவமா? இரு! இரு! பொறு! பொறு! உன் கணக்கைத் தீர்த்துக் கட்டி விடுகிறேன் என்று கொதித்துக் கூறுவார்கள், கேட்பது சோறு தரும் சொர்ணப்பனல்லவா! கோபித்துக் கொள்ள முடிகிறதா? விவரமா? அனுப்பி இருக்கிறேன்! கணக்கா? அனுப்பி வைக்கிறேன்! என்றுதான், பணிவாக, குழைவாகப் பேச முடிகிறது, காங்கிரஸ் அமைச்சரால்!

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதைபதைத்துக் கேட்கிறார், அமைச்சர் சுப்பிரமணியத்திடம், "ஒரு சுதந்திர நாட்டிடம் மற்றோர் நாடு இப்படித் தலையிட்டு விவரம் கேட்கலாமா?'' என்று. கேட்டால், என்ன தவறு! கப்பல் கப்பலாகக் கோதுமை தருகிறான், நாமும் பெறுகிறோம்; மேலும் கேட்டபடி இருக்கிறோம், நம்முடைய நிலை அவ்விதம் இருக்கிறது. கொடுப்பவன், கணக்குக் கேட்கிறான், என்ன தவறு? என்ற கருத்துப்பட அமைச்சர் சாந்தம் ஒழுகிடும் விதமாகப் பேசுகிறார்.

உணவு முனை, தொழிலில் நிம்மதி ஏற்படுத்தும் துறை, இல்லாமையை ஒழித்திடும் துறை எனும் எதிலேயும் வெற்றி பெற்றிடாதவர்கள் இன்று, போர்முனையில் வீரர்கள் ஈட்டிய வெற்றியாலே, மக்கள் பெருமையும் பூரிப்பும் அடைந்து இருந்திடக் கண்டு, காங்கிரஸ் ஆட்சியின் மீது உள்ள பரிவுக்கு இது சான்று என்று கருதிக் கொள்கிறார்கள்!

உண்மையை உள்ளந்திறந்து பேசியிருக்கிறார் வினோபா, மக்களை மாக்களாக நடத்துகிறார்கள் என்று. இது போதாதா இவர்களின் ஆட்சித் திறமை குறித்து நாடு அறிந்துகொள்ள?

அண்ணன்,

14-11-65